About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, January 7, 2018

120. மர பீரோ

கிராமத்து வீட்டை விற்று விட்டுக் கிளம்பியபோது, வீட்டிலிருந்த சிறிய பொருட்கள் எல்லாவற்றையும் ஊரில் இருந்தவர்களுக்குப் பெரும்பாலும் இலவசமாகவும், ஒரு சிலவற்றை எடைக்குப் போடுவது போன்ற விலைக்கும் கொடுத்த பிறகு, மூன்று பெரிய மரச் சாமான்கள் மிஞ்சின. ஒரு பீரோ, ஒரு சாய்வு நாற்காலி, ஒரு பெரிய மேஜை.

மூன்று சகோதரர்களும் ஆளுக்கு ஒன்று என்று பிரித்துக் கொண்டோம். என் பங்குக்கு மர பீரோ கிடைத்தது. சாய்வு நாற்காலியையும், பெரிய மேஜையையும் என் சகோதரர்கள் ஊரில் இருந்த ஒரு புதுப்பணக்காரருக்கு நல்ல விலைக்கு விற்று விட்டார்கள். புதுப்பணக்காரர் என்னிடம் பீரோவை விலைக்குக் கேட்டார். ஆனால் நான் அதை விற்க விரும்பவில்லை.

பீரோவைச் சென்னையிலிருந்த என் (வாடகை) வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டேன். 'கொண்டு வந்து விட்டேன்' என்று சாதாரணமாகச் சொல்லி விட்டேனே தவிர, கொண்டு வருவது அவ்வளவு சுலபமாக இல்லை. பீரோ மிகவும் கனம் என்பதால் பல ஆட்களை வைத்து அதை மாட்டு வண்டியில் ஏற்றி, 10 கிலோமீட்டர் தூரத்தில், நகரத்தில் இருந்த லாரி ஆஃபீசுக்குக் கொண்டு வந்தேன்.

லாரி ஆஃபீசில் பீரோவை இறக்கவும் பல ஆட்கள் தேவைப்பட்டனர். முதலில் லாரி ஆஃபீசில் பீரோவை லாரியில் ஏற்றி அனுப்ப முடியாது என்று சொல்லி விட்டார்கள். கெஞ்சிக் கூத்தாடி அவர்களைச் சம்மதிக்க வைத்தேன். அவர்கள் கேட்ட லாரி வாடகைத் தொகையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து, பீரோவை அங்கேயே விட்டு விட்டு, அவர்கள் கவனிக்காதபோது நழுவி ஒடி விடலாமா என்று கூட யோசித்தேன். ஆயினும் வேறு வழியின்றி அவர்கள் கேட்ட வாடகையைக் கொடுத்து பீரோவை லாரியில் அனுப்ப ஏற்பாடு செய்தேன். 

சென்னைக்கு பீரோ வந்ததும், அதை லாரி ஆஃபீசிலிருந்து வீட்டுக்குக்  கொண்டு வர நான் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கொள்ளை அடிப்பது போல் என்னிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்ட லாரி நிறுவனமும், கூலி ஆட்களும் ஏதோ எனக்கு இலவச சேவை செய்வது போல் நடந்து கொண்டார்கள். ஒவ்வொருவரிடமும் நான் கெஞ்ச வேண்டியிருந்தது.

"என்ன சார் பீரோ இது? பொணம் கனம் கனக்குது!" என்ற விமரிசனத்தைப் பலமுறை பலர் வாயிலிருந்தும் கேட்டு விட்டேன். 

பீரோவைத் தூக்குபவர்கள் கவனமாகத் தூக்காமல் கீழே போட்டு விட்டால் பீரோவுக்குச் சேதம் ஏற்பட்டு விடுமே என்ற பயத்தில் "பார்த்து மெதுவாத் தூக்குங்க!" என்று அடிக்கடி அவர்களிடம் கெஞ்சிக் கொண்டே இருந்தேன்.

ஒரு வழியாக பீரோ வீட்டுக்கு வந்து சேர்ந்ததுமே, கழுகுக்கு மூக்கில் வியர்த்தது போல் ஒடி வந்த வீட்டுச் சொந்தக்காரர் "என்ன சார் இது? எங்கேந்து கொண்டு வரீங்க இதை? தரை உடைஞ்சுடப் போகுது. பார்த்துக்கங்க!" என்று எச்சரித்தார்.

'இரும்பு பீரோவால்தான்யா தரை உடையும், மர பீரோவால் உடையாது, இது கூட உன் மர மண்டைக்குத் தெரியாதா?' என்று மனதில் எழுந்த வார்த்தைகளை விழுங்கி விட்டு அசட்டுத்தனமாகச் சிரித்து விட்டு "நான் பாத்துக்கறேன் சார்! கவலைப்படாதீங்க" என்று பொறுமையாக பதில் சொன்னேன்.

ஒரு வழியாக பீரோ வீட்டுக்குள் வந்து நிலை கொண்டது. பீரோவைக் கொண்டு வந்து சேர்த்ததற்கு ஆன மொத்த செலவைக் கேட்டதும் என் மனைவி மயங்கி விழாத குறையாக "இவ்வளவு செலவழிச்சதுக்கு, நாலு காட்ரேஜ் பீரோ வாங்கி இருக்கலாம் போலிருக்கே!" என்றாள்

15 வருடங்களில் மூன்று முறை வீடு மாறிய போதும் பீரோவை இடம் மாற்ற நிறையச் செலவாயிற்று.

ப்போது சொந்த வீடு வாங்கிக் கொண்டு போகும்போது பீரோவை எடுத்துக் கொண்டு போக முடியவில்லை. என் சொந்த வீட்டில் பீரோவை வைக்க இடம் இல்லை என்று என் குடும்பத்தினர் அனைவரும் (என்னைத்தவிர) சேர்ந்து முடிவு செய்து விட்டனர்.

"இந்த பீரோவுக்காக நீங்க செலவழிச்சதெல்லாம் போதும். இதை வித்துத் தொலையுங்க" என்றாள் என் மனைவி.

வேறு வழியின்றி பீரோவை விற்க முடிவு செய்தேன்.

பத்திரிகை விளம்பரங்களைப் பார்த்தபோது, பழைய பொருட்களை வாங்க இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று வியப்பாக இருந்தது. ஐந்தாறு வியாபாரிகளிடம் காட்டி யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களிடம் விற்று விடலாம் என்று (புத்திசாலித்தனமாக!) நினைத்துக் கொண்டேன்.

ஆனால் பீரோவைப் பார்த்த யாருமே அதற்கு ஒரு சுமாரான விலை கொடுக்கக் கூடத் தயாராயில்லை.

"இதெல்லாம் போகாது சார்! விறகுக்குக் கூட யாரும் வாங்க மாட்டாங்க. வேணும்னா சொல்லுங்க. வண்டியில எடுத்துக்கிட்டுப் போயி எங்கேயாவது போட்டுட்டு வரேன். விலை எதுவும் கிடைக்காது" என்றார் ஒருவர்.

இன்னொருவர் பழைய பேப்பருக்குக் கொடுக்கும் விலையை விடக் குறைவான விலைக்குக் கேட்டார்.

ஐந்தாறு பேர் வந்து பார்த்தபின், ஜனார்த்தனன் என்று ஒருவர் வந்தார்.

பீரோவை நன்கு திறந்து ஒவ்வொரு பகுதியாகத் தொட்டுப் பார்த்து விட்டு, "ரொம்பப் பழைய பீரோவா இருக்கும் போலருக்கே! எவ்வளவு எதிர்பாக்கறீங்க?" என்றார்.

"அஞ்சாயிரம் ரூபாய் கொடுப்பீங்களா?" என்றேன், தயக்கத்துடன்.

ஜனார்த்தனன் சிரித்தார். "சார்! நான் ஒரு வியாபாரி. நான் விற்பனை செய்யற சரக்குக்கு அதுக்கு உரிய விலை கிடைக்கணும்னு எதிர்பார்ப்பேன். அதுபோல மத்தவங்களோட பொருளுக்கும் உரிய விலை அவங்களுக்குக்  கிடைக்கணும்னு நினைக்கறவன் நான்."

"என்ன சொல்ல வரீங்க?" என்றேன் நான், குழப்பத்துடன்.

"சார்! இது மாதிரி பழைய பொருட்களுக்கெல்லாம் நிறைய விலை கொடுக்க சில பேர் தயாரா இருக்காங்க. நான் உங்ககிட்ட அஞ்சாயிரம் ரூபா கொடுத்து இந்த பீரோவை வாங்கிட்டுப் போய் ஒரு ஆன்ட்டிக் டீலர் கிட்ட நிறைய விலைக்கு வித்துடலாம். ஆனா அது உங்களை ஏமாத்தறதா இருக்கும். நான் எனக்குத் தெரிஞ்ச ஆன்ட்டிக் டீலர்கள் சிலரோட ஃபோன் நம்பர் தரேன். அவங்களுக்கு ஃபோன் பண்ணிப் பாருங்க. அவங்க வந்து பார்த்துட்டு என்ன விலைக்கு எடுத்துக்கறோம்னு சொல்லுவாங்க. வேற சில டீலர்கள்கிட்டேயும் கேட்டுப் பாருங்க. யார் நல்ல விலை கொடுக்கறாங்களோ அவங்ககிட்ட வித்துடுங்க."

"இது சுமாரா என்ன விலைக்குப் போகும்னு நினைக்கிறீங்க?" என்றேன் நான், வியப்புடன்.

"என்னால கரெக்ட்டா சொல்ல முடியாது. எப்படியும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல போகும்!" என்றார் ஜனார்த்தனன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

பொருள்:  
வியாபாரம் செய்பவர்கள் பிறர் பொருளையும் தங்கள் பொருள் போல் கருதிச் செயல்பட்டால் அதுவே சிறந்த வணிக முறை ஆகும்.
பொருட்பால்                                                                                                   காமத்துப்பால்



































2 comments: