About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, September 17, 2019

279. பயிற்சிக்குப் பின்

அந்த நிறுவனத்தில் டிரெயினியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை சுந்தர் பெரிய அதிர்ஷ்டமாகக் கருதினான். 

ஊதியம், வசதிகள், வேலையில் முன்னேற வாய்ப்புகள் போன்ற பல விஷயங்களில் முதல் இடத்தில் இருப்பதாகக் கருதப்பட்ட அந்த நிறுவனத்தில் கடும் போட்டிக்கு இடையே சுந்தருக்கு அந்த வேலை கிடைத்தது. 

ஆறு மாதப் பயிற்சிக்குப் பின் டிரெயினிகள் நிரந்தர ஊழியர்களாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்ற பொதுவான நிலை இருந்தாலும், ஒரு சிக்கல் இருந்தது.

ஒருவேளை, பயிற்சியின்போது ஒரு டிரெயினியின் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லாவிட்டால், அவருடைய பயிற்சிக் காலம் இன்னொரு ஆறு மாத காலத்துக்கு நீட்டிக்கப்படும். அதற்குப் பிறகும் அவர் முன்னேற்றம் நிர்வாகத்துக்குத் திருப்தி அளிக்காவிட்டால், அவருக்கு வேலை இல்லை என்ற நிலை ஏற்படும்!

யிற்சியில் சேர்ந்த முதல் நாள் டிரெயினிகளின் எதிர்காலத்தை முடிவு செய்யும் இரண்டு பயிற்சி நிர்வாகிகளின் அறிமுகம் அவர்களுக்குக் கிடைத்தது.

ஒருவர் விஜயகுமார், மற்றவர் ராஜன். 

அவர்களிடம் முதலில் பேசிய விஜயகுமார், இயல்பாகவும், நகைச்சுவையாகவும் பேசினார். "கவலைப்படாதீங்க. நாங்க சொல்றதைக் கேட்டுப் புரிஞ்சுக்கிட்டு வேலை செய்யுங்க. எல்லாரும் பர்மனண்ட் ஆயிடுவீங்க. உற்சாகமா இருங்க!" என்றார்.

இரண்டாவதாக அவர்களிடம் பேசிய இன்னொரு நிர்வாகி ராஜன் சற்றுக் கடுமையாகவும், அச்சுறுத்தும் விதத்திலும் பேசினார். 

"இது காலேஜ் இல்லை. சும்மா ஜாலியா கிளாசுக்குப் போயிட்டோ, கட் அடிச்சுட்டோ எப்படியோ பரீட்சையில் பாஸ் பண்ணி டிகிரி வாங்கற மாதிரி இல்ல. இங்க சொல்லிக் கொடுக்கற விஷயங்களை நல்லாப் புரிஞ்சுக்கிட்டு வேலை செய்யணும். வேலையில கவனமா இருக்கணும். விளையாட்டுத்தனம் கூடாது. அப்புறம் ஆறு மாசம் முடிஞ்சப்பறம் பர்மனண்ட் ஆகலேன்னா அப்ப வருத்தப்பட்டுப் பயனில்லை!" என்றார் அவர். 

ஏன் இவர் துவக்கத்திலேயே இப்படி பயமுறுத்துகிறார், விஜயகுமார் போல் ஊக்கப்படுத்தும் விதத்தில் பேசக் கூடாதா என்று நினைத்துக் கொண்டான் சுந்தர். 

று மாதங்களில் சுந்தருக்கும் மற்ற டிரெயினிகளுக்கும் பல அனுபவங்கள் ஏற்பட்டன, 

இரண்டு நிர்வாகிகளும் வகுப்பில் பாடங்கள் எடுத்தும், செய்முறைப் பயிற்சிகள் அளித்தும் அவர்களுக்குப் பயிற்சி அளித்தனர். விஜயகுமாரின் இனிமையான அணுகுமுறை டிரெயினிகளிடையே அவருக்கு அபிமானத்தையும், ராஜனின் கடுமையான அணுகுமுறை அவர் மீது பயத்தையும், சற்று வெறுப்பையும் கூட ஏற்படுத்தியது.

று மாத முடிவில், இரு பயிற்சி நிர்வாகிகள் மற்றும் பர்சனல் மானேஜர் என்ற மூவர் அடங்கிய குழு டிரெயினிகளில் யார் யார் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதை முடிவு செய்தது. டிரெயினிகளை ஒவ்வொருவராக பர்சனல் மானேஜர் தன் அறைக்கு அழைத்து அவர்கள் நிலையை அறிவித்தார்.

சுந்தருக்கு முன் பர்சனல் மானேஜரின் அறைக்குச் சென்றவர்கள் அனைவருமே ஓரிரு நிமிடங்களில் முக மலர்ச்சியுடன் வெளியே வந்து தாங்கள் நிரந்தரமாக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

சுந்தர் உள்ளே அழைக்கப்பட்டதும் நம்பிக்கை, பயம் இரண்டும் கலந்த உணர்வுடன் உள்ளே போனான்.

"வா, சுந்தர்! நீ வேலை நல்லாக் கத்துக்கிட்டிருக்கேன்னு ரெண்டு மானேஜர்களுமே சொல்லி இருக்காங்க" என்றார் பர்சனல் மானேஜர்.

"தாங்க் யூ சார்" என்றான் சுந்தர், தான் நிரந்தரமாக்காப்படுவோம் என்ற நம்பிக்கை வலுவடைந்தவனாக.

"ஆனால், டிசிப்ளின் விஷயத்தில்தான் கொஞ்சம் பிரச்னை போலருக்கு!"

"டிசிப்ளின் விஷயத்திலயா? ஏன் சார்? ராஜன் சார் ஏதாவது சொன்னாரா?" என்றான் சுந்தர் அதிர்ச்சியுடன்.

"ராஜன் சாரா? அவரையும் எதிர்த்துப் பேசி இருக்கியா?"  

"அவரையுமா?" என்றான் சுந்தர் குழப்பத்துடன். "நான் யாரையுமே எதிர்த்துப் பேசலியே சார்!"

"ஒரு தடவை விஜயகுமார் கிட்ட எதிர்த்துப் பேசி வாதாடி இருக்க. அவர்தான் உனக்கு டிசிப்ளின் போதாதுன்னு சொல்லி உன் டிரெயினிங் பீரியடை ஆறு மாசம் எக்ஸ்டெண்ட் பண்ணனும்னு சிபாரிசு பண்ணி இருக்காரு."

சுந்தருக்கு அந்த நிகழ்ச்சி நினைவு வந்தது. 

தொழில் நுட்பம் சம்பந்தமாக வகுப்பறையில் விஜயகுமார் கூறிய ஒரு கருத்து தான் கல்லூரியில் படித்ததிலிருந்து மாறுபட்டதாக இருந்ததால், அதை அவன் சுட்டிக் காட்டினான். தான் சொன்னதுதான் சரியென்று அவர் வாதிட்டார்.

அப்போது அவர் அவருடைய இயல்புக்கு மாறாகச் சற்றுக் கோபமாகக் கூடப் பேசியதாக சுந்தருக்குத் தோன்றியது. 

அன்று இரவே பயிற்சி நிலையத்தில் இருந்த நூலகத்துக்குச் சென்று, குறிப்பிட்ட புத்தகத்தைத் தேடி எடுத்துத் தான் சொன்னது சரியென்று உறுதிப்படுத்திக் கொண்ட சுந்தர், அடுத்த நாள் அந்தப் புத்தகத்தை வகுப்பறைக்கு எடுத்து வந்து விஜயகுமாரிடம் காட்டி, தான் சொன்னது சரியென்று காட்டினான். 

அவரும் சிரித்துக் கொண்டே அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு, "யூ ஆர் ரைட்" என்று அவனிடம் கைகுலுக்கினார்.

அதையா கட்டுப்பாடு இல்லாத செயல் என்று சொல்லி அவன் நிரந்தரமாக்கப்படுவதைத் தடுக்க முயன்றிருக்கிறார் விஜயகுமார்?

நடந்த விஷயத்தை பர்சனல் மேனேஜரிடம் விளக்கினான் சுந்தர்.

"அதான் பிரச்னை! நீ செஞ்சது தப்பு இல்ல. ஆனா அதை விஜயகுமார் நீ தன்னை அவமானப்படுத்திட்டதா நினைச்சிருக்கார்" என்றார் பர்சனல் மானேஜர்.

"அப்படின்னா, என்னோட நிலைமை என்ன சார்?" என்றான் சுந்தர் மனமுடைந்து போனவனாக.

"உன் அதிர்ஷ்டம். ராஜன் உனக்காகக் கடுமையா வாதாடினார். 'ஒரு உற்சாகத்தில அப்படிச் செஞ்சிருப்பான். இதுக்காக வேலையை நல்லா கத்துக்கிட்ட ஒரு திறமையான கேண்டிடேட்டைத் தண்டிக்கக் கூடாது'ன்னு அவர் உனக்கு ஆதரவாப் பேசினார். நானும் அவர் சொன்னதை ஏத்துக்கிட்டேன். அதனால நீ பர்மனண்ட் ஆயிட்டே! கங்கிராசுலேஷன்ஸ்!" என்றார் பர்சனல் மானேஜர்.

"ரொம்ப நன்றி சார்!" என்றான் விஜயகுமார் போன உயிர் திரும்பி வந்தவனாக.

"ஒரு விஷயம். இதையெல்லாம் நான் உன்கிட்ட சொல்லியிருக்கக் கூடாது. ஆர்வக் கோளாறினால நீ இது மாதிரி மறுபடி செய்யக் கூடாதுன்னு உனக்குப் புரிய வைக்கறதுக்குத்தான் இதைச் சொன்னேன். நீ இனிமே வேற டிபார்ட்மெண்டுக்குப் போயிடுவ. அவங்க ரெண்டு பேரும் உனக்கு மேலதிகாரியா வர வாய்ப்பு இல்ல. அதனால உன்கிட்ட இதைச் சொல்றதால பாதிப்பு எதுவும் ஏற்படாதுன்னு நினைச்சேன். இதை உன் மனசுக்குள்ளயே வச்சுக்க. வெளியில யார் கிட்டயும் சொல்லிடாதே. வாழ்த்துக்கள்!" என்று அவனிடம் கைகுலுக்கினார் பர்சனல் மானேஜர்.

பர்சனல் மானேஜரின் ஏசி அறையிலிருந்து வியர்வை கொட்டும் முகத்துடன் வெளியே வந்த சுந்தரைப் பார்த்து, "இவன் பர்மனன்ட் ஆகல போலருக்கு" என்று வெளியில் இருந்தவர்கள் நினைத்திருக்கக் கூடும்!   

துறவறவியல்
     அதிகாரம் 28      
கூடாவொழுக்கம்   
குறள் 279
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.

பொருள்:  
நேராக இருக்கும் அம்பு கொடியது, வளைந்திருக்கும் யாழ் இனியது. எனவே ஒருவரை அவரது செயலால்தான் எடை போட வேண்டும், தோற்றத்தால் அல்ல.
  பொருட்பால்                                                                                   காமத்துப்பால்











No comments:

Post a Comment