வறுமையான குடும்பத்தில் பிறந்து, படிப்பு இல்லாமல், பழைய இரும்பு சாமான்களை வாங்கி விற்கும் கடையில் தொழிலாளியாகச் சேர்ந்து, பிறகு தானே சிறிய அளவில் பழைய இரும்பு வியாபாரத்தை ஆரம்பித்து, முதலில் மெதுவாகவும், பிறகு வேகமாகவும் முன்னேறி, அந்தஸ்திலும், செல்வத்திலும் உயர்ந்த நிலைக்குப் போனவர் ஆறுமுகம்.
தன் கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவதில் அவருக்கு மிகவும் பெருமை உண்டு. மனைவி தொடங்கி, தொழில் விஷயமாக அவரைச் சந்திப்பவர்கள் வரை, அனைவரிடமும் தான் முன்னுக்கு வந்த கதையை அவர்களுக்கு அலுத்துப் போகும் வரை சொல்லிக் கொண்டிருப்பார்.
ஆனால், தன் உறவினர்களையோ, பழைய நண்பர்களையோ அவர் நெருங்க விடுவதில்லை. யாரும் தன்னிடம் உதவி கேட்டு விடுவார்களோ என்று பயம்.
நன்கொடை, கடன் என்று உதவி கேட்டு வருபவர்களையும் அவர் ஊக்குவிப்பதில்லை.
"நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது எல்லாருக்கும் வாரிக் கொடுக்கவா?" என்பார் மனைவியிடம்.
"யாருக்காவது உதவி செஞ்சா, நாம என்ன குறைஞ்சா போயிடுவோம்? இரும்போட பழகிப் பழகி, உங்க மனசும் இரும்பாயிடுச்சு!" என்பாள் அவர் மனைவி கல்யாணி.
"ஆமாம். நான் இரும்பு மனுஷன்தான்!" என்பார் அவர்.
"மத்தவங்களுக்கு உதவி செய்யறதிலயும் ஒரு சந்தோஷம் இருக்கு. அதை நீங்களும் அனுபவிக்கப் போறதில்ல, உங்க மனைவியா இருக்கறதால, நானும் அனுபவிக்கப் போறதில்ல!" என்பாள் கல்யாணி.
"உங்களுக்கு இருக்கற வியாபாரம் போதாதா? புதுசா எதுக்கு ஒரு தொழில்ல இறங்கறீங்க?" என்றாள் கல்யாணி
"நான் வெறும் இரும்பு வியாபாரம்தான் பண்ணிக்கிட்டிருக்கேன்! இப்ப, இரும்பு தயாரிக்கப் போறேன். ஸ்டீல் ரோலிங் மில் ஆரம்பிக்கப் போறேன்!" என்றார் ஆறுமுகம்.
"உங்களுக்கு அதைப் பத்தி என்ன தெரியும்?"
"அதனாலதான், விஷயம் தெரிஞ்ச ஒத்தரோட சேந்து ஆரம்பிக்கறேன்."
"முன்பின் தெரியாதவங்களோட கூட்டு சேரப் போறதா சொல்றீங்க. யோசிச்சு செய்யுங்க" என்றாள் மனைவி.
"கூட்டுன்னா, வியாபாரத்தில கூட்டு இல்ல. பணம் நான் போடப் போறேன். அவர் மில்லை செட் பண்ணி ஓட வச்சுடுவாரு. அதுக்கப்பறம், லாபத்தில அவருக்குக் கொஞ்சம் பங்கு கொடுத்தா போதும்" என்றார் ஆறுமுகம்.
"என்னவோ செய்யுங்க!" என்றாள் மனைவி.
"எதுக்கு வீட்டை விக்கணுங்கறீங்க?" என்றாள் கல்யாணி.
"மெஷின் வாங்கறேன்னு சொல்லி, மட்டமான மெஷின்களை வாங்கி, பொய்யான பில்லையெல்லாம் கொடுத்து என்னை ஏமாத்திட்டு எங்கேயோ ஓடிட்டான் அவன். வியாபாரத்தில போட்டிருந்த பணத்தையெல்லாம் எடுத்து அதில போட்டேன். இப்ப வியாபாரம் நடத்தக் கூடப் பணம் இல்ல. கடன் வேற வாங்கி இருக்கேன். வீட்டை வித்துக் கடனையெல்லாம் அடைச்சுட்டு, மீதி ஏதாவது இருந்தா, அதை வச்சுத்தான் குடும்பமே நடத்தணும் போலருக்கு" என்றார் ஆறுமுகம்.
அழுகையை அடக்கிக் கொண்டு அவர் பேசியதால், அவர் குரல் கம்மி இருந்ததைக் கல்யாணி கவனித்தாள்.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
பொருள்:
தங்கள் பொருளை யாருக்கும் கொடுக்காமல் பாதுகாத்து வைத்து, ஒரு சந்தர்ப்பத்தில் அதை இழப்பவர்கள், பிறருக்குக் கொடுப்பதால் கிடைக்கும் இன்பத்தை அறிய மாட்டார்கள்.
அறத்துப்பால்
இல்லறவியல்
இல்லறவியல்
அதிகாரம் 23
ஈகை
குறள் 228ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
பொருள்:
தங்கள் பொருளை யாருக்கும் கொடுக்காமல் பாதுகாத்து வைத்து, ஒரு சந்தர்ப்பத்தில் அதை இழப்பவர்கள், பிறருக்குக் கொடுப்பதால் கிடைக்கும் இன்பத்தை அறிய மாட்டார்கள்.
No comments:
Post a Comment