சிவகாமியைப் பார்த்ததும், ''சேவிச்சுக்கோங்கோ!'' என்று சொல்லி விட்டு வெளியே வந்து நின்றார் அர்ச்சகர்.
சிவகாமி பெருமாளை தரிசனம் செய்து விட்டுத் திரும்பியதும், அர்ச்சகர் சற்றுத் தயக்கத்துடன், ''தப்பா நினைச்சுக்காதீங்கோ! உங்களுக்கு ஏதாவது பிரச்னையா? தினமும் கோவிலுக்கு வந்து வேண்டிண்டு போறேளேன்னு கேக்கறேன்'' என்றார்.
சிவகாமி அழுகையை அடக்கிக் கொண்டு, 'ஆமாம்' என்பது போல் தலையை ஆட்டினாள்.
''யாருக்காவது உடம்பு சரியில்லையா?''
''என் வீட்டுக்காரர் ஆஸ்பத்திரில படுத்த படுக்கையாக் கிடக்காரு. ஏதோ விஷ ஜுரமாம். டாக்டருங்க எதுவும் சரியா சொல்ல மாட்டேங்கறாங்க. உயிர் பிழைப்பாரான்னே தெரியல...''
சிவகாமிக்குத் தொண்டை அடைத்தது.
''கவலைப்படாதீங்கோ! தினம் கோவிலுக்கு வந்து வேண்டிக்கறதுக்குப் பலன் இல்லாம போகாது. நான் ஒண்ணு சொல்றேன். செய்யறீங்களா?''
''சொல்லுங்கய்யா!''
''108 தடவை விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லுங்கோ. உங்க வீட்டுக்காரர் எழுந்து உக்காந்துடுவார்!'' என்றார் அர்ச்சகர்.
''எனக்கு அதெல்லாம் தெரியாதுய்யா!'' என்றாள் சிவகாமி.
''அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. எம்.எஸ். அம்மா பாடின விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நாலஞ்சு தடவை கேளுங்கோ. அப்புறம் அவாளோட சேந்து ரெண்டு மூணு தடவை சொல்லிப் பாருங்கோ. அப்புறம் நீங்களே புஸ்தகத்தைப் பாத்து சொல்ல ஆரம்பிச்சுடலாம்.''
''சரி. நான் சொல்ல ஆரம்பிச்சா, சொல்லி முடிக்க எவ்வளவு நாள் ஆகும்?''
''ஒரு தடவை சொல்ல இருபது இருபத்தஞ்சு நிமிஷம் ஆகும். அரை மணின்னு வச்சுண்டா கூட, தினமும் காலையில ரெண்டு மணி நேரம், சாயந்திரம் ரெண்டு மணி நேரம் சொன்னேள்னா, ஒரு நாளைக்கு எட்டு ஆறது. 13, 14 நாள்ள முடிச்சுடலாம். ஒரு பட்சத்தில, அதாவது பதினஞ்சு நாள்ள சொல்லி முடிக்கறது ரொம்ப விசேஷம். நீங்க சொல்ல ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே பலன் தெரியும்.''
''நல்லதுய்யா! என்னால முடியுதான்னு பாக்கறேன்'' என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் சிவகாமி.
அடுத்த சில தினங்களில், ஆஸ்பத்திரியில் இல்லாத நேரங்களில், விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அறிந்து கொள்வதில் செலவிட்டாள் சிவகாமி.
முதலில் தன் அண்ணனின் உதவியுடன், எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய சஹஸ்ரநாமத்தின் ஒலி வடிவத்தைத் தன் மொபைலில் பதிவு செய்து கொண்டாள். பிறகு ஒரு இயர்ஃபோன் வாங்கி, அதை எப்போதும் காதில் செருகிக் கொண்டு, முடிந்தபோதெல்லாம் திரும்பத் திரும்ப அந்த ஒலிப்பதிவைக் கேட்டுக் கொண்டிருந்தாள். தனியே இருக்கும்போது, புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒலிப்பதிவைக் கேட்டு வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முயன்றாள்.
அர்ச்சகர் சொன்னபடியே, இரண்டு நாட்களில், சிவகாமியால் புத்தகத்தைப் பார்த்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தைப் படிக்க முடிந்தது.
அதற்குப் பிறகு இயர்ஃபோனைக் கழற்றி வைத்து விட்டு. புத்தகத்தைப் பார்த்து ஒருமுறை படித்தாள். தடங்கலின்றிப் படிக்க முடிந்தது.
அதன் பிறகு, 108 முறை படிக்கும் பணியைத் துவங்கினாள். காலையில் சீக்கிரம் எழுந்து நான்கு முறை படித்தாள். மாலையிலோ, இரவிலோ நேரம் கிடைத்ததைப் பொருத்து, எப்படியும் உறங்கப் போகும் முன்பு நான்கு முறை படிப்பதென்று வழக்கப்படுத்திக் கொண்டாள்.
நான்கைந்து நாட்களுக்குப் பிறகு சிவகாமியைக் கோயிலில் பார்த்த அர்ச்சகர், ''என்னம்மா, சஹஸ்ரநாமம் படிக்க ஆரம்பிச்சுட்டீங்க போலருக்கே!'' என்றார்.
''எப்படிச் சொல்றீங்க, ஐயா?'' என்றாள் சிவகாமி.
''உங்க முகத்தில ஒரு தெளிவு தெரியறதே!''
''என் வீட்டுக்காரர் முகத்தில கூடக் கொஞ்சம் தெளிவு வந்திருக்கற மாதிரி இருக்கு. நீங்க சொன்ன மாதிரி சஹஸ்ரநாமம் படிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே அவர் உடம்பு குணமாக ஆரம்பிச்சுடுச்சுன்னு நினைக்கிறேன்'' என்றாள் சிவகாமி.
''நன்னாவே குணமாயிடுவார். நீங்க சொல்லிண்டே வாங்கோ" என்றார் அர்ச்சகர்.
பத்து நாட்களுக்குப் பிறகு கோயிலுக்கு வந்த சிவகாமி, அர்ச்சகரிடம், ''108 தடவை சொல்லி முடிச்சுட்டேன்யா. அவருக்கு ஜுரம் இறங்கிடுச்சு. நாலஞ்சு நாள்ள வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போகலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு. உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்!" என்றாள்.
''என்னம்மா இது, எனக்கு நன்றி சொல்றதாவது! அந்தக் காலத்தில, ரிஷிகள்ளாம் தவம் பண்ணி கடவுள்கிட்ட வரம் வாங்குவா. நீங்க என்னன்னா, நான் சொன்ன யோசனையை ஏத்துண்டு, உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை சீக்கிரமே கத்துண்டு, உங்க வேலைகள், பொறுப்புகளுக்கு மத்தியில, கஷ்டப்பட்டு 108 தடவை சஹஸ்ரநாமம் சொல்லி, உங்க புருஷன் உயிரை எமன்கிட்டேந்து மீட்டுண்டு வந்திருக்கேள். உங்களோட தவத்துக்குப் பெருமாள் வரம் கொடுத்திருக்கார். கோவிலுக்குள்ள பகவானைத் தவிர வேற யாரையும் சேவிக்கக் கூடாது. இல்லேன்னா, நானே உங்க கால்ல விழுந்திருப்பேன்!'' என்றார் அர்ச்சகர்.
''என்னங்கய்யா இது!'' என்றாள் சிவகாமி, சங்கடத்துடன்.
துறவறவியல்
அதிகாரம் 27
தவம்
குறள் 269கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
No comments:
Post a Comment