About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, January 30, 2018

125. காடாறு மாதம்!

"பி.ஈ படிச்சுட்டு அவன் அவன் அம்பதாயிரம், ஒரு லட்சம்னு சம்பளம் வாங்கறான். நமக்கு என்னடான்னா பிச்சை போடற மாதிரி பத்தாயிரம் ரூபா ஸ்டைபெண்ட் கொடுக்கறாங்க. என்ன பொழைப்புடா இது?" என்று அலுத்துக் கொண்டான் சுகுமார்.

"இது ட்ரெயினிங் பீரியட்தானே? தங்க இடம் கொடுத்து, சாப்பாடு போட்டு, அதுக்கு மேல பத்தாயிரம் ரூபா கொடுக்கறாங்களே, அது போதாதா?" என்றான் ராம்குமார்.

"உன்னை மாதிரி பிச்சைக்காரனுக்கெல்லாம் இது பெரிய தொகையா இருக்கலாம். என்னை மாதிரி ராயல் ஃபேமிலில பொறந்து வளர்ந்தவங்களுக்கெல்லாம் இது ஒரு பிச்சைக்காசுதான். தண்ணி அடிக்கறதை விடு, சிகரெட்டுக்குக் கூடப் பத்தாதே இது!" என்றான் சுகுமார்.

"ஆறு மாசத்துக்குத்தானே இந்த ஸ்டைபெண்ட்? அப்புறம்தான் அம்பதாயிரம் சம்பளம் வருமே நமக்கு?" என்றேன் நான் சமாதானமாக, ராம்குமாரைப் பார்த்தபடி.

எங்கெங்கோ படித்து விட்டு, இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபின் அறிமுகம் ஆனவர்கள் நாங்கள். இந்த நிலையில் சுகுமார் ராம்குமாரைப் பிச்சைக்காரன் என்று தூக்கி எறிந்து பேசியது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் ராம்குமார் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதாது போல் மௌனமாக இருந்து விட்டான்.

"இந்தக் காட்டில ஒரு ட்ரெயினிங் ஸ்கூல் கட்டி, அதில நம்மளைத் தங்க வச்சிருக்காங்க. ஆறு மாசம் ஜெயில் வாழ்க்கைதான் நமக்கு. ஞாயித்துக்கிழமை ஒரு நாள்தான் ஜெயில் கைதிகள் பரோல்ல போற மாதிரி வெளியில போயிட்டு வர முடியும்!" என்று புலம்பினான் சிவசு என்கிற சிவசுப்பிரமணியன்.

று மாதங்கள் ஓடி விட்டன. எங்கள் பயிற்சிக் காலம் முடிந்தது. விடுதியில் கடைசி நாள். அனைவரும் ஒன்று கூடி இருந்தோம்.

"ஆறு மாசத்துல அறுபதாயிரம் ரூபா மொத்த சம்பளம்! ஒரே மாசத்துல சம்பாதிக்க வேண்டிய தொகை இது. என்ன செய்யறது? நீங்கள்ளாம் என்ன பண்ணினீங்களோ தெரியாது. நான் மாசா மாசம் எங்கப்பாகிட்டேயிருந்து செலவுக்குப் பத்தாயிரம் ரூபா வாங்கினேன்!" என்றான் சுகுமார்.

"நான் அவ்வளவு மோசம் இல்ல. அறுபதாயிரம் ரூபாயில ஒரு இருபதாயிரம் ரூபாய் மிச்சம் பிடிச்சிருக்கேன்" என்றேன் நான்.

ஒவ்வொருவரும் தாங்கள் சேமித்த தொகை எவ்வளவு என்று சொன்னார்கள். கடைசியாக ராம்குமார் என்ன சொல்லப் போகிறான் என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"நானும் கொஞ்சம் மிச்சம் பிடிச்சிருக்கேன்" என்றான் ராம்குமார்.

"கொஞ்சம்னா, எவ்வளவு?"

"இங்க செலவு என்ன இருக்கு? லாண்டரி கூட ஃப்ரீதானே? மாசம் ஆயிரம் ரூபா செலவானா அதிகம். மீதி சுமார் அம்பத்தஞ்சாயிரம் ரூபா அப்படியே பேங்க் அக்கவுண்ட்டிலதான் இருக்கு!" என்றான் ராம்குமார்.

"கஞ்ச மகாப் பிரபுன்னு உனக்குப் பட்டம் கொடுக்கலாம்டா! உனக்கெல்லாம் எதுக்கு சம்பளம்? சாப்பாடு போட்டுட்டா போதும், நாய் மாதிரி உழைக்கத் தயாரா இருப்ப போலருக்கு!" என்றான் சுகுமார் எரிச்சலுடன்.

"சுகுமார்! திஸ் இஸ் டூ மச்! ராம்குமார் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருக்கலாம். அதனால சிக்கனமா இருக்கறது அவனுக்கு இயல்பா இருக்கலாம். இதுவரையிலும் அவன் தன் குடும்பத்தைப் பத்திஎதுவுமே சொன்னதில்லை. அவனை மட்டமாப் பேசறது தப்பு" என்றேன் நான்.

"நான் ஒண்ணும்  தப்பா சொல்லலியே! அவனுக்குப் பணமே அவசியம் இல்லேன்னு சொன்னேன். அவ்வளவுதான்" என்றான் சுகுமார்.

"சரி. ஹாஸ்டல் வாழ்க்கை இன்னியோட முடிஞ்சு போச்சு. இனிமே நாம சென்னையிலதான் தங்கப் போறோம். என் வீடு மாம்பலத்தில இருக்கு. உன் வீடு எங்கே இருக்கு?" என்றேன் ராம்குமாரிடம்.

"எம் ஆர் சி நகர்" என்றான் ராம்குமார்.

"அது மேட்டுக்குடி ஏரியா ஆச்சே! அங்க எங்கே தங்கப் போறே நீ? ஐயப்பன் கோவில் வாசலிலேயா?" என்றான் சுகுமார் இளக்காரமாக.

"உன் அப்பா என்ன செய்யறாரு?" என்றேன் நான்.

"ஒரு கம்பெனியில வேலை செய்யறாரு?"

"என்ன வேலை? எந்தக் கம்பெனி?"

"மேனேஜிங் டைரக்டர். நம்ப கம்பெனியிலதான்!" என்றான் ராம்குமார், அமைதியாக.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பொருள்:  
பணிவு என்பது அனைவருக்கும் ஏற்ற பண்பு. அதிலும் செல்வம் படைத்தவர்களிடம் இருக்கும் பணிவு அவர்களுக்கு இன்னொரு செல்வமாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 124 
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்

















Wednesday, January 17, 2018

124. அரசியல் பிரவேசம்!

"இன்னிக்கு நடிகர் சௌம்யன் தன்னோட அரசியல் பிரவேசத்தைப் பத்தி அறிவிக்கிறதா சொல்லியிருக்காரே! என்ன முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறீங்க?" என்றான் சங்கர்.

"இதில என்ன சந்தேகம்? அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேன்னுதான் அறிவிப்பார். அரசியல்ல இறங்கப் போறதில்லன்னு சொல்றதா இருந்தா சாதாரணமா சொல்லி இருப்பாரே! இது மாதிரி தேதி எல்லாம் கொடுத்து அறிவிக்கிறதுன்னா அரசியல்ல குதிக்கப் போறதாத்தான் அர்த்தம்" என்றான் நடராஜ்.

இருவருமே பத்திரிகை நிருபர்கள். வெவ்வேறு பத்திரிகைகளில் பணியாற்றினாலும் அடிக்கடி சந்தித்துத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

"அவரு அப்படிப் பண்ணினாருன்னா எனக்கு அவர் மேல இருக்கிற மதிப்பு கொஞ்சம் குறைஞ்சுடும்!" என்றான் சங்கர்.

"ஏன் அவர் அரசியலுக்கு வரது உங்களுக்குப் பிடிக்கலியா?" என்றான் நடராஜ்.

"எனக்குப் பிடிக்கிறது, பிடிக்கலைங்கறது விஷயம் இல்ல. இத்தனை வருஷமா அவரு சினிமாவைத் தவிர மத்த விஷயங்கள்ள மூக்கை நுழைக்காம ரொம்ப கண்ணியமா நடந்துக்கிட்டிருக்காரு. 

"சினிமாவில கூட தனக்கு நடிப்பைத் தவிர வேற எதுவும் தெரியாது, நடிப்பில் கூட தான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்குன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு வந்திருக்காரு. 

"இப்ப சில பேரு அவர் அரசியலுக்கு வரணும்னு சொல்றதுனால அவர் அப்படி ஒரு முடிவை எடுத்தா, அது தன்னோட திறமைகள் என்ன, எல்லைகள் என்னன்னு கவனமா சிந்திச்சு இத்தனை வருஷமா அவர் நடந்துக்கிட்டதுக்கு முரணாக இருக்கும்கறது என்னோட கருத்து."

"பாக்கலாம் என்ன செய்யப் போறார்னு! இன்னும் ஒரு மணி நேரத்தில தெரிஞ்சுடப் போகுது!"

டிகர் சௌம்யனின் ஊடக சந்திப்பு ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பெரிய மண்டபம் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களால் நிரம்பி வழிந்தது.

சரியாகக் காலை 11 மணிக்கு சௌம்யன் பேச ஆரம்பித்தான்.

"உங்களை எல்லாம் இந்த மண்டபத்துக்கு வரவழைச்சதுக்கு நீங்க என்னை மன்னிக்கணும். நான் இந்த அறிவிப்பை என் வீட்டில இருந்துக்கிட்டே ஒரு அறிக்கையா வெளியிட்டிருக்கலாம். ஆனா சில விஷயங்களைத் தெளிவா, விளக்கமா சொல்லணும்னுதான் இந்த ஊடக சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணினேன்.

"நான் அதிகம் படிக்கல. நான் வேலைக்குப் போயிருந்தா, எனக்கு ஏதாவது சின்ன வேலைதான் கிடைச்சிருக்கும். ஏதோ, என்னோட அதிர்ஷ்டம், நண்பர்களோட விளையாட்டா நாடகங்கள்ள நடிச்சுக்கிட்டிருந்தேன். 

"மரியாதைக்குரிய டைரக்டர் நாராயணன், நான் நடிச்ச ஒரு நாடகத்தைப் பாத்துட்டு, எனக்கு சினிமாவில வாய்ப்புக் கொடுத்தார். என்னோட நடிப்பு மக்களுக்குப் பிடிச்சதனால நான் ஒரு பெரிய நடிகனாயிட்டேன்! 

"ஆனா இப்பவும், என்னை விட நல்லா நடிக்கக் கூடிய பல நடிகர்களோட நடிப்பைப் பாத்து மனசுக்குள்ள 'இவங்களோட நடிப்புக்கெல்லாம் முன்னே என் நடிப்பு எம்மாத்திரம்!'னு அடிக்கடி நெனச்சுக்கிட்டுத்தான் இருப்பேன். இதை நான் பல தடவை வெளியிலேயும் சொல்லி இருக்கேன்.

"நான் ஒரு கார் தயாரிக்கிற தொழில்ல ஈடுபடப் போறேன்னு சொன்னா, எல்லாரும் என்ன சொல்லுவாங்க? வங்கியில் போயி கடன் கேட்டா, அவங்க என்ன சொல்லுவாங்க? 'உங்களுக்கு இந்தத் தொழில்ல என்ன அனுபவம் இருக்கு?'ன்னு கேக்க மாட்டாங்களா?

"ஆனா நான் ஏதாவது ஒரு காரோட விளம்பரப் படத்தில் நடிச்சு 'இதுதான் மிகச் சிறந்த கார்'னு சொன்னா, என் பேச்சை நம்பி சில பேர் அந்தக் காரை வாங்கலாம்! 'காரைப்பத்தி உனக்கு என்ன தெரியும்?'னு அப்ப யாரும் கேக்க மாட்டாங்க! அதுதான் நடிகனா இருக்கிறதில ஒரு அட்வான்ட்டேஜ்! 

"ஆட்டோமொபைல் எஞ்சினீரிங் படிச்ச ஒருத்தர், காரைப் பத்தி நல்லா ஆராய்ந்து, இந்தக் காரோட அமைப்பு ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றதை விட, காரைப் பத்தி எதுவுமே தெரியாத நான் சொல்ற கருத்துக்கு அதிக மதிப்பு இருக்கும்! இது தப்பு இல்லியா? அதனாலதான் நான் விளம்பரப் படங்கள்ள நடிக்க ஒத்துக்கறதுல்ல.

"எல்லார் மாதிரியும் நானும் அரசியல் நடப்புகளை கவனிச்சுக்கிட்டிருக்கேன். தேர்தல்கள்ள ஓட்டுப் போட்டுக்கிட்டிருக்கேன். ஆனா இதுவரையிலும் எந்த ஒரு நிகழ்வையும் பத்தி நான் கருத்துச்  சொன்னதில்லை. எந்த ஒரு கட்சியையோ, தலைவரையோ ஆதரிச்சோ, எதிர்த்தோ பேசினதில்ல.

"அரசியல்ல, பல தலைவர்கள் தொண்டர்களா இருந்துதான் தலைவர்களா ஆகியிருக்காங்க. நான் என்னோட சினிமா பாப்புலாரிட்டியைப் பயன்படுத்தி ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிச்சு ஆட்சியைப் பிடிக்கணும்னு நெனைக்கறது ஹெலிகாப்டர்ல வந்து ஒரு வீட்டோட மொட்டை மாடியில இறங்கற மாதிரி!

"ஒரு வீட்டுக்குள்ள நுழையணும்னா வாசப்படி வழியாத்தான் நுழையணும்னு நான் நினைக்கறேன்.

"ஒரு அரசியல் கட்சித் தலைவரோ, ஒரு பிரபல தொழில் அதிபரோ சினிமாவில சேர்ந்து ஹீரோ ஆகணும்னு யாராவது சொல்லுவீங்களா? ஆனா ஒரு நடிகன் அரசியல் தலைவனாகணும்னு மட்டும் ஏன் சொல்றீங்க? நடிகன்னா அவனுக்கு எல்லாத் தகுதியும் இருக்குன்னு அர்த்தமா?

"எனக்கு எப்பவாவது அரசியல்ல இறங்கணும்னு தோணினா, எந்தக் கட்சியோட செயல்பாடுகள்ள எனக்கு அதிக நம்பிக்கை இருக்கோ, அந்தக் கட்சியில ஒரு தொண்டனா சேருவேன். அப்படி எந்தக் கட்சியும் புடிக்காட்டா, அரசியலுக்கு வராமயே இருப்பேன். 

"இப்ப நான் எந்தக் கட்சியிலேயும் இல்லைங்கறதினால எனக்கு எந்தக் கட்சியையும் பிடிக்காதுன்னு அர்த்தம் இல்லை. அரசியல்ல ஈடுபடறதில இப்ப எனக்கு விருப்பம் இல்லைன்னு அர்த்தம். அவ்வளவுதான்!

"நான் என்னோட வாழ்க்கையில இத்தனை வருஷமா கடைப்பிடிச்சுக்கிட்டிருக்கிற ஒரு விஷயம் என்னோட தகுதி, என்னோட நிலைமை இதெல்லாம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்குத் தகுந்தாப்பல நடந்துக்கறதுதான். 

"ஒரு நடிகனா நான் எந்த ஒரு வேஷமும் போடலாம். ராஜாவா நடிக்கலாம், பிரதமரா நடிக்கலாம், அமெரிக்க ஜனாதிபதியா நடிக்கலாம், மகாத்மா காந்தியா கூட நடிக்கலாம். 

"ஆனா நான் ஒரு நடிகன் என்பதை எப்பவுமே நினைவில் வச்சுக்கிட்டிருப்பேன். நடிப்புத் தொழில்ல எனக்குக் கிடைச்சிருக்கிற அங்கீகாரத்திற்குக் கூட என்னோட இந்த மனப்பான்மைதான் காரணம் என்பது என்னோட கருத்து.

"எனவே, நான் அரசியல் கட்சி எதுவும் தொடங்கப் போவதில்லை. உங்கள் எல்லோரையும் போல அரசியலை கவனித்து தேர்தல்ல என் விருப்பப்படி ஓட்டுப் போட்டுக்கிட்டிருப்பேன். 

"என் மேல நீங்க எல்லோரும் வச்சிருக்கிற நம்பிக்கைக்கு என்னோட நன்றி. இந்த நம்பிக்கையை நான் பெற்றது ஒரு நடிகனாகவும், ஒரு மனிதனாகவும் நான் செயல்பட்ட விதம்தான். 

"அதேபோல் தொடர்ந்து செயல்படுவதுதான் நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்புக்கும், நம்பிக்கைக்கும், நல்லெண்ணத்துக்கும் நான் செய்யக்கூடிய கைம்மாறு."

தன் பேச்சை முடித்து விட்டு, அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்து விட்டு சௌம்யன் வெளியேறினான். செய்தியாளர்களின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.

"சௌம்யன் என்னை ஏமாத்தல. அவர் மேல எனக்கு இருக்கிற மதிப்பு இன்னும் அதிகமாயிடுச்சு" என்று நடராஜிடம் சொல்லிக் கொண்டிருந்தான் சங்கர்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையினும் மாணப் பெரிது.

பொருள்:  
தன் நிலையிலிருந்து பிறழாமல் அடக்கமாகச் செயல்படுபவனுடைய தோற்றம் மலையை விட உயர்ந்து காணப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

 குறள் 123 
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்



Wednesday, January 10, 2018

123. ஜூனியர், ஜூனியர்!

"இன்னும் சீனியர் வரலையே?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் ராஜேஷ்.

"இல்லை. வழக்கம் போல இன்னிக்கும் லேட்தான் நீ!" என்றான் சிவா.

"நேரத்துக்கு வீட்டுக்குப் போக முடிஞ்சா நேரத்துக்கு வரலாம்.தினமும் வீட்டுக்குப் போக ஒம்பது பத்துன்னு ஆகுது. காதலியோடு ஒரு சினிமாவுக்குப் போகக் கூட முடியல!"

"உனக்குக் காதலி இருக்காளா என்ன? எங்கிட்ட சொல்லலியே!"

"ஒரு பேச்சுக்குச் சொன்னேன். இனிமேதான் யாரையாவது தேடிப் பிடிக்கணும்! அதுக்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்குது, இந்த வக்கீலுக்கு ஜூனியரா இருக்கற தொழில்ல? 

"உன்னை மாதிரி வேலையைக் கட்டிக்கிட்டு அழ என்னால முடியாது. ஏன்தான் இந்த வக்கீலுக்குப் படிச்சமோன்னு இருக்கு. அவன் அவன் படிச்சு முடிச்சதும் ஏதாவது ஒரு வேலைக்குப் போயி, சம்பளம் வாங்கிக்கிட்டு ஹாயா இருக்கான்!

"நம்ம வக்கீல் தொழில்லதான் சீனியர் கிட்ட அடிமை சேவகம் பண்ணிட்டு அப்புறம்தான் பிராக்டீஸ் பண்ண முடியும்கற நிலைமை!"

"இரைஞ்சு பேசாதே! சீனியர் வர நேரம். நல்ல வேளையா டைப்பிஸ்ட் சுகந்தி கூட இன்னிக்கு லீவு!" என்றான் சிவா,

அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ராமதுரை உள்ளே நுழைந்தார்.

"உக்காருங்க, உக்காருங்க. என்ன சிவா, நான் சொன்ன ப்ரீஃபை ரெடி பண்ணிட்டியா?" என்றார்.

"முடிச்சுட்டேன் சார். உங்க டேபிள்ள வச்சிருக்கேன்" என்றான் சிவா.

"சரி. இப்ப என்ன செஞ்சுக்கிட்டிருக்க?"

"சார்! அடுத்த வாரம் மகாதேவனோட பிராப்பர்டி மேட்டர் ஹியரிங்குக்கு வருது. அதுக்கு ரெஃபரன்ஸ் ஜட்ஜ்மென்ட் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"குட். நம்ப லைப்ரரில சரியா ரெஃபரன்ஸ் கிடைக்கலேன்னா ஹைகோர்ட் லைப்ரரில போய்ப் பாரு. நீ கலெக்ட் பண்ணின ரெஃபரன்ஸை எல்லாம் நாளைக்கு நான் பாத்துட்டு வேற ஏதாவது வேணுமான்னு சொல்றேன். ராஜேஷ், நீ என்ன பண்ணிக்கிட்டிருக்க?"

"சார்! ராமகிருஷ்ணனோட இன்ஷ்யூரன்ஸ் கேஸ் டாகுமெண்ட்ஸை எல்லாம் அரேஞ்ஜ் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"மூணு நாளா இதைத்தான் சொல்லிக்கிட்டிருக்கே! நான் ஆஃபீஸ்ல இல்லாதபோது நீ ஒரு வேலையும் செய்யறதில்ல போலருக்கே!"

"இல்ல சார்! பேப்பர்ஸ் எல்லாம் நிறைய இருக்கு..."

"எனக்குத் தெரியாதா? ரெண்டு மணி நேர வேலை இது. இங்க பாரு. என்னை மாதிரி ஒரு பிஸியான வக்கீல் கிட்ட ஜூனியரா இருக்கறது பெரிய லேர்னிங் ஆப்பர்சூனிட்டி. அதை சரியாப் பயன்படுத்திக்கலேன்னா உனக்குத்தான் நஷ்டம். சரி. நான் கோர்ட்டுக்குப் போகணும். சாயந்திரம் வந்து பாக்கறேன். முக்கியமா யாராவது என்னைப் பாக்க வந்தா எனக்கு ஃபோன் பண்ணுங்க" என்று சொல்லி விட்டு வெளியேறினார் ராமதுரை.

"கொடுக்கறது சுண்டைக்கா சம்பளம். வேலை மட்டும் மலை மாதிரி குவிஞ்சுக்கிட்டே இருக்கும்!" என்றான் ராஜேஷ், அவர் போனவுடன்.

"அவர்தான் சொன்னாரே, இது ஒரு லேர்னிங் ஆப்பர்சூனிட்டின்னு! இதை ஒழுங்காப் பயன்படுத்திக்கிட்டாத்தான் ஏர்னிங் ஆப்பர்ச்சுனிடி வரும்!" என்றான் சிவா.

"இவரை மாதிரி ஆசாமிகள் எல்லாம் உன்னை மாதிரி இளிச்சவாயன் கிடச்சா அவன் தலையில நல்லா மொளகா அரைப்பாங்க! நாமளும் ஆறு மாசமா இவருகிட்ட ஜூனியரா இருக்கோம். என்னத்தைப் பெரிசாக் கத்துக் கொடுத்துட்டாரு நமக்கு?"

