About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, July 30, 2019

273. சித்தானந்தா, ஷில்பா மற்றும் பலர்!

"நம் சமுதாயத்தில் பெண்கள் மிகவும் உயர்வாக மதிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் இப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன. ஒவ்வொரு ஆணும் தன் மனைவியைத் தவிர மற்ற பெண்களைத் தாயாகவோ, சகோதரியாகவோ, மகளாகவோ நினைக்க வேண்டும். இப்படி எல்லோரும் நினைக்க ஆரம்பித்து விட்டால், பெண்கள் மீது தவறான ஆசை யாருக்கும் வராது. பக்தி, யோகம், தியானம் போன்றவற்றில் ஈடுபட்டால் இந்த மனநிலையைப் பெறுவது எளிதாக இருக்கும் ..."

ஆத்திரத்துடன் ஷில்பா டி வி ரிமோட்டை படக்கென்று அழுத்தி டிவியை நிறுத்தினாள்.

."செய்யறது அயோக்கியத்தனம். பேசறது மட்டும் பெரிய புனிதன் மாதிரி. காவி கட்டிய காலிப் பய!" என்றாள் அவள் கோபத்துடன்.

"உன்னோட அட்மைரரைப் பற்றி அப்படியெல்லாம் பேசாதேடி!" என்றாள்  அவள் தோழி நிஷா சிரித்தபடியே.

"இது சிரிக்கிற விஷயம் இல்லடி. இவன் செஞ்ச அயோக்கியத்தனத்தை வெளியில சொல்லாம விட்டது என் மேல தப்பு.  பெண்கள் கிட்ட தப்பா நடந்துக்கிட்டு இப்படியெல்லாம் பேசினா ஆத்திரம்தான் வருது."

"என்ன செய்யப் போற? இது நடந்து அஞ்சாறு மாசம் ஆயிடுச்சு. அதோட போலீஸ்ல புகார் கொடுத்தாலும், என்ன ஆதாரம்னு கேப்பாங்க."

"போலீசுக்குப் போகப் போறதில்ல. வேற ஒண்ணு  செய்யப் போறேன்."

"என்ன செய்யப் போற?"

"இப்ப 'மீ டூ'ன்னு ட்வீட்டர் டாக் ஒண்ணு வந்திருக்கில்ல அதில என்னோட அனுபவத்தை எழுதப் போறேன். அப்பத்தான் இவன் ஒரு அயோக்கியன்னு ஊருக்கெல்லாம் தெரியும்."

"யோசிச்சுப் பண்ணுடி. இதனால உனக்கும் பாதிப்பு வரும். உனக்கு எதுவும் நடக்கலேன்னாலும், நாலு பேர் உன்னைப் பத்தியும் தப்பா சொல்லுவாங்க.."

"அதைப் பத்தி நான் கவலைப்படல" என்றாள் ஷில்பா.

"ஆறு மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் என் தாய் தந்தை இருவரும் இறந்து விட்டனர். அப்போது விரக்தி அடைந்து மன அமைதி கிடைக்குமென்று நம்பி சித்தானந்தாவின் ஆசிரமத்துக்குச் சென்றேன். அவரிடம் என் வேதனையைச் சொன்னேன். மன அமைதி பெற ஒரு தியானம் கற்றுக் கொடுப்பதாகச் சொல்லி சித்தானந்தா என்னை ஒரு அறைக்கு அழைத்துப் போனார். அங்கே என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். எப்படியோ நான் தப்பி ஒடி வந்து விட்டேன். இப்போது அவர் பெண்களைத் தாயாகவும், சகோதரியாகவும், மகளாகவும் நினைக்க வேண்டும் என்று தொலைக்காட்சியில் பேசியதைக் கேட்டதும், அவருடைய வேஷத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்று நினைத்து இந்த உண்மையை இப்போது உலகுக்குத் தெரிவிக்கிறேன்."

ஷில்பா வின் 'மீ டூ' பதிவு பெரிய அளவில் பிரபலமாகி சர்ச்சையைக் கிளப்பியது.

சித்தானந்தா ஊடகச் செய்தியாளர்களைத் தன் ஆசிரமத்துக்கு அழைத்து விளக்கம் அளித்தார்.

"அக்கினிப் பிரவேசம் செய்த பிறகு கூட சீதை மீது அவதூறு சொன்னார்கள். கிருஷ்ண பரமாத்மாவின் மீதே அவர் ஸ்யமந்தக மணியைத் திருடியதாகக் குற்றம் சாட்டினார்கள். விப்ரநாராயணர் போன்ற பல பக்தர்கள் மீது திருட்டுப் பட்டம் கட்டப்பட்ட வரலாறுகள் உண்டு. இப்போது நானும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். மீ டூ! என் உண்மையான பக்தர்கள் இது போன்ற பொய்களை  நம்ப மாட்டார்கள்."  

இதைச் சொல்லி விட்டு, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்து சித்தானந்தா எழுந்து உள்ளே போய் விட்டார். 

சித்தானந்தாவின் மறுப்பு வெளியான இரண்டு நாட்களுக்குப் பிறகு 'மீ டூ'வில் இன்னொரு பதிவு வந்தது. "சித்தானந்தாவின் கற்பழிப்பு முயற்சியிலிருந்து  சகோதரி ஷில்பா தப்பி விட்டார். ஆனால் என்னால் தப்பிக்க முடியவில்லை. இதை வெளியில்  சொல்ல அவமானப்பட்டு இத்தனை காலம் மௌனமாக இருந்தேன். ஆனால் அவர் தான் பெரிய உத்தமன் என்றும், தன் மீதான   குற்றச்சாட்டுகள் பொய் என்றும் சொன்ன பிறகு, எனக்கு  அவமானம் நேர்ந்தாலும் பரவாயில்லை, இந்தப் போலிச் சாமியாரின் உண்மை முகத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று முடிவு செய்து இப்போது இதைச் சொல்கிறேன்" என்று இன்னொரு பெண் பதிவு செய்திருந்தாள்.

இதைத் தொடர்ந்து, சீட்டுக்கட்டில்  ஒரு சீட்டு கீழே விழுந்ததும் அதைத் தொடர்ந்து இன்னும் பல சீட்டுக்கள் சரிந்து விழுவது போல், மேலும் பல பெண்களிடமிருந்து இது போன்ற பதிவுகள் வெளியாக ஆரம்பித்தன.

சித்தானந்தாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகச் செய்தி வெளியிட்ட பெண்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கைத் தண்டி மூன்று இலக்கங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தது!

"என்னடி, நீ ஒரு பந்தைத் தூக்கிப் போட்டதும் வரிசையா பந்து வந்து விழுந்துக்கிட்டேஇருக்கே?" என்றாள் நிஷா.

