About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, August 14, 2019

278. காலையில் வந்த இருவர்

சக்ரபாணியின் கடையின் சர்க்கரை அதிக வெள்ளையா அல்லது அவர் அணிந்திருக்கும் வெள்ளை வேட்டையும், வெள்ளைச் சட்டையும் அதிக வெள்ளையா என்று சிலர் விளையாட்டாகப் பேசிக் கொள்ளும் அளவுக்கு சக்ரபாணி சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம்  கொடுப்பவர்.  

தான் எப்போதும் குளித்து விட்டு, வெள்ளை ஆடை அணிந்து தூய்மையுடன் இருப்பது போல், தன் கடை ஊழியர்களும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் சக்ரபாணி. வேலைக்கு வரும்போது அவர்கள் குளித்து விட்டு, சுத்தமான ஆடை அணிந்து வர வேண்டும் என்பது விதிமுறை.

அவர் நடத்தி வந்தது சிறிய மளிகைக் கடையானாலும், ஊழியர்களுக்குச் சீருடை உண்டு. அதைத் துவைத்துத் தூய்மையாக அணிந்து வர அவர்களுக்கு இலவசமாகத் துணிக்குப் போடும் சோப், சோப் பவுடர் ஆகியவையும் உண்டு (அவர்கள் குளிப்பதற்கான சோப் தவிர!)

கடையில் வேலை செய்யும்போது, வியர்வை வழியும் முகத்துடன் இருக்கக் கூடாது என்பதற்காக ஊழியர்கள் அவ்வப்போது கடைக்குப் பின் உள்ள குளியலறைக்குச் சென்று முகம் கழுவிக் கொண்டு வர வேண்டும் என்பதும் விதிமுறை.

யாராவது ஊழியர் வியர்வை நிறைந்த முகத்துடன் இருந்தால், "ஏண்டா உன் மூஞ்சியில வழியற வியர்வை கடையில இருக்கற எண்ணெயில விழுந்து அதை அசுத்தப் படுத்தணுமா? போய் மூஞ்சி கழுவிக் கிட்டு வா, போ!" என்பார் சக்ரபாணி.

சுத்தத்துக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தினாலேயே, அவர் கடையை நாடிப் பலர் வந்தார்கள். வியாபாரமும் நன்றாக நடந்தது 

தவு தட்டப்பட்ட சத்தம் கேட்டு, சக்ரபாணியின் மனைவி விஜயா 'இந்தக் காலை நேரத்தில யாராக இருக்கும்?' என்று நினைத்தபடி கதவைத் திறந்தாள்.

இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். வெளியூர்க்காரர்கள் போல் இருந்தது. ஒருவர் சற்று வயதானவராகவும், இன்னொருவர் இளைஞராகவும் இருந்தனர். 

"சக்ரபாணி இருக்காரா?" என்றார் வயதில் மூத்தவர்.

"கடைக்குக் கிளம்பிக்கிட்டிருக்காரு. நீங்க யாரு?" என்றாள் விஜயா.

இதற்குள் சக்ரபாணியே உள்ளிருந்து ஹாலுக்குள் வந்து விட்டார். அப்போதுதான் குளித்து விட்டு, புதிய வெள்ளை உடைகளை அணிந்து பளிச்சென்று இருந்தார்.

"வாங்க. உள்ள வந்து உக்காருங்க" என்றார் சக்ரபாணி.

"நீங்க கடைக்குக் கிளம்பிட்டீங்களா, இல்ல, நேரம் ஆகுமா?" என்றார் முதலில் பேசியவர். 

"டிஃபன் சாப்பிட்டுட்டுக் கிளம்ப வேண்டியதுதான். வாங்க, நீங்களும் டிஃபன் சாப்பிடலாம். உள்ள வாங்க. ஏன் அங்கேயே நிக்கறீங்க?" என்றார் சக்ரபாணி.

"சரி. நீங்க சாப்பிட்டுட்டு வாங்க. நாங்க வெயிட் பண்றோம்."

"உள்ள வந்து உக்காருங்க. நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்" என்றார் சக்ரபாணி 

அவர்கள் தயக்கத்துடன் உள்ளே வந்தார்கள்.

"ஆமாம், நீங்க என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே?" என்றார் சக்ரபாணி.

"இல்ல. நீங்க சாப்பிட்டுட்டு வாங்க. அப்புறம் பேசலாம்" என்றார் அவர்.

காலை உணவை முடித்துக்கொண்டு, ஐந்தாறு நிமிடங்களில் வெளியே வந்த சக்ரபாணி அவர்கள் முன் உட்கார்ந்தார். "சொல்லுங்க."

"நாங்க உணவுப் பொருள் வழங்குத் துறையிலேந்து வரோம். நாங்க இன்ஸ்பெக்டர்கள். இது என்னோட ஐடி. உங்க கடையில நீங்க கலப்படக் சரக்கு விக்கறதா எங்களுக்குத் தகவல் வந்திருக்கு. உங்க கடையில உள்ள பொருட்களை செக் பண்ணணும், வரீங்களா? கடைக்குப் போகலாம்!" என்றார் அவர்.  

துறவறவியல்
     அதிகாரம் 28      
கூடாவொழுக்கம்   
குறள் 278
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

பொருள்:  
மனத்துக்குள் மாசை வைத்துக்கொண்டு, வெளிப்பார்வைக்கு, நீராடித் தூய்மையானவர் போல் தங்களை வெளிக்காட்டிக் கொண்டு தங்கள் உண்மையான தன்மையை மறைத்து வாழும் மனிதர் பலர் உள்ளனர்.
 பொருட்பால்                                                                                   காமத்துப்பால்











Wednesday, August 7, 2019

277. இன்று போய் நாளை வா!

புதிதாக வந்திருக்கும் அதிகாரியைப் பற்றி அனைவரும் அவ்வளவு உயர்வாகப் பேசியதைக் கேட்டதும் வடிவேலுவுக்கு அவரைப் பார்த்துத் தன் கோரிக்கையை வைக்கும் எண்ணம் தோன்றியது. அவரைப் பார்த்து முறையிட அரசு அலுவலகத்துக்குச் சென்றார்.

இதற்கு முன்பு எத்தனையோ முறை அவர் இதே அலுவலகத்துக்கு வந்து அதிகாரியைப் பார்க்க முடியாமலே திரும்பி இருக்கிறார். மூன்று நாட்கள் தொடர்ந்து வந்த பிறகு ஒரு முறை அதிகாரியைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.

தன் முதியோர் ஓய்வூதியக் கோரிக்கை பல மாதங்களாகப் பரிசீலிக்கப்படாமல் இருப்பதை அவரிடம் சொல்லி முறையிட்டபோது, "பார்க்கிறேன்" என்று சொன்னார் அவர். அதோடு சரி.

அதற்குப் பிறகு பல மாதங்கள் ஓடி விட்டன. அவர் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பது கூடத் தெரியவில்லை. அதற்குப் பிறகு மறுபடி அவரால் அந்த அதிகாரியைச் சந்திக்க முடியவில்லை.

ப்போது வந்திருக்கும் புதிய அதிகாரி மக்களை மதித்து அக்கறையுடன் செயல்படுபவர் என்று கேள்விப்பட்டு மீண்டும் நம்பிக்கையைத் துளிர்க்க வைத்துக் கொண்டுதான் அவரைப் பார்க்க வந்தார் வடிவேல். 

அரை மணி நேரத்தில் அவரால் அதிகாரியைப் பார்க்க முடிந்தது. இவ்வளவு சுலபமாக, இவ்வளவு விரைவாக அதிகாரியைப் பார்க்க முடிந்ததே வடிவேலுவுக்கு இன்ப அதிர்ச்சி.

வடிவேலு சொன்னதைப் பொறுமையுடன் கேட்ட அதிகாரி மாசிலாமணி, "முதல்ல உங்களுக்கு ஏற்பட்ட கால தாமதத்துக்கும், சிரமத்துக்கும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்" என்றார்.

உதவியாளரைக் கூப்பிட்டு ஃபைலைத் தேடச் சொன்னார் மாசிலாமணி.

"சார்! அது பழைய கேஸ். தேடி எடுக்கப் பல நாள் ஆகும்" என்றார் உதவியாளர்.

மறுபடி கால தாமதம் ஆகப் போகிறது என்று வடிவேலு விரக்தியுடன் நினைத்தபோதே, "என்ன செய்வீங்களோ தெரியாது. நாளைக்குக் காலையில ஃபைல் என் மேஜைக்கு வரணும்!" என்று உதவியாளரிடம் சற்றே கடுமையான குரலில் சொன்ன மாசிலாமணி வடிவேலுவிடம் திரும்பி, "சார்! நீங்க நாளைக்கு பத்து மணிக்கு வாங்க. உங்க ஃபைலைத் தேடி வைக்கிறேன். மறுபடி வரச் சொல்றதுக்கு மன்னிச்சுக்கங்க: என்றார் வடிவேலுவிடம்.

"என்ன சார் இது!" என்றார் வடிவேலு சங்கடத்துடன்.

றுநாள் வடிவேலு அலுவலகத்துக்கு வந்தபோது, அதிகாரியைப் பார்க்கப் பெரிய கூட்டம் காத்திருந்தது. இன்று அவரைப் பார்க்க முடியுமா என்று வடிவேலுவுக்குக் கவலையாக இருந்தது. உதவியாளரிடம் சென்று கேட்டால் சரியான பதில் வரும் என்று அவருக்கு நம்பிக்கையில்லை. 

ஒவ்வொருவராக அதிகாரியின் அறைக்குள் அழைக்கப்பட்டனர். தான் அதிகாரியைப் பார்க்க சில மணி நேரங்களாவது ஆகும் என்று நினைத்து வடிவேலு அமர்ந்திருந்தார். 

ஏதோ வேலையாக தன் அறையை விட்டு வெளியே வந்த மாசிலாமணி வடிவேலுவைப் பார்த்ததும் சற்று நின்றார். பிறகு அவரை அடையாளம் கண்டு கொண்டவராக அவரிடம் வந்து, "உங்க ஃபைல் என் மேஜைக்கு வந்திருக்கான்னு பாத்து சொல்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்றார்.

பிறகு தன் அறைக்குள் போய் விட்டு சில நிமிடங்களில் வெளியே வந்தவர் வடிவேலுவிடம் வந்து, "சார்! உங்க ஃ பைலைத் தேடி எடுத்துட்டாங்க. அரசாங்க நடைமுறைப்படி ஒரு ஃபைலை ப்ராசஸ் பண்ணக் கொஞ்ச நாள் ஆகும். இன்னும் பதினைஞ்சு நாள்ள உங்களுக்கு சாங்ஷன் பண்ற மாதிரி ஏற்பாடு செய்யறேன்" என்று சொல்லி, ஆறுதல் கூறுவது போல் அவர் கைகளைப் பிடித்துச் சொல்லி விட்டுத் தன் அறைக்குள் போனார்.
"இப்படி ஒரு மனிதரா!" என்ற மலைப்பு ஏற்பட்டது வடிவேலுவுக்கு. 

ருபது நாட்கள் ஆகியும் தனக்குக் கடிதம் எதுவும் வராததால் மீண்டும் அந்த அரசு அலுவலகத்துக்குப் போனார் வடிவேலு.

இந்த முறையும் அவரால் மாசிலாமணியை உடனே சந்திக்க முடிந்தது. 

"இன்னுமா உங்களுக்கு சாங்ஷன் ஆகல?" என்று கேட்ட அதிகாரி, உதவியாளரை அழைத்து அவரிடம் ஏதோ கேட்டார். ஆனால் இந்த முறை அவர்கள் மெதுவாகப் பேசிக் கொண்டதால் வடிவேலுவுக்கு அவர்கள் என்ன பேசினார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. 

உதவியாளரை அனுப்பி விட்டு, வடிவேலுவிடம், "சார்! ஒரு சின்ன பிரச்னை. இந்த ஆஃபீஸ்ல இந்த வருஷம் எவ்வளவு ஓய்வூதியம் சாங்ஷன் பண்ணலாம்னு அரசாங்கம் ஒரு தொகை ஒதுக்கி இருக்கு. அந்த கோட்டா முடிஞ்சு போச்சு. கூடுதல் தொகை ஒதுக்கச் சொல்லிக் கேட்டிருக்கோம். அரசாங்கத்திலேந்து சாங்ஷன் வரணும்!" என்றார் மாசிலாமணி. 

"நீங்கதானே சார் அரசாங்கம்?"

"அது சரிதான். ஆனா டிபார்ட்மென்ட்ல எங்களுக்கு ஒத்துக்கற தொகை எவ்வளவோ அவ்வளவுதான் நாங்க சாங்ஷன் பண்ண முடியும்."

"நீங்க கேட்ட கூடுதல் ஒதுக்கீடு எப்ப சார் வரும்?"

"அது அரசாங்கத்தோட நிதி நிலைமையையும், மேல இருக்கறவங்க முடிவையும் பொருத்தது, நாளைக்கே வரலாம். அல்லது இந்த வருஷம் அவ்வளவுதான்னு சொன்னாலும் சொல்லலாம்!"

"அப்ப..."

"கவலைப்படாதீங்க. சீக்கிரமே நல்லது நடக்கும்" என்றார் மாசிலாமணி. 

வடிவேலு வெளியே வந்தார். அலுவலகத்திலிருந்து வெளியே வந்து சாலையில் இறங்கியதும், "ஐயா!" என்று யாரோ கூப்பிட்டார்கள்.

வடிவேலு திரும்பிப் பார்த்தார்.

அலுவலக பியூன்!

வடிவேலு நின்றதும், அவர் அருகில் வந்த பியூன், "சார்! உங்களுக்கு பென்ஷன் கிடைச்சா மாசம் எவ்வளவு கிடைக்கும்?" என்றார்.

"மாசம் ஆயிரம் ரூபாய்."

"ஆயிரம் ரூபாய் கொடுங்க. நாளைக்கே உங்க பென்ஷன் சாங்ஷன் ஆயிடும். நீங்க செலவழிக்கப் போறது ஒரு மாச பென்ஷன் தொகைதான். ஆனா உங்களுக்கு உங்க ஆயுசு முழுக்க மாசா மாசம் ஆயிரம் ரூபா வந்துக்கிட்டிருக்கும்!"

"ஏன்யா இப்படி இருக்கீங்க? உங்க அதிகாரி இவ்வளவு நல்லவரா இருக்காரு. நீங்க இப்படி மோசமானவங்களா இருக்கீங்களே!" என்றார் வடிவேலு கோபத்துடன்.

"புரியாம பேசாதீங்க சார்! என்னால உங்க பென்ஷனை சாங்ஷன் பண்ண முடியுமா? பணம் அவருக்குத்தான் சார்! நீங்க பணம் கொடுத்த அடுத்த நாளே உங்க பென்ஷன் சாங்ஷன் ஆனதும் உண்மையை நீங்களே புரிஞ்சுப்பீங்க!" என்றார் பியூன் சிரித்தபடி. 

துறவறவியல்
     அதிகாரம் 28      
கூடாவொழுக்கம்   
குறள் 277
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.

பொருள்:  
வெளித் தோற்றத்துக்குக் குன்றிமணி போல் செம்மையானவராய்க் காணப்பட்டாலும், மனதுக்குள் குன்றிமணியின் மூக்குப் போல் கருத்திருப்பவர்கள் உலகத்தில் உண்டு.
  பொருட்பால்                                                                                   காமத்துப்பால்











Tuesday, August 6, 2019

276. பரமகுருவின் மனக்குறைகள்


பரமகுரு தற்செயலாகக் காலண்டரைப் பார்த்தபோதுதான் அவருக்கு நினைவுக்கு வந்தது. தேதி மூன்று ஆகி விட்டதே! இன்னும் ஏன் கௌதம் பணம் அனுப்பவில்லை?  

கைபேசியை எடுத்து குறுஞ்செய்திகளைப்  பார்த்தார். பண வரவு நிகழ்ந்திருப்பதற்கான செய்தி எதுவும் வரவில்லை. 

மணி மாலை 6. நியூஜெர்ஸியில் காலை 8.30 இருக்கும். கௌதம் அநேகமாக வீட்டிலிருந்து அலுவலகத்துக்குக் கிளம்பியிருக்க மாட்டான்.

வாட்ஸ் ஆப்பில் கௌதமை அழைத்தார். முதல் அழைப்பின்போது அவன் ஃபோனை எடுக்கவில்லை. ஒருவேளை காரில் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருப்பானோ?

அரை மணி நேரம் கழித்து மீண்டும் அழைத்தார். ஃபோன் உடனே எடுக்கப்பட்டது.

"என்னப்பா?" என்றான் கௌதம் எரிச்சலுடன். "டிரைவ் பண்ணிக்கிட்டிருக்கேன். 9 மணிக்கு மேல ஃபோன் பண்ணக் கூடாதா?" 

"இந்த மாசம் இன்னும் பணம் அனுப்பலியே நீ?" என்றார் பரமகுரு.

"ஆஃபீசுக்குப் போய்க்கிட்டிருக்கேன். போனதும் உடனே டிரான்ஸ்ஃபர் பண்ணிடறேன். இப்ப டிராஃபிக் சிக்னல்ல நிக்கறேன். இப்ப கிரீன் வந்துடுச்சு" என்று இணைப்பைத் துண்டித்தான் கௌதம்.

'மாசம் 7,000 டாலர் சம்பாதிக்கிறான். 5 லட்சம் ரூபாய்! அப்பாவுக்கு அனுப்பற பிச்சைக்காசு 25,000 ரூபாயை ஒண்ணாம் தேதி அனுப்பினா என்ன? பொறுப்பில்லாத பய!'

"உன் அம்மா போனதும் தனியே இருக்கிறேன். சமையல்காரன் ஏதோ சமைத்துப் போடுவதைக் கடனே என்று தின்று விட்டுக் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது வரும் திடீர்ச் செலவுகளுக்குப் பணம் போதவில்லை. தீர்த்த யாத்திரை எல்லாம் வேறு போக வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். நீ அனுப்பும் 25,000 ரூபாய் போதவில்லை. அடுத்த மாதத்திலிருந்து 50,000 ரூபாய் அனுப்பு!" என்று வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி அனுப்பினார்.

கேட்டதற்கு 5,000 ரூபாயாவது அதிகம் அனுப்புவான். கிடைத்த வரை லாபம்தான்! 

மையற்காரர் மணி வந்தார். "ராத்திரிக்கு டிஃபன் பண்ணி வச்சுட்டேன். வீட்டுக்குக் கிளம்பறேன்" என்றார்.

"என்ன டிஃபன் பண்ணி இருக்கே?"

"நீங்க சொன்னபடி வெஜிடபிள் உப்மா, பெஸரட், சாம்பார்."

"சட்னி அரைக்கலியா?"

"இல்லை" என்றார் மணி தயக்கத்துடன்.

"ஏன்யா நீ என்ன எனக்கு அன்னதானமா செய்யற? என் வீட்டு சாமான்களை வச்சு சமைக்கற. கொஞ்சம் சட்னி அரைச்சா என்ன? ரெண்டு நிமிஷம் கூட ஆகாது. பெண்டாட்டி போனப்பறம் துறவி மாதிரி வாழ்ந்துக்கிட்டிருக்கேன். கொஞ்சம் வாய்க்கு ருசியா சாப்பிடக் கூட முடியல!" என்று அலுத்துக் கொண்டார் பரமகுரு.

"சரி சார். அரைச்சு வச்சுட்டுப் போறேன்."

