''கடந்த 10 வருஷத்தில, மொத்தம் 57 பயிற்சிகள் நடத்தியிருக்கேன். ஒவ்வொரு பாட்ச்லேயும் சராசரியா 50 பேர்னு கணக்குப் பாத்தா, கிட்டத்தட்ட 3000 பேருக்குப் பயிற்சி கொடுத்திருக்கேன். அதாவது, 3000 பேர் வாழ்க்கையில வெற்றி பெற நான் உதவியிருக்கேன்!'' என்றார் சிவம், பெருமையுடன்.
''பாராட்டப்பட வேண்டிய சாதனைதான். ஆனா, ஒருவர் வாழ்க்கையில வெற்றி பெற உங்க பயிற்சி எப்படி உதவுதுன்னு நம் நேயர்களுக்குப் புரியற மாதிரி சொல்ல முடியுமா?'' என்றார் தொலைக்காட்சியில் அவரைப் பேட்டி கண்டவர்.
"எல்லா மனிதர்களுக்குள்ளேயும் பெரிய ஆற்றல் இருக்கு. ஆனா, சில பேர்தான் அதை உணர்ந்திருக்காங்க. அதிலேயும் ஒரு சிலர்தான் அதைப் பயன்படுத்தறாங்க. ஒத்தருக்குள்ள இருக்கற மாபெரும் சக்தியைப் புரிஞ்சுக்கிட்டு, அதைப் பயன்படுத்தி அவர் தன் வாழ்க்கையில வெற்றி பெற இந்தப் பயிற்சி உதவும்'' என்றார் சிவம்.
இந்தப் பேட்டி வெளியான சில நாட்களுக்குப் பிறகு, சிவத்தைப் பேட்டி காண அவரிடம் நேரம் வாங்கி, அவரைப் பார்க்கச் சென்றேன். நான் ஒரு பத்திரிகையாளன்தான். ஆனால், நான் அவரைப் பேட்டி காணச் சென்றது என் சந்தேகத்துக்கு விளக்கம் கேட்க.
''கிட்டத் தட்ட மூவாயிரம் பேருக்குப் பயிற்சி கொடுத்திருப்பதா சொன்னீங்களே, அவங்க எல்லாரும் வாழ்க்கையில வெற்றி அடைச்சுட்டாங்கன்னு உங்களால சொல்ல முடியுமா?'' என்றேன்.
''பயிற்சிக்கு அப்புறம் எல்லாரையும் நான் சந்திக்கல. ஆனா, பல பேர் எங்கிட்ட தொடர்பு கொண்டு, பயிற்சியில நான் சொல்லிக் கொடுத்த விஷயங்களைப் பயன்படுத்தி வாழ்க்கையில வெற்றி பெற்றதா சொல்லி இருக்காங்க'' என்றார் சிவம்.
"சுமாரா எத்தனை பேர் அப்படிச் சொல்லியிருப்பாங்க?''
சிவம் என்னை முறைத்துப் பார்த்து விட்டு, ''அதுக்கெல்லாம் நான் கணக்கு வச்சுக்கல!'' என்றார்.
''சார்! நான் உங்க பயிற்சியைப் பத்திக் குறை சொல்றதுக்காக இதைக் கேக்கல. உங்க பயிற்சியில கலந்துக்கிட்டவங்க சில பேர் எங்கிட்ட உங்க பயிற்சி பற்றி உயர்வா சொல்லி இருக்காங்க. சில மாசங்களுக்கு முன்னே, இதை எங்க பத்திரிகையிலயும் வெளியிட்டிருக்கோம். நான் இப்ப உங்ககிட்ட கேக்கறது என்னோட தனிப்பட்ட ஆர்வத்துக்காக. இது பத்தி பத்திரிகையில எதுவும் வராது'' என்றேன்.
சிவம் சற்று யோசித்து விட்டு, ''சரியா சொல்ல முடியாது. ஆனா, நீங்க தனிப்பட்ட முறையில கேக்கறதால சொல்றேன். பயிற்சியில கலந்துக்கிட்டவங்கள்ள பத்து சதவீதம் பேர்தான் பயிற்சியோட பலனை முழுசா அனுபவிச்சு வாழ்க்கையில வெற்றி பெற்றாங்கங்கறது என்னோட ஊகம்'' என்றவர் சற்றுத் தயங்கி விட்டு, ''எனக்கே இதில கொஞ்சம் வருத்தம் உண்டு'' என்றார்.
"மீதி 90 சதவீதம் பேர் ஏன் வெற்றி பெறுவதில்லன்னு யோசிச்சிருக்கீங்களா? அவங்க முயற்சி செய்யறதில்லையா?''
''ஒரு சிலர் முயற்சி செய்யாம இருக்கலாம். ஆனா முயற்சி செய்யறவங்கள்ள பல பேர் ஏனோதானோன்னுதான் முயற்சி செய்யறாங்கன்னு நினைக்கறேன்.''
''ஏன் அப்படி?''
''ஏன் அப்படின்னு நான் யோசிச்சப்ப எனக்குக் கிடைச்ச விடை, இது மனித இயற்கைங்கறதுதான்!''
''மனித இயற்கைன்னு எப்படிச் சொல்ல முடியும்?''
''ஏன்னா, எல்லாத் துறையிலுமே இப்படித்தானே இருக்கு? பள்ளிக்கூடங்களிலேயும், கல்லூரிகளிலேயும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைச்சாலும், சில பேர்தானே நல்லாக் கத்துக்கறாங்க? இது சிலருக்கு இயற்கையாவே அதிக அறிவு இருக்கறதனாலன்னு சிலபேர் சொல்லலாம். ஆனா, அது மட்டும் காரணம் இல்ல. புத்திசாலியா இருக்கற பையங்க பலபேர் படிப்பில சோபிக்காம இருக்காங்க. சராசரியான மாணவர்கள் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டுப் படிச்சு நல்லா முன்னுக்கு வராங்க, இதுக்குக் காரணம் படிப்பில அக்கறை காட்டறதுதான். அது மாதிரி, என் பயிற்சியில கலந்துக்கிட்டவங்கள்ளேயும், தாங்க கத்துக்கிட்ட விஷயத்தை அக்கறையோட பின்பற்றுகிறவங்க வெற்றி அடையறாங்க.''
''அவங்க பயிற்சியில கத்துக்கிட்ட விஷயங்களைப் பின்பற்றணும்னு நீங்க அவங்களை மோடிவேட் பண்ண முடியாதா?''
''மோடிவேட் பண்றேன். ஆனா, செய்ய வேண்டியது அவங்க கையிலதானே இருக்கு?'' என்ற சிவம், ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்து விட்டு, ''எனக்கு என்ன தோணுதுன்னா, எந்த விஷயத்தையும் தவம் செய்யற மாதிரி மன ஒருமைப்பாட்டோடயும், ஈடுபாட்டோடயும் செஞ்சாதான் அதில வெற்றி அடைய முடியும். இது மாதிரி ஈடுபாட்டோட இருக்கறவங்க உலகத்தில ரொம்ப சில பேர்தான். என் பயிற்சியில பங்கேற்றவங்களும் இந்த உலகத்தைப் பிரதிபலிக்கறவங்கதானே?'' என்றார்.
''நீங்க சொன்னது சரியாத்தான் இருக்கணும். ஏன்னா, தவம் பண்ற மாதிரி கண்ணை மூடி மனசை ஒருமுகப்படுத்தி யோசிச்சுத்தானே இந்த பதிலைச் சொன்னீங்க!'' என்றேன் நான்.
துறவறவியல்
அதிகாரம் 27
தவம்
குறள் 270இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
உலகில் பெரும்பாலோர் ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பதற்குக் காரணம், தவம் செய்பவர்கள் சிலராகவும், செய்யாதவர்கள் பலராகவும் இருப்பதுதான்.
No comments:
Post a Comment