"சார்! புயல்ல நம்ப ஊர்ல ரொம்ப பேரு பாதிக்கப்பட்டிருக்காங்க. நிறைய பேருக்கு வீடு இல்ல, சாமான்கள் எல்லாம் போயிடுச்சு. சாப்பாட்டுக்குக் கூட வழியில்ல. நாம எல்லாம் சேந்துதான் அவங்களுக்கு உதவணும். நாங்க எல்லார்கிட்டயும், அரிசி, பணம், உடைகள் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கிட்டிருக்கோம். நீங்க ஏதாவது கொடுங்க சார்"
ஐந்தாறு பேர் பின் தொடர வந்த கதிர்வேலனைப் பார்த்த மகாலிங்கத்துக்கு எரிச்சல் வந்தது. 'இவங்களுக்கெல்லாம் வேற வேலை கிடையாது. என்னவோ ஊரையே இவங்கதான் காப்பாத்தறதா நினைப்பு!'
"அதான் அரசாங்கத்தில எல்லா உதவியும் செய்யறாங்களேப்பா!" என்றார் மகாலிங்கம்.
"அதெல்லாம் போதாது சார். ஏதோ ரெண்டு நாள் சாப்பாடு போட்டாங்க. மத்த உதவி எல்லாம் வரதுக்கு நாளாகும். அதுவரைக்கும் அவங்க உயிரோட இருக்க வேண்டாமா சார்?"
"எங்கிட்ட பணம் கிடையாதுப்பா. நானே கொஞ்ச நாளா வியாபாரம் சரியில்லாம முடங்கிப் போயிருக்கேன். இந்தப் புயலுக்கப்புறம் என் நிலைமை இன்னும் மோசமாப் போகும். நான் யாருக்கும் உதவற நிலையில இல்ல" என்றார் மகாலிங்கம்.
"கொஞ்சமாவது கொடுங்க சார்! பணம் இல்லாட்டாலும், அரிசி, துணிமணியாவது கொடுக்கலாமே!"
"ஏம்ப்பா! என் நிலத்தில விளைச்சல் இல்லாம, நானே கடையில அரிசி வாங்கி சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். ரெண்டு வேஷ்டியை மாத்தி மாத்திக் கட்டிக்கிட்டிருக்கேன். நான் என்னத்தைக் கொடுக்கறது?" என்றார் மகாலிங்கம்
"சரி சார்! பரவாயில்லை" என்று அவர்கள் போய் விட்டார்கள்.
அவர்கள் சென்றதும், அவர் மனைவி பார்வதி, "ஏங்க? நாம வசதியாத்தானே இருக்கோம்? கஷ்டப்படறவங்களுக்குக் கொஞ்சமாவது உதவியிருக்கலாமே!" என்றாள், குறைப்பட்டுக் கொள்ளும் குரலில்.
"இவ ஒத்தி! இருக்கறதைக் கொடுத்துட்டு, நாம என்ன பண்றது? இருக்கறதைப் பெருக்கப் பாப்பாங்களா, இல்ல, அள்ளிக் கொடுத்து அழிக்கப் பாப்பாங்களா?" என்றார் மகாலிங்கம்.
இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் அவர் வயலில் வேலை செய்யும் தண்டபாணி, தயங்கிக் கொண்டே அவர் அருகில் வந்து நின்றான்.
"என்னப்பா?" என்றார் மகாலிங்கம், கடன் எதுவும் கேட்கப் போகிறானோ என்ற பயத்துடன்.
"ஒண்ணுமில்லீங்க. வெள்ளத்தில என் வீடு கொஞ்சம் சேதமாயிடுச்சு..."
"அதான் அரசாங்கத்தில பணம் கொடுத்தாங்களே?"
"ஆமாங்க. ஐயாயிரம் ரூபா கொடுத்தாங்க."
"ஏன், அது பத்தலியாக்கும்? எங்கிட்ட பணம் இல்ல."
"அதான் அன்னிக்கு அவங்ககிட்ட சொன்னீங்களே, உங்களுக்கே பணக் கஷ்டம்னு."
"ஓ, அப்ப நீயும் இருந்தியா? தெரியுதுல்ல? அப்புறம் ஏன் எங்கிட்ட வந்து பணம் கேக்கற?"
"நீங்க தப்பா நினைச்சுக்கக் கூடாது. அரசாங்கத்தில் பணம் கொடுக்கறதுக்கு முன்னாடியே, நான் எங்கிட்ட இருந்த பணத்தைப் போட்டு வீட்டை ரிப்பேர் பண்ணிட்டேன். அரசாங்கம் கொடுத்த ஐயாயிரம் ரூபா நேத்திக்குத்தான் என் கைக்குக் கிடைச்சது. நீங்க தப்பா நினைக்கலேன்னா, நீங்க இதை வாங்கிக்கணும். உங்க பணக் கஷ்டம் தீர்ந்தப்பறம் திருப்பிக் கொடுங்க" என்றான் தண்டபாணி.
மகாலிங்கத்துக்கு உடல் பற்றி எரிவது போல் இருந்தது. உள்ளிருந்து பார்வதி மெதுவாகச் சிரித்த சத்தம், அந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியது போல் இருந்தது.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 23
ஈகை
குறள் 229இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
பொருள்:
பிறருக்குக் கொடுத்தால் பொருள் குறைந்து விடுமே என்று நினைத்து, தம்மிடம் இருக்கும் பொருளைத் தாம் மட்டும் அனுபவிப்பது, பிறரிடம் யாசிப்பதை விடக் கொடுமையானதாகும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment