About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, March 15, 2020

317. "குற்றமுள்ள" நெஞ்சம்!

சுவாமி சதானந்தரிடம் தனியே பேச வாய்ப்புக் கிடைத்ததும், கிருஷ்ணன் முதலில் சற்றுத் தயங்கினார்.

"சொல்லுங்கள்!" என்று அவரை ஊக்குவித்தார் சதானந்தர். 

"கிறிஸ்துவ மதத்தில் பாவ மன்னிப்பு என்ற ஒரு விஷயம் இருக்கிறது. ஆனால் நம் மதத்தில் அப்படி இல்லையே!" என்றார் கிருஷ்ணன். 

"ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கும். நம் மதத்தைப் பொறுத்தவரை பாவத்துக்கான பலனை இந்த ஜன்மத்திலோ அடுத்த ஜன்மத்திலோ அனுபவிக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆயினும் கடவுளிடம் பக்தி செலுத்தினால் நாம் செய்த பாவங்கள் அழிந்து விடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது" என்றார் சுவாமி சதானந்தர்.

கிருஷ்ணன் மௌனமாக இருந்தார்.

"உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் செய்ததாக நினைக்கும் பாவத்தை என்னிடம் சொல்லுங்கள். என்னால் பாவ மன்னிப்பு கொடுக்க முடியாது. ஆனால் என்னிடம் பகிர்ந்து கொள்வதால் உங்களுக்குச் சற்று ஆறுதல் கிடைக்கலாம். என்னிடம்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. உங்கள் நெருங்கிய  நண்பர்கள் யாரிடமாவது சொன்னாலும் சரிதான்!" என்றார் சதானந்தர்.  

"இல்லை சுவாமி. உங்களிடமே சொல்கிறேன்" என்றார் கிருஷ்ணன் 

ப்போது கிருஷ்ணன் ரசாயனப் பொருட்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகப் பணி புரிந்து கொண்டிருந்தார். சதீஷ் என்ற ஒரு இளைஞனும் அங்கே பணியாற்றி வந்தான். கிருஷ்ணன் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் என்றாலும், சதீஷ் அதிகம் படித்தவன் என்பதால் வயதில் குறைவானவனாக இருந்தாலும் பதவியில் அவருக்குச் சமமான நிலையில் இருந்தான்.

அந்தத் தொழிற்சாலையின் மேலாளராக இருந்தவர் சில மாதங்களில் ஒய்வு பெற இருந்தார். இயல்பாக அவர் இடத்துக்கு கிருஷ்ணன்தான் நியமிக்கப்பட்டிருப்பார். ஆனால் வயதிலும், அனுபவத்திலும் குறைந்தவனான சதீஷ் அதிகம் படித்தவன் என்பதால் அந்தப் பதவிக்கு அவன் நியமிக்கப்படலாம் என்ற பேச்சும் இருந்தது.

நிர்வாகம் என்ன செய்யப் போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒய்வு பெறப் போகும் மேலாளர் யாரைப் பரிந்துரைப்பார் என்பதும் புரியவில்லை. 

ஒருவேளை தான் புறக்கணிக்கப்பட்டு, சதீஷ் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டால் அது தனக்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும் என்று கிருஷ்ணன் நினைத்தார். 

தான் பின்னுக்குத் தள்ளப்பட்டு, சதீஷுக்குப் பதவி உயர்வு கொடுக்கப்படுவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று கிருஷ்ணன் யோசனை செய்து கொண்டிருந்தபோது ஒரு எதிர்பாராத வாய்ப்பு கிருஷ்ணனுக்குக் கிடைத்தது. 

ரு நாள் கிருஷ்ணனுக்கு இரண்டாவது ஷிஃப்ட் இருந்தது. முதல் ஷிஃப்டுக்கு சதீஷ்தான் பொறுப்பு. கிருஷ்ணன் சற்று முன்னதாகவே தொழிற்சாலைக்கு வந்து விட்டார். முதல் ஷிஃப்ட் இன்னும் முடியவில்லை.

கிருஷ்ணன் தொழிற்சாலைக்குள் நுழைந்தபோது அவர்கள் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட ரசாயனப் பொருட்களை ஒரு வாடிக்கையாளருக்கு அனுப்புவதற்காக லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். 

லாரியில் ஏற்றப்பட்டிருந்த மூட்டைகளை யதேச்சையாகப் பார்த்த கிருஷ்ணனுக்கு எதோ தவறாக இருப்பதாகப் பட்டது. லாரிக்கு அருகில் சென்று பார்த்தபோது, முதல் நாள் நடந்த தரக்கட்டுப்பாட்டுச் சோதனையின் போது நிராகரிக்கப்பட்டு, மீண்டும் ப்ராசஸ் செய்யப்படுவதற்காகத் தனியே வைக்கப்பட்டிருந்த ஐந்து மூட்டைகளைத் தவறுதலாக லாரியில் ஏற்றி விட்டார்கள் என்பதை அவர் கவனித்தார். 

அந்த மூட்டைகள் மீது 'தரக் கட்டுப்பாடு சோதனையில் தேறவில்லை' என்ற லேபிள் ஒட்டப்பட்டிருந்தும், யாருடைய கவனக்குறைவாலோ அந்த மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டு விட்டன.

அந்தத் தவறுக்கு சதீஷ்தான் பொறுப்பு. வாடிக்கையாளருக்கு மூட்டைகள் சென்றபின், அவை தரக்கட்டுப்பாட்டு சோதனையில் நிராகரிக்கப்பட்டவை என்பது மூட்டையின் லேபிளைப் பார்த்ததுமே வாடிக்கையாளருக்குத் தெரிந்து விடும்.

வாடிக்கையாளர் இது பற்றிப் புகார் செய்ததும், அதற்குப் பொறுப்பு சதீஷ்தான் என்று தெரிந்து விடும். அதற்குப் பிறகு அவன் வேலையில் தொடர்வதே சந்தேகம். பதவி உயர்வு அவனுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை. 

தானாகவே இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பது பற்றிக் கிருஷ்ணன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.  

கிருஷ்ணன் கூறிய கதையைக் கேட்ட சதானந்தர், "நீங்களாக வலுவில் சென்று அவருக்குத் தீங்கிழைக்காவிட்டாலும் ஒரு தவறு நடந்திருப்பது தெரிந்து, அதைத் தடுக்காமல் விட்டது சதீஷுக்கு மட்டும் இல்லை, உங்கள் நிறுவனத்துக்குக் கூட நீங்கள் செய்த தீங்குதான்!" என்றார்.

"நானும் அப்படித்தான் நினைத்தேன்!" என்றார் கிருஷ்ணன்.

"நீங்கள் செய்தது பாவம் என்றாலும், அதைப் பாவம் என்று உணர்ந்து வருந்துவது உங்களிடம் இருக்கும் நல்ல இயல்பைக் காட்டுகிறது!" என்றார் சதானந்தர்.

"இல்லை சுவாமிஜி. அது ஒரு பாவம் என்று அப்போதே நான் உணர்ந்ததால்தான் அதைச் செய்யவில்லை!" என்றார் கிருஷ்ணன்.

"செய்யவில்லையா?" என்றார் சதானந்தர் வியப்புடன்.

"ஆமாம் சுவாமிஜி. அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது தவறு என்று உடனே உணர்ந்து, சதீஷிடம் விஷயத்தைச் சொன்னேன். அவன் உடனே அந்த ஐந்து மூட்டைகளை லாரியிலிருந்து இறக்கச் செய்து, நல்ல மூட்டைகளை ஏற்ற வைத்து விட்டான். நடக்க இருந்த தவறு தடுக்கப்பட்டது. சதீஷ் எனக்கு மிகவும் நன்றி சொன்னான்."

"பின்னே, பாவம் செய்து விட்டதாகவும் அதற்கு மன்னிப்பு உண்டா என்றும் கேட்டீர்களே?" என்றார் சதானந்தர் குழப்பத்துடன்.

"என்ன சுவாமிஜி  இது? இப்படி ஒரு எண்ணம் என் மனதில் தோன்றியதே பாவம் இல்லையா? அப்போது என் மனது கொஞ்சம் வேறு மாதிரி நினைத்திருந்தால் நான் அதைச் செய்திருப்பேனே! இப்படி ஒரு எண்ணம் தோன்றியதே என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது" என்றார் கிருஷ்ணன்.

கிருஷ்ணனை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்த சதானந்தர், "சந்நியாசிகள் மற்றவர்களை வணங்கக் கூடாது. இல்லாவிட்டால் நான் உங்கள் காலில் விழுந்து வணங்கி இருப்பேன்! மனதில் ஒரு தவறான எண்ணம் தோன்றியதற்கே, தீங்கு செய்து விட்டதாக நினைத்து வருந்தும் நீங்கள் மிகவும் உயர்ந்தவர்!" என்றார்.    

அறத்துப்பால் 
    அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 317
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை

பொருள்:
எப்போதும், யாருக்கும், மிகச் சிறிய துன்பத்தைக் கூட மனத்தாலும் விளைவிக்காமல் இருப்பது சிறந்தது.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்












No comments:

Post a Comment