ராமுவைப் பார்க்க அவன் நண்பன் சுரேஷ் வந்தபோது, வழக்கம் போல் அவர்கள் தங்கள் பழைய நண்பர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.
"நம்ப சாமிநாதன் புதுசா வீடு வாங்கியிருக்கானே, தெரியுமா?" என்றான் சுரேஷ்.
"கேள்விப்பட்டேன். ஏற்கெனவே ஊர்ல ஒரு வீடு, இங்க ஒரு வீடுன்னு ரெண்டு வீடு இருக்கு. இன்னொரு வீடு எதுக்கு? பணம் கொழுத்துப் போய் என்ன செய்யறதுன்னு தெரியாம அலையறான்!" என்றான் ராமு.
"கிருகப் பிரவேசத்துக்கு உன்னைக் கூப்பிட்டிருக்கானா?"
"அவனும் அவன் பொண்டாட்டியும் வந்து கூப்பிட்டுட்டுப் போனாங்க. ஆனா நான் போகப் போறதில்ல."
"ஏன்?"
"இவனோட பணத் திமிரை ஊர்ல எல்லாருக்கும் காட்டிக்கறதுக்குத்தானே இந்த கிருகப் பிரவேசம் எல்லாம்? நான் எதுக்குப் போகணும்?"
அப்போது இருவருக்கும் காப்பி எடுத்துக்கொண்டு அங்கே வந்த ராமுவின் மனைவி கமலி, "ஏங்க, புருஷனும் பொண்டாட்டியும் அவ்வளவு தூரம் வந்து கூப்பிட்டிருக்காங்க. போகாம இருந்தா நல்லா இருக்குமா?" என்றாள்.
"உனக்குத் தெரியாது. அவன் எப்படி இருந்தான்னு எனக்குத்தானே தெரியும்? நாங்க ரெண்டு பேரும் ஹோட்டலுக்குப் போய் காப்பி சாப்பிட்டா கூட காசு நான்தான் கொடுக்கணும்! அவன் கையில அஞ்சு பத்து கூட இருக்காது. அப்படி இருந்தவன், இப்ப ஏதோ திடீர்னு வாழ்வு வந்து ஆடறான். அந்த ஆட்டத்தை நான் போய்ப் பாக்கணுமாக்கும்!' என்றான் ராமு.
"ஏங்க, அவரு நம்மளைக் கூப்பிட வந்தபோது, நீங்க அந்தக் காலத்தில அவருக்கு நிறைய உதவி செஞ்சிருக்கீங்கன்னு எங்கிட்டயும், அவர் மனைவிகிட்டயும் உங்களைப் பத்திப் பெருமையாச் சொன்னாரே! உங்க மேல அவரு நிறைய மதிப்பு வச்சிருக்கற மாதிரிதான் தெரியுது. அவங்க நம்மளை நேர்ல வந்து கூப்பிட்டிருக்கும்போது, நாம போயிட்டு வரதுதான் மரியாதை" என்றாள் கமலி.
"நீ போகப் போறியா?" என்றான் ராமு, சுரேஷிடம்.
"என்னைக் கூப்பிடவே இல்லியே! உன் அளவுக்கு நான் அவனுக்கு அவ்வளவு நெருக்கம் இல்லியே! ஒருவேளை இன்விடேஷனை தபால்ல அனுப்பறானோ என்னவோ! இன்விடேஷன் வந்தா போவேன்" என்றான் சுரேஷ்.
அதன் பிறகு சற்று நேரம் வேறு சில விஷயங்களைப் பற்றிப் பேசி விட்டு சுரேஷ் கிளம்பினான்.
சுரேஷ் சென்றதும், ராமுவிடம், "நாம எப்ப வீடு வாங்கப் போறோம்?" என்றாள் கமலி.
"வீடு வாங்கற நிலைமையிலயா நான் இருக்கேன்? அதுக்குத்தான் சாமிநாதனோட கிருகப் பிரவேசத்துக்குப் போக வேண்டாம்னு சொன்னேன்!" என்றான் ராமு, எரிச்சலுடன்.
"இல்லீங்க. கண்டிப்பாப் போகணும். நாம ஒரு வீடு கூட வாங்காதபோது, நம்ப நண்பன் மூணு வீடு வாங்கி இருக்கானேன்னு நினைச்சு, நீங்க ஆத்திரப் படறீங்க. இது மாதிரி நினைச்சா, நமக்கு எப்படி நல்லது நடக்கும்? மனசில நல்ல எண்ணங்கள் வராமலே கூடப் போயிடும். கிருகப் பிரவேசத்துக்குப் போவோம். வீட்டை ரசிச்சுப் பாத்து சந்தோஷப் படுவோம். நிறைஞ்ச மனசோட உங்க நண்பரை வாழ்த்திட்டு வருவோம். அப்படிப் பண்ணினா, சீக்கிரமே நாமளும் வீடு வாங்கிட முடியும்னு நான் சொல்லல. அவரோட சந்தோஷத்தை நாமளும் சேர்ந்து அனுபவிச்சா, அது நமக்கு நல்லதுதானே? வாழ்க்கையில சந்தோஷம்தானே முக்கியம்?"
"சரி. போவோம்!" என்றான் ராமு.
தான் சொன்னதற்காகத்தான் ராமு சரி என்று சொல்லியிருக்கிறான் என்று கமலிக்குப் புரிந்தாலும், காலப்போக்கில் அவன் தன் மனப்போக்கை மாற்றிக் கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டது.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 17
அழுக்காறாமை
குறள் 163
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்.
பொருள்:
பிறருடைய செல்வத்தைக் கண்டு மகிழாமல் பொறாமை கொள்பவன் தனக்கு அறமும், செல்வமும் வேண்டாம் என்று கருதுகிறான் என்றுதான் கொள்ள வேண்டும்.
Lovely narration, PR !
ReplyDeleteThank you, RR
Deleteஅருமையான பதிவு
ReplyDelete