"என்னங்க! நாளைக்கு சுந்தர் லண்டன் போறான். நாம ஏர்போர்ட்டுக்குப் போய் வழி அனுப்பிச்சுட்டு வரலாங்க!" என்றாள் கவிதா.
"ஏன், லண்டன் வரைக்கும் போய் அவன் தங்கப் போற ஓட்டல்ல கொண்டு விட்டுட்டு வரலாமே!" என்றான் மகேஸ்வரன்.
"என் தம்பி வெளி நாட்டுக்குப் போறது பெரிய விஷயம் இல்லியா? எங்க வீட்டில எல்லாரும் அவனை வழியனுப்ப ஏர்போர்ட்டுக்குப் போறாங்க."
"ரெண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் உன் தம்பி சரியான வேலை இல்லாம சிங்கி அடிச்சுக்கிட்டிருந்தான். இந்தக் கம்பெனியில வேலை கிடைச்சப்பறம் அவனோட நிலைமை அடியோட மாறிடுச்சு. அல்பனுக்கு வாழ்வு வந்த மாதிரி ஆட்டம் போடறான். நானும் போய் அவனுக்குப் பல்லக்குத் தூக்கணுமா? உனக்கு வேணும்னா நீ போயிட்டு வா!"
"மத்தவங்க நல்லா இருந்தா உங்களுக்குப் பொறுக்காதே!" என்று முணுமுணுத்தாள் கவிதா.
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன், தன் அண்ணனின் அறுபதாம் கல்யாணத்துக்குப் போகாமல் தவிர்த்து விட்டான் மகேஸ்வரன்.
"என்னத்தைச் சாதிச்சுட்டான்னு அறுபதாம் ஆண்டு கொண்டாடறான்? கவர்ன்மென்ட் வேலையில சம்பளம், கிம்பளம்னு வாங்கிப் பணத்தைச் சேத்துட்டான். அதை எப்படி செலவு பண்றதுன்னு தெரியாம இப்படி ஆடம்பரம் பண்றான்! நான் இதுக்குப் போகப் போறதில்ல. நீயும் புள்ளைங்களும் போயிட்டு வாங்க!" என்று சொல்லி விட்டான்.
"நீங்க ஏன் வரலேன்னு கேட்டா என்னங்க சொல்றது?" என்றாள் கவிதா.
"எழுந்திருக்க முடியாம படுத்துக் கிடக்கேன்னு சொல்லு!"
"காலையிலேருந்து கடுமையான குளிர் ஜுரம். போத்திக்கிட்டுப் படுத்துக்கிட்டிருக்காரு" என்று சொல்லிச் சமாளித்தாள் கவிதா.
மகேஸ்வரனுக்கு உண்மையிலேயே உடல்நிலை சரியில்லை என்று நினைத்து, அடுத்த நாள் அவன் அண்ணன் அவனைப் பார்க்க அவன் வீட்டுக்கு வந்தார். மகேஸ்வரன் சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.
"இப்பதான் ஜுரம் விட்டுக் கொஞ்சம் எழுந்து உக்காந்திருக்காரு!" என்று சொல்லிச் சமாளித்தாள் கவிதா.
மகேஸ்வரனைப் பொருத்த வரையில், தன் உறவினர்கள், தன் மனைவியின் உறவினர்கள் என்று அவன் வித்தியாசம் பாராட்டுவதில்லை. வாழ்க்கையில் முன்னேறியவர்கள், வெற்றி அடைந்தவர்கள், எதையாவது சாதித்தவர்கள், கொண்டாடுபவர்கள் அனைவரிடமுமே அவனுக்கு வயிற்றெரிச்சல்தான். நண்பர்கள், அலுவலக ஊழியர்களிடமும் அதே மனப்பான்மைதான்.
மகேஸ்வரனின் நெருங்கிய நண்பன் முகுந்தனுக்குப் பதவி உயர்வு கிடைத்ததிலிருந்து, மகேஸ்வரன் அவனிடமிருந்து விலகியிருக்க ஆரம்பித்து விட்டான். முகுந்தன் பழைய நட்புடன் பழகியபோதும், மகேஸ்வரன் அவனை மதிக்காமல் நடந்து கொள்ள ஆரம்பித்தான்.
"ஆஃபீஸ்ல ஒரு வேலை தெரியாது அவனுக்கு. எதுக்கெடுத்தாலும் எங்கிட்ட உதவி கேட்பான். இவனுக்கு வந்த வாழ்வைப் பாரு!" என்றான், கவிதாவிடம்.
ஒருநாள், மகேஸ்வரன் சோர்வுடன் காணப்பட்டான்.
"என்னங்க!" என்று விசாரித்தாள் கவிதா.
"என் வாழ்க்கையை நினைச்சுப் பாத்தா ரொம்ப விரக்தியா இருக்கு கவிதா! இந்தப் பத்து வருஷத்தில என்னைச் சுத்தி இருக்கறவங்க நிறையப் பேரு என்னைத் தாண்டி எங்கேயோ போயிட்டாங்க. ஏன் எனக்கு மட்டும் எதுவும் சரியா நடக்க மாட்டேங்குதுன்னு புரியல. ஆஃபீஸ்ல புரொமோஷன் கெடக்கல. வேற வேலைக்குப் போகலாம்னு முயற்சி பண்ணினா, அதுவும் நடக்கல. என் அண்ணன், உன் தம்பி, என் ஃபிரண்ட் முகுந்தன் மாதிரி என்னை விட அறிவு, திறமை எல்லாத்திலயும் குறைஞ்சவங்க எங்கேயோ போயிட்டதை நினச்சா, எனக்கு வயத்தெரிச்சலா இருக்கு. எனக்கு எதிரா யாரோ சதி பண்றாங்களோன்னு தோணுது" என்றான் மகேஸ்வரன், விரக்தியுடன்.
"ஏன் அப்படி நினைக்கறீங்க? நமக்கும் எவ்வளவோ நல்லது நடந்துக்கிட்டுதான் இருக்கு. நீங்க எதிர்பார்க்கிற சில விஷயங்கள் கொஞ்சம் லேட்டா நடக்கலாம். நானும் புள்ளைங்களும் சந்தோஷமாத்தானே இருக்கோம்!" என்று சற்று ஆறுதலாகப் பேசிய கவிதா, சற்றுத் தயங்கி விட்டு, "ஒரு விஷயம் சொல்லுவேன். தப்பா நினைக்க மாட்டீங்களே?" என்றாள்.
"சொல்லு!"
"மத்தவங்க முன்னேறினதைப் பாத்து வயத்தெரிச்சலா இருக்குன்னு நீங்களே சொன்னீங்க! நீங்க ஏன் அப்படி நினைக்கணும்? மத்தவங்களுக்கு நல்லது நடந்தா, அதுக்காக நாம சந்தோஷப்பட வேண்டாம். ஆனா ஏன் வருத்தப்படணும்? நீங்க நினைக்கற மாதிரி உங்களுக்கு எதிரா யாரும் சதி பண்ணல. நமக்கு எதிரிங்க யாருங்க இருக்காங்க? நம்ம எண்ணங்கள்தான் நம்ம வாழ்க்கையை உருவாக்குதுன்னு சொல்லுவாங்க. நீங்க மத்தவங்களைப் பாத்து வயத்தெரிச்சல் படறதுதான் உங்க முன்னேற்றத்துக்குத் தடங்கலா இருக்கோ என்னவோ! அதுதான் காரணம்னு நான் சொல்லல. நீங்களே யோசிச்சுப் பாருங்க" என்றாள் கவிதா.
இல்லறவியல்
அதிகாரம் 17
அழுக்காறாமை
குறள் 165
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது.
பொருள்:
பொறாமை உள்ளவர்களுக்கு வேறு பகை வேண்டாம். பகைவர்கள் ஏதும் கெடுதல் செய்யாவிட்டாலும், அவர்களது பொறாமையே அவர்களை அழித்து விடும்.
Very nicely said, PR !
ReplyDeleteThanks RR
Delete