"டேய்! இது காலேஜ் இல்லை, யாராவது நமக்கு சொல்லிக் கொடுக்கறதுக்கு. வேலையை செஞ்சுக்கிட்டேதான் நாம வேலையைக் கத்துக்க முடியும். ரெண்டு வருஷம் பொறுமையா இருந்து அவர் சொல்ற வேலையைச் செஞ்சுக்கிட்டு அவர் செயல்படறதை கவனிச்சுப் பல விஷயங்களைக் கத்துக்கிட்டா அப்புறம் நாம தனியா பிராக்டீஸ் பண்ண முடியும்."

"நெனச்சுக்கிட்டிருக்க நீ! அவர் தொண்ணுறு வயசு வரையிலும் பிராக்டீஸ்  பண்ணுவாரு. அதுவரையிலும் நீ அவர் கிட்ட ஜூனியராத்தான் இருக்கப் போற! அவரும் உன்னை வளர விட மாட்டாரு. நீயும் தைரியமா வெளியில வர மாட்டே!"

"சரி, நீ என்ன பண்ணப் போற?"

"ஆறு மாசம் பாத்தாச்சு. இவரு நமக்கு நல்ல சம்பளமும் கொடுக்க மாட்டாரு. நாம கத்துக்கற அளவுக்கு முக்கியமான வேலையையும் நமக்குக் கொடுக்க மாட்டாரு. கோர்ட்டில போயி அவர் பக்கத்தில உக்காந்துக்கிட்டு அவருக்கு பேப்பர் எடுத்துக் கொடுக்கலாமே தவிர ஒரு நாளும் நீயும் நானும் கோர்ட்டில வாதாட முடியாது. இன்னும் ரெண்டு மாசத்துல பாரு. நானே தனியா கிளையன்ட்டைப் புடிச்சு பிராக்டீஸை ஆரம்பிச்சுடறேன்."

சொன்னபடியே ராஜேஷ் இரண்டு மாதங்களில் ராமதுரையிடமிருந்து விலகித் தனியே பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்தான்.

ரு வருடம் கழித்து ஒரு பொது நிகழ்ச்சியில் ராஜேஷும், சிவாவும் சந்தித்துக் கொண்டனர்.

"உன் பிராக்டீஸ் எப்படிப் போயிக்கிட்டிருக்கு?" என்றான் சிவா.

"நான் எதிர்பார்த்தபடி வரல. அதனால, லாயர் சாமிநாதன் கிட்ட ஜூனியராச் சேந்துட்டேன்."

"நான் கேள்விப்பட்டதில்லையே அவர் பேரை! எப்படிப் போய்க்கிட்டிருக்கு?"

"என்னத்தைச் சொல்றது? அவருக்கு அதிகமா கேஸ் இல்லை. அதனால எனக்கும் வேலை அதிகமா இல்லை. சம்பளமும் ஒழுங்கா வரதில்லை. ராமதுரைகிட்டயே இருந்திருக்கலாம். அவசரப்பட்டுட்டேன். ஆமாம் நீ எப்படி இருக்கே?" என்றான் ராஜேஷ்.

"உனக்குத்தான் தெரியுமே, ராமதுரை சார்கிட்ட வேலை நிறைய இருக்கும். அதனால நிறையக் கத்துக்க முடியுது. அடுத்த வருஷம் நான் தனியே பிராக்டீஸ் பண்ணலாம்னு அவரே சொல்லிட்டாரு. அதனால இப்ப ரெண்டு மாசமா கோர்ட்டில் வாதம் பண்ண எனக்கு அப்பப்ப வாய்ப்புக் கொடுக்கறாரு."

"நீ அதிர்ஷ்டக்காரன்டா!" என்றான் ராஜேஷ்.

"அதிர்ஷ்டக்காரனோ என்னவோ எனக்குத் தெரியாது. பொறுமையா இருந்து, கஷ்டப்பட்டு உழைச்சுத் தொழிலைக் கத்துக்கிட்டா எதிர்காலத்தில் முன்னேறலாம்னு நெனச்சேன். அப்படி நடக்கும்னு நம்பிக்கை இருக்கு."

"நீ தனியா பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சப்பறம் சொல்லு. நான் உன்கிட்டயே ஜூனியரா சேர்ந்துடறேன்" என்றான் ராஜேஷ்.

ராஜேஷ் விளையாட்டுக்குச் சொல்கிறானா இல்லை உண்மையாகச் சொல்கிறானா என்று சிவாவுக்குப் புரியவில்லை.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து 
ஆற்றின் அடங்கப் பெறின்.

பொருள்:  
அறிய வேண்டியவற்றை அறிந்து ஒருவன் அடக்கத்துடன் நடந்து கொண்டால், அந்தப் பண்பு பிறரால் அறிந்து கொள்ளப்பட்டு அவனுக்கு மேன்மையைத் தரும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்
















"

Tuesday, January 9, 2018

122. "திமிர் பிடித்தவன்"

"இவ்வளவு பெரிய விஞ்ஞானியா இருந்து என்ன பிரயோஜனம்? மத்தவங்களை மதிக்கத் தெரிய வேண்டாம்? திமிர் பிடிச்சவன்" என்று பொரிந்து தள்ளினான் சம்பந்தம்.

"யாரைப் பத்திடா சொல்றே?" என்றான் குணா.

"எல்லாம் நம்ப நண்பன் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் சேகர் என்கிற மாமேதையைப் பத்தித்தான்!"

"ஏன் அவனுக்கென்ன?"

"நம்ப காலேஜில அவனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தணும்னு விரும்பறாங்க. பிரின்சிபாலுக்கு என்னைத் தெரியும் இல்லியா? அவர் எனக்கு ஃபோன் பண்ணி 'சேகர் உங்க கிளாஸ்மேட்தானே? நீங்க அவர்கிட்ட பேசிப் பாராட்டு விழாவில கலந்துக்கறதுக்கு சம்மதம் வாங்குங்க'ன்னு சொன்னாரு. 

"நான் ரொம்ப உற்சாகத்தோட அவன் கிட்ட கேட்டா, அவன் பெரிசா பிகு பண்ணிக்கறான்."

"வர மாட்டேன்னுட்டானா?"

"ஆமாம். அவன் பெரிய விஞ்ஞானி ஆகி இப்ப தேச அளவில அவன் பேரு பரவியிருக்கு. நாம ஏதோ படிச்சுட்டு என்னவோ ஒரு வேலையைப் பாத்துக்கிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கோம். நம்மளைப் பாத்தா அவனுக்கு இளப்பமாத்தான் இருக்கும்!"

"முதல்ல, நாம ஒண்ணும் மோசமான நிலைமையில இல்ல. நீயும் நானும் நல்ல வேலையிலதான் இருக்கோம். ரெண்டாவது, சேகர் இப்படியெல்லாம் நினைக்கிற ஆளு இல்ல" என்றான் குணா.

"நீ சேகரைப் பாத்து எத்தனையோ வருஷம் ஆச்சு. காலேஜில படிச்சப்ப உன் காலையே சுத்திக்கிட்டு வந்த அந்த சேகர்னு நினைச்சியா? அவன் மாறிட்டாண்டா! இத்தனை வருஷமா அவன் ஏன் நம்மளோட தொடர்பு வச்சுக்கல, சொல்லு?"

"நாம யாருமே ஒருத்தருக்கொருத்தர் அதிகமா தொடர்பு வச்சுக்கலியே! நீயும் நானும் ஒரே கம்பெனியில வேலை பாக்கறோம். அதனால நெருக்கமா இருக்கோம். 

"காலேஜில, நானும் சேகரும் நெருக்கமாத்தான் இருந்தோம். ஆனா அதுக்கப்புறம் நானும் அவனைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யலியே! 

"அவன் பெரிய விஞ்ஞானி ஆகிப் பிரபலமானதால அவனைப் பத்தின நியூஸ் நமக்குத் தெரிஞ்சுக்கிட்டிருக்கு. ஆனா அவனைச் சந்திக்கவோ, பேசவோ நான் முயற்சி பண்ணலியே! நீ எப்படிப் பேசின அவன்கிட்ட, ஃபோன்லியா?"

"ஆமாம். அவன் ஹைதராபாத்ல இல்ல இருக்கான்?"

"பல வருஷம் கழிச்சு அவன்கிட்ட ஃபோன்ல பேசியிருக்க. அதை வச்சு அவனை எடை போடக் கூடாது. நான் அடுத்த வாரம் ஹைதராபாத் போறேன். அப்ப அவனைப் பாத்துப் பேசறேன்."

"நீ சொன்னாலாவது ஒத்துக்கறானான்னு பாக்கலாம்!"

ஹைதராபாதில், சேகருக்கு குணா ஃபோன் செய்தபோது, சேகர் மிகவும் உற்சாகமாகப் பேசினான். குணாவைத் தன் வீட்டுக்குச் சாப்பிட அழைத்தான்.

சேகரின் வீட்டுக்கு குணா சென்றதும், பல வருடங்கள் கழித்துச் சந்தித்த மகிழ்ச்சியில் இருவருமே மனம் விட்டு நீண்ட நேரம் பேசினர். 'இவனையா திமிர் பிடித்தவன் என்று சொன்னான் சம்பந்தம்?'

"ஆமாம், நம்ப காலேஜில் உனக்குப் பாராட்டு விழா நடத்தறதுக்கு சம்பந்தம் கூப்பிட்டப்ப நீ வர மாட்டேன்னு சொல்லிட்டியாமே?" என்றான் குணா.

சேகரின் முகம் சட்டென்று மாறியது. "அதைப் பத்திப் பேச வேண்டாமே!" என்றான்.

"ஏன், சம்பந்தம் மேல உனக்கு ஏதாவது கோபமா?"

"சேச்சே! அவனைப் பாத்தே பல வருஷம் ஆச்சு. அவன் மேல எனக்கென்ன கோபம் இருக்க முடியும்?"

"பின்னே? அவனை நீ மதிக்காத மாதிரி பேசினதா அவன் நினைக்கிறானே!"

"ஒருவேளை அவன்கிட்ட நான் கொஞ்சம் கடுமையாப் பேசியிருக்கலாம்."

"ஏன் அப்படிப் பேசின?"

"குணா! நீ என்னைப் புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன். நான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டி இருக்கு."

"என்ன ஜாக்கிரதை?"

"இப்ப, நான் பாராட்டு விழா வேண்டாம்னு சொன்னா, என்ன ஆகும்? பொதுவா எல்லோரும் சொல்ற மாதிரி, முதல்ல வேண்டாம்னுதான் சொல்லுவான், அப்புறம் வற்புறுத்தினா சரின்னு ஒத்துப்பான்னு நினச்சு, அவன் என்னை வற்புறுத்தி இருப்பான். 

"அப்புறம் அவனை மறுத்துப் பேசறது எனக்குக் கஷ்டமா இருந்திருக்கும். அதனாலதான் முதலிலேயே கொஞ்சம் கடுமையாப் பேசிட்டா அப்புறம் வற்புறுத்த மாட்டான்னு நெனைச்சுத்தான் அப்படிப் பேசினேன். 

"அவன்கிட்ட மட்டும் இல்ல, இது மாதிரி பாராட்டு விழா நடத்தறேன்னு வரவங்க, என்னைப் புகழ்ச்சியாப் பேசறவங்க எல்லார்கிட்டயும் இப்படிக் கடுமையாத்தான் நடந்துக்கறேன். அப்பத்தானே இது மாதிரிப் பாராட்டுக்கள், புகழ்ச்சிகளையெல்லாம் தடுக்க முடியும்?"

"பாராட்டுக்கள், புகழ்ச்சிகளையெல்லாம் தடுக்கணும்னு நீ ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கே? பாராட்டினா, அதைக் கேட்டுத் தலையாட்டிட்டு நன்றி சொல்லிட்டு வர வேண்டியதுதானே?"

"உனக்குப் புரியல குணா! பணம் இருக்கறவங்க பாங்க்கில பணத்தைப் போட்டு வைக்கறாங்க, நகைகளை லாக்கர்ல கொண்டு வைக்கறாங்க. ஏன்?"

"ஏன்னா? அதெல்லாம் பாதுகாப்பா இருக்கட்டும்னுட்டுத்தான். தங்களோட பொருள், பணம் எதையும்  இழந்துடக் கூடாதுங்கறதுக்காகத்தான்."

"அது மாதிரிதான் எங்கிட்ட இருக்கிற சொத்தையும் நான் பாதுகாக்க விரும்பறேன்."

"உங்கிட்ட இருக்கிற சொத்துன்னா, உன் விஞ்ஞான மூளையா? பாராட்டு விழாவில கலந்துக்கறதுனால உன் மூளைக்கு என்ன ஆபத்து வந்துடும்?"

"எங்கிட்ட இருக்கிற சொத்து என் மூளை இல்லை குணா. விலை மதிக்க முடியாத சொத்தா நான் நினைக்கிறது என்னோட அடக்கத்தைத்தான். 'எனக்குத் தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சம்' என்கிற எண்ணம்தான் என்னை இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஊக்குவிக்குது. 

"இது மாதிரி பாராட்டுக்கள், புகழுரைகளையெல்லாம் கேட்டா, என்னை அறியாமலே  நான் ரொம்ப உயர்ந்தவன் என்கிற எண்ணம் ஏற்பட்டு என்னோட அடக்கம் போயிடும். அதுக்கப்பறம் என்னால எதையும் கத்துக்கவும் முடியாது, சிந்திக்கவும் முடியாது. 

"அதனாலதான் அடக்கம் என்கிற என்னோட சொத்தைப் பாதுகாக்கணும் என்பதில நான் ரொம்ப கவனமா இருக்கேன். சம்பந்தத்துக்கு இதைப் புரிய வச்சு, என்னை மன்னிக்கச் சொல்லு!"

சேகரின்அடக்கமே, சம்பந்தத்துக்கு ஆணவமாகத் தோற்றமளித்த விந்தையை நினைத்து வியந்தான் குணா.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 122
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு

பொருள்:  
அடக்கம் என்ற பண்பை ஒரு விலையுயர்ந்த பொருளைப் பாதுகாப்பது போல் காக்க வேண்டும். ஒருவருக்கு அடக்கத்தை விட நன்மை பயக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை. 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

 குறள் 121 
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்



















"


Monday, January 8, 2018

121. அரசியல் வாரிசு

முதலமைச்சர் வெற்றிவேல் தான் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்றும், தீவிர அரசியலிலிருந்து ஒய்வு பெறப் போவதாகவும் அறிவித்தது அவர் கட்சிக்குள் மட்டுமின்றி, ஊடகங்களிலும், பொதுமக்களிடையேயும் கூட ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆயினும் வெற்றிவேலின் ஓய்வுக்குப் பிறகு கட்சித் தலைவராகவும், தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகவும் அவர் தம்பி திருமூர்த்திதான் வருவார் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது.

"என்னங்க, தலைவர் அரசியலிலிருந்து ஒய்வு பெறப் போறதாக அறிவிச்சுட்டாரு. இன்னும் தேர்தலுக்கு ஒரு வருஷம்தான் இருக்கு. நாம என்ன பண்ணப் போறோம்?" என்றான் கதிர்.

"என்ன செய்யணும்?" என்றான் நீலவண்ணன்.

"நீங்கதான் அடுத்த தலைவரா வரணும்கறதுதான் தொண்டர்களோட எதிர்பார்ப்பு. உங்க தலைமையில தேர்தலைச் சந்திச்சா நமக்கு வெற்றி நிச்சயம். நீங்கதான் அடுத்த முதல்வர்."

"நீங்க சொல்லிட்டா போதுமா? தலைவர் என்ன நினைக்கிறார்னு தெரியலியே!"

"தலைவர் தன்னோட தம்பிதான் வரணும்னு நினைப்பாரு."

"அப்புறம் நான் எப்படி வர முடியும்?"

"நம்ப கட்சித் தொண்டர்கள் எல்லாம் உங்களைத்தான் விரும்பறாங்க. அவங்க திருமூர்த்தியை ஏத்துக்க மாட்டாங்க. மக்கள்கிட்டயும் உங்களுக்குத்தான் செல்வாக்கு. திருமூர்த்தி தலைமையில நாம தேர்தல்ல போட்டி போட்டா நாம படு மோசமாத் தோப்போம்."

"தலைவர் எல்லாத்தையும் யோசிச்சு முடிவு பண்ணுவாரு. அதுவரையிலும் பொறுமையா இருப்போம்."

"நீங்க இப்படி அடங்கிப் போறதனாலதான் திருமூர்த்தி ஆட்டம் போடறான். உங்களைத்தான் அடுத்த தலைவராக்கணும்னு செயற்குழுவில் நான் பேசப் போறேன். முக்காவாசிப் பேரு உங்களைத்தான் ஆதரிப்பாங்க" என்றான் கதிர்.

"அவசரப்பட்டு ஒண்ணும் செஞ்சுடாதீங்க. பொறுமையா, கட்சி வேலைகளைப் பாத்துக்கிட்டிருப்போம். எனக்குத் தலைவர் ஆகற தகுதி இருக்குன்னு நீங்க நினைக்கிற மாதிரி தலைவரும் மத்தவங்களும் நெனைச்சா, அப்ப, தானே எனக்கு வாய்ப்பு வந்துட்டுப் போகுது!" என்றான் நீலவண்ணன்.

"அரசியல்ல அதிரடியாச் செயல்பட்டாத்தான் ஜெயிக்க முடியும். உங்களை மாதிரி அடங்கிப் போறவங்களை, திருமூர்த்தி மாதிரி ஆட்கள் எல்லாம் ஒரேயடியா அமுக்கிடுவாங்க" என்றான் கதிர்.

வெற்றிவேலின் அறிவிப்பைத் தொடர்ந்து, தான் அப்போதே தலைவராகி விட்டது போல் திருமூர்த்தி செயல்பட ஆரம்பித்தான். தலைவரின் தம்பி என்பதால் அவனுடைய அத்துமீறல்களை எதிர்க்க யாருக்கும் துணிவு வரவில்லை. 

ஆட்சியிலோ, கட்சியிலோ எந்தப் பொறுப்பிலும் இல்லாத நிலையிலும் ஆட்சிக்கும் கட்சிக்கும் திருமூர்த்திதான் தலைமை வகிப்பது போன்ற தோற்றம் உருவாகியது. இது கட்சித் தொண்டர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் ஏற்படுத்திய அதிருப்தியையும் கோபத்தையும் பற்றித் திருமூர்த்தி கவலைப்படவில்லை.

தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதமே இருந்த நிலையில் வெற்றிவேல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

"நான் முன்பே அறிவித்தபடி, வரும் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தீவிர அரசியலிலும் இனி ஈடுபடப் போவதில்லை. எதிர்வரும் தேர்தலை நம் கட்சி ஒரு புதிய தலைவரின் தலைமையில் சந்திக்க வேண்டும் என்பது என் விருப்பம். எனவே வரும் பதினைந்தாம் தேதி காலை நான் என் ராஜினாமாவை ஆளுநரிடம் அளிக்க இருக்கிறேன். அன்று முற்பகல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும். அதில் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அன்று மாலையே அவர் புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொள்வார்."

"வரும் தேர்தலில் எப்படியும் இவர்கள் கட்சி  தோற்று விடும். அதனால் தன் தம்பி ஆறு மாதமாகவாவது முதல்வராக இருக்கட்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு!" என்று ஊடகங்கள் விமரிசித்தன.

"கோட்டை விட்டுட்டமே! திருமூர்த்தியைக் கொண்டு வரத்துக்குத் தலைவர் ஏற்பாடு பண்ணிட்டாரே!" என்று புலம்பினான் நீலவண்ணனின் ஆதரவாளனான கதிர். நீலவண்ணன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

ட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்குச் சில மணி நேரங்கள் முன்பு சற்றும் எதிர்பாராத வகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பு வந்தது.

'இது போல் நடந்ததே இல்லையே! ஏதோ நடக்கப்போகிறது!' என்ற எதிர்பார்ப்பில் கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதுமே தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்பு அமர்ந்திருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் வெற்றிவேல் பேசத் தொடங்கினார்:

"இந்தக் கட்சியை எனக்கு முன்பிருந்தவர்களும், நானும் எங்கள் கடின உழைப்பால் வளர்த்திருக்கிறோம். எத்தனையோ சோதனைகளைக் கடந்து நம் கட்சி இன்று ஒரு அசைக்க முடியாத கோட்டையாக இருக்கிறது என்றால் அதற்கு இந்தக் கட்சியை வழி நடத்திய தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் அயராத உழைப்புதான் காரணம். எதிர்காலத்திலும் நமது கட்சியை வழி நடத்திச் செல்லும் திறமையும் தகுதியும் கட்சிக்காகக் கடுமையாக உழைத்தவர்களுக்கே உண்டு. அந்த வகையில் கடந்த பல வருடங்களாக நம் கட்சிக்காகக் கடினமாக உழைத்து உங்கள் எல்லோருடைய அன்பையும் பெற்றிருக்கும் என் அருமைத் தம்பி நீலவண்ணனையே நீங்கள் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என் விருப்பத்தை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்."

அவர் பேச்சை முடிக்கும் முன்பே கரவொலி அரங்கை அதிர வைத்தது.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
        அடக்கமுடைமை      
குறள் 121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

பொருள்:  
அடக்கம் நமக்கு உயர்வைத் தரும். அடக்கம் இல்லாமல் நடந்து கொள்வது நமக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும். 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

 குறள் 120 

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்
















Sunday, January 7, 2018

120. மர பீரோ

கிராமத்து வீட்டை விற்று வீட்டுக் கிளம்பியபோது வீட்டிலிருந்த சிறிய பொருட்கள் எல்லாவற்றையும் ஊரில் இருந்தவர்களுக்குப் பெரும்பாலும் இலவசமாகவும், ஒரு சிலவற்றை எடைக்குப் போடுவது போன்ற விலைக்கும் கொடுத்த பிறகு, மூன்று பெரிய மரச் சாமான்கள் மிஞ்சின. ஒரு பீரோ, ஒரு சாய்வு நாற்காலி, ஒரு பெரிய மேஜை.

மூன்று சகோதரர்களும் ஆளுக்கு ஒன்று என்று பிரித்துக் கொண்டோம். என் பங்குக்கு மர பீரோ கிடைத்தது. சாய்வு நாற்காலியையும், பெரிய மேஜையையும் என் சகோதரர்கள் ஊரில் இருந்த ஒரு புதுப்பணக்காரருக்கு நல்ல விலைக்கு விற்று விட்டார்கள். புதுப்பணக்காரர் என்னிடம் பீரோவை விலைக்குக் கேட்டார். ஆனால் நான் அதை விற்க விரும்பவில்லை.

பீரோவைச் சென்னையிலிருந்த என் (வாடகை) வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டேன். 'கொண்டு வந்து விட்டேன்' என்று சாதாரணமாகச் சொல்லி விட்டேனே தவிர, கொண்டு வருவது அவ்வளவு சுலபமாக இல்லை. பீரோ மிகவும் கனம் என்பதால் பல ஆட்களை வைத்து அதை மாட்டு வண்டியில் ஏற்றி, 10 கிலோமீட்டர் தூரத்தில், நகரத்தில் இருந்த லாரி ஆஃபிசுக்குக் கொண்டு வந்தேன்.

லாரி ஆஃபீசில் பீரோவை இறக்கவும் பல ஆட்கள் தேவைப்பட்டனர். முதலில் லாரி ஆஃபீசில் பீரோவை லாரியில் ஏற்றி அனுப்ப முடியாது என்று சொல்லி விட்டார்கள். கெஞ்சிக் கூத்தாடி அவர்களைச் சம்மதிக்க வைத்தேன். அவர்கள் கேட்ட லாரி வாடகைத்தொகையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து பீரோவை அங்கேயே விட்டு விட்டு, அவர்கள் கவனிக்காதபோது நழுவி ஒடி விடலாமா என்று கூட யோசித்தேன். ஆயினும் வேறு வழியின்றி அவர்கள் கேட்ட வாடகையைக் கொடுத்து பீரோவை லாரியில் அனுப்ப ஏற்பாடு செய்தேன். 

சென்னைக்கு பீரோ வந்ததும், அதை லாரி ஆஃபீசிலிருந்து வீட்டுக்குக்  கொண்டு வர நான் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கொள்ளை அடிப்பது போல் என்னிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்ட லாரி நிறுவனமும், கூலி ஆட்களும் ஏதோ எனக்கு இலவச சேவை செய்வது போல் நடந்து கொண்டார்கள். ஒவ்வொருவரிடமும் நான் கெஞ்ச வேண்டியிருந்தது.

"என்ன சார் பீரோ இது? பொணம் கனம் கனக்குது!" என்ற விமரிசனத்தைப்  பலமுறை பலர் வாயிலிருந்தும் கேட்டு விட்டேன். பீரோவைத் தூக்குபவர்கள் கவனமாகத் தூக்காமல் கீழே போட்டு விட்டால் பீரோவுக்குச் சேதம் ஏற்பட்டு விடுமே என்ற பயத்தில் "பார்த்து மெதுவாத் தூக்குங்க!" என்று அடிக்கடி அவர்களிடம் கெஞ்சிக்கொண்டே இருந்தேன்.

ஒரு வழியாக பீரோ வீட்டுக்கு வந்து சேர்ந்ததுமே, கழுகுக்கு மூக்கில் வியர்த்தது போல் ஒடி வந்த வீட்டுச் சொந்தக்காரர் "என்ன சார் இது? எங்கேருந்து கொண்டு வரீங்க இதை? தரை உடைஞ்சுடப் போகுது. பார்த்துக்கங்க!" என்று எச்சரித்தார்.

'இரும்பு பீரோவால்தான்யா தரை உடையும், மர பீரோவால் உடையாது, இது கூட உன் மர மண்டைக்குத் தெரியாதா?' என்று மனதில் எழுந்த வார்த்தைகளை விழுங்கி விட்டு அசட்டுத்தனமாகச் சிரித்து விட்டு "நான் பாத்துக்கறேன் சார்! கவலைப்படாதீங்க" என்று பொறுமையாக பதில் சொன்னேன்.

ஒரு வழியாக பீரோ வீட்டுக்குள் வந்து நிலை கொண்டது. பீரோவைக் கொண்டு வந்து சேர்த்ததற்கு ஆன மொத்த செலவைக் கேட்டதும் என் மனைவி மயங்கி விழாத குறையாக "இவ்வளவு செலவழிச்சதுக்கு, நாலு காட்ரேஜ் பீரோ வாங்கி இருக்கலாம் போலிருக்கே!" என்றாள்

15 வருடங்களில் மூன்று முறை வீடு மாறிய போதும் பீரோவை இடம் மாற்ற நிறையச் செலவாயிற்று.

ப்போது சொந்த வீடு வாங்கிக்கொண்டு போகும்போது பீரோவை எடுத்துக்கொண்டு போக முடியவில்லை. என் சொந்த வீட்டில் பீரோவை வைக்க இடம் இல்லை என்று என் குடும்பத்தினர் அனைவரும் (என்னைத்தவிர) சேர்ந்து முடிவு செய்து விட்டனர்.

"இந்த பீரோவுக்காக நீங்க செலவழிச்சதெல்லாம் போதும். இதை வித்துத் தொலையுங்க" என்றாள் என் மனைவி.

வேறு வழியின்றி பீரோவை விற்க முடிவு செய்தேன்.

பத்திரிகை விளம்பரங்களைப் பார்த்தபோது, பழைய பொருட்களை வாங்க இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று வியப்பாக இருந்தது. ஐந்தாறு வியாபாரிகளிடம் காட்டி யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களிடம் விற்று விடலாம் என்று (புத்திசாலித்தனமாக!) நினைத்துக் கொண்டேன்.

ஆனால் பீரோவைப் பார்த்த யாருமே அதற்கு ஒரு சுமாரான விலை கொடுக்கக் கூடத் தயாராயில்லை.

"இதெல்லாம் போகாது சார்! விறகுக்குக் கூட யாரும் வாங்க மாட்டாங்க. வேணும்னா சொல்லுங்க. வண்டியில எடுத்துக்கிட்டுப் போயி எங்கேயாவது போட்டுட்டு வரேன். விலை எதுவும் கிடைக்காது" என்றார் ஒருவர்.

இன்னொருவர் பழைய பேப்பருக்குக் கொடுக்கும் விலையை விடக் குறைவான விலைக்குக் கேட்டார்.

ஐந்தாறு பேர் வந்து பார்த்தபின், ஜனார்த்தனன் என்று ஒருவர் வந்தார்.

பீரோவை நன்கு திறந்து ஒவ்வொரு பகுதியாகத் தொட்டுப் பார்த்து விட்டு, "ரொம்பப் பழைய பீரோவா இருக்கும் போலருக்கே! எவ்வளவு எதிர்பாக்கறீங்க?" என்றார்.

"அஞ்சாயிரம் ரூபாய் கொடுப்பீங்களா?" என்றேன் தயக்கத்துடன்.

ஜனார்த்தனன் சிரித்தார். "சார்! நான் ஒரு வியாபாரி. நான் விற்பனை செய்யற சரக்குக்கு அதுக்கு உரிய விலை கிடைக்கணும்னு எதிர்பார்ப்பேன். அதுபோல மத்தவங்களோட பொருளுக்கும் உரிய விலை அவங்களுக்குக்  கிடைக்கணும்னு நினைக்கறவன் நான்."

"என்ன சொல்ல வரீங்க?" என்றேன் நான் குழப்பத்துடன்.

"சார்! இது மாதிரி பழைய பொருட்களுக்கெல்லாம் நிறைய விலை கொடுக்க சில பேர் தயாரா இருக்காங்க. நான் உங்ககிட்ட அஞ்சாயிரம் ரூபா கொடுத்து இந்த பீரோவை வாங்கிட்டுப் போய் ஒரு ஆன்ட்டிக் டீலர் கிட்ட நிறைய விலைக்கு வித்துடலாம். ஆனா அது உங்களை ஏமாத்தறதா இருக்கும். நான் எனக்குத் தெரிஞ்ச ஆன்ட்டிக் டீலர்கள் சிலரோட ஃபோன் நம்பர் தரேன். அவங்களுக்கு ஃபோன் பண்ணிப் பாருங்க. அவங்க வந்து பார்த்துட்டு என்ன விலைக்கு எடுத்துக்கறோம்னு சொல்லுவாங்க .வேற சில டீலர்கள் கிட்டேயும் கேட்டுப் பாருங்க. யார் நல்ல விலை கொடுக்கறாங்களோ அவங்ககிட்ட வித்துடுங்க."

"இது சுமாரா என்ன விலைக்குப் போகும்னு நினைக்கிறீங்க?" என்றேன் நான் வியப்புடன்.

"என்னால கரெக்ட்டா சொல்ல முடியாது. எப்படியும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல போகும்!" என்றார் ஜனார்த்தனன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

பொருள்:  
வியாபாரம் செய்பவர்கள் பிறர் பொருளையும் தங்கள் பொருள் போல் கருதிச் செயல்பட்டால் அதுவே சிறந்த வணிக முறை ஆகும்.
பொருட்பால்                                                                                                   காமத்துப்பால்



































Saturday, January 6, 2018

119. ஆன்மீகச் சொற்பொழிவு!

நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கத்துக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. 

அதனால் பிரச்னையை ஒரு நடுவர் மூலம் தீர்த்துக் கொள்வது என்று இரு தரப்பினரும் முடிவு செய்தனர்.

ஒரு நடுவரை நியமிக்கும்படி இரு தரப்பினரும் தொழிலாளர் ஆணையரைக் கேட்டுக் கொள்ள, அவர் ஒய்வு பெற்ற அரசு அதிகாரி உமாபதியின் பெயரைப் பரிந்துரைத்தார். 

இரு தரப்பினரும் அவரை ஏற்காவிட்டால், ஆணையர்  வேறொரு நபரைப் பரிந்துரைப்பார் என்று ஏற்பாடு.

நிர்வாகத்தினர் அவரை உடனே ஏற்றுக்கொண்டு விட்டனர்.

தொழிற்சங்கத் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

"உமாபதி ஒரு நேர்மையான அதிகாரியா இருந்தவர்னு சொல்றாங்க. ஆனா நம்ம பக்க நியாயத்தைப் புரிஞ்சுப்பாரான்னு சந்தேகமா இருக்கு! பொதுவா இது மாதிரி ஒயிட் காலர் ஆசாமிகளுக்கெல்லாம் தொழிலாளின்னாலே கொஞ்சம் இளப்பம்தான்! நம்ம பக்கத்தில நியாயம் இருக்குன்னு ஒத்துக்குவே மாட்டாங்க" என்றார் செயலாளர் ஜெகதீசன்.

"அப்படி எல்லாரையும் பொதுப்படையா எடை போட்டுடக் கூடாது. அப்படிப் பாத்தா, நம்மளால யாரையுமே ஏத்துக்க முடியாது. இவரு எப்படிப் பட்டவர்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுவோம்" என்றார் தலைவர் செல்வராஜ்.

"தெரிஞ்சுக்கறதுக்கு என்ன இருக்கு? இவர் ஒரு பழமைவாதி. பழமைவாதிங்கள்ளாம் முதலாளிங்களுக்குத்தான் சாதகமா இருப்பாங்க!" என்றார் துணைத்தலைவர் முகுந்தன்.

"இவர் ஒரு பழமைவாதின்னு எப்படிச் சொல்றீங்க?" என்று கேட்டார் செல்வராஜ்.

"அவருதான் ஆன்மீகச் சொற்பொழிவெல்லாம் நிகழ்த்தவராச்சே!"

"அப்படியா? இன்னிக்கு அவரு சொற்பொழிவு ஏதாவது இருக்கான்னு பாருங்க!" என்றார் செல்வராஜ்.

முகுந்தன் அன்றைய பத்திரிகையைப் புரட்டிப் பார்த்து விட்டு "இருக்கு தலைவரே! நங்கநல்லூர்ல இன்னிக்கு சாயந்திரம் ராமாயணச் சொற்பொழிவு இருக்கு."

