About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, May 18, 2018

161. சிறந்த மாணவன்

 பள்ளி ஆண்டின் இறுதியில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் சிறந்த மாணவன் என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குவது அந்தப் பள்ளியின் வழக்கம்.

சிறந்த மாணவன் தேர்வு என்பது படிப்புத் திறமை மட்டும் இன்றி, மாணவனின் ஒழுக்கம், நேரம் தவறாமை, அதிகம் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருதல், வகுப்பிலும், வெளியிலும் அமைதி காத்தல், ஆசிரியர்களையும் மற்ற மாணவர்களையும் மதித்தல், பிற திறமைகள் போன்ற பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் இருக்கும்.

வகுப்பாசிரியர் சிறந்த மாணவன் யார் என்று தேர்வு செய்த பின், தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களைத் தலைமை ஆசிரியர் பிரார்த்தனைக் கூட்டத்தில் அறிவிப்பார்.

7-பி வகுப்பைப் பொறுத்தவரை, ஸ்ரீதர்தான் சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்படுவான் என்பது பிற மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

சிறந்த மாணவன் என்பதற்கான எல்லாத் தகுதிகளும் ஸ்ரீதரிடம்  இருந்தன என்பதைத் தவி,ர வகுப்பாசிரியர் குருமூர்த்திக்கு ஸ்ரீதர் மீது தனி அன்பு உண்டு என்பதும் எல்லா மாணவர்களும் அறிந்திருந்ததுதான்.

ஸ்ரீதரிடம் நல்ல பண்புகள் இருந்ததால்தான் அவனிடம் வகுப்பாசிரியருக்குத் தனி அன்பு ஏற்பட்டிருந்தது என்பதையும் அவர்கள் அறிவார்கள். ஏன், மற்ற மாணவர்களுக்கும் ஸ்ரீதரிடம் மதிப்பும் அன்பும் உண்டு.

எனவேதான், பிரார்த்தனைக் கூட்டத்தில் சிறந்த மாணவர்களின் பெயர்களைத் தலைமை ஆசிரியர் வகுப்புவாரியாக அறிவித்தபோது, 7-பி வகுப்பின் சிறந்த மாணவன் வடிவேல் என்று அவர் அறிவித்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

"நம்ம வகுப்போட சிறந்த மாணவன் நீதான்" என்று மற்ற மாணவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லி வந்ததால், பெரிதும் எதிர்பார்ப்புடன் இருந்த ஸ்ரீதருக்கு இது பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

ரண்டு நாட்களுக்குப் பிறகு, வகுப்பாசிரியர் குருமூர்த்தி, காலையில் தன் வகுப்பு முடிந்ததும், ஸ்ரீதரிடம், "மத்தியானம் சாப்பிட்டப்பறம் என் ரூமுக்கு வா!" என்று சொல்லி விட்டுப் போனார்.

அதன்படி அவர் அறைக்குச் சென்றான் ஸ்ரீதர்.

"சிறந்த மாணவன் பரிசு உனக்குக் கிடைக்கலேன்னு ஏமாத்தமா இருக்கா?" என்றார் குருமூர்த்தி.

"இல்லை சார். வடிவேல் ரொம்ப நல்ல பையன்தானே!" என்றான் ஸ்ரீதர்.

"நீ இப்படிச் சொன்னாலும் உனக்கு இதில வருத்தம் இருக்குன்னு எனக்குத் தெரியும். நியாயமா உனக்குத்தான் இந்தப் பரிசு கொடுத்திருக்கணும். வேணும்னுட்டுத்தான் உனக்குக் கொடுக்காம வடிவேலுவுக்கு கொடுத்தேன்!"

ஸ்ரீதர் அதிர்ச்சியுடன் ஆசிரியரைப் பார்த்தான்.

"ஆமாம்ப்பா. ஆனா அது கூட உன் நல்லதுக்குத்தான். உங்கிட்ட நல்ல குணங்கள் நிறைய இருக்கு. ஆனா ஒரு தப்பான குணமும் இருக்கு. அந்தத் தப்பான குணம் உங்கிட்டேருந்து போகணும்கறத்துக்காகத்தான் அப்படிப் பண்ணினேன்!"

"என்ன சார் தப்பான குணம்?" என்றான் ஸ்ரீதர், புரியாமல்.

"பொறாமை!" என்றார் குருமூர்த்தி.

"சார்! எனக்கு யார் மேலயும் பொறாமை இல்லை சார்!" என்றான் ஸ்ரீதர்.

"இருக்கு. உனக்குத் தெரியாம இருக்கலாம். நான் இதை கவனிச்சிருக்கேன். யாராவது உன்னை விட அதிகமா மார்க் வாங்கிட்டா, உன் மூஞ்சி வாடிப் போறதைப் பாத்திருக்கேன். பல சமயங்கள்ள நீதான் அதிக மார்க் வாங்குவ, நிறையப் பரிசு எல்லாம் கூட வாங்கியிருக்க. ஆனா வேற யாராவது பரிசு வாங்கினா, உனக்கு வருத்தம் ஏற்படறது உன் முகத்தைப் பாத்தாலே தெரியும்.

"ஒருவனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான நல்ல குணமே பொறாமை இல்லாம இருக்கறதுதான். ஏன்னா, பொறாமை மத்த நல்ல குணங்களை அழிச்சுடும். வாழ்க்கையில நீ சந்திக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. சில சமயம், சில பேர், சில விஷயங்கள்ள நமக்கு மேலதான் இருப்பாங்க. அவங்க நம்மளை விடத் திறமையானவங்களா இருக்கலாம். நம்மளை விடத் திறமையில் குறைஞ்சவங்க கூட சில சமயம் அதிர்ஷ்டத்தினாலேயோ, வேற காரணங்களாலேயே நம்மை முந்திப் போயிடுவாங்க. இதையெல்லாம் நீ ஏத்துக்கப் பழகணும்.

"உன்னோட நோக்கம் எல்லாம் நீ இன்னும் முன்னேறணும்கறதிலதான் இருக்கணும். நம்மை முந்திக்கிட்டுப் போறவங்க மேல பொறாமை ஏற்படறது இயல்புதான். அந்த எண்ணத்தைப் போக்கிக்க முயற்சி செய்யணும். நீ முதல்ல சொன்னியே, 'வடிவேலுவும் நல்ல பையன்தான் சார்'னு. அதை நீ சொன்னது ஒரு பேச்சுக்குத்தான்னு எனக்குத் தெரியும். ஆனா, அது மாதிரி நீ உண்மையாவே நினக்கப் பழகிக்கணும்.

"நான் இப்ப சொல்றதையெல்லாம் உன்னால ஏத்துக்க முடியாட்டாலும், வேற சந்தர்ப்பத்திலே இது உனக்கு ஞாபகம் வரும்னு நினைச்சுத்தான் இதையெல்லாம் சொல்றேன். ஒரு விஷயம் மட்டும் ஞாபகம் வச்சுக்க. பொறாமை இருந்தா, வேற எந்த நல்ல குணம் இருந்தும் பயன் இல்ல. உன்னால பொறாமையைப் போக்கிக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இப்ப நீ வகுப்புக்குப் போ!" என்று முடித்தார் குருமூர்த்தி.

அறத்துப்பால்
 இல்லறவியல் 
             அதிகாரம் 17          
    அழுக்காறாமை      
குறள் 161
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து 
அழுக்காறு இலாத இயல்பு.

பொருள்:  
மனதில் பொறாமை இல்லாமல் இருப்பதை ஒருவர் தம் ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                        காமத்துப்பால்





















2 comments: