About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, June 25, 2016

67. அம்மா கணக்கு!

சுந்தர் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, ஏகாம்பரத்திடம் அவர் மனைவி சொன்னாள். "என்னங்க, பத்தாவது வரைக்கும் நம்ம பையனை கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிக்க வச்சுட்டீங்க, பைசா செலவு பண்ணாம! லெவன்த்துக்காவது அவனை வேறே நல்ல ஸ்கூல்ல சேக்கப் பாருங்க."

"அதுக்கு நமக்கு வசதியில்லையே! அதோட கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிக்கற பையங்களை பெரிய ஸ்கூல்லல்லாம் சேத்துக்கவும் மாட்டாங்க."

"அப்ப நம்ப பையன் எஞ்சினீரிங் படிக்க முடியாதா?"

"பாக்கலாம். அவன் தலையெழுத்துப்படி நடக்கும்."

"அவன் தலையெழுத்துப்படி  நடக்கணும்னா, அப்பா அம்மான்னு நாம எதுக்கு இருக்கோம்?" என்றாள் வள்ளியம்மை கோபத்துடன்.

"என்னை மாதிரி ஏழை அப்பாவுக்குப் பொறந்ததும் அவன் தலையெழுத்துதான்!"

பதினொன்றாம் வகுப்புக்குப் போனதும், சுந்தர் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தினான். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் நிறைய மதிப்பெண்கள் வாங்கினான்.

"பாரு பையன் நல்லாப் படிக்கறான். ப்ளஸ் டூல நிறைய மார்க் வாங்குவான்" என்றார் ஏகாம்பரம்.

"இதெல்லாம் போதாதுங்க. மாத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரில 198ஆவது வாங்கினாதான்  ஃபீஸ் குறைவா இருக்கற இஞ்சினீரிங் காலேஜில் இடம் கிடைக்கும்" என்றாள் வள்ளியம்மை.

"பரவாயில்லையே. என்னை விட உனக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கே!" என்றார் ஏகாம்பரம்.

"உங்களை விடன்னு சொல்லாதீங்க. உங்களுக்குத்தான் நம்ப பையனோட எதிர்காலத்தைப் பத்தி அக்கறையே இல்லையே!" என்றாள்
வள்ளியம்மை எரிச்சலுடன்.

ஒரு நாள், "என்னங்க, நம்ப பையனை கவனிச்சீங்களா? சாயந்திரம் ஸ்கூல்லேருந்து வந்ததும் எங்கேயோ போயிடறான். ராத்திரி லேட்டாத்தான் வரான். கேட்டா, ஃப்ரண்ட்ஸோட சேர்ந்து படிக்கறேங்கறான். எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு. நீங்க கொஞ்சம் கேளுங்க" என்றாள்  வள்ளியம்மை.

"பொய்யா சொல்லப் போறான்?"

"எனக்கென்னவோ ஃப்ரண்ட்ஸோட எங்கேயாவது சுத்திட்டு வரானோன்னு சந்தேகமா இருக்கு."

"நாம சொன்னா  கேக்கவா போறான்? தனக்கு எது நல்லதுன்னு அவனுக்கே தெரியணும்."

"நீங்க இப்படித்தான் அக்கறை இல்லாம பேசுவீங்க. எல்லாம் என் தலையெழுத்து!" என்றாள் வள்ளியம்மை.

காலம் ஓடியது. ப்ளஸ் டூ தேர்வுகள் முடிந்து ரிசல்ட் வந்ததும் வள்ளியம்மைக்கு இன்ப அதிர்ச்சி. சுந்தர் 200, 198, 198 என்று மதிப்பெண்கள் வாங்கி இருந்தான்.

"எப்படிடா இவ்வளவு மார்க் வாங்கினே?" என்றாள் வள்ளியம்மை  நம்ப முடியாத ஆச்சரியத்துடன்.

"அதுதான் டியூஷன் போனேனே!" என்றான் சுந்தர்.

"டியூஷனா?" என்று வள்ளியம்மை அப்பாவையும் பிள்ளையையும் மாறி  மாறிப் பார்த்தாள்.

"என்னோட ஆஃபிஸ்ல சங்கரன்னு  ஒத்தர் இருக்காரு. அவரு நெறையப்  படிச்சவர். புத்திசாலி. சுந்தருக்கு டியூஷன் எடுக்க முடியுமான்னு  அவர்கிட்ட கேட்டேன். முதல்ல அவர் தனக்கு அனுபவம் இல்லேன்னு சொன்னாரு.

"எனக்குத் தெரிஞ்ச இன்னொரு நண்பரோட பையன் போன வருஷம்தான் ப்ளஸ் டூ முடிச்சான். அவன் டியூஷன் போய்த்தான் படிச்சான். அவன் தான் படிச்ச புஸ்தகம் நோட்ஸ் எல்லாம் வச்சிருந்தான். அதையெல்லாம் வாங்கிக்கிட்டுப் போய் சங்கரன் கிட்ட கொடுத்தேன்.

