About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, May 24, 2018

164. சோதனை மேல் சோதனை!

"துவரம் பருப்புக்குத் தட்டுப்பாடு வரப் போகுதாம். விலை வேற ஏகமா ஏறியிருக்கு" என்றார் கணக்குப்பிள்ளை.

"ஏனாம்?" என்றான் சரவணன்.

"பருப்பு விளைச்சல் கம்மியாம். தட்டுப்பாடு வந்தப்புறம்தான் அரசாங்கம் முழிச்சுக்கிட்டு இறக்குமதி பண்ண முயற்சி எடுத்திருக்காங்க. இறக்குமதி பண்ணி மார்க்கெட்ல சரக்கு வரத்து அதிகமாகறதுக்கு ரெண்டு மூணு மாசம் பிடிக்குமாம்."

"நம்மகிட்ட ஸ்டாக் இருக்கு இல்ல?"

"இருக்கு. நம்ப சப்ளையருக்கு ஃபோன் பண்ணிக் கேட்டேன். அவங்ககிட்டயும் ஸ்டாக் இருக்காம். நாம ஆர்டர் கொடுத்து ஒரு வாரத்தில சரக்கு வந்துடும்னு சொன்னாரு."

"நல்லது. விலையைக் கொஞ்சம் ஏத்தி விடுங்க. இந்த மாதிரி சமயத்தில சம்பாதிச்சாத்தானே உண்டு!"

கணக்குப்பிள்ளை கொஞ்சம் தயக்கத்துடன், "இல்லீங்க. ஏற்கெனவே முருகன் ஸ்டோர்ல நம்மளை விட கிலோ ரெண்டு ரூபா குறைச்சு விக்கிறாங்க. இப்ப நாம விலையை ஏத்தினா, நம்பகிட்ட யாரும் வாங்க மாட்டாங்க" என்றார்.

"அவன் மட்டும் எப்படிய்யா எல்லா சாமான்களையும் நம்மளை விடக் குறைச்ச விலைக்கு விக்கறான்? இத்தனைக்கும், நான் எந்த சப்ளையர் குறைச்ச விலைக்குக் கொடுக்கறாங்கன்னு பாத்துப் பாத்துத்தானே வாங்கறேன்!" என்றான் சரவணன், எரிச்சலுடன்.

கணக்குப்பிள்ளை மௌனமாக இருந்தார்.

"ஆமாம், அவங்ககிட்ட ஸ்டாக் நிலவரம் எப்படி இருக்காம்?"

"நிறைய ஸ்டாக் இருக்குன்னு கேள்விப்பட்டேன்."

"ஓஹோ! முன்னாடியே நிலவரம் தெரிஞ்சு நிறைய வாங்கி வச்சுட்டான் போலருக்கு. இதை வச்சே அவனை மாட்டி விடறேன். பத்தாக்குறை இருக்கும்போது, பருப்பைப் பதுக்கி வச்சிருக்கான்னு ஒரு மொட்டைக் கடிதாசு எழுதிப் போடறேன். சிவில் சப்ளைஸ் அதிகாரிங்க வந்து பாத்துட்டு அவன் கடைக்கு சீல் வச்சுடுவாங்க. அதுக்கப்பறம் அவன் கேஸ்லேருந்து வெளியில வந்தாலும் பேரு கெட்டுப் போனதால அவன் வியாபாரம் படுத்துடும்!" என்றான் சரவணன்.

உள்ளே போக யத்தனித்தவன், கணக்குப்பிள்ளையிடம் திரும்பி, "யோவ் கணக்குப்பிள்ளை! நான்தான் மொட்டைக் கடிதாசு அனுப்பினேன்னு யார்கிட்டயும் சொல்லிட மாட்டீங்களே!" என்றான்.

"என்னங்க இது! நான் அப்படிப் பண்ணுவேனா?" என்றார் கணக்குப்பிள்ளை.

ரவணன் போட்ட மொட்டைக் கடிதத்துக்கு ஒரு வாரத்திலேயே பலன் தெரிந்தது. அதிகாரிகள் வந்து முருகன் ஸ்டோர்ஸ் கடை, கிடங்கு, கடை உரிமையாளர்களின் வீடுகள், மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்கள் என்று எல்லா இடங்களிலும் இரண்டு நாட்கள் தீவிரமாகச் சோதனை போட்டார்கள்.

ஆனால் கணக்குகள் எல்லாம் முறையாக இருப்பதாகச் சொல்லித் திரும்பி விட்டனர்.

"என்னய்யா, இப்படி புஸ்ஸுன்னு போயிடுச்சே!" என்றான் சரவணன்.

ரண்டு வாரங்கள் கழித்து, மீண்டும் சில அதிகாரிகள் முருகன் ஸ்டோர்ஸுக்கு வந்து சோதனை செய்தனர்.

"என்னங்க, இப்பதான் சோதனை போட்டுட்டு ஒண்ணும் இல்லேன்னு சொல்லிட்டுப் போனாங்க. மறுபடியும் வந்திருக்காங்களே!" என்றார் கணக்குப்பிள்ளை, சரவணனிடம்.

"போன தடவையே ஏதோ தடயம் கிடைச்சிருக்கும். அதை வெளியில காட்டிக்காம திரும்பிப் போற மாதிரி போக்குக் காட்டிட்டு மறுபடியும் வந்திருக்காங்க. வசமா சிக்கிக்கிட்டான்னு நினைக்கறேன். நான் மொட்டைக் கடிதாசு போட்டது வீணாப் போகல!" என்றான் சரவணன், குதூகலத்துடன்.

"ஆனா, இப்ப வேற ஆளுங்க இல்ல வந்திருக்கிற மாதிரி இருக்கு!" என்றார் கணக்குப் பிள்ளை.

"பாக்கலாம். நல்ல சேதி வரும்!" என்றான் சரவணன், நம்பிக்கையுடன்.

டுத்த நாள், அந்த அதிகாரிகள் சரவணனின் கடைக்கு வந்தார்கள். "வாங்க சார்! என்ன விஷயம்?" என்றான் சரவணன், குழப்பத்துடன்.

"கலப்படச் சரக்கு ஏதாவது இருக்கான்னு பாக்க வந்திருக்கோம்" என்றனர் அதிகாரிகள்.

"எங்ககிட்ட அதெல்லாம் கிடையாது சார். ஏன் சார், திடீர்னு?"

"முருகன் ஸ்டோர்ஸ்ல பருப்பு நிறைய பதுக்கி வச்சிருக்காங்கன்னு எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால அங்க எங்க அதிகாரிகள் சோதனைக்கு வந்தாங்க. ஆனா அவங்க பதுக்கல் எதுவும் செய்யலை. அதைத் தொடர்ந்து கலப்படச் சரக்கு ஏதாவது இருக்கான்னு பாக்கறதுக்காக இன்னொரு டீம் வந்திருக்கோம். முருகன் ஸ்டோர்ஸ்ல சோதனை போட்டுட்டு உங்க கடைக்கு வந்திருக்கோம்!"

"நல்லாப் பாத்துக்கங்க சார்! எங்ககிட்ட கலப்படச் சரக்கு எதுவும் கிடையாது!" என்றான் சரவணன்.

சற்று நேர சோதனைக்குப் பிறகு, "நீங்க விக்கற பருப்பு கலப்படச் சரக்கா இருக்கே!" என்றார் ஒரு அதிகாரி.

"சார்! நாங்க கலப்படம் எதுவும் பண்றதில்ல. வாங்கற சரக்கை அப்படியே விக்கறோம்" என்றான் சரவணன், பதட்டத்துடன்.

"கலப்படச் சரக்கை வாங்கி விக்கறதும் தப்புதான்!"

"சார்! குறைஞ்ச விலைக்குக் கொடுக்கறார்ங்கறதுக்காக ஒரு சப்ளையர் கிட்ட வாங்கறோம். அவரு விக்கறது கலப்பட சரக்குன்னு எனக்குத் தெரியாது!"

"தெரியாம பண்ணினாலும், கலப்படச் சரக்கை விக்கறது குத்தம்தான். உங்க கடையை சீல் பண்ணப் போறோம்" என்றார் அதிகாரி.

"சார்! அப்படில்லாம் பண்ணிடாதீங்க சார்! ஏதாவது அபராதம் கட்டணும்னா கட்டிடறேன். கடைக்கு சீல் வச்சீங்கன்னா என் வியாபாரமே அழிஞ்சுடும்!" என்று கெஞ்சினான் சரவணன்.

"சாரி! அபராதம் போடணும்ங்கற முடிவு எடுக்க எங்களுக்கு அதிகாரம் கிடையாது. நீதிமன்றத்திலே உங்க மேல வழக்குப் போடுவோம். அபராதமா, சிறை தண்டனையான்னு நீதிமன்றம்தான் முடிவு பண்ணணும். அபராதம் கட்டினப்பறம், நீங்க வியாபாரத்தைத் தொடரலாம்னு நீதிமன்றம் சொன்னாதான் நீங்க கடையை மறுபடியும் திறக்க முடியும்!" என்றார் அதிகாரி.

அறத்துப்பால்
இல்லறவியல் 
             அதிகாரம் 17          
அழுக்காறாமை      
குறள் 164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் 
ஏதம் படுபாக்கு அறிந்து.

பொருள்:  
பொறாமையினால் தகாத செயல்களைச் செய்தால் அதனால் துன்பம் ஏற்படும் என்பதை உணர்ந்தவர்கள், செய்யக் கூடாத செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
பொருட்பால்                                                                                           காமத்துப்பால்


























No comments:

Post a Comment