"அதுக்கு நாம மூணு பேரும் போவோம்" என்றார் செல்வராஜ் சிரித்தபடி.

மூவரும் நங்கநல்லூரில் உமாபதியின் சொற்பொழிவைக் கேட்டு முடித்தபின், செல்வராஜின் வீட்டில் கூடிப் பேசினர்.

"கடவுள் நம்பிக்கை இல்லாத மூணு பேரும் கதாகாலட்சேபத்துக்குப் போயிட்டு  வந்தீங்களே, எப்படி இருந்தது?" என்றாள் அவர்களுக்கு காப்பி கொடுத்து உபசரித்த செல்வராஜின் மனைவி கற்பகம்.

"பொதுவா, புராணக் கதைகள் சொல்றவங்கள்ளாம் புராணங்களில் வருகிற சம்பவங்களை நியாயப்படுத்தித்தான் பேசுவாங்க. ஆனா இவரு ராமர் பண்ணின சில விஷயங்களைத் தன்னால ஒத்துக்க முடியாதுன்னு சொன்னாரு."

"அது என்ன விஷயங்கள்?" என்றாள் கற்பகம் சற்று வியப்புடன்.

"நீயும் உக்காந்து கேளு. உனக்குத்தான் புராணக் கதைகள்ள ஆர்வம் உண்டே!" என்றார் செல்வராஜ்.

"சொல்லுங்க! ராமர் அப்படி என்ன தப்புப் பண்ணிட்டாராம்?" என்றாள் கற்பகம், அருகில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி.

"சுவாரசியமான விஷயம் என்னன்னா, உமாபதி நேத்திக்குத் தன்னோட சொற்பொழிவில, ராமர் வாலியை மறைஞ்சிருந்து கொன்னது தப்புன்னு சொல்லியிருக்காரு. அவர் அப்படிச் சொன்னது புராணங்களை அவமதிக்கிற மாதிரியும், பக்தர்கள் மனசைப் புண்படுத்தற மாதிரியும் இருக்கறதா இன்னிக்கு ஆடியன்ஸில ஒருத்தர் ஆவேசமாப் பேசினாரு. அவருக்கு பதில் சொன்ன உமாபதி, ராமர் இன்னும் சில தப்புகளும் பண்ணியிருக்கறதா சொல்லி அவருக்கு ஷாக் கொடுத்தாரு!"

"வாலியைக் கொன்னதையே தப்புன்னு பெரியவங்க ஒத்துக்க மாட்டாங்க. இதில இன்னும் சில தப்பு வேறயா? அது என்ன?" என்றாள் கற்பகம்.

"பெரியவங்க ஒத்துக்க மாட்டாங்கன்னு நீ சொல்றே! ஆனா தமிழ்ல ராமாயணத்தை எளிமையா எழுதின ராஜாஜியே, வாலியை ராமர் மறைஞ்சு கொன்னது தப்புன்னு சொல்லியிருக்கார்னு உமாபதி சொன்னாரு."

"அப்படியா? எனக்குத் தெரியாதே இது!" என்றாள் கற்பகம்.

"அதைச் சொல்லிட்டு, 'ராமர் இன்னும் ரெண்டு தப்பு பண்ணியிருக்கறதா நான் நினைக்கிறேன்'னாரு உமாபதி! சீதையை அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னது ஒரு தப்பாம்..."

"இதில என்ன தப்பு? சீதை சுத்தமானவங்கதான்னு உலகத்துக்குக்  காட்டறதுக்காகதானே ராமர் அவங்களை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொன்னாரு?" என்றாள் கற்பகம்.

"அப்படின்னா, தான் சுத்தமானவர்னு காட்டறதுக்கு ராமரும் இல்ல அக்கினிப் பிரவேசம் பண்ணி இருக்கணும்? ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமான்னு கேக்கறாரு உமாபதி!"

"என்னவோ! இப்படிக் கேள்வி கேக்கறதெல்லாம் எனக்கு சரியாப் படலை. சரி. இன்னொரு தப்பு என்ன?"

"கடைசியில சீதையைக் காட்டுக்கு அனுப்பினது!"

"ஏங்க, ஒரு அரசனா, தன்னோட கடமையைத்தானே அவர் செஞ்சாரு? நாட்டு மக்கள்ள ஒருத்தர் சீதையைப் பத்தித் தப்பாப் பேசினதுனாலதானே அப்படிச் செஞ்சாரு?"

"ஊர்ல யாரோ தப்பாப் பேசினா அதுக்காக மனைவிக்கு தண்டனை கொடுக்கறதா? இதை நான் கேக்கல. உமாபதிதான் கேட்டாரு! அதுதான் ஒரு தடவை அக்கினிப் பிரவேசம் செஞ்சு சீதை தன்னோட கற்பை நிரூபிச்சுட்டாங்களே, அதுக்கப்பறமும் யாரோ சொன்னதுக்காக அவங்களைக் காட்டுக்கு அனுப்பியது கொடுமை இல்லையான்னு கேட்டாரு?"

"அதுக்காக, ஒரு அரசர் மக்கள் பேசறதைப் புறக்கணிச்சுட முடியுமா?"

"இந்தக் கேள்விக்கு அவர் சொன்ன பதில்தான் டாப்! ராமர் என்ன செஞ்சிருக்கணும்? 'என் மனைவி குற்றமற்றவள். அவளை நீங்க சந்தேகப்பட்டப்பறம், அவளை நான் ராணியா வச்சுக்க முடியாது. அதுக்காக அவளைக் கைவிடவும் முடியாது. நான் அரசனா இருந்தாத்தானே இப்படியெல்லாம் பேசுவீங்க? நான் அரசனா இருக்கப் போறதில்ல. என் மனைவியோட எங்கியாவது போய் இருந்துக்கறேன், நீங்க வேற ஒரு அரசனைப் பாத்துக்கங்க'ன்னு சொல்லிட்டு ராமர் நாட்டை விட்டே போயிருக்கணும்கறது அவரோட கருத்து."

"அடேயப்பா! இப்படி ஒரு நியாயமா?"

"ஆமாம். கேள்வி கேட்டவருக்கு ஏன் கேட்டோம்னு ஆயிடுச்சு. 'இப்படியெல்லாம் பேசற நீங்க ஏன் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்திறீங்க?'ன்னு அவரு கோபமாக் கத்திப் பேசினாரு. அதுக்கும் உமாபதி பொறுமையா பதில் சொன்னாரு. 'நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான். ராமரை தெய்வமா வணங்கறவன்தான். ராமாயணத்தில் ராமர் என்கிற பாத்திரம் செஞ்ச சில தவறுகளைச் சொன்னேன். அவ்வளவுதான். ஒரு விஷயம் தப்புன்னு தோணிச்சுன்னா அதைத் தப்புன்னுன்னு சொல்றதுதான் நியாயம். நமக்குப் பிடித்தமானவங்க, நமக்கு வேண்டியவங்கங்கறதுக்காக அவங்க செய்யறதையெல்லாம் சரின்னு நியாயப்படுத்த முடியாதுன்னு அவர் கொடுத்த விளக்கம் எனக்குப் பிடிச்சிருந்தது."

"அப்ப என்ன  முடிவு எடுக்கப் போறோம்?" என்றார் ஜெகதீசன்

"நீங்களே சொல்லுங்க! நீங்களும்தானே அவர் பேச்சைக் கேட்டீங்க? ஒருத்தர் மனசில இருக்கறதுதான் வார்த்தையிலே வரும். அவர் அடிப்படையில எந்த விஷயத்தையும் நடுநிலையாப் பாக்கறவர்னுதான் எனக்குத் தோணுது. அதனாலதான் ஆன்மீகச் சொற்பொழிவுல கூட தன்னோட ஆடியன்ஸ் விரும்ப மாட்டாங்கன்னு தெரிஞ்சும் தனக்கு சரின்னு பட்டதைச் சொல்லியிருக்காரு. இப்படிப்பட்டவர் நம்ம பக்கத்தில இருக்கிற நியாயத்தை ஒத்துப்பார்ன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?" என்று செல்வராஜ் மற்ற இருவரையும் பார்த்தார்.

"நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்" என்றார் முகுந்தன். ஜெகதீசன் அதை ஆமோதித்துத் தலையாட்டினார்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

பொருள்:  
சிந்தனை கோணல் இல்லாமல் நேராக இருந்தால், பேச்சும் நேர்மை தவறாமல் இருக்கும். இதுதான் நடுநிலைமை.
பொருட்பால்                                                                                                   காமத்துப்பால்

















Wednesday, January 3, 2018

118. அம்ப்பயரின் முடிவு

பிரகாஷ் நகர் கிரிக்கட் குழுவுக்கும் அவ்வை நகர் கிரிக்கட் குழுவுக்கும் இடையே ஐம்பது ஓவர் கிரிக்கட் மேட்ச் நடத்துவது என்று முடிவு செய்தபின், அம்ப்பயராக யாரைப் போடுவது என்ற கேள்வி எழுந்தது.

இரண்டு கேப்டன்களும் சேர்ந்து பேசி, மாநில அளவுப் போட்டிகளில் விளையாடிய, ஒய்வு பெற்ற கிரிக்கட் வீரர் சேகரை அணுகினர்.

"எனக்கு அம்ப்பயரா இருப்பதில் ஆர்வம் இல்லை. தியாகராஜன்னு என் நண்பர் ஒத்தர் இருக்காரு. வேணும்னா அவர்கிட்ட சொல்றேன்" என்றார் சேகர்.

"நாங்க கேள்விப்பட்டதே இல்லியே! அவரு பெரிய பிளேயரா என்ன?" என்றான் பிரகாஷ் நகர் குழுவின் கேப்டன் முரளி.

"கிரிக்கட் விளையாடறவங்கதான் நல்ல அம்ப்பயரா இருக்கணும்கறது இல்ல. கிரிக்கட் மேட்ச்சைக் கூர்ந்து பாக்கறவங்க கூட நல்ல அம்ப்பயரா இருக்க முடியும். அவரு அப்படிப்பட்டவர்தான். இது மாதிரி லோக்கல் லெவல் மேட்ச்சுகளுக்கெல்லாம் அவர் அம்ப்பயரா இருந்திருக்காரு. அவருக்கு விதிகள் எல்லாம் அத்துப்படி. கூர்மையா கவனிப்பாரு. அவரோட முடிவுகள் எல்லாம் சரியா இருக்கும். தூரத்திலிருந்து பாத்தே எல் பி டபிள்யு எல்லாம் கரெக்டா  சொல்லிடுவாரு. அவரோட ஜட்ஜ்மென்ட் எப்பவுமே தப்பாப் போனதில்லை."

இரண்டு கேப்டன்களும் ஒருவரை ஒருவர் பார்த்துத் தலையாட்டி விட்டு "அவரையே வச்சுக்கறோம் சார்" என்றனர்.

"இருங்க. இப்பவே அவர்கிட்ட ஃபோன் பண்ணிக் கேக்கறேன்" என்று அவருக்கு ஃபோன் செய்தார்.

ஃபோனில் ஒரு நிமிடம் பேசியபின், "அப்படியா? இருங்க. ஃபோனை ஸ்பீக்கர்ல போடறேன். அவங்களும் கேட்கட்டும்" என்றார் சேகர்.