"சரி. நாளைக்கு என்ன சமைக்கப் போற?"

"காலையில பொங்கல், ரவா தோசை. மத்தியானத்துக்கு பூசணிக்காய் சாம்பார், வாழைக்காய் கறி, புடலங்காய் கூட்டு, மைசூர் ரசம். வழக்கம் போல அப்பளமும் பொரிச்சுடறேன்."

"அதோட கொஞ்சம் கேரட் துருவி தேங்காய் கலந்து வச்சுடு. ஃபிரிட்ஜ்ல பாதி பழுத்த மாங்கா ரெண்டு இருக்கு. அதைத் திருத்தி வெல்லப் பச்சடி செஞ்சுடு."

"சரி சார்!"

"சிப்ஸ், காரா சேவு, ஓமப்பொடியெல்லாம் தீந்து போச்சு. அதெல்லாமும் கொஞ்சம் பண்ணி வச்சுடு. மத்தியானம் பசிக்குது. கொரிக்க ஏதாவது வேண்டியிருக்கு."

"சரி சார்! கிளம்பறேன்" என்றார் சமையற்காரர், நின்று கொண்டிருந்தால் பட்டியல் இன்னும் நீளும் என்று பயந்தபடியே.

ரவு 9 மணிக்கு பரமகுருவைப் பார்க்க அவர் நண்பர் செல்வரங்கம் வந்தார். இருவருக்குமே இரவில் தூக்கம் வராது என்பதால் இருவரும் 11 மணி வரை உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

"என்னப்பா, சாப்பாடு ஆச்சா?" என்றார் செல்வரங்கம்.

"ஆச்சு. எனக்கென்ன, துறவி வாழ்க்கைதானே? சாப்பாடு என்ன சாப்பாடு! கடனேன்னு எதையோ சமைச்சு வச்சுட்டுப் போறான். நானும் பசியைப் போக்கிக்கணுமேன்னு அதைத் தின்னுட்டு வாழ்ந்துக்கிட்டிருக்கேன்!" என்றார் பரமகுரு.

துறவறவியல்
     அதிகாரம் 28      
கூடாவொழுக்கம்   
குறள் 276
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

பொருள்:  
மனதுக்குள் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வஞ்சனை செய்து வாழ்பவர் போல் இரக்கமற்றவர் யாருமில்லை.
       பொருட்பால்                                                                                   காமத்துப்பால்









Monday, August 5, 2019

275. ஐம்பதில் வந்த ஆசை!

முருகானந்தத்துக்குத் தன் ஐம்பதாவது வயதில் அந்த ஆசை வந்தது. ஆசைகளைத் துறக்க வேண்டும் என்ற ஆசை!

தன் மனைவியிடம் சொன்னார். "நான் சந்நியாசி ஆகலாம்னு பாக்கறேன்!"

அவர் மனைவி சரளா பெரிதாகச் சிரித்து விட்டு, "என்னவோ ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்ற மாதிரி சொல்றீங்க!" என்றாள்.  

"இல்ல சரளா. சந்நியாசின்னா உங்களையெல்லாம் விட்டுட்டுக் காட்டுக்குப் போறது இல்ல. அது எப்படி முடியும்? அத்தியாவசியமான விஷயங்களைத் தவிர மத்த விஷயங்கள்ள உள்ள ஈடுபாட்டை விட்டுட்டு, அதிக நேரம் பக்தி, தியானம் மாதிரி விஷயங்கள்ள ஈடுபடலாம்னு நினைக்கிறேன்."

"எதையெல்லாம் விடப் போறீங்க?"

"சாப்பாட்டு ஆசையை விடப் போறேன். குறைவா, எளிமையா, தேவையான அளவுக்கு மட்டும் சாப்பிடப் போறேன். நொறுக்குத் தீனி, காஃபி, டீ, கூல் டிரிங் மாதிரி பானங்கள் எதுவும் கிடையாது. பத்திரிகைகள், புத்தகங்கள் படிக்கிறது, டிவி, சினிமா, டிராமா, கச்சேரி, நண்பர்களோட அரட்டை அடிக்கிறது எல்லாத்தையும் விட்டுடப் போறேன். நியூஸ் பேப்பரை மட்டும் மேலோட்டமாப் படிச்சுட்டு நாட்டு நடப்பைத் தெரிஞ்சுக்கறதோட நிறுத்திக்கப் போறேன்."

"எங்கிட்ட, குழந்தைங்க கிட்டல்லாம் பேசுவீங்க இல்ல?" என்றாள் சரளா, பாதி விளையாட்டாகவும், பாதி கவலையுடனும்.

"சேச்சே! அதான் சொன்னேனே! பழைய காலம் மாதிரி குடும்பத்தை விட்டுட்டு சந்நியாசியாகறதெல்லாம் இப்ப முடியாதுன்னு."

"ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க? எனக்கென்னவோ பயமா இருக்கு!"

"பயப்படறதுக்கெல்லாம் எதுவும் இல்ல. என்னவோ தோணிச்சு, அம்பது வயசாச்சே. எல்லாப் பற்றுக்களையும் விட்டுட்டு, மனசளவிலேயாவது துறவியா இருக்கலாமேன்னு!"

"நாற்பது வயசில நாய் குணம்பாங்க. அம்பது வயசில அரைப் பைத்தியம் பிடிக்கும் போலருக்கு!" என்றாள் சரளா சற்றுக் கோபத்துடன்.

"என்னைக் கோபப்பட வைக்கலாம்னு பாக்கற! ஆனா நீ என்ன சொன்னாலும் நான் கோபப்பட மாட்டேன். பற்றுக்களை விட்டவனுக்குக் கோபதாபமெல்லாம் எப்படி இருக்க முடியும்? கவலைப்படாதே. உன்னையும், குழந்தைகளையும் பொருத்தவரை என் கடமைகளை சரியாச் செய்வேன்" என்றார் முருகானந்தம்.

தற்குப் பிறகு முருகானந்தம் தான் சொன்னபடியே நடந்து கொள்ள ஆரம்பித்தார். சரளாவுக்கே வியப்பாக இருந்தது எப்படி இவர் தன்னை மாற்றிக் கொண்டார் என்று. அவர் அலுவலக நண்பர்களும், பிற நண்பர்களும் கூட அவருடைய மாற்றத்தைக் கண்டு வியந்தனர். 

அலுவலக நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் கோவில்கள், ஆசிரமங்கள் என்று செல்வது, ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்பது என்று வழக்கப்படுத்திக் கொண்டார். 

ஒரு ஆசிரமத்தில் உறுப்பினரான பின், வார இறுதி நாட்கள் முழுவதையும் அவர்கள் ஆசிரமத்தில் கழிப்பது, சில சமயம் ஆசிரமப் பணிக்காக வெளியூர் செல்வது என்ற பழக்கங்கள் ஏற்பட்டன. சரளாவைத் தன்னுடன் வரும்படி அவர் சிலமுறை அழைத்தபோதும், அவள் வர மறுத்து விட்டாள்.

சிரம வேலையாக வெளியூர் சென்றபோதுதான் அவர் விமலாவைச் சந்தித்தார். விவாகரத்தாகித் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்த விமலாவுடன் ஏற்பட்ட  அறிமுகம் நட்பாக மாறி, இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது.

துவக்கத்தில் ஆன்மீக விஷயங்களை மட்டும் பேசிக் கொண்டிருந்தவர்கள், பிறகு மற்ற விஷயங்களையும் பேசத் தொடங்கினர். ஒருமுறை அவர் விமலாவின் வீட்டுக்குச் சென்றபோது, அவள் படுக்கை அறை வரை சென்று விட்டு வந்த அனுபவம் இருவரிடையே இருந்த நட்பை உறவாக மாற்றி விட்டது.

பிறகு விமலாவுடன் இருப்பதற்காகவே ஒவ்வொரு வார இறுதியிலும் முருகானந்தம் வெளியூர் செல்லத் தொடங்கினார். விமலாவின் வீட்டுக்குச் செல்வது அல்லது அவளுடன் சேர்ந்து வேறு ஊருக்குச் செல்வது என்று பழக்கமாயிற்று. 

விமலாவுடன் இருந்தபோது அவர் உணவுக் கட்டுப்பாடு எதையும் பின்பற்றவில்லை என்பதுடன், விமலாவிடம் இருந்த மதுப் பழக்கத்தையும்  பின்பற்றத் தொடங்கினார்!

ரளாவின் கைபேசி ஒலித்தது. ஏதோ புதிய எண்! யாராக இருக்கும் என்று யோசித்தபடியே விமலா அதை எடுத்துப் பேசினாள்.

"நீங்க முருகானந்தத்தின் மனைவியா?"

"ஆமாம், நீங்க யாரு?"

"நாங்க டிராஃபிக் போலீஸ். உங்க கணவர் முருகானந்தம் போன கார் ஒரு மரத்தில மோதி அவர் நினைவில்லாம இருக்காரு. பதட்டப்படாதீங்க. அவருக்கு லேசான அடிதான். கார் ஓட்டின பெண்ணுக்குத்தான் கொஞ்சம் அதிகமா அடிபட்டிருக்கு. அவங்க குடிச்சுட்டு கார் ஒட்டி இருக்காங்க" என்றவர் கொஞ்சம் தயங்கி விட்டு, "உங்க வீட்டுக்காரரும் குடிச்சிருப்பாரு போலருக்கு!" என்றார்.

"என்ன சொல்றீங்க? அவரு அப்படிப்பட்டவர் இல்ல!" என்றாள் சரளா உரத்த குரலில். 

"இல்லம்மா. நான் பாத்ததைத்தான் சொல்றேன். ஆஸ்பத்திரி விலாசத்தை உங்களுக்கு மெஸேஜ் பண்றேன். சீக்கிரம் வாங்க" என்றார் போலீஸ் அதிகாரி. 

"என் நம்பர் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது?" என்றாள் சரளா.

