About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 7 - மக்கட்பேறு

திருக்குறள் 
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு 
61. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
"பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க!"

இவ்வாறு தன்னையும் தான் கைப்பிடித்த நங்கை மீனாட்சியையும் வாழ்த்தியவர்களில் எவ்வளவு பேருக்கு இந்த வாழ்த்தின் பொருள் தெரியும் என்று நினைத்துப் பார்த்தான் சங்கர்.

திருமணத்துக்கு வந்திருந்த அவன் தந்தையின் நண்பர் தமிழ் அறிஞர் சுந்தரமுர்த்திக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்று தோன்றியது.

திருமணச் சடங்குகள் முடிந்து சற்று ஒய்வு கிடைத்தபோது சுந்தரமுர்த்தியிடம் சென்று தன் ஐயத்தைக் கேட்டான் சங்கர்.

"'பதினாறும் பெற்று' என்று வாழ்த்துகிறார்களே, அந்தப் பதினாறு பேறுகள் என்ன என்று தெரிந்து கொள்ள விருப்பம்" என்றான்.

"பலருக்கு இவை என்னவென்று தெரியாது. பலர் இவற்றைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதும் இல்லை. உன்னுடைய ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். இந்தப் பதினாறு பேறுகள் என்னென்ன என்பது பற்றிச் சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.

"காளமேகப் புலவரின் ஒரு கவிதையின் அடிப்படையில் சொல்கிறேன். 1.புகழ் 2.கல்வி 3.வீரம் 4.வெற்றி 5.நன்மக்கட்பேறு 6.துணிவு 7.செல்வம் 8.குறைவற்ற (அபரிமிதமான) உணவு  9.எல்லாவிதமான நலன்கள் (சௌபாக்கியம்) 10.சுகங்கள் 11.நல்லறிவு (விவேகம்) 12.அழகு 13.பெருமை (கௌரவம்) 14.அறம்  15.குலம் 16.நீண்ட ஆயுள்.

"இவற்றில் வீரம்-துணிவு, புகழ்-பெருமை போன்றவை ஒரே பொருளைக் குறிப்பதாகத் தோன்றலாம். அதற்குள் நாம் இப்போது போக வேண்டாம். 'குலம்' என்பதற்கு 'குடும்பத்தின் நற்பெயர்' என்று பொருள் கொள்ள வேண்டும். என்ன, பதினாறு பேறுகளைப் பெற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறாயா?"

"உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதத்தால் இந்தப் பேறுகள் எனக்குக் கிடைத்தால் அது என் அதிர்ஷ்டம்" என்றான் சங்கர்.

"நன்றாகப் பேசக் கற்றுக்கொண்டிருக்கிறாய். உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். என் சிறு வயதில், பதினாறு பேறுகள் என்பதற்குப் பதினாறு பிள்ளைகள் என்று விளையாட்டாகப் பொருள் சொல்வார்கள். புதிதாகக் கல்யாணம் ஆனவர்களை 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க' என்று யாராவது வாழ்த்தினால், உடனே கல்யாண மாப்பிள்ளை, 'சார்  அவ்வளவெல்லாம் தாங்காது. ஒன்றிரண்டு பிள்ளைகள் பிறந்தால் போதும்!' என்பார்.

" ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பு பல குடும்பங்களில் 10,12 குழந்தைகள்  பிறப்பது சகஜம் என்பதால் இப்படி. இப்போது கூட நான் என்ன சொல்வேன் என்றால், வரமளிக்கும் கடவுள் உன்னிடம் 'உனக்கு 16 பேறுகள் வேண்டுமா, அல்லது ஒன்றிரண்டு நல்ல பிள்ளைகள் வேண்டுமா?' என்று கேட்டால், ஒன்றிரண்டு நல்ல பிள்ளைகள் வேண்டும் என்று சொல்வதுதான் புத்திசாலித்தனம்.

"நல்ல பிள்ளைகளைப் பெறுவதை விடச் சிறந்த பேறு வேறு ஏதும் இல்லை. சிந்தித்துப் பார்த்தால், நல்ல பிள்ளைகளைப் பெற்றால், அவர்கள் மூலம் மற்ற பேறுகள் தாமே நம்மைத் தேடி வந்தடையும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, நீ கடவுளிடம் எதாவது வேண்டிக் கொள்வதாக இருந்தால், 'நல்ல பிள்ளைகளைக் கொடு' என்றே  வேண்டிக்கொள்." என்று முடித்தார் சுந்தரமூர்த்தி.

ஒரு ஆர்வத்தில் துவங்கிய பேச்சு நல்ல அறிவுரையில் முடிந்தது சங்கருக்கு மிகவும் திருப்தி அளித்தது,

குறள் 61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

பொருள்:
எனக்குத் தெரிந்த வரையில், எதை அறிய வேண்டுமோ அதை அறிந்து கொள்ளும் இயல்புள்ள நல்ல மக்களைப் பெறுவதை விடச் சிறப்பான பேறு வேறு எதுவும் இல்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

62. பாவமூட்டையின் சுமை குறைய வழி
"போன ஜன்மத்தில என்ன பாவம் பண்ணினேனோ தெரியலே, புடிச்சு ஆட்டுது" என்று அலுத்துக்கொண்டார் புண்ணியகோடி.

"புண்ணியகோடின்னு பேரு வச்சுக்கிட்டு நீங்களே இப்படிப் பேசினா, நாங்கள்ளாம் என்ன செய்யறது?" என்றார் நண்பர்களால் செல்லமாகப் பாவி என்று அழைக்கப்பட்ட பா.விஸ்வநாதன்!

"பேரில என்ன இருக்கு?  விடாத இருமலோடு ஒத்தன் ஆஸ்பத்திரிக்குப் போனான். டாக்டர் மருந்துச் சீட்டு எழுதறதுக்கு 'உன் பேரு என்ன?'ன்னு கேட்டாரு. 'ஆரோக்கியராஜ்'னு சொன்னான் அவன். ஆரோக்கியத்தில ராஜாவாம்! அது மாதிரிதான். என் பேரு வெற்றிவேல். எனக்கு எல்லாத்திலயும் வெற்றியா கெடச்சுக்கிட்டிருக்கு? இப்ப கூட மூணு சீட்டில முன்னூறு ரூபா தோத்துட்டுத்தான் வரேன்!" என்றார் வெற்றிவேல்!

"அது இருக்கட்டும். இந்தப் பூர்வ ஜன்ம பலன் என்கிறதெல்லாம் உண்மையா? போன ஜன்மத்தில பண்ணின பாவத்துக்கான பலனை இந்த ஜன்மத்தில அனுபவிக்கணுமா?" என்று கேட்டார் புண்ணியகோடி.

"இந்த ஜன்மத்தில மட்டும் இல்ல. அடுத்த பல ஜன்மங்கள்ளேயும் அனுபவிக்க வேண்டி இருக்கும்" என்றார் விஸ்வநாதன்.

"அது ஏன் அப்படி?" என்றார் வெற்றிவேல்.

"ஏன்னா நம்ம பண்ற பாவம் அவ்வளவு! அதற்கான பலன் அத்தனையையும் ஒரே ஜன்மத்தில அனுபவிக்கணும்னா நம்மால தாங்க முடியாதுன்னுதான் கடவுள் அதைப் பிரிச்சு ரெண்டு மூணு ஜன்மங்கள்ள அனுபவிக்கற மாதிரி பண்ணியிருக்காரு" என்று விளக்கினார் விஸ்வநாதன்.

"அப்ப இந்த ஜன்மத்தில பண்ற பாவமெல்லாம் என்ன ஆகும்?" என்று வினவினார் புண்ணியகோடி.

"அதான் பிரச்னையே! பழைய பாவ மூட்டை கொஞ்சம் குறையறதுக்குள்ள, நாம புதுசா பண்ற பாவங்கள்ளாம் சேர்ந்து இன்னும் மூட்டை பெரிசாகிக்கிட்டே போகும்!"

"அப்போ பாவமூட்டை குறையவே குறையாதா? மறுபடி மறுபடி ஜன்மம் எடுத்துக் கஷ்டப்பட்டுக்கிட்டேதான் இருக்கணுமா?"

"ஒரு வழி இருக்கு!" என்ற குரல் கேட்டது. மூவரும் திரும்பிப் பார்த்தனர். பக்கத்தில் இருந்த மரத்தடியில் ஒருவர் அழுக்கு வேட்டியுடன் மண் தரையில் படுத்திருந்தார்.

'யார் இவர்? சாமியாரா? யோகியா இல்லை சித்தரா?' என்று மூவரும் யோசித்துக் கொண்டிருந்தபோதே, அவர் இவர்களைத் திரும்பிப் பார்க்காமலே பேசினார்: "உங்கள் பிள்ளைகள் எந்தப் பழிக்கும் ஆளாகாமல் பண்புள்ளவர்களாக இருந்தால் ஏழு பிறவிக்கும் உங்களை எந்தத் தீமையும் அண்டாது."

"எப்படிச் சொல்றீங்க சாமி?" என்றார் வெற்றிவேல்.

"நான் சொல்லலே. திருவள்ளுவர் சொல்கிறார்" என்று சொல்லி விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் தூக்கத்தைத் தொடர்ந்தார் 'சாமியார்.'

குறள் 62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

பொருள்: 
பழிச்சொல் எதற்கும் ஆளாகாமல் பண்புடன் வாழும் புதல்வர்களைப் பெற்றவர்களை முன்வினைப் பயனால் அவர்களுக்கு ஏற்படும் ஏழு பிறவிகளிலும் எந்தத் தீமையும் அண்டாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

63. தென்னையைப் பெத்தா இளநீரு, புள்ளையைப் பெத்தா கண்ணீரு!
நல்லசிவம் தன் நண்பர் தனராஜைப் பார்க்கப் போனபோது, அவர் வெளியில் போயிருப்பதாக அவர் மனைவி சொன்னாள். சற்று நேரம் காத்திருந்தபின் தனராஜ் வந்தார். நல்லசிவத்தைப் பார்த்ததும், அவரை உள்ளே அழைத்துச் சென்றார்.

உள்ளே சென்று கதவைச் சாத்தியதும், தனராஜால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. துண்டில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மினார்.

நல்லசிவம் பதறிப்போய், "என்ன தனராஜ் இது, குழந்தை மாதிரி? என்ன ஆச்சு?"என்றார்.

"எல்லாம் இந்த செந்தில் விஷயம்தான். மொதல்ல ஏகப்பட்ட பணம் செலவழிச்சுப் படிக்க வச்சேன். அப்புறம் படிப்பு சரியா வரலைன்னு பிசினஸ் பண்ணப் போறேன்னான். அதுக்கும் முதலீடு, மாதாந்தர செலவுன்னு நெறையப் பணம் கொடுத்தேன். இப்ப தொழில் நஷ்டமாயிடுச்சு, வேற தொழில் செய்யப்போறேன்னு மறுபடி பணம் கேக்கறான்.

"வேண்டாம், நம்ம ஊருக்கு வந்துடு, கொஞ்ச நாள் நிலத்தைப் பாத்துக்கிட்டுரு, அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்னு சொன்னா கேக்க மாட்டேங்கறான். அண்ணன் துபாய்க்குப் போய் நெறையச் சம்பாதிக்கச்சே, நானும் ஏதாவது செஞ்சு பணம் சம்பாதிக்க வேண்டாமான்னு கேக்கறான்.

"ஏற்கனவே பாதி நிலத்தை வித்தாச்சு. மீதி நிலத்தையும் வித்து மொத்தப் பணத்தையும் அவனுக்குக் கொடுத்துட்டு நானும் என் சம்சாரமும் சாப்பாட்டுக்கே யார்கிட்டயாவது கையேந்தற நிலைமை வந்துடும் போலருக்கே!"

மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் தனராஜ்.

"ஏன் இப்படியெல்லாம் நெனைக்கிறீங்க? செந்திலுக்கு புது பிசினஸ் நல்லா அமையலாம் இல்லே? அதோட, மூத்தவன் பாலுதான் துபாயில வசதியா இருக்கானே, அவன் உங்களைப் பாத்துக்க மாட்டானா?" என்று சமாதானப்படுத்த முயன்றார் நல்லசிவம்.

"நீங்க வேற நல்லசிவம்! துபாயில தனியா இருந்தா சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவானேன்னு அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சேன். இப்ப அவன் குடும்பத்தோட அங்க சந்தோஷமா இருக்கான். செலவுக்குன்னு எங்களுக்கு ஒரு பைசா கூட அனுப்பறதில்ல. கேட்டா, வர வருமானம் எங்களுக்கே சரியா இருக்கு, ஒரு ரூபா கூட சேமிக்க முடியறதில்லன்னு மூக்கால அழறான். இவன் படிப்புக்கு நான் எவ்வளவு செலவழிச்சிருப்பேன்! எனக்கு வாய்ச்ச ரெண்டு புள்ளைங்களும் இப்படியா இருக்கணும்?"

"சரி. நான் கிளம்பறேன்" என்று நல்லசிவம் எழுந்தார்.

"இருங்க. எதுக்கு வந்தீங்க? உடனே கிளம்பறீங்க! என் கஷ்டத்தைச் சொல்லி அழுது, நீங்க வந்த விஷயத்தைப்பத்திக் கேக்காமயே இருந்துட்டேனே!"

"ஒண்ணும் இல்லை. ராத்திரி கிளம்பி சென்னைக்குப் போறேன். அதுதான் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்!"

"ஓ! ரகுவோட கொஞ்ச நாள் இருந்துட்டு வரப் போறீங்களா? ரெண்டு மூணு வாரத்தில வந்துடுவீங்கல்ல?"

"ம்..." என்றார் நல்லசிவம்.

சென்னையில் இருக்கும் அவர் மூத்த மகன் ரகுவும், பெங்களூருவில் இருக்கும் அவர் இளைய மகன் ரவியும், அவரையும் அவர் மனைவியையும் தங்களுடனேயே வந்து நிரந்தரமாக இருக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்ததையும், ஒவ்வொருவர் வீட்டிலும் மூன்று மாதம் இருந்து விட்டு, கிராமத்து வீட்டை நிரந்தரமாகக் காலி செய்து விட்டு மகன்களுடனேயே இருப்பது பற்றி அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்திருப்பதையும், தனராஜ் அப்போது இருந்த மனநிலையில் அவரிடம் சொல்ல விரும்பவில்லை.

சென்னைக்குப் போய் ஓரிரு தினங்கள் கழித்துத் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்.

குறள் 63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 
தம்தம் வினையான் வரும்.

பொருள்:
நமது பிள்ளைகளே நமது சொத்துக்கள். அவரவருக்குக் கிடைக்கும் சொத்து எத்தகையது என்பது அவரவர் வினைப்பயனை ஒட்டி அமையும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

64. அமுதினும் இனியது!
"நாமும் கோவில் கோவிலாப் போய்க்கிட்டிருக்கோம். கடவுள் இன்னும் நமக்குக் கருணை காட்டலியே!" என்றாள் சுகன்யா.

"கோவிலுக்குள்ள நுழையும்போதே இப்படி அலுத்துக்கிட்டா எப்படி நம்மால அமைதியாக் கடவுள்கிட்ட வேண்டிக்க முடியும்?" என்றான் அவள் கணவன் பலராமன்.

"நான் ஏன் இப்படி அலுத்துக்கறேன்னு கடவுளுக்குத் தெரியாதா? அமைதியா வேண்டிக்கறதை விட இப்படி மனசு வருத்தப்பட்டு அங்கலாய்க்கும்போதாவது நம்ம வருத்தம் எவ்வளவு ஆழமானதுன்னு கடவுளுக்குப் புரியட்டுமே!"

"சரி வா. சன்னதி கிட்ட வந்துட்டோம். கூட்டம் அதிகமா இல்லை. உள்ள போய் சாமி தரிசனம் பண்ணிட்டு வந்துடலாம்."

கடவுளிடம் இருவருமே மனம் உருகி வேண்டிக் கொண்டார்கள்.

வெளியே வந்து பிரகாரத்தைச் சுற்றும்போது, பலராமன் பிரசாதங்கள் விற்கும் இடத்தை நோக்கிப் போனான்.

"ஒவ்வொரு கோவில்லேயும் தவறாம பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டுடறீங்க. உங்களுக்கு பலராமன் என்பதற்கு பதிலா, சாப்பாட்டு ராமன்னு பேர் வச்சிருக்கலாம்!"

"நான் மட்டுமா சாப்பிடறேன்? உனக்கும்தானே வாங்கிக் கொடுக்கறேன்? நான் தனியாக் கோவிலுக்குப் போனாக் கூட உனக்குப் பிரசாதம் வாங்கிக்கிட்டு வந்து கொடுப்பேனே! இந்தக் கோவில்ல அதிரசம் ரொம்ப நல்லா இருக்கும். அதுதான்."

"எந்தக் கோவில்ல எந்தப் பிரசாதம் விசேஷம்கறது உங்களுக்கு அத்துப்படியாச்சே! நீங்க கோவிலுக்கு வரதே பிரசாதம் வாங்கிச் சாப்பிடத்தானோன்னு தோணுது!"

அவள் பேச்சைப் பொருட்படுத்தாமல் பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்த பலராமன் கோவில் பிரகாரத்தை ஒட்டி இருந்த குளக்கரைக்கு வந்தான். மனைவிக்கு ஒரு அதிரசத்தைக் கொடுத்து விட்டு இன்னொன்றை விண்டு வாயில் போட்டுக் கொள்ளப் போனவன் அப்படியே நின்று விட்டான்.

குளக்கரையில் ஒரு இளம் தம்பதி ஒரு இட்லிப் பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பெண்ணின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை கீழே தாவி மண்ணில் கை வைத்துத் தவழ்ந்து போய், தந்தையின் கையிலிருந்த  ஒரு இட்லியைத் தன் கையால் அழுத்திப் பிசைந்து, அதைக் கூழாக்கியது. 

குழந்தையின் கையிலிருந்த மண் படிந்த அந்தக் கூழை, குழந்தையின் தந்தை ஆவலுடன் எடுத்து வாயில் போட்டுச் சுவைத்ததைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் பலராமன்.

'என்னங்க உங்களுக்குப் பிடிச்ச அதிரசத்தைக் கூடச் சாப்பிடாமல் அந்தக் குழந்தையையே பாத்துக்கிட்டிருக்கீங்க?"

"அந்தக் குழந்தையோட அப்பா இடத்தில நான் இருந்தா, இந்த அதிரசத்தை விட அந்தக் குழந்தையோட அழுக்குக் கை பட்ட அந்த இட்லிக்கூழ்தான் எனக்கு அதிக ருசியா இருந்திருக்கும்!" என்றான் பலராமன் ஏக்கத்துடன்.

குறள் 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 
சிறுகை அளாவிய கூழ்.

பொருள்:
தன் குழந்தையின் சிறு கையால் அளாவப்பட்ட கூழ்தான் ஒருவருக்கு அமிர்தத்தை விட இனிப்பதாக இருக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

65.  புவனா - ஒரு கேள்விக்குறி!
புவனா சமையல் செய்து கொண்டிருந்தபோது குழந்தை அழும் சத்தம் கேட்டது. அடுப்பை அணைத்து விட்டு வேகமாக ஓடினாள். குழந்தையின் சிறுநீரால் தூளி நனைந்து, கீழே நீர் சொட்டிக்கொண்டிருந்தது.

"அடாடா! டயபர் போட மறந்து விட்டேனே!" என்று சொன்னபடியே குழந்தையைத் தூக்கினாள். துண்டால் குழந்தையின் உடலைத் துடைத்து விட்டுக் கீழே கிடத்தினாள்!

குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்து விட்டுக் கையை உயர்த்தியது. புவனா தன் முகத்தைக் குழந்தைக்கு நெருக்கமாகக் கொண்டு சென்றாள்.

குழந்தையின் பிஞ்சுக் கரம் அவள் மீது பட்டதும் அவளுக்குப் புளகாங்கிதம் ஏற்பட்டது. இரண்டு மூன்று முறை அவளைத் தொட்ட பிறகு திடீரென்று பெரிதாகச் சிரித்தபடியே குழந்தை அவள் கன்னத்தில் ஓங்கி அடிக்க ஆரம்பித்தது.

கரை கடந்த மகிழ்ச்சியில் புவனா குழந்தையை வாரி அணைத்தபடி, "என் செல்லமே!" என்று முகத்தோடு முகம் வைத்து உச்சி முகர்ந்தாள்.

குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தபடியே 'பே பே பே...' என்று ஏதோ பேசியது. "என்னம்மா கண்ணு  சொல்றே? எனக்கு ஒண்ணுமே புரியல்லியே!" என்ற புவனா குழந்தையைத் தோளில் தூக்கிக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.

பெரும்பாலும் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டும், சில சமயம் கீழே விட்டு விட்டும் சமையலை முடித்தாள். குழந்தையைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே சாப்பிட்டு விட்டுப் பிற வேலைகளையும் செய்து முடித்தாள். பிறகு நீண்ட நேரம் குழந்தையுடன் பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தாள்.

குழந்தைக்குப் பால் கொடுத்து அதை மறுபடியும் தூங்க வைத்தபோது மாலை ஆறு மணி ஆகி விட்டது. ஏழு மணிக்கு அவள் கணவன்  ராமகிருஷ்ணன் அலுவலகத்திலிருந்து வந்தான்.

"குழந்தை எங்கே?" என்றான்.

"தூளியில் துங்குகிறது" என்றாள் புவனா. ராமகிருஷ்ணன், தூளிக்குள் தலையை விட்டு, அமைதியாகத் தூங்கும் அந்தப் பிஞ்சு முகத்தைப்  பார்த்து ரசித்தபின், உடை மாற்றிக் கொள்ள உள்ளே சென்றான்.

சற்று நேரத்தில் அழைப்பு மணி அடித்தது. புவனா கதவைத் திறந்தாள்.

செல்வி!
"குழந்தை என்ன செய்கிறது, ஆன்ட்டி?" என்றாள் செல்வி.

"தூங்குகிறது" என்றாள் புவனா.

"நான் போய் உடை மாற்றிக்கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு ஏதாவது செய்து விட்டு, இன்னும் அரைமணியில் வந்து குழந்தையை எடுத்துப் போகிறேன். அதற்குள் அது விழித்துக்கொண்டு அழுதால் வந்து எடுத்துக்கொண்டு போகிறேன்" என்றாள் செல்வி.

"மெதுவாகவே வா! குழந்தை விழித்துக்கொள்ள இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்" என்றாள் புவனா.

"ரொம்ப தாங்க்ஸ் ஆன்ட்டி! நீங்கள் இல்லாவிட்டால் என்ன செய்திருப்போம் என்றே தெரியவில்லை!"

"நான் வீட்டில் தனியாகத்தானே இருக்கிறேன்! குழந்தையைப் பார்த்துக் கொள்வதால் எனக்கும் இனிமையாகப் பொழுது போகிறது" என்றாள் புவனா.

செல்வி பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த ராமகிருஷ்ணன் "அவள் ஏன் உன்னை ஆன்ட்டி என்று கூப்பிடுகிறாள்? அக்கா என்று கூப்பிடலாமே! உனக்கும் எனக்கும் அவ்வளவு வயது ஆகி விடவில்லையே!" என்றான்.

"இல்லை. நமக்கு இன்னும் வயதாகி விடவில்லை. நமக்கும் ஒரு குழந்தை பிறக்கும். இப்போது செல்வியின் குழந்தையைக் கொஞ்சுவதைப் போல, நம் குழந்தையையும் நான் கொஞ்சுவேன்!' என்று நினைத்துக் கொண்டாள் புவனா.

இந்தக் கதையின் காணொளி வடிவம்:

குறள் 65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் 
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

பொருள்:
தம் குழந்தைகளின் உடலைத் தீண்டுவது உடலுக்கு இன்பமளிக்கும். குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்பது காதுக்கு இன்பமளிக்கும்.

66. காட்சிகள் மாறும் நாடகம்
 காட்சி 1                                                                                                            காலம்: 2005
 யாழ் 

ரமணி இல்லையா?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் சேகர்.

"இன்னும் ஆஃபீஸிலிருந்தே வரலியே!" என்றாள் ரமணியின் தாய்.

"நாளைக்கு நாரத கான சபாவில கச்சேரி இருக்கு. அதுதான் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன். அவன் ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணினேன். ஃபோன் எங்கேஜ்டாவே இருந்தது."

"என்ன கச்சேரி - புல்லாங்குழலா, வீணையா?" என்றாள் ரமணியின் தாய்.

"ஃப்ளூட்தான். சிக்கில் சிஸ்டர்ஸ். அது எப்படி கரெக்டா கேக்கறிங்க? நாங்க பாட்டுக் கச்சேரிக்குப் போறதில்லையா என்ன?"

"போவீங்க. ஆனா அதிகமா போறது ஃப்ளூட்டுக்கும், வீணைக்கும்தானே?"

"ஆமாம் ஆன்ட்டி. என்னதான் சொல்லுங்க, குழலுக்கும், வீணைக்கும் இருக்கிற இனிமையே தனிதான்"

"சரி. ரமணி வந்ததும் சொல்றேன். காப்பி சாப்பிடறயா?"

"வேண்டாம் ஆன்ட்டி."

"ஓ! நீங்கள்ளாம் செவிக்கு உணவு இல்லாதபோதுதான் வயித்துக்கு உணவு கொடுப்பீங்க இல்லே?"

"என்ன ஆன்ட்டி, திருக்குறள் எல்லாம் சொல்லி அமர்க்களப்படுத்தறீங்க!"

காட்சி 2                                                                                                            காலம்: 2015

"ரமணி இல்லையா?" என்றான் சேகர்.

"இன்னும் ஆஃபீஸிலிருந்தே வரலியே!" என்றாள் ரஞ்சனி.

"செல்லை ஆஃப் பண்ணி வச்சிருக்கான் போலருக்கு."

"டிரைவ் பண்ணிக்கிட்டிருப்பார்."

"நாளைக்கு ஆர்க்கே கன்வென்ஷன் சென்ட்டர்ல சேஷகோபாலன் வீணை இருக்கு. ரமணி வரானான்னு கேக்கணும்."

"சேஷகோபாலன் வாய்ப்பாட்டுத்தானே பாடுவார்? வீணை கூட வாசிப்பாரா என்ன?"

"எந்த அளவுக்கு அற்புதமாப் பாடுவாரோ, அந்த அளவுக்குப் பிரமாதமா வீணையும் வாசிப்பார். ரமணிக்கு அவர் வீணைன்னா ரொம்பப் பிடிக்கும்."

"அவர் இப்ப வந்துடுவாரு. அவர்கிட்டயே கேட்டுக்கங்களேன். காப்பி சாப்பிடறீங்களா?"

"வேண்டாம். முன்னெல்லாம், காப்பி வேண்டாம்னு சொன்னா, செவிக்கு உணவு இல்லாதபோதுதான் வயித்துக்கு உணவு கொடுப்பீங்களான்னு ரமணியோட அம்மா கிண்டல் பண்ணுவாங்க. ம்ம். அவங்கதான் இப்ப இல்லியே! ஆமாம் ரஞ்சனின்னு கர்நாடக ராகத்தோட பேரை உங்களுக்கு வச்சிருக்காங்க. உங்களுக்கு சங்கீதத்தில இண்ட்ரஸ்ட் இல்லையா?"

"ஏன் இல்லாம? எங்கிட்ட எவ்வளவு மியூஸிக் சிடி, காஸட் எல்லாம் இருக்குன்னு காட்டட்டுமா? எல்லாமே எம் எஸ் வியோட மியூஸிக்தான். என்னைப்  பொறுத்தவரையில கர்நாடக சங்கீதம், வெஸ்டர்ன் மியூஸிக், ஹிந்துஸ்தானி மியூஸிக், தமிழ் இசை, வேத காலத்து இசை எல்லாமே எம் எஸ் வி மியூஸிக்ல இருக்கு. என் பேரைப் பத்தி சொன்னீங்களே! ரஞ்சனிங்கற்து 'அபூர்வ ராகங்கள்' ஹீரோயினோட பேரு. அதைத்தான் என் அப்பா அம்மா எனக்கு வச்சிருக்காங்க! இதோ அவரே வந்துட்டாரே!"

"வாடா சேகர்! ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?" என்றான் ரமணி.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லே! நாளைக்கு சேஷகோபாலனோட வீணைக் கச்சேரி இருக்கு. வரியா?"

"சேஷகோபாலன் வீணை ரொம்ப அற்புதமா இருக்குமே! ஆனா என்னால வர முடியாதே!"

"ஏன்?"

"நான் அங்கே வந்தா, அதை விட முக்கியமான கச்சேரியை மிஸ் பண்ணிடுவேனே!"

"அது என்னடா கச்சேரி?" என்று சேகர் கேட்கும்போதே, அப்போதுதான் தூங்கி எழுந்திருந்த அவர்களின் ஒரு வயதுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தாள் ரஞ்சனி.

ரமணியைப் பார்த்ததும் "ப்பா, ப்பா" என்று சொல்லிக்கொண்டே அவனிடம் தாவியது குழந்தை.

"இந்தக் குழந்தையின் மழலைக் கச்சேரிதான்!" என்று குழந்தையை வாரி அணைத்துக் கொண்டான் ரமணி.

குறள் 66
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

பொருள்:
தங்கள் குழந்தைகளின் மழலைப் பேச்சைக் கேட்காதவர்கள்தான் குழல், யாழ் போன்ற இசைக்கருவிகளை இனிமையானவை என்று கூறுவர்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


67. அம்மா கணக்கு!
சுந்தர் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, ஏகாம்பரத்திடம் அவர் மனைவி சொன்னாள். "என்னங்க, பத்தாவது வரைக்கும் நம்ம பையனை கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிக்க வச்சுட்டீங்க, பைசா செலவு பண்ணாம! லெவன்த்துக்காவது அவனை வேறே நல்ல ஸ்கூல்ல சேக்கப் பாருங்க."

"அதுக்கு நமக்கு வசதியில்லையே! அதோட கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிக்கற பையங்களை பெரிய ஸ்கூல்லல்லாம் சேத்துக்கவும் மாட்டாங்க."

"அப்ப நம்ப பையன் எஞ்சினீரிங் படிக்க முடியாதா?"

"பாக்கலாம். அவன் தலையெழுத்துப்படி நடக்கும்."

"அவன் தலையெழுத்துப்படி  நடக்கணும்னா, அப்பா அம்மான்னு நாம எதுக்கு இருக்கோம்?" என்றாள் வள்ளியம்மை கோபத்துடன்.

"என்னை மாதிரி ஏழை அப்பாவுக்குப் பொறந்ததும் அவன் தலையெழுத்துதான்!"

தினொன்றாம் வகுப்புக்குப் போனதும் சுந்தர் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தினான். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் நிறைய மதிப்பெண்கள் வாங்கினான்.

"பாரு, பையன் நல்லாப் படிக்கறான். ப்ளஸ் டூல நிறைய மார்க் வாங்குவான்" என்றார் ஏகாம்பரம்.

"இதெல்லாம் போதாதுங்க. மாத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரில 198ஆவது வாங்கினாதான்  ஃபீஸ் குறைவா இருக்கற இஞ்சினீரிங் காலேஜில் இடம் கிடைக்கும்" என்றாள் வள்ளியம்மை.

"பரவாயில்லையே. என்னை விட உனக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கே!" என்றார் ஏகாம்பரம்.

"உங்களை விடன்னு சொல்லாதீங்க. உங்களுக்குத்தான் நம்ப பையனோட எதிர்காலத்தைப் பத்தி அக்கறையே இல்லையே!" என்றாள்
வள்ளியம்மை எரிச்சலுடன்.

ஒரு நாள், "என்னங்க, நம்ப பையனை கவனிச்சீங்களா? சாயந்திரம் ஸ்கூல்லேருந்து வந்ததும் எங்கேயோ போயிடறான். ராத்திரி லேட்டாத்தான் வரான். கேட்டா, ஃப்ரண்ட்ஸோட சேர்ந்து படிக்கறேங்கறான். எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு. நீங்க கொஞ்சம் கேளுங்க" என்றாள்  வள்ளியம்மை.

"பொய்யா சொல்லப் போறான்?"

"எனக்கென்னவோ ஃப்ரண்ட்ஸோட எங்கேயாவது சுத்திட்டு வரானோன்னு சந்தேகமா இருக்கு."

"நாம சொன்னா கேக்கவா போறான்? தனக்கு எது நல்லதுன்னு அவனுக்கே தெரியணும்."

"நீங்க இப்படித்தான் அக்கறை இல்லாம பேசுவீங்க. எல்லாம் என் தலையெழுத்து!" என்றாள் வள்ளியம்மை.

காலம் ஓடியது. ப்ளஸ் டூ தேர்வுகள் முடிந்து ரிசல்ட் வந்ததும் வள்ளியம்மைக்கு இன்ப அதிர்ச்சி. சுந்தர் 200, 198, 198 என்று மதிப்பெண்கள் வாங்கி இருந்தான்.

"எப்படிடா இவ்வளவு மார்க் வாங்கினே?" என்றாள் வள்ளியம்மை,  நம்ப முடியாத ஆச்சரியத்துடன்.

"அதுதான் டியூஷன் போனேனே!" என்றான் சுந்தர்.

"டியூஷனா?" என்று வள்ளியம்மை அப்பாவையும் பிள்ளையையும் மாறி  மாறிப் பார்த்தாள்.

"என்னோட ஆஃபிஸ்ல சங்கரன்னு  ஒத்தர் இருக்காரு. அவரு நெறையப்  படிச்சவர். புத்திசாலி. சுந்தருக்கு டியூஷன் எடுக்க முடியுமான்னு  அவர்கிட்ட கேட்டேன். முதல்ல அவர் தனக்கு அனுபவம் இல்லேன்னு சொன்னாரு.

"எனக்குத் தெரிஞ்ச இன்னொரு நண்பரோட பையன் போன வருஷம்தான் ப்ளஸ் டூ முடிச்சான். அவன் டியூஷன் போய்த்தான் படிச்சான். அவன் தான் படிச்ச புஸ்தகம் நோட்ஸ் எல்லாம் வச்சிருந்தான். அதையெல்லாம் வாங்கிக்கிட்டுப் போய் சங்கரன் கிட்ட கொடுத்தேன்.

"அவரும் இண்டர்நெட்ல எல்லாம் பாத்துப் பல விஷயங்களை சேகரிச்சுக்கிட்டு டியூஷன் எடுக்க ஒத்துக்கிட்டாரு. சுந்தரோட படிக்கிற சில பையன்களோட அப்பாக்கள்கிட்ட பேசி அவங்களையும் சங்கரன்கிட்ட டியூஷனுக்கு சேர்த்து விட்டேன்.

"டியூஷன் ஃபீஸ்னு எங்களால முடிஞ்சதைக் கொடுக்கறேன்னு சொன்னேன். மொதல்ல அவரு ஒத்துக்கலே. பணம் குடுத்துப் படிச்சாத்தான் பையன்களுக்குப் படிக்கணும்கற வேகம் இருக்கும்னு சொல்லி அவரைச் சம்மதிக்க வெச்சேன்.

"பணம் வாங்கினாத்தானே அவருக்கும் பொறுப்பு இருக்கும்? ஆனா அதை அவர்கிட்ட சொல்லலே! பத்து பையங்க சேர்ந்தததால அவருக்கும் வருமானம். நமக்கும் குறைந்த ஃபீஸ்ல டியூஷன் கிடைச்சது. நல்ல மார்க் வாங்கி ஒங்கிட்ட காட்டற வரையிலும் இதைப் பத்தி உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு நான் சுந்தர்கிட்ட சொல்லியிருந்தேன்.

"அவனும் ஃபிரண்ட்ஸோட படிக்கறேன்னு ஒங்கிட்ட  சொல்லிட்டு டியூஷன் போயிட்டு வந்தான்! கொஞ்சம் பேர்தான் படிச்சதினால சங்கரன் ஒவ்வொரு பையன்கிட்டேயும் அக்கறை காட்டி நல்லா சொல்லிக் கொடுத்தாரு. எல்லாருமே நல்ல மார்க் வாங்கி இருக்காங்க.

"இவங்க ஸ்கூல்ல இதுவரைக்கும் இத்தனை பேரு இவ்வளவு நல்ல மார்க் வாங்கினதே இல்லை! இவங்க வாங்கின மார்க்கைப் பாத்துட்டு,  இப்ப  சங்கரன் கிட்ட டியூஷன் படிக்க நிறைய பேரு வந்திருக்காங்க. அவரு வேலையை விட்டுட்டு டியூஷன் சென்ட்டர் ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்காரு!" என்றார் ஏகாம்பரம்.

வள்ளி வாயடைத்து நின்றாள்.

சுந்தரைப் பார்த்து ஏகாம்பரம், "நீ நல்ல மார்க் வாங்கி இருக்கறதால ஃபீஸ் குறைச்சலா உள்ள நல்ல காலேஜில் உனக்கு இடம் கிடைச்சுடும். உன் படிப்பு முடியும் வரை உனக்கு ஃபீஸ் கட்டிப் படிக்க வைக்கறது என் பொறுப்பு. நல்லாப்  படிச்சு, நல்ல மார்க் வாங்கி நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில முன்னுக்கு வர வேண்டியது உன்னோட சாமர்த்தியம்!" என்றார்.

குறள் 67
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

பொருள்:
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யக் கூடிய உதவி, அவனைக் கற்றவர் அவையில் முதன்மையான இடம் பெற வழி செய்து கொடுப்பதுதான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

68. மாதவனின் எதிர்காலம்
"நான் பள்ளிக்கூடத்துல படிச்சப்ப நான்தான்  வகுப்பிலேயே முதல் மாணவனா இருந்தேன். ஆனா நம்ப பையன் ஒரு மக்கா இருக்கானே!"  என்றான் சங்கரன்.

"ஏங்க, நம்ப பையன் எண்பது மார்க்குக்கு மேலே வாங்கறான். அவனைப் போய் மக்குங்கறீங்களே!" என்றாள் அவன் மனைவி சாந்தா.

"தொண்ணூற்றெட்டு மார்க்கு, நூறு மார்க்கெல்லாம் சாதாரணமாயிட்ட இந்தக்காலத்தில, எண்பது மார்க்குக்கெல்லாம் என்ன மதிப்பு இருக்கு?"

"டியூஷன் வச்சுப் பாக்கலாமா?"

டியூஷன் வைத்தார்கள். பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. டியூஷன் ஆசிரியரிடம் கேட்டபோது "பையன் கொஞ்சம் டல்தான் சார்!" என்றார் அவர். பள்ளி ஆசிரியர்களும் இதே கருத்தைத்தான் தெரிவித்தார்கள். 'சரி. அவ்வளவுதான். அவன் விதிப்படி நடக்கட்டும்' என்று சங்கரன் விட்டு விட்டான்.

சங்கரன் பொறியியல் படிப்புப் படித்து விட்டு, தானே ஒரு தொழிற்சாலையை உருவாக்கி நடத்திக் கொண்டிருந்தான். தனக்குப் பிறகு தன் பையன் அதை நடத்த வேண்டும் என்ற விருப்பம் அவனுக்கு இருந்தது.

எனவே மாதவனின் பள்ளிப்படிப்பு முடிந்ததும் அவனைப் பொறியியல் படிப்பில் சேர்த்தான். மாதவன் வாங்கிய எண்பது சதவீத மதிப்பெண்களுக்கு அவனுக்கு சுமாரான ஒரு கல்லூரியில்தான் இடம் கிடைத்தது, அதுவும் நன்கொடை கொடுத்து!

பையன் எப்படியோ  பொறியியல் பட்டதாரி ஆகி,ஒரு நல்ல தொழில் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்து விட்டால், அங்கே ஓரளவுக்கு அனுபவம் பெற்ற பிறகு தன்னுடைய நிறுவனத்தை நிர்வகிக்கும் திறமை பெற்று விடுவான் என்பது சங்கரனின் நம்பிக்கை.

முதல் இரண்டு ஆண்டுகளில் மாதவன் சுமாரான மதிப்பெண்கள்தான் வாங்கி வந்தான். ஆனால் மூன்றாம் ஆண்டில் பொறியியல் பாடங்களைக் கற்கத் தொடங்கியபின் அவனுக்குப் படிப்பில் அதிக ஆர்வம் வந்து விட்டதாகத் தோன்றியது. குறிப்பாக பிராஜக்ட் ஒர்க், செமினார் போன்றவற்றில் அவனுக்கு ஈடுபாடு அதிகம் இருந்தது. தன் தந்தையின் தொழிற்சாலைக்கு நான்கைந்து முறை சென்று அதன் நடைமுறைகளை கவனித்து அறிந்து கொண்டான்.

மாதவன் இறுதி ஆண்டுக்கு வந்தபோது அவன் செய்ய வேண்டிய பிராஜக்ட் ஒர்க்குக்குத் தன் தந்தையின் தொழில் நிறுவனத்தையே எடுத்துக் கொள்ள நினைத்தான் மாதவன். இதைப்பற்றி அவன் தன் தந்தையிடம் பேசியபோது, "உன் பிராஜக்டுக்கு எடுத்துக் கொள்ளப் போகும் விஷயம் என்ன?" என்று கேட்டான் சங்கரன்.

"சில தொழில் நுட்ப மாறுதல்களைச் செய்து, செயல்பாடுகளை எளிமையாக்கி, உற்பத்தித் திறனை அதிகமாக்குவது பற்றித்தான்" என்றான் மாதவன்.

"நான் வெளிநாட்டுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி என் தொழிற்சாலையை உருவாக்கியிருக்கிறேன். இப்போது வெளிநாட்டு நிறுவனத்துடனான என்னுடைய ஒப்பந்தம் முடிந்து விட்டது. ஆனாலும் அதே தொழில் நுட்பத்தை நான் தொடர்ந்து பயன்படுத்தலாம். இதில் பெரிய மாறுதல்கள் எதையும் உன்னால் செய்ய முடியாது."

"நீங்களே சொன்னபடி, இது பழைய தொழில்  நுட்பம். அதனாலதான் வெளிநாட்டு நிறுவனம் இதே தொழில் நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்த உங்களை அனுமதித்திருக்கிறது. அவர்கள் வேறு தொழில் நுட்பத்துக்கு மாறியிருப்பார்கள்!"

"அதைப் பற்றி நமக்கென்ன? இந்தத் தொழில் நுட்பம் நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு என்னால் நிற்க முடிகிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்?"

"இதற்கு மேலும் செய்யலாம் அப்பா. எனக்குச் சில யோசனைகளை இருக்கின்றன. அவற்றைச் செயல் படுத்தினால், அதிக முதலீடு செய்யாமல் நம் தொழிற்சாலையை இன்னும் நவீனமாக்கலாம். இதனால் உற்பத்தித் திறன் அதிகரித்து, தயாரிப்புச் செலவு குறையும்."

"உன் பிராஜக்டுக்காக என்ன மாறுதல்களை வேண்டுமானாலும் உன் ரிப்போர்ட்டில் சிபாரிசு செய். ஆனால் அதையெல்லாம் நடைமுறைப் படுத்த முடியும் என்று எதிர்பார்க்காதே!" என்றான் சங்கரன்.

தன் பிராஜக்டுக்காக மாதவன் தன் சகமாணவர்களுடன் பல நாட்கள் தொழிற்சாலைக்கு வந்து, தொழில் நடைமுறைகளை கவனித்து ஆராய்ந்தான். தொழிற்சாலையில் பணிபுரிந்த உயர் அதிகாரிகளிடமும், தொழிலாளர்களிடமும் பல நுணுக்கங்களைக் கேட்டறிந்தான். ஆனால் சங்கரன் இதில் எதிலும் கலந்து கொள்ளவில்லை.

மாதவனின் பிராஜக்ட் தயாரானதும், அதைக் கல்லூரியில் சமர்ப்பித்தான். அப்போதும் சங்கரன் அதைப் படித்துப் பார்க்கவில்லை.சில வாரங்களுக்குப் பிறகு, மாதவனின் பிராஜக்ட் பல்கலைக்கழக அளவில்  சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்ததும் சங்கரனுக்கு வியப்பு ஏற்பட்டது.

மாதவனிடம் பிராஜக்ட் ரிப்போர்ட் நகலை வாங்கிப் படித்துப் பார்த்தான். அதில் தெரிவிக்கப்பட்டிருந்த யோசனைகள் சங்கரனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அவை நடைமுறைக்கு ஏற்றதாகவும், லாபகரமானதாகவும்தான் தோன்றின.

மாதவனின் பிராஜக்ட் ரிப்போர்ட்டை ஒரு தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனத்திடம் கொடுத்து ஆராயச் சொன்னான். அவர்கள் அதற்குச் சில மாதங்கள் ஆகும் என்று சொன்னார்கள்.

இதற்கிடையில், மாதவனுக்கு காம்பஸ் இன்டர்வியூவில் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அவனுடைய படிப்பு முடிந்ததும், வெளியூரிலிருந்த அந்த நிறுவனத்துக்கு அவன் வேலைக்குச் சென்று விட்டான்.

ங்கரன் அணுகியிருந்த தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனம் அவன் தொழிற்சாலைக்குப் பொறியியல் வல்லுநர்களை அனுப்பி மாதவனின் பிராஜக்ட் ரிப்போர்ட் பற்றி ஆய்வு செய்து, தனது கருத்தைத் தெரிவிக்க ஆறு மாதங்கள் ஆகி விட்டன.

மாதவனின் பிராஜக்டை நிச்சயம் அமல் படுத்தலாம் என்று கருத்துத் தெரிவித்திருந்த அந்த நிறுவனம், அதை எப்படிச் செயல் படுத்தலாம் என்று சில ஆலோசனைகளையும் கூறியிருந்தது. சில லட்சங்களும், பல மாதங்களும் செலவழிந்திருந்தாலும், நம்பிக்கையுடன் செயல்பட அந்த ரிப்போர்ட் சங்கரனுக்கு உதவியாக இருந்தது.

சங்கரன் ஒரு முடிவுக்கு வந்தான். மாதவனிடம் தொலைபேசியில் பேசினான். "டேய் மாதவா! ஒன்னோட பிராஜக்ட் பிரமாதமா இருக்குன்னு நம்ப கன்சல்டன்ட் சொல்லிட்டாங்க. அதை நான் உடனே செயல்படுத்தலாம்னு இருக்கேன்"

"ரொம்ப சந்தோஷம் அப்பா. எனக்கு முதலிலிருந்தே நம்பிக்கை இருந்தது."

"கரெக்ட். ஆனா ஒரு பெரிய மாறுதலைப் பண்றதுக்கு முன்னால நிபுணர்கள்கிட்ட ஆலோசனை கேக்கறது அவசியம் இல்லையா? சரி. இப்ப நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். நீ தயாரிச்ச பிராஜக்டை நீயே செயல் படுத்தணும்னு நினைக்கிறேன். நீ வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துடு."

"இல்லைப்பா. இங்கே கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. இப்பதான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். நீங்க முன்னால சொன்னபடி நான் ஒரு பெரிய கம்பெனில நாலைஞ்சு வருஷமாவது வேலை செஞ்சுட்டு அதுக்கப்பறம் நம்ப கம்பெனிக்கு வந்தா என்னோட அனுபவம் நமக்கு உதவியா  இருக்கும்.

"நான் அப்பப்ப லீவுல அங்கே வரும்போது, சும்மா ஃபேக்டரிக்கு வந்து எல்லாம் எப்படி இருக்குன்னு பாத்துட்டுப் போறேன். எப்ப எனக்கு ஓரளவுக்காவது அனுபவம் கெடைச்சிருக்குன்னு எனக்குத் தோணுதோ, அப்ப வந்து நம்ப கம்பெனியில சேந்துக்கறேன்!" என்றான் மாதவன்.

தொலைபேசியை வைத்து விட்டு சங்கரன் சற்று நேரம் யோசனையில் இருந்தான்.

"என்ன யோசிக்கிறீங்க?" என்றாள் மனைவி.

"நான் சொந்தமாத் தொழில் ஆரம்பிச்சு வெற்றிகரமா நடத்திக்கிட்டு வரதால என்னை ஒரு புத்திசாலின்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். ஆனா நம்ப புள்ள என்னை விட ரொம்ப புத்திசாலியா இருக்கான்!" என்றான் சங்கரன்.

"முன்னேயெல்லாம் அவனை மக்குன்னு சொல்லுவீ ங்களே?" என்று குத்திக் காட்டினாள் மனைவி.

"அவன் மக்கு இல்லை. நான்தான் மக்கு" என்றான் சங்கரன் பெருமிதத்துடன்.

குறள் 68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

பொருள்:
தாம் பெற்ற பிள்ளைகள் தங்களை விட அறிவுள்ளவர்களாக இருப்பது இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இனிமை பயக்கக் கூடியது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


69. உதவித்தொகை 
கணவனை இழந்தபின் அம்முலுவுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவள் மகன் கண்ணன்தான். 

கண்ணனுக்கு மூன்று வயது ஆகியிருந்தபோதே அவள் கணவன் வேலுச்சாமி தண்ணீர் லாரியில் அடிபட்டு இறந்து விட்டான்.

அரசாங்கத்தில் இழப்பீடு என்று ஏதோ ஒரு சிறு தொகை கொடுத்தார்கள். அதை வங்கியில் போட்டு அதிலிருந்து வந்த வட்டியிலும் வீட்டு வேலை செய்து கிடைத்த வருமானத்திலும் மகனை வளர்த்து வந்தாள் அம்முலு.

ஒரு வழியாகக் கண்ணனின் பள்ளிப்படிப்பு முடிந்து அவனைப் பொறியியல் கல்லூரியிலும் சேர்த்து விட்டாள். கண்ணன் பெற்ற நல்ல மதிப்பெண்களால் அவனுக்கு அரசுக் கல்லூரியிலேயே இடம் கிடைத்தது. அரசுக்கல்லூரி என்பதால் கட்டணம் குறைவுதான்.

எப்படியும் நான்கு வருடங்கள் சமாளித்து விடுவாள். அப்புறம் அவன் படிப்பு முடிந்து ஒரு நல்ல வேலையும் கிடைத்து விட்டால், அவள் பட்ட கஷ்டங்களுக்குப் பலன் கிடைத்து விடும்.

ண்ணன் இரண்டாவது ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு செய்தி சொன்னான். ஒரு அறக்கட்டளையில் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறார்களாம். முதல் ஆண்டுப் பரிட்சையில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், அவன் கல்லூரியிலிருந்து எட்டு பேருக்கு அந்த உதவித்தொகை கிடைக்குமாம்.

கண்ணன் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவன் எட்டாவது இடத்தில் இருப்பதால், அவனுக்கு அந்த உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகச் சொன்னான். அந்த உதவித்தொகை கிடைத்து விட்டால், கல்லூரிக்குக் கட்ட வேண்டிய கல்விக் கட்டணத்தை அந்த அறக்கட்டளையே செலுத்தி விடும்.

இதைக் கேட்டதும் அம்முலுவுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்பட்டன. என்னதான் குறைவான கட்டணம் என்றாலும், அதைக் கட்டுவதும் அவளுக்கு சிரமம்தான். தான் வேலை செய்கிற இடங்களில் முன்பணம் கேட்டு வாங்கிக் கல்லூரிக் கட்டணத்தைக் கட்டி வந்தாள். பிறகு மாதாமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்வார்கள்.

முதல் செமிஸ்டர் கட்டணம் கட்டுவதற்காகக் கடன் வாங்கி அந்தக் கடன் தீரும் சமயத்தில் இரண்டாவது செமிஸ்டருக்கான கட்டணம் கட்டும் நேரம் வந்து விட்டது. இனி இந்த சிரமம் இருக்காது. வீட்டுச் செலவுக்குப் பணம் சற்று தாராளமாகவே இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள்.

"சீக்கிரமே அதற்கு மனுப் போட்டு விடு" என்றாள் அம்முலு. "இன்றைக்கே அப்ளை பண்ணி விடுகிறேன்" என்றான் கண்ணன்.

ஆனால் ஒரு மாதம் கழித்து கண்ணன், "அம்மா, அந்த ஸ்காலர்ஷிப் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு ரேங்க் தள்ளிப் போய் விட்டது. எட்டு பேருக்குத்தான் கொடுத்தார்கள். நான் ஒன்பதாவது இடத்தில்தான் இருக்கிறேனாம்" என்றான்.

அம்முலுவுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், "பரவாயில்லை விடு. இதை எதிர்பார்த்தா உன்னை நான் கல்லூரியில் சேர்த்தேன்? நீ கிடைக்கும் என்று சொன்னதால் கொஞ்சம் எதிர்பார்த்தேன். இல்லாவிட்டால் இந்த ஏமாற்றம் கூட இருந்திருக்காது" என்றாள்.

தாய் இந்த ஏமாற்றத்தை இயல்பாக எடுத்துக் கொண்டதைப் பார்த்த கண்ணனின் கண்களில் நீர் முட்டியது.

சில நாட்கள் கழித்து, கண்ணன் தன் தாயிடம் வந்து "அம்மா உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்" என்றான்.

"சொல்லு" என்றாள் அம்முலு, பையன் யாரையாவது காதலிப்பதாகச் சொல்லப் போகிறானோ என்ற கவலையுடன்.

"நான் உன்னிடம் பொய் சொல்லி விட்டேன்"

"பொய்யா? என்ன அது?"

"எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை என்று சொன்னேனே அது பொய். நான் அப்ளை பண்ணவே இல்லை."

"ஏன்? நம் குடும்பம் இருக்கும் நிலை உனக்குத் தெரியாதா? அது கிடைத்திருந்தால் நமக்குப் பெரிய உதவியாக இருந்திருக்குமே!"

"எனக்குத் தெரியும் அம்மா. நான் எட்டாவது இடத்தில்தான் இருந்தேன். நான் அப்ளை பண்ணியிருந்தால் எனக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். எனக்கு அடுத்தபடியாக ஒன்பதாவது இடத்தில் இருந்த பையனுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் விண்ணப்பம் போடாமல் இருந்து விட்டேன்.

"அவன் அப்பா ஒரு குடிகாரர். அவனுக்கு ஃபீஸ் கட்டுவதற்காக அவன் அம்மா யாரிடமாவது கடன் வாங்கி வைத்திருந்த பணத்தைக் கூட எடுத்துக் குடித்து விடுவார். நம்மை விட அவன் மிகவும் கஷ்டப்படுகிறவன். இப்போது இந்த ஸ்காலர்ஷிப் அவனுக்குக் கிடைத்து விட்டதால், ட்ரஸ்டே ஃபீஸ்  கட்டி விடும். அவன் அப்பாவின் தொல்லையால் அவன் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கும். உனக்கும் கஷ்டம்தான். நான் கல்லூரி விட்டு வந்ததும் ஏதாவது கடையில் வேலை செய்து கொஞ்சம் பணம் சம்பாதிக்கப் பார்க்கிறேன்" என்றான் கண்ணன்.

அம்முலு கோபமாகக் கத்துவாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவள் கண்களில் கண்ணீர் மல்க நின்றாள். சற்று நேரம் பேச்சு வரவில்லை.

விசும்பிக்கொண்டே, "ராஜா! ஒன்னை நெனச்சா எனக்குப் பெருமையா இருக்குடா. நாம கஷ்டத்துல இருக்கும்போதும் நம்மளை விட அதிகமா கஷ்டப்படறவங்களுக்காக விட்டுக் கொடுத்திருக்கியே, இந்த மனசு யாருக்குடா வரும்? எத்தனை படிப்புப் படிச்சாலும் இப்படிப்பட்ட சிந்தனை அந்தப் படிப்பினால் வராதுடா.

"நீ வேலையெல்லாம் ஒண்ணும் செய்ய வேண்டாம். இத்தனை நாள் பாத்துக்கிட்ட மாதிரி, இனிமேயும் நான் பாத்துக்கறேன். இன்னும் மூணு வருஷந்தானே? ஓடிடும்! நீ செஞ்சிருக்கிற காரியத்தை மனசில நெனச்சுக்கிட்டிருந்தாலே எனக்குப் பெரிய தெம்பு வந்துடும்" என்று சொல்லித் தன்  மகனின் கன்னத்தை அழுந்தக் கிள்ளினாள் அம்முலு.

குறள் 69
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய்.

பொருள்:
ஒரு தாய் தன் மகன் ஒரு உயர்ந்த மனிதன் என்று அறியும்போது, அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விட மிக அதிகமான மகிழ்ச்சியை அடைவாள்.  

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


70. 
கடன் பெற்றார் நெஞ்சம்
"அப்பா! எங்க ஹெட்மாஸ்டர் ஒன்னை வரச் சொன்னார்" என்றான் சிவகுமார்.

"எதுக்குடா?" என்றான் மாணிக்கம் வாயிலிருந்து பீடியை எடுக்காமலேயே.

"தெரியலப்பா. நாளைக்கு ஸ்கூலுக்கு வந்து பாத்துட்டுப் போயிடேன்."

"நான் என்ன ஒங்க எட்மாஸ்டர் மாதிரி ரூமுக்குள்ள ஒக்காந்து பொழுதைப்  போக்கிட்டிருக்கவனா? வெய்யில்ல  நாலு எடம் சுத்தினாத்தானே உனக்கும் உன் அம்மாவுக்கும் சோறு போட முடியும்?"

"காலையில வண்டிய எடுத்துக்கிட்டு நேரா ஸ்கூலுக்கு வந்து எங்க எச் எம்மைப் பாத்துட்டு அப்புறம் நீ போக வேண்டிய  எடத்துக்குப் போயிக்கயேன்."

"நீயெல்லாம் எனக்கு புத்தி  சொல்ற அளவுக்கு இருக்கு என் நிலைமை!" என்று மாணிக்கம் சலித்துக் கொண்டாலும், மகன் சொன்னபடி செய்தான்.

சிவகுமார் படித்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. அங்கே பத்தாம் வகுப்பு வரை கல்வி இலவசம்தான். ஆனால் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு ஐயாயிரம் ரூபாய் கட்டணம் உண்டு. பத்தாம் வகுப்பு படிக்கும் சிவகுமார் நன்றாகப் படிப்பதால் அவன் பதினொன்றாம் வகுப்பில் தொடர வேண்டும் என்பது அவன் தலைமை ஆசிரியரின் விருப்பம்.

எப்படியாவது பணம் கட்டி சிவகுமாரைப் பதினொன்றாம் வகுப்பில் சேர்த்து விட்டால், சில மாதங்களில் அவனுக்கு ஏதாவது ஸ்காலர்ஷிப் ஏற்பாடு செய்து விடுவதாகத் தலைமை ஆசிரியர் மாணிக்கத்திடம் சொன்னார். கட்டிய பணம் திருப்பிக் கிடைப்பதுடன், அடுத்த ஆண்டு பணம் கட்ட வேண்டியிருக்காது என்றும் அவர் விளக்கினார்.

ஆனால் மாணிக்கம் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பழைய வீட்டுப்பொருட்களை வாங்கி விற்கும் அவன் வியாபாரத்துக்காகத் தள்ளுவண்டி வாங்கவும், பொருட்கள் கொள்முதல் செய்யவும் என்று ஏற்கெனவே வட்டிக்குப் பணம் வாங்கியிருக்கும் நிலையில் மேலும் கடன்பட அவன் விரும்பவில்லை.

பழைய  வீட்டுப்பொருட்களை  அவன் பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும். ஆனால் அவனிடம் பொருட்களை வாங்கும் மொத்த வியாபாரிகள் அவனுக்கு இரண்டு மூன்று மாதம் கழித்துத்தான் பணம் கொடுப்பார்கள். அவன் பணம் கொடுத்து வாங்கி வைத்திருக்கும் சில பொருட்களை அவர்கள் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். இதனால் அவன் கடன் வளர்ந்து கொண்டே போய் வருமானத்தில் பெரும் பகுதி வட்டிக்கே போய்க் கொண்டிருந்தது.

'இதில் பையனைப் படிக்க வேறு கடன் வாங்க வேண்டுமாக்கும்!' என்று அலுத்துக் கொண்டான் மாணிக்கம்.

சிவகுமார் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியதுமே, அவனைத் தன்னுடன் வியாபாரத்தில் சேர்த்துக்கொண்டு விட்டான் மாணிக்கம். தேர்வு முடிவுகள் வந்து சிவகுமார் பள்ளியிலேயே இரண்டாவது அதிக மதிப்பெண்கள் வாங்கியிருந்தான் என்ற செய்தி வந்தபோது சிவகுமார் வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தான்.

ஒரு வருடத்திலேயே சிவகுமார் தொழிலில் தேர்ச்சி பெற்று விட்டான். பையன் உற்சாகமாக வேலை செய்வதைப் பார்த்த மாணிக்கம் இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி, பையனுக்கு ஒரு வண்டி வாங்கி கொடுத்து அவனை வேறு பகுதியில் தனியாக வியாபாரம் செய்யச் சொல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று மாணிக்கத்தின் இடது காலில் வலி ஏற்பட்டு அவனால் நடக்க முடியாமல் போய் விட்டது.

மாணிக்கம் நாட்டு வைத்தியம், புத்தூர்க்கட்டு போன்ற சிகிச்சை முறைகளில் ஈடுபட்டிருக்க, சிவகுமார் தனியாகவே வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டான்.

ஏழெட்டு மாதங்கள் ஒடி விட்டன. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும், மாணிக்கத்தின் கால் குணமாகவில்லை. வீட்டுக்குள் மட்டும் நடமாடிக் கொண்டிருந்ததால் வலி அதிகம் இல்லாமல் இருந்ததே தவிர, வெளியே எங்கேயும் செல்ல முடியவில்லை.

சிவகுமார் வியாபாரத்தை நன்றாகவே கவனித்துக்கொண்டு வந்ததாகத் தோன்றியது. கடன் குறைந்து கொண்டு வருவதாகச் சொன்னான். வேறு சில மொத்த வியாபாரிகள் தொடர்பு கிடைத்திருப்பதால் லாபம் அதிகம் வருவதாகவும் அவன் சொன்னான். 'பரவாயில்லை, பையன் பிழைத்துக் கொள்வான்' என்று மாணிக்கம் ஆறுதல் அடைந்தான்.

ஒருநாள் சிவகுமார் ஒரு டாக்சியை அழைத்துக்கொண்டு வந்தான். "அப்பா! டவுன் ஆஸ்பத்திரியில டாக்டர்கிட்ட பேசியிருக்கேன். உன் காலை குணப்படுத்திடலாம்னு சொன்னாரு. வா போகலாம்" என்றான்.

'நான் பார்க்காத ஆஸ்பத்திரியா?' என்று நினைத்துக்கொண்ட மாணிக்கம் பையனின் ஆசையைக் கெடுக்க வேண்டாமே என்று நினைத்து அவனுடன் கிளம்பினான்.

"என்னடா இது? தர்ம ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டு வருவேன்னு பாத்தா, இந்த ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்க? இது பணம் புடுங்கற ஆஸ்பத்திரியாச்சே!" என்றான் மாணிக்கம் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்ததும்.

"அப்படி ஒண்ணும் இல்லப்பா. இங்க நல்லா பாப்பாங்க" என்று சொல்லி விட்டு உள்ளே போன சிவகுமார் சில நிமிடங்களில் திரும்பி வந்தபோது, அவனுடன் ஒரு ஸ்ட்ரெச்சரைத் தள்ளியபடி இரண்டு ஊழியர்கள் வந்தனர்.

ஒரு வாரம் கழித்து மாணிக்கம் வீடு திரும்பியபோது அவன் கால்வலி குணமாகியிருந்தது. ஒரு மாதம் வீட்டில் ஓய்வெடுத்த பிறகு அவனால் நன்றாகவே நடக்க முடிந்தது. ஆஸ்பத்திரிக்கு எவ்வளவு செலவு ஆயிற்று என்று எவ்வளவு கேட்டும் சிவகுமார் சொல்லவில்லை.

தன்னால்தான் நன்றாக நடக்க முடிகிறதே, இன்னொரு வண்டி வாங்கித் தானும் வியாபாரத்தில் ஈடுபடலாம் என்று நினைத்துத் தனக்கு வழக்கமாகக் கடன் தரும் குமரேசன் வீட்டுக்குப் போனான் மாணிக்கம்.

மாணிக்கம் கடன் கேட்டதும், குமரேசன் கொஞ்சம் யோசித்தான்.

"என்னங்க யோசனை? என் பையன் கடனைக் கட்டிக்கிட்டு வரான் இல்ல? இப்ப எவ்வளவு பாக்கி இருக்கு?" என்றான் மாணிக்கம்.

"பழைய கடன் முழுக்கக் கட்டிட்டான். ஆனா மறுபடியும் அம்பதாயிரம் ரூபா கடன் வாங்கியிருக்கானே!" என்றான் குமரேசன்.

பழைய கடனை மகன் முழுவதுமாக அடைத்து விட்டான் என்பது மாணிக்கத்துக்கு வியப்பை அளித்தாலும், புதிதாக ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருப்பது அதிர்ச்சியளித்தது.

"எனக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுக்கறத்துக்கே யோசிப்பீங்களே, என் பையனுக்கு எப்படி அம்பதாயிரம் ரூபாயைத் தூக்கிக் குடுத்தீங்க? அதோட அவனுக்கு இன்னும் 18 வயசு ஆகலியே? எப்படிப் பத்திரம் எல்லாம் வாங்கினீங்க?"

"அதையெல்லாம் பாக்காம இருந்திருப்பேனா?  இன்னும் அஞ்சாறு மாசத்துல உன் பையனுக்குப் பதினெட்டு வயசு ஆயிடும். அப்ப வேற பத்திரம் வாங்கிக்கறேன்! பத்திரம் எல்லாம் ஒரு நம்பிக்கைக்குத்தானே? நான் என்ன கோர்ட்டுக்கா போகப் போறேன்? உன் பையனால இந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியும்ங்கற நம்பிக்கையிலதான் கடன் கொடுத்தேன்."

"எப்படி வந்தது இந்த நம்பிக்கை?'

"என்னப்பா இப்படிக் கேக்கறே? நீ பழைய வீட்டுச்சாமான்களை வாங்கி வித்துக்கிட்டிருந்தே. உன்  பையன் வீடுகள், ஆஃபீஸ்களிலிருந்து  பழைய கம்ப்யூட்டர்களை ஸ்க்ராப் விலைக்கு வாங்கி அவன் நண்பன் ஒத்தன் மூலமா அதையெல்லாம் ரிப்பேர் பண்ணி குறைஞ்ச விலைக்கு வித்து நல்ல லாபம் சம்பாதிக்கிறான்! அதோட அவன் விக்கறது எல்லாத்துக்கும் உடனே பணம் வந்துடுது. அதனால பணப் புழக்கமும் அதிகம். அதனாலதானே உன்னோட கடனையெல்லாம் இவ்வளவு சீக்கிரமா அடைக்க முடிஞ்சுது?"

"ஆனா அம்பதாயிரம் ரூபா பெரிய தொகை இல்லையா?"

"ஆமாம். என்ன, பெரிய தொகைங்கறதால, அதை அடைக்கக் கொஞ்சம் டயம் அதிகமா ஆகும். ஆனா ஒரு நல்ல காரியத்துக்காகத்தானே கேக்கறாங்கறதுனாலதான் கொடுத்தேன்."

"என்ன நல்ல காரியம்? வியாபாரத்தை அபிவிருத்தி பண்ணத்தானே கேட்டான்? அதுக்கு எதுக்கு இவ்வளவு பணம்?"

"என்னப்பா, ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்கற? உன் வைத்தியச் செலவுக்குத்தானே அவன் கடன் கேட்டான்? அதனாலதான் நானும் தயங்காம கொடுத்தேன்? ஆனா உன் பையன் கெட்டிக்காரன். கடன் வாங்கி ஒரு மாசத்துக்குள்ளயே ஐயாயிரம் ரூபா கட்டிட்டான். வட்டி ரெண்டாயிரம் போக அசல்லியே மூவாயிரம் ரூபா குறைஞ்சுடுச்சே!

"வியாபாரத்தில கெட்டிக்காரனா இருக்கறது இருக்கட்டும். அப்பா கால் சரியாகணும்கறதுக்காக நிறைய ஆஸ்பத்திரிக்குப் போய் விசாரிச்சு, நல்ல டாக்டர் யாருன்னு கண்டுபிடிச்சு, அவர்கிட்டே பேசி, செலவு விவரம்லாம் கேட்டுக்கிட்டு, அம்பதாயிரம் ரூபா கடன் வாங்கி வைத்தியம் பாத்திருக்கானே, இப்படி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்கு நீ ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணியிருக்கணும்ப்பா!"

பையன் படிப்புக்கு ஐயாயிரம் ரூபாய் செலவழிக்க விருப்பமில்லாமல் அவனைத் தொழிலில் இழுத்து விட்டதை  நினைத்துக் கொண்டான் மாணிக்கம்.

குணமாகியிருந்த காலில் மீண்டும் வலி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.

குறள் 70
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.

பொருள்:
'இவனைப் பிள்ளையாகப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ?' என்று மற்றவர்கள் புகழும் நிலையை ஏற்படுத்துவதுதான் ஒரு மகன் தன்  தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















No comments:

Post a Comment