"அவன் ஒரு வேஷதாரி. சினிமாவில எல்லாம் வருமே! வேஷம் போட்டவனுக்கு ஓரமா மீசை பிஞ்சு வரும், இல்லேன்னா டோப்பா கழன்று விழும். அதை வச்சு அவன் வேஷம் போட்டிருக்கான்னு கண்டு பிடிச்சுடுவாங்க. அது மாதிரிதான் இவன் விஷயத்திலேயும் நடந்திருக்கு. இவன் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி. நான் அந்தப் பசுத்தோலைக் கொஞ்சம் கிழிச்சு உள்ளே இருக்கற புலியோட வரிகளை வெளியில காட்டினேன். இப்ப எல்லாருமா சேர்ந்து அவன் போர்த்தியிருந்த பசுத்தோலை மொத்தமா கிழிச்செறிஞ்சுட்டு அவன் ஒரு புலிதான்னு காட்டிட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்ற ஷில்பா, வாய் விட்டுச் சிரித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

துறவறவியல்
     அதிகாரம் 28      
கூடாவொழுக்கம்   
குறள் 273
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

பொருள்:  
 மனத்தை அடக்க முடியாதவன் வலுவாக ஏற்படுத்திக்கொண்ட தவக்கோலம், பசு ஒன்று பசுத்தோலைப் போர்த்திக்கொண்டு பயிரை மேய்வது போல் ஆகும்.

Sunday, July 28, 2019

272. பாராட்டு விழா

"இருபத்தஞ்சு வருஷம் முன்னே, ஆதரவு இல்லாதவங்களுக்கு உதவணும்னு நினைச்சு எங்கிட்ட இருந்த 1000 ரூபாயைப் போட்டு இந்த ட்ரஸ்டை ஆரம்பிச்சேன். இன்னிக்கு உங்களை மாதிரி ட்ரஸ்ட் உறுப்பினர்கள், லட்சியத்தோட வேலை செய்யற நேர்மையான ஊழியர்கள், உள்நாட்டிலேந்தும், வெளிநாட்டிலேந்தும் நமக்கு நன்கொடை கொடுத்து உதவற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் ஆகிய எல்லோரோட பங்களிப்பினாலயும் இன்னிக்கு இந்த ட்ரஸ்டுக்கு நூறு கோடி ரூபாய்க்கு மேல நிதி இருக்கு. அதைத் தவிர, சில லட்சங்களுக்கு நாம வாங்கின சொத்துக்களோட மதிப்பு இன்னிக்குப் பல கோடி ரூபாய் ஆகி இருக்கு. அதனால நான் மனத் திருப்தியோட ஒய்வு பெறலாம்னு நினைக்கறேன்" என்றார் நீலகண்டன்.

'நோ! நோ!" என்று பல குரல்கள் எழுந்தன.

"நீங்க இல்லாம இந்த ட்ரஸ்ட் இருக்கவே முடியாது சார்!" என்றார் ஒரு டிரஸ்ட் போர்ட் உறுப்பினர்.

இணை இயக்குனர் மணிகண்டன் எழுந்து, "இந்த டிரஸ்ட் ஆரம்பிச்சு 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடற  விதமா சிட்டி க்ளப்ல அடுத்த மாசம் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தறாங்க அது முடிஞ்சப்புறம் உங்க முடிவைப் பத்தி யோசிக்கலாம்" என்றார்.

டிரஸ்ட் போர்ட் உறுப்பினர்கள் அனைவரும் அதை ஆமோதிக்க, போர்ட் மீட்டிங் முடிந்தது.

பாராட்டு விழா மாநில ஆளுநரின் தலைமையில் நடந்தது. 

நீலகண்டனின்  சேவைகளையும், சாதனைகளையும் பாராட்டியும், அரசாங்கத்திடமிருந்து அவருக்குக் கிடைத்த பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகள் பற்றிக் குறிப்பிட்டும் பலரும் பேசினார்.

டிரஸ்ட் சார்பில் பேசிய மணிகண்டன், "இந்த டிரஸ்டின் வளர்ச்சிக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று நீலகண்டன் அவர்களின் நேர்மை. தான் நேர்மையாக இருந்தது மட்டுமின்றி மற்றவர்களும் நேர்மையாக இருக்கும்படி அவர் பார்த்துக் கொண்டார். எந்த மூலையில் எந்த ஒரு சிறிய தவறு நடந்தாலும் அவருக்குத் தெரிந்து விடும். உடனே நடவடிக்கை எடுத்து, தவறு செய்தவரை எச்சரிப்பார். தவறு பெரியதாக இருந்தால் தாட்சண்யம் பார்க்காமல் தவறு செய்தவரைப் பதவி நீக்கம் செய்து விடுவார். நானும் ஒரு டிரஸ்ட் உறுப்பினன் என்றாலும், எனக்கோ மற்றவர்களுக்கு கண்ணில் படாத விஷயங்களை அவர் எப்படிக் கண்டு பிடித்தார் என்று பல முறை நான் வியந்திருக்கிறேன். இதற்கு காரணம், சிறிது கூடத் தன்னலமின்றி, இது பொதுச் சேவைக்கான டிரஸ்ட், இங்கே ஒரு சிறிய தவறு கூட நடக்கக் கூடாது என்ற அர்ப்பண உணர்வுடன் அவர் செயல்பட்டதுதான்" என்றார்.

நீலகண்டன் புன்னகை செய்தார். வெளிப்படையாக மணிகண்டன் பேச்சைக் கேட்டு ரசித்து அவர் சிரித்ததாகத் தோன்றினாலும், அவரைப் பொருத்த வரை, 'இவர்களையெல்லாம் எவ்வளவு ஏமாற்றி இருக்கிறேன்!" என்ற பெருமிதத்தில் விளைந்த எகத்தாளச் சிரிப்பு அது.

டிரஸ்டின் நிர்வாகத்தில் பலர் ஈடுபட்டிருந்தும், யாருக்கும் தெரியாமல், டிரஸ்டின் ஆடிட்டரை மட்டும் கையில் போட்டுக்கொண்டு, டிரஸ்டின் நிதியில் எத்தனை கோடிகளை அவர் குடும்பத்தினருக்குச் சொந்தமான போலி நிறுவனங்களுக்கும், அவருடைய வெளி நாட்டு வங்கிக் கணக்குகளுக்கும் சாமர்த்தியமாக மாற்றியிருக்கிறார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.  

டிரஸ்டுகளுக்குச் சொத்து வாங்கும்போது, காய்கறி வாங்கும்போது கொசுறு கேட்டு வாங்குவது போல், இன்னொரு சிறிய சொத்துக்கும் சேர்த்து விலை வைத்து, டிரஸ்ட் வாங்கிய சொத்துக்கு இலவச இணைப்பாக, அந்தச் சிறிய சொத்தைத் தனக்கு நெருங்கியவர்கள் மீது சத்தமில்லாமல் பதிவு செய்து கொண்ட விவகாரங்கள் யாருக்குத் தெரியும்?

எப்போதாவது ஏதாவது சந்தேகம் வரும் போல் தோன்றினால், வேறு ஏதோ தவறு நடந்து விட்டது போல் திசை திருப்பி, யாரோ ஒரு ஊழியரைப் பலிகடா ஆக்கி, தான் எதற்காக தண்டிக்கப்படுகிறோம் என்று அவருக்குப் புரியாமலே அவர் வேலை நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களைத்தான் அவருடைய நேர்மைக்கு எடுத்துக் காட்டாக மணிகண்டன் பறை சாற்றிக் கொண்டிருக்கிறார்!

