திருமணத்துக்குப் பிறகு பாஸ்கரும் சுமதியும் பாஸ்கரின் நண்பர்கள் பலரது வீட்டுக்குச் சென்று வந்தார்கள். எல்லோருமே அவன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தவர்கள்தான்.
ஒரு நாள் "இன்னிக்கு என்னோட பாஸ் ரவி வீட்டுக்குப் போகப் போறோம்!" என்றான் பாஸ்கர்.
"பாஸ் வீட்டுக்கெல்லாம் எதுக்குங்க? நண்பர்கள் வீட்டுக்கெல்லாம் போனபோது ஃப்ரீயா இருந்த மாதிரி பாஸ் வீட்டில இருக்க முடியுமா? ஏதாவது காரணம் சொல்லித் தட்டிக் கழிச்சுட முடியுமான்னு பாருங்களேன்" என்றாள் சுமதி.
"பாஸ் வீட்டுக்கெல்லாம் எதுக்குங்க? நண்பர்கள் வீட்டுக்கெல்லாம் போனபோது ஃப்ரீயா இருந்த மாதிரி பாஸ் வீட்டில இருக்க முடியுமா? ஏதாவது காரணம் சொல்லித் தட்டிக் கழிச்சுட முடியுமான்னு பாருங்களேன்" என்றாள் சுமதி.
"தட்டிக் கழிச்சா பாஸ் கோவிச்சுப்பாரும்மா! வேலையே போனாலும் போயிடும். போயிட்டு வந்துடலாம்!" என்றான் பாஸ்கர்.
ரவியின் வீட்டுக்குப் போய் விட்டு வந்த பிறகு சுமதி கேட்டாள்: "என்னங்க பாஸ்னு சொன்னீங்க? ரெண்டு பேரும் வாடா போடான்னு பேசிக்கிட்டீங்க? அவரு உங்க ஃபிரண்டா, பாஸா?"
"ரெண்டும்தான்!" என்றான் பாஸ்கர். "ரவியும் நானும் ஒரே லெவல்ல இருந்தவங்கதான். கம்பெனியில அவன் என்னை விட ரெண்டு வருஷம் ஜூனியர் கூட. ஆனா அவன் புரொமோஷன் கிடைச்சு அடுத்த லெவலுக்குப் போயி எனக்கு பாஸ் ஆயிட்டான். எனக்கு புரொமோஷன் கிடைக்காததால, நான் அதே லெவல்ல இருக்கேன்!"
"உங்களுக்கு இதில வருத்தம் இல்லியா?"
"எனக்குக் கிடைக்கலியேன்னு வருத்தம். ரவிக்கு கிடைச்சதில சந்தோஷம்!" என்றான் பாஸ்கர்.
"இல்ல, உங்களை விட ஜூனியர், வயசில சின்னவர் உங்களுக்கு பாஸ் ஆனதில உங்களுக்கு வருத்தம் இல்லியா?"
"இல்லியே! நீ கூட என்னை விட வயசில சின்னவ, இப்பதான் இந்த வீட்டுக்கு வந்திருக்க. அதுக்குள்ளே வீட்டில எனக்கு பாஸ் ஆகலியா?" என்றான் பாஸ்கரன்.
சுமதி சற்று வியப்புடன் கணவனைப் பார்த்தாள். 'தனக்குக் கிடைக்காத புரொமோஷன் தன்னோட நண்பனுக்குக் கிடைச்சதைப் பத்தி இவரு வருத்தமோ, பொறாமையோ இல்லாம இருக்காரே! எனக்குக் கிடைக்காத ஒண்ணு என்னோட நெருங்கின தோழிக்குக் கிடைச்சிருந்தா நான் பொறாமைப் பட்டிருப்பேனே!' என்று நினைத்துக் கொண்டாள்.
ஒரு நாள் பாஸ்கர் வீட்டில் இல்லாதபோது அழைப்பு மணி அடித்தது. சுமதி கதவைத் திறந்தாள்.
"பாஸ்கர் இல்லியா?" என்றார் வந்தவர்.
"இல்லியே! வெளியில போயிருக்காரு. நீங்க?" என்றாள் சுமதி.
"இந்த ஏரியாவில ஸ்ரீநகர் கிளப்னு இருக்கு. நான் அதோட செகரெட்டரி" என்றார் அவர்.
"ஓ! எனக்குத் தெரியாது. அவர் அதில மெம்பரா?"
"நீங்க இப்பதான் கல்யாணமாகி வந்ததால உங்களுக்குத் தெரியாது போலருக்கு! பாஸ்கர் இதில ஆக்டிவ் மெம்பராச்சே!"
"ஓ! அப்படியா?"
"சிட்டியில் உள்ள பெரிய கிளப்கள்ள இதுவும் ஒண்ணு. ஐயாயிரம் பேர் உறுப்பினர்களா இருக்காங்க. ஆறு மாசம் முன்னாடி செகரெட்டரி போஸ்டுக்கு எலக்ஷன் நடந்தது. அசெம்பிளி எலக்ஷன் மாதிரி பெரிய போட்டி, பிரசாரம் எல்லாம் உண்டு. பாஸ்கரும் நானும்தான் போட்டி போட்டோம்!"
"நீங்க ஜெயிச்சுட்டீங்களா?"
"ஆமாம். ஆனா பாஸ்கர் மாதிரி ஒரு மனுஷனைப் பாக்க முடியாது. எலக்ஷனுக்கு முன்னால நான் ஜெயிக்கணும்கறதுக்காக பாஸ்கரைப் பத்திக் கடுமையாப் பேசி இருக்கேன். ஆனா எலக்ஷனுக்கப்பறம், என் மேல கொஞ்சம் கூட வருத்தம் இல்லாம, எங்கிட்ட நட்பாப் பழகி, கிளப் சம்பந்தமான வேலைகள்ள எனக்கு உதவி செஞ்சுக்கிட்டிருக்காரு அவரு. இப்ப கூட கிளப் விஷயமா அவர் கிட்ட ஒரு ஆலோசனை கேக்கத்தான் வந்தேன். சரி அப்புறம் வரேன்" என்று கிளம்பினார்.
இப்படிப்பட்ட குணமுடைய கணவன் இருக்கும்போது தனக்கு என்ன குறை இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டாள் சுமதி.
இல்லறவியல்
அதிகாரம் 17
அழுக்காறாமை
குறள் 162
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்.
பொருள்:
யாரிடமும் பொறாமை இல்லாமல் இருக்கும் குணத்தை ஒருவன் பெற்றால், அதற்கு ஈடான வேறு சிறப்பு எதுவும் இல்லை.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
Fantastic !
ReplyDeleteThank you RR
Delete