ஸ்பீக்கரில் அவர் சொன்னதைக் கேட்டதும், அவ்வை நகர் குழுவின் கேப்டன் அரவிந்தன், பிரகாஷ் நகர் கேப்டன் முரளியிடம் "நீதான் சொல்லணும்!" என்றான்.

முரளி ஒரு நிமிடம் யோசித்து விட்டு "அவரே இருக்கட்டும் சார்" என்று சொல்லி அரவிந்தனைப் பார்த்தான்.

"உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்" என்றான் அரவிந்தன்.

மேட்ச் துவங்குவதற்குச் சில நிமிடங்கள் இருந்தபோது, பிரகாஷ் நகர் குழுவைச் சேர்ந்த பத்ரி படபடப்புடன் முரளியிடம் வந்தான் "டேய், என்னடா? இவரை அம்ப்பயராப் போட்டிருக்கீங்க? இவர் யாருன்னு தெரியுமா?" என்றான்.

"தெரியும்!" என்றான் முரளி.

"தெரிஞ்சுமா?"

"பார்க்கலாம். சேகர் சார் இவரைப் பத்தி ரொம்ப உயர்வா சொல்லி இருக்காரு."

" அது சரி....ஆனா.." என்று அரவிந்தன் ஆரம்பித்தபோது, அம்ப்பயரின் விசில் கேட்டது.

"வா போகலாம். டாஸ் போடக் கூப்பிடறாங்க" என்று விரைந்தான் முரளி.

டாஸை வென்று பேட்டிங் செய்த பிரகாஷ் நகர் அணி ஐம்பது ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது.

"நாட் பேட்!" என்றான் முரளி.

"அவ்வை நகர் டீம் பேட்டிங்கில சுமார்தான், நம்ம பௌலர்களை அவங்களால சமாளிக்க முடியாது" என்றான் கோகுல். அவன் 3 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனவன்!

"நீ பேட்டிங்கில சொதப்பின மாதிரி ஃபீல்டிங்கிலையும் சொதப்பாம இருந்தா சரிதான்!" என்றான் சாரதி எரிச்சலுடன்.

உணவு இடைவேளைக்குப் பிறகு அவ்வை நகர் அணியின் இன்னிங்ஸ் துவங்கியது.

30 ஓவர்கள் முடிந்தபோது, அவ்வை நகர் அணி 5 விக்கட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆயினும் மூன்றாவதாகக் களமிறங்கிய சந்துரு 30 ரன்கள் எடுத்து கவனமாக, நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

"இவன் ரொம்ப டேஞ்ஜரஸ். ஏற்கெனவே ரெண்டு பவுண்டரி, ஒரு  சிக்ஸர் அடிச்சிருக்கான். நின்னு ஆடினா நமக்குக் கஷ்டம்தான்" என்றான் முரளி, தேநீர் இடைவேளையின்போது.

40 ஓவர் முடிவில் ஸ்கோர் 7 விக்கட் இழப்பிற்கு 142ஐ எட்டியிருந்தது. சந்துரு 62 ரன்கள் எடுத்திருந்தான்.

"வலுவாக இருந்த பிரகாஷ் நகர் அணியிடமிருந்து போட்டி நழுவி அவ்வை நகர் பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. 'வெற்றியே என் பக்கம் வந்துரு' என்று அழைக்கிறார் சந்துரு" என்றார் வர்ணனையாளர்.

42ஆவது ஓவரில் நிகில் போட்ட பந்து சந்துருவின் பேட்டின் முனையைத் தொட்டது போல் செல்ல, அதைப்  பிடித்த விக்கட் கீப்பர் பத்ரி "ஹே'' என்று. கூவிக்கொண்டே கையைத்  தூக்கினான். பேட்டில் பந்து பட்டதா என்பது குறித்து அவனுக்குச் சந்தேகமே! பேட்டில் பந்து படவில்லை என்பது போல் சந்துரு புன்னகையுடன் அசையாமல் நின்றான்.

ஒரு சில வினாடிகளில் அம்ப்பயர் கை தூக்கி 'அவுட்' கொடுத்து விட்டார். சந்துரு நம்ப முடியாமல் அவரை முறைத்துப் பார்த்து விட்டு வெளியேறினான்.

முரளியாலேயே நம்ப முடியவில்லை. எதிர்பாராமல் வந்த அதிர்ஷ்டம் போல் இருந்தது. அம்ப்பயரைப் பற்றி சேகர் சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொண்டான்.

சந்துரு வெளியேறிய பிறகு ஆட்டத்தின் போக்கு மாறி விட்டது. 47 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து அவ்வை நகர் அணி எல்லா விக்கட்டுகளையும் இழந்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் பிரகாஷ் நகர் அணி வென்றது.

"கங்கிராட்ஸ்!" என்று முரளியின் கையைக் குலுக்கினான் அவ்வை நகர் அணியின் கேப்டன் அரவிந்தன். "ஜெயிச்சதுக்கு மட்டும் இல்ல. அம்ப்பயர் விஷயத்தில நீ தைரியமா முடிவு எடுத்ததுக்கும்தான்!" என்றான்.

"ஆமாம். நான் கூட பயந்தேன்" என்றான் பத்ரி.

"என்ன பயம்? என்ன முடிவு எடுத்தே நீ?" என்றான் நிகில்.

"சந்துரு அவுட் ஆனதுதான் மேட்ச்சோட டர்னிங் பாயின்ட். அது ரொம்ப டஃப் டிசிஷன். ஒருவேளை அம்ப்பயர் அவுட் கொடுக்கலைன்னாலும் நாம அவரைக் குத்தம் சொல்லி இருக்க முடியாது" என்றான் முரளி.

"ஆமாம். ஹீ  இஸ் எ கிரேட் அம்ப்பயர், நோ டவுட். ஆனா, இவன் பயந்தேன்னு சொல்றானே, ஏன்?"

"அம்ப்பயர் யாரு தெரியுமா? சந்துருவோட அப்பா!" என்றான் முரளி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி,

பொருள்:  
இரண்டு தட்டுக்களையும் சீரான முறையில் எடை போடும் தராசு முள் போல் ஒரு புறமும் சாராமல் நியாயமாக நடந்து கொள்வதே சான்றோர்க்கு அழகாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்





















117. விளையாட்டுத் திடல்

அறைக்கதவைத் தயக்கத்துடன் திறந்து உள்ளே வந்த மணவாளனை உட்காரும்படி சைகை காட்டினார் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த வேலாயுதம்.

பேசி முடித்ததும் மணவாளனைப் பார்த்துப் புன்னகை செய்தபடியே "வாங்க. எப்படி இருக்கீங்க?" என்றார். 

"நல்லா இருக்கேன். நீங்க வரச் சொன்னதா ரவி சார் சொன்னாரு."

"ஆமாம். எதுக்குன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே!"

மணவாளன் மௌனமாக இருந்தார்.

"அந்த விளையாட்டுத் திடல் சம்பந்தமாத்தான். அது சும்மா பாழடைஞ்சுதானே  கிடக்கு? அதை யாராவது பயன்படுத்திக்கறதுக்குக் கொடுக்கறதில என்ன தப்பு?"

"சார்! உங்களுக்குத் தெரியாதது இல்ல. அது கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான இடம். அது பொதுமக்களுக்கான விளையாட்டுத் திடல். ஆனா அதை சரியாப் பராமரிக்காததால புதர்  மண்டிக் கிடக்கு. மக்கள் அதை பப்ளிக் டாய்லட்டாவும் பயன்படுத்தறாங்க. அந்த இடத்தை கிளீன் பண்ணி, பொதுமக்களுக்குப் பயன்படற மாதிரி செய்யணும்னு நாம கார்ப்பரேஷனுக்குப் பல தடவை லெட்டர் போட்டிருக்கோம்."

"அது சரி. அவங்கதான் ஒண்ணும் செய்யலியே. இதுக்கெல்லாம் செலவழிக்கப் பணம் இல்லைம்பாங்க. மழைக்காலம் வரப் போகுது. மழைத்தண்ணி போற குழாய்களை சுத்தம் பண்ற வேலையையே அவங்க இன்னும் ஆரம்பிக்கல. இதையா செய்யப் போறாங்க?"

"அதுக்காக?"

"அந்த இடம் இன்னும் மோசமாத்தான் போகும். அதனாலதான் அந்த இடத்தில ஒரு ஜிம் கட்டறதுக்காக ஒரு பார்ட்டிக்குக் கொடுக்கலாம்னு அமைச்சர் சொல்றாரு. நாம அதுக்கும் தடை போட்டா எப்படி?"

"சார்!  பக்கத்தில இருக்கற ஒரு தனியார் பள்ளி அந்த இடத்தை சுத்தம் பண்ணி பள்ளிக்கூடத்துக்கு விளையாட்டுத் திடலா மாத்திக்கறோம்னு சொன்னாங்க. சனி ஞாயிறுல அந்த இடத்தைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கறதுக்கும் அனுமதிக்கறேன்னாங்க. அதுக்கே நாம ஒத்துக்கலியே!"

"அரசாங்க இடத்தை இவங்க எடுத்துக்கிட்டு, போனாப் போகுதுன்னு வாரத்தில ரெண்டு நாள் பொதுமக்களுக்கும் அனுமதி கொடுப்பாங்களாம்! அதை எப்படி நாம ஏத்துக்க முடியும்?"

"சரி சார்! அது மாணவர்களுக்குப் பயன்பட்டிருக்கும். அதுக்கே நாம ஒத்துக்கல. அப்படி இருக்கறச்சே தனியாருக்கு அந்த இடத்தை சும்மா கொடுக்கறதுக்கு நாம எப்படி ஒத்துக்க முடியும்?"

"சும்மா கொடுக்கலியே! வாடகைக்குத் தானே கொடுக்கறோம்?"

:சார்! பத்து கோடி ரூபா மதிப்புள்ள இடத்தை 99 வருஷத்துக்கு மாசம் 1000 ரூபா வாடகைக்குக் கொடுக்கறது எப்படி சார் நியாயமாகும்?"

"நியாய அநியாயத்தைப் பத்திப் பேசறதுக்கு நீங்களும் நானும் யாரு? அமைச்சர் தனக்கு வேண்டியவருக்கு அந்த இடத்தைக் கொடுக்க விரும்பறாரு! இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். 'அந்த இடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமா இருக்கு' ன்னு நம்ம இலாக்காவிலிருந்து ஒரு ரிப்போர்ட் வேணும். நீங்கதான் முதல் நிலை அதிகாரி. நீங்கதான் இந்த மாதிரி ரிப்போர்ட் எழுதணும். நாங்க எல்லோரும் அதை அப்படியே ஆமோதிச்சு எழுதிட்டா அதோட அடிப்படையில நிலத்தை அமைச்சரோட நண்பருக்கு 99 வருஷ லீசுக்குக் கொடுக்க செகரெட்டரி உத்தரவு போட்டுடுவாரு. உங்களுக்கு வேணும்னா அந்த ஏரியாவில் இருக்கறவங்க சில பேர் கிட்டேயிருந்து அந்த இடம் சுகாதாரக் குறைவா இருக்கறதுனால அங்கே இருக்கற குழந்தைகளுக்கெல்லாம் அடிக்கடி வியாதி வருதுன்னு ரிப்போர்ட் வாங்கிக் கொடுக்கறேன்."

"அந்த மாதிரி ரிப்போர்ட் எல்லாம் ஏற்கெனவே நிறைய நமக்கு வந்திருக்கு சார்!"

