About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, March 28, 2020

318. எலித்தொல்லை

அந்தக் குடியிருப்பில் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கழிவு நீர்க் குழாய்கள் அடைத்துக் கொள்வது என்பது ஒரு தொடர்கதையாக இருந்து வந்தது.

ஒவ்வொரு முறை அடைப்பைச் சரி செய்யும்போதும், அடைப்பை நீக்கிய தொழிலாளி, "சார்! எலி வலை தோண்டி கல்லு, சிமெண்ட்டையெல்லாம் அரிச்சுப் போடறதால தண்ணி போற இடங்கள்ள அடைப்பு ஏற்படுது!" என்பார்.

சென்ற முறை அடைப்பைச் சரி செய்தபோது, சரி செய்த தொழிலாளியிடம், "ஏன் இப்படித் திரும்பத் திரும்ப நடக்குது?" என்று கேட்டார் குடியிருப்புக் சங்கச் செயலாளர் துரைசாமி. 

"சார்! ஒவ்வொரு முறையும் கல்லையெல்லாம் எடுத்து சுத்தம் பண்ணிட்டு, உடைஞ்ச இடங்கள்ள சிமெண்ட் போட்டுட்டுத்தான் போறேன். ஆனா மறுபடி எலி வந்து அரிச்சிடுது. தரையெல்லாம் பழசாப் போயிட்டதால எலி சுலபமா தரையை உடைச்சுடுது!" என்றான் அந்த ஆள்.

"அப்படின்னா தரையெல்லாம் புதுசாப் போட்டா இந்த பிரச்னை வராதா?"  என்றார் துரைசாமி.

"இல்ல சார்! நீங்க புதுசாத் தரை போட்டாலும், பக்கத்துல காலி மனை இருக்கறதால எலி சுலபமா வலை போட்டு உள்ளே வந்துடும்" என்றான் அவன்.

துரைசாமி குடியிருப்புச் சங்க உறுப்பினர்களை அழைத்து பிரச்னையைச் சொன்னார்.

"என்னோட சொந்தக்காரங்க இருக்கற இன்னொரு குடியிருப்பில் இது மாதிரி பிரச்னை இருந்தது. அவங்க ஒரு ஆளை வச்சு சரி பண்ணிட்டாங்க. அந்த ஆளை வரச் சொல்றேன். அவன்கிட்ட பேசிப் பாக்கலாம்" என்றார் சபாபதி என்ற உறுப்பினர்.  

இரண்டு நாட்களில் சபாபதி ஒரு ஆளை அழைத்து வந்து  துரைசாமியிடம் அறிமுகப்படுத்தினார். அவன் அடைப்பு ஏற்படும் இடத்தைப் பார்த்து விட்டு, "சார்! இது மாதிரி திரும்பத் திரும்ப நடக்கத்தான் செய்யும். இதுக்கு ஒரே வழி எலியால ஓட்டை போட முடியாம செய்யறதுதான்!" என்றான்.

"அதை எப்படிச் செய்யறது?" என்றார் துரைசாமி.

"இந்த இடத்தில சிமெண்ட்ல கண்ணாடித் தூளைக் கலந்து பூசிட்டா, எலி வாயால ஓட்டை போடறப்ப கண்ணாடித் தூள் அது வாயில குத்தி வாயைப்  புண்ணாக்கிடும். அப்புறம் எலி ஓடிடும்!" என்றான்.

"கடவுளே!" என்றார் துரைசாமி.

"என்ன சார்?" என்றார் சபாபதி.

"கண்ணாடித் தூள் எலியோட வாயில குத்தறப்ப எலிக்கு எப்படி இருக்கும்னு நினைச்சுப் பாத்தேன்!"

"அதைப் பத்தி நமக்கென்ன சார்? எலிக்கு வலிக்குமேன்னு நாம பாக்க முடியுமா?" என்றார் சபாபதி. 

"இல்ல. இது ரொம்பக் கொடுமை. கண்ணாடித் தூளை  நாம கடிச்சா எப்படி இருக்கும்! எலி அந்தக் கண்ணாடித் தூளைக் கடிச்சா அது எப்படி வேதனையால் துடிக்கும்னு நினைச்சுப் பாக்கவே பயமா இருக்கு. கண்ணாடித் தூள் எலியோட வயித்துக்குள்ள கூடப் போயிடலாம். நினைக்கவே பயங்கரமா இருக்கு!" என்றார் துரைசாமி.

"எவ்வளவோ வீட்டில இது மாதிரி நான் செஞ்சிருக்கேன் சார்! சில சமயம் எலி வாயில ரத்தம் வழிஞ்சு செத்துக் கூடக் கிடைக்கும். ஆனா இந்த பிரச்னை அப்புறம் வராது!" என்றான் அந்த ஆள்.

துரைசாமி பதில் சொல்லாமல் கண்ணை மூடிக் கொண்டிருந்தார்.

"சரி. அப்புறம் சொல்றோம். உன் ஃபோன் நம்பர்தான் எங்கிட்ட இருக்கே!" என்று சொல்லி அந்த ஆளை அனுப்பி வைத்தார் சபாபதி.

அவன் சென்றதும்,"சார்! இது பொது விஷயம். உங்க தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இங்க இடம் இல்லை. நம்ப அபார்ட்மெண்ட்ஸோட நலனுக்காக நாம இதைச் செஞ்சுதான் ஆகணும்" என்றார் சபாபதி சற்றுக் கடுமையான குரலில். 

"என்னால முடியாது. நான் ராஜினாமா பண்ணிடறேன். வேற யாராவது பொறுப்பு எடுத்துக்கிட்டு செஞ்சுக்கங்க. அப்பவும், ஒரு உறுப்பினர்ங்கற முறையில இந்தக் கொடுமையான காரியத்தை நான் எதிர்ப்பேன்! அவன் சொன்னதைக் கேட்டதே என் மனசை என்னவோ செய்யுது. இப்படி ஒரு கொடுமையைச் செய்ய எப்படித்தான் மனசு வருதோ!" என்றார் துரைசாமி.  

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 318
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.

பொருள்:
தனக்குத் துன்பம் விளைவிக்கக் கூடியவை இவை என்று உணர்ந்தவன் மற்ற உயிர்களுக்கு அந்தத் துன்பத்தை ஏன் செய்ய வேண்டும்?
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்









No comments:

Post a Comment