"சாம்பார் சாதம்" என்று ரகு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவன் டப்பாவைத் திறந்து, ஸ்பூனால் கொஞ்சம் சாம்பார் சாதத்தை எடுத்துத் தன் டிஃபன் பாக்ஸ் மூடியில் போட்டுக் கொண்ட குமார், "நம்ம ஆஃபீஸ்லேயே மத்தவங்களுக்குக் கொடுக்கறதுக்காக ஒரு எக்ஸ்டரா டப்பா எடுத்துக்கிட்டு வரவன் நீ ஒத்தன்தான்!" என்றான்.
"ஆனா, மத்தவங்ககிட்டேந்து எதுவும் வாங்கிக்க மாட்டான். அவன் கொண்டு வரதில, அவன் சாப்பிடறது கொஞ்சம்தான். அவன் மனைவி பாவம், நமக்கு செஞ்சு கொடுத்தனுப்பறாங்க!" என்ற கதிரேசன், தானும் ஒரு ஸ்பூன் சாம்பார் சாதம் எடுத்துக் கொண்டான்.
"எல்லாரும் ஆஃபீக்கு டிஃபன் பாக்ஸ்தான் எடுத்துக்கிட்டுப் போவாங்க. நீங்க மூணு டப்பா வச்ச காரியர் எடுத்துக்கிட்டுப் போறீங்க - அதுவும் மூணு பாத்திரத்திலேயும் ஒரே அயிட்டத்தை வச்சு! நீங்க சாப்பிடறது ரொம்ப கம்மி. எதுக்கு இவ்வளவு எடுத்துக்கிட்டுப் போறீங்க?"
திருமணம் ஆன புதிதில் சுகந்தி கேட்டதற்கு, "மத்தியானம் பசிக்கும்! அதனால நிறைய சாப்பிடுவேன்" என்றான் ரகு, சிரித்தபடி.
ஆனால், ரகு சாப்பிடுவது ஒரு டப்பாவில் பாதிதான் இருக்கும். ஒரு டப்பாவை அப்படியே பியூன் சண்முகத்திடம் கொடுத்து விடுவான் ரகு. சண்முகம் அலுவலகத்துக்குச் சாப்பாடு எடுத்து வருவதில்லை, டீயைக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்வான் என்பது ரகுவுக்குத் தெரியும்.
முதலில் ரகுவிடமிருந்து தினமும் சாப்பாடு வாங்கிக் கொள்ள சண்முகம் கொஞ்சம் சங்கடப்பட்டாலும், நாளடைவில் அவன் அதை ஏற்றுக் கொண்டு விட்டான்.
சில நாட்கள் உரிமையுடன் ரகுவிடம் வந்து, "என் டப்பாவைக் கொடுத்துடுங்க சார்! நான் இன்னிக்கு சீக்கிரம் சாப்பிட்டுட்டு, ஆஃபீஸ் வேலையா வெளியே போகணும்" என்பான் சண்முகம்!
ரகுவின் குணம் தெரிந்து, சுகந்தியும் உற்சாகமாக விதம் விதமாக உணவு செய்து கொடுக்க ஆரம்பித்தாள்.
அன்று ரகுவும், சுகந்தியும் பக்கத்து ஊரில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்குப் போயிருந்தனர். திரும்பும்போது, அங்கேயே ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பஸ்ஸில் தங்கள் ஊருக்குத் திரும்புவதாக திட்டம்.
அவர்கள் ஓட்டலுக்கு அருகே வந்தபோது, எல்லாக் கடைகளும் மூடப்பட்டுக் கொண்டிருந்தன.
என்ன விஷயம் என்று ரகு அங்கே ஒருவரை விசாரித்தபோது, "உங்களுக்கு விஷயம் தெரியாதா? தமிழ் உரிமைக் கட்சித் தலைவர் கந்தசாமி இறந்துட்டாராம். அவர் கட்சிக்காரங்க கடைகளை மூடச் சொல்லி கலாட்டா பண்ணிக்கிட்டிருக்காங்க. அதனாலதான், எல்லாரும் கடையை மூடறாங்க" என்றார் அவர். சில நிமிடங்களில் எல்லாக் கடைகளும், ஓட்டல்களும் மூடப்பட்டன.
ஊருக்குப் போய் விடலாம் என்று நினைத்து, பஸ் நிறுத்தத்துக்குப் போனபோது, பஸ் எதுவும் போகாது என்று சொல்லி விட்டார்கள்.
உறவினர் வீட்டுக்கே திரும்பிப் போய், அங்கே இரவைக் கழித்து விட்டுக் காலையில் பஸ்ஸில் போகலாம் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.
"ஆனா அவங்ககிட்ட நாம சாப்பிடலேன்னு சொன்னா, அவங்க நமக்காக ஏதாவது செய்வாங்க. அவங்களுக்கு எதுக்கு சிரமம் கொடுக்கணும்?" என்றான் ரகு.
"அவங்ககிட்ட நாம சாப்பிட்டுட்டோம்னு சொல்லிடலாம்" என்றாள் சுகந்தி.
"இன்னி ராத்திரி சாப்பிடாம இருந்துட வேண்டியதுதான். எனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்ல. உனக்குத்தான் கஷ்டம்" என்றான் ரகு.
"எனக்கென்ன சக்கரை வியாதியா இருக்கு? ஒரு வேளை சாப்பிடலேன்னா, ஒண்ணும் ஆயிடாது" என்றாள் சுகந்தி.
இருவரும் உறவினர் வீட்டை நோக்கி நடந்தபோது, வழியில் ஒரு கோவில் இருந்ததைப் பார்த்து, கோவிலுக்குப் போய் விட்டுப் போகலாம் என்று முடிவு செய்தார்கள்.
கோவிலில் போய் தரிசனம் செய்து வீட்டுக் கிளம்பும்போது, "ஒரு நிமிஷம் இருங்கோ" என்று அர்ச்சகர் அழைத்தார்.
"புளியோதரை, சக்கரைப் பொங்கல் பிரசாதம் இருக்கு. வெளியில நடக்கற கலாட்டாவினால, கோவிலுக்கு நிறைய பேர் வரல. பிரசாதம் நிறைய இருக்கு. நீங்க கொஞ்சம் எடுத்துக்கோங்கோ" என்று கையில் இலைகளுடனும், இரண்டு பிரசாதப் பாத்திரங்களுடனும் அவர்களை அழைத்தார் அர்ச்சகர்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 23
ஈகை
குறள் 227பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
பொருள்:
தான் உண்ணும் உணவைப் பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீய நோய் தீண்டாது.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment