About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, May 31, 2018

168. எப்படி இருந்தவர்!

வள்ளியப்பனின் ஓட்டலில் மானேஜராக முத்து சேர்ந்தபோது அவன் பார்த்த வள்ளியப்பன் ஒரு அற்புதமான மனிதர். வாடிக்கையாளர்கள், தன்னிடம் வேலை செய்பவர்கள் எல்லோரிடமும் அன்புடனும், பண்புடனும், அக்கறையுடனும் இருந்தவர். 

இப்படி ஒரு மனிதர் இருப்பாரா என்று முத்து அடிக்கடி வியந்திருக்கிறான். வள்ளியப்பன் மீது அவனுக்கு இருந்த மதிப்பினாலேயே, வேறு சில வேலை வாய்ப்புகள் வந்தும் அவன் அவற்றில் ஆர்வம் காட்டவில்லை. 

அப்படிப்பட்ட மனிதரிடம் சில வருடங்களாக ஏற்பட்டிருந்த மாற்றம் முத்துவுக்கு வியப்பாக இருந்தது.

'மீனாட்சி பவன்' என்ற பெயரில் இயங்கி வந்த அவர்களுடைய ஓட்டல் பல வருடங்களாக அந்த ஊரின் சிறந்த ஓட்டலாக இருந்து வந்தது. எத்தனையோ புதிய ஓட்டல்கள் வந்தாலும், அவை எதுவுமே 'மீனாட்சி பவனு'க்குப் போட்டியாக விளங்கும் அளவுக்கு வளரவில்லை. 

ஆனால் 'லட்சுமி விலாஸ்' ஓட்டல் வந்ததும், நிலைமை மாறி விட்டது. 'மீனாட்சி பவனை' விட 'லட்சுமி விலாஸி'ல் அதிகக் கூட்டம் சேர்ந்தது. 

"அப்படி என்னய்யா இருக்கு அந்த ஓட்டல்ல? அயிட்டம்லாம் நம்மளோடதை விட நல்லா இருக்காமா?" என்றார் வள்ளியப்பன்.

"அப்படி இருக்கிற மாதிரி தெரியலீங்க. பளபளப்பான தரை, புது விதமான மேஜை நாற்காலி, அலங்காரமான போர்டு இந்த மாதிரி விஷயங்களைப் பாத்துட்டுத்தான் நிறைய பேரு அங்கே போயிருக்காங்க. ஆனா நம்ப வியாபாரம் குறையல. நம்ப கஸ்டமர்ஸ் யாரும் அங்கே போகல. மத்த ஓட்டல் கஸ்டமர்ஸ் வேணும்னா போயிருக்கலாம். நமக்கு பாதிப்பு இல்லாதபோது நாம எதுக்கு கவலைப்படணும்?" என்றான் முத்து.

"நேத்திக்கு வந்த ஒரு பய நமக்கு மேல போயிக்கிட்டிருக்கான். அதைப் பாத்துட்டு நாம சும்மா இருக்க முடியுமா?" என்றார் வள்ளியப்பன்.

முதன்முறையாக முத்து வள்ளியப்பனின் ஒரு புதிய முகத்தைப் பார்த்தான். 'எல்லோரிடமும் அன்பும், கருணையும் உள்ள இவர் ஏன் 'லட்சுமி விலாஸ்' மீது ஆத்திரப்படுகிறார் - அதுவும் இவருடைய வியாபாரத்துக்கு பாதிப்பு இல்லாதபோது?' என்று குழம்பினான்.

அதற்குப் பிறகு அவன் பார்த்த வள்ளியப்பன் வேறு. அவர் குணமே அடியோடு மாறி விட்டது போல் இருந்தது. எப்போதும் 'லட்சுமி விலாஸ்' ஓட்டலை எப்படி ஒழித்துக் கட்டுவது என்ற சிந்தனையிலேயே இருந்தார். இது பற்றி அடிக்கடி அவனிடம் ஆலோசித்தார். அத்தகைய எதிர்மறைச் சிந்தனை வேண்டாம் என்று முத்து சொன்னபோதும் அவர் கேட்கவில்லை.

'லட்சுமி விலாஸ்' ஓட்டலுக்கு சில சங்கடங்கள் ஏற்பட ஆரம்பித்தன. அந்த ஓட்டல் பற்றிச் சில வதந்திகள் பரவின. அழுகிய காய்கறிகளைக் குறைந்த விலைக்கு வாங்கி வந்து சமைக்கிறார்கள் என்று ஒரு வதந்தி. அங்கே சாப்பிட்டவர்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், அவர்கள் இதை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக லட்சுமி விலாஸ் ஓட்டலின் அதிபர் கண்ணன் அவர்கள் மருத்துவச் சிகிச்சைக்கான எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டார் என்றும் ஒரு வதந்தி.

இது போல் இன்னும் பல வதந்திகள். இவற்றினால் அவ்வப்போது லட்சுமி விலாஸ் ஓட்டலுக்குச் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவர்கள் வியாபாரத்துக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இவற்றுக்கெல்லாம் பின்னால் வள்ளியப்பன் இருப்பாரோ என்ற சந்தேகம் முத்துவுக்கு இருந்தது. 'லட்சுமி விலாஸ்' ஓட்டலுக்குப் பிரச்னை ஏற்பட்டிருப்பதாகச் செய்தி வந்தபோதெல்லாம் வள்ளியப்பன் முத்துவைப் பார்த்து ரகசியமாகச் சிரிப்பது போல் சிரிப்பார்.

'லட்சுமி விலாஸ்' ஓட்டல் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் வள்ளியப்பன்தான் என்ற எண்ணம் ஊருக்குள் பரவ ஆரம்பித்தது. இதனால் 'லட்சுமி விலாஸ்' மீது அனுதாபமும், 'மீனாட்சி பவன்' மீது வெறுப்பும் வளர, 'லட்சுமி விலாஸி'ன் வியாபாரம் வேகமாக வளர்ந்தது. முதல் முறையாக 'மீனாட்சி பவனி'ன் வியாபாரம் சரியத் தொடங்கியது.

"சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க! நீங்க 'லட்சுமி விலாஸை'ப் பத்திக் கவலைப்படறதை விட்டுட்டு நம்ப ஓட்டல் மேல கவனம் செலுத்தணும். நம்ப வியாபாரம் குறைஞ்சுக்கிட்டே வருது!" என்றான் முத்து.

"நம்ப ஓட்டலை இழுத்து மூட வேண்டி வந்தாலும் பரவாயில்லை. 'லட்சுமி விலாஸை' ஒழிச்சுக்கட்டாம விட மாட்டேன்" என்றார் வள்ளியப்பன் ஆங்காரத்துடன்.

சில மாதங்களில் 'மீனாட்சி பவன்' மூடப்பட வேண்டிய நிலை வந்தது. முத்து வள்ளியப்பனிடம் சொல்லி விட்டு வேறொரு ஊரில் வேலை தேடிக்கொண்டு போய் விட்டான்.

சில மாதங்கள் கழித்து ஊரிலிருந்து வந்த ஒரு நபரை முத்து தற்செயலாகச் சந்தித்தான். "வள்ளியப்பன் எப்படி இருக்காரு?" என்றான்.

"உங்களுக்கு விஷயம் தெரியாதா? ஒரு நாள் 'லட்சுமி விலாஸ்' ஓட்டல்ல சாப்பிட்டவங்க நிறைய பேருக்கு ஃபுட் பாய்சன் ஆகி ஆஸ்பத்திரியில சேர்க்க வேண்டிய நிலைமை வந்துட்டுது. இது போலீஸ் கேஸ் ஆகி, அவங்க வந்து விசாரிச்சதில, வள்ளியப்பன்தான் 'லட்சுமி விலாஸ்' ஓட்டல்ல வேலை செஞ்ச ஒரு ஆளுக்குப் பணம் கொடுத்து சாப்பாட்டில் எதையோ கலக்கச் சொன்னாருன்னு கண்டு பிடிச்சு அவரைக் கைது பண்ணிட்டாங்க. இப்ப ஜாமீன்ல இருக்காரு. ஆனா வக்கீல் வச்சு கேஸ் நடத்தப் பணம் இல்லாம தவிக்கிறாருன்னு பேசிக்கிறாங்க" என்றார் அவர்.

'எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டாரே!' என்று நினைத்து வருந்தினான் முத்து.

இல்லறவியல் 
             அதிகாரம் 17          
அழுக்காறாமை      
குறள் 168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் 
தீயுழி உய்த்து விடும்.

பொருள்:  
 பொறாமை என்ற பாவி ஒருவனது செல்வத்தை அழித்து அவனுக்குத் தீமை விளைத்து விடும். ('தீயுழி உய்த்து விடும்' என்ற  சொற்றொடருக்கு 'நரகத்தில் தள்ளி விடும்' என்று பொருள் கூறியிருக்கிறார் பரிமேலழகர்.)
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














Wednesday, May 30, 2018

167. சரோஜாவின் கவலை

"என்னங்க, வனஜா பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்காம்!" என்றாள் சரோஜா உற்சாகத்துடன்.

அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருந்த சுபாஷ், "அப்படியா?" என்றான் சுவாரஸ்யம் இல்லாமல்.

"பையன் அமெரிக்காவில வேலை பாக்கறானாம்!" என்றாள் சரோஜா பெருமிதத்துடன்.

சுபாஷின் முகம் கடுகடுவென்று ஆகியது.

"நான் லட்சக்கணக்கில சம்பாதிக்கிற ஒரு பிசினஸ்மேன். நம்ப பொண்ணையே இந்தியாவில வேலை பாக்கற பையனுக்குத்தான் கட்டிக் கொடுத்திருக்கோம். ஒரு சின்ன கம்பெனியில வேலை செஞ்சுக்கிட்டு மாசச் சம்பளம் வாங்கிக்கிட்டிருக்கற உன் அக்கா புருஷனுக்கு எப்படி அமெரிக்க மாப்பிள்ளை கிடைச்சான்?" என்றான் சுபாஷ்.

"இது என்னங்க பேச்சு? நாம அமெரிக்க மாப்பிள்ளை வேணும்னு பாக்கலியே? நல்ல இடம்னுதானே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கோம்? அவங்களும் அமெரிக்க மாப்பிள்ளைதான் வேணும்னு பாக்கல. அதுவா அமைஞ்சிருக்கு."

"அல்பங்களுக்குத்தான் வாழ்வு வருது!" என்றான் சுபாஷ்.

"என் அக்கா குடும்பத்தைப் பத்திப் பேசறீங்க. அதை ஞாபகம் வச்சுக்கிட்டுப் பேசுங்க!" என்றாள் சரோஜா.

"நான் உண்மையைத்தானே சொல்றேன்? ஒரு சாதாரண மனுஷனான என் சகலைக்கு இப்படி ஒரு சம்பந்தமான்னு நினைச்சுப் பாக்கறதில என்ன தப்பு?"

"நாங்க அக்கா தங்கைங்க மூணு பேர்ல நான்தான் வசதியானவ. மத்த ரெண்டு பேரும் சாதாரணமானவங்கதான். என்னோட ரெண்டு அண்ணங்க கூட சுமாரான வசதியோடதான் இருக்காங்க. நியாயமா அவங்கதான் நம்மளை பாத்துப் பொறாமைப் படணும். ஆனா நீங்க என் அக்கா குடும்பத்தைப் பாத்துப் பொறாமைப் படறீங்க! நாளைக்கு என் அண்ணன்களுக்கோ, தங்கைக்கோ ஏதாவது நல்லது நடந்தா அதைப் பாத்தும் பொறாமைப் படுவீங்க. வேடிக்கையா இருக்கு!" என்று வெறுப்புடன் சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள் சரோஜா.

ன்னொரு சமயம் சுபாஷின் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர் தன் மகனை மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்கு அனுப்பப் போவதைப் பற்றி இப்படித்தான் சரோஜாவிடம் பொரிந்து தள்ளினான் சுபாஷ்.

"எங்கிட்ட சம்பளம் வாங்கற ஒரு குமாஸ்தா அவன். அவன் பையனை லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறானாம்! எப்படி இருக்கு பாரு?" என்றான் சுபாஷ்.

"இதில என்னங்க இருக்கு? இப்பதான் வெளிநாட்டுல போய்ப் படிக்கறதுக்கு பாங்க்கில கடன் கொடுக்கறாங்க. வசதி இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த எத்தனையோ பிள்ளைங்க வெளிநாட்டுக்குப் போய்ப் படிச்சுட்டு அங்கேயே வேலை தேடிக்கிட்டு செட்டில் ஆயிடறாங்களே!"

"நாம செய்ய முடியாததை நம்மளை விடக் கீழ இருக்கறவங்க செய்யறதைப் பார்த்தா ஆத்திரம் வருமா, வராதா?"

"எதுக்கு வரணும்? அவங்களுக்குக் கிடைக்கிற வாய்ப்பை அவங்க அனுபவிக்கறாங்க. அதோட, நமக்கு ஒரே பொண்ணு, அவளை நாம எந்த நாட்டுக்கு வேணும்னாலும் அனுப்பி, எந்தப் படிப்பு வேணும்னாலும் படிக்க வச்சிருக்கலாம். ஆனா அவளுக்குப் படிப்பிலே ஆர்வம் இல்ல. பி ஏ வோட நிறுத்திக்கிட்டா. நாமும் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டோம். மத்தவங்க என்ன வேணும்னா பண்ணிட்டுப் போறாங்க. நீங்க ஏன் அதுக்காக ஆத்திரப்படறீங்க?"

பிறருக்கு நன்மை நடந்தால் அதைப் பொறுக்காத சுபாஷின் குணத்தை மாற்ற முடியாது என்று அறிந்த சரோஜா, அவன் அவ்வப்போது இப்படிப் பொருமுவதை வேறு வழியின்றி சகித்துக் கொண்டாள்.

ருநாள் சுபாஷ், "சரோஜா! நாம இந்த வீட்டை விட்டு வேற வீட்டுக்குப் போக வேண்டியிருக்கும். உனக்கு ஒண்ணும் வருத்தம் இருக்காதே அதில?" என்றான்.

"ஏங்க? இது நம்ப சொந்த வீடு. வசதியா இருக்கு. ஏன் இதை விட்டுட்டு இன்னொரு வீட்டுக்குப் போகணும்?" என்றாள் சரோஜா.

"இல்லை சரோஜா. கம்பெனியில கொஞ்சம் பிரச்னை. இந்த வீட்டை அடமானம் வச்சுதான் பேங்க்ல கடன் வாங்கி பிசினஸ் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"அது சரி. பிசினஸ் நல்லாத்தானே நடந்துக்கிட்டிருக்கு?"

"இல்ல சரோஜா. ரெண்டு மூணு வருஷமாவே பிசினஸ் சரியாப் போகல. நீ கவலைப்படுவேன்னு உங்கிட்ட சொல்லலே! பிசினஸை சரி பண்றதுக்காக, பாங்க் கடனைத் தவிர, வெளியிலேயும் நிறையக் கடன் வாங்கிட்டேன். ஆனா நஷ்டம் அதிகமாத்தான் ஆகிக்கிட்டிருக்கு. கடன் வட்டியெல்லாம் சேர்ந்து பெரிய தொகையாயிடுச்சு. இந்த வீட்டை வித்துத்தான் கடனையெல்லாம் அடைக்கணும்!"

"அப்ப பிசினஸ்?" என்றாள் சரோஜா அதிர்ச்சியுடன்.

"பிசினஸை இனிமே நடத்த முடியாது. வீட்டை வித்து வர பணத்தில் கடனையெல்லாம் அடைச்சப்பறம், மீதி இருக்கிற பணத்தை பாங்க்கில போட்டு அதுல வர வட்டியை வச்சுத்தான் நம்ப மீதிக் காலத்தை ஓட்டணும்..."

சுபாஷுக்குத் தொண்டையை அடைத்தது.

மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வாழ்ந்தபோதே மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்த சுபாஷ் இனிமேல் எல்லோரையுமே பார்த்துப் பொறாமைப்பட வேண்டிய நிலை வந்து விட்டதே என்று நினைத்தாள் சரோஜா.   

இல்லறவியல் 
             அதிகாரம் 17          
அழுக்காறாமை      
குறள் 167
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் 
தவ்வையைக் காட்டி விடும்.

பொருள்:  
பொறாமை உள்ளவனைத் திருமகள் பொறுக்க மாட்டாள். அவனைத் தன் அக்கா மூதேவியிடம் ஒப்படைத்து விட்டு, அவனிடமிருந்து விலகி விடுவாள்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்












Saturday, May 26, 2018

166. பிரியாவின் குறை!

"ஏம்மா, வேற சட்டையே இல்லியா?" என்றாள் பிரியா.

"இருக்கறத்துக்குள்ள நல்லதா ஒண்ணை எடுத்துக் போட்டுக்கடி!" என்றாள் தங்கம்.

"புதுசா ஒண்ணு கூட இல்லியேம்மா!" என்றாள் பிரியா, அழும் தொனியில்.

"ஆஃபீஸ்ல அட்வான்ஸ் வாங்கி நாளைக்கே உனக்குப் புது டிரஸ் வாங்கித் தரேன்!" என்றாள் தங்கம்.

"ஸ்கூல்ல இன்னிக்கு ஃபங்ஷன். நாளைக்கு வாங்கிக் கொடுத்து என்ன பிரயோசனம்?" என்றாள் பிரியா சிணுங்கிக் கொண்டே.

தங்கத்துக்குத் தொண்டையை அடைத்தது. இப்படியா ரகுராமன் தன்னையும் பிரியாவையும் தவிக்க விட்டு விட்டுப் போக வேண்டும்?

"ஏம்மா! நாம ஏழைங்களா, பணக்காரங்களா?" என்றாள் பிரியா.

"ரெண்டும் இல்லை. ரெண்டுங்கெட்டான்!" என்றாள் தங்கம்.  தங்களை ஏழை என்று ஒத்துக் கொள்ள முடியாதவர்கள் நடுத்தர வர்க்கம் என்று சொல்லிக்கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களோ என்று அவளுக்குத் தோன்றியது.

"அப்பா இருந்திருந்தா, நாம பணக்காரங்களா இருந்திருப்போமா?"

தங்கம் பதில் சொல்லவில்லை. அவள் மனம் பழைய நினைவுகளைப் புரட்டிப் போடத் தொடங்கியது.

குராமன் அவன் பெற்றோருக்கு மூத்த பிள்ளை. அவனுடைய ஒரே தம்பி கேசவன். கேசவன் சிறுவனாக இருந்தபோது, அவர்களுடைய தூரத்து உறவினர் ஒருவர் அவனை சுவீகாரம் கேட்டார். அவருக்கு மனைவி இல்லை. அருகிலிருந்த ஒரு ஊரில் அவர் தனியே வசித்து வந்தார். ஓரளவுக்கு வசதியானவர். 

கேசவன் அவன் பெற்றோருடனேயே இருக்கலாம். ஆனால் அவன் படிப்பு, திருமணம், வேலை எல்லாம் அவன் சுவீகாரத் தந்தையின் பொறுப்பு. அவன் சுவீகாரத் தந்தை அவ்வப்போது அவனை வந்து பார்த்து விட்டுப் போவார். அவர் இறந்ததும் கேசவன் கொள்ளி போட வேண்டும். அதன் பிறகு அவருடைய சொத்துக்கள் கேசவனுக்கு வந்து சேரும்.

இவைதான் அவர் விவரித்த ஏற்பாடுகள்.

மகனைப் பிரிய வேண்டியதில்லை என்பதாலும், பிற்காலத்தில் அவனுக்கு வசதியான வாழ்க்கை அமையும் என்பதாலும் கேசவனின் தந்தை இதற்கு ஒப்புக்கொண்டார்.

ரகுராமனின் படிப்பு பள்ளி இறுதித் தேர்வுடன் முடிந்து விட்டது. அவர்கள் ஊரில் கல்லூரி எதுவும் இல்லை. வெளியூரில் ஒரு கல்லூரியில் அவனைச் சேர்த்து, விடுதியில் தங்க வைத்துப் படிக்க வைக்கும் அளவுக்கு ரகுராமனின் பெற்றோருக்கு வசதி இல்லை.

ஆனால் அடுத்த ஆண்டு பள்ளி இறுதித் தேர்வை முடித்த கேசவனை அவன் சுவீகாரத் தந்தை ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.

தான் மேலே படிக்க இயலாதபோது தம்பிக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தது ரகுராமனுக்கு உறுத்தலாக இருந்தது.

"ஏம்ப்பா! கேசவனோட அப்பா கிட்டதான் நிறையப் பணம் இருக்கே, அவரு என்னையும் படிக்க வச்சிருக்கலாம் இல்ல?" என்றான் ரகுராமன் தந்தையிடம்.

"அதையெல்லாம் நாம எப்படி எதிர்பார்க்க முடியும்?" என்றார் அவன் அப்பா.

ரகுராமனுக்கு மனம் சமாதானம் ஆகவில்லை. 

அடுத்த சில ஆண்டுகளில் கேசவன் படிப்பை முடித்து சென்னையில் ஒரு நல்ல வேலைக்குப் போய் விட்டான். ரகுராமனும் சென்னையில் அவன் படிப்புக்கு ஏற்ற ஒரு வேலையில் சேர்ந்து விட்டான். 

ரகுராமனுக்கும் தங்கத்துக்கும் திருமணம் முடித்த சில மாதங்களில் அவன் பெற்றோர் இருவரும் ஒருவர் பின் ஒருவராக மறைந்து விட்டனர். அதற்குப் பிறகு கேசவன் அவன் சுவீகாரத் தந்தையுடன் அவர் அவனுக்காக சென்னையில் வாங்கிய வீட்டுக்குப் போய் விட்டான். அவன் சுவீகாரத் தந்தை அவனுக்கு ஒரு வசதியான இடத்தில் திருமணமும் செய்து வைத்து விட்டார்.

ரகுராமனுக்கும், கேசவனுக்கும் தொடர்பு கிட்டத்தட்ட அடியோடு விட்டுப் போய் விட்டது. கேசவனின் சுவீகாரத் தந்தை இறந்ததற்குக் கூட ரகுராமன் போகவில்லை.

கேசவனோடு தொடர்பைத் துண்டித்து விட்டாலும், கேசவனையும் அவன் வளர்ப்புத் தந்தையையும் நாள் தவறாமல் தங்கத்திடம் வசைபாடிக் கொண்டிருப்பான் ரகுராமன்.

"இப்படி ஒரு அநியாயம் உலகத்தில நடக்குமா? அண்ணன்  தம்பின்னு நாங்க ரெண்டு பேரு இருந்தோம். என் தம்பியை சுவீகாரம் எடுத்து அவனுக்கு மட்டும் எல்லா உதவியையும் செஞ்சாரே அந்தப் பெரிய மனுஷன், இது அடுக்குமா?" என்பான் ஒருநாள்.

"யாரோ ஒருத்தர் வந்து உதவி செஞ்சா, அதை இவன் எப்படி ஏத்துக்கலாம்? எனக்கு என் அப்பா அம்மாதான் முக்கியம்னு இருக்க வேண்டியதுதானே?" என்பான் இன்னொரு நாள்.

"என் தம்பி என்னை விட நல்லா படிச்சு, சொந்த முயற்சியில முன்னுக்கு வந்திருந்தா நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். யாரோ போட்ட பிச்சையில பெருமையா வாழ்ந்துக்கிட்டிருக்கான்! இதெல்லாம் ஒரு பொழப்பா?" என்று சில நாள் புலம்புவான்.

"இப்படியெல்லாம் மத்தவங்களைப் பத்திப் பேசாதீங்க. நாம முன்னேற என்ன வழின்னு யோசிங்க" என்று தங்கம் பலமுறை சொல்லியும் அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

திடீரென்று ஒருநாள் மாரடைப்பு ஏற்பட்டு ரகுராமனின் உயிர் பிரிந்து விட்டது. கேசவன் வந்து பார்த்து விட்டுப் போனான். அதோடு சரி.

அதற்குப் பிறகு தங்கம் ஒரு வேலையைத் தேடிக்கொண்டு தன்னையும் தன் மகள் பிரியாவையும் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறாள்.

"சாப்பிட வாடி!" என்றாள் தங்கம்.

"வீட்டுச் சாப்பாடு போரடிக்குதும்மா. ஓட்டலுக்குப் போகலாம்மா!" என்றாள் பிரியா.

"உனக்குத்தான் தெரியுமே! மாசத்துல ஒரு நாள் - சம்பளம் வாங்கினப்பறம் ஒரு தடவைதான் - என்னால உன்னை ஓட்டலுக்கு அழைச்சுக்கிட்டுப் போக முடியும்"

"போம்மா! என் ஃபிரண்ட்ஸ்லாம் வாரத்துக்கு ஒரு நாள் ஓட்டலுக்குப் போய் சாப்பிடறாங்க. ஸ்கூலுக்குப் போட்டுக்கிட்டுப் போக நல்ல டிரஸ் இல்ல, ஜாலியா ஓட்டலுக்குப் போய் சாப்பிட முடியல. ஏம்மா இப்படி?" என்றாள் பிரியா.

"தெரியலியே!" என்றாள் தங்கம்.  

இல்லறவியல் 
             அதிகாரம் 17          
அழுக்காறாமை      
குறள் 166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் 
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பொருள்:  
பிறருக்குக் கிடைக்கும் உதவி குறித்துப் பொறாமை கொள்பவனின் குடும்பம் உணவு, உடை கூடக் கிடைக்காத நிலைக்கு ஆளாகும்.
                                                                         குறள் 167
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














Friday, May 25, 2018

165. "நான் வரவில்லை!"

"என்னங்க! நாளைக்கு சுந்தர் லண்டன் போறான். நாம ஏர்போர்ட்டுக்குப் போய் வழி அனுப்பிச்சுட்டு வரலாங்க!" என்றாள் கவிதா.

"ஏன், லண்டன் வரைக்கும் போய் அவன் தங்கப் போற ஓட்டல்ல கொண்டு விட்டுட்டு வரலாமே!" என்றான் மகேஸ்வரன்.

"என் தம்பி வெளி நாட்டுக்குப் போறது பெரிய விஷயம் இல்லியா? எங்க வீட்டில எல்லாரும் அவனை வழியனுப்ப ஏர்போர்ட்டுக்குப் போறாங்க."  

"ரெண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் உன் தம்பி சரியான வேலை இல்லாம சிங்கி அடிச்சுக்கிட்டிருந்தான். இந்தக் கம்பெனியில வேலை கிடைச்சப்பறம் அவனோட நிலைமை அடியோட மாறிடுச்சு. அல்பனுக்கு வாழ்வு வந்த மாதிரி ஆட்டம் போடறான். நானும் போய் அவனுக்குப் பல்லக்குத் தூக்கணுமா? உனக்கு வேணும்னா நீ போயிட்டு வா!"

"மத்தவங்க நல்லா இருந்தா உங்களுக்குப் பொறுக்காதே!" என்று முணுமுணுத்தாள் கவிதா.

ப்படித்தான் சில மாதங்களுக்கு முன் தன் அண்ணனின் அறுபதாம் கல்யாணத்துக்குப் போகாமல் தவிர்த்து விட்டான் மகேஸ்வரன். 

"என்னத்தைச் சாதிச்சுட்டான்னு அறுபதாம் ஆண்டு கொண்டாடறான்? கவர்ன்மென்ட் வேலையில சம்பளம், கிம்பளம்னு வாங்கிப் பணத்தைச் சேத்துட்டான். அதை எப்படி செலவு பண்றதுன்னு தெரியாம இப்படி ஆடம்பரம் பண்றான்! நான் இதுக்குப் போகப் போறதில்ல. நீயும் புள்ளைங்களும் போயிட்டு வாங்க!" என்று சொல்லி விட்டான்.

"நீங்க ஏன் வரலேன்னு கேட்டா என்னங்க சொல்றது?" என்றாள் கவிதா.

"எழுந்திருக்க முடியாம படுத்துக் கிடக்கேன்னு சொல்லு!"

"காலையிலேருந்து கடுமையான குளிர் ஜுரம். போத்திக்கிட்டுப் படுத்துக்கிட்டிருக்காரு" என்று சொல்லிச் சமாளித்தாள் கவிதா. 

மகேஸ்வரனுக்கு உண்மையிலேயே உடல்நிலை சரியில்லை என்று நினைத்து அடுத்த நாள் அவன் அண்ணன் அவனைப் பார்க்க அவன் வீட்டுக்கு வந்தார். மகேஸ்வரன் சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.

"இப்பதான் ஜுரம் விட்டுக் கொஞ்சம் எழுந்து உக்காந்திருக்காரு!" என்று சொல்லிச் சமாளித்தாள் கவிதா. 

கேஸ்வரனைப் பொருத்த வரையில் தன் உறவினர்கள், தன் மனைவியின் உறவினர்கள் என்று அவன் வித்தியாசம் பாராட்டுவதில்லை. வாழ்க்கையில் முன்னேறியவர்கள், வெற்றி அடைந்தவர்கள், எதையாவது சாதித்தவர்கள், கொண்டாடுபவர்கள் அனைவரிடமுமே அவனுக்கு வயிற்றெரிச்சல்தான். நண்பர்கள், அலுவலக ஊழியர்களிடமும் அதே மனப்பான்மைதான்.

மகேஸ்வரனின் நெருங்கிய நண்பன் முகுந்தனுக்குப் பதவி உயர்வு கிடைத்ததிலிருந்து மகேஸ்வரன் அவனிடமிருந்து விலகியிருக்க ஆரம்பித்து விட்டான். முகுந்தன் பழைய நட்புடன் பழகியபோதும், மகேஸ்வரன் அவனை மதிக்காமல் நடந்து கொள்ள ஆரம்பித்தான்.

"ஆஃபீஸ்ல ஒரு வேலை தெரியாது அவனுக்கு. எதுக்கெடுத்தாலும் எங்கிட்ட உதவி கேட்பான். இவனுக்கு வந்த வாழ்வைப் பாரு!" என்றான் கவிதாவிடம்.

ருநாள் மகேஸ்வரன் சோர்வுடன் காணப்பட்டான்.

"என்னங்க!" என்று விசாரித்தாள் கவிதா. 

"என் வாழ்க்கையை நினைச்சுப் பாத்தா ரொம்ப விரக்தியா இருக்கு கவிதா! இந்தப் பத்து வருஷத்தில என்னைச் சுத்தி இருக்கறவங்க நிறையப் பேரு என்னைத் தாண்டி எங்கேயோ போயிட்டாங்க. ஏன் எனக்கு மட்டும் எதுவும் சரியா நடக்க மாட்டேங்குதுன்னு புரியல. ஆஃபீஸ்ல புரொமோஷன் கெடக்கல. வேற வேலைக்குப் போகலாம்னு முயற்சி பண்ணினா அதுவும் நடக்கல. என் அண்ணன், உன் தம்பி, என் ஃபிரண்ட் முகுந்தன் மாதிரி என்னை விட அறிவு, திறமை எல்லாத்திலயும் குறைஞ்சவங்க எங்கேயோ போயிட்டதை நினச்சா எனக்கு வயத்தெரிச்சலா இருக்கு. எனக்கு எதிரா யாரோ சதி பண்றாங்களோன்னு தோணுது" என்றான் மகேஸ்வரன் விரக்தியுடன்.

"ஏன் அப்படி நினைக்கறீங்க? நமக்கும் எவ்வளவோ நல்லது நடந்துக்கிட்டுதான் இருக்கு. நீங்க எதிர்பார்க்கிற சில விஷயங்கள் கொஞ்சம் லேட்டா நடக்கலாம். நானும் புள்ளைங்களும் சந்தோஷமாத்தானே இருக்கோம்!" என்று சற்று ஆறுதலாகப் பேசிய கவிதா, சற்றுத் தயங்கி விட்டு, "ஒரு விஷயம் சொல்லுவேன். தப்பா நினைக்க மாட்டீங்களே?" என்றாள்.

"சொல்லு!"

"மத்தவங்க முன்னேறினதைப் பாத்து வயத்தெரிச்சலா இருக்குன்னு நீங்களே சொன்னீங்க! நீங்க ஏன் அப்படி நினைக்கணும்? மத்தவங்களுக்கு நல்லது நடந்தா அதுக்காக நாம சந்தோஷப்பட வேண்டாம். ஆனா ஏன் வருத்தப்படணும்? நீங்க நினைக்கற மாதிரி உங்களுக்கு எதிரா யாரும் சதி பண்ணல. நமக்கு எதிரிங்க யாருங்க இருக்காங்க? நம்ம எண்ணங்கள்தான் நம்ம வாழ்க்கையை உருவாக்குதுன்னு சொல்லுவாங்க. நீங்க மத்தவங்களைப் பாத்து வயத்தெரிச்சல் படறதுதான் உங்க முன்னேற்றத்துக்குத் தடங்கலா இருக்கோ என்னவோ! அதுதான் காரணம்னு நான் சொல்லல. நீங்களே யோசிச்சுப் பாருங்க" என்றாள் கவிதா. 

இல்லறவியல் 
             அதிகாரம் 17          
அழுக்காறாமை      
குறள் 165
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் 
வழுக்காயும் கேடீன் பது.

பொருள்:  
பொறாமை உள்ளவர்களுக்கு வேறு பகை வேண்டாம். பகைவர்கள் ஏதும் கெடுதல் செய்யாவிட்டாலும், அவர்களது பொறாமையே அவர்களை அழித்து விடும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



























Thursday, May 24, 2018

164. சோதனை மேல் சோதனை!

"துவரம் பருப்புக்குத் தட்டுப்பாடு வரப் போகுதாம். விலை வேற ஏகமா ஏறியிருக்கு" என்றார் கணக்குப்பிள்ளை.

"ஏனாம்?" என்றான் சரவணன்.

"பருப்பு விளைச்சல் கம்மியாம். தட்டுப்பாடு வந்தப்புறம்தான் அரசாங்கம் முழிச்சுக்கிட்டு இறக்குமதி பண்ண முயற்சி எடுத்திருக்காங்க. இறக்குமதி பண்ணி மார்க்கெட்ல சரக்கு வரத்து அதிகமாகறதுக்கு ரெண்டு மூணு மாசம் பிடிக்குமாம்."

"நம்ம கிட்ட ஸ்டாக் இருக்கு இல்ல?"

"இருக்கு. நம்ப சப்ளையருக்கு ஃபோன் பண்ணிக் கேட்டேன். அவங்ககிட்டயும் ஸ்டாக் இருக்காம். நாம ஆர்டர் குடுத்தா ஒரு வாரத்தில சரக்கு வந்துடும்னு சொன்னாரு."

"நல்லது. விலையைக் கொஞ்சம் ஏத்தி விடுங்க. இந்த மாதிரி சமயத்தில சம்பாதிச்சாத்தானே உண்டு!"

கணக்குப்பிள்ளை கொஞ்சம் தயக்கத்துடன், "இல்லீங்க. ஏற்கெனவே முருகன் ஸ்டோர்ல நம்மளை விட கிலோ ரெண்டு ரூபா குறைச்சு விக்கிறாங்க. இப்ப நாம விலையை ஏத்தினா, நம்பகிட்ட யாரும் வாங்க மாட்டாங்க" என்றார்.

"அவன் மட்டும் எப்படிய்யா எல்லா சாமான்களையும் நம்மளை விடக் குறைச்ச விலைக்கு விக்கறான்? இத்தனைக்கும், நான் எந்த சப்ளையர் குறைச்ச விலைக்குக் கொடுக்கறாங்கன்னு பாத்துப் பாத்துத்தானே வாங்கறேன்!" என்றான் சரவணன் எரிச்சலுடன்.

கணக்குப்பிள்ளை மௌனமாக இருந்தார்.

"ஆமாம், அவங்ககிட்ட ஸ்டாக் நிலவரம் எப்படி இருக்காம்?"

"நிறைய ஸ்டாக் இருக்குன்னு கேள்விப்பட்டேன்."

"ஓஹோ! முன்னாடியே நிலவரம் தெரிஞ்சு நிறைய வாங்கி வச்சுட்டான் போலருக்கு. இதை வச்சே அவனை மாட்டி விடறேன். பத்தாக்குறை இருக்கும்போது, பருப்பைப் பதுக்கி வச்சிருக்கான்னு ஒரு மொட்டைக் கடிதாசு எழுதிப் போடறேன். சிவில் சப்ளைஸ் அதிகாரிங்க வந்து பாத்துட்டு அவன் கடைக்கு சீல் வச்சுடுவாங்க. அதுக்கப்பறம் அவன் கேஸ்லேருந்து வெளியில வந்தாலும் பேரு கெட்டுப் போனதால அவன் வியாபாரம் படுத்துடும்!" என்றான் சரவணன்.

உள்ளே போக யத்தனித்தவன், கணக்குப்பிள்ளையிடம் திரும்பி, "யோவ் கணக்குப்பிள்ளை! நான்தான் மொட்டைக் கடிதாசு அனுப்பினேன்னு யார்கிட்டயும் சொல்லிட மாட்டீங்களே!" என்றான்.

"என்னங்க இது! நான் அப்படிப் பண்ணுவேனா?" என்றார் கணக்குப்பிள்ளை.

ரவணன் போட்ட மொட்டைக் கடிதத்துக்கு ஒரு வாரத்திலேயே பலன் தெரிந்தது. அதிகாரிகள் வந்து முருகன் ஸ்டோர்ஸ் கடை, கிடங்கு, கடை உரிமையாளர்களின் வீடுகள், மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்கள் என்று எல்லா இடங்களிலும் இரண்டு நாட்கள் தீவிரமாகச் சோதனை போட்டார்கள்.

ஆனால் கணக்குகள் எல்லாம் முறையாக இருப்பதாகச் சொல்லித் திரும்பி விட்டனர்.

"என்னய்யா, இப்படி புஸ்ஸுன்னு போயிடுச்சே!" என்றான் சரவணன்.

ரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் சில அதிகாரிகள் முருகன் ஸ்டோர்ஸுக்கு வந்து சோதனை செய்தனர்.

"என்னங்க, இப்பதான் சோதனை போட்டுட்டு ஒண்ணும் இல்லேன்னு சொல்லிட்டுப் போனாங்க. மறுபடியும் வந்திருக்காங்களே!" என்றார் கணக்குப்பிள்ளை, சரவணனிடம்.

"போன தடவையே ஏதோ தடயம் கிடைச்சிருக்கும். அதை வெளியில காட்டிக்காம திரும்பிப் போற மாதிரி போக்குக் காட்டிட்டு மறுபடியும் வந்திருக்காங்க. வசமா சிக்கிக்கிட்டான்னு நினைக்கறேன். நான் மொட்டைக் கடிதாசு போட்டது வீணாப் போகல!" என்றான் சரவணன் குதூகலத்துடன்.

"ஆனா, இப்ப வேற ஆளுங்க இல்ல வந்திருக்கிற மாதிரி இருக்கு!" என்றார் கணக்குப் பிள்ளை.

"பாக்கலாம். நல்ல சேதி வரும்!" என்றான் சரவணன் நம்பிக்கையுடன்.

டுத்த நாள் அந்த அதிகாரிகள் சரவணனின் கடைக்கு வந்தார்கள். "வாங்க சார்! என்ன விஷயம்?" என்றான் சரவணன் குழப்பத்துடன்.

"கலப்படச் சரக்கு ஏதாவது இருக்கான்னு பாக்க வந்திருக்கோம்" என்றனர் அதிகாரிகள்.

"எங்ககிட்ட அதெல்லாம் கிடையாது சார். ஏன் சார் திடீர்னு?"

"முருகன் ஸ்டோர்ஸ்ல பருப்பு நிறைய பதுக்கி வச்சிருக்காங்கன்னு எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால அங்க எங்க அதிகாரிகள் சோதனைக்கு வந்தாங்க. ஆனா அவங்க பதுக்கல் எதுவும் செய்யலை. அதைத் தொடர்ந்து கலப்படச் சரக்கு ஏதாவது இருக்கான்னு பாக்கறதுக்காக இன்னொரு டீம் வந்திருக்கோம். முருகன் ஸ்டோர்ஸ்ல சோதனை போட்டுட்டு உங்க கடைக்கு வந்திருக்கோம்!"

"நல்லாப் பாத்துக்கங்க சார்! எங்ககிட்ட கலப்படச் சரக்கு எதுவும் கிடையாது!" என்றான் சரவணன்.

சற்று நேர சோதனைக்குப் பிறகு "நீங்க விக்கற பருப்பு கலப்படச் சரக்கா இருக்கே!" என்றார் ஒரு அதிகாரி.

"சார்! நாங்க கலப்படம் எதுவும் பண்றதில்ல. வாங்கற சரக்கை அப்படியே விக்கறோம்" என்றான் சரவணன் பதட்டத்துடன்.

"கலப்படச் சரக்கை வாங்கி விக்கறதும் தப்புதான்!"

"சார்! குறைஞ்ச விலைக்குக் கொடுக்கறார்ங்கறதுக்காக ஒரு சப்ளையர் கிட்ட வாங்கறோம். அவரு விக்கறது கலப்பட சரக்குன்னு எனக்குத் தெரியாது!"

"தெரியாம பண்ணினாலும் கலப்படச் சரக்கை விக்கறது குத்தம்தான். உங்க கடையை சீல் பண்ணப் போறோம்" என்றார் அதிகாரி.

"சார்! அப்படில்லாம் பண்ணிடாதீங்க சார்! ஏதாவது அபராதம் கட்டணும்னா கட்டிடறேன். கடைக்கு சீல் வச்சீங்கன்னா என் வியாபாரமே அழிஞ்சுடும்!" என்று கெஞ்சினான் சரவணன்.

"சாரி! அபராதம் போடணும்ங்கற முடிவு எடுக்க எங்களுக்கு அதிகாரம் கிடையாது. நீதிமன்றத்திலே உங்க மேல வழக்குப் போடுவோம். அபராதமா, சிறை தண்டனையான்னு நீதிமன்றம்தான் முடிவு பண்ணணும். அபராதம் கட்டினப்பறம் நீங்க வியாபாரத்தைத் தொடரலாம்னு நீதிமன்றம் சொன்னாதான் நீங்க கடையை மறுபடியும் திறக்க முடியும்!" என்றார் அதிகாரி.

இல்லறவியல் 
             அதிகாரம் 17          
அழுக்காறாமை      
குறள் 164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் 
ஏதம் படுபாக்கு அறிந்து.

பொருள்:  
 பொறாமையினால் தகாத செயல்களைச் செய்தால் அதனால் துன்பம் ஏற்படும் என்பதை உணர்ந்தவர்கள், செய்யக் கூடாத செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


























Monday, May 21, 2018

163. கிருகப் பிரவேசம்

ராமுவைப் பார்க்க அவன் நண்பன் சுரேஷ் வந்தபோது வழக்கம் போல் அவர்கள் தங்கள் பழைய நண்பர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.  

"நம்ப சாமிநாதன் புதுசா வீடு வாங்கியிருக்கானே, தெரியுமா?" என்றான் சுரேஷ்.

"கேள்விப்பட்டேன். ஏற்கெனவே ஊர்ல ஒரு வீடு, இங்க ஒரு வீடுன்னு ரெண்டு வீடு இருக்கு. இன்னொரு வீடு எதுக்கு? பணம் கொழுத்துப் போய் என்ன செய்யறதுன்னு தெரியாம அலையறான்!" என்றான் ராமு.

"கிருகப் பிரவேசத்துக்கு உன்னைக் கூப்பிட்டிருக்கானா?"

"அவனும் அவன் பொண்டாட்டியும் வந்து கூப்பிட்டுட்டுப் போனாங்க. ஆனா நான் போகப் போறதில்ல."

"ஏன்?"

"இவனோட பணத் திமிரை ஊர்ல எல்லாருக்கும் காட்டிக்கறதுக்குத்தானே இந்த கிருகப் பிரவேசம் எல்லாம்? நான் எதுக்குப் போகணும்?"

அப்போது இருவருக்கும் காப்பி எடுத்துக்கொண்டு அங்கே வந்த ராமுவின் மனைவி கமலி, "ஏங்க, புருஷனும் பொண்டாட்டியும் அவ்வளவு தூரம் வந்து கூப்பிட்டிருக்காங்க. போகாம இருந்தா நல்லா இருக்குமா?" என்றாள்.

"உனக்குத் தெரியாது. அவன் எப்படி இருந்தான்னு எனக்குத்தானே தெரியும்? நாங்க ரெண்டு பேரும் ஹோட்டலுக்குப் போய் காப்பி சாப்பிட்டா கூட காசு நான்தான் கொடுக்கணும்! அவன் கையில அஞ்சு பத்து கூட இருக்காது. அப்படி இருந்தவன் இப்ப ஏதோ திடீர்னு வாழ்வு வந்து ஆடறான். அந்த ஆட்டத்தை நான் போய்ப் பாக்கணுமாக்கும்!' என்றான் ராமு.

"ஏங்க, அவரு நம்மளைக் கூப்பிட வந்தபோது நீங்க அந்தக் காலத்தில அவருக்கு நிறைய உதவி செஞ்சிருக்கீங்கன்னு எங்கிட்டயும், அவர் மனைவிகிட்டயும் உங்களைப் பத்திப் பெருமையாச் சொன்னாரே! உங்க மேல அவரு நிறைய மதிப்பு வச்சிருக்கற மாதிரிதான் தெரியுது. அவங்க நம்மளை நேர்ல வந்து கூப்பிட்டிருக்கும்போது, நாம போயிட்டு வரதுதான் மரியாதை" என்றாள் கமலி.

"நீ போகப் போறியா?" என்றான் ராமு சுரேஷிடம்.

"என்னைக் கூப்பிடவே இல்லியே! உன் அளவுக்கு நான் அவனுக்கு அவ்வளவு நெருக்கம் இல்லியே! ஒருவேளை இன்விடேஷனை தபால்ல அனுப்பறானோ என்னவோ! இன்விடேஷன் வந்தா போவேன்" என்றான் சுரேஷ். 

அதன் பிறகு சற்று நேரம் வேறு சில விஷயங்களைப் பற்றிப் பேசி விட்டு சுரேஷ் கிளம்பினான்.

சுரேஷ் சென்றதும், கமலி ராமுவிடம், "நாம எப்ப வீடு வாங்கப் போறோம்?" என்றாள்.

"வீடு வாங்கற நிலைமையிலயா நான் இருக்கேன்? அதுக்குத்தான் சாமிநாதனோட கிருகப் பிரவேசத்துக்குப் போக வேண்டாம்னு சொன்னேன்" என்றான் ராமு எரிச்சலுடன்.

"இல்லீங்க. கண்டிப்பாப் போகணும். நாம ஒரு வீடு கூட வாங்காதபோது, நம்ப நண்பன் மூணு வீடு வாங்கி இருக்கானேன்னு நினைச்சு நீங்க ஆத்திரப் படறீங்க. இது மாதிரி நினைச்சா, நமக்கு எப்படி நல்லது நடக்கும்? மனசில நல்ல எண்ணங்கள் வராமலே கூடப் போயிடும். கிருகப் பிரவேசத்துக்குப் போவோம். வீட்டை ரசிச்சுப் பாத்து சந்தோஷப் படுவோம். நிறைஞ்ச மனசோட உங்க நண்பரை வாழ்த்திட்டு வருவோம். அப்படிப் பண்ணினா சீக்கிரமே நாமளும் வீடு வாங்கிட முடியும்னு நான் சொல்லல. அவரோட சந்தோஷத்தை நாமளும் சேர்ந்து அனுபவிச்சா, அது நமக்கு நல்லதுதானே? வாழ்க்கையில சந்தோஷம்தானே முக்கியம்?"

"சரி. போவோம்!" என்றான் ராமு. 

தான் சொன்னதற்காகத்தான் ராமு சரி என்று சொல்லியிருக்கிறான் என்று கமலிக்குப் புரிந்தாலும், காலப்போக்கில் அவன் தன் மனப்போக்கை மாற்றிக் கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டது. 

இல்லறவியல் 
             அதிகாரம் 17          
அழுக்காறாமை      
குறள் 163
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் 
பேணாது அழுக்கறுப் பான்.

பொருள்:  
பிறருடைய செல்வத்தைக் கண்டு மகிழாமல் பொறாமை கொள்பவன் தனக்கு அறமும், செல்வமும் வேண்டாம் என்று கருதுகிறான் என்றுதான் கொள்ள வேண்டும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்





























Saturday, May 19, 2018

162. பாஸ்கரின் தோல்விகள்!

திருமணத்துக்குப் பிறகு பாஸ்கரும் சுமதியும் பாஸ்கரின் நண்பர்கள் பலரது வீட்டுக்குச் சென்று வந்தார்கள். எல்லோருமே அவன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தவர்கள்தான்.

ஒரு நாள் "இன்னிக்கு என்னோட பாஸ் ரவி வீட்டுக்குப் போகப் போறோம்!" என்றான் பாஸ்கர்.

"பாஸ் வீட்டுக்கெல்லாம் எதுக்குங்க? நண்பர்கள் வீட்டுக்கெல்லாம் போனபோது ஃப்ரீயா இருந்த மாதிரி பாஸ் வீட்டில இருக்க முடியுமா? ஏதாவது காரணம் சொல்லித் தட்டிக் கழிச்சுட முடியுமான்னு பாருங்களேன்" என்றாள் சுமதி.

"தட்டிக் கழிச்சா பாஸ் கோவிச்சுப்பாரும்மா! வேலையே போனாலும் போயிடும். போயிட்டு வந்துடலாம்!" என்றான் பாஸ்கர். 

வியின் வீட்டுக்குப் போய் விட்டு வந்த பிறகு சுமதி கேட்டாள்: "என்னங்க பாஸ்னு சொன்னீங்க? ரெண்டு பேரும் வாடா போடான்னு பேசிக்கிட்டீங்க? அவரு உங்க ஃபிரண்டா, பாஸா?" 

"ரெண்டும்தான்!" என்றான் பாஸ்கர். "ரவியும் நானும் ஒரே லெவல்ல இருந்தவங்கதான். கம்பெனியில அவன் என்னை விட ரெண்டு வருஷம் ஜூனியர் கூட. ஆனா அவன் புரொமோஷன் கிடைச்சு அடுத்த லெவலுக்குப் போயி எனக்கு பாஸ் ஆயிட்டான். எனக்கு புரொமோஷன் கிடைக்காததால, நான் அதே லெவல்ல இருக்கேன்!"

"உங்களுக்கு இதில வருத்தம் இல்லியா?"

"எனக்குக் கிடைக்கலியேன்னு வருத்தம். ரவிக்கு கிடைச்சதில சந்தோஷம்!" என்றான் பாஸ்கர்.

"இல்ல, உங்களை விட ஜூனியர், வயசில சின்னவர் உங்களுக்கு பாஸ் ஆனதில உங்களுக்கு வருத்தம் இல்லியா?"

"இல்லியே! நீ கூட என்னை விட வயசில சின்னவ, இப்பதான் இந்த வீட்டுக்கு வந்திருக்க. அதுக்குள்ளே வீட்டில எனக்கு பாஸ் ஆகலியா?" என்றான் பாஸ்கரன்.

சுமதி சற்று வியப்புடன் கணவனைப் பார்த்தாள். 'தனக்குக் கிடைக்காத புரொமோஷன் தன்னோட நண்பனுக்குக் கிடைச்சதைப் பத்தி இவரு வருத்தமோ, பொறாமையோ இல்லாம இருக்காரே! எனக்குக் கிடைக்காத ஒண்ணு என்னோட நெருங்கின தோழிக்குக் கிடைச்சிருந்தா நான் பொறாமைப் பட்டிருப்பேனே!' என்று நினைத்துக் கொண்டாள்.

ரு நாள் பாஸ்கர் வீட்டில் இல்லாதபோது அழைப்பு மணி அடித்தது. சுமதி கதவைத் திறந்தாள்.

"பாஸ்கர் இல்லியா?" என்றார் வந்தவர். 

"இல்லியே! வெளியில போயிருக்காரு. நீங்க?" என்றாள் சுமதி.

"இந்த ஏரியாவில ஸ்ரீநகர் கிளப்னு இருக்கு. நான் அதோட செகரெட்டரி" என்றார் அவர்.

"ஓ! எனக்குத் தெரியாது. அவர் அதில மெம்பரா?"

"நீங்க இப்பதான் கல்யாணமாகி வந்ததால உங்களுக்குத் தெரியாது போலருக்கு! பாஸ்கர் இதில ஆக்டிவ் மெம்பராச்சே!"

"ஓ! அப்படியா?"

"சிட்டியில் உள்ள பெரிய கிளப்கள்ள இதுவும் ஒண்ணு. ஐயாயிரம் பேர் உறுப்பினர்களா இருக்காங்க. ஆறு மாசம் முன்னாடி செகரெட்டரி போஸ்டுக்கு எலக்‌ஷன் நடந்தது. அசெம்பிளி எலக்‌ஷன் மாதிரி பெரிய போட்டி, பிரசாரம் எல்லாம் உண்டு. பாஸ்கரும் நானும்தான் போட்டி போட்டோம்!"

"நீங்க ஜெயிச்சுட்டீங்களா?"

"ஆமாம். ஆனா பாஸ்கர் மாதிரி ஒரு மனுஷனைப் பாக்க முடியாது. எலக்‌ஷனுக்கு முன்னால நான் ஜெயிக்கணும்கறதுக்காக பாஸ்கரைப் பத்திக் கடுமையாப் பேசி இருக்கேன். ஆனா எலக்‌ஷனுக்கப்பறம், என் மேல கொஞ்சம் கூட வருத்தம் இல்லாம, எங்கிட்ட நட்பாப் பழகி, கிளப் சம்பந்தமான  வேலைகள்ள எனக்கு உதவி செஞ்சுக்கிட்டிருக்காரு அவரு. இப்ப கூட கிளப் விஷயமா அவர் கிட்ட ஒரு ஆலோசனை கேக்கத்தான் வந்தேன். சரி அப்புறம் வரேன்" என்று கிளம்பினார்.

இப்படிப்பட்ட குணமுடைய கணவன் இருக்கும்போது தனக்கு என்ன குறை இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டாள் சுமதி.

இல்லறவியல் 
             அதிகாரம் 17          
அழுக்காறாமை      
குறள் 162
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் 
அழுக்காற்றின் அன்மை பெறின்.

பொருள்:  
யாரிடமும் பொறாமை இல்லாமல் இருக்கும் குணத்தை ஒருவன் பெற்றால், அதற்கு ஈடான வேறு சிறப்பு எதுவும் இல்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


Friday, May 18, 2018

161. சிறந்த மாணவன்

 பள்ளி ஆண்டின் இறுதியில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் சிறந்த மாணவன் என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குவது அந்தப் பள்ளியின் வழக்கம்.

சிறந்த மாணவன் தேர்வு என்பது படிப்புத் திறமை மட்டும் இன்றி, மாணவனின் ஒழுக்கம், நேரம் தவறாமை, அதிகம் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருதல், வகுப்பிலும், வெளியிலும் அமைதி காத்தல், ஆசிரியர்களையும் மற்ற மாணவர்களையும் மதித்தல், பிற திறமைகள் போன்ற பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் இருக்கும்.

வகுப்பாசிரியர் சிறந்த மாணவன் யார் என்று தேர்வு செய்த பின், தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களைத் தலைமை ஆசிரியர் பிரார்த்தனைக் கூட்டத்தில் அறிவிப்பார்.

7-பி வகுப்பைப் பொறுத்தவரை, ஸ்ரீதர்தான் சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்படுவான் என்பது பிற மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

சிறந்த மாணவன் என்பதற்கான எல்லாத் தகுதிகளும் ஸ்ரீதரிடம்  இருந்தன என்பதைத் தவிர வகுப்பாசிரியர் குருமூர்த்திக்கு ஸ்ரீதர் மீது தனி அன்பு உண்டு என்பதும் எல்லா மாணவர்களும் அறிந்திருந்ததுதான்.

ஸ்ரீதரிடம் நல்ல பண்புகள் இருந்ததால்தான் அவனிடம் வகுப்பாசிரியருக்குத் தனி அன்பு ஏற்பட்டிருந்தது என்பதையும் அவர்கள் அறிவார்கள். ஏன், மற்ற மாணவர்களுக்கும் ஸ்ரீதரிடம் மதிப்பும் அன்பும் உண்டு.

எனவேதான் பிரார்த்தனைக் கூட்டத்தில் சிறந்த மாணவர்களின் பெயர்களைத் தலைமை ஆசிரியர் அறிவித்தபோது 7-பி வகுப்பின் சிறந்த மாணவன் வடிவேல் என்று அவர் அறிவித்ததும் அனைவருக்கும் வியப்பு ஏற்பட்டது.

"நம்ம வகுப்போட சிறந்த மாணவன் நீதான்" என்று மற்ற மாணவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லி வந்ததால் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருந்த ஸ்ரீதருக்கு இது பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

ரண்டு நாட்களுக்குப் பிறகு, வகுப்பாசிரியர் குருமூர்த்தி காலையில் தன் வகுப்பு முடிந்ததும் ஸ்ரீதரிடம் "மத்தியானம் சாப்பிட்டப்பறம் என் ரூமுக்கு வா!" என்று சொல்லி விட்டுப் போனார்.

அதன்படி அவர் அறைக்குச் சென்றான் ஸ்ரீதர்.

"சிறந்த மாணவன் பரிசு உனக்குக் கிடைக்கலேன்னு ஏமாத்தமா இருக்கா?" என்றார் குருமூர்த்தி.

"இல்லை சார். வடிவேல் ரொம்ப நல்ல பையன்தானே!" என்றான் ஸ்ரீதர்.

"நீ இப்படிச் சொன்னாலும் உனக்கு இதில வருத்தம் இருக்குன்னு எனக்குத் தெரியும். நியாயமா உனக்குத்தான் இந்தப் பரிசு கொடுத்திருக்கணும். வேணும்னுட்டுத்தான் உனக்குக் கொடுக்காம வடிவேலுவுக்கு கொடுத்தேன்!"

ஸ்ரீதர் அதிர்ச்சியுடன் ஆசிரியரைப் பார்த்தான்.

"ஆமாம்ப்பா. ஆனா அது கூட உன் நல்லதுக்குத்தான். உங்கிட்ட நல்ல குணங்கள் நிறைய இருக்கு. ஆனா ஒரு தப்பான குணமும் இருக்கு. அந்தத் தப்பான குணம் உங்கிட்டேருந்து போகணும்கறத்துக்காகத்தான் அப்படிப் பண்ணினேன்!"

"என்ன சார் தப்பான குணம்?" என்றான் ஸ்ரீதர் புரியாமல்.

"பொறாமை!" என்றார் குருமூர்த்தி.

"சார்! எனக்கு யார் மேலயும் பொறாமை இல்லை சார்!" என்றான் ஸ்ரீதர்.

"இருக்கு. உனக்குத் தெரியாம இருக்கலாம். நான் இதை கவனிச்சிருக்கேன். யாராவது உன்னை விட அதிகமா மார்க் வாங்கிட்டா உன் மூஞ்சி வாடிப் போறதைப் பாத்திருக்கேன். பல சமயங்கள்ள நீதான் அதிக மார்க் வாங்குவ, நிறைய பரிசு எல்லாம் கூட வாங்கியிருக்க. ஆனா வேற யாராவது பரிசு வாங்கினா உனக்கு வருத்தம் ஏற்படறது உன் முகத்தைப் பாத்தாலே தெரியும்.

"ஒருவனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான நல்ல குணமே பொறாமை இல்லாம இருக்கறதுதான். ஏன்னா, பொறாமை மத்த நல்ல குணங்களை அழிச்சுடும். வாழ்க்கையில நீ சந்திக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. சில சமயம், சில பேரு சில விஷயங்கள்ள நமக்கு மேலதான் இருப்பாங்க. அவங்க நம்மளை விடத் திறமையானவங்களா இருக்கலாம். நம்மளை விடத் திறமையில் குறைஞ்சவங்க கூட சில சமயம் அதிர்ஷ்டத்தினாலேயோ, வேற காரணங்களாலேயே  நம்மை முந்திப் போயிடுவாங்க. இதையெல்லாம் நீ ஏத்துக்கப் பழகணும்.

"உன்னோட நோக்கம் எல்லாம் நீ இன்னும் முன்னேறணும்கறதிலதான் இருக்கணும். நம்மை முந்திக்கிட்டுப் போறவங்க மேல பொறாமை ஏற்படறது இயல்புதான். அந்த எண்ணத்தைப் போக்கிக்க முயற்சி செய்யணும். நீ முதல்ல சொன்னியே 'வடிவேலுவும் நல்ல பையன்தான் சார்'னு. அதை நீ சொன்னது ஒரு பேச்சுக்குத்தான்னு எனக்குத் தெரியும். ஆனா இது மாதிரி நீ உண்மையாவே நினக்கப் பழகிக்கணும்.

"நான் இப்ப சொல்றதையெல்லாம் உன்னால ஏத்துக்க முடியாட்டாலும், வேற சந்தர்ப்பத்திலே இது உனக்கு ஞாபகம் வரும்னு நினைச்சுத்தான் இதையெல்லாம் சொல்றேன். ஒரு விஷயம் மட்டும் ஞாபகம் வச்சுக்க. பொறாமை இருந்தா வேற எந்த நல்ல குணம் இருந்தும் பயன் இல்ல. உன்னால பொறாமையைப் போக்கிக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இப்ப நீ வகுப்புக்குப் போ!" என்று முடித்தார் குருமூர்த்தி.

இல்லறவியல் 
             அதிகாரம் 17          
    அழுக்காறாமை      
குறள் 161
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து 
அழுக்காறு இலாத இயல்பு.

பொருள்:  
மனதில் பொறாமை இல்லாமல் இருப்பதை ஒருவர் தம் ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்





















Tuesday, May 15, 2018

160. நாளும் ஒரு நோன்பு!

முகுந்தன் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தான். சிறிய நிறுவனம் என்றாலும் அது கப்பலில் பொருட்களை ஏற்றி இறக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததால் அங்கே வேலை செய்வது சவாலாகவும், உற்சாகமாகவும் இருக்கும் என்று நினைத்தான்.

ஆனால் வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே அவனுக்கு ஏமாற்றம்தான் ஏற்பட்டது. ஏமாற்றத்துக்கு முக்கியக் காரணம் நிர்வாக இயக்குனரின் செயல்பாடுதான்.

கோடிக்கணக்கில் வியாபாரம், நல்ல லாபம், அந்தத் துறையின் மிகச் சிறந்த நிறுவனங்களில் ஒன்று போன்ற சிறப்புகளைக் கொண்ட அந்த நிறுவனத்தை ஒரு பண்ணையை நடத்துவதைப் போல் நடத்திக் கொண்டிருந்தார் நிர்வாக இயக்குனர் மார்த்தாண்டம்.

ஊழியர்கள் யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் நிர்வாக இயக்குநரைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும் என்ற நிலைமை. எல்லாவற்றுக்கும் மேல் ஒவ்வொரு செயல்பாட்டிலும் குறைகளைக் கண்டுபிடித்து ஊழியர்களைக் கடுமையாகப் பேசும் அவரது குணம். 

இதனாலேயே, நல்ல சம்பளம், பிற வசதிகள் இருந்தும் பல ஊழியர்கள் குறுகிய காலத்திலேயே அந்த நிறுவனத்திலிருந்து விலகிக் கொண்டிருந்தனர் என்பது வேலையில் சேர்ந்தபின்தான் முகுந்தனுக்குத் தெரிந்தது!

ஒரே ஆறுதல் பொது மேலாளர் பொறுப்பில் இருந்த கண்ணன்தான். நிர்வாக இயக்குனர் எந்த அளவுக்கு மற்றவர்களை துச்சமாக மதித்தும், ஆணவத்துடனும் நடந்து கொண்டாரோ, அந்த அளவுக்குப் பொறுமையுடனும், பண்பாடுடனும் நடந்து கொண்டார் கண்ணன்.

ஆயினும் கண்ணனிடமும், மார்த்தாண்டம் பண்பாடற்றுதான் நடந்து கொண்டார். மற்ற ஊழியர்கள் முன்னிலையில் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைப்பதுபோல் எல்லா ஊழியர்களும் கலந்து கொள்ளும் அலுவலகக் கூட்டங்களில் கண்ணனைக் கடுமையாகப் பேசுவது, தன் அறையை விட்டு வெளியில் வந்து, கண்ணனின் இருக்கை அருகில் வந்து எல்லா ஊழியர்களுக்கும் கேட்கும்படி இரைந்து கத்துவது போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்தார். 

இது தவிர, கண்ணனைத் தன் அறைக்கு அழைத்துத் தனியாக அவருக்கு அர்ச்சனை நடத்துவது வேறு!

ஆனால் கண்ணன் இவை எதையும் பொருட்படுத்தாதவர் போல் அமைதியாகத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார். நிர்வாக இயக்குனர் தன் மீது கோபத்தைக் காட்டுவது போல், தனக்குக் கீழே பணி புரிபவர்கள் மீது அவர் கோபத்தைக் காட்டுவதில்லை. மாறாக, ஊழியர்கள் ஏதாவது தவறு செய்தால், அவர்கள் நேரடியாக நிர்வாக இயக்குனரிடம் மாட்டிக் கொள்ளாமல் காப்பாற்றி, பிரச்னைகளைத் தானே நிர்வாக இயக்குனரிடம் எடுத்துச் சென்று சமாளிப்பார்.

ன்று முகுந்தன் லஞ்ச் ரூமுக்குச் சென்றபோது அங்கே கண்ணன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். அவரிடம் முகுந்தன் பேச நினைத்தபோது, அக்கவுண்ட்ஸ் மேனேஜர் காசி வந்தார்.

"என்ன காசி, இன்னிக்கு உங்களுக்கு விரதம் எதுவும் இல்லியா?" என்றார் கண்ணன் சிரித்துக்கொண்டே.

"ஏன் சார் அப்படிக் கேக்கறீங்க? காசி சார் அடிக்கடி விரதம் இருப்பாரா?" என்றான் முகுந்தன்.

"ஆமாம். மாசத்துல அஞ்சாறு நாளு விரதம்னு சொல்லி முழுப் பட்டினி கிடப்பாரு!" என்றார் கண்ணன்.

"நல்ல வேளையா இன்னிக்கு விரதம் எதுவும் இல்ல. அப்படி இருந்திருந்தா, காலையில அந்த மனுஷன் பேசின பேச்சைக் கேக்கறதுக்கு உடம்பில கொஞ்சம் கூடத் தெம்பு இருந்திருக்காது!" என்றார் காசி.

"எப்படித்தான் மாசத்துல அஞ்சாறு நாளு எதுவுமே சாப்பிடாம விரதம் இருக்கீங்களோ! கிரேட் சார் நீங்க!" என்றார் கண்ணன்.

"நான் மாசம் அஞ்சாறு நாள்தான் கஷ்டத்தைத் தாங்கிக்கறேன். நீங்க தினமும் தாங்கிக்கிறீங்களே!" என்றார் காசி.

"என்ன சொல்றீங்க?" என்றார் கண்ணன்.

"அந்த மனுஷன் பேசற பேச்சை தினமும் கேட்டுக்கிட்டு, கொஞ்சம் கூட நொந்து போகாம பொறுமையா இருக்கீங்களே, அதை விட என் விரதம் ஒண்ணும் கஷ்டமானது இல்ல!" என்றார் காசி. 
  
