About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, December 29, 2018

231. சீதக்காதி

கனகலிங்கம் இறந்து இருபது நாட்கள் ஆகி விட்டன.

கனகலிங்கத்தின் வீட்டுக்கு அவர் நண்பர் ராமநாதன் வந்தபோது, வீட்டில் இன்னும் சோகக்களை மாறாமல் இருப்பதை கவனித்தார்.

"வாங்க அங்க்கிள்" என்றான் கனகலிங்கத்தின் மகன் வாசு, சுரத்தில்லாமல்.

"என்னப்பா பண்றது? போனவர் போயிட்டாரு. இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே இருக்கப் போற? காரியம் எல்லாம் முடிஞ்சுடுச்சு இல்ல? இனிமே அடுத்த வேலையைப் பாரு!" என்றார் ராமநாதன்.

"பாக்க வேண்டியதுதான் அங்க்கிள். எங்கப்பா என்ன நாங்க உக்காந்து சாப்பிடற மாதிரி ஏகப்பட்ட சொத்தையா விட்டுட்டுப் போயிருக்காரு? நாங்க எங்க வேலையைப் பாத்துதான் பொழப்பு நடத்தணும்" என்றான் வாசு.

"என்னப்பா இப்படிச் சொல்ற? உங்கப்பா உங்களை நல்லாப் படிக்க வச்சாரு. நீங்கள்ளாம் நல்ல வேலையில இருக்கீங்க? உனக்கு ஏன் இந்தக் குறை?"

"அங்க்கிள்! அப்பா ரிடயர் ஆகிப் பத்து வருஷமாச்சு. ரிடயர் ஆனப்ப அவருக்கு நாப்பது லட்சம் ரூபா வந்ததுன்னு சொன்னாரு. அதில என் தங்கச்சி கல்யாணத்துக்குக் கொஞ்சம் செலவழிச்சாருப்பாரு. மீதி முப்பது லட்சம் ரூபா இருந்திருக்கணும். பாங்க்ல போட்டு வச்சிருந்தா வட்டியோடு சேந்து அம்பது லட்சம் ரூபா ஆகியிருக்கும். அவருக்கு வந்த பென்ஷன் அவருக்கும் அம்மாவுக்கும் குடும்பச் செலவுக்குப் போதும். ஆனா இப்ப பாங்க்ல 10 லட்ச ரூபாதான் இருக்கு. மீதிப் பணம் எல்லாம் என்ன ஆச்சுன்னே தெரியல!"

'ஓ! அதுதான் உன் கவலைக்குக் காரணமா?' என்று மனதுக்குள் நினைத்த ராமநாதன், "ஏம்ப்பா, உனக்கு உன் அப்பாவைப் பத்தித் தெரியாதா? தர்ம காரியங்களுக்குக் கொடுக்கறது, கஷ்டப்படறவங்களுக்கு உதவறது இதெல்லாம் அவர் பழக்கமாச்சே!"

"அதுக்காக இப்படியா மொத்தத்தையும் துடைச்சு வச்சுட்டுப் போறது? பிள்ளைங்களுக்கு ஏதாவது வச்சுட்டுப் போகணும்னு தோணலியே அவருக்கு!" என்றான் வாசு கோபமாக.

"வாசு! அவரைப் பொருத்தவரை உங்களுக்குச்  செய்ய வேண்டிய கடமைகளை அவர் செஞ்சுட்டாரு. அதனால தன்கிட்ட இருக்கற பணத்தில் மத்தவங்களுக்கு உதவ நினைச்சிருக்காரு."

"கொஞ்சமா? முப்பது நாப்பது லட்ச ரூபா போயிருக்கே! யாருக்குக்  கொடுத்தாரு, எதுக்குக் கொடுத்தாரு? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?"

"எனக்குத் தெரியாது. தான் யாருக்கும் எதுவும் கொடுத்தேன்னு மத்தவங்ககிட்ட சொல்லிக்கற பழக்கம் உங்கப்பாவுக்குக் கிடையாது. ஆனா, இதில கொஞ்சம் கடனாவும் கொடுத்திருப்பார். கடன் வாங்கினவங்க கொஞ்ச நாள்ள அவங்க வாங்கின கடனை உங்கிட்ட திருப்பிக் கொடுத்துடுவாங்க."

"பெத்த பிள்ளைங்களுக்குக் கொடுக்காம ஊருக்கெல்லாம் வாரிக் கொடுக்கறதில என்ன பிரயோசனம்?"

"பிரயோசனம் இருக்குன்னு நினைச்சு கனகலிங்கம் இப்படிச் செய்யல. மத்தவங்களுக்கு உதவறது அவரோட இயல்பு. அவர் இறந்து போனதும், எத்தனை பேர் அவரைப் பாக்க வந்தாங்கன்னு கவனிச்சியா? இப்பவும் நிறைய பேரு அவரைப் பத்திப் பெருமையாப் பேசிக்கிட்டிருக்காங்க."

"பெருமை சோறு போடாது அங்க்கிள்!" என்றான் வாசு.

"வாசு, உங்களை அவர்  நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்திருக்காரு. ஏதோ சோத்துக்குத் திண்டாடட வச்சுட்டுப் போயிட்ட மாதிரி பேசறியே!" என்று கோபமாகச் சொல்லி விட்டு ராமநாதன் வெளியே வந்து விட்டார்.

காலிங் பெல் அடித்ததும் கதவைத் திறந்த சங்கரன் "சார்! நீங்களா? வாங்க!" என்றார் ராமநாதனைப் பார்த்து.

உள்ளே வந்து அமர்ந்ததும், ராமநாதன் சங்கரனிடம், "உங்க மனைவிக்கு எப்ப ஆபரேஷன்?" என்றார்.

"தெரியல சார். இன்னும் ஒரு மாசத்துல செய்யலாம்னு டாக்டர் சொல்லி இருக்கார். ஏன் கேக்கறீங்க?"

"ஆபரேஷனுக்கு கனகலிங்கத்துக்கிட்ட பணம் கேட்டிருந்தீங்களா?"

"ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"அவருக்கு உடம்பு சரியில்லாதப்ப, எங்கிட்ட ஒரு லட்ச ரூபாய் கொடுத்து, 'சங்கரன் எங்கிட்ட அவர் மனைவி ஆபரேஷனுக்குப் பணம் கேட்டிருந்தார். ஒரு வேளை நான் அதுக்குள்ளே போயிட்டேன்னா, இந்தப் பணத்தை அவர் மனைவி ஆபரேஷனுக்காகக் கொடுத்துடுங்க'ன்னு சொல்லி எங்கிட்ட கொடுத்தாரு. இதை அவர் பையன்கிட்ட கொடுத்து அவனை விட்டே உங்ககிட்ட கொடுக்கச் சொல்லலாம்னுதான் அவன் வீட்டுக்குப் போனேன். ஆனா அவன் உங்களுக்குக் கொடுப்பான்னு எனக்குத் தோணலை. அதான் நானே உங்ககிட்ட கொடுக்கறேன். இந்தாங்க பணம். உங்களால இதை எப்ப திருப்பிக் கொடுக்க முடியுமோ அப்ப, இதை நீங்க கனகலிங்கத்தோட பையன் கிட்ட திருப்பிக் கொடுத்துடுங்க" என்றார் ராமநாதன்.

"சார்! செத்தும் கொடுத்தார் சீதக்காதின்னு கேள்விப்பட்டிருக்கேன். இறந்தப்பறம் கூட கனகலிங்கம் எனக்கு உதவி செஞ்சிருக்காரே! எப்படிப்பட்ட மனுஷன் சார் அவரு!" என்றார் சங்கரன் உணர்ச்சி பொங்க.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

பொருள்:  
பிறருக்குக் கொடுத்து உதவுதல், அதன் மூலம் கிடைக்கும் புகழுடன் வாழ்தல் இது தவிர ஒருவருக்கு வாழ்க்கையில் ஈட்ட வேண்டிய பொருள் வேறு எதுவும் இல்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                      காமத்துப்பால்















Saturday, December 22, 2018

230. நண்பரின் மரணம்

"என்ன மாசிலாமணி, பொண்ணு கல்யாண வேலையெல்லாம் எப்படி நடந்துக்கிட்டிருக்கு?" என்றார் பெரியசாமி. 

மாசிலாமணி தயங்கியபடியே, "ஐயா, அது விஷயமாத்தான் உங்களைப் பாக்க வந்தேன்" என்றார்.

"சொல்லு." 

"உங்ககிட்ட எப்படிக் கேக்கறதுன்னு தெரியல, உங்க நிலைமை முன்ன மாதிரி இல்லேன்னு தெரியும். ஆனா, எனக்கு உதவி செய்ய, இந்த ஊர்ல உங்களைத் தவிர வேற யாரும் இல்ல."

"சொல்லு, மாசிலாமணி. எங்கிட்ட என்ன தயக்கம்?"

"கல்யாணத்துக்குப் பணம் கொஞ்சம் குறையுது. ஒரு அம்பதாயிரம் கொடுத்து உதவினீங்கன்னா, அறுவடை ஆனதும் வட்டியோட திருப்பிக் கொடுத்துடுவேன்."

"என்னது வட்டியோடயா?"

"தப்பா நினைச்சுக்காதீங்கய்யா. நீங்க எங்கேயாவது புரட்டிக் கொடுக்கறதா இருந்தா, வட்டி கொடுக்க வேண்டி இருக்குமே!"

"ஆக, எங்கிட்ட பணம் இல்லே, நான் யார்கிட்டயாவது வாங்கித்தான் கொடுக்கணும்னு சொல்ற!"

"ஐயா, என்னங்க இது? உங்க பழைய நிலைமையை நினைச்சுப் பாத்து நான் வருத்தப்படாத நாளே இல்ல."

"எனக்குத் தெரியாதா உன்னைப் பத்தி? ஏற்பாடு செய்யறேன். ரெண்டு நாள் கழிச்சு வா" என்றார் பெரியசாமி.

பெரியசாமி ஒரு காலத்தில் நிறைய நிலம் வைத்திருந்தபோது, அவர் நிலங்களை மாசிலாமணி குத்தகை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால், காலப்போக்கில் மனைவிக்கு வைத்தியம், மகன் மகள் படிப்பு, அப்புறம் மகள் கல்யாணம் என்று தெடர்ந்து வந்த செலவுகளுக்காக சிறிது சிறிதாக நிலங்களை விற்று இப்போது மிக நலிந்த நிலைக்கு வந்து விட்டார் பெரியசாமி.

ஆயினும், பெரியசாமியால் தனக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையில் மாசிலாமணி அவரிடம் வந்து கடன் கேட்டிருக்கிறார்.

"என்னங்க, என்னதான் உங்க நெருங்கின நண்பர்னாலும், அவர் போய் 10 நாள் ஆனப்பறம் கூட இப்படி இடிஞ்சு போய் உக்காந்திருக்கீங்களே! மனுஷங்கன்னா ஒரு நாள் போய்த்தானே ஆகணும்?" என்றாள் பெரியசாமியின் மனைவி வள்ளி.

பெரியசாமி மெதுவாகத் தலையை உயர்த்தி மனைவியைப் பார்த்து விட்டு வேறு புறம் பார்வையைத் திருப்பினார். 

தன் நண்பர் வேலாயுதம் திடீரென்று இறந்து போனது பெரியசாமிக்கு அதிர்ச்சிதான். மாசிலாமணிக்குக் கடன் கொடுக்க, அவர் வேலாயுதத்திடம் பணம் கேட்டு, அவரும் தருவதாகச் சொல்லி இருந்தார். ஆனால் பணம் தருவதற்குள் வேலாயுதம் இறந்து விட்டார். 

தன் நண்பர் வேலாயுதம் இறந்து விட்ட துயரத்தை விட, தன்னால் மாசிலாமணிக்கு உதவ முடியாமல் போனதுதான் பெரியசாமிக்கு அதிகத் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது வள்ளிக்குத் தெரியாது. 

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை

பொருள்:  
மரணத்தை விடத் துன்பமானது எதுவும் இல்லை. ஆனால், நம்மிடம் யாசித்தவருக்கு நம்மால் எதுவும் கொடுக்க முடியாத நிலையுடன் ஒப்பிட்டால், மரணமே இனிமையானதாகத் தோன்றும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



















Thursday, December 6, 2018

229. உதவி செய்யலாமா?

"சார்! புயல்ல நம்ப ஊர்ல ரொம்ப பேரு பாதிக்கப்பட்டிருக்காங்க. நிறைய பேருக்கு வீடு இல்ல, சாமான்கள் எல்லாம் போயிடுச்சு. சாப்பாட்டுக்குக் கூட வழியில்ல. நாம எல்லாம் சேந்துதான் அவங்களுக்கு உதவணும். நாங்க எல்லார்கிட்டயும், அரிசி, பணம், உடைகள் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கிட்டிருக்கோம். நீங்க ஏதாவது கொடுங்க சார்" 

ஐந்தாறு பேர் பின் தொடர வந்த கதிர்வேலனைப் பார்த்த மகாலிங்கத்துக்கு எரிச்சல் வந்தது. 'இவங்களுக்கெல்லாம் வேற வேலை கிடையாது. என்னவோ ஊரையே இவங்கதான் காப்பாத்தறதா நினைப்பு!'

"அதான் அரசாங்கத்தில எல்லா உதவியும் செய்யறாங்களேப்பா!" என்றார் மகாலிங்கம்.

"அதெல்லாம் போதாது சார். ஏதோ ரெண்டு நாள் சாப்பாடு போட்டாங்க. மத்த உதவி எல்லாம் வரதுக்கு நாளாகும். அதுவரைக்கும் அவங்க உயிரோட இருக்க வேண்டாமா சார்?"

"எங்கிட்ட பணம் கிடையாதுப்பா. நானே கொஞ்ச நாளா வியாபாரம் சரியில்லாம முடங்கிப் போயிருக்கேன். இந்தப் புயலுக்கப்புறம் என் நிலைமை இன்னும் மோசமாப் போகும். நான் யாருக்கும் உதவற நிலையில இல்ல" என்றார் மகாலிங்கம்.

"கொஞ்சமாவது கொடுங்க சார்! பணம் இல்லாட்டாலும் அரிசி, துணிமணியாவது கொடுக்கலாமே!"

"ஏம்ப்பா! என் நிலத்தில விளைச்சல் இல்லாம நானே கடையில அரிசி வாங்கி சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். ரெண்டு வேஷ்டியை மாத்தி மாத்திக் கட்டிக்கிட்டிருக்கேன். நான் என்னத்தைக் கொடுக்கறது?" என்றார் மகாலிங்கம் 

"சரி சார்! பரவாயில்லை" என்று அவர்கள் போய் விட்டார்கள்.

அவர்கள் சென்றதும், அவர் மனைவி பார்வதி, "ஏங்க? நாம வசதியாத்தானே இருக்கோம்? கஷ்டப்படறவங்களுக்குக் கொஞ்சமாவது உதவியிருக்கலாமே!" என்றாள், குறைப்பட்டுக் கொள்ளும் குரலில்.

"இவ ஒத்தி! இருக்கறதைக் கொடுத்துட்டு நாம என்ன பண்றது? இருக்கறதைப் பெருக்கப் பாப்பாங்களா, இல்ல, அள்ளிக் கொடுத்து அழிக்கப் பாப்பாங்களா?" என்றார் மகாலிங்கம். 

ரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் அவர் வயலில் வேலை செய்யும் தண்டபாணி தயங்கிக் கொண்டே அவர் அருகில் வந்து நின்றான்.

"என்னப்பா?" என்றார் மகாலிங்கம், கடன் எதுவும் கேட்கப் போகிறானோ என்ற பயத்துடன்.

"ஒண்ணுமில்லீங்க. வெள்ளத்தில என் வீடு கொஞ்சம் சேதமாயிடுச்சு..."

"அதான் அரசாங்கத்தில பணம் கொடுத்தாங்களே?"

"ஆமாங்க. ஐயாயிரம் ரூபா கொடுத்தாங்க."

"ஏன், அது பத்தலியாக்கும்? எங்கிட்ட பணம் இல்ல."

"அதான் அன்னிக்கு அவங்ககிட்ட சொன்னீங்களே, உங்களுக்கே பணக்கஷ்டம்னு."

"ஓ, அப்ப நீயும் இருந்தியா? தெரியுதுல்ல? அப்புறம் ஏன் எங்கிட்ட வந்து பணம் கேக்கற?"

"நீங்க தப்பா நினைச்சுக்கக் கூடாது. அரசாங்கத்தில் பணம் கொடுக்கறதுக்கு முன்னாடியே, நான் எங்கிட்ட இருந்த பணத்தைப் போட்டு வீட்டை ரிப்பேர் பண்ணிட்டேன். அரசாங்கம் கொடுத்த ஐயாயிரம் ரூபா நேத்திக்குத்தான் என் கைக்குக் கிடைச்சது. நீங்க தப்பா நினைக்கலேன்னா, நீங்க இதை வாங்கிக்கணும். உங்க பணக் கஷ்டம் தீர்ந்தப்பறம் திருப்பிக் கொடுங்க" என்றான் தண்டபாணி.

மகாலிங்கத்துக்கு உடல் பற்றி எரிவது போல் இருந்தது. உள்ளிருந்து பார்வதி மெதுவாகச் சிரித்த சத்தம் அந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியது போல் இருந்தது.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

பொருள்:  
பிறருக்குக் கொடுத்தால் பொருள் குறைந்து விடுமே என்று நினைத்து, தம்மிடம் இருக்கும் பொருளைத் தாம் மட்டும் அனுபவிப்பது, பிறரிடம் யாசிப்பதை விடக் கொடுமையானதாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்





















228. இரும்பு மனிதர்!

தான் சுயமாக முன்னுக்கு வந்தவர் என்பதில் ஆறுமுகத்துக்கு மிகவும் பெருமை உண்டு.

வறுமையான குடும்பத்தில் பிறந்து, படிப்பு இல்லாமல், பழைய இரும்பு சாமான்களை வாங்கி விற்கும் கடையில் தொழிலாளியாகச் சேர்ந்து, பிறகு தானே சிறிய அளவில் பழைய இரும்பு வியாபாரத்தை ஆரம்பித்து, முதலில் மெதுவாகவும், பிறகு வேகமாகவும் முன்னேறி அந்தஸ்திலும், செல்வத்திலும் உயர்ந்த நிலைக்குப் போனவர் ஆறுமுகம்.

தன் கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவதில் அவருக்கு மிகவும் பெருமை உண்டு. மனைவி தொடங்கி, தொழில் விஷயமாக அவரைச் சந்திப்பவர்கள் வரை அனைவரிடமும் தான் முன்னுக்கு வந்த கதையை அவர்களுக்கு அலுத்துப் போகும் வரை சொல்லிக் கொண்டிருப்பார்.

ஆனால், தன் உறவினர்களையோ, பழைய நண்பர்களையோ அவர் நெருங்க விடுவதில்லை. யாரும் தன்னிடம் உதவி கேட்டு விடுவார்களோ என்று பயம்.

நன்கொடை, கடன் என்று உதவி கேட்டு வருபவர்களையும் அவர் ஊக்குவிப்பதில்லை.

"நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது எல்லாருக்கும் வாரிக் கொடுக்கவா?" என்பார் மனைவியிடம்.

"யாருக்காவது உதவி செஞ்சா, நாம என்ன குறைஞ்சா போயிடுவோம்? இரும்போட பழகிப் பழகி, உங்க மனசும் இரும்பாயிடுச்சு!" என்பாள் அவர் மனைவி கல்யாணி.

"ஆமாம். நான் இரும்பு மனுஷன்தான்!" என்பார் அவர் மனைவியிடம்.

"மத்தவங்களுக்கு உதவி செய்யறதிலயும் ஒரு சந்தோஷம் இருக்கு. அதை நீங்களும் அனுபவிக்கப் போறதில்ல, உங்க மனைவியா இருக்கறதால நானும் அனுபவிக்கப் போறதில்ல!" என்பாள் கல்யாணி.

"உங்களுக்கு இருக்கற வியாபாரம் போதாதா? புதுசா எதுக்கு ஒரு தொழில்ல இறங்கறீங்க?" என்றாள் கல்யாணி

"நான் வெறும் இரும்பு வியாபாரம்தான் பண்ணிக்கிட்டிருக்கேன்! இப்ப இரும்பு தயாரிக்கப் போறேன். ஸ்டீல் ரோலிங் மில் ஆரம்பிக்கப் போறேன்!" என்றார் ஆறுமுகம்.

"உங்களுக்கு அதைப் பத்தி என்ன தெரியும்?"

"அதனாலதான் விஷயம் தெரிஞ்ச ஒத்தரோட சேந்து ஆரம்பிக்கறேன்."

"முன்பின் தெரியாதவங்களோட கூட்டு சேரப் போறதா சொல்றீங்க. யோசிச்சு செய்யுங்க" என்றாள் மனைவி.

"கூட்டுன்னா, வியாபாரத்தில கூட்டு இல்ல. பணம் நான் போடப் போறேன். அவரு மில்லை செட் பண்ணி ஓட வச்சுடுவாரு. அதுக்கப்பறம் லாபத்தில அவருக்குக் கொஞ்சம் பங்கு கொடுத்தா போதும்" என்றார் ஆறுமுகம்.

"என்னவோ செய்யுங்க!" என்றாள் மனைவி.

"எதுக்கு வீட்டை விக்கணுங்கறீங்க?" என்றாள் கல்யாணி.

"மெஷின் வாங்கறேன்னு சொல்லி மட்டமான மெஷின்களை வாங்கி, பொய்யான பில்லையெல்லாம் கொடுத்து என்னை ஏமாத்திட்டு எங்கியோ ஓடிட்டான் அவன். வியாபாரத்தில போட்டிருந்த பணத்தையெல்லாம் எடுத்து அதில போட்டேன். இப்ப வியாபாரம் நடத்தக் கூடப் பணம் இல்ல. கடன் வேற வாங்கி இருக்கேன். வீட்டை வித்துக் கடனையெல்லாம் அடைச்சுட்டு மீதி ஏதாவது இருந்தா அதை வச்சுத்தான் குடும்பமே நடத்தணும் போலருக்கு" என்றார் ஆறுமுகம். 

அழுகையை அடக்கிக் கொண்டு அவர் பேசியதால், அவர் தொண்டை அடைத்ததை கல்யாணி கவனித்தாள்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

பொருள்:  
தங்கள் பொருளை யாருக்கும் கொடுக்காமல் பாதுகாத்து வைத்து ஒரு சந்தர்ப்பத்தில் அதை இழப்பவர்கள், பிறருக்குக் கொடுப்பதால் கிடைக்கும் இன்பத்தை அறிய மாட்டார்கள்.

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Sunday, December 2, 2018

227. மூன்று அடுக்கு டிஃபன் காரியர்

"ரகு! இன்னிக்கு என்ன அயிட்டம் உன் லஞ்ச் பாக்ஸ்ல?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் குமார்.  

"சாம்பார் சாதம்" என்று ரகு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவன் டப்பாவைத் திறந்து ஸ்பூனால் கொஞ்சம் சாம்பார் சாதத்தை எடுத்துத் தன் டிஃபன் பாக்ஸ் மூடியில் போட்டுக் கொண்ட குமார், "நம்ம ஆஃபீஸ்லேயே மத்தவங்களுக்குக் கொடுக்கறதுக்காக ஒரு எக்ஸ்டரா டப்பா எடுத்துக்கிட்டு வரவன் நீ ஒத்தன்தான்!" என்றான். 

"ஆனா மத்தவங்ககிட்டேந்து எதுவும் வாங்கிக்க மாட்டான். அவன் கொண்டு வரதில அவன் சாப்பிடறது கொஞ்சம்தான். அவன் மனைவி பாவம் நமக்கு செஞ்சு கொடுத்தனுப்பறாங்க!" என்ற கதிரேசன் தானும் ஒரு ஸ்பூன் சாம்பார் சாதம் எடுத்துக் கொண்டான். 

"ல்லாரும் ஆஃபீக்கு டிஃபன் பாக்ஸ்தான் எடுத்துக்கிட்டுப் போவாங்க. நீங்க மூணு டப்பா வச்ச காரியர் எடுத்துக்கிட்டுப் போறீங்க - அதுவும் மூணு பாத்திரத்திலேயும் ஒரே அயிட்டத்தை வச்சு! நீங்க சாப்பிடறது ரொம்ப கம்மி. எதுக்கு இவ்வளவு எடுத்துக்கிட்டுப் போறீங்க?"

திருமணம் ஆன புதிதில் சுகந்தி கேட்டதற்கு, "மத்தியானம் பசிக்கும்! அதனால நிறைய சாப்பிடுவேன்" என்றான் ரகு சிரித்தபடி.

ஆனால் ரகு சாப்பிடுவது ஒரு டப்பாவில் பாதிதான் இருக்கும். ஒரு டப்பாவை எடுத்து அப்படியே பியூன் சண்முகத்திடம் கொடுத்து விடுவான் ரகு. சண்முகம் அலுவலகத்துக்குச் சாப்பாடு எடுத்து வருவதில்லை, டீயைக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்வான் என்பது ரகுவுக்குத் தெரியும். 

