About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, May 15, 2018

160. நாளும் ஒரு நோன்பு!

முகுந்தன் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தான். கப்பலில் பொருட்களை ஏற்றி இறக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தத அந்த நிறுவனம்  ஒரு சிறிய நிறுவனம்தான் என்றாலும், அங்கே வேலை செய்வது சவாலாகவும், உற்சாகமாகவும் இருக்கும் என்று அவன் நினைத்தான்.

ஆனால் வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே, அவனுக்கு ஏமாற்றம்தான் ஏற்பட்டது. ஏமாற்றத்துக்கு முக்கியக் காரணம் நிர்வாக இயக்குனரின் செயல்பாடுதான்.

கோடிக்கணக்கில் வியாபாரம், நல்ல லாபம், அந்தத் துறையின் மிகச் சிறந்த நிறுவனங்களில் ஒன்று என்று கூறும் அளவுக்குச் சிறப்புகளைக் கொண்ட அந்த நிறுவனத்தை ஒரு பண்ணையை நடத்துவதைப் போல் நடத்திக் கொண்டிருந்தார் நிர்வாக இயக்குனர் மார்த்தாண்டம்.

ஊழியர்கள் யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் நிர்வாக இயக்குநரைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும் என்ற நிலைமை. எல்லாவற்றுக்கும் மேல், ஒவ்வொரு செயல்பாட்டிலும் குறைகளைக் கண்டுபிடித்து ஊழியர்களைக் கடுமையாகப் பேசும் அவரது குணம். 

இதனாலேயே, நல்ல சம்பளம், பிற வசதிகள் இருந்தும் பல ஊழியர்கள் குறுகிய காலத்திலேயே அந்த நிறுவனத்திலிருந்து விலகிக் கொண்டிருந்தனர் என்பது வேலையில் சேர்ந்தபின்தான் முகுந்தனுக்குத் தெரிந்தது!

ஒரே ஆறுதல் பொது மேலாளர் பொறுப்பில் இருந்த கண்ணன்தான். நிர்வாக இயக்குனர் எந்த அளவுக்கு மற்றவர்களை துச்சமாக மதித்தும், ஆணவத்துடனும் நடந்து கொண்டாரோ, அந்த அளவுக்குப் பொறுமையுடனும், பண்பாடுடனும் நடந்து கொண்டார் கண்ணன்.

ஆயினும் கண்ணனிடமும், மார்த்தாண்டம் பண்பாடற்றுதான் நடந்து கொண்டார். மற்ற ஊழியர்கள் முன்னிலையில் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைப்பதுபோல் எல்லா ஊழியர்களும் கலந்து கொள்ளும் அலுவலகக் கூட்டங்களில் கண்ணனைக் கடுமையாகப் பேசுவது, தன் அறையை விட்டு வெளியில் வந்து, கண்ணனின் இருக்கை அருகில் வந்து எல்லா ஊழியர்களுக்கும் கேட்கும்படி இரைந்து கத்துவது போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்தார். 

இது தவிர, கண்ணனைத் தன் அறைக்கு அழைத்துத் தனியாக அவருக்கு அர்ச்சனை நடத்துவது வேறு!

ஆனால் கண்ணன் இவை எதையும் பொருட்படுத்தாதவர் போல் அமைதியாகத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார். நிர்வாக இயக்குனர் தன் மீது கோபத்தைக் காட்டுவது போல், தனக்குக் கீழே பணி புரிபவர்கள் மீது அவர் கோபத்தைக் காட்டுவதில்லை. மாறாக, ஊழியர்கள் ஏதாவது தவறு செய்தால், அவர்கள் நேரடியாக நிர்வாக இயக்குனரிடம் மாட்டிக் கொள்ளாமல் காப்பாற்றி, பிரச்னைகளைத் தானே நிர்வாக இயக்குனரிடம் எடுத்துச் சென்று சமாளிப்பார்.

ன்று முகுந்தன் லஞ்ச் ரூமுக்குச் சென்றபோது அங்கே கண்ணன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். அவரிடம் முகுந்தன் பேச நினைத்தபோது, அக்கவுண்ட்ஸ் மேனேஜர் காசி வந்தார்.

"என்ன காசி, இன்னிக்கு உங்களுக்கு விரதம் எதுவும் இல்லியா?" என்றார் கண்ணன், சிரித்துக் கொண்டே.

"ஏன் சார் அப்படிக் கேக்கறீங்க? காசி சார் அடிக்கடி விரதம் இருப்பாரா?" என்றான் முகுந்தன்.

"ஆமாம். மாசத்துல அஞ்சாறு நாளு விரதம்னு சொல்லி முழுப் பட்டினி கிடப்பாரு!" என்றார் கண்ணன்.

"நல்ல வேளையா இன்னிக்கு விரதம் எதுவும் இல்ல. அப்படி இருந்திருந்தா, காலையில அந்த மனுஷன் பேசின பேச்சைக் கேக்கறதுக்கு உடம்பில கொஞ்சம் கூடத் தெம்பு இருந்திருக்காது!" என்றார் காசி.

"எப்படித்தான் மாசத்துல அஞ்சாறு நாளு எதுவுமே சாப்பிடாம விரதம் இருக்கீங்களோ! கிரேட் சார் நீங்க!" என்றார் கண்ணன்.

"நான் மாசம் அஞ்சாறு நாள்தான் கஷ்டத்தைத் தாங்கிக்கறேன். நீங்க தினமும் தாங்கிக்கிறீங்களே!" என்றார் காசி.

"என்ன சொல்றீங்க?" என்றார் கண்ணன்.

"அந்த மனுஷன் பேசற பேச்சை தினமும் கேட்டுக்கிட்டு, கொஞ்சம் கூட நொந்து போகாம பொறுமையா இருக்கீங்களே, அதை விட என் விரதம் ஒண்ணும் கஷ்டமானது இல்ல!" என்றார் காசி. 
  
அறத்துப்பால்
இல்லறவியல் 
             அதிகாரம் 16             
பொறையுடைமை      
குறள் 160
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் 
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

பொருள்:  
உண்ணாமல் உடலை வருத்தி நோன்பு இருப்பவர்கள் பெரியவர்கள்தான். ஆனால் மற்றவர்களின் கடுமையான சொற்களை பொறுத்துக் கொள்பவர்கள் இன்னமும் மேலானவர்கள்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



















4 comments:

  1. வணக்கம்..

    உங்களின் திருக்குறள் கதைகள் மிகவும் நன்றாகவுள்ளன. தயவு செய்து தமிழ்US இலும் பகிர்ந்துச் தயவு செய்து பலரைச் சென்றடைய உதவுங்கள்.

    நன்றி

    ReplyDelete
  2. tamilus.comஇல் இந்தக் கதைகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறேன். நன்றி.

    ReplyDelete
  3. Good one, PR, brings back memories of corporate days !

    ReplyDelete
    Replies
    1. But you are still in your corporate days, RR. Perhaps, you are referring to the days when you were at the receiving end!

      Delete