About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, September 29, 2020

365. அடுத்த வாரிசு!

"உங்கள் பிறவியின் நோக்கம் என்ன என்று நான் கேட்டதற்குப் பலரும் பல்வேறு விடைகளைக் கூறினீர்கள். உங்கள் குடும்பத்தினருக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதிலிருந்து மற்றவர்களுக்கு உதவ வேண்டும், உங்கள் பெயர் நிலைத்திருக்கும்படியான சாதனை புரிய வேண்டும் என்று பல நோக்கங்களைக் கூறினீர்கள்.  

"எல்லாமே உயர்ந்த நோக்கங்கள்தான். ஆனால் எல்லாவற்றையும் விட உயர்ந்த நோக்கம் மீண்டும் ஒரு பிறவி ஏற்படாமல் இருக்க வகை செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் பற்றுக்களை விட்டு விட்டால் பிறவிப்பிணி உங்களுக்கு இருக்காது. 

"பற்றுக்களை விடுவது என்றால் என்னைப் போல் துறவியாக வேண்டும் என்று பொருளல்ல. ஆசைகளைத் துறந்து உங்கள் கடமைகளைப் பலனை எதிர் பார்க்காமல் செய்து வர வேண்டும். இதுதான் கீதை காட்டும் வாழ்க்கை நெறி. 

"பற்றை விட்டு விட்டு வாழ்ந்தால் நாம் மீண்டும் பிறக்காமல் இந்தப் பிறவி முடிந்ததும் இறைவனின் திருவடிகளை அடைந்து விடுவோம். இதுதான் வாழ்க்கையின் மிக உயர்ந்த நோக்கமாக இருக்க முடியும்."

ஆனந்தரங்கர் தன் பேச்சை முடித்து விட்டு அவையைத் திருப்தியுடன் பார்த்தார். அவர் சொன்னதை அவர்கள் பின்பற்றுவார்களோ என்னவோ தெரியாது, ஆனால் அவர் பேச்சை ஆர்வத்துடன் கேட்டு அவர் சொன்ன கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

வெளியூர்ப் பயணத்தை முடித்துக் கொண்டு ஆனந்தரங்கர் ஆசிரமத்துக்குத் திரும்பினார். மடத்தின் நலைவர் அனந்தரங்கர் அவரைப் பார்க்க விரும்பியதாக ஒரு துறவி அவரிடம் தெரிவித்திருந்ததால், உடல் சுத்திகரிப்புக்கான நியமங்களைச் செய்து முடித்த பின் அனந்தரங்கரைப் பார்க்கச் சென்றார் ஆனந்தரங்கர். 

அவர் அனந்தரங்கரின் அறைக்கருகில் சென்றபோது அறைக்குள்ளிருந்து சாந்தரங்கர் வந்து கொண்டிருந்தார். சாந்தரங்கர் அந்த மடத்தில் ஆனந்தரங்கருக்கு அடுத்த நிலையில் இருப்பவர். ஆனந்தரங்கரைப் பார்த்து "நாராயணா" என்று சொல்லி வணங்கிய சாந்தரங்கர் "பாராட்டுக்கள்" என்றார் புன்சிரிப்புடன்.

"நாராயணா" என்று இயந்திரமயமாக அவருக்கு பதில் வணக்கம் தெரிவித்த ஆனந்தரங்கர், 'பாராட்டுகள் என்று எதற்குச் சொல்கிறார்?' என்று யோசித்தார். 

'அப்படித்தான் இருக்க வேண்டும். அனந்தரங்கர் என்னைத் தன் வாரிசாக அறிவிக்கப் போகிறார். அதற்குத்தான் என்னை வரச் சொல்லி இருக்கிறார். அனந்தரங்கர், ஆனந்தரங்கர் என்று இருவர் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால் பலரும் என்னை மடத்தின் தலைவர் என்றே நினைத்துக் கொள்கிறார்கள். இனிமேல் அந்தக் குழப்பத்துக்கே அவசியம் இருக்காது!'

அவரை வரவேற்று அவர் சுற்றுப் பயண விவரங்களைக் கேட்டறிந்த பின், அனந்தரங்கர், "நான் உன்னைப் பார்க்க விரும்பியது எதற்கென்று ஊகித்திருப்பாய். எனக்குப் பிறகு இந்த மடத்தின் தலைமைப் பொறுப்பை யாரிடம் கொடுப்பது என்று தீர்மானித்து விட்டேன். அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்ல வேண்டும் இல்லையா?" என்றார்.

"சொல்லுங்கள் குருவே!" என்றார் ஆனந்தரங்கர் எதிர்பார்ப்புடன்.

"தலைமைப் பொறுப்பை சாந்தரங்கருக்குக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். இதில் உனக்கொன்றும் வருத்தமில்லையே!" என்றார் அனந்தரங்கர், அவர் கண்களை நேராகப் பார்த்தபடி.

"இல்லை சுவாமி. எனக்கு மகிழ்ச்சிதான்!" என்றார் ஆனந்தரங்கர், அனந்தரங்கரின் பார்வையைத் தவிர்க்கும் வகையில் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு.

எவ்வளவு முயன்றும் ஆனந்தரங்கரால் தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொள்ள முடியவில்லை. தன்னை அறியாமலேயே தன் ஏமாற்றம் வார்த்தைகளில் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்து, "நான் போய் முதலில் சாந்தரங்கருக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்து விட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு எழுந்தார்.

அப்போதுதான் அவருக்கு சாந்தரங்கர் தன்னைப் பாராட்டியது நினைவுக்கு வந்தது. 'அவர் ஏன் என்னைப் பாராட்டினார்?'

சட்டென்று திரும்பிய ஆனந்தரங்கர், "குருவே! சாந்தரங்கரிடம் இதைச் சொல்லி விட்டீர்களா?" என்றார்.

"சொன்னேன், தலைமைப் பொறுப்பை உனக்குக் கொடுக்கப் போவதாக!" என்றார் அனந்தரங்கர் சிரித்தபடி.

ஆனந்தரங்கர் குழப்பத்துடன் அனந்தரங்கரைப் பார்த்தார்.

"உட்கார்!" என்ற அனந்தரங்கர், "தலைமைப் பொறுப்பை உனக்குக் கொடுக்கப் போவதாக சாந்தரங்கரிடமும், அவனுக்குக் கொடுக்கப் போவதாக உன்னிடமும் சொன்னதற்குக் காரணம் உங்கள் இருவரின் மனநிலையை அறிந்து கொள்ளத்தான். 

"நாம் ஆசைகளை விட வேண்டும் என்று உபதேசிக்கிறோம். ஆனால் ஆசைகள் நம்மை விடுவதில்லை! ஆசைகளை விடுவதற்குக் கடும் பயிற்சியும் மன உறுதியும் வேண்டும். அதற்கு முன், நாம் இன்னும் ஆசைகளிலிருந்து விடுபடவில்லை என்ற புரிதல் நமக்கு வர வேண்டும். 

"எனக்குப் பிறகு யார் என்பதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. அப்படி நான் முடிவு செய்யும் நாள் வருவதற்குள் நீ ஆசைகளை முழுமையாகத் துறந்து பக்குவ நிலைக்கு வந்து விடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் பணிகளை நீ நன்றாகச் செய்து வருகிறாய். தொடர்ந்து சிறப்பாகச் செய்து வா!" என்று அவரை வாழ்த்தினார் ஆனந்தரங்கர்.

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.

பொருள்:
ஆசைகள் ஏதும் இல்லாதவரே பிறவி அற்றவர் (அவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்). மற்றவர்கள் பிறவி அற்றவர்கள் அல்லர். 
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Monday, September 28, 2020

364. சுவாமிஜியின் வருகை

"குளிக்காம பூஜை அறைக்குள்ள போகக் கூடாதுன்னு எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன்?" என்று கூவினார் விஸ்வநாதன்.

"அவ குழந்தைதானே, அவளுக்கென்ன தெரியும்?" என்றாள் அவர் மனைவி சாந்தா.

"பத்து வயசு ஆகுது. இன்னும் குழந்தையா? சொன்னாப் புரிஞ்சுக்கற வயசுதானே? நீதான் சொல்லிப் புரிய வைக்கணும்."

"பாட்டி சொன்னாங்க தாத்தா! ஆனா, பந்து விளையாடச்சே, அது பூஜை அறைக்குள்ள விழுந்துடுச்சு. அதனால அதை எடுக்கப் போனேன். குளிக்காம போகக் கூடாதுங்கறது ஞாபகம் வல்ல. இனிமே போக மாட்டேன். பாட்டியை ஒண்ணும் சொல்லாதே!" என்றாள் அவர்கள் பேத்தி உமா. அவள் பெற்றோர்கள் இருவரும் அலுவலகத்துக்குச் சென்றிருந்தனர்.

"எவ்வளவு புத்திசாலியாப் பேசறா பாருங்க நம்ம பேத்தி!" என்றாள் சாந்தி பெருமையுடன்.

"ஏம்மா, பந்தை வெளியில மண்ல எல்லாம் விளையாடற. அதில எவ்வளவு அழுக்கு இருக்குமோ, அதைத் துக்கிப் பூஜை அறைக்குள்ள போட்டிருக்கியே!" என்றார் விஸ்வநாதன்.

"நான் என்ன வேணும்னா போட்டேன்? அது போய் விழுந்துடுச்சு!"  என்றாள் உமா காயம் பட்டவளாக.

"போதும்! நீங்களும், உங்க சுத்தமும். நீ வாம்மா! உங்க தாத்தா இப்படித்தான் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாரு!" என்று பேத்தியை அணைத்துக் கொண்டாள் சாந்தி.

"நாளைக்கு சுவாமிஜி நம்ம வீட்டுக்கு வராரு. அவரு வரப்ப இப்படி எல்லாம் நடந்துக்கக் கூடாது!" என்றார் விஸ்வநாதன்.

"வேணும்னா சொல்லுங்க. அவரு வரச்சே நாங்க ரெண்டு பேரும் எங்கேயாவது போயிடறோம்! அவ அப்பா அம்மாவையும் ஆஃபீஸ் போகச் சொல்லிடறேன்!" என்றாள் சாந்தி கோபத்துடன்,

விஸ்வநாதன் பதில் சொல்லவில்லை.

டுத்த நாள் சுவாமிஜி அவர்கள் வீட்டுக்கு வந்தபோது, சாந்தியும், உமாவும் குளித்து விட்டு சுத்தமாக இருந்தனர். விஸ்வநாதனின் மகனும், மருமகளும் கூட அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தனர். அவர்களும் குளித்து விட்டு சுத்தமாக இருந்தனர்.

அவர்கள் வீட்டின் உள்ளறை ஒன்றில் தான் கொண்டு வந்திருந்த மான் தோலைத் தரையில் விரித்து அதன் மீது அமர்ந்திருந்தார் சுவாமிஜி.

சுவாமிஜி விஸ்வநாதனுடன் பொதுவாகப் பேசி விட்டு, " பிசினஸ் எல்லாம் நல்லா நடக்குதா?" என்றார்.

"உங்க ஆசீர்வாத்தில நல்லா போயிக்கிட்டிருக்கு சாமி. இன்னும் பெரிய அளவில செய்யணும்னு நினைக்கிறேன். அதுக்கு பாங்க்ல கடன் வாங்கணும். கடன் வாங்கி எல்லாம் பெரிசா நடத்த வேண்டாம், இப்ப இருக்கறதே போதும்னு என் பையன் சொல்றான்!" என்றார் விஸ்வநாதன் மகனை ஓரக் கண்ணால் பார்த்தபடி.

"உன் பையன் விவேகமாத்தான் இருக்கான்" என்றார் சுவாமிஜி சிரித்துக் கொண்டே.

"என்ன சொல்றீங்க சாமி?" என்றார் விஸ்வநாதன்.

"உனக்கு எவ்வளவு வயசு?"

"அறுபத்தாறு முடிஞ்சு போச்சு சாமி!"

"அறுபத்தாறு வயசாச்சு. உன் பையன் படிச்சு வேலைக்குப் போய் கல்யாணம் ஆகி, 10 வயசில உனக்கு ஒரு பேத்தியும் இருக்கா. இனிமே நீ உன் ஆசைகளைக் குறைச்சுக்கிட்டு உண்மையான விஷயங்களைத் தேட ஆரம்பிக்கணும். உண்மையான விஷயம்னா வாழ்க்கையோட அர்த்ததைப் புரிஞ்சுக்க முயற்சி செய்யறது, ஆன்மீகத் தேடல் எல்லாம். உனக்கு இதிலெல்லாம் நாட்டம் இருக்கறதாலதான் என்னை மாதிரி சாமியார்கள் கிட்ட ஈடுபாடு வச்சிருக்க.  அதனால ஆசைகளைக் குறைச்சுக்கிட்டு ஆன்மீக விஷயங்கள்ள அதிகமா ஈடுபட முயற்சி செய்!" என்றார் சுவாமிஜி.

"நான் ஏற்கெனவே பூஜையெல்லாம் பண்ணிக்கிட்டிருக்கேன் சாமி!" 

'தெரியும். அதான் உன் பூஜை அறையைப் பாத்தேனே! சுத்தமா இருக்கறது, பூஜை பண்றது இதுக்கெல்லாம் மேல ஆன்மீகத் தேடல் இருக்கணும். அது இருந்தா, மனசில ஆசைகள் தோணுவது குறைஞ்சு ஒரு பற்றற்ற தன்மை வந்துடும்" என்ற சுவாமிஜி, உமாவைப் பார்த்து, "இங்க வாம்மா!" என்றார்.

"போம்மா!" என்று உமாவைப் பார்த்துக் கூறிய விஸ்வநாதன், சுவாமிஜியிடம் திரும்பி, "அவ குளிச்சுட்டு சுத்தமாத்தான் இருக்கா!" என்றார்.

"அதெல்லாம் முக்கியமில்ல. கோவிலுக்கு வரவங்கள்ளாம் குளிச்சுட்டு சுத்தமா வராங்களான்னு கடவுள் பாக்கறாரா என்ன?" என்றபடியே தன் முன் வந்து நின்ற உமாவின் கையை அன்புடன் தொட்டார் சுவாமிஜி.

உமா தன் தாத்தாவைப் பார்த்துச் சிரித்தாள்.

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்..

பொருள்:
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லாதிருத்தலே ஆகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
    பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Saturday, September 26, 2020

363. தங்கையிடம் ஒரு கேள்வி!

"ஏண்டி கல்யாணம் ஆகி இவ்வளவு வருஷம் ஆச்சு. இது வரைக்கும் உன் புருஷன் உனக்கு ஒரு நகை கூட வாங்கிக் கொடுக்கலையா? என்றாள் மீனா, தன் தங்கை சாரதாவிடம்

"நான் கேட்டிருந்தா வாங்கிக் கொடுத்திருப்பாரு. ஆனா எனக்கு நகை போட்டுக்கறதில எல்லாம் ஆசை இல்லையே!" என்றாள் சாரதா, சிரித்துக் கொண்டே.

"உனக்கு எதிலதான் ஆசை இருந்திருக்கு?" என்று மீனா சொல்லிக் கொண்டிருந்தபோதே உள்ளிருந்து சாரதாவின் கணவன் சிவகுரு வந்தான்.

'தங்கையின் கணவர் வீட்டில் இருப்பது தெரியாமல் தங்கையிடம் அவள் கணவன் நகை வாங்கிக் கொடுக்காததைப் பற்றிப் பேசி விட்டோமே!' என்று மனதுக்குள் சிறிது சங்கடப்பட்ட மீனா சமாளித்துக் கொண்டு சற்று நேரம் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசி விட்டுப் போய் விட்டாள்..

மீனா சென்றதும்," உன் அக்கா சொன்ன மாதிரி உனக்கு நான் நகை எதுவும் வாங்கிக் கொடுத்ததில்ல. அதில உனக்கு வருத்தமா?" என்றான் சிவகுரு.

"நீங்க வேற! அவளுக்கு வேற வேலை இல்ல. எனக்கு இதிலெல்லாம் ஆசை இல்லைன்னு உங்களுக்குத் தெரியாதா?" என்றாள் சாரதா.

"உனக்கு எதிலதான் ஆசை இருந்திருக்குன்னு உன் அக்கா கேட்டது சரிதான் போலருக்கு!" என்றான் சிவகுரு சிரித்தபடி.

"அது உண்மைதான். சின்ன வயசிலேயே மீனா என் அப்பா அம்மா கிட்ட தனக்கு இது வேணும் அது வேணும்னு அடிக்கடி கேட்டுக்கிட்டிருப்பா. அவங்க கூட 'உன் தங்கையைப் பாரு, அவ ஏதாவது கேக்கறாளா?' ன்னு அவகிட்ட சொல்லுவாங்க. இயல்பாகவே இது வேணும், அது வேணும்கற எண்ணங்கள் எனக்கு ஏற்படல்ல."

"இப்படிப்பட்ட மனநிலை அமையறதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும், இல்ல நான்தான் கொடுத்து வச்சிருக்கணும்!" என்றான் சிவகுரு.

"என்னடி இப்படி ஆயிடுச்சு உன் வாழ்க்கை?" என்றாள் மீனா.

"என்ன ஆயிடுச்சு இப்ப?" என்றாள் சாரதா அமைதியாக.

"ஏண்டி, உன் புருஷனுக்கு தொழில்ல நஷ்டம் ஏற்பட்டு, இப்ப அவரு ஏதோ ஒரு வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பத்தற நிலைமை வந்திருக்கு. நீங்க உங்க பெரிய வீட்டை வித்துட்டு இப்ப சின்னதா ஒரு வாடகை வீட்டில குடி இருக்கற நிலைமை வந்திருக்கு. என்ன ஆயிடுச்சுன்னு கேக்கற! உனக்கு வருத்தம் இல்லையா?" 

"வருத்தம்தான். அவர் தொழில் நஷ்டம் ஆகி வேலைக்குப் போக வேண்டிய நிலைமை வந்தது பத்தி வருத்தம்தான். அவருக்கு இப்படி ஒரு ஏமாத்தம் வந்தது பத்தி வருத்தம்தான். என்ன செய்யறது? ஆனாலும் நாங்க சமாளிச்சு வாழ்ந்துக்கிட்டுத்தானே இருக்கோம்?" என்றாள் சாரதா. 

"பழையபடி வசதியா வாழணும்னு உனக்கு ஆசை இல்லையா?"

"பழையபடி உயர்ந்த நிலைமைக்கு வரணும்னு அவர் முயற்சி பண்ணிக்கிட்டிருக்காரு. அவரோட முயற்சிக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செஞ்சுக்கிட்டிருக்கேன். அது சீக்கிரம் நடக்குமா, நாள் ஆகுமான்னு எனக்குத் தெரியாது. ஆனா நான் சந்தோஷமாத்தான் இருக்கேன். இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னெல்லாம் எனக்கு ஆசை கிடையாது" என்றாள் சாரதா சிரித்த முகத்துடன்.

அவளைச் சற்று வியப்புடன் பார்த்த மீனா,"நீ அதிர்ஷ்டக்காரியா, உன் கணவர் அதிர்ஷ்டக்காரரான்னு தெரியல!" என்றாள் உண்மையான உணர்வுடன்.

அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த சிவகுரு, "எனக்கும் ரொம்ப நாளா இந்த சந்தேகம்தான்!" என்றான் மீனாவைப் பார்த்துச் சிரித்தபடி.

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.

பொருள்:
ஆசைகள் இல்லாத நிலை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் கூட அதற்கு நிகரான ஒன்று இல்லை.

பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Wednesday, September 23, 2020

362. பெரிய ஆசை

"அமெரிக்காவிலேந்து திரும்பி வரச்சே நமக்கெல்லாம் என்ன வாங்கிக்கிட்டு வரணும்னு எழில் கேட்டிருக்கா. எனக்கு வேணுங்கறதை நான் சொல்லிட்டேன். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க" என்றாள் யாமினி.

"எனக்கு எதுவுமே வேண்டாம்" என்று சிரித்தபடியே கூறிய கார்த்திகேயனைச் சற்று வியப்புடன் பார்த்தாள் யாமினி.

யாமினியைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் கார்த்திகேயன் விதித்த ஒரே நிபந்தனை திருமணத்துக்குப் பின் அவள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதுதான். 

"எதுக்கு நான் வேலைக்குப் போகணும்னு சொன்னீங்க?" என்று திருமணத்துக்குப் பிறகு யாமினி கேட்டபோது, "எனக்கு நிறைய ஆசை உண்டு. அதையெல்லாம் நிறைவேத்திக்க நிறையப் பணம் வேணும். அதனாலதான் நீயும் சம்பாதிச்சாதான் உதவியா இருக்கும்னு நினைச்சேன்" என்றான் கார்த்திகேயன்.

வசதியான வாழ்க்கை வேண்டும் என்று விரும்புவது இயற்கைதானே என்று நினைத்தாள் யாமினி.

ஆனால் கார்த்திகேயனின் மனநிலை 'அத்தனைக்கும் ஆசைப்படு' என்பது போல் இருந்தது. அவர்கள் வசதிக்கு மீறிப் பொருட்களை வாங்குவது, பிறகு அதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையைச் சமாளிப்பது என்பது அவர்கள் இருபத்தைந்து ஆண்டுக் குடும்ப வாழ்க்கையில் ஒரு தொடர் நிகழ்வாகவே ஆகி விட்டது.

அவனைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினர் கார் வாங்குவதும், பராமரிப்பதும் தங்கள் சக்திக்கு மீறிய வாழ்க்கை முறை என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அவன் ஒரு பழைய காரை வாங்கி அதைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டான்.

பிறகு சில ஆண்டுகளில் அதை விற்று விட்டுப் புதிய கார், பிறகு பெரிய கார், வீடு, வீட்டு உபகரணங்கள், மின்னணு சாதனங்கள் இவை தவிர கேளிக்கைகள், உல்லாசப் பயணங்கள் என்று அவன் ஆசைகள் பெருகிக்கொண்டே போக, பொருளாதார நிர்வாகம் அவர்களுக்கு எப்போதுமே திணறலாகவே இருந்து வந்தது. 

யாமினி எவ்வளவோ சொல்லியும் கார்த்திகேயன் கேட்கவில்லை. 

