
இதற்கு முன்பு இருந்த அதிகாரியைப் பார்க்க எத்தனையோ முறை அவர் இதே அலுவலகத்துக்கு வந்து, அதிகாரியைப் பார்க்க முடியாமலே திரும்பி இருக்கிறார். பின்பு ஒருமுறை, மூன்று நாட்கள் தொடர்ந்து வந்த பிறகு, அதிகாரியைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.
தன் முதியோர் ஓய்வூதியக் கோரிக்கை பல மாதங்களாகப் பரிசீலிக்கப்படாமல் இருப்பதை அவரிடம் சொல்லி முறையிட்டபோது, "பார்க்கிறேன்" என்று சொன்னார் அவர். அதோடு சரி.
அதற்குப் பிறகு பல மாதங்கள் ஓடி விட்டன. அவர் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பது கூடத் தெரியவில்லை. அதற்குப் பிறகு, அவரால் அந்த அதிகாரியை இன்னொரு முறை சந்திக்க முடியவில்லை.
இப்போது வந்திருக்கும் புதிய அதிகாரி மக்களை மதித்து அக்கறையுடன் செயல்படுபவர் என்று கேள்விப்பட்டு, மீண்டும் நம்பிக்கையைத் துளிர்க்க வைத்துக் கொண்டுதான் அவரைப் பார்க்க வந்தார் வடிவேலு.
அரை மணி நேரத்தில் அவரால் அதிகாரியைப் பார்க்க முடிந்தது. இவ்வளவு சுலபமாக, இவ்வளவு விரைவாக அதிகாரியைப் பார்க்க முடிந்ததே வடிவேலுவுக்கு இன்ப அதிர்ச்சி.
அரை மணி நேரத்தில் அவரால் அதிகாரியைப் பார்க்க முடிந்தது. இவ்வளவு சுலபமாக, இவ்வளவு விரைவாக அதிகாரியைப் பார்க்க முடிந்ததே வடிவேலுவுக்கு இன்ப அதிர்ச்சி.
வடிவேலு சொன்னதைப் பொறுமையுடன் கேட்ட அதிகாரி மாசிலாமணி, "முதல்ல, உங்களுக்கு ஏற்பட்ட கால தாமதத்துக்கும், சிரமத்துக்கும் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன்" என்றார்.
பிறகு, உதவியாளரைக் கூப்பிட்டு, ஃபைலைத் தேடச் சொன்னார் மாசிலாமணி.
"சார்! அது பழைய கேஸ். தேடி எடுக்கப் பல நாள் ஆகும்" என்றார் உதவியாளர்.
மறுபடி கால தாமதம் ஆகப் போகிறது என்று வடிவேலு விரக்தியுடன் நினைத்தபோதே, "என்ன செய்வீங்களோ தெரியாது. நாளைக்குக் காலையில ஃபைல் என் மேஜைக்கு வரணும்!" என்று உதவியாளரிடம் சற்றே கடுமையான குரலில் சொன்ன மாசிலாமணி, வடிவேலுவிடம் திரும்பி, "சார்! நீங்க நாளைக்கு பத்து மணிக்கு வாங்க. உங்க ஃபைலைத் தேடி வைக்கிறேன். மறுபடி வரச் சொல்றதுக்கு மன்னிச்சுக்கங்க" என்றார்.
"என்ன சார் இது!" என்றார் வடிவேலு, சங்கடத்துடன்.
மறுநாள் வடிவேலு அலுவலகத்துக்கு வந்தபோது, அதிகாரியைப் பார்க்கப் பெரிய கூட்டம் காத்திருந்தது. இன்று அவரைப் பார்க்க முடியுமா என்று வடிவேலுவுக்குக் கவலையாக இருந்தது. உதவியாளரிடம் சென்று கேட்டால், சரியான பதில் வரும் என்று அவருக்கு நம்பிக்கையில்லை.
ஒவ்வொருவராக அதிகாரியின் அறைக்குள் அழைக்கப்பட்டனர். தான் அதிகாரியைப் பார்க்க சில மணி நேரங்களாவது ஆகும் என்று நினைத்து வடிவேலு அமர்ந்திருந்தார்.
ஏதோ வேலையாகத் தன் அறையை விட்டு வெளியே வந்த மாசிலாமணி, வடிவேலுவைப் பார்த்ததும், சற்று நின்றார். பிறகு, அவரை அடையாளம் கண்டு கொண்டவராக அவரிடம் வந்து, "உங்க ஃபைல் என் மேஜைக்கு வந்திருக்கான்னு பாத்து சொல்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்றார்.
தன் அறைக்குள் போய் விட்டுச் சில நிமிடங்களில் வெளியே வந்தவர், வடிவேலுவிடம் வந்து, "சார்! உங்க ஃ பைலைத் தேடி எடுத்துட்டாங்க. அரசாங்க நடைமுறைப்படி, ஒரு ஃபைலை ப்ராசஸ் பண்ணக் கொஞ்ச நாள் ஆகும். இன்னும் பதினைஞ்சு நாள்ள உங்களுக்கு சாங்ஷன் பண்ற மாதிரி ஏற்பாடு செய்யறேன்" என்று சொல்லி, ஆறுதல் கூறுவது போல் அவர் கைகளைப் பிடித்துச் சொல்லி விட்டுத் தன் அறைக்குள் போனார்.
"இப்படி ஒரு மனிதரா!" என்ற மலைப்பு ஏற்பட்டது வடிவேலுவுக்கு.
இருபது நாட்கள் ஆகியும் தனக்குக் கடிதம் எதுவும் வராததால், மீண்டும் அந்த அரசு அலுவலகத்துக்குப் போனார் வடிவேலு.
இந்த முறையும், அவரால் மாசிலாமணியை உடனே சந்திக்க முடிந்தது.
"இன்னுமா உங்களுக்கு சாங்ஷன் ஆகல?" என்று கேட்ட அதிகாரி, உதவியாளரை அழைத்து அவரிடம் ஏதோ கேட்டார். உதவியாளர் ஏதோ பதில் சொன்னார். அவர்கள் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டதால், அவர்கள் என்ன பேசினார்கள் என்று வடிவேலுவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
உதவியாளரை அனுப்பி விட்டு, வடிவேலுவிடம், "சார்! ஒரு சின்ன பிரச்னை. இந்த ஆஃபீஸ்ல இந்த வருஷம் எவ்வளவு ஓய்வூதியம் சாங்ஷன் பண்ணலாம்னு அரசாங்கம் ஒரு தொகை ஒதுக்கி இருக்கு. அந்த கோட்டா முடிஞ்சு போச்சு. கூடுதல் தொகை ஒதுக்கச் சொல்லிக் கேட்டிருக்கோம். அரசாங்கத்திலேந்து சாங்ஷன் வரணும்!" என்றார் மாசிலாமணி.
"நீங்கதானே சார் அரசாங்கம்?"
"அது சரிதான். ஆனா, டிபார்ட்மென்ட்ல எங்களுக்கு ஒதுக்கற தொகை எவ்வளவோ, அவ்வளவுதான் நாங்க சாங்ஷன் பண்ண முடியும்."
"நீங்க கேட்ட கூடுதல் ஒதுக்கீடு எப்ப சார் வரும்?"
"அது அரசாங்கத்தோட நிதி நிலைமையையும், மேல இருக்கறவங்க முடிவையும் பொருத்தது. நாளைக்கே வரலாம், அல்லது இந்த வருஷம் அவ்வளவுதான்னு சொன்னாலும் சொல்லலாம்!"
"அப்ப?"
"கவலைப்படாதீங்க. சீக்கிரமே நல்லது நடக்கும்" என்றார் மாசிலாமணி.
வடிவேலு வெளியே வந்தார். அலுவலகத்திலிருந்து வெளியே வந்து சாலையில் இறங்கியதும், "ஐயா!" என்று யாரோ கூப்பிட்டார்கள்.
வடிவேலு திரும்பிப் பார்த்தார்.
அலுவலக பியூன்!
வடிவேலு நின்றதும், அவர் அருகில் வந்த பியூன், "சார்! உங்களுக்கு பென்ஷன் கிடைச்சா, மாசம் எவ்வளவு பணம் வரும்?" என்றார்.
"மாசம் ஆயிரம் ரூபாய்."
"ஆயிரம் ரூபாய் கொடுங்க. நாளைக்கே உங்க பென்ஷன் சாங்ஷன் ஆயிடும். நீங்க செலவழிக்கப் போறது ஒரு மாச பென்ஷன் தொகைதான். ஆனா, உங்களுக்கு உங்க ஆயுசு முழுக்க மாசா மாசம் ஆயிரம் ரூபா வந்துக்கிட்டிருக்கும்!"
"ஏன்யா இப்படி இருக்கீங்க? உங்க அதிகாரி இவ்வளவு நல்லவரா இருக்காரு. நீங்க இப்படி மோசமானவங்களா இருக்கீங்களே!" என்றார் வடிவேலு, கோபத்துடன்.
"புரியாம பேசாதீங்க, சார்! என்னால உங்க பென்ஷனை சாங்ஷன் பண்ண முடியுமா? பணம் அவருக்குத்தான் சார்! நீங்க பணம் கொடுத்த அடுத்த நாளே உங்க பென்ஷன் சாங்ஷன் ஆனதும், உண்மையை நீங்களே புரிஞ்சுப்பீங்க!" என்றார் பியூன், சிரித்தபடி.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 28
கூடாவொழுக்கம்
குறள் 277புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.
வெளித் தோற்றத்துக்குக் குன்றிமணி போல் செம்மையானவராய்க் காணப்பட்டாலும், மனதுக்குள் குன்றிமணியின் மூக்குப் போல் கருத்திருப்பவர்கள் உலகத்தில் உண்டு.
No comments:
Post a Comment