
"நோ! நோ!" என்று பல குரல்கள் எழுந்தன.
"நீங்க இல்லாம இந்த டிரஸ்ட் இருக்கவே முடியாது, சார்!" என்றார் ஒரு டிரஸ்ட் போர்ட் உறுப்பினர்.
இணை இயக்குனர் மணிகண்டன் எழுந்து, "இந்த டிரஸ்ட் ஆரம்பிச்சு 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடற விதமா, சிட்டி கிளப்ல அடுத்த மாசம் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தறாங்க. அது முடிஞ்சப்புறம், உங்க முடிவைப் பத்தி யோசிக்கலாம்" என்றார்.
டிரஸ்ட் போர்ட் உறுப்பினர்கள் அனைவரும் அதை ஆமோதிக்க, போர்ட் மீட்டிங் முடிந்தது.
பாராட்டு விழா மாநில ஆளுநரின் தலைமையில் நடந்தது.
நீலகண்டனின் சேவைகளையும், சாதனைகளையும் பாராட்டியும், அரசாங்கத்திடமிருந்து அவருக்குக் கிடைத்த பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகள் பற்றிக் குறிப்பிட்டும் பலரும் பேசினர்.
டிரஸ்ட் சார்பில் பேசிய மணிகண்டன், "இந்த டிரஸ்டின் வளர்ச்சிக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று நீலகண்டன் அவர்களின் நேர்மை. தான் நேர்மையாக இருந்தது மட்டுமின்றி, மற்றவர்களும் நேர்மையாக இருக்கும்படி அவர் பார்த்துக் கொண்டார். எந்த மூலையில், எந்த ஒரு சிறிய தவறு நடந்தாலும், அவருக்குத் தெரிந்து விடும். உடனே நடவடிக்கை எடுத்து, தவறு செய்தவரை எச்சரிப்பார். தவறு பெரியதாக இருந்தால், தாட்சண்யம் பார்க்காமல், தவறு செய்தவரைப் பதவி நீக்கம் செய்து விடுவார். நானும் ஒரு டிரஸ்ட் உறுப்பினன் என்றாலும், எனக்கோ, மற்றவர்களுக்கோ கண்ணில் படாத விஷயங்களை அவர் எப்படிக் கண்டு பிடித்தார் என்று பல முறை நான் வியந்திருக்கிறேன். இதற்குக் காரணம், சிறிது கூடத் தன்னலமின்றி, இது பொதுச் சேவைக்கான டிரஸ்ட், இங்கே ஒரு சிறிய தவறு கூட நடக்கக் கூடாது என்ற அர்ப்பண உணர்வுடன் அவர் செயல்பட்டதுதான்" என்றார்.
நீலகண்டன் புன்னகை செய்தார். வெளிப்படையாக, மணிகண்டன் பேச்சைக் கேட்டு ரசித்து அவர் சிரித்ததாகத் தோன்றினாலும், அவரைப் பொருத்தவரை, 'இவர்களையெல்லாம் எவ்வளவு ஏமாற்றி இருக்கிறேன்!" என்ற பெருமிதத்தில் விளைந்த எகத்தாளச் சிரிப்பு அது.
டிரஸ்டின் நிர்வாகத்தில் பலர் ஈடுபட்டிருந்தும், யாருக்கும் தெரியாமல், டிரஸ்டின் ஆடிட்டரை மட்டும் கையில் போட்டுக் கொண்டு, டிரஸ்டின் நிதியில் எத்தனை கோடிகளை அவர் குடும்பத்தினருக்குச் சொந்தமான போலி நிறுவனங்களுக்கும், அவருடைய வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கும் சாமர்த்தியமாக மாற்றியிருக்கிறார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.
டிரஸ்டுகளுக்குச் சொத்து வாங்கும்போது, காய்கறி வாங்கும்போது கொசுறு கேட்டு வாங்குவது போல், இன்னொரு சிறிய சொத்துக்கும் சேர்த்து விலை வைத்து, டிரஸ்ட் வாங்கிய சொத்துக்கு இலவச இணைப்பாக, அந்தச் சிறிய சொத்தைத் தனக்கு நெருங்கியவர்கள் மீது சத்தமில்லாமல் பதிவு செய்து கொண்ட விவகாரங்கள் யாருக்குத் தெரியும்?
எப்போதாவது ஏதாவது சந்தேகம் வரும் போல் தோன்றினால், வேறு ஏதோ தவறு நடந்து விட்டது போல் திசை திருப்பி, யாரோ ஒரு ஊழியரைப் பலிகடா ஆக்கி, தான் எதற்காக தண்டிக்கப்படுகிறோம் என்று அவருக்குப் புரியாமலே அவர் வேலை நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களைத்தான் அவருடைய நேர்மைக்கு எடுத்துக்காட்டாக மணிகண்டன் பறை சாற்றிக் கொண்டிருக்கிறார்!
எல்லோரும் பாராட்டி முடித்த பின், நீலகண்டன் நன்றி சொல்ல எழுந்தார். கூட்டத்தைச் சுற்றிலும் பார்த்தார். தெரிந்த முகங்கள் சில, தெரியாத முகங்கள் பல. கூட்டத்தில் ஒரு முகம் மட்டும் பரிச்சயமானதாகத் தோன்றியது. யார் என்று நினைவுக்கு வரவில்லை. ஆனால், அந்த முகத்தைப் பார்த்ததும், மனதில் சங்கடமான உணர்வு தோன்றியது. ஏன் என்று தெரியவில்லை.
அனைவருக்கும் நன்றி தெரிவித்து நீலகண்டன் பேசினார். ஆனால், அவரால் பேச்சில் முழு கவனமும் செலுத்த முடியவில்லை. புதிதாக மேடையில் பேசும் நபர் போல், நிறுத்தி நிறுத்திப் பேசினார். தான் பார்த்த முகம் கூட்டத்தில் எங்கே இருக்கிறது என்று சுற்றிப் பார்த்துக் கண்டு பிடித்தார். அந்த முகத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் பேசிக் கொண்டிருந்தபோதே, சற்று நேரத்தில் சட்டென்று நினைவு வந்து விட்டது. அக்கவுன்ட்ஸ் பிரிவில் வேலை செய்த செந்தில்!
ஒரு முறை, டிரஸ்ட் நன்கொடை பெற்றதற்கான சில ரசீதுகள் கான்சல் செய்யப்பட்டிருந்தன. அவற்றைப் பற்றி செந்தில் அக்கவுன்ட்ஸ் மேனேஜரிடம் சொன்னபோது, அவர் அவை வேறு கணக்குகளுக்குச் செல்ல வேண்டியவை என்பதால், ஆடிட்டர் அவற்றை கான்சல் செய்து விட்டதாகச் சொன்னார். கான்சல் செய்த ரசீதுகள் ஃபைல் செய்யப்பட வேண்டும் என்பதால், அவை வேண்டும் என்று அவன் கேட்க, அவை ஆடிட்டர் வசம் இருப்பதாகவும், அவர் பார்த்துக் கொள்வார் என்றும் அக்கவுன்ட்ஸ் மானேஜர் சொல்லி விட்டார்.
ஊழியர்கள் பேசிக் கொள்வதை கவனித்துத் தன்னிடம் வந்து சொல்ல வேண்டும் என்பதற்காக ஒற்றனாக அவர் நியமித்திருந்த அவருடைய உறவினன் அவரிடம் வந்து இதைச் சொன்னான்.
சில நாட்களுக்குப் பிறகு, செந்தில் பணத்தைக் கையாட முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, வேலையிலிருந்து அனுப்பப்பட்டான்.
சம்பவம் நினைவு வந்ததும், நீலகண்டனுக்கு குப்பென்று வியர்த்தது. இதுவரை அவர் வேலையை விட்டு அனுப்பிய யாரும் நியாயம் கேட்கவோ, வேறு எதற்குமோ திரும்ப வந்ததில்லை. தங்களுக்கு அநியாயம் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிந்தும், நிறுவனத்துடன் போராடினால், தங்களுக்கு வேறு இடங்களில் வேலை கிடைக்காமல் போய் விடும் என்று பயந்து, நிர்வாகத்திடம் கெஞ்சி, ஒரு நன்னடத்தைச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.
ஆனால், இவன் ஏன் இங்கே வந்திருக்கிறான்?
அவனால் எதுவும் செய்ய முடியாது என்று நீலகண்டனுக்குத் தெரிந்தாலும், அவனைப் பார்த்ததால் ஏற்பட்ட பதட்டம் நீலகண்டனுக்கு நீங்கவில்லை.
நன்றாகப் பேசக் கூடியவர் என்று அறியப்பட்ட நீலகண்டன், அன்று தடுமாற்றத்துடனும், கோர்வையின்றியும் பேசி ஒரு வழியாகத் தன் பேச்சை முடித்தார்.
"இவருக்கு என்ன ஆயிற்று?" என்று வியந்த மணிகண்டன், "பாவம்! வயதாகி விட்டதால் ஏற்பட்ட பாதிப்பு போலிருக்கிறது. அவர் விரும்பியபடி அவரை ஒய்வு பெற அனுமதித்து, அடுத்த போர்ட் மீட்டிங்கில் முடிவு செய்து விட வேண்டியதுதான்!" என்று நினைத்துக் கொண்டார்.
துறவறவியல்
அதிகாரம் 28
கூடாவொழுக்கம்
குறள் 272
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
பொருள்: வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
ஒருவன் தன் மனம் அறிந்து குற்றம் செய்யும்போது, வானம் போல் உயர்ந்த தவக்கோலம் அவனுக்கு என்ன பயன் தரும்?
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment