About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, May 31, 2018

168. எப்படி இருந்தவர்!

வள்ளியப்பனின் ஓட்டலில் மானேஜராக முத்து சேர்ந்தபோது அவன் பார்த்த வள்ளியப்பன் ஒரு அற்புதமான மனிதர். வாடிக்கையாளர்கள், தன்னிடம் வேலை செய்பவர்கள் எல்லோரிடமும் அன்புடனும், பண்புடனும், அக்கறையுடனும் இருந்தவர். 

இப்படி ஒரு மனிதர் இருப்பாரா என்று முத்து அடிக்கடி வியந்திருக்கிறான். வள்ளியப்பன் மீது அவனுக்கு இருந்த மதிப்பினாலேயே, வேறு சில வேலை வாய்ப்புகள் வந்தும் அவன் அவற்றில் ஆர்வம் காட்டவில்லை. 

அப்படிப்பட்ட மனிதரிடம் சில வருடங்களாக ஏற்பட்டிருந்த மாற்றம் முத்துவுக்கு வியப்பாக இருந்தது.

'மீனாட்சி பவன்' என்ற பெயரில் இயங்கி வந்த அவர்களுடைய ஓட்டல் பல வருடங்களாக அந்த ஊரின் சிறந்த ஓட்டலாக இருந்து வந்தது. எத்தனையோ புதிய ஓட்டல்கள் வந்தாலும், அவை எதுவுமே 'மீனாட்சி பவனு'க்குப் போட்டியாக விளங்கும் அளவுக்கு வளரவில்லை. 

ஆனால் 'லட்சுமி விலாஸ்' ஓட்டல் வந்ததும், நிலைமை மாறி விட்டது. 'மீனாட்சி பவனை' விட 'லட்சுமி விலாஸி'ல் அதிகக் கூட்டம் சேர்ந்தது. 

"அப்படி என்னய்யா இருக்கு அந்த ஓட்டல்ல? அயிட்டம்லாம் நம்மளோடதை விட நல்லா இருக்காமா?" என்றார் வள்ளியப்பன்.

"அப்படி இருக்கிற மாதிரி தெரியலீங்க. பளபளப்பான தரை, புது விதமான மேஜை நாற்காலி, அலங்காரமான போர்டு இந்த மாதிரி விஷயங்களைப் பாத்துட்டுத்தான் நிறைய பேரு அங்கே போயிருக்காங்க. ஆனா நம்ப வியாபாரம் குறையல. நம்ப கஸ்டமர்ஸ் யாரும் அங்கே போகல. மத்த ஓட்டல் கஸ்டமர்ஸ் வேணும்னா போயிருக்கலாம். நமக்கு பாதிப்பு இல்லாதபோது நாம எதுக்கு கவலைப்படணும்?" என்றான் முத்து.

"நேத்திக்கு வந்த ஒரு பய நமக்கு மேல போயிக்கிட்டிருக்கான். அதைப் பாத்துட்டு நாம சும்மா இருக்க முடியுமா?" என்றார் வள்ளியப்பன்.

முதன்முறையாக முத்து வள்ளியப்பனின் ஒரு புதிய முகத்தைப் பார்த்தான். 'எல்லோரிடமும் அன்பும், கருணையும் உள்ள இவர் ஏன் 'லட்சுமி விலாஸ்' மீது ஆத்திரப்படுகிறார் - அதுவும் இவருடைய வியாபாரத்துக்கு பாதிப்பு இல்லாதபோது?' என்று குழம்பினான்.

அதற்குப் பிறகு அவன் பார்த்த வள்ளியப்பன் வேறு. அவர் குணமே அடியோடு மாறி விட்டது போல் இருந்தது. எப்போதும் 'லட்சுமி விலாஸ்' ஓட்டலை எப்படி ஒழித்துக் கட்டுவது என்ற சிந்தனையிலேயே இருந்தார். இது பற்றி அடிக்கடி அவனிடம் ஆலோசித்தார். அத்தகைய எதிர்மறைச் சிந்தனை வேண்டாம் என்று முத்து சொன்னபோதும் அவர் கேட்கவில்லை.

'லட்சுமி விலாஸ்' ஓட்டலுக்கு சில சங்கடங்கள் ஏற்பட ஆரம்பித்தன. அந்த ஓட்டல் பற்றிச் சில வதந்திகள் பரவின. அழுகிய காய்கறிகளைக் குறைந்த விலைக்கு வாங்கி வந்து சமைக்கிறார்கள் என்று ஒரு வதந்தி. அங்கே சாப்பிட்டவர்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், அவர்கள் இதை வெளியில் சொல்லக் கூடாது என்பதற்காக லட்சுமி விலாஸ் ஓட்டலின் அதிபர் கண்ணன் அவர்கள் மருத்துவச் சிகிச்சைக்கான எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டார் என்றும் ஒரு வதந்தி.

இது போல் இன்னும் பல வதந்திகள். இவற்றினால் அவ்வப்போது லட்சுமி விலாஸ் ஓட்டலுக்குச் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவர்கள் வியாபாரத்துக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இவற்றுக்கெல்லாம் பின்னால் வள்ளியப்பன் இருப்பாரோ என்ற சந்தேகம் முத்துவுக்கு இருந்தது. 'லட்சுமி விலாஸ்' ஓட்டலுக்குப் பிரச்னை ஏற்பட்டிருப்பதாகச் செய்தி வந்தபோதெல்லாம், வள்ளியப்பன் முத்துவைப் பார்த்து ரகசியமாகச் சிரிப்பது போல் சிரிப்பார்.

'லட்சுமி விலாஸ்' ஓட்டல் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் வள்ளியப்பன்தான் என்ற எண்ணம் ஊருக்குள் பரவ ஆரம்பித்தது. இதனால் 'லட்சுமி விலாஸ்' மீது அனுதாபமும், 'மீனாட்சி பவன்' மீது வெறுப்பும் வளர, 'லட்சுமி விலாஸி'ன் வியாபாரம் வேகமாக வளர்ந்தது. முதல் முறையாக 'மீனாட்சி பவனி'ன் வியாபாரம் சரியத் தொடங்கியது.

"சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க! நீங்க 'லட்சுமி விலாஸை'ப் பத்திக் கவலைப்படறதை விட்டுட்டு நம்ப ஓட்டல் மேல கவனம் செலுத்தணும். நம்ப வியாபாரம் குறைஞ்சுக்கிட்டே வருது!" என்றான் முத்து.

"நம்ப ஓட்டலை இழுத்து மூட வேண்டி வந்தாலும் பரவாயில்லை. 'லட்சுமி விலாஸை' ஒழிச்சுக்கட்டாம விட மாட்டேன்" என்றார் வள்ளியப்பன் ஆங்காரத்துடன்.

சில மாதங்களில் 'மீனாட்சி பவன்' மூடப்பட வேண்டிய நிலை வந்தது. முத்து வள்ளியப்பனிடம் சொல்லி விட்டு வேறொரு ஊரில் வேலை தேடிக் கொண்டு போய் விட்டான்.

சில மாதங்கள் கழித்து, ஊரிலிருந்து வந்த ஒரு நபரை முத்து தற்செயலாகச் சந்தித்தான். "வள்ளியப்பன் எப்படி இருக்காரு?" என்றான்.

"உங்களுக்கு விஷயம் தெரியாதா? ஒரு நாள் 'லட்சுமி விலாஸ்' ஓட்டல்ல சாப்பிட்டவங்க நிறைய பேருக்கு ஃபுட் பாய்சன் ஆகி ஆஸ்பத்திரியில சேர்க்க வேண்டிய நிலைமை வந்துட்டுது. இது போலீஸ் கேஸ் ஆகி, அவங்க வந்து விசாரிச்சதில, வள்ளியப்பன்தான் 'லட்சுமி விலாஸ்' ஓட்டல்ல வேலை செஞ்ச ஒரு ஆளுக்குப் பணம் கொடுத்து சாப்பாட்டில் எதையோ கலக்கச் சொன்னாருன்னு கண்டு பிடிச்சு அவரைக் கைது பண்ணிட்டாங்க. இப்ப ஜாமீன்ல இருக்காரு. ஆனா வக்கீல் வச்சு கேஸ் நடத்தப் பணம் இல்லாம தவிக்கிறாருன்னு பேசிக்கிறாங்க" என்றார் அவர்.

'எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டாரே!' என்று நினைத்து வருந்தினான் முத்து.

அறத்துப்பால்
இல்லறவியல் 
             அதிகாரம் 17          
     அழுக்காறாமை      
குறள் 168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் 
தீயுழி உய்த்து விடும்.

பொருள்:  
 பொறாமை என்ற பாவி ஒருவனது செல்வத்தை அழித்து அவனுக்குத் தீமை விளைத்து விடும். ('தீயுழி உய்த்து விடும்' என்ற  சொற்றொடருக்கு 'நரகத்தில் தள்ளி விடும்' என்று பொருள் கூறியிருக்கிறார் பரிமேலழகர்.)
பொருட்பால்                                                                                    காமத்துப்பால்














No comments:

Post a Comment