"அப்புறம் என்ன?"

"அதுக்கு நாம செய்ய வேண்டியது அந்த இடத்தை சுத்தம் பண்றதுதான் . இதைப் பத்தி நாம ஏற்கெனவே கார்ப்பரேஷனுக்கு நிறைய தடவை எழுதிட்டோம்."

"மணவாளன்! நீங்க போகாத ஊருக்கு வழி சொல்றீங்க! நீங்க நேர்மையானவர்னு எனக்குத் தெரியும். நான் உங்களை லஞ்சம் வாங்கச் சொல்லல. அமைச்சரோட விருப்பத்தை நிறைவேத்தற மாதிரி ஒரு ரிப்போர்ட் கொடுக்கச் சொல்றேன். அவ்வளவுதான். அதுவும் பொய்யான ரிப்போர்ட் இல்ல. அந்த விளையாட்டுத் திடல் பயன்படுத்தப்படாம பாழடைஞ்சு கெடக்குங்கறது உண்மைதானே? அந்த இடத்தில ஜிம் வைக்கறதில தப்பு இல்லேன்னு கூட நீங்க சொல்ல வேண்டாம். அந்த இடத்தை வேற விதமாப் பயன்படுத்தறதை பத்திப் பரிசீலிக்கலாம்னு எழுதினா கூடப் போதும். அதை வச்சு நாங்க மேல எழுதிக்கறோம்" என்றார் வேலாயுதம்,

"ஐ ஆம் சாரி சார்" என்றார் மணவாளன் சுருக்கமாக.

"உங்களுக்குத் தெரியும்னு நினைக்கறேன். பிரமோஷன் லிஸ்ட்ல ஒங்க பேரு இருக்கு. இன்னும் ரெண்டு மூணு மாசத்துல பிரமோஷன் வந்துடும். அதை நீங்க மிஸ் பண்ணப் போறீங்களா?"

"நான் வரேன் சார்" என்று எழுந்தார் மணவாளன்.

"மணவாளன்! நீங்க ஒத்துழைக்காததால் அமைச்சர் இதைக் கைவிட்டுட மாட்டாரு. உங்களை மாத்திட்டு ஒங்க இடத்தில வேற ஆளைப் போட்டு வேலையை முடிச்சுடுவாங்க. நான் எதுவும் செஞ்சுட்டதா நினைக்காதீங்க" என்றார் வேலாயுதம்.

மணவாளன் சிரித்துக்கொண்டே வெளியேறினார்.

அநேகமாக அவரை வேறு ஊருக்கு மாற்றி விடுவார்கள். இது அக்டோபர் மாதம் என்பதால் பிள்ளைகளை வேறு ஊரில் போய்ப் பள்ளியில் சேர்க்க முடியாது. அவர் மட்டும்தான் போக வேண்டும். மனைவியும் குழந்தைகளும் தனியே இங்கே இருக்க வேண்டும். அதிகச் செலவு. அது தவிர இன்னும் பல அசௌகரியங்கள்.

இதுபோல் ஏற்கெனவே சிலமுறைகள் நடந்திருக்கின்றன. இதனால் அவர் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இத்தனை வருடம் அரசாங்க வேலையில் இருந்தும் நாலு காசு சேர்க்கவில்லை. சொந்தமாக வீடு வாங்கவில்லை.

'நாலு பேர் என்னைக் கேலி பேசுவார்களோ?'

அவருக்குத் தெரியவில்லை.
அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 117
கெடுவாக வையாது உலகம் நடுவாக 
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

பொருள்:  
நடுநிலைமை தவறாமல் செயல்பட்டதால் ஒருவனுக்குக் கேடு  விளைந்தாலும், அதற்காக உலகம் அவனைப் பழிக்காது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 116
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Monday, January 1, 2018

116, மாற்றி எழுதிய தீர்ப்பு

நாளை தீர்ப்பளிப்பதாக அவர் கூறி நீதிமன்ற நோட்டிஸ் போர்டிலும் போட்டு விட்டார்கள்.

பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து யாருடையது என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

தீர்ப்பின் பெரும்பகுதியை அவர் எழுதி விட்டார். இரு தரப்பினரின் வாதங்களைத் தொகுத்து எழுதியாகி விட்டது. அந்த வாதங்கள் பற்றித் தன்னுடைய கருத்தை எழுதி, எந்தத் தரப்பு வாதத்தைத் தான் ஏற்றுக் கொள்கிறேன் என்று எழுதி, அதற்கான காரணங்களைக் குறிப்பிட வேண்டும்.

இன்னும் இருபது பக்கங்கள் எழுத வேண்டி இருக்கலாம்.

இருபது!

அந்த எண் அவர் நினைவை வேறு பக்கம் செலுத்தியது.

ருபது லட்சம்!

அதுதான் அவர்கள் அவருக்குக்  கொடுப்பதாகச் சொன்ன தொகை - அவர்களுக்குச் சாதகமாக அவர் தீர்ப்பு எழுதினால்!

ஒருநாள் காலையில் அவர் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அவர் பக்கத்தில் நடந்து வந்த முதியவர்தான் முதலில் இதைப் பற்றிப் பேசினார். அவர் உடனே கோபப்பட்டு மறுத்துப் பேச, அமைதியாக இருப்பதுதான் அவருக்கு நல்லது என்று அந்த முதியவர் அறிவுறுத்தினார்.

அதற்குப் பிறகு, பல சமயங்களில் வேறு சிலர் மூலமாக அவருக்கு ஒரு செய்தி சொல்லப்பட்டது. அவர்களுக்குச் சாதகமாக அவர் தீர்ப்பு எழுதினால், அவருக்கு 20 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும். யாரும் கண்டு பிடிக்க முடியாத விதத்தில், பணம் எப்படி, எவ்வாறு கொடுக்கப்படும் என்பதெல்லாம் அவருக்கு விவரமாக விளக்கப்பட்டது. தான் அப்படித் தீர்ப்பளித்தாலும் இன்னொரு தரப்பு மேல்முறையீடு செய்யுமே என்று அவர் சொல்லிப் பார்த்தார்.

அதைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டாம் அன்று அவர்கள் சொல்லி விட்டார்கள். 'கீழே பார்த்துக் கொண்ட எங்களால் மேலே பார்த்துக் கொள்ள முடியாதா?' என்றார்கள்.

இத்தனை வருடங்களில் அவர் நடுநிலை தவறியதில்லை. அவரது நேர்மைக்காக அவர் மிகவும் மதிக்கப்பட்டார். நேர்மையாக இல்லாத அவருடைய மேலதிகாரிகள் கூட அவரை மரியாதையுடன்தான் பார்த்தனர்.

'ஏன் எனக்கு இந்தச் சபலம்? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் என் மனம் ஊசலாடுகிறது? ஒய்வு பெறும் சமயம் ஒரு பெரிய தொகை கிடைத்தால் பிற்காலத்தில் வசதியாக இருக்கலாமே என்றா?'

அவருக்குப் புரியவில்லை. ஆனால் முதல் முறையாக அவருக்கு ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது. அதனால்தான் எப்போதும் இரண்டு நாட்கள் முன்பே தீர்ப்பை எழுதி முடித்து விடும் வழக்கமுடைய அவர் இப்போது கடைசி நாள் வரை எழுதி முடிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

வர் ஒரு முடிவுக்கு வந்தார்.

இத்தனை ஆண்டுகள் நேர்மையாக இருந்தாகி விட்டது. ஒருமுறை பணத்துக்காக சற்று மாறுபட்டு நடந்து கொண்டால் என்ன?

கிடுகிடுவென்று தீர்ப்பை எழுதி முடித்தார். அவர் எப்போதுமே தீர்ப்பைக் கையால் எழுதி, நீதிமன்றத்தில் படித்த பிறகுதான், டைப் செய்யக் கொடுப்பது வழக்கம். தன் டைப்பிஸ்டுக்குக் கூடத்  தீர்ப்பின் விவரம் தெரியக் கூடாது என்று  கவனமாகச் செயல்பட்டவர் அவர்.

இரவில் திடீரென்று விழிப்பு வந்தது. தலைவலி! எழுந்து மாத்திரையை விழுங்கி விட்டுப் படுத்துக் கொண்டார். வலி போகவில்லை. நேரமாக ஆக வலி அதிகம் ஆகிக்கொண்டே இருப்பது போல் இருந்தது.

அவருக்குப் பழைய நினைவு வந்தது.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென்று ஒற்றைத் தலைவலி வர ஆரம்பித்தது. திடீர் திடீரென்று வரும். வந்தால் பலமணி நேரம்  நீடிக்கும். துளை போடும் இயந்திரத்தினால் யாரோ தலையைக் குடைவது போல் துடிதுடிக்கச் செய்யும் வலி.

பல ஆண்டுகள் இந்தத் தலைவலியால் அவதிப்பட்டார் அவர். பலவகை மருந்துகள் சாப்பிட்டும் வலி குறையவில்லை.

ஒருமுறை தன் குலதெய்வம் கோவிலுக்குப் போயிருந்தார். 'நான் ஒரு சிறிய தவறு கூடச் செய்யாமல் நேர்மையாக வாழ்ந்து வருகிறேன். என்னை ஏன் இப்படி வாட்டி வதைக்கிறாய்?' என்று குலதெய்வத்திடம் முறையிட்டார்.

இதற்குப் பிறகு சில மாதங்களில் அவர் தலைவலி படிப்படியாகக் குறைந்து பிறகு முழுவதுமாக நின்று விட்டது. அவர் சாப்பிட்ட சித்த மருந்துதான் அவரை குணப்படுத்தியது என்று அவர் மனைவி சொன்னாள். ஆனால், தான் குலதெய்வத்திடம் முறையிட்டதால் குலதெய்வம் தன் மீது கருணை காட்டியதாக அவர் நம்பினார்.

அந்த நினைவு இப்போது வந்ததும், அந்தப் பழைய ஒற்றைத் தலைவலிதான் திரும்ப வந்து விட்டதோ என்று தோன்றியது.

தூங்க முடியாமல், வலி பொறுக்க முடியாமல் நீண்ட நேரம் துடித்தார்.

'கடவுளே! என்னை ஏன் இப்படி வாட்டி வதைக்கிறாய்?' என்று அலறத் தோன்றியது. முன்பு தான் குலதெய்வத்திடம் முறையிட்டது நினைவுக்கு வந்தது.

இப்போது அப்படி முறையிட முடியுமா?

வலியையும் மீறி அவர் ஒரு தெளிவைத் தனக்குள் உணர்ந்தார்.

படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து தான் எழுதி வைத்திருந்த தீர்ப்புக் காகிதங்களை எடுத்தார். கடைசி இருபது பக்கங்களை மாற்றி எழுதினார். ஒருவித வெறி வந்தது போல் கை வேகமாக இயங்கித் தீர்ப்பை எழுதி முடித்தது.

மாற்றி எழுதப்பட்ட தீர்ப்பை எடுத்து உள்ளே வைத்து விட்டு மீண்டும் படுக்கையில் விழுந்தார். வலி இன்னும் குறையவில்லை. ஓருவேளை அவர் தீர்ப்பை நீதிமன்றத்தில் படித்து முடித்த பிறகு குறையலாம்!


அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் 
நடுவொரீஇ அல்ல செயின்.

பொருள்:  
தான் நடுநிலைமை தவறிச் செயல்பட்டால் தனக்கு கெடுதல் வரும் என்பதை ஒருவன் உணர வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 115
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்