எல்லோரும் பாராட்டி முடித்த பின், நீலகண்டன் நன்றி சொல்ல எழுந்தார். கூட்டத்தைச் சுற்றிலும் பார்த்தார். தெரிந்த முகங்கள் சில. தெரியாத முகங்கள் பல. கூட்டத்தில் ஒரு முகம் மட்டும் பரிச்சயமானதாகத் தோன்றியது. யார் என்று நினைவுக்கு வரவில்லை. ஆனால் அந்த முகத்தைப் பார்த்ததும், மனதில் சங்கடமான உணர்வு தோன்றியது. ஏன் என்று தெரியவில்லை.

அனைவருக்கும் நன்றி தெரிவித்து நீலகண்டன் பேசினார். ஆனால் அவரால் பேச்சில் முழு கவனமும் செலுத்த முடியவில்லை. புதிதாக மேடையில் பேசும் நபர் போல் நிறுத்தி நிறுத்திப் பேசினார். தான் பார்த்த முகம் கூட்டத்தில் எங்கே இருக்கிறது என்று சுற்றிப் பார்த்துக் கண்டு பிடித்தார். அந்த முகத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார். 

அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, சற்று நேரத்தில் சட்டென்று நினைவு வந்து விட்டது. அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை செய்த செந்தில்!

ஒரு முறை டிரஸ்ட் நன்கொடை பெற்றதற்கான சில ரசீதுகள் கான்சல் செய்யப்பட்டிருந்தன. அவற்றைப் பற்றி அவன் அக்கவுண்ட்ஸ் மேனேஜரிடம் சொன்னபோது, அவர் அவை வேறு கணக்குகளுக்குச் செல்ல வேண்டியவை என்பதால் ஆடிட்டர் அவற்றை கான்சல் செய்து விட்டதாகச் சொன்னார். அவன் கான்சல் செய்த ரசீதுகள் ஃ பைல் செய்யப்பட வேண்டும் என்பதால் அவை வேண்டும் என்று கேட்க, அவை ஆடிட்டர் வசம் இருப்பதாகவும், அவர் பார்த்துக் கொள்வார் என்றும் அக்கவுண்ட்ஸ் மானேஜர்  சொல்லி விட்டார். 

ஊழியர்கள் பேசிக்கொள்வதை கவனித்துத் தன்னிடம் வந்து சொல்ல வேண்டும் என்பதற்காக ஒற்றனாக அவர் நியமித்திருந்த அவருடைய உறவினன் அவரிடம் வந்து இதைச் சொன்னான்.

சில நாட்களுக்குப் பிறகு செந்தில் பணத்தைக் கையாண்ட முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு வேலையிலிருந்து அனுப்பப்பட்டான். 

சம்பவம் நினைவு வந்ததும், நீலகண்டனுக்கு குப்பென்று வியர்த்தது. இதுவரை அவர் வேலையை விட்டு அனுப்பிய யாரும் நியாயம் கேட்கவோ வேறு எதற்குமோ திரும்ப வந்ததில்லை. தங்களுக்கு அநியாயம் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிந்தும், நிறுவனத்துடன் போராடினால் தங்களுக்கு வேறு இடங்களில் வேலை கிடைக்காமல் போய் விடும் என்று பயந்து நிர்வாகத்திடம் கெஞ்சி ஒரு நன்னடத்தைச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு போய் விட்டார்கள். 

ஆனால் இவன் என் இங்கே வந்திருக்கிறான்?  

அவனால் எதுவும் செய்ய முடியாது என்று நீலகண்டனுக்குத் தெரிந்தாலும், அவனைப் பார்த்ததால் ஏற்பட்ட பதட்டம் நீலகண்டனுக்கு நீங்கவில்லை. 

நன்றாகப் பேசக்கூடியவர் என்று அறியப்பட்ட நீலகண்டன் அன்று தடுமாற்றத்துடனும், கோர்வையின்றியும் பேசி ஒரு வழியாகப் பேசி முடித்தார்.

"இவருக்கு என்ன ஆயிற்று?" என்று வியந்த மணிகண்டன், "பாவம் ! வயதாகி விட்டது போலிருக்கிறது. அவர் விரும்பியபடி அவரை ஒய்வு பெற அனுமதித்து அடுத்த போர்ட் மீட்டிங்கில் முடிவு செய்து விட வேண்டியதுதான்!" என்று நினைத்துக் கொண்டார்.

"துறவறவியல்
     அதிகாரம் 28      
 கூடாவொழுக்கம்   
குறள் 272
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்

பொருள்:  
 தன் மனம் அறிந்து குற்றம் செய்யும்போது, வானம் போல் உயர்ந்த தவக்கோலம் அவனுக்கு என்ன பயன் தரும்?

Thursday, July 25, 2019

271. உள்ளும் புறமும்

''உலகத்தில் எல்லாமே திடப்பொருள், திரவப்பொருள், வாயுப்பொருள், வெற்றிடம், வெப்பம் என்ற பஞ்ச பூதங்களால் ஆனது. நம் உடம்பும் அப்படித்தான். நம் உடலில் இருக்கும் பஞ்சபூதங்களும் வெளியில் இருக்கும் பஞ்சபூதங்களும் தொடர்பில் இருக்கின்றன. நம் உடலிலிருந்து தோல் உதிர்ந்தால் அது மண்ணோடு கலந்து விடும். ரத்தம் சிந்தினால் அது பூமியில் இருக்கும் ஈரத்துடன் சேர்ந்து கொள்ளும். காற்று, வெற்றிடம், வெப்பம் இவை கூட அப்படித்தான்...'

சுவாமி ரகுராமசந்த்ரா தத்துவத்தை விளக்கிச் சொன்னபோது, கூட்டம் ஆர்வத்துடனும் கவனத்துடனும் கேட்டுக் கொண்டிருந்தது. அவரே  ஒருமுறை, ''நீங்க என் பேச்சைக் கேக்க ஆரம்பிச்சுட்டீங்கன்னா, உங்க கவனம் என் பேச்சிலேந்து ஒரு விநாடி கூட விலகாது'' என்று சொன்னது போல், அவர் பேச்சு கேட்பவர்களைக் கட்டிப் போட்டு விடும். பேச்சில் அத்தனை தெளிவு, சுவாரஸ்யம் இருக்கும்.

அவர் பேச்சு முடிந்ததும் கூட்டம் எழுந்து கிளம்பத் தொடங்கியது. சிலர் எழுந்து செல்ல மனம் இல்லாதது போல் சற்று நேரம் உட்கார்ந்து விட்டுப் பிறகு அரை மனதுடன் எழுந்தனர்.

தாமதமாக எழுந்த அந்தப் பெண் கழிவறை இருக்கும் பக்கமாகச் சென்றாள். ஆனால், கழிவறைக்குச் செல்லாமல், வழியில் ஒரு இடத்தில் யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு, சட்டென்று அருகிலிருந்த ஒரு அறைக்கதவைத் திறந்து அதற்குள் நுழைந்தாள்.

உள்ளே அமர்ந்திருந்த சுவாமிஜியின் செயலாளர் மூர்த்தி, ''யாரும் பாக்கலியே?'' என்றான் பதட்டத்துடன்.

அவள் இல்லையென்று தலையாட்டினாள். மூர்த்தி அவளை அருகில் இருந்த பெரிய அறைக்கு அழைத்துச் சென்றான.

''இது எப்படிப்பா நடந்துது?'' என்றார் சுவாமி ரகுராமச்சந்த்ரா கோபத்துடன்.

''தெரியல குருஜி. யாரோ கண்டு பிடிச்சு வாட்ஸ்  ஆப்ல போட்டுட்டான். இன்னி சாயந்திரத்துக்குள்ள உலகம் முழுக்கப் பரவிடும்'' என்றான் மூர்த்தி.

''அயோத்தி அரசரின் பெயர் கொண்ட குருவின் ஆசிரமத்துக்கு அவ்வப்போது ஒரு பெண் வந்து விட்டுப் போகிறாராம். இது குருவுக்கும், இதற்கு ஏற்பாடு செய்யும் அவர் உதவியாளருக்கும்  மட்டும்தான் தெரியுமாம். இவரை நம்பி இவர் பேச்சைக் கேட்கப் போகும் மக்களை அந்த ராமச்சந்த்ர மூர்த்திதான் காப்பாற்ற வேண்டும்!''

''எதுக்கு இப்ப அதை வாய் விட்டுப் படிச்சுக் காட்டற?'' என்றார் ரகுராமச்சந்த்ரா எரிச்சலுடன். 

''வெளிப்படையா பேர் எழுதியிருக்கான்னு பாத்தேன். அப்படி இருந்தா அவதூறு கேஸ் போடலாம். ஆனா வெளிப்படையா பேர் எழுதாமயே நீங்கதான்னு காட்டிட்டான்! சந்தேகமே இருக்கக் கூடாதுன்னு என் பேரையும் சேத்துட்டான்!'' என்றான் மூர்த்தி.

''அது சரி. இது எப்படி வெளியில வந்தது? அந்தப் பொண்ணு சொல்லியிருப்பாளா?''

''நிச்சயமா மாட்டா. அவளுக்கு இதில என்ன லாபம்? இவ்வளவு பணம் அவளுக்கு வேற யார் கொடுப்பாங்க?''

''நம்ப மூணு பேருக்குத்தானே இது தெரியும்?''

''குருஜி! அந்தப் பொண்ணு சொல்லல. நானும் சொல்லல!''

''அப்படின்னா நானே இதைச் சொல்லயிருப்பேன்னு சொல்றியா?'' என்றார் சுவாமிஜி.

''நேரடியா சொல்லியிருக்க மாட்டீங்க...''

''அப்படின்னா?''

''குருஜி! தப்பா நினைச்சுக்காதீங்க. உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?'' என்றான் மூர்த்தி.

''என்ன?''

''உங்க உபன்யாசத்தில நீங்க சொல்ற விஷயங்கள்ளாம் உண்மையா?''

''இதில உனக்கென்ன சந்தேகம்? நான் சொல்ற விஷயங்கள் எல்லாமே என் குரு எனக்கு சொல்லிக் கொடுத்தது. அவர் பெரிய ஞானி. அவர் கிட்ட கத்துக்கிட்டதை நான் சொல்றதாலதான் எனக்கு இவ்வளவு பேர் கிடைச்சிருக்கு. எனக்கு இந்த பலவீனம் இருக்கறதால நான் சொல்ற விஷயங்களோட பெருமை குறையாது'' என்றார் சுவாமி சற்று வேகத்துடன்.

''நானும் அப்படித்தான் நினைக்கிறேன் குருஜி. நீங்க பஞ்ச பூதங்களைப் பத்தி சொன்னீங்களே?''

''ஆமாம். அதுக்கு என்ன?''

''நீங்க செய்யறது உங்களுக்குள்ள இருக்கற பஞ்ச பூதங்களுக்குத் தெரியும். நம் உடம்பில இருக்கற பஞ்ச பூதங்கள் வெளியில இருக்கற பஞ்ச பூதங்களோட தொடர்பில இருக்கறதா சொன்னீங்க. அப்ப உங்க உடம்பில இருக்கிற பஞ்ச பூதங்கள் மூலமா இந்த விஷயம் வெளி உலகத்துக்குத் தெரிஞ்சருக்கலாம் இல்லையா?''

இவன் இதை உண்மை என்று நினைத்துச் சொல்கிறானா அல்லது தன்னைக் கிண்டல் செய்கிறானா என்று புரியாமல் சுவாமிஜி மூர்த்தியைப் பார்த்தார். 

துறவறவியல்
     அதிகாரம் 28      
கூடாவொழுக்கம்   


குறள் 271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

பொருள்:  
 வஞ்ச மனம் உள்ளவனின் பொய்யொழுக்கத்தை அவன் உடலில் கலந்திருக்கும் ஐந்து பூதங்களும் கண்டு தமக்குள் சிரிக்கும்.


Tuesday, July 23, 2019

270. வெற்றியின் ரகசியம்!

''கடந்த 10 வருஷத்தில மொத்தம் 57 பயிற்சிகள் நடத்தியிருக்கேன். ஒவ்வொரு பாட்ச்லேயும் சராசரியா 50 பேர்னு கணக்குப் பாத்தா கிட்டத்தட்ட 3000 பேருக்குப் பயிற்சி கொடுத்திருக்கேன். அதாவது 3000 பேர் வாழ்க்கையில வெற்றி பெற நான் உதவியிருக்கேன்!'' என்றார் சிவம், பெருமையுடன்.

''பாரரட்டப்பட வேண்டிய சாதனைதான். ஆனா ஒருவர் வாழ்க்கையில வெற்றி பெற உங்க பயிற்சி எப்படி உதவுதுன்னு நம் நேயர்களுக்குப் புரியற மாதிரி சொல்லமுடியுமா?''என்றார் தொலைக்காட்சியில் அவரைப் பேட்டி கண்டவர்.

"எல்லா மனிதர்களுக்குள்ளேயும் பெரிய  ஆற்றல் இருக்கு. ஆனா சில பேர்தான் அதை உணர்ந்திருக்காங்க. அதிலேயும் ஒரு சிலர்தான் அதைப் பயன் படுத்தறாங்க. ஒத்தருக்குள்ள இருக்கற மாபெரும் சக்தியைப் புரிஞ்சுக்கிட்டு அதைப் பயன்படுத்தி அவர் தன் வாழ்க்கையில வெற்றி பெற இந்தப் பயிற்சி உதவும்'' என்றார் சிவம்.

இந்தப் பேட்டி வெளியான சில தாட்களுக்குப் பிறகு சிவத்தைப் பேட்டி காண விரும்புவதாகச் சொல்லி அவரிடம் நேரம் வாங்கி அவரைப் பார்க்கச் சென்றேன். நான் ஒரு பத்திரிகையாளன்தான். ஆனால் நான் அவரைப் பேட்டி காணச் சென்றது என் சந்தேகத்துக்கு விளக்கம் கேட்க.

''கிட்டத் தட்ட மூவாயிரம் பேருக்குப் பயிற்சி கொடுத்திருப்பதா சொன்னீங்களே, அவங்க எல்லாரும் வாழ்க்கையில வெற்றி அடைச்சுட்டாங்கன்னு உங்களால சொல்ல முடியுமா?'' என்றேன்.

''பயிற்சிக்கு அப்புறம் எல்லாரையும் நான் சந்திக்கல. ஆனா பல பேர் எங்கிட்ட தொடர்பு கொண்டு, பயிற்சியில நான் சொல்லிக் கொடுத்த விஷயங்களைப் பயன் படுத்தி வாழ்க்கையில வெற்றி பெற்றதா சொல்லி இருக்காங்க'' என்றார் சிவம்.

"சுமாரா எத்தனை பேர் அப்படிச் சொல்லியிருப்பாங்க?''


சிவம் என்னை முறைத்துப் பாத்து விட்டு, ''அதுக்கெல்லாம் நான் கணக்கு வச்சுக்கல!'' என்றார்.

''சார்! நான் உங்க பயிற்சியைப் பத்திக் குறை சொல்றதுக்காக இதைக் கேக்கல. உங்க பயிற்சியில கலந்துக்கிட்டவங்க சில பேர் எங்கிட்ட உங்க பயிற்சி பற்றி உயர்வா சொல்லி இருக்காங்க. சில மாசங்களுக்கு முன்னே, இதை எங்க பத்திரிகையிலயும் வெளியிட்டிருக்கோம். நான் இப்ப உங்ககிட்ட கேக்கறது என்னோட தனிப்பட்ட ஆர்வத்துக்காக. இது பத்தி பத்திரிகையில எதுவும் வராது'' என்றேன்.

சிவம் சற்று யோசித்து விட்டு, ''சரியா சொல்ல முடியாது. ஆனா நீங்க தனிப்பட்ட முறையில கேக்கறதால சொல்றேன். பயிற்சியில கலந்துக்கிட்டவங்கள்ள பத்து சதவீதம் பேர்தான் பயிற்சியோட பலனை முழுசா அனுபவிச்சு வாழ்க்கையில வெற்றி பெறறாங்கங்கறது என்னோட ஊகம்'' என்றவர் சற்றுத் தயங்கி விட்டு, ''எனக்கே இதில கொஞ்சம் வருத்தம் உண்டு'' என்றார்.

'மிதி 90 சதவீதம் பேர் ஏன் வெற்றி பெறுவதில்லன்னு யோசிச்சிருக்கீங்களா? அவங்க முயற்சி செய்யறதில்லையா?''

''ஒரு சிலர் முயற்சி செய்யாம இருக்கலாம். ஆனா முயற்சி செய்யறவங்கள்ள பல பேர் ஏனோதானோன்னுதான் முயற்சி செய்யறாங்கன்னு நினைக்கறேன்.''

''ஏன் அப்படி?''

''ஏன் அப்படின்னு நான் யோசிச்சப்ப எனக்குக் கிடைச்ச விடை இது மனித இயற்கைங்கறதுதான்!''

''மனித இயற்கைன்னு எப்படிச் சொல்ல முடியும்?''

''ஏன்னா எல்லாத் துறையிலுமே இப்படித்தானே இருக்கு? பள்ளிக்கூடங்களிலேயும் கல்லூரிகளிலேயும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைச்சாலும் சில பேர்தானே நல்லாக் கத்துக்கறாங்க? இது சிலருக்கு இயற்கையாவே அதிக அறிவு இருக்கறதனாலன்னு சிலபேர் சொல்லலாம். ஆனா அது மட்டும் காரணம் இல்ல. புத்திசாலியா இருக்கற பையங்க பலபேர் படிப்பில சோபிக்காம இருக்காங்க. சராசரியான மாணவர்கள் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டுப் படிச்சு நல்லா முன்னுக்கு வராங்க, இதுக்குக் காரணம் படிப்பில அக்கறை காட்டறதுதான். அது மாதிரி என் பயிற்சியில கலந்துக்கிட்டவங்கள்ளேயும் தாங்க கத்துக்கிட்ட விஷயத்தை அக்கறையோட பின் பத்தறவங்க வெற்றி அடையறாங்க.''

''அவங்க பயிற்சியில கத்துக்கிட்ட விஷயங்களைப் பின் பத்தணும்னு நீங்க அவங்களை மோடிவேட் பண்ண முடியாதா?''

''மோடிவேட் பண்றேன். ஆனா செய்ய வேண்டியது அவங்க கையிலதானை இருக்கு?'' என்ற சிவம் ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்து விட்டு, ''எனக்கு என்ன தோணுதுன்னா, எந்த விஷயத்தையும் தவம் செய்யற மாதிரி மன ஒருமைப்பாட்டோடயும், ஈடுபாட்டோடயும் செஞ்சாதான் அதில வெற்றி அடைய முடியும். இது மாதிரி ஈடுபாட்டோட இருக்கறவங்க உலகத்தில ரொம்ப சில பேர்தான். என் பயிற்சியில பங்கேற்றவங்களும் இந்த உலகத்தைப் பிரதிபலிக்கறவங்கதானே?'' என்றார்.

''நீங்க சொன்னது சரியாத்தான் இருக்கணும். ஏன்னா தவம் பண்ற மாதிரி கண்ணை மூடி மனசை ஒருமுகப்படுத்தி யோசிச்சுத்தானே இந்த பதிலைச் சொன்னீங்க!'' என்றேன் நான்.'

துறவறவியல்
     அதிகாரம் 27      
தவம்  
குறள் 270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

பொருள்:  
 உலகில் பெரும்பாலோர் ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பதற்குக் காரணம் தவம் செய்பவர்கள் சிலராகவும், செய்யாதவர்கள் பலராகவும் இருப்பதுதான்.

Monday, July 15, 2019

269. ஆயிரம் நாமங்கள்


சிவகாமி கோயிலுக்குச் சென்றபோது அர்ச்சகர் சன்னிதியைப் பூட்டத் தயாராக இருந்தார். 

சிவகாமியைப் பார்த்ததும், ''சேவிச்சுக்கோங்கோ!'' என்று சொல்லி விட்டு வெளியே வந்து நின்றார். 

ஒரு நிமிடம் சிவகாமி பெருமாளை தரிசனம் செய்து விட்டுத் திரும்பியதும், அர்ச்சகர் சற்றுத் தயக்கத்துடன், ''தப்பா நினைச்சுக்காதீங்கோ! உங்களுக்கு ஏதாவது பிரச்னையா? தினமும் கோவிலுக்கு வந்து வேண்டிண்டு போறேளேன்னு கேக்கறேன்'' என்றார்.

சிவகாமி அழுகையை அடக்கிக் கொண்டு, 'ஆமாம்' என்பது போல் தலையை ஆட்டினாள்.

''யாருக்காவது உடம்பு  சரியில்லையா?''

''என் வீட்டுக்காரர் ஆஸ்பத்திரில படுத்த படுக்கையாக் கிடக்காரு. ஏதோ விஷ ஜுரமாம். டாக்டருங்க எதுவும் சரியா சொல்ல மாட்டேங்கறாங்க. உயிர் பிழைப்பாரான்னே தெரியல....''

சிவகாமிக்குத் தொண்டை அடைத்தது.

''கவலைப்படாதீங்கோ! தினம் கோவிலுக்கு வந்து வேண்டிக்கறதுக்குப் பலன் இல்லாம போகாது. நான் ஒண்ணு சொல்றேன். செய்யறீங்களா?''

''சொல்லுங்கய்யா!''

''108 தடவை விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லுங்கோ. உங்க விட்டுக்காரர் எழுந்து உக்காந்துடுவார்!''  என்றார் அர்ச்சகர்.

''எனக்கு அதெல்லாம் தெரியாதுய்யா!'' என்றாள் சிவகாமி.

''அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. எம் எஸ் அம்மா பாடின விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நாலஞ்சு தடவை கேளுங்கோ. அப்புறம் அவாளோட சேந்து ரெண்டு மூணு தடவை சொல்லிப் பாருங்கோ. அப்புறம் நீங்களே புஸ்தகத்தைப் பாத்து சொல்ல ஆரம்பிச்சுடலாம்.''

''சரி. நான் சொல்ல ஆரம்பிச்சா, சொல்லி முடிக்க எவ்வளவு நாள் ஆகும்?''

''ஒரு தடவை சொல்ல இருபது இருபத்தஞ்சு நிமிஷம் ஆகும். அரை மணின்னு வச்சுண்டா கூட, தினமும் காலம்பரயும் சாயந்திரமும் ரெண்டு ரெண்டு மணி நேரம் சொன்னேள்னா, ஒரு நாளைக்கு எட்டு ஆறது. 13, 14 நாள்ள முடிச்சுடலாம். ஒரு பட்சத்தில, அதாவது பதினஞ்சு நாள்ள சொல்லி முடிக்கறது ரொம்ப விசேஷம். நீங்க சொல்ல ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ளயே பலன் தெரியும்.''

''நல்லதுய்யா! என்னால முடியுதான்னு பாக்கறேன்'' என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் சிவகாமி.

அடுத்த சில தினங்களில், ஆஸ்பத்திரியில் இல்லாத நேரங்களில் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அறிந்து கொள்வதில் செலவிட்டாள் சிவகாமி.

முதலில் தன் அண்ணனின் உதவியுடன் எம் எஸ் பாடிய சஹஸ்ரநாமத்தின் ஒலி வடிவத்தைத் தன் மொபைலில் பதிவு செய்து கொண்டாள். பிறகு ஒரு இயர் ஃபோன் வாங்கி அதை எப்போதும் காதில் செருகிக்கொண்டு முடிந்தபோதெல்லாம் திரும்பத் திரும்ப அந்த ஒலிப்பதிவைக் கேட்டுக் கொண்டிருந்தாள். தனியே இருக்கும்போது, புத்தகத்தை வைத்துக்கொண்டு, ஒலிப்பதிவைக் கேட்டு, வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முயன்றாள்.

அர்ச்சகர் சொன்னபடியே இரண்டு நாட்களில் சிவகாமியால் புத்தகத்தைப் பார்த்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தைப் படிக்க முடிந்தது. 

அதற்குப் பிறகு இயர்ஃபோனைக் கழற்றி வைத்து விட்டு புத்தகத்தைப் பார்த்து ஒருமுறை படித்தாள். தடங்கலின்றிப் படிக்க முடிந்தது. 

அதன் பிறகு 108 முறை படிக்கும் பணியைத் துவங்கினாள். காலையில் சீக்கிரம் எழுந்து நான்கு முறை படித்தாள். மாலையிலோ இரவிலோ நேரம் கிடைத்ததைப் பொருத்து, எப்படியும் உறங்கப் போகும் முன்பு நான்கு முறை படிப்பதென்று வழக்கப்படுத்திக் கொண்டாள்.

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு சிவகாமியைக் கோயிலில் பார்த்த அர்ச்சகர், ''என்னம்மா சஹஸ்ரநாமம்  படிக்க ஆரம்பிச்சுட்டீங்க போலருக்கே!'' என்றார்.

''எப்படிச் சொல்றீங்க ஐயா?'' என்றாள் சிவகாமி.

''உங்க முகத்தில ஒரு தெளிவு தெரியறதே!''

''என் வீட்டுக்காரர் முகத்தில கூடக் கொஞ்சம் தெளிவு வந்திருக்கற மாதிரி இருக்கு. நீங்க சொன்ன மாதிரி சஹஸ்ரநாமம் படிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே அவர் உடம்பு குணமாக ஆரம்பிச்சுடுச்சுன்னு நினைக்கிறேன்'' என்றாள் சிவகாமி.

''நன்னாவே குணமாயிடுவார். நீங்க சொல்லிண்டே வாங்கோ" என்றார் அர்ச்சகர்.

த்து நாட்களுக்குப் பிறகு கோயிலுக்கு வந்த சிவகாமி, அர்ச்சகரிடம், ''108 தடவை சொல்லி முடிச்சுட்டேன்யா. அவருக்கு ஜுரம் இறங்கிடுச்சு. நாலஞ்சு நாள்ள வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போகலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு. உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்!' என்றாள்.

''என்னம்மா இது! எனக்கு நன்றி சொல்றதாவது!அந்தக் காலத்தில ரிஷிகள்ளாம் தவம் பண்ணி கடவுள் கிட்ட வரம் வாங்குவா. நீங்க என்னன்னா நான் சொன்ன யோசனையை ஏத்துண்டு, உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை சீக்கிரமே கத்துண்டு, உங்க வேலைகள், பொறுப்புகளுக்கு மத்தியில, கஷ்டப்பட்டு 108 தடவை  சஹஸ்ரநாமம் சொல்லி, உங்க புருஷன் உயிரை எமன்கிட்டேந்து மீட்டுண்டு வந்திருக்கேள். உங்களோட தவத்துக்குப் பெருமாள் வரம் கொடுத்திருக்கார். கோவிலுக்குள்ள பகவானைத் தவிர வேற யாரையும் சேவிக்கக் கூடாது. இல்லேன்னா நானே உங்க கால்ல விழுந்திருப்பேன்'' என்றார் அர்ச்சகர்.

''என்னங்கய்யா இது!'' என்றாள் சிவகாமி சங்கடத்துடன் ''

துறவறவியல்
     அதிகாரம் 27      
தவம்  
குறள் 269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

பொருள்:  
தவம் செய்வதால் வரும் ஆற்றலைப் பெற்றவர்களால் எமனையும் வெல்ல முடியும்.

குறள் 270

குறள்  268

Wednesday, July 10, 2019

268. சேதுவின் உண்ணாவிரதம்


சேது உண்ணாவிரதம் தொடங்கி ஐந்து நாட்கள் ஆகி விட்டன.

அமைச்சர் ஒருவர் அவனைப் பார்க்க வந்தார். சேதுவிடம் சற்று நேரம் பேசி விட்டுக் கிளம்பும்போது, பத்திரிகையாளர்களிடம், ''யாருக்கும் பாதிப்பில்லாமல் இந்த நெடுஞ்சாலைத் திட்டம் செயல் படுத்தப்படும் என்று முதல்வர் உறுதியளித்திருப்பதை சேது அவர்களிடம் சொல்லி, அவர் தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற முதல்வரின் வேண்டுகோளையும் அவரிடம் தெரிவித்திருக்கிறேன். அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வார் என்று நம்புகிறேன்'' என்று சொல்லி விட்டுப் போனார்.

ஆனால் சேது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவில்லை.

நிருபர்கள் அமைச்சர் சொன்னதைப்பற்றி சேதுவிடம் கேட்டபோது, ''இந்தத் திட்டம் கை விடப்படும் வரை உண்ணாவிரதம் என்றுதான் இதை ஆரம்பத்தேன். திட்டம் கை விடப்படும் என்று அமைச்சர் சொல்லவில்லையே!' என்றான் சேது சுருக்கமாக.

பதினைந்தாம் நாளில் முதலமைச்சரே சேதுவைப் பார்க்க வந்தார். சேதுவிடம் தனியாகப் பேச வேண்டும் என்று அவர் கேட்டபோது, சேது ஒப்புக் கொள்ளவில்லை. அவன் அருகில் மேடையில் அமர்ந்திருந்த போராட்டக் குழு உறுப்பினர்கள் அவனை வற்புறுத்தி ஒப்புக்கொள்ளச் செய்தனர்.

பத்து நிமிடம் உண்ணாவிரத மேடையிலேயே திரை மறைவில் சேதுவிடம் பேசி விட்டு, முதல்வர் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் கிளம்பி விட்டார். 

முதலமைச்சர் அவனிடம் பேசியதைப் பற்றிப் பத்திரிகையாளர்கள் சேதுவிடம் கேட்ட போது, ''அன்னிக்கு அமைச்சர் சொன்னதைத்தான் முதல்வரும் சொன்னாரு. உண்ணாவிரதத்தைக் கை விடச் சொன்னாரு. அரசு நல்ல முடிவை எடுக்கும்னு சொன்னாரு'' என்றான் சேது.

''உங்க முடிவு?''

''திட்டத்தைக் கை விடறதா அரசு அறிவிச்சதும் உண்ணாவிரதம் முடியும்'' என்றான் சேது. சொல்லும்போதே அவன் குரலில் 15 நாட்கள் உண்ணாமல் இருந்ததன் சோர்வு தெரிந்தது.

பத்திரிகையாளர்கள் சென்றதும், போராட்டக்குழு உறுப்பினர்கள் மூன்று பேரிடம், சேது முதல்வர் தன்னிடம் சொன்ன வேறு சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டான். ''இதுக்குத்தான் அவர் கிட்ட  தனியாப் பேச மாட்டேன்னு சொன்னேன்'' என்றான் சேது. 

''எங்களுக்கு உங்களைப் பத்தித் தெரியுமே! நாங்க இருந்திருந்தா அவரு வெளிப்படையாப் பேசி இருக்க மாட்டாரு. இப்ப உங்ககிட்ட அவர் ஆசை காட்டிப் பேசினதிலேந்து அவர் மனசில என்ன இருக்குன்னு தெரிஞ்சுடுச்சில்ல?'' என்றார் ஒரு உறுப்பினர்.

''தம்பி! தவம் பண்ணினா கடவுள் வேணும்னா வரம் கொடுக்கலாம். ஆனா, உண்ணாவிரதத்தை மதிச்சு அரசாங்கம் தங்க முடிவை மாத்திக்காது. உங்களுக்கு சின்ன வயசு. நீங்க இன்னும் ரொம்ப நாள் நல்லா வாழணும். உங்க உடம்பு மோசமாய்க்கிட்டிருக்கு. நீங்க உண்ணாவிரதத்தை முடிச்சுடுங்க. நாம மறியல், ஊர்வலம்னு வேற மாதிரி போராடிப் பாக்கலாம்'' என்றார் வயதில் மூத்த ஒரு உறுப்பினர்.

''உங்க அக்கறையும், வாழ்த்துமே பெரிய வரம்தான் ஐயா!'' என்று சொல்லிப் பணிவாக அவர் கோரிக்கையை மறுத்து விட்டான் சேது.

சேதுவின் உண்ணாவிரதம் இருபத்தைந்தாவது நாளை எட்டியபோது, அவன் உடல்நிலை மோசமாகி வருவதாக அவனைப் பரிசோதித்த மருத்துவர் அறிவித்தார்.

சேதுவுக்கு ஏதாவது ஆகி விட்டால் மக்களின் கோபத்தைச் சமாளிக்க முடியாமல் போய் விடும் என்று பயந்த அரசு நெடுஞ்சாலைத் திட்டத்தைக் கை விடுவதாக அறிவித்தது.

சேதுவின் உண்ணாவிரதமும் முடிவுக்கு வந்தது.

சில நாட்கள் கழித்து, நெடுஞ்ஞாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் சேதுவுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினர்.

விழாவுக்குத் தலைமை ஏற்றவர் சொன்னார்'' இந்த விழாவை நாங்க நடத்தறதுக்கு ஒரு காரணம் இருக்கு. இந்த நெடுஞ்சாலைத் திட்டத்தால பாதிப்புக்கு உள்ளானவங்க இந்தப் போராட்டத்தை நடத்தினோம். ஆனா இதுக்காக தன் உயிரைப் பணயம் வச்சு உண்ணாவிரதம் இருந்த நண்பர் சேதுவுக்கு ஒரு சதுர அடி நிலம் கூடக் கிடையாது. மத்தவங்களுக்காக, இந்த ஊருக்காக, இந்தப் பகுதி பக்களுக்காக  அவரு இதைச் செஞ்சாரு. அந்தக் காலத்தில தவம் பண்ணினவங்கள்ள நிறையப் பேரு தங்களுக்கு ஏதோ ஒரு நன்மை கிடைக்கணும்னுதான் தவம் பண்ணியிருக்காங்க. ஆனா சேது மத்தவங்களுக்காக இந்தப் பெரிய செயலைச் செஞ்சிருக்காருங்கறதை இந்த உலகத்துக்கு உரக்கச் சொல்லத்தான் இந்தப் பாராட்டு விழா. இந்த ஊர்க்காரங்களுக்கு மட்டும் இல்ல, இந்தப் பகுதியில இருக்கற எல்லாருக்குமே அவர் ஒரு தெய்வம்."

துறவறவியல்
     அதிகாரம் 27      
தவம்  
குறள் 268
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.

பொருள்:  
தவ வலிமையால் தன் உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம்  கை கூப்பி வணங்கும்.

குறள் 269

குறள்  267

Tuesday, July 2, 2019

267.அறிக்கையை மாற்று!


"ஏம்ப்பா உனக்குச் சின்ன வயசு. வேலையில நல்லா முன்னுக்கு வர வேண்டியவன். உனக்கு ஏன்  இந்தப் பிடிவாதம்?" என்றார் கிருஷ்ணசாமி/

"இது பிடிவாதம் இல்லை சார். விதிகளைப்  பின் பத்தறது." என்றான் சங்கர்.

"அரசாங்கத்தில மேலதிகாரிகள் சொல்றதுதான் விதி. அவங்க சொன்னதைக் கேக்கலேன்னா அதுதான் விதி மீறல். அதுக்கு தண்டனை கிடைக்கும்!"

சங்கர் இதற்கு பதில் சொல்வதற்குள் அங்கு வந்த பியூன்  "சார் உங்களை ஏ டி கூப்பிடறாரு" என்றான்.

சங்கர் அசிஸ்டன்ட் டைரக்டர் அறைக்குச் சென்றதும் அவனை அமரச் சொன்ன அசிஸ்டன்ட் டைரக்டர் குருமூர்த்தி,  "நீங்க இன்ஸ்பெக்‌ஷன் போயிட்டு வந்துட்டு தொழிற்சாலையை மூடணும்னு ரிப்போர்ட் கொடுத்திருக்ங்களே, அரவிந்த் இண்டஸ்ட்ரீஸ், அவங்களுக்கு மேலிடத்தில நிறைய செல்வாக்கு உண்டு. டைரக்டர் என்னை ஃபோன்ல கூப்பிட்டு சத்தம் போடறாரு. அவருக்கு மேலேந்து பிரஷர் வந்திருக்கு, புரியும்னு நினைக்கிறேன்."

சங்கர் மௌனமாக இருந்தான்.

"சுற்றுச் சுழல் கட்டுப்பாடு நிபந்தனைகளை அவங்க நிறைவேத்தலேங்கற உங்க ரிப்போர்ட்டை, அம்பது சதவீதம் நிறைவேத்திட்டாங்கன்னு மாத்தி எழுதிக் கொடுங்க. மீதியை இன்னும் ஆறு மாசத்துல நிறைவேத்திடுவோம்னு சொல்லி  கம்பெனி கிட்ட லெட்டர் வாங்கிகிட்டு தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்த நான் மேலேந்து அனுமதி வாங்கிடறேன். உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது" என்றார் குருமூர்த்தி.

"அஞ்சு சதவீதம் கூ ட நிறைவேத்தலங்கறதுதானே சார் உண்மை? அதைத்தானே நான் ரிப்போர்ட்ல எழுதியிருக்கேன்? பொய் ரிப்போர்ட் கொடுக்கச் சொல்றிங்களா?"

"கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடத்துக்கங்கன்னு சொல்றேன். இல்லாட்டா உங்களுக்குத்தான் நஷ்டம்" என்றார் குருமூர்த்தி. 

தாங்கள் பெரும்பாலான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருந்தும், 50,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் தன் ரிப்போர்ட்டில் அதைச் சரியாக எழுதுவேனென்றும், இல்லாவிட்டால் எதையுமே செய்யவில்லை என்று எழுதி விடுவேனென்றும் இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்தபோது சங்கர் மிரட்டியதாக அரவிந்த் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டான். வேறொரு அதிகாரி மீண்டும் இன்ஸ்பெக்‌ஷனுக்குச் சென்று வந்து ஐம்பது சதவீதப் பணிகள் பூர்த்தி அடைந்து விட்டதாக அறிக்கை கொடுக்க, அரவிந்த் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது.

சங்கர் மீது விசாரணை நடத்தப்பட்டு அவன் லஞ்சம் கேட்டதற்கு ஆதாரம் இல்லையென்றாலும், அவன் தவறான அறிக்கை கொடுத்ததற்காக அவனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவன் மீண்டும் வேளையில் அமர்த்தப்பட்டான். சங்கருக்கு வேறு பணி ஒதுக்கப்பட வேண்டும் என்ற விசாரணை அதிகாரியின் முடிவை ஏற்று அவனை அக்கவுண்ட்ஸ் பிரிவில் போட்டார்கள் .

ங்கர் மீண்டும் வேலையில் சேர்ந்த பிறகு அவன் சீட்டுக்கு கிருஷ்ணசாமி வந்தார்.

"வருத்தமா இருக்கு சங்கர். அதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். இங்கே மேலதிகாரிகள் சொல்றதுதான் விதின்னு. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கிட்டிருக்கலாம்" என்றார் கிருஷ்ணசாமி..

சங்கர் பேசாமல் சிரித்தான்.

அவனை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்த கிருஷ்ணசாமி, "ஆனா, நீ இப்படித்தான் இருப்பேன்ன்னு நினைக்கறேன். இங்க மோசமானவங்க கொஞ்சம் பேரு.  பெரும்பாலானவங்க நமக்கேன் வம்புன்னு பணிஞ்சு போயிடுவாங்க - என்னை மாதிரி!.உன்னை மாதிரி நேர்மையா இருந்து எல்லாத்தையும் எதிர் கொள்றவங்க ஒண்ணு  ரெண்டு பேருதான்.

"நேர்மையா இருக்கறது ஒரு தவம். அந்தக் காலத்தில் யாராவது தவம் பண்ணினா, ஒரு பக்கம் அசுரர்கள் வந்து அவங்க தவத்தைக் கலைப்பாங்க.     
இன்னொரு பக்கம் இந்திரன் மாதிரி தேவர்கள், ஊர்வசி, மேனகை மாதிரி யாரையாவது அனுப்பி வலை விரிச்சுத் தவத்தைக் கலைப்பாங்க.அதுக்கு வசப்படலேன்னா, அவங்க சக்தியைப் பயன்படுத்தி புயல், மழை இதையெல்லாம் உருவாக்கி தவம் பண்றவங்களைக் கஷ்டப்படுத்துவங்க. இந்தக் காலத்தில நேர்மையா இருக்கறதை ஒரு தவமா நினைச்சுச் செயல்படறவங்களுக்கு இது மாதிரிதான் நடக்குது. பண ஆசை காட்டறது, பயமுறுத்தறது, காயப்படுத்தறது, அழிக்க முயற்சி செய்யறது எல்லாம் நடக்கும்., இதையெல்லாம் எதிர் கொள்ற தைரியம் உனக்கு இருக்குன்னு நினைக்கறேன். ஆனா இப்ப உன்னை அக்கவுண்ட்ஸ்ல போட்டுட்டாங்களே!"

"இங்கேயும் விதிமீ றல்கள் நடந்திருக்கு சார். சில பணப்பட்டுவாடாக்கள் முறைகேடா நடந்திருக்கு. இதையெல்லாம் ஸ்டடி பண்ணி ஒரு ரிப்போர்ட் எழுதலாம்னுஇருக்கேன்" என்றான் சங்கர்.

"அப்ப சீக்கிரமே உன் மேல நடக்கப் போற தாக்குதல்களைச்  சமாளிக்க நீ தயாரா இருக்கணும்!" என்றார் கிருஷ்ணசாமி.  

துறவறவியல் 
     அதிகாரம் 27      
தவம்  
குறள் 267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

பொருள்: 
பொன்னைச் சுடச் சுட, அது அதிக ஒளியுடன் விளங்குவது போல், தவம் செய்பவரைத் துன்பம் வருத்த வருத்த அவருடைய உள்ளத்தின் ஒளி அதிகமாகும்