"அனுபவிக்கறதுக்குத்தானே வாழ்க்கை? நாம ஆசைப்படறதை செய்யக் கூடாதுன்னா, அப்புறம் அது என்ன வாழ்க்கை?" என்றான் அவன்.

"அது சரி. ஆனா இந்தக்.கடன் சுமைக்காகக் கவலைப்பட்டுக்கிட்டே, நாம ஆசைப்பட்டு வாங்கின பொருட்களையும் வசதிகளையும் எப்படி அனுபவிக்க முடியும்?"

"நான் கவலைப்படல. என்னால இதையெல்லாம் சமாளிக்க முடியும்? நீ ஏன் கவலைப்படற? நாம ஆசைப்பட்ட விஷயங்களை அனுபவிக்கறதைப் பத்தி சந்தோஷமா இரு!" என்று புதிய கீதோபதேசம் செய்தான் கார்த்திகேயன்.

னால் கடந்த சில மாதங்களாக கார்த்திகேயனிடம் ஒரு மாறுதலை கவனித்தாள் யாமினி.

பொருட்களை வாங்கும் ஆசைகளைக் குறைத்துக் கொண்டான். இத்தனைக்கும் அவர்கள் பெண் எழில் படித்து முடித்து விட்டு வேலைக்குப் போகத் தொடங்கியதும் அவர்கள் பொருளாதார நிலை முன்பை விட வசதியாகவே இருந்தது.

முன்பெல்லாம் உறவினர்கள், நண்பர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வந்தால் அவர்களிடம் ஏதாவது பொருட்கள் வாங்கி வரச் சொல்லி அவற்றுக்கான விலையை அவர்களிடம் கொடுத்து அவற்றை வாங்கிக் கொள்வான் கார்த்திகேயன். ஆனால் இப்போது அவர்கள் பெண் அலுவலக வேலையாக அமெரிக்கா போயிருக்கும்போது தனக்கு எதுவும் வாங்கி வர வேண்டாம் என்கிறான்!

"என்ன ஆச்சு உங்களுக்கு? முன்னெல்லாம் நிறைய பொருட்களை வாங்கணும், அங்கே போகணும், இங்கே போகணும்னெல்லாம் ஆசைப்படுவீங்க. இப்ப கொஞ்ச நாளா எதுவுமே வேண்டாம்னு இருக்கீங்களே, ஆசைகளையெல்லாம் விட்டுட்டீங்களா?" என்றாள் யாமினி.

"விடல. சின்னச் சின்ன ஆசைகளை விட்டுட்டு ஒரு பெரிய ஆசையை எடுத்துக் கிட்டிருக்கேன்."

யாமினிக்கு பகீரென்றது. "பெரிய ஆசையா? அது என்ன? உங்க சின்ன ஆசைகளையே நம்மால சமாளிக்க முடியலியே!"

"கவலைப்படாதே! சின்ன ஆசைகளைச் சமாளிக்கத்தான் பெரிய ஆசையே! அதுக்கு முன்னால இந்தப் பெரிய ஆசை எனக்கு எப்படி வந்ததுன்னு சொல்றேன். ஒரு கதை படிச்சேன். ஒத்தன் நிறையத் திருடிக்கிட்டே இருக்கான். இந்தத் திருட்டையெல்லாம் விட்டுடணும்னு திடீர்னு ஒருநாள் அவனுக்குத் தோணுது. பெரிசா ஒரு திருட்டைப் பண்ணிட்டா அப்புறம் திருடறதையே விட்டுடலாம்னு நினைச்சு ஒரு பாங்க்கைக் கொள்ளையடிக்கத் திட்டம் போடறான். என் ஆசைகளை விடணும்னா அவனை மாதிரி என்ன செய்யலாம்னு நினைச்சுதான் இந்தப் பெரிய ஆசையை வளத்துக்கிட்டா மத்த ஆசைகள் எல்லாம் போயிடும்னு நினைச்சு முயற்சி செஞ்சு மத்த ஆசைகளை விட்டுட்டேன்" என்றான் கார்த்திகேயன்.

"கேக்க நல்லாத்தான் இருக்கு. நீங்க ஆசைகளை விட்டுட்டதை நான்தான் கவனிச்சு சொன்னேனே! ஆனா,அந்தப் பெரிய ஆசை என்ன? அது நம்மை என்ன பாடு படுத்தப் போகுதோ?" என்றாள் யாமினி.

"அதைப்பத்தி ஏன் கவலைப்படற? அந்த ஆசைதான் ஏற்கெனவே நிறைவேறிடுச்சே!" 

"நிறைவேறிடுச்சா? என்ன ஆசை அது?" என்றாள் யாமினி வியப்புடன்.

"எந்த ஆசையுமே வரக் கூடாதுங்கற பெரிய ஆசைதான் அது!" என்றான் கார்த்திகேயன் சிரித்தபடி.

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

பொருள்:
ஒருவன் எதையாவது விரும்ப வேண்டுமானால் பிறவா நிலையை விரும்ப வேண்டும். ஆசைகள் அற்ற நிலையை விரும்பினால் அது கிட்டும்.

பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Monday, September 21, 2020

361. பார்வதி சொன்ன பொய்!

"இன்னிக்கு நானும் உன்னோட ஆசிரமத்துக்கு வரேன்" என்றான் ராஜன்.

பார்வதி மௌனமாகத் தலையாட்டினாள். என்றுமில்லாமல் திடீரென்று ஆசிரமத்துக்கு வருவதில் ராஜன் ஆர்வம் காட்டியது அவளுக்கு வியப்பளித்தாலும் அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஆசிரமத்துக்குச் சென்றதும் சுவாமிஜியிடம் தன் கணவனை அறிமுகப் படுத்தினாள் பார்வதி.

"பார்வதி பல வருஷங்களா தினமும் சில மணி நேரம் இந்த ஆசிரமத்துக்கு வந்து சேவை செஞ்சுட்டுப் போறா. இங்கே இருக்கிற துறவிகள், இங்கே சேவை செய்யற பக்தர்கள், அடிக்கடி இங்கே வருகிறவர்கள் எல்லாருக்கும் பார்வதி மேல அன்பும் மதிப்பும் உண்டு. அவளோட அன்பு, பொறுமை, சேவை மனப்பான்மை இதெல்லாம் நிறைய பேருக்குப் பெரிய தூண்டுதலா இருந்திருக்கு - நீங்க இன்ஸ்பிரேஷன்னு சொல்லுவீங்களே அது! நீங்க இன்னிக்கு இங்கே வந்திருக்கறது எனக்கு சந்தோஷமா இருக்கு" என்றார் சுவாமிஜி.

சுவாமிஜியிடமிருந்து இப்படி ஒரு புகழ்ச்சியை பார்வதி எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியமல் அவரை நன்றியுடன் பார்த்தாள்.

"ஆமாம் சுவாமிஜி! நானும் அவளோட சேவைகளை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். என்னால இங்க வந்து எதுவும் செய்ய முடியல. ஆனா அவளுக்கு ஆதரவா நான் எப்பவுமே இருப்பேன். அதை உங்க கிட்ட நேரில சொல்லணும்னுதான் இன்னிக்கு இங்கே வந்தேன்" என்றான் ராஜன்.

சுவாமிஜி சிரித்துக்கொண்டே மௌனமாகத் தலை அசைத்தார்.

"சுவாமிஜி! அடுத்த ஜன்மத்திலேயும் பார்வதிதான் என் மனைவியா இருக்கணும். நீங்க அதுக்கு அருள் புரியணும்!" என்றான் ராஜன்.

"அது என்னோட ஜூரிஸ்டிக்‌ஷன்ல இல்லையே!" என்றார் சுவாமிஜி பார்வதியைப் பார்த்துச் சிரித்தபடியே.

"என்னோட ஆசையும் அதுதான் சுவாமிஜி" என்றாள் பார்வதி.

டுத்த நாள் பார்வதி தயக்கத்துடன் சுவாமிஜியின் அருகில் வந்து நின்றாள்.

"சொல்லும்மா!" என்றார் சுவாமிஜி.

"சுவாமிஜி! நேத்து நான் உங்க கிட்ட பொய் சொல்லிட்டேன்"

"என்ன பொய்?"

"என் கணவர் அடுத்த ஜன்மத்திலேயும் நான்தான் அவரோட மனைவியா வரணும்னு சொன்னப்ப, என்னோட ஆசையும் அதுதான்னு சொன்னேன்."

"ஏன், உனக்கு அதுல விருப்பம் இல்லையா?"

"அப்படி இல்ல சுவாமிஜி. இந்த ஆசிரமத்துக்கு நான் வர ஆரம்பிச்சப்பறம் எனக்கு எந்த ஆசையும் வரதில்ல. அடுத்த ஜன்மத்தைப் பத்தியோ அப்பவும் இவர்தான் என் கணவரா வரணும்னோ நான் நினைச்சுப் பாத்ததே இல்ல. ஆனா என் கணவர் அப்படிச் சொன்னதும் நானும் அப்படிச் சொன்னாதான் அவர் சந்தோஷப்படுவார்னு நினைச்சு டக்னு அப்படிச் சொல்லிட்டேன். ஆனா அப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்படாதபோது அதுதான் என்னோட ஆசையும்னு சொன்னது தப்புதானே? அதுதான் உங்க கிட்ட உண்மையைச் சொல்லணும்னு சொல்றேன்" என்றாள் பார்வதி.

அவளை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்த சுவாமிஜி, "ஆசைகள் இருந்தா அவை மறுபடி பிறவி ஏற்பட வழி வகுக்கும்கறது பல ஞானிகளோட கருத்து. உனக்கு ஆசைகள் இல்லாம இருக்கறது பெரிய விஷயம். உன் கணவரோட மனத்திருப்திக்காக உனக்கும் அப்படி ஒரு ஆசை இருக்கறதா நீ சொன்னது தப்பு இல்லை. கடவுளோட அருள் உனக்கு நிறைய இருக்கணும்னு வாழ்த்தறேன்" என்றார் சுவாமிஜி.

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

பொருள்:
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்று கூறுவர்.

பொருட்பால்                                                                                       காமத்துப்பால்


Monday, September 7, 2020

360. மறுபரிசீலனை!

"சார்! டைரக்டர் உங்ளைக் கூப்பிடறாரு!" என்று அறிவித்தான் பியூன்.

சம்பந்தம் டைரக்டரின் அறைக்குப் போனபோது, அங்கே இன்னொரு மனிதர் உட்கார்ந்திருந்தார்.

சம்பந்தத்தை அமரச் சொன்ன டைரக்டர், "மிஸ்டர் சம்பந்தம்! இவர் மிஸ்டர் தேவராஜன். இவரோட ப்ராஜக்டுக்கு நிலம் அலாட் பண்ற விஷயமாப் பேச வந்திருக்காரு" என்றார் டைரக்டர். 

"சார்! என்னோட பரிந்துரையை உங்களுக்கு அனுப்பிட்டேனே!" என்றார் சம்பந்தம் டைரக்டரிடம்.

"பாத்தேன். அவரோட பிராஜக்ட் நிலம் அலாட் ஆகத் தகுதி பெறலன்னு சொல்லி இருக்கீங்க. அதை நான் அவர் கிட்ட சொல்லிட்டேன். அவர் இதை மறுபரிசீலனை செய்யச் சொல்லிக் கேக்கறாரு. நீங்கதான் முடிவு செய்யணும்" என்றார் டைரக்டர் சிரித்தபடி.

சம்பந்தத்துக்கு சுருக்கென்று கோபம் வந்தது. அலுவலகத்தின் கோப்புகளில் கூறப்பட்ட கருத்துக்களை வெளியாட்களிடம் அதுவும் விண்ணப்பம் அளித்தவரிடமே பகிர்ந்து கொள்வதே தவறு. அத்துடன் தனக்கு நேரடியான அழுத்தமும் கொடுக்கப்படுகிறது!

கோபம் கொள்ளக் கூடாது என்ற தன் தீர்மானத்தை நினைவு கூர்ந்து சம்பந்தம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார் சம்பந்தம்.

"சாரி! என்னைப் பொருத்தவரை மறுபரிசீலனை செய்யறதுக்கு இதில எதுவும் இல்ல" என்றார் சம்பந்தம் சுருக்கமாக. 

"இவர் யாருன்னு தெரிஞ்சா நீங்க இப்படிப் பேச மாட்டீங்க. இவரு தாமோதரனோட சம்பந்தி. தாமோதரனைத் தான் உங்களுக்குத் தெரியுமே!"

சம்பந்தத்தின் உடல் முழுவதும் குப்பென்று ஒரு உணர்வு பரவியது - கோபம், திகில், அதிர்ச்சி, சோர்வு எல்லாம் கலந்த உணர்வு. 

ஆயினும் உடனே சமாளித்துக்கொண்டு, "ஓ! அப்படியா? தாமோதரன் சாரை நான் ரொம்பக் கேட்டதாகச் சொல்லுங்க" என்று வலுவில் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் தேவராஜனிடம் சொல்லி விட்டு டைரக்டரின் பதிலை எதிர் பார்க்காமல் இருக்கையிலிருந்து எழுந்து அறையை விட்டு வெளியேறினார் சம்பந்தம்.

லுவகம் முடிந்ததும் சம்பந்தம் நேரே தன் நண்பர் ராமநாதனின் வீட்டுக்குச் சென்றார். ராமநாதன் சம்பந்தத்தின் உதவியாளராக இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். 

ராமநாதன் சம்பந்தத்தை விட ஐந்து ஆண்டுகள் பெரியவர், சம்பந்தம் அவர் மேலதிகாரியாக இருந்தவர் என்பதையெல்லாம் தாண்டி இருவரிடையேயும் ஒரு நட்பு ஏற்பட்டு, அது ராமநாதன் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் நீடித்தது. 

அன்று அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை ராமநாதனிடம் சம்பந்தம் விளக்கினார். 

"ஒரு காலத்தில பணத்தாசையால நான் காசு வாங்கிக்கிட்டு சட்டத்தை மீறி நடந்துக்கிட்டிருந்தேங்கறது உண்மைதான். அப்ப தாமோதரனுக்கும் நான் சட்டதை மீறி உதவி செஞ்சிருக்கேன். அதை வச்சு டைரக்டர் என்னை மடக்கப் பாத்தாரு. பழசெல்லாம் ஞாபகம் வந்து ஒரு நிமிஷம் வெலவெலத்துப் போயிட்டேன். ஆனாலும் சமாளிச்சுக்கிட்டு முடியாதுன்னு சொல்லிட்டேன்."

"நல்ல வேலை செஞ்சீங்க!" என்றார் ராமநாதன்.

"கடந்த காலத்தில எவ்வளவு முட்டாள்தனமா நடந்துக்கிட்டிருக்கேன்னு நெனச்சா எனக்கே சங்கடமா இருக்கு. அப்பல்லாம் என்னை ஆசை புடிச்சு ஆட்டிச்சு. பணத்தாசை! யாராவது நான் செய்யறது தப்புன்னு சொன்னா கோபம் வரும். இதெல்லாம் தப்புன்னு நீங்க கூட நிறைய தடவை சொல்லி இருக்கீங்க . உங்க மேலயும் நான் கோபப்பட்டிருக்கேன். பணத்தில உங்களுக்கும் பங்கு கொடுத்தா சரியாயிடும்னு நெனச்சேன். ஆனா நீங்க நான் கொடுத்த பங்கை வாங்கிக்கல. அப்புறம் நான் சஸ்பெண்ட் ஆகி, விசாரணையெல்லாம் நடந்து ஆறு மாசம் கழிச்சு என் மேல வந்த புகாருக்கு ஆதாரம் இல்லேன்னு சொல்லித் திரும்பவும் வேலையில சேத்துக்கிட்டாங்க. இதெல்லாம் துன்பங்களை வரவழைச்சுக்கற வழின்னு அப்புறம்தான் எனக்குப் புரிஞ்சுது. இப்ப நேர்மையா இருந்துக்கிட்டிருக்கேன். இப்பதான் நிம்மதியா இருக்கு. ஆனாலும் நான் முன்னே செஞ்ச தப்பை வச்சு என்னை வளைச்சுப் போட அப்பப்ப யாராவது முயற்சி செஞ்சுக்கிட்டிருக்காங்க!" என்று மனதில் இருந்தவற்றைக் கொட்டித் தீர்த்தார் சம்பந்தம்.

"இப்பதான் நீங்க உறுதியா இருக்கீங்களே! இனிமே உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது" என்றார் ராமநாதன்.

"உங்ககிட்ட மனசு விட்டுப் பேசிட்டுப் போனா நிம்மதியா இருக்கு. அதனாலதான் உங்களைப் பாக்க வந்தேன்" என்று சொல்லி விடை பெற்றார் சம்பந்தம்.

"வாங்க! மனசு விட்டுப் பேசறதுக்குத்தானே நண்பர்கள் இருக்காங்க!" என்று சொல்லி விடை கொடுத்தார் ராமநாதன்.

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   

குறள் 360
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

பொருள்:
விருப்பு, கோபம், அறியாமை இந்த மூன்றையும் அறவே ஒழித்து விட்டவர்களுக்கு எந்தத் துன்பமும் வராது.

பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Wednesday, September 2, 2020

359. போருக்குப் பின் அமைதி

"வணக்கம் மன்னரே! தாங்கள் என்னை அழைத்ததாகச் செய்தி கிடைத்தது."

"வாருங்கள் படைத்தலைவரே! உங்கள் வீரத்தாலும், பலத்தாலும், நாம் பல போர்களை வென்றிருக்கிறோம். இப்போது இன்னொரு போருக்கு நாம் தயாராக வேண்டும். அதற்குத்தான் உங்களை அழைத்தேன்."

படைத்தலைவர் வல்லபர் மௌனமாக இருந்தார்.

"என்ன வல்லபரே! போர் என்றாலே உற்சாகம் ஆகி விடுவீர்களே! இப்போது ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்?" என்றார் அரசர் வியப்புடன்.

"ஒரு விண்ணப்பம் அரசே! தாங்களே குறப்பிட்டபடி நான் பல போர்களில் பங்கேற்று விட்டேன். இனி நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். துணைப் படைத்தலைவர் காரியைப் படைத்தலைவராக நியமித்து எனக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார் வல்லபர்

"ஓய்வெடுக்க வேண்டிய வயதில்லையே உங்களுக்கு? இப்போதுதான் பிராயம் நாற்பதைத் தாண்டி இருக்கிறீர்கள். அறுபதைத் தொடும் நானே இன்னும் ஓய்வு பற்றிச் சிந்திக்கவில்லை! ஏன் இந்த திடீர் முடிவு?" என்றார் அரசர் வியப்புடன்.

"திடீர் முடிவு இல்லை மன்னவா! சில ஆண்டுகளாகவே போர்கள் விளைவிக்கும் துன்பங்களைப் பார்த்து எனக்கு மன வருத்தமும் குற்ற உணர்வும் ஏற்பட்டு வருகிறது. எனவேதான் இனி அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்." 

"ஓய்வு பெற்று என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களால் இல்லத்தில் சோம்பி அமர்ந்திருக்க முடியாதே!"

"நான் போருக்காகப் பல இடங்களுக்குச் சென்றபோது சில அற்புதமான ஆலயங்களைக் காணும் பேறு கிடைத்தது. அங்கெல்லாம் சென்று வழிபட்டபோது எனக்கு ஒரு புத்துணர்வும் அமைதியும் ஏற்பட்டன. அதற்குப் பிறகுதான் ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என் மனைவிக்கும் ஆலயங்களுக்குச் செல்வதில் அதிக ஆர்வம் உண்டு. இத்தனை காலமும் அவள் விருப்பத்தை நான் பெரிதாக நினைக்கவில்லை. இனி அவளுடன் பல ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அத்துடன்..."

"அத்துடன்?"

"ஒரு அரசராக மக்களுக்குத் தாங்கள் எத்தனையோ நன்மைகள் செய்து வருகிறீர்கள். ஆயினும் நோய்வாய்ப்பட்டவர்கள், உறவுகள் யாரும் இன்றி கவனித்துக்கொள்ள யாருமின்றித் தனிமையில் வாடும் முதியவர்கள் போன்ற பல மனிதர்களுக்குத் தனிப்பட்ட உதவிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய மனிதர்களுக்கும் என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்."

"நீங்களும் உங்கள் மனைவியும் ஆலய தரிசனம், ஆதரவற்றோர்க்கு உதவி என்று கிளம்பி விட்டால் உங்கள் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்?" என்றார் அரசர்.

வல்லபர் சிரித்து, "அரசே! நானும் என் மனைவியும் துறவறம் மேற்கொள்ளப் போவதில்லை. மற்ற எல்லோரையும் போல் எங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு இல்லறம்தான் நடத்தப் போகிறோம். இது போன்ற பணிகளால் எங்கள் குடும்ப வாழ்க்கைக்கு எந்தக் குந்தகமும் வராது" என்றார்.

மன்னர் சற்று நேரம் மௌனமாக இருந்தார்.

"என்ன யோசனை மன்னரே!" என்றர் வல்லவர்.

"ஒன்றுமில்லை. உங்களுடன் சேர்ந்து நானும் இந்தப் பணிகளில் ஈடுபடலாமா என்று யோசித்தேன். ஆனால் அதற்கான மன முதிர்ச்சி எனக்கு இன்னும் ஏற்படவில்லை. அப்படி ஏற்படும்போது இளவரசனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு நானும் உங்களுடன் சேர்ந்து கொள்வேன்!" என்றார் அரசர் சிரித்தபடி.

"அப்படியானல் என்னைப் பணியிலிருந்து விடுவிக்கத் தங்களுக்குச் சம்மதம்தானே அரசே?"

"ஒரு நிபந்தனையுடன்!" என்றார் அரசர்.

"என்ன நிபந்தனை அரசே?" என்றார் வல்லவர் கவலையுடன்.

"ஆதரவற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய முனையும்போது அரசின் உதவி தேவை என்றால் தயங்காமல் என்னை அணுக வேண்டும். அது கூட வேண்டாம். நீங்கள் என்ன உதவி கேட்டாலும் செய்ய வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிடச் சொல்லி அமைச்சரிடம் சொல்லி விடுகிறேன்."

"மிக்க நன்றி அரசே!" என்றார் வல்லபர்

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   

குறள் 359
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

பொருள்:
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

பொருட்பால்                                                                                       காமத்துப்பால்