"அவர் ஃபோன்ல ஒயிஃப் என்கிற பேர்ல உங்க நம்பர் இருந்தது. அதான் கூப்பிட்டேன்" என்றவர், "ஆனா எங்களுக்குக் கொஞ்சம் குழப்பமாத்தான் இருந்தது" என்றார்.

"என்ன குழப்பம்?"

"காரை ஓட்டிக்கிட்டு வந்த பெண்மணியோட செல்ஃபோன்ல உங்க கணவரும் அவங்களும் நெருக்கமா இருக்கற ஃபோட்டோல்லாம் இருந்தது. அதனால அவங்கதான் அவர் மனைவின்னு முதல்ல நினைச்சோம். அப்புறம் அவர் ஃபோன்ல மனைவிங்கற பேர்ல உங்க நம்பர் இருந்தது! ஆமாம், அவங்க யாரு?"

துறவறவியல்
     அதிகாரம் 28      
கூடாவொழுக்கம்   
குறள் 275
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.

பொருள்:  
தங்களைப் பற்று இல்லாதவர்கள் என்று சொல்லிக் கொண்டு, ஒழுக்கம் தவறி வாழ்பவர்கள் ஏன் இப்படிச் செய்தோம் என்று வருந்தும் நிலை வரும்.
பொருட்பால்                                                                                   காமத்துப்பால்















Saturday, August 3, 2019

274. நல்லவன், எனக்கு நானே நல்லவன்!

சுந்தரேசனுக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். அந்த அலுவலகத்தில் அவன் ஒரு மூத்த ஊழியன். திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருந்ததால் திருமணத்தில் அவனுக்கு ஈடுபாடு இல்லை. அப்பா அம்மாவே உலகம் என்று வாழ்ந்து கொண்டிருந்தான்.

அலுவலகத்தில் நீண்ட காலமாகப் பணி புரிபவன் என்பதாலும், ஒரு முனிவரைப் போல வாழ்ந்து வருவான் என்பதாலும், அலுவலகத்தில் அவன் மீது எல்லோருக்கும் மரியாதை உண்டு. 

அவனுக்குப் பதவி உயர்வு வந்தபோது வேண்டாம் என்று சொல்லி விட்டான். அலுவலகத்தில் அதிகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் அது தன் ஆன்மீகத் தேடலுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று காரணம் சொன்னான். 

அலுவலகத்தில் அவன் ஒரு உதவியாளன்தான் என்றாலும் அவன் மேலதிகாரிகள் கூட அவனிடம் மரியாதையாக நடந்து கொண்டார்கள். அவனுக்கு நெருக்கமான சில நண்பர்கள் மட்டும் அவனை உரிமையுடன் 'டேய் சாமியார்!' என்று கூப்பிடுவார்கள். 

வார இறுதி நாட்களில் மற்ற ஊழியர்கள் சினிமா, மால், ரிஸார்ட், பிக்னிக் என்று உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கும்போது, சுந்தரேசன் பெற்றோருடனோ, தனியாகவோ கோவில், குளம் என்று போய் விடுவான். அல்லது ஏதாவது ஆசிரமத்துக்குப் போய் இரண்டு நாள் இருந்து சேவை செய்து விட்டு வருவான்.

"என்ன சாமியாரே, இந்த வீக் எண்ட்ல எங்கே போயிருந்தீங்க?" என்றான் முருகன். 

"சனிக்கிழமை என் அம்மாவுக்குப் பிறந்த நாள். அதனால வீட்டில ஒரு ஹோமம் பண்ணினோம்" என்றான் சுந்தரேசன். 

"எங்களையெல்லாம் கூப்பிடலியே!" என்றாள் சாந்தி.

"யாரையுமே கூப்பிடல! அப்பா, அம்மா, ஹோமம் செஞ்ச சாஸ்திரிகள், நான் நாலு பேர்தான். வழக்கமான எளிமையான சமையல்தான். அப்பாவுக்கு டயாபிடிஸ் இருக்கறதால பாயசம் கூடப் பண்ணல."

"எங்களைக் கூப்பிட்டிருக்கலாமே சார்! நாங்க உங்கம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருப்போமே!" என்றாள் கிருத்திகா. அவள் அந்த அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள்.

"ரெண்டு மூணு மாசத்துல என் அப்பா பிறந்த நாள் வரும். அப்ப உங்களை மட்டும் கூப்பிடறேன்!" என்றான் சுந்தரேசன் சிரித்தபடி.

மற்றவர்கள் யாரும் எதுவும் சொல்லாதபோது, தான் அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசி விட்டோமோ என்று நினைத்த கிருத்திகா, "சாரி சார்! விளையாட்டுக்குக் கேட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க!" என்றாள் கிருத்திகா.

"நான் எதையுமே தப்பா நினைக்க மாட்டேன். நீங்க சொன்னது நல்ல யோசனைதான். வீட்டில ஹோமம் பண்றப்ப ஆஃபீஸ் நண்பர்களைக் கூப்பிட்டிருக்கலாம். நீங்க சொன்னப்பறம்தான் எனக்கே தோணுது. அடுத்த தடவை எல்லாரையும் கூப்பிடறேன்" என்றான் சுந்தரேசன். 

"தாங்க்ஸ் சார்!" என்றாள் கிருத்திகா.

'எதற்கு?' என்பது போல் சுந்தரேசன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.

ன்று மதிய உணவு இடைவேளையின்போது, தனிமையில் அமர்ந்திருந்த கிருத்திகாவிடம் வந்த ரேவதி, "கிருத்திகா! உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!" என்றாள். அந்த அலுவலகத்தில் கிருத்திகா அதிகம் நெருங்கிப் பழகுவது ரேவதியிடம்தான்.

சுற்றுமுற்றும் பார்த்து யாருமில்லை என்று நிச்சயம் செய்து கொண்ட பின், "சுந்தரேசன் அவ்வளவு நல்லவன் இல்ல. அவன் இன்னிக்கு உன்னைப் பார்த்த பார்வை சரியில்ல. ஜாக்கிரதையா இருந்துக்க" என்றாள் ரேவதி.

"என்ன ரேவதி இப்படிச் சொல்றிங்க? அவரை அவன் இவன்னு வேற பேசறீங்க!" என்றாள் கிருத்திகா.

"நான் சொல்றதை நல்லா கேட்டுக்க. அவன் சாமியார் வேஷத்தை நம்பாதே. ஒரு தடவை நம்ப ஆஃபீஸ்ல வேலை செய்யற ஒரு பெண்ணை அவன் ஏதோ காரணம் சொல்லித் தன் வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கான். வீட்டில அவன் பெற்றோர் இருப்பாங்கன்னு நம்பி அவளும் போயிருக்கா. ஆனா அவன் பெற்றோர் அப்ப வீட்டில இல்ல. அந்தப் பெண்ணை அவன் பலாத்காரம் செஞ்சிருக்கான். அவளால ஒண்ணும் செய்ய முடியல. வெளியில சொல்லவும் முடியல."

"யார் அந்தப் பொண்ணு?" என்றாள் கிருத்திகா.

"அது யார்னு நான் சொல்லக் கூடாது. இந்த ஆஃபீஸ்ல வேலை செய்யற பல பெண்கள்ள ஒரு பெண். நான் உனக்கு ஃபிரண்டுங்கறதால அவங்கதான் இந்த விஷயத்தை எங்கிட்ட சொல்லி உன்னை எச்சரிக்கச் சொன்னாங்க" என்றாள் ரேவதி.

"என்னால இதை நம்ப முடியலே! அவர் அப்படிப்பட்டவரா இருக்க மாட்டாரு!" என்றாள் கிருத்திகா.

'அந்தப் பெண் நான்தாண்டி!' என்று கூவ  வேண்டும் போல் இருந்தது ரேவதிக்கு. "அவங்களுக்கு நடந்த மாதிரி இன்னும் சில பேருக்குக் கூட நடந்திருக்கறதா அவங்க சொன்னாங்க. எல்லாருமே இதை வெளியில சொல்ல முடியாம புழுங்கிக்கிட்டிருக்காங்க. ஜாக்கிரதையா இருந்துக்க. அவன் வீட்டுக்குக்  கூப்பிட்டா போயிடாதே!" என்றாள்

"சரி ரேவதி" என்றாள் கிருத்திகா. ஆனால் அவளால் ரேவதி சொன்னதை நம்ப முடியவில்லை.

வெள்ளிக்கிழமை மாலை கிருத்திகா தன் சீட்டில் தனியே இருந்தபோது அங்கே வந்த சுந்தரேசன், "கிருத்திகா, என் அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கணும்னு நீங்க சொன்னதை என் அம்மா கிட்ட சொன்னேன். இந்தக் காலத்தில இப்படி ஒரு பெண்ணான்னு என் அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. உங்களைப் பாக்கணும்னு சொன்னாங்க. நாளைக்கு லஞ்ச்சுக்கு என் வீட்டுக்கு வரீங்களா? நீங்க விரும்பினபடி என் அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கலாம். உங்க வீட்டிலேந்து கிளம்பறப்ப எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் அட்ரஸ் சொல்றேன். உங்களுக்கு மட்டும்தான் இந்த அழைப்பு. ஆஃபீஸ்ல யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். இந்தாங்க என் ஃபோன் நம்பர்" என்று அவள் கையில் ஒரு துண்டுச் சீட்டை வைத்தான் சுந்தரேசன்.

துறவறவியல்
     அதிகாரம் 28      
கூடாவொழுக்கம்   
குறள் 274
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

பொருள்:  
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவத்துக்கு மாறான செயல்களில் ஈடுபடுதல் ஒரு வேடன் புதரில் மறைந்து கொண்டு பறவைகளை வஞ்சமாகப் பிடிப்பதற்கு ஒப்பாகும்.
   பொருட்பால்                                                                                   காமத்துப்பால்