இல்லறவியல் 
             அதிகாரம் 16             
பொறையுடைமை      
குறள் 160
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் 
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

பொருள்:  
உண்ணாமல் உடலை வருத்தி நோன்பு இருப்பவர்கள் பெரியவர்கள்தான். ஆனால் மற்றவர்களின் கடுமையான சொற்களை பொறுத்துக் கொள்பவர்கள் இன்னமும் மேலானவர்கள்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



















Sunday, May 13, 2018

159. யாத்ரீகன்

"கணேசன்!"

வேலைக்காரனை அழைப்பது போல் அதிகாரமாக ஒலித்த குரலைக் கேட்டு கணேசன் வேகமாக வந்து "சொல்லுங்க சார்!" என்றான்.

"என்னத்தைச் சொல்றது? எல்லாமே ரொம்ப மட்டமா இருக்கு!" என்றார் நீலகண்டன் கோபமான குரலில்.

"எதைச் சொல்றீங்க?" என்றான் கணேசன்.

"நான் பணம் கொடுத்துத்தான் இந்த டூர்ல வந்திருக்கேங்கறதை நீ அடிக்கடி மறந்துடறே! நான் வயசானவன். என்னைக் கோவில்ல விட்டுட்டு நீங்க எல்லாரும் வந்துட்டீங்க!"

"இல்லியே! முத்து இருந்து உங்களை அழைச்சுக்கிட்டு வந்தானே!"

"அவன் ஒரு சின்னப் பையன். என்னைத் தரதரன்னு இழுத்துக்கிட்டு வந்தான். கீழ கூட விழுந்திருப்பேன். கால் எல்லாம் ஒரே வலி" என்றார் நீலகண்டன்.

"நேரமாயிடுச்சுன்னு கொஞ்சம் அவசரப்பட்டிருப்பான். இனிமே கொஞ்சம் பாத்து மெதுவா அழைச்சுக்கிட்டு வரணும்னு அவன்கிட்ட சொல்றேன். கால் வலின்னீங்களே! தைலம் ஏதாவது வேணுமா?" என்றான் கணேசன்.

"எல்லாம் எங்கிட்ட இருக்கு. நான் ஒண்ணும் பிச்சைக்காரன் இல்ல. ஒரு வயசானவனைப் பாத்து அழைச்சுக்கிட்டு வரத்துக்குப் பொறுப்பு இல்ல. தைலம் வேணுமான்னு கேக்கற!" என்றார் நீலகண்டன் கோபம் குறையாமல்.

கணேசன் மௌனமாக அங்கிருந்து நகர்ந்தான்.

"இருப்பா! நான் இன்னும் சொல்லி முடிக்கல! ஏஸியை ஆஃப் பண்ணச் சொல்லு. ரொம்பக் குளிரா இருக்கு" என்றார் நீலகண்டன்.

"சார்! இது சம்மர். ஏஸியை ஆஃப் பண்ணினா மத்தவங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கும்" என்றான் கணேசன்.

"அப்ப நான் கஷ்டப்பட்டா பரவாயில்லையா?"

"வேணும்னா ஒண்ணு பண்ணலாம். சமையல் சாமான்களோட எங்க ஆளுங்க வேன்ல வராங்க. அந்த வேன்ல முன்னால டிரைவர் பக்கத்தில உக்காந்துக்கங்க. அந்த வேன்ல ஏஸி கிடையாது."

"என்னப்பா பேசறே நீ? நான் டிக்கட்டுக்குப் பணம் கொடுத்திருக்கேன். என்னை சாமான் வண்டில போகச் சொல்ற! என்ன நெனச்சுக்கிட்டிருக்கே நீ?" என்றார் நீலகண்டன் குரலை உயர்த்தி.

"வேண்டாம் சார். நீங்க இந்த பஸ்லியே வாங்க. ஆனா என்னால ஏஸியை ஆஃப் பண்ண முடியாது. மத்தவங்க இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. தயவு பண்ணி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க" என்று அவரைக் கைகூப்பிக் கேட்டுக் கொண்டு விட்டு கணேசன் அங்கிருந்து அகன்றான். 

ணேசன் அந்த யாத்திரையை ஏற்பாடு செய்து நடத்துபவன். இளம் வயதுதான் என்றாலும் நன்கு அனுபவப்பட்டவன் போல் திறமையாகவும், பொறுமையாகவும் எங்கள் குழுவை வழி நடத்தி வந்தான்.

எங்கள் குழுவில் இருந்த எல்லோருமே கணேசனின் ஏற்பாடுகள் குறித்துத் திருப்தியாகத்தான் இருந்தோம் - நீலகண்டனைத் தவிர. அவர் மட்டும் துவக்கத்திலிருந்தே ஏதாவது குற்றம் கண்டு பிடித்துக் கொண்டே வந்தார்.

தான் வயதில் பெரியவர் என்ற உரிமையில் நீலகண்டன் கணேசனை 'வா, போ' என்று ஒருமையில் பேசியது மட்டும் இல்லாமல், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஆனால் கணேசன் ஒருமுறை கூடப் பொறுமை இழக்கவில்லை. "கொஞ்சம் மரியாதையாப் பேசுங்க" என்று கூடச் சொன்னதில்லை.

வயதானவர்கள் உதவிக்கு யாரையாவது அழைத்து வர வேண்டும் என்று யாத்திரை பற்றிய விளம்பரத்திலேயே அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆயினும் நீலகண்டன் துணையில்லாமல் தனியாகத்தான் யாத்திரையில் இணைந்து கொண்டார். கணேசன் பலமுறை அவருக்கு உதவி செய்து அவரை கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அப்படியும் அவர் அவனைக் குறை கூறிக் கொண்டுதான் இருந்தார்.

"என்னப்பா சாப்பாடு இவ்வளவு மோசமா இருக்கு?" என்றார் நீலகண்டன் உரத்த குரலில்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் அவரைத் திரும்பிப் பார்த்தனர். அனைவருமே சாப்பாட்டை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் நீலகண்டன் இப்படிச் சொன்னது எல்லோருக்குமே வியப்பாகத்தான் இருந்தது.

"என்ன சார்?" என்றான் கணேசன் அவர் அருகில் வந்து.

"சாம்பார்ல இவ்வளவு காரம் போட்டிருக்கியே! இதைச் சாப்பிட்டுட்டு வயிறு கெட்டுப் போய் ரூம்லேயே உக்காந்திருக்க வேண்டியதுதான். எங்கேயும் வர முடியாது" என்றார் நீலகண்டன்.

"இல்லை சார். காரம் ரொம்பக் குறைச்சலாத்தான் போட்டிருக்கோம்" என்றான் கணேசன்.

"நான் என்ன பொய் சொல்றேனா?"

"சார்! சாம்பார்ல பீன்ஸ் போட்டிருக்கு. பீன்ஸுன்னு நினச்சு பச்சை மிளகாயைக் கடிச்சிருப்பீங்க. தண்ணி குடிங்க. சரியாயிடும்."

"சாம்பார்ல பச்சை மிளகாயை அள்ளிப் போட்டுட்டுக் காரம் போடலேன்னு சொல்றே! தண்ணி குடின்னு எனக்கு உபதேசம் பண்ற! உன்னை நம்பி இந்த டூர்ல வந்தேன் பாரு என்னைச் சொல்லணும்." 

"சாரி சார்! சாம்பார்ல வாசனைக்காக ஒண்ணு ரெண்டு பச்சை மிளகாயைக் கிள்ளிப் போடறது வழக்கம்தான். அதுல ஒரு துண்டு உங்க இலையில விழுந்திருக்கும். சாரி சார். மன்னிச்சுக்கங்க. கொஞ்சம் சர்க்கரை போடறேன். சர்க்கரை நாக்கிலே பட்டா காரம் போயிடும்" என்றான் கணேசன்.

"சாம்பார்ல நிறைய காரத்தைப் போடுவாங்களாம், அப்புறம் சக்கரையைப் போடுவாங்களாம்! மொதல்ல இந்த இடத்தை விட்டுப் போப்பா!" என்று கத்தினார் நீலகண்டன்.

ணேசனிடம் தனிமையில் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது அவனிடம் கேட்டேன். "என்ன மிஸ்டர் கணேசன்! நீலகண்டன் ரொம்ப ஓவராப் போற மாதிரி இல்ல?" என்றேன்.

"விடுங்க சார்!" என்றான் கணேசன்.

"அவர் ஒத்தரைத் தவிர வேற யாருக்கும் எந்தக் குறையும் இல்லையே! நாங்க எல்லோருமே ரொம்ப திருப்தியோடுதான் இருக்கோம். நீங்க ஏன் அவர் பேசறதையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கீங்க?" என்றேன்.

"வயசான மனுஷன். தனியா வந்திருக்காரு. அவரால முடியல. உதவிக்கு யாரும் இல்ல. நாங்க உதவி செஞ்சாலும் அதை அவரால ஏத்துக்க முடியல்ல. அதனால பொறுமையிழந்து கத்தறாரு. இந்த டூர் முடிஞ்சதும் அவர் யாரோ, நான் யாரோ! இந்த ஒரு வாரத்துக்கு அவர் பேசறதைக் கொஞ்சம் பொறுமையாக் கேட்டுக்கிட்டு இருந்துட்டாப் போவுது!" என்றான் கணேசன்.

"கணேசன்! நாங்கள்ளாம் ஏதோ புண்ணியம் கிடைக்கும்னு யாத்திரை போறோம். ஆனா உண்மையான யாத்ரீகன் நீங்கதான்! உங்ககிட்ட இருக்கற பொறுமையையும், மனப்பக்குவத்தையும் பாத்தா, உங்களையே ஒரு நல்ல சந்நியாசின்னுதான் சொல்லணும்" என்றேன் நான்.

இல்லறவியல் 
             அதிகாரம் 16             
பொறையுடைமை      
குறள் 159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் 
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

பொருள்:  
வரம்பு மீறி நடந்து கொள்பவரின் வாயிலிருந்து வரும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறவியை விடத் தூய்மையானவர்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்