சேது உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஐந்து நாட்கள் ஆகி விட்டன.
அமைச்சர் ஒருவர் சேதுவைப் பார்க்க வந்தார். அவனிடம் சற்று நேரம் பேசி விட்டு, கிளம்பும்போது பத்திரிகையாளர்களிடம், ''யாருக்கும் பாதிப்பில்லாமல் இந்த நெடுஞ்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் உறுதியளித்திருப்பதை சேது அவர்களிடம் சொல்லி, அவர் தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற முதல்வரின் வேண்டுகோளையும் அவரிடம் தெரிவித்திருக்கிறேன். அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வார் என்று நம்புகிறேன்'' என்று சொல்லி விட்டுப் போனார்.
ஆனால், சேது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவில்லை.
அமைச்சர் சொன்னதைப் பற்றி நிருபர்கள் சேதுவிடம் கேட்டபோது, ''இந்தத் திட்டம் கைவிடப்படும் வரை உண்ணாவிரதம் என்றுதான் இதை ஆரம்பித்தேன். திட்டம் கைவிடப்படும் என்று அமைச்சர் சொல்லவில்லையே!" என்றான் சேது, சுருக்கமாக.
பதினைந்தாம் நாள், முதலமைச்சரே சேதுவைப் பார்க்க வந்தார். சேதுவிடம் தனியாகப் பேச வேண்டும் என்று அவர் கேட்டபோது, சேது ஒப்புக் கொள்ளவில்லை. அவன் அருகில் மேடையில் அமர்ந்திருந்த போராட்டக் குழு உறுப்பினர்கள் அவனை வற்புறுத்தி ஒப்புக் கொள்ளச் செய்தனர்.
பத்து நிமிடம் உண்ணாவிரத மேடையிலேயே திரை மறைவில் சேதுவிடம் பேசி விட்டு, முதல்வர் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் கிளம்பி விட்டார்.
முதலமைச்சர் அவனிடம் பேசியதைப் பற்றிப் பத்திரிகையாளர்கள் சேதுவிடம் கேட்டபோது, ''அன்னிக்கு அமைச்சர் சொன்னதைத்தான் முதல்வரும் சொன்னாரு. உண்ணாவிரதத்தைக் கைவிடச் சொன்னாரு. அரசு நல்ல முடிவை எடுக்கும்னு சொன்னாரு'' என்றான் சேது.
''உங்க முடிவு?''
''திட்டத்தைக் கைவிடறதா அரசு அறிவிச்சதும் உண்ணாவிரதம் முடியும்'' என்றான் சேது. சொல்லும்போதே, அவன் குரலில் 15 நாட்கள் உண்ணாமல் இருந்ததன் சோர்வு தெரிந்தது.
பத்திரிகையாளர்கள் சென்றதும், போராட்டக் குழு உறுப்பினர்கள் மூன்று பேரிடம், முதல்வர் தன்னிடம் சொன்ன வேறு சில விஷயங்களை சேது பகிர்ந்து கொண்டான்.
''இதுக்குத்தான் அவர்கிட்ட தனியாப் பேச மாட்டேன்னு சொன்னேன்'' என்றான் சேது.
''எங்களுக்கு உங்களைப் பத்தித் தெரியுமே! நாங்க இருந்திருந்தா, அவர் வெளிப்படையாப் பேசி இருக்க மாட்டாரு. இப்ப உங்ககிட்ட அவர் ஆசை காட்டிப் பேசினதிலேந்து அவர் மனசில என்ன இருக்குன்னு தெரிஞ்சுடுச்சில்ல?'' என்றார் ஒரு உறுப்பினர்.
''தம்பி! தவம் பண்ணினா, கடவுள் வேணும்னா வரம் கொடுக்கலாம். ஆனா, உண்ணாவிரதத்தை மதிச்சு அரசாங்கம் தன்னோட முடிவை மாத்திக்காது. உங்களுக்கு சின்ன வயசு. நீங்க இன்னும் ரொம்ப நாள் நல்லா வாழணும். உங்க உடம்பு மோசமாய்க்கிட்டிருக்கு. நீங்க உண்ணாவிரதத்தை முடிச்சுடுங்க. நாம மறியல், ஊர்வலம்னு வேற மாதிரி போராடிப் பாக்கலாம்'' என்றார் வயதில் மூத்த ஒரு உறுப்பினர்.
''உங்க அக்கறையும், வாழ்த்துமே பெரிய வரம்தான், ஐயா!'' என்று சொல்லிப் பணிவாக அவர் கோரிக்கையை மறுத்து விட்டான் சேது.
சேதுவின் உண்ணாவிரதம் இருபத்தைந்தாவது நாளை எட்டியபோது, அவன் உடல்நிலை மோசமாகி வருவதாக அவனைப் பரிசோதித்த மருத்துவர் அறிவித்தார்.
சேதுவுக்கு ஏதாவது ஆகி விட்டால், மக்களின் கோபத்தைச் சமாளிக்க முடியாமல் போய் விடும் என்று பயந்த அரசு, நெடுஞ்சாலைத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.
சேதுவின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.
சில நாட்கள் கழித்து, நெடுஞ்சாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் சேதுவுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினர்.
விழாவுக்குத் தலைமை ஏற்றவர் சொன்னார்.
''இந்த விழாவை நாங்க நடத்தறதுக்கு ஒரு காரணம் இருக்கு. இந்த நெடுஞ்சாலைத் திட்டத்தால விவசாயிகளான எங்களோட நிலங்கள் பறிபோகுங்கறதாலதான் நாங்க இந்தப் போராட்டத்தை நடத்தினோம். ஆனா, தன் உயிரைப் பணயம் வச்சு உண்ணாவிரதம் இருந்த நண்பர் சேதுவுக்கு இங்கே ஒரு சதுர அடி நிலம் கூடக் கிடையாது. மத்தவங்களுக்காக, இந்த ஊருக்காக, இந்தப் பகுதி மக்களுக்காக அவர் இதைச் செஞ்சாரு.
"அந்தக் காலத்தில, தவம் பண்ணினவங்கள்ள பல பேர் தங்களுக்கு ஏதோ ஒரு நன்மை கிடைக்கணும்னுதான் தவம் பண்ணியிருக்காங்க. ஆனா, உண்ணாவிரதம்கற இந்தத் தவத்தை இருபத்தைந்து நாட்கள் செஞ்ச சேது, இதைத் தனக்காகச் செய்யல, மத்தவங்களுக்காகச் செஞ்சிருக்காருங்கறதை இந்த உலகத்துக்கு உரக்கச் சொல்லத்தான் இந்தப் பாராட்டு விழா. இந்த ஊர்க்காரங்களுக்கு மட்டும் இல்ல, இந்தப் பகுதியில இருக்கற எல்லாருக்குமே அவர் ஒரு தெய்வம்."
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 27
தவம்
குறள் 268தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
தவ வலிமையால் தன் உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் கைகூப்பி வணங்கும்.
குறள் 269குறள் 267
No comments:
Post a Comment