About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, July 2, 2019

267. அறிக்கையை மாற்று!

"ஏம்ப்பா உனக்குச் சின்ன வயசு. வேலையில நல்லா முன்னுக்கு வர வேண்டியவன். உனக்கு ஏன் இந்தப் பிடிவாதம்?" என்றார் கிருஷ்ணசாமி.

"இது பிடிவாதம் இல்லை சார். விதிகளைப் பின்பற்றுவது" என்றான் சங்கர்.

"அரசாங்கத்தில மேலதிகாரிகள் சொல்றதுதான் விதி. அவங்க சொன்னதைக் கேக்கலேன்னா அதுதான் விதி மீறல். அதுக்கு தண்டனை கிடைக்கும்!"

சங்கர் இதற்கு பதில் சொல்வதற்குள் அங்கு வந்த பியூன், சங்கரிடம், "சார் உங்களை ஏ.டி.கூப்பிடறாரு" என்றான்.

அசிஸ்டன்ட் டைரக்டர் அறைக்கு சங்கர் சென்றதும் அவனை அமரச் சொன்ன அசிஸ்டன்ட் டைரக்டர் குருமூர்த்தி, "நீங்க இன்ஸ்பெக்‌ஷன் போயிட்டு வந்துட்டு தொழிற்சாலையை மூடணும்னு ரிப்போர்ட் கொடுத்திருக்ங்களே, அரவிந்த் இண்டஸ்ட்ரீஸ், அவங்களுக்கு மேலிடத்தில நிறைய செல்வாக்கு உண்டு. டைரக்டர் என்னை ஃபோன்ல கூப்பிட்டு சத்தம் போடறாரு. அவருக்கு மேலேயிருந்து அழுத்தம் வந்திருக்கு, புரியும்னு நினைக்கிறேன்" என்றார்.

சங்கர் மௌனமாக இருந்தான்.

"சுற்றுச்சூழல் கட்டுப்பாடு நிபந்தனைகளை அவங்க நிறைவேத்தலேங்கற உங்க அறிக்கையை, அம்பது சதவீதம் நிறைவேத்திட்டாங்கன்னு மாத்தி எழுதிக் கொடுங்க. மீதியை இன்னும் ஆறு மாசத்துல நிறைவேத்திடுவோம்னு சொல்லி கம்பெனிகிட்ட லெட்டர் வாங்கிக்கிட்டு தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்த நான் மேலேந்து அனுமதி வாங்கிடறேன். உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது" என்றார் குருமூர்த்தி.

"அஞ்சு சதவீதம் கூட நிறைவேத்தலங்கறதுதானே சார் உண்மை? அதைத்தானே நான் அறிக்கையில எழுதியிருக்கேன்? பொய் அறிக்கை கொடுக்கச் சொல்றிங்களா?"

"கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கங்கன்னு சொல்றேன். இல்லாட்டா உங்களுக்குத்தான் நஷ்டம்" என்றார் குருமூர்த்தி. 

தாங்கள் பெரும்பாலான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருந்தும், 50,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் தன் ரிப்போர்ட்டில் அதைச் சரியாக எழுதுவேனென்றும், இல்லாவிட்டால் எதையுமே செய்யவில்லை என்று எழுதி விடுவேனென்றும் இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்தபோது சங்கர் மிரட்டியதாக அரவிந்த் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டான். 

வேறொரு அதிகாரி மீண்டும் இன்ஸ்பெக்‌ஷனுக்குச் சென்று வந்து ஐம்பது சதவீதப் பணிகள் பூர்த்தி அடைந்து விட்டதாக அறிக்கை கொடுக்க, அரவிந்த் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது.

சங்கர் மீது விசாரணை நடத்தப்பட்டு அவன் லஞ்சம் கேட்டதற்கு ஆதாரம் இல்லையென்றாலும், அவன் தவறான அறிக்கை கொடுத்ததற்காக அவனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவன் மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டான். சங்கருக்கு வேறு பணி ஒதுக்கப்பட வேண்டும் என்ற விசாரணை அதிகாரியின் முடிவை ஏற்று அவனை அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு மாற்றினார்கள் .

ங்கர் மீண்டும் வேலையில் சேர்ந்த பிறகு அவன் சீட்டுக்கு கிருஷ்ணசாமி வந்தார்.

"வருத்தமா இருக்கு சங்கர். அதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். இங்கே மேலதிகாரிகள் சொல்றதுதான் விதின்னு. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கிட்டிருக்கலாம்" என்றார் கிருஷ்ணசாமி..

சங்கர் பேசாமல் சிரித்தான்.

அவனை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்த கிருஷ்ணசாமி, "ஆனா, நீ இப்படித்தான் இருப்பேன்னு நினைக்கறேன். இங்க மோசமானவங்க கொஞ்சம் பேரு. பெரும்பாலானவங்க நமக்கேன் வம்புன்னு பணிஞ்சு போயிடுவாங்க - என்னை மாதிரி! உன்னை மாதிரி நேர்மையா இருந்து எல்லாத்தையும் எதிர் கொள்றவங்க ஒண்ணு  ரெண்டு பேருதான்.

"நேர்மையா இருக்கறது ஒரு தவம். அந்தக் காலத்தில் யாராவது தவம் பண்ணினா, ஒரு பக்கம் அசுரர்கள் வந்து அவங்க தவத்தைக் கலைப்பாங்க.     
இன்னொரு பக்கம் இந்திரன் மாதிரி தேவர்கள் ஊர்வசி, மேனகை மாதிரி யாரையாவது அனுப்பி வலை விரிச்சுத் தவத்தைக் கலைப்பாங்க.

"அதுக்கு வசப்படலேன்னா, அவங்க சக்தியைப் பயன்படுத்தி புயல், மழை இதையெல்லாம் உருவாக்கித் தவம் பண்றவங்களைக் கஷ்டப்படுத்துவாங்க. இந்தக் காலத்தில நேர்மையா இருக்கறதை ஒரு தவமா நினைச்சுச் செயல்படறவங்களுக்கு இது மாதிரிதான் நடக்குது. 

"பண ஆசை காட்டறது, பயமுறுத்தறது, காயப்படுத்தறது, அழிக்க முயற்சி செய்யறது எல்லாம் நடக்கும். இதையெல்லாம் எதிர் கொள்ற தைரியம் உனக்கு இருக்குன்னு நினைக்கறேன். ஆனா இப்ப உன்னை அக்கவுண்ட்ஸ்ல போட்டுட்டாங்களே!"

"இங்கேயும் விதிமீ றல்கள் நடந்திருக்கு சார். சில பணப்பட்டுவாடாக்கள் முறைகேடா நடந்திருக்கு. இதையெல்லாம் தோண்டி எடுத்து, ஒரு ரிப்போர்ட் எழுதலாம்னு இருக்கேன்" என்றான் சங்கர்.

"அப்ப சீக்கிரமே உன் மேல நடக்கப் போற தாக்குதல்களைச் சமாளிக்க நீ தயாரா இருக்கணும்!" என்றார் கிருஷ்ணசாமி.  

துறவறவியல் 
     அதிகாரம் 27      
தவம்  
குறள் 267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

பொருள்: 
பொன்னைச் சுடச் சுட, அது அதிக ஒளியுடன் விளங்குவது போல், தவம் செய்பவரைத் துன்பம் வருத்த வருத்த அவருடைய உள்ளத்தின் ஒளி அதிகமாகும்.
பொருட்பால்                                                                                   காமத்துப்பால்












No comments:

Post a Comment