முதலில் ரகுவிடமிருந்து தினமும் சாப்பாடு வாங்கிக் கொள்ள சண்முகம் கொஞ்சம் சங்கடப்பட்டாலும், நாளடைவில் அவன் அதை ஏற்றுக் கொண்டு விட்டான். 

சில நாட்கள் உரிமையுடன் ரகுவிடம் வந்து, "என்  டப்பாவைக் கொடுத்துடுங்க சார்! நான் இன்னிக்கு சீக்கிரம் சாப்பிட்டுட்டு ஆஃபீஸ் வேலையா வெளியே போகணும்" என்பான் சண்முகம்!

ரகுவின் குணம் தெரிந்து, சுகந்தியும் உற்சாகமாக விதம் விதமாக உணவு செய்து கொடுக்க ஆரம்பித்தாள்.

ன்று ரகுவும், சுகந்தியும் பக்கத்து ஊரில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்குப் போயிருந்தனர். திரும்பும்போது அங்கேயே ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பஸ்ஸில் தங்கள் ஊருக்குத் திரும்புவதாக திட்டம்.  

அவர்கள் ஓட்டலுக்கு அருகே வந்தபோது எல்லாக் கடைகளும் மூடப்பட்டுக் கொண்டிருந்தன.

என்ன விஷயம் என்று ரகு அங்கே ஒருவரை விசாரித்தபோது,"உங்களுக்கு விஷயம் தெரியாதா? தமிழ் உரிமைக் கட்சித் தலைவர் கந்தசாமி இறந்துட்டாராம். அவர் கட்சிக்காரங்க கடையை எல்லாம் மூடச் சொல்லி கலாட்டா பண்ணிக்கிட்டிருக்காங்க. அதனாலதான் எல்லாரும் கடையை மூடறாங்க" என்றார் அவர். சில நிமிடங்களில் எல்லாக் கடைகளும், ஓட்டல்களும் மூடப்பட்டன.

ஊருக்குப் போய் விடலாம் என்று நினைத்து பஸ் நிறுத்தத்துக்குப் போனபோது, பஸ் எதுவும் போகாது என்று சொல்லி விட்டார்கள்.

உறவினர் வீட்டுக்கே திரும்பிப் போய் அங்கே இரவைக் கழித்து விட்டுக் காலையில் பஸ்ஸில் போகலாம் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

"ஆனா அவங்ககிட்ட நாம சாப்பிடலேன்னு சொன்னா, அவங்க நமக்காக ஏதாவது செய்வாங்க. அவங்களுக்கு எதுக்கு சிரமம் கொடுக்கணும்?" என்றான் ரகு.

"அவங்ககிட்ட நாம சாப்பிட்டுட்டோம்னு சொல்லிடலாம்" என்றாள் சுகந்தி.

"இன்னி ராத்திரி சாப்பிடாம இருந்துட வேண்டியதுதான். எனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்ல. உனக்குத்தான் கஷ்டம்" என்றான் ரகு.  

"எனக்கென்ன சக்கரை வியாதியா இருக்கு? ஒரு வேளை சாப்பிடலேன்னா ஒண்ணும் ஆயிடாது" என்றாள் சுகந்தி. 

இருவரும் உறவினர் வீட்டை நோக்கி நடந்தபோது, வழியில் ஒரு கோவில் இருந்ததைப் பார்த்து, கோவிலுக்குப் போய் விட்டுப் போகலாம் என்று முடிவு செய்தார்கள்.

கோவிலில் போய் தரிசனம் செய்து வீட்டுக் கிளம்பும்போது, "ஒரு நிமிஷம் இருங்கோ" என்று அர்ச்சகர் அழைத்தார்.

"புளியோதரை, சக்கரைப் பொங்கல் பிரசாதம் இருக்கு. வெளியில நடக்கற கலாட்டாவினால கோவிலுக்கு நிறைய பேர் வரல. பிரசாதம் நிறைய இருக்கு. நீங்க கொஞ்சம் எடுத்துக்கோங்கோ" என்று கையில் இலைகளுடனும், பக்கத்தில் இரண்டு பிரசாதப் பாத்திரங்களுடனும் அவர்களை அழைத்தார் அர்ச்சகர். 

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

பொருள்:  
தான் உண்ணும் உணவைப் பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீய நோய் தீண்டாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்