
சுவாமி ரகுராமசந்திரா தத்துவத்தை விளக்கிச் சொன்னபோது, கூட்டம் ஆர்வத்துடனும், கவனத்துடனும் கேட்டுக் கொண்டிருந்தது.
அவரே ஒருமுறை, ''நீங்க என் பேச்சைக் கேக்க ஆரம்பிச்சுட்டீங்கன்னா, உங்க கவனம் என் பேச்சிலேந்து ஒரு விநாடி கூட விலகாது'' என்று சொன்னது போல், அவர் பேச்சு, கேட்பவர்களைக் கட்டிப் போட்டு விடும். பேச்சில் அத்தனை தெளிவு, சுவாரஸ்யம் இருக்கும்.
அவர் பேச்சு முடிந்ததும், கூட்டம் எழுந்து செல்லத் தொடங்கியது. சிலர் எழுந்து செல்ல மனம் இல்லாதது போல் சற்று நேரம் உட்கார்ந்து விட்டுப் பிறகு அரை மனதுடன் எழுந்தனர்.
தாமதமாக எழுந்த அந்தப் பெண், கழிவறை இருக்கும் பக்கமாகச் சென்றாள். ஆனால், கழிவறைக்குச் செல்லாமல், வழியில் ஒரு இடத்தில் யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு, சட்டென்று அருகிலிருந்த ஒரு அறைக் கதவைத் திறந்து, அறைக்குள் நுழைந்தாள்.
உள்ளே அமர்ந்திருந்த சுவாமிஜியின் செயலாளர் மூர்த்தி, ''யாரும் பாக்கலியே?'' என்றான், பதட்டத்துடன்.
அவள் இல்லையென்று தலையாட்டினாள். மூர்த்தி அவளை அருகில் இருந்த பெரிய அறைக்கு அழைத்துச் சென்றான்.
"இது எப்படிப்பா நடந்துது?'' என்றார் சுவாமி ரகுராமச்சந்திரா, கோபத்துடன்.
''தெரியல, குருஜி. யாரோ கண்டுபிடிச்சு, வாட்ஸ்ஆப்ல போட்டுட்டான். இன்னி சாயந்திரத்துக்குள்ள, உலகம் முழுக்கப் பரவிடும்'' என்றான் மூர்த்தி.
''அயோத்தி அரசரின் பெயர் கொண்ட குருவின் ஆசிரமத்துக்கு அவ்வப்போது ஒரு பெண் வந்து விட்டுப் போகிறாராம். இது குருவுக்கும், இதற்கு ஏற்பாடு செய்யும் அவர் உதவியாளருக்கும் மட்டும்தான் தெரியுமாம். இவரை நம்பி, இவர் பேச்சைக் கேட்கப் போகும் மக்களை, அந்த ராமச்சந்திர மூர்த்திதான் காப்பாற்ற வேண்டும்!''
''எதுக்கு இப்ப அதை வாய் விட்டுப் படிச்சுக் காட்டற?'' என்றார் ரகுராமச்சந்திரா, எரிச்சலுடன்.
''வெளிப்படையா பேர் எழுதியிருக்கான்னு பாத்தேன். அப்படி இருந்தா, அவதூறு வழக்குப் போடலாம். ஆனா, வெளிப்படையா பேர் எழுதாமயே, நீங்கதான்னு காட்டிட்டான்! சந்தேகமே இருக்கக் கூடாதுன்னு என் பேரையும் சேத்துட்டான்!'' என்றான் மூர்த்தி.
''அது சரி. இது எப்படி வெளியில வந்தது? அந்தப் பொண்ணு சொல்லியிருப்பாளா?''
''நிச்சயமா மாட்டா. அவளுக்கு இதில என்ன லாபம்? இவ்வளவு பணம் அவளுக்கு வேற யார் கொடுப்பாங்க?''
''நம்ப மூணு பேருக்குத்தானே இது தெரியும்?''
''குருஜி! அந்தப் பொண்ணு சொல்லல. நானும் சொல்லல!''
''அப்படின்னா, நானே இதைச் சொல்லியிருப்பேன்னு சொல்றியா?'' என்றார் சுவாமிஜி.
''நேரடியா சொல்லியிருக்க மாட்டீங்க...''
''அப்படின்னா?''
''குருஜி! தப்பா நினைச்சுக்காதீங்க. உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?'' என்றான் மூர்த்தி.
''என்ன?''
''உங்க உபன்யாசத்தில நீங்க சொல்ற விஷயங்கள்ளாம் உண்மையா?''
''இதில உனக்கென்ன சந்தேகம்? நான் சொல்ற விஷயங்கள் எல்லாமே என் குரு எனக்கு சொல்லிக் கொடுத்தது. அவர் பெரிய ஞானி. அவர்கிட்ட கத்துக்கிட்டதை நான் சொல்றதாலதான் எனக்கு இவ்வளவு பேர் கிடைச்சிருக்கு. எனக்கு இந்த பலவீனம் இருக்கறதால, நான் சொல்ற விஷயங்களோட பெருமை குறையாது'' என்றார் சுவாமிஜி, சற்று வேகத்துடன்.
''நானும் அப்படித்தான் நினைக்கிறேன், குருஜி. நீங்க பஞ்ச பூதங்களைப் பத்தி சொன்னீங்களே?''
''ஆமாம். அதுக்கு என்ன?''
''நீங்க செய்யறது உங்களுக்குள்ள இருக்கற பஞ்ச பூதங்களுக்குத் தெரியும். நம் உடம்பில இருக்கற பஞ்ச பூதங்கள், வெளியில இருக்கற பஞ்ச பூதங்களோட தொடர்பில இருக்கறதா சொன்னீங்க. அப்ப, உங்க உடம்பில இருக்கிற பஞ்ச பூதங்கள் மூலமா, இந்த விஷயம் வெளி உலகத்துக்குத் தெரிஞ்சிருக்கலாம் இல்லையா?''
இவன் இதை உண்மை என்று நினைத்துச் சொல்கிறானா, அல்லது தன்னைக் கிண்டல் செய்கிறானா என்று புரியாமல், சுவாமிஜி மூர்த்தியைப் பார்த்தார்.
துறவறவியல்
அதிகாரம் 28
கூடாவொழுக்கம்
குறள் 271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
பொருள்:
வஞ்ச மனம் உள்ளவனின் பொய்யொழுக்கத்தை அவன் உடலில் கலந்திருக்கும் ஐந்து பூதங்களும் கண்டு தமக்குள் சிரிக்கும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment