About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, January 29, 2019

237. நானும் விஞ்ஞானிதான்!

"காயப்படுத்திட்டு, அவமானமும் படுத்தற மாதிரின்னு இங்கிலீஷில சொல்லுவாங்க, அது மாதிரி இருக்கு. என்னைப் புறக்கணிச்சுட்டு என்னோட ஜுனியருக்கு அவார்ட் கொடுப்பாங்களாம். அவனுக்கு நடத்தற பாராட்டு விழாவிலே நானே அவனைப் பாராட்டிப் பேசணுமாம்!" என்று தன் மனைவி சுகந்தியிடம் பொருமினான் ராமநாதன்.

"உங்க டைரக்டர் கிட்டயே போய்க் கேளுங்க!" என்றாள் சுகந்தி.

"கேக்கத்தான் போறேன்!"

"என்ன மிஸ்டர் ராமநாதன் இது? நம்ம இன்ஸ்டிட்யூட்ல ஒருத்தருக்கு பத்மஸ்ரீ கிடைச்சதுக்கு நீங்க பெருமைப்படணும். அதை விட்டுட்டு, குறை சொல்றீங்களே!" என்றார் டைரக்டர் கமல்நாத்.

"பெருமைப்படலாம் சார்! ஆனா அவனை விட அனுபவத்திலயும், ரேங்க்கிலயும் நான் சீனியர். என்னை ஓவர்லுக் பண்ணிட்டு அவனுக்கு பத்மஸ்ரீக்கு நீங்க சிபாரிசு பண்ணியிருக்கீங்க. இது அநியாயம் இல்லையா?"

"நீங்க சீனியர்தான். ஆனா இது குமரேசனோட ஆராய்ச்சிக்காக அவருக்குக் கிடைச்ச அங்கீகாரம். அவர் செஞ்ச ஆராய்ச்சி ஒரு பிரேக் த்ரூ ரிஸர்ச். இன்டர்நேஷனல் ஜர்னல்ல எல்லாம் அதைப் பத்திப் பேசறாங்க. அதனாலதான் அவருக்கு அங்கீகாரம் கொடுக்கணும்னு நான் அரசாங்கத்துக்கு சிபாரிசு பண்ணினேன். அரசாங்கமும் அவரோட பங்களிப்போட மதிப்பை உணர்ந்து அவருக்கு பத்மஸ்ரீ கொடுக்க முடிவு செஞ்சிருக்காங்க. இதில சீனியாரிட்டி எங்கேந்து வந்தது?"

"சார்! இங்கே எல்லா சைன்ட்டிஸ்ட்களும் வேலை செய்யறாங்க. என்னவோ குமரேசன் மட்டும்தான் பெரிசா செஞ்சுட்ட மாதிரி பேசறீங்க."

"நீங்க சொன்னாலும், சொல்லாட்டாலும் உண்மை அதுதான். இந்த இன்ஸ்டிட்யூட்ல ஆராய்ச்சி செய்ய அரசாங்கம் நிறைய வசதி செஞ்சு கொடுத்திருக்கு. ஆனா குமரேசன் மாதிரி ஒரு சில பேர்தான் அதை முழுமையாப் பயன்படுத்திக்கறாங்க."

"அப்ப நான் ஒண்ணுமே செய்யலேன்னு சொல்றீங்களா?"

"ராமநாதன்! உலகத்தில எவ்வளவோ பேரு ஆராய்ச்சி பண்றாங்க. அரசாங்கத்தில, தனியார் நிறுவனங்கள்ள, சில பேரு தனி நபர்களாகக் கூட. எந்த ஒரு வசதியும் இல்லாம ஒரு சின்ன ஆராய்ச்சிக் கூடத்தில தங்களோட சொந்தக் காசைச் செலவழிச்சு, பெரிய வருமான வாய்ப்புகளையெல்லாம் விட்டுட்டு ராப்பகலா ஆராய்ச்சி பண்றவங்க இருக்காங்க. ஆனா இங்கே அரசாங்கம் நமக்கெல்லாம் நிறைய சம்பளம் கொடுத்து, குடியிருக்க வீடு கொடுத்து, ஆராய்ச்சி செய்யத் தேவையான எல்லா வசதிகளையும் செஞ்சு கொடுத்திருக்கு. இன்னும் ஏதாவது கருவிகளோ, வேற வசதிகளோ வேணும்னு கேட்டாக் கூட உடனே சாங்ஷன் ஆகிடும். ஆனா இதையெல்லாம் சரியாப் பயன்படுத்திக்கிட்டு சிறப்பா ஆராய்ச்சி செய்யறவங்க எத்தனை பேரு? குமரேசனோட சீனியர்களெல்லாம் அஞ்சு மணிக்கு வீட்டுக்குப் போயிடுவாங்க. ஆனா குமரேசன் நேரம் பாக்காம உழைச்சு பெரிய அளவில கான்ட்ரிப்யூட் பண்ணி இருக்காரு. அவரைப் பாராட்டிப் பேசறது உங்களுக்குத் பெருமைதான்னு நான் நினைக்கிறேன்" என்றார் கமல்நாத்.

ராமநாதனுக்கு, தான் ஏன் இது பற்றி டைரக்டரிடம் கேட்டோம் என்று ஆகி விட்டது! 

இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 237
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.

பொருள்:  
புகழ் பட வாழ முடியாதவர்கள் தங்களை நொந்து கொள்ளாமல் தங்களை இகழ்பவர்களைக் குறை சொல்வது ஏன்?

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்













Sunday, January 27, 2019

236. முன்னணிப் பாடகர்

சினிமா டைரக்டர் சுந்தர் ஸ்ரீதர், கதாசிரியர் குருசாமியுடன் ராமசுப்ரமணியத்தின் வீட்டுக்குப் போனபோது, ஒரு வேலையாள் அவர்களை வரவேற்று முன்னறையில் உட்கார வைத்தான்.