"அவரும் இண்டர்நெட்ல எல்லாம் பாத்துப் பல விஷயங்களை சேகரிச்சுக்கிட்டு டியூஷன் எடுக்க ஒத்துக்கிட்டாரு. சுந்தரோட படிக்கிற சில பையன்களோட அப்பாக்கள்கிட்ட பேசி அவங்களையும் சங்கரன்கிட்ட டியூஷனுக்கு சேர்த்து விட்டேன்.

"டியூஷன் ஃ பீஸ்னு எங்களால முடிஞ்சதைக் கொடுக்கறேன்னு சொன்னேன். மொதல்ல அவரு ஒத்துக்கலே. பணம் குடுத்துப் படிச்சாத்தான் பையன்களுக்குப் படிக்கணும்கற வேகம் இருக்கும்னு சொல்லி அவரைச் சம்மதிக்க வெச்சேன்.

"பணம் வாங்கினாத்தானே அவருக்கும் பொறுப்பு இருக்கும்? ஆனா அதை
அவர்கிட்ட சொல்லலே! பத்து பையங்க சேர்ந்தததால அவருக்கும் வருமானம். நமக்கும் குறைந்த ஃபீஸ்ல டியூஷன் கிடைச்சது. நல்ல மார்க் வாங்கி ஒங்கிட்ட காட்டற வரையிலும் இதைப் பத்தி உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு நான் சுந்தர்கிட்ட சொல்லியிருந்தேன்.

"அவனும் ஃபிரண்ட்ஸோட படிக்கறேன்னு ஒங்கிட்ட  சொல்லிட்டு டியூஷன் போயிட்டு வந்தான்! கொஞ்சம் பேர்தான் படிச்சதினால சங்கரன் ஒவ்வொரு பையன்கிட்டேயும் அக்கறை காட்டி நல்லா சொல்லிக் கொடுத்தாரு. எல்லாருமே நல்ல மார்க் வாங்கி இருக்காங்க.

"இவங்க ஸ்கூல்ல இதுவரைக்கும் இத்தனை பேரு இவ்வளவு நல்ல மார்க் வாங்கினதே இல்லை. இவங்க வாங்கின மார்க்கைப் பாத்துட்டு, இப்ப  சங்கரன் கிட்ட டியூஷன் படிக்க நிறைய பேரு வந்திருக்காங்க. அவரு வேலையை விட்டுட்டு டியூஷன் சென்ட்டர் ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்காரு!" என்றார் ஏகாம்பரம்.

வள்ளி வாயடைத்து நின்றாள்.

சுந்தரைப் பார்த்து ஏகாம்பரம், "நீ நல்ல மார்க் வாங்கி இருக்கறதால ஃபீஸ் குறைச்சலா உள்ள நல்ல காலேஜில் உனக்கு இடம் கிடைச்சுடும். உன் படிப்பு முடியும் வரை உனக்கு ஃபீஸ் கட்டிப் படிக்க வைக்கறது என் பொறுப்பு. நல்லாப்  படிச்சு, நல்ல மார்க் வாங்கி நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில முன்னுக்கு வர வேண்டியது உன்னோட சாமர்த்தியம்!" என்றார்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 67
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து 
முந்தி இருப்பச் செயல்.

பொருள்:
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யக் கூடிய உதவி, அவனைக் கற்றவர் அவையில் முதன்மையான இடம் பெற வழி செய்து கொடுப்பதுதான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














Monday, June 6, 2016

66. காட்சிகள் மாறும் நாடகம்

 
 யாழ் 

 காட்சி 1                                                                                                            காலம்: 2005

ரமணி இல்லையா?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் சேகர்.

"இன்னும் ஆஃபீஸிலிருந்தே வரலியே!" என்றாள் ரமணியின் தாய்.

"நாளைக்கு நாரத கான சபாவில கச்சேரி இருக்கு. அதுதான் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன். அவன் ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணினேன். ஃபோன் எங்கேஜ்டாவே இருந்தது."

"என்ன கச்சேரி- புல்லாங்குழலா, வீணையா?" என்றாள் ரமணியின் தாய்.

"ஃப்ளூட்தான். சிக்கில் சிஸ்டர்ஸ். அது எப்படி கரெக்டா கேக்கறிங்க? நாங்க பாட்டுக் கச்சேரிக்குப் போறதில்லையா என்ன?"

"போவீங்க. ஆனா அதிகமா போறது ஃப்ளூட்டுக்கும், வீணைக்கும்தானே?"

"ஆமாம் ஆன்ட்டி. என்னதான் சொல்லுங்க, குழலுக்கும், வீணைக்கும் இருக்கிற இனிமையே தனிதான்"

"சரி. ரமணி வந்ததும் சொல்றேன். காப்பி சாப்பிடறயா?"

"வேண்டாம் ஆன்ட்டி."

"ஓ! நீங்கள்ளாம் செவிக்கு உணவு இல்லாதபோதுதான் வயித்துக்கு உணவு கொடுப்பீங்க இல்லே?"

"என்ன ஆன்ட்டி திருக்குறள் எல்லாம் சொல்லி அமர்க்களப்படுத்தறீங்க!"

காட்சி 2                                                                                                            காலம்: 2015

"ரமணி இல்லையா?" என்றான் சேகர்.

"இன்னும் ஆஃபீஸிலிருந்தே வரலியே!" என்றாள் ரஞ்சனி.

"செல்லை ஆஃப் பண்ணி வச்சிருக்கான் போலருக்கு."

"டிரைவ் பண்ணிக்கிட்டிருப்பார்."

"நாளைக்கு ஆர்க்கே கன்வென்ஷன் சென்ட்டர்ல சேஷகோபாலன் வீணை இருக்கு. ரமணி வரானான்னு கேக்கணும்."

"சேஷகோபாலன் வாய்ப்பாட்டுத்தானே பாடுவார்? வீணை கூட வாசிப்பாரா என்ன?"

"எந்த அளவுக்கு அற்புதமாப் பாடுவாரோ, அந்த அளவுக்குப் பிரமாதமா வீணையும் வாசிப்பார். ரமணிக்கு அவர் வீணைன்னா ரொம்பப் பிடிக்கும்."

"அவர் இப்ப வந்துடுவாரு. அவர்கிட்டயே கேட்டுக்கங்களேன். காப்பி சாப்பிடறீங்களா?"

"வேண்டாம். முன்னெல்லாம், காப்பி வேண்டாம்னு சொன்னா, செவிக்கு உணவு இல்லாதபோதுதான் வயித்துக்கு உணவு கொடுப்பீங்களான்னு ரமணியோட அம்மா கிண்டல் பண்ணுவாங்க. ம்ம். அவங்கதான் இப்ப இல்லியே! ஆமாம் ரஞ்சனின்னு கர்நாடக ராகத்தோட பேரை உங்களுக்கு வச்சிருக்காங்க. உங்களுக்கு சங்கீதத்தில இண்ட்ரஸ்ட் இல்லையா?"

"ஏன் இல்லாம? எங்கிட்ட எவ்வளவு மியூஸிக் சிடி, காஸட் எல்லாம் இருக்குன்னு காட்டட்டுமா? எல்லாமே எம் எஸ் வியோட மியூஸிக்தான். என்னைப்  பொருத்த வரையில கர்நாடக சங்கீதம், வெஸ்டர்ன் மியூஸிக், ஹிந்துஸ்தானி மியூஸிக், தமிழ் இசை, வேத காலத்து இசை எல்லாமே எம் எஸ் வி மியூஸிக்ல இருக்கு. என் பேரைப் பத்தி சொன்னீங்களே! ரஞ்சனிங்கற்து 'அபூர்வ ராகங்கள்' ஹீரோயினோட பேரு. அதைத்தான் என் அப்பா அம்மா எனக்கு வச்சிருக்காங்க! இதோ அவரே வந்துட்டாரே!"

"வாடா சேகர்! ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?" என்றான் ரமணி.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லே! நாளைக்கு சேஷகோபாலனோட வீணைக் கச்சேரி இருக்கு. வரியா?"

"சேஷகோபாலன் வீணை ரொம்ப அற்புதமா இருக்குமே! ஆனா என்னால வர முடியாதே!"

"ஏன்?"

"நான் அங்கே வந்தா, அதை விட முக்கியமான கச்சேரியை மிஸ் பண்ணிடுவேனே!"

"அது என்னடா கச்சேரி?" என்று சேகர் கேட்கும்போதே, அப்போதுதான் தூங்கி எழுந்திருந்த அவர்களின் ஒரு வயதுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தாள் ரஞ்சனி.

ரமணியைப் பார்த்ததும் "ப்பா, ப்பா" என்று சொல்லிக்கொண்டே அவனிடம் தாவியது குழந்தை.

"இந்தக் குழந்தையின் மழலைக் கச்சேரிதான்!" என்று குழந்தையை வாரி அணைத்துக் கொண்டான் ரமணி.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 66
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
மழலைச்சொல் கேளா தவர்.

பொருள்:
தங்கள் குழந்தைகளின் மழலைப் பேச்சைக் கேட்காதவர்கள்தான் குழல், யாழ் போன்ற இசைக்கருவிகளை இனிமையானவை என்று கூறுவர்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்