About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, April 5, 2020

321. ஆராய்ச்சி மணி

"என்ன இந்த இரவு நேரத்தில் ஆராய்ச்சி மணி அடிக்கிறது?" என்று வியந்தபடியே அரசன் திரிவிக்கிரமன் அரசவைக்கு வந்தான்.

அரசன் அவைக்குள் வருவதற்குள் இன்னும் தங்கள் வீடுகளுக்குச் செல்லாமல் அரண்மனையில் பணிகளில் ஈடுபட்டிருந்த சில அமைச்சர்களும் வேறு சில அரசவைப் பிரதானிகளும் அவைக்குள் வந்து குழுமி விட்டனர்.

அரசன் வந்து தன் அரியணையில் அமர்ந்த சில வினாடிகளில், ஆராய்ச்சி மணியை அடித்த பெண்மணியை அழைத்துக் கொண்டு இரண்டு காவலர்கள் அரசவைக்குள் நுழைந்தார்கள்.

அந்தப் பெண்மணி அரசனை வணங்கியதும், "இரவு துவங்கிய இந்த முதல் ஜாமத்தில் ஆராய்ச்சி மணியை அடித்திருக்கிறீர்களே, அவ்வளவு முக்கிய பிரச்னை என்னம்மா உங்களுக்கு?" என்றான் அரசன் திரிவிக்கிரமன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! அவசரம் என்பதால்தான் இந்த நேரத்தில் மணி அடித்தேன்" என்றாள் அந்தப் பெண்.

'சொல்லுங்கள்!" என்றான் அரசன். 

"அரசே! என் பெயர் சாவித்திரி. சில நாட்களுக்கு முன் எங்கள் வீட்டில் ஒரு திருடன் நுழைந்தான். எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு போக விலையுயர்ந்த பொருட்களோ, பொற்காசுகளோ இல்லை. திருட வந்தவன் ஏற்படுத்திய ஓசையால் என் கணவர் விழித்துக் கொண்டு கூச்சல் போட்டார். ஆத்திரப்பட்டு திருடன் என் கணவர் தலையில் கட்டையால் அடித்து விட்டு ஓடப்  பார்த்தான். ஆனால் அதற்குள் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவனைப் பிடித்துக் காவலர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். ஆனால் தலையில் அடிபட்ட என் கணவர் வைத்தியரின் சிகிச்சைக்குப் பலனின்றி அடுத்த நாளே இறந்து விட்டார்."

பேச்சைத் தொடர முடியாமல் சாவித்திரியிடமிருந்து ஒரு விம்மல் வெளிப்பட்டது.

"உங்களுக்கு நேர்ந்த துயரத்துக்கு மிகவும் வருந்துகிறேன் அம்மா. உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா? அதற்கு ஏன் இவ்வளவு அவசரமாக இரவில் ஆராய்ச்சி மணி அடித்தீர்கள்?" என்றான் திரிவிக்கிரமன்.

"அரசே! என் கணவர் அடிக்கடி சொல்லுவார், பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பதுதான் சிறந்த அறம் என்று. ஒரு உயிரைக் கொல்வதைப் போன்ற பாவச்செயல் வேறு எதுவும் இல்லை என்பார் அவர். ஒரு ஈ எறும்புக்குக்கு கூடத் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர் அவர்."

"அப்படிப்பட்ட ஒருவரைக் கொன்றிருக்கிறானே ஒருவன்! அவனைப் பிடித்து விட்டார்கள் என்று சொல்கிறீர்கள். அவனுக்குத் தக்க தண்டனை கிடைக்க வகை செய்கிறேன்!" என்றான் அரசன்.

"அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது என்று கேள்விப்பட்டுதான் இங்கே வந்திருக்கிறேன், அரசே!" என்றாள் அந்தப் பெண்.

"அப்படியா? ஏன் கடுமையான தண்டனை வழங்கப்படவில்லையா அவனுக்கு?  இன்னும் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கேட்க வந்திருக்கிறீர்களா?"

"இல்லை அரசே! அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அறிகிறேன்."

"அப்புறம் என்ன? வேறு என்ன குறை உங்களுக்கு?" என்றான் அரசன் சற்றே எரிச்சலுடன்.

"அரசே! கொல்லாமை என்ற அறத்தைக் கடைப்பிடித்து வந்த என் கணவரின் மரணம் ஒரு மனிதன் கொல்லப்படுவதற்கு காரணமாக அமைந்து விடக் கூடாது என்ற பதைபதைப்பில்தான் ஓடி வந்திருக்கிறேன்."

"நீங்கள் சொல்வது விந்தையாக இருக்கிறது. கொலை செய்தவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது இந்த நாட்டின் சட்டம். அந்தச் சட்டத்தின்படி ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், கொலை செய்யப்பட்ட உங்கள் கணவர் எப்படி அதற்குப் பொறுப்பாவார்?" என்றான் அரசன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! என் கணவர் இதற்குப் பொறுப்பில்லை என்றாலும் அவர் மரணம் ஒரு மனிதன் கொல்லப்படுவதற்கு மறைமுகமாகக் கூடக் காரணமாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று தங்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்வதற்காக ஓடி வந்திருக்கிறேன்."

"சரி. அதற்கு ஏன் இந்த இரவு நேரத்தில் வந்து ஆராய்ச்சி மணியை அடிக்க வேண்டும்?"

"அரசே நாளை அதிகாலை அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படப் போவதாக இன்று மாலைதான் எனக்குத் தெரிந்தது. எனவேதான் இந்த இரவு நேரத்தில் வந்து தங்களைத் தொந்தரவு கொடுக்க வேண்டியதாகி விட்டது. இந்த இரவு நேரத்தில் ஆராய்ச்சி மணியை அடித்து உங்களுக்குத் தொந்தரவு கொடுத்ததற்காக எனக்கு ஏதானும் தண்டனை கொடுப்பதானாலும் கொடுங்கள். ஆனால் தயவு செய்து என் கணவரைக் கொன்றவனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனையை சிறை தண்டனையாகக் குறைத்து விடுங்கள்" என்றாள் சாவித்திரி கையைக் கூப்பியபடி.

திரிவிக்கிரமன் இப்போது சாவித்திரியைப் பார்த்த பார்வையில் ஒரு மரியாதை இருந்தது.

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 33     
  கொல்லாமை  
குறள் 321
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்

பொருள்:
ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பதுதான் அறம். கொல்லுதல் எல்லாப் பாவங்களையும் விளைவிக்கும்.
  பொருட்பால்                                                                                       காமத்துப்பால்














No comments:

Post a Comment