"சார் கிட்ட நாங்க வரதா ஃபோன் பண்ணிச் சொல்லி இருந்தோம்" என்றார் சுந்தர் ஸ்ரீதர்.  

"ஐயா சாதகம் பண்ணிக்கிட்டிருக்காங்க. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவாங்க" என்றான் வேலையாள் சுருக்கமாக.

"சாதகமா?" என்ற கேள்வி முகத்தில் ததும்ப குருசாமியைப் பார்த்த சுந்தர் ஸ்ரீதரிடம், "ரிகர்சல்!" என்றார் குருசாமி ரகசியமாக.

"ஓ!" என்று தலையாட்டிய சுந்தர் ஸ்ரீதர், வேலையாளிடம், "சாருக்கு இன்னிக்கு கச்சேரி ஏதாவது இருக்கா என்ன?"என்றார்.

"இல்லீங்க. இப்பதானே டிசம்பர் சீசன் முடிஞ்சிருக்கு!  அதனால ஒரு மாசத்துக்கு கொஞ்சம் ஓய்வாத்தான் இருப்பாரு" என்றான் வேலையாள்.

"அப்ப எதுக்கு ரிகர்சல்?" என்று சுந்தர் ஸ்ரீதர் யோசித்துக் கொண்டிருந்தபோதே, உள்ளிருந்து ராமசுப்ரமணியம் வந்து விட்டார்.

பரஸ்பரம் நலம் விசாரித்த பின், "சொல்லுங்க! என்ன விஷயம்?" என்றார் ராமசுப்ரமணியம்.

"சார்! சங்கராபரணம்னு ஒரு படம் வந்தது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்."

"பாத்திருக்கேன். சொல்லுங்க."

"கர்நாடக சங்கீதத்தை அடிப்படையா வச்சு அது மாதிரி ஒரு படம் அப்புறம் வந்ததில்லை. இப்ப இவர் ஒரு அருமையான கதை வச்சிருக்காரு. அதை வச்சு சங்கராபரணத்துக்கு இணையா இன்னொரு படம் பண்ணலாம்னு இருக்கோம்."

"நல்ல விஷயம். பண்ணுங்க."

"ஒரு அஞ்சு நிமிஷம் நீங்க இந்தக் கதையைக் கேட்டீங்கன்னா நல்லா இருக்கும்."

"நான் கதையைக் கேட்டு என்ன ஆகப் போகுது? சரி, நீங்க விருப்பப்படறீங்க சொல்லுங்க" என்றார் ராமசுப்ரமணியம்.

"சொல்லுங்க" என்று சுந்தர் ஸ்ரீதர் குருசாமியிடம் சொன்னதும், குருசாமி கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஐந்து நிமிடம் என்று சுந்தர் ஸ்ரீதர் சொன்னாலும், குருசாமிக்குக் கதையைச் சொல்லி முடிக்க அரைமணி நேரம் ஆயிற்று.

"கதை நல்லாத்தான் இருக்கு. ஆனா எங்கிட்ட எதுக்கு இதைச் சொல்றீங்கன்னுதான் தெரியல!" என்றார் ராமசுப்ரமணியம்.

"சார்! இது ஒரு கர்நாடக சங்கீத வித்வானைப் பத்தின படம். இதில நீங்கதான் சங்கீத வித்வானா நடிக்கணும்னு கேட்டுக்கத்தான் வந்திருக்கோம்" என்றார் சுந்தர் ஸ்ரீதர்.

ராமசுப்ரமணியம் பெரிதாகச் சிரித்தார்.

"ஏன்  சார் சிரிக்கிறீங்க?"

"சொல்றேன். அதுக்கு முன்னால, என்னை ஏன் இந்த ரோலுக்குத் தேர்ந்தெடுத்தீங்கன்னு சொல்ல முடியுமா?"

"நீங்க ஒரு முன்னணி சங்கீத வித்வான். உங்களைப் பத்தித் தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது. நீங்க நடிச்சா, படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்."

"ஆனா, எனக்கு நடிக்கத் தெரியாதே!"

"சார்! அதெல்லாம் தேவையில்லை. நீங்க சும்மா வந்து நின்னு, உங்களுக்குத் தெரிஞ்ச அளவில வசனத்தைப் பேசிட்டுப் போனா போதும். உங்களை எல்லோரும் சங்கீத வித்வானாத்தான் பாப்பாங்களே தவிர, உங்க நடிப்பைப் பத்தி யாரும் கண்டுக்க மாட்டாங்க" என்றார் சுந்தர் ஸ்ரீதர்.

"அதான் விஷயம்!" என்றார் ராமசுப்ரமணியம். "நான் சங்கீதம் கத்துக்கிட்டுப் பாட ஆரம்பிக்கவே எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் தெரியுமா? நான் மட்டும் இல்ல, இன்னிக்கு நல்லா பாடறவங்கன்னு பேர் வாங்கி இருக்கிறவங்க எல்லாருமேதான். தினம் காலையில 4 மணிக்கு எழுந்து ரெண்டு மணி நேரம் சாதகம் பண்ணுவேன். இது மாதிரி பல வருஷங்கள் பண்ணினப்பறம்தான் எனக்குப் பாடவே வந்தது.

"பாட ஆரம்பிச்சப்பறமும், தினம் சாதகம் பண்ணி, புதுசா புதுசாப் பல விஷயங்களைப் படிச்சும் கேட்டும் தெரிஞ்சுக்கிட்டு, நல்லாப் பாடறவங்க பல பேரு கச்சேரிகளைத் திரும்பத் திரும்பக் கேட்டு, இரும்பை உலையில் காய்ச்சி அடிக்கற மாதிரி என்னைப் பண்படுத்திக்கிட்டு, இன்னிக்கு ஒரு முன்னணிப் பாடகன்னு நீங்க நினைக்கிற அளவுக்கு வளந்திருக்கேன்.

"இப்பவும் தினமும் சாதகம் பண்றதையோ, புதுசா எதையாவது கத்துக்கறதையோ நிறுத்தல. கச்சேரி இருந்தாலும் இல்லாட்டாலும் தினமும் காலையில சாதகம் பண்ணாம இருக்க மாட்டேன். ஒரு துறையில முன்னேறணும்னா இவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு. உங்களுக்கும் இது தெரியும். ஏன்னா நீங்களும் பெரிய டைரக்டரா, கதாசாரியரா வர எவ்வளவோ கஷ்டப்பட்டிருப்பீங்க. அப்படி இருக்கச்சே, திடீர்னு ஒண்ணுமே தெரியாம நான் ஒரு நடிகனா ஆகணும்னு சொல்றீங்களே, அது எப்படி?"

"இல்ல சார்! இது வந்து..."

"மன்னிச்சிடுங்க. ஒரு துறையில இறங்கினா அதில சிறப்பா வர அளவுக்கு நம்மளைத் தயார்படுத்திக்கணும். சும்மா ஒப்புக்கு நடிக்கறதில எனக்கு விருப்பமில்லை. நீங்க ஒரு நல்ல நடிகரைப் போட்டுப் படம் எடுக்கறதுதான் நல்லதுங்கறது என்னோட கருத்து" என்றார் ராமசுப்ரமணியம்.

சுந்தர் ஸ்ரீதரும், குருசாமியும் மௌனமாகக் கை கூப்பி விடை பெற்றனர்.

இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

பொருள்:  
ஒரு துறையில் தாம் இருப்பதைக் காட்டிக் கொள்ள விரும்பினால், புகழ் பெற்றவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில், தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதே நல்லது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்
























Sunday, January 20, 2019

235. சிறைவாசத்துக்குப் பின்...

எல்லோராலும் மிகவும் மதிக்கப்பட்ட கல்லூரிப் பேராசிரியருக்கு இந்த கதியா என்று அனைவரும் திகைக்கும் வகையில் கஸ்தூரிரங்கனுக்கு சில அனுபவங்கள் ஏற்பட்டன.

பொருளாதாரப் பேராசிரியரான கஸ்தூரிரங்கனை வெளியூரில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த மாணவர்கள் கருத்தரங்குக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரிரங்கன் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையை விமரிசித்துப் பேசினார். 

அரசின் பொருளாதாரக் கொள்கைகள் வறுமையில் உள்ளவர்களை இன்னும் கீழே தள்ளும் விதத்தில் அமைந்திருப்பதாகவும், இதனால் ஏழை மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்றும் அவர் பேசினார். 

அவருடைய பேச்சை வீடியோ எடுத்த சில மாணவர்கள் அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

கஸ்தூரிரங்கன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ரயிலில் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். அவர் ரயிலில் வந்து இறங்கியதும், வீட்டுக்குச் செல்லும் முன்பே ரயில் நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யும்போது போலீசார் அவரிடம் காரணம் எதுவும் கூறவில்லை. ஆனால் மறுநாள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் தேச ஒற்றுமைக்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். 

ஜாமீனில் வெளி வர முடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் போடப்பட்டு அவர் 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.

கஸ்தூரிரங்கன் கைதுக்கு எதிராகப் பொது மக்களிடையேயும், ஊடகங்களிலும் எதிர்ப்புக் குரல் எழுந்தது. ஆனால் அரசாங்கம் இவற்றுக்குச் செவி சாய்க்கவில்லை. 

சில ஊடகங்கள் கஸ்தூரிரங்கன் கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்தி, அவர் பல்வேறு தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக அவதூறுச் செய்திகள் வெளியிட்டன.

14 நாட்கள் முடிந்ததும் கஸ்தூரிரங்கனின் காவல் இன்னும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. அவர் குடும்பத்தினரும்,சில ச மூக ஆர்வலர்களும் அவரது கைதுக்கு எதிராக வழக்குகள் தொடுத்தனர். 

வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நடந்து வந்தன. அரசின் தரப்பில் இந்த வழக்குகளை முறியடிக்கப் பல நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

இதற்கிடையே அவர் காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. 

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கஸ்தூரிரங்கனின் உடல்நிலை சிறைவாசத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. 

அவரைச் சிறையில் சென்று பார்க்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

ஸ்தூரிரங்கன் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. 

ஆயினும் அரசாங்கம் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்தது.

கஸ்தூரிரங்கன் விடுதலையாகிச் சிறையிலிருந்து வெளியே வந்தபோது, அவரை வரவேற்க அந்த ஊரே திரண்டு வந்திருந்தது. 

ஒரு பெரிய அரசியல் தலைவருக்கு வரக் கூடிய கூட்டத்தை விட அதிகமான கூட்டம் சிறை வாசலில் கூடியிருந்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன.

கஸ்தூரிரங்கன் மூன்று மாத சிறைவாசத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்கக் கூட இயலாத அளவுக்கு பலவீனமாக இருந்தார். 

அவரைப் பார்த்ததுமே, அங்கு கூடியிருந்தவர்கள் அவருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர். கஸ்தூரிரங்கன் அனைவரையும் கைகூப்பி வணங்கி விட்டுக் காரில் ஏறித் தன் வீட்டுக்குச் சென்றார். 

கஸ்தூரிரங்கன் தேசத்துரோகக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டதைக் காரணம் காட்டி அவர் வேலை பார்த்து வந்த கல்லூரி அவரைப் பதவி நீக்கம் செய்திருந்தது. இதற்குப் பொதுமக்களிடமிருந்து பெரும் கண்டனம் எழுந்தது. 

கஸ்தூரிரங்கனுக்கு வேலை கொடுப்பதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்த கல்லூரிகள், நிறுவனங்களிலிருந்து வெளிப்படையான அறிவிப்புகள் வந்தன. வெளிநாடுகளிலிருந்து கூட சில வாய்ப்புகள் வந்தன. 

உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக கஸ்தூரிரங்கன் வீட்டிலேயே ஓய்வாக இருந்தார். பொதுமக்களின் மனநிலையைப் புரிந்து கொண்ட அரசாங்கம் அவரது விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல், சந்தடியின்றி வழக்கைக் கைகழுவியது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஊரின் சில முக்கிய மனிதர்கள் கஸ்தூரிரங்கனை அவர் வீட்டில் வந்து  பார்த்தனர். 

அவர் உடல்நலம் பற்றி விசாரித்தபின், அவர்களைத் தலைமையேற்று அழைத்து வந்தவர், "வரப்போற நாடாளுமன்றத் தேர்தல்ல நம்ப தொகுதியில நீங்க நிக்கணும்னு எல்லோரும் விரும்பறாங்க. நீங்க நிக்கறதா இருந்தா தங்களோட கட்சி சார்பா யாரையும் நிறுத்தாம உங்களை ஆதரிக்கறதா எல்லா எதிர்க்கட்சிகளும் அறிவிச்சிருக்காங்க" என்றார்.  

இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.

பொருள்:  
தமக்கு நேரும் கெடுதல்களையும் தங்கள் புகழுக்குப் பெருமை சேர்ப்பதாகச் செய்வதும், மரணம் கூடத் தங்கள் புகழை மேம்படுத்தச் செய்வதும்  அறிவாற்றலில் சிறந்தவர்களைத் தவிர மற்றவர்க்கு அரிதான செயல்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்














Thursday, January 17, 2019

234. இந்திரன் அளித்த விருந்து

அந்த ஊர் எல்லையில் ஓடும் ஆறு அதன் திடீர் வெள்ளப் பெருக்குக்குப் பெயர் போனது.

கடந்த காலங்களில், பின்னிரவில் ஊரே உறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஆற்றில் வெள்ளம் வந்து நிறைய பொருட்சேதத்தையும், உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த ஆறு அந்த ஊரிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த ஒரு சிறிய மலையிலிருந்து உற்பத்தி ஆகிறது. மலையில் சிறிதளவு மழை பெய்தால் கூட அத்தனை நீரும் ஆற்றில் வழிந்து ஓடி விடும். 

இதனால் அந்தப் பகுதிக்கு தண்ணீர் அதிகம் கிடைத்து வந்த நன்மை இருந்தாலும், திடீரென்று ஏற்படும் வெள்ளப் பெருக்கின் பிரச்னையும் இருந்தது.

அந்த ஊரில் மட்டும் ஆற்றின் கரை சற்றுத் தாழ்வாக இருந்ததால், இந்தப் பிரச்னை. 

அதனால் ஆற்றின் கரையில் நீண்ட மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. அதற்குப் பிறகு, திடீர் வெள்ளம் வந்த சமயங்களில், வெள்ளம் ஊருக்குள் வந்து விடாமல் மதில் சுவர் காத்து வந்தது. 

டு மேய்க்கும் பொன்னன் அன்று மாலை ஆடுகளை அவற்றின் வீடுகளுக்கு ஓட்டிச் செல்லுமுன், ஒரு ஆட்டைக் காணோம் என்பதை கவனித்தான். 

மற்ற ஆடுகளை அவற்றின் சொந்தக்காரர்கள் வீடுகளில் விட்டு விட்டு, காணாமல் போன ஆட்டைத் தேடிக் கண்டு பிடித்து, அதன் சொந்தக்காரர் வீட்டில் கொண்டு விடுவதற்குள் பொழுது சாய்ந்து இருள் கவ்வத் தொடங்கி விட்டது 

அப்போதுதான் காணாமல் போன ஆட்டைத் தேடும் பதட்டத்தில் தன் அலக்கை எங்கோ தவற விட்டு விட்டதைப் பொன்னன் கவனித்தான். 

ஒரு முனையில் ஒரு சிறிய அரிவாள் கட்டப்பட்டிருந்த அந்த நீண்ட மூங்கில் கம்பை மரங்களிலிருந்து இலைகளை அறுத்து ஆடுகளுக்குப் போட அவன் பயன்படுத்துவான். 

அலக்கை ஆற்றங்கரை ஓரத்தில்தான் எங்கேயோ விட்டிருக்க வேண்டும் என்று நினைத்து அங்கே போய்த் தேடினான் பொன்னன். இருட்டில் தேடுவது சற்றுக் கடினமாக இருந்தாலும், சிறிது நேரத் தேடலுக்குப் பின், அவன் அதைக் கண்டெடுத்து விட்டான். 

அங்கிருந்து திரும்ப யத்தனித்தபோதுதான், அந்தச் சத்தத்தை அவன் கவனித்தான். டப் டப் என்று நீர் சொட்டும் சத்தம். 

திரும்பிப் பார்த்தான். இருட்டில் எதுவும் தெரியவில்லை. சத்தத்தை வைத்து நீர் சொட்டும் இடத்துக்கு வந்தான் பொன்னன். அவன் மீது ஒரு சொட்டு விழுந்தது. அண்ணாந்து மேலே பார்த்தான். ஆற்று நீர் உள்ளே வந்து விடக் கூடாது என்பதற்காகப் போடப்பட்டிருந்த தடுப்புச் சுவரிலிருந்துதான் நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

நீர் கசிந்து வந்த இடத்தின் உயரத்தைப் பார்த்தபோது ஆற்றில் நீர்ப்பெருக்கு அதிகம் ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

நீர் சொட்டும் வேகம் திடீரென்று அதிகரித்து விட்டதாகத் தோன்றியது. பிரமையாக இருக்குமோ என்று நினைத்தான். இல்லை, பிரமை இல்லை. கொஞ்சம் வேகமாகத்தான் சொட்டுகிறது. அப்படியானால் ஓட்டை சற்றுப் பெரிதாகி இருக்கலாம்.

என்ன செய்வது என்று யோசித்தான் பொன்னன். ஊருக்குள் போய் யாரிடமாவது சொல்லி ஆட்களை அழைத்து வரலாம். ஆனால் அதற்குள் நீர்க்கசிவு அதிகமாகி சுவர் உடைந்து விட்டால்?

தானே ஏதாவது செய்து பார்க்கலாம் என்று நினைத்து, சிறிது மண்ணை எடுத்துக் கசியும் இடத்தில் வைக்க முயன்றான் அவன். அந்த இடம் அவனுக்கு எட்டவில்லை.

அருகில் ஒரு பூவரச மரம் இருந்தது. அதன் மீது ஏறி, ஒரு கிளையில் அமர்ந்து கொண்டு, கையை நீட்டி நீர் கசிந்த இடத்தில் மண்ணை அப்பினான். 

சட்டென்று நீர்க்கசிவு நின்று விட்டது!

பொன்னனுக்கு நிம்மதியாக இருந்தது. நல்ல வேளை! கசிவு கொஞ்சம் நின்றிருக்கிறது. மறுபடி கசிவு அதிகமாவதற்குள், ஊருக்குள் போய் யாரையாவது அழைத்து வரலாம் என்று நினைத்துக் கீழே இறங்கினான்.

ஆனால் அவன் கீழே இறங்கியதுமே மீண்டும் நீர் கசிய ஆரம்பித்து விட்டது. 

சற்று நேரம் யோசித்த பிறகு அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

ஊருக்குப் போய் யாரையும் அழைத்து வருவதற்குள் நீர்க்கசிவு அதிகமாகி சுவர் விரிசல் கண்டு தண்ணீர் ஊருக்குள் வந்து விடலாம். 

நிறைய மண்ணை எடுத்துப் போய் மரத்தில் அமர்ந்தபடி கொஞ்சம் கொஞ்சமாக மண்ணை அப்பி, கசிவைக் குறைக்க வேண்டியதுதான். இடையில் யாராவது இந்தப் பக்கம் வந்தால் தகவல் சொல்லி அனுப்பலாம் என்று நினைத்துக் கொண்டான் அவன்.

பொன்னன் ஒரு அநாதை. ஒரு இடிந்த வீட்டின் வாசல் திண்ணையில்தான் அவன் குடியிருப்பு.  

வன் ஆடு மேய்க்கும் வீடுகளில், முறை வைத்துக்கொண்டு அவனுக்குக் காலையில பழைய சோறு, கையில் கட்டுச்சோறு, இரவு சாப்பாடு என்று போட்டு விடுவார்கள். 

இரவு அவன் சாப்பிட வராததை அந்த வீட்டுக்காரர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சினிமாவுக்கோ, அல்லது வேறு எங்கேயோ போயிருப்பான் என்று நினைத்துக் கொள்வார்கள். அதனால் யாரும் அவனைத் தேடி வரப் போவதில்லை.

தன் மேல்துண்டில் நிறைய மண்ணை எடுத்து மூட்டையாகக் கட்டிக் கொண்டு மரக்கிளையில் போய் உட்கார்ந்தான் பொன்னன். 

சிறிது மண்ணை அப்பியதும் கசிவு நின்றது. ஒரு சில நிமிடங்களில் மீண்டும் கசிய ஆரம்பித்தது. மீண்டும் மண்ணை அப்பினான். இதுபோல் சிலமுறை செய்ததும், மண் தீர்ந்து விட்டது.

மீண்டும் கீழே இறங்கி துண்டில் மண்ணை நிரப்பிக் கட்டி எடுத்து வந்தான் பொன்னன். எவ்வளவு நேரம் ஆயிற்று என்று தெரியவில்லை.ஒரு மணி நேரம் ஆகியிருக்கலாம் என்று தோன்றியது. 

இது போல் ஐந்தாறு முறை கீழே இறங்கிப் போய் மண் எடுத்து வந்து விட்டான். மணி என்ன இருக்கும் என்று தெரியவில்லை. சாப்பிடாததாலும், தொடர்ந்து மரத்தில் ஏறி இறங்கி, மண்ணை எடுத்து வந்து அப்பிக் கொண்டிருந்ததாலும் உடல் சோர்வடைந்திருந்தது. 

மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது உடலில் வலி ஏற்படுத்தியதுடன், கிளை உடைந்து விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது. தூக்கம் வேறு கண்ணைச் சுழற்றியது.

திகாலை ஊர்க்காரர் ஒருவர் அங்கே வந்து பார்த்தபோது பொன்னன் மயங்கிய நிலையில் கீழே கிடந்ததையும், தடுப்புச் சுவரிலிருந்து சிறிய அளவில் நீர் ஒழுகி  பொன்னன் மீது பட்டுக் கொண்டே கீழே கோடு போல் ஓடிக் கொண்டிருப்பதையும் பார்த்தார்.

அவர் உடனே ஓடிப் போய் ஊரிலிருந்து ஆட்களை அழைத்து வந்தார். சூழ்நிலையைப் பார்த்ததும், நடந்ததை அனைவரும் புரிந்து கொண்டனர். 

"ராத்திரி பூரா ஒத்தை ஆளா தானே கசிவை நிறுத்தப் பாத்திருக்கான். கீழேயிருந்து மண்ணை எடுத்துக்கிட்டுப் போய், மரக்கிளையில உக்காந்துக்கிட்டு ஓட்டையை அடைக்கப் பாத்திருக்கான். கடைசியில களைப்பில் மயங்கி விழுந்துட்டான். ஊருக்குள்ள வந்து யாரையாவது கூப்பிட்டுக்கிட்டுப் போறதுக்குள்ளே சுவர் உடைஞ்சுடுமோன்னு நினைச்சுத் தனி ஆளாப் போராடி இருக்கான். இவனுக்கு நம்ம ஊர்ல கோவில் கட்டணும்யா!" என்றார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

இதற்குள் பொன்னனின் நாடியைப் பார்த்த நாட்டு வைத்தியர் தலையைப் பக்கவாட்டில் ஆட்டினார்.

"இன்றைக்கு நம் சிறப்பு விருந்துக்கு நாம் அழைத்திருந்தவர்களில் ஒரு சிலர் மட்டும்தானே வந்திருக்கிறார்கள்? மற்றவர்கள் எங்கே?" என்றான் இந்திரன்.

"மண்ணுலகிலிருந்து இன்று ஒரு புதிய பையன் வந்திருக்கிறானாம். அவனைப் பார்க்க எல்லோரும் போய் விட்டார்கள்."

"பையனா? அல்ப ஆயுசா? அது சரி. அவனைப் பார்க்க ஏன் எல்லோரும் போயிருக்கிறார்கள்?"

"அவன் வெள்ளத்திலிருந்து தன் ஊரைக் காப்பாற்ற தன் உயிரையே பணயமாக வைத்துச் செயல்பட்டிருக்கிறானாம்."

"இந்திரலோகத்து விருந்தை விடவா அது முக்கியம்?" என்றான் இந்திரன் திகைப்புடன். 

"அப்படி நினைத்துத்தானே எல்லோரும் அங்கே போயிருக்கிறார்கள்?"

"அப்படியானால் ஒன்று செய்யுங்கள். அந்தப் பையனை நம் விருந்துக்கு அழைத்து வாருங்கள். அவனே இன்று நமது முக்கிய விருந்தினராக இருக்கட்டும்" என்றான் இந்திரன்.   

இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

பொருள்:  
இவ்வுலகம் இருக்கும் வரை நீடித்து நிற்கக் கூடிய புகழை அளிக்கும் செயல்களைச் செய்பவர்களைத்தான் வானுலகம் போற்றுமே தவிர, அங்குள்ள தேவர்களைப் போற்றாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்





















Saturday, January 5, 2019

233. சிகாமணி வீடு

"ஒவ்வொத்தரும் தங்களுக்கு முந்தைய ஏழு பரம்பரைகளைத் தெரிஞ்சுக்கணும்."

ஒரு தொலைக்காட்சி சொற்பொழிவில் கேட்ட இந்த வாசகம் சுகுமாரின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

சுகுமார் சிறிய வயதிலேயே தன் தந்தையை இழந்தவன். அவனுக்கு அவன் தந்தையின் பெயரும், தாத்தாவின் பெயரும் தெரியும். ஆனால் அவர்களைப் பற்றி அதிக விவரங்கள் தெரியாது. தாத்தாவுக்கு முந்தையவர்களின் பெயர் கூடத் தெரியாது.

தன் முந்தைய ஏழு தலைமுறையினர் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது?

அவன் அம்மாவிடம் போய்க் கேட்டான். "உங்கப்பாவைப் பத்தி எனக்குத் தெரிஞ்சதையெல்லாம் உனக்கு அப்பப்ப சொல்லியிருக்கேன். அவரைப் பத்தி சொல்றதுக்கு அதிகமா இல்ல. நல்ல மனுஷன். வாழ்க்கையில சுகமே இல்ல அவருக்கு. நல்ல வேலை கூடக் கிடைக்காம கஷ்டப்பட்டாரு. சீக்கிரமே போய்ச் சேர்ந்துட்டாரு" என்றாள் அவன் தாய் கனகம்.

"சரி. தாத்தா பத்தி?"

"உன் தாத்தா இருந்தது ஒரு ஊர்ல. நானும் உங்கப்பாவும் இருந்தது வேற ஊர்ல. அதனால உங்க தாத்தாவைப் பத்தி எனக்கு அதிகம் தெரியாதே!" என்றாள் கனகம்.

"யார் கிட்ட கேட்டாத் தெரியும்?"

"உன் பெரியப்பாதான் உன் தாத்தாவோட ஒரே வீட்டில இருந்தார். உன் பெரியப்பா பையன் ராமுவைக் கேளு. அவனுக்குத் தெரிஞ்சிருக்கலாம்."

சுகுமார் ராமுவிடம் சென்று கேட்டபோது, தன் தாத்தாவுக்கு ஊரில் கொஞ்சம் சொத்து இருந்ததால், அவர் ஓரளவு வசதியாக வாழ்ந்ததாகவும் மற்றபடி அவரைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை என்றும் ராமு சொன்னான்.

அவன் தாத்தாவின் அப்பா, தாத்தா பெயர்கள் மட்டும் கிடைத்தன. ஆனால் அவர்களைப் பற்றிய விவரம் எதுவும் கிடைக்கவில்லை. தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விசாரித்தால் விவரம் கிடைக்கலாம் என்று ராமு சொன்னதைக் கேட்டு, தன் சொந்த ஊருக்குச் சென்றான் சுகுமார்.

"இந்த கிராமத்தில கண்ணாயிரம்னு ஒரு பெரியவர் இருக்காரு. அவருக்கு இந்த ஊர்ல இருக்கறவங்க எல்லார் குடும்பத்தைப் பத்தியும் தெரியும்" என்று சுகுமாரிடம் அந்த ஊர்க்காரர்கள் சிலர் சொன்னார்கள்.

சுகுமார் கண்ணாயிரத்தைப் போய்ப் பார்த்தான். அவன் தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறியதும், "ஓ! சேதுபதி மகனா நீ?" என்றார் கண்ணாயிரம்.

"ஆமாம் தாத்தா!"

"சேதுபதிக்கு சீதாராமன்னு ஒரு அண்ணன் இருந்தானே?"

"ஆமாம் தாத்தா. எங்க பெரியப்பா பேரு சீதாராமன்தான்."

"ஓ! அப்ப, நீ சிகாமணி பரம்பரை!"

"சிகாமணிங்கறது யாரு?  எங்க பரம்பரையை ஆரம்பிச்சு வைச்சவர் அவர்தானா?" என்றான் சுகுமார்.

கண்ணாயிரம் வயிறு குலுங்கச் சிரித்து விட்டு, "நாமெல்லாம் என்ன மொகலாயர் பரம்பரையா,ஆரம்பிச்சு வச்சவர்னு பாபர் மாதிரி ஒத்தரைச் சொல்றதுக்கு? பரம்பரைக்கு ஆரம்பம் எது? கடவுள் மாதிரி பரம்பரையும் ஆதி அந்தம் இல்லாததுதான்!" என்றார்.

"சிகாமணின்னு சொன்னீங்களே!"

"ஆமாம்.கொஞ்சம் இரு. உங்கப்பா சேதுபதி. அவர் அப்பா பேரு ...எனக்கு ஞாபகம் வல்ல. அப்ப நான் பொறந்திருக்கவே மாட்டேன். நான் சொல்ற பழைய விஷயம்லாம் நான் கேட்டதை நினைவில் வச்சுக்கிட்டு சொல்றதுதான்" என்றார் கண்ணாயிரம்.

"இல்ல தாத்தா. எங்க பரம்பரையில் அஞ்சு பேரு எனக்குத் தெரியும். அதில சிகாமணிங்கற பேரு இல்ல."

"அப்ப, அவரு அஞ்சு தலைமுறைக்கும் முந்தினவரா இருக்கணும்."

"உங்களுக்குத் தெரியாதா?" என்றான் சுகுமார் ஏமாற்றத்துடன்.

"ஏம்ப்பா, உங்க பரம்பரையில வந்தவங்க பேரு உங்க குடும்பத்தில இருக்கறவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். எனக்கு எப்படித் தெரிஞ்சிருக்கும்? அப்படியே தெரிய வந்திருந்தாலும், நான் எதுக்கு அதையெல்லாம் ஞாபகம் வச்சுக்கப் போறேன்?"

"அப்ப சிகாமணின்னு சொன்னீங்களே!"

"ஆமாம். அவர் உன் முன்னோர்கள்ள ஒத்தர்னு தெரியும். உனக்கு முன்னாலே எத்தனையாவது பரம்பரையில் வந்தவர்னு எனக்குத் தெரியாது."

"பின்ன அவர் பேரு மட்டும் உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"ஆ! அப்படிக் கேளு. அவரு நிறையப் படிச்சவரு. படிப்புன்னா ஸ்கூல் காலேஜுக்குப் போய்ப் படிச்சவர் இல்ல. நிறைய இலக்கியங்கள் எல்லாம் படிச்சவரு. அவர்கிட்ட இலக்கியங்கள் பத்திப் பேசவும், விளக்கம் கேட்கவும் எந்தெந்த ஊர்லேந்தெல்லாமோ அறிஞர்கள் வருவாங்களாம். இவரையும் வண்டி அனுப்பி அவங்க ஊருக்கு கூட்டிக்கிட்டுப் போய் அங்கே இவரைப் பேசச் சொல்லிக் கேட்பாங்களாம்.  

"பக்கத்தில இருந்த சமஸ்தான மன்னர்கள் சில பேர் கூட அவரைத் தங்கள் சபைக்கு வரவழைச்சு அவருக்கு மரியாதை பண்ணியிருக்காங்க. அதனால உங்க பரம்பரை வீட்டுக்கே சிகாமணி வீடுன்னுதான் பேரு. உங்க தாத்தா உங்க பரம்பரை வீட்டை வித்துட்டாரு. இப்ப அது வேற ஒருத்தர் வீடு. ஆனா இப்பவும் அதை சிகாமணி வீடுன்னுதான் இந்த ஊர்ல பல பேர் சொல்லுவாங்கன்னா பாத்துக்கயேன்."

"அவரைப் பத்தி வேற விவரம் எதுவும் தெரியாதா?"

"அவர் அப்பா யாரு, அவர் யாரோட அப்பா இதையெல்லாம் கேக்கறியா? தெரியாது."

தன் பரம்பரையில் ஏழு பேரின் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், ஒரு புகழ் பெற்ற மனிதரின் பரம்பரையில் தான் வந்திருக்கிறோம் என்ற பெருமையுடன் கண்ணாயிரத்திடமிருந்து விடைபெற்றான் சுகுமார்.

இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.

பொருள்:  
இவ்வுலகில் ஒப்பற்றதாகவும், உயர்ந்ததாகவும் அழிவில்லாமல் நிலைத்து நிற்பது புகழைத் தவிர வேறு எதுவும் இல்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்


























Thursday, January 3, 2019

232. பரிசு யாருக்கு?

"அரசே! சிறந்த நூல்களுக்காக நீங்கள் அறிவித்த பரிசுப் போட்டிக்காக நூற்றுக்கணக்கான நூல்கள் பரிசீலனைக்காக வந்துள்ளன. அவற்றில் ஐந்து நூல்களை நாங்கள் சிறந்ததென்று கருதித் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இவற்றில் பரிசுக்குரியது எது என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்" என்றார் அமைச்சர்.

"சரி. நீங்கள் தேர்ந்தெடுத்த நூல்கள் பற்றிச் சுருக்கமாகக் கூறுங்கள்" என்றான் அரசன்.

"முதல் நூல் தங்கள் வீரத்தைப் பற்றியும், அண்டை நாடுகளை நீங்கள் வெற்றி கொண்டது பற்றியும் எழுதப்பட்டுள்ளது. இதை எழுதிய புலவர் மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறார்."

"வேண்டாம். அடுத்தது?"

"அரசே! நீங்கள் இதைப் படித்துப் பார்த்தால் இது எவ்வளவு உயர்ந்தது என்று புரிந்து கொள்வீர்கள்."

"இருக்கலாம். புலவர்கள் அரசரைப் புகழ்ந்து பாடல்கள் எழுதிப் பரிசு பெற்றுப் போவது அடிக்கடி நடக்கிற விஷயம்தானே? இந்தப் பரிசுப் போட்டிக்கு வேறு வகை நூல்களைப் பார்ப்போமே!"

"நல்லது அரசே. இரண்டாவது நூல் ஒரு காதல் காவியம். இதை எழுதியவர் தேனைப் பிழிவது போல் இனிமையைப் பிழிந்திருக்கிறார்."

"சரி. அப்புறம் படித்துப் பார்க்கிறேன். அடுத்தது?"

"இது ஒரு நகைச்சுவை நூல். மனிதர்களின் இயல்பான செயல்களை நகைச்சுவை உணர்வுடன் விவரித்திருக்கிறார் ஆசிரியர்."

"பாராட்டுக்குரிய முயற்சி. நகைச்சுவையில் எனக்கு எப்போதுமே நாட்டமுண்டு. இதுவும் நான் படித்துப் பார்க்க வேண்டிய நூல்தான். நான்காவது?"

"இது ஒரு ஆராய்ச்சி நூல். நம் நாட்டின் பண்பாட்டை வரலாற்றுப் பின்னணியில் ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார் இந்த நூலாசிரியர்."

"அற்புதமான முயற்சி. இதையும் நான் விரிவாகப் படிக்க வேண்டும்... ஐந்தாவது நூல்?"

"இது ஒரு வள்ளலைப் பற்றிய நூல். எந்த நிலையிலும் கேட்பவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் கொடுத்து வரும் ஒரு வள்ளலைப் பற்றிய நூல் இது. இந்த வள்ளல் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்த நூல் அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. ஆயினும், அரசருக்கு நிகராக இன்னொருவரைப் புகழ்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று..."

"இந்தப் புத்தகம் அருமையாக எழுதப்பட்டிருக்கிறது என்று கருதுகிறீர்கள் அல்லவா?"

"ஆமாம் அரசே! தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவருமே அப்படித்தான் கருதினோம். ஆயினும்..."

"அப்படியானால், இந்த நூலுக்கே பரிசு கொடுத்து விடுங்கள்!" என்றான் அரசன்.

"அரசே! இந்த நூலை நீங்கள் படிக்கவில்லையே! அத்துடன் மற்ற நூல்களையும் நீங்கள் படிக்க வேண்டும் என்று சொன்னீர்கள்."

"அமைச்சரே! இந்த நூலை நான் படிக்கத்தான் போகிறேன். ஆனால் தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இதை ஒரு சிறந்த நூல் என்று கருதுவதால், இதற்குப் பரிசு கொடுப்பதில் தாமதம் தேவையில்லை. நான் படிக்க விரும்பிய மற்ற மூன்று நூல்களையும் கூடப் படிக்கத்தான் போகிறேன். அதற்குப் பிறகு அவற்றை எழுதியவர்களுக்கும் ஏதாவது பரிசு கொடுத்து விடலாம். இப்போது பரிசுப் போட்டியில் வெற்றி பெற்ற ஒரு நூலுக்கு மட்டும் பரிசை அறிவித்து விடுங்கள்."

"அரசே! நாங்கள் தேர்ந்தெடுத்த ஐந்து நூல்களில் நான்கை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். ஆனால் அவற்றில் இந்த நூலுக்குத்தான் பரிசு என்ற முடிவுக்கு வந்ததற்கான காரணத்தை நாங்கள் அறிந்து கொள்ளலாமா?" என்றார் அமைச்சர், சற்றுத் தயக்கத்துடன்.

"நிச்சயமாக! உலகில் மக்கள் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் இவற்றுக்குள், இல்லையென்று யாசித்தவருக்கு இல்லையென்று சொல்லாமல் கொடுத்தவரைப் புகழ்ந்து பேசுவதுதான் சிறப்பான பேச்சு. கொடுப்பவரின் புகழைப் போல் கொடுப்பவரின் மேன்மையைக் கூறும் பேச்சும் என்றும் நிலைத்து நிற்கும். அதனால், இரந்தவருக்கு இல்லையெனாமல் ஈயும் உயர்ந்த மனிதர்களின் புகழ் பேசும் நூல்கள்தான் எல்லா நூல்களுக்குள்ளும் உயர்ந்தவை என்று கருதித்தான் இந்த முடிவுக்கு வந்தேன்" என்றான் அரசன். 
இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.

பொருள்:  
இவ்வுலகில் சொல்லப்படுபவை எல்லாம் இல்லையென்று கேட்பவர்களுக்குக் கொடுப்பவர்களின் புகழ்தான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்