முருகானந்தத்தின் ஐம்பதாவது வயதில், அவருக்கு அந்த ஆசை வந்தது - ஆசைகளைத் துறக்க வேண்டும் என்ற ஆசை!
தன் மனைவியிடம் சொன்னார். "நான் சந்நியாசி ஆகலாம்னு பாக்கறேன்!"
அவர் மனைவி சரளா பெரிதாகச் சிரித்து விட்டு, "என்னவோ ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்ற மாதிரி சொல்றீங்க!" என்றாள்.
"இல்ல, சரளா. சந்நியாசின்னா, உங்களையெல்லாம் விட்டுட்டுக் காட்டுக்குப் போறது இல்ல. அது எப்படி முடியும்? அத்தியாவசியமான விஷயங்களைத் தவிர மத்த விஷயங்கள்ள உள்ள ஈடுபாட்டை விட்டுட்டு, அதிக நேரம் பக்தி, தியானம் மாதிரி விஷயங்கள்ள ஈடுபடலாம்னு நினைக்கிறேன்."
"எதையெல்லாம் விடப் போறீங்க?"
"சாப்பாட்டு ஆசையை விடப் போறேன். குறைவா, எளிமையா, தேவையான அளவுக்கு மட்டும் சாப்பிடப் போறேன். நொறுக்குத் தீனி, காஃபி, டீ, கூல் டிரிங் மாதிரி பானங்கள் எதுவும் கிடையாது. பத்திரிகைகள், புத்தகங்கள் படிக்கிறது, டிவி, சினிமா, டிராமா, கச்சேரி, நண்பர்களோட அரட்டை அடிக்கிறது எல்லாத்தையும் விட்டுடப் போறேன். நியூஸ் பேப்பரை மட்டும் மேலோட்டமாப் படிச்சுட்டு, நாட்டு நடப்பைத் தெரிஞ்சுக்கறதோட நிறுத்திக்கப் போறேன்."
"எங்கிட்ட, குழந்தைங்ககிட்டல்லாம் பேசுவீங்க இல்ல?" என்றாள் சரளா, பாதி விளையாட்டாகவும், பாதி கவலையுடனும்.
"சேச்சே! அதான் சொன்னேனே! பழைய காலம் மாதிரி, குடும்பத்தை விட்டுட்டு சந்நியாசி ஆகறதெல்லாம் இப்ப முடியாதுன்னு."
"ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க? எனக்கென்னவோ பயமா இருக்கு!"
"பயப்படறதுக்கெல்லாம் எதுவும் இல்ல. என்னவோ தோணிச்சு, அம்பது வயசு ஆயிடுச்சே, எல்லாப் பற்றுக்களையும் விட்டுட்டு, மனசளவிலேயாவது துறவியா இருக்கலாமேன்னு!"
"நாற்பது வயசில நாய் குணம்பாங்க. அம்பது வயசில அரைப் பைத்தியம் பிடிக்கும் போலருக்கு!" என்றாள் சரளா, சற்றுக் கோபத்துடன்.
"என்னைக் கோபப்பட வைக்கலாம்னு பாக்கற! ஆனா நீ என்ன சொன்னாலும், நான் கோபப்பட மாட்டேன். பற்றுக்களை விட்டவனுக்குக் கோபதாபமெல்லாம் எப்படி இருக்க முடியும்? கவலைப்படாதே. உன்னையும், குழந்தைகளையும் பொருத்தவரை, என் கடமைகளை சரியாச் செய்வேன்" என்றார் முருகானந்தம்.
அதற்குப் பிறகு, முருகானந்தம் தான் சொன்னபடியே நடந்து கொள்ள ஆரம்பித்தார். சரளாவுக்கே வியப்பாக இருந்தது, எப்படி இவர் தன்னை மாற்றிக் கொண்டார் என்று. அவர் அலுவலக நண்பர்களும், பிற நண்பர்களும் கூட அவருடைய மாற்றத்தைக் கண்டு வியந்தனர்.
அலுவலக நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் கோவில்கள், ஆசிரமங்கள் என்று செல்வது, ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்பது என்று வழக்கப்படுத்திக் கொண்டார் முருகானந்தம்.
ஒரு ஆசிரமத்தில் உறுப்பினரான பின், வார இறுதி நாட்கள் முழுவதையும் அந்த ஆசிரமத்தில் கழிப்பது, சில சமயம் ஆசிரமப் பணிக்காக வெளியூர் செல்வது என்ற பழக்கங்கள் ஏற்பட்டன. சரளாவைத் தன்னுடன் வரும்படி அவர் சிலமுறை அழைத்தபோதும், அவள் வர மறுத்து விட்டாள்.
ஆசிரம வேலையாக வெளியூர் சென்றபோதுதான், முருகானந்தம் விமலாவைச் சந்தித்தார். விவாகரத்தாகித் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்த விமலாவுடன் ஏற்பட்ட அறிமுகம் நட்பாக மாறி, இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது.
துவக்கத்தில் ஆன்மீக விஷயங்களை மட்டும் பேசிக் கொண்டிருந்தவர்கள், பிறகு மற்ற விஷயங்களையும் பேசத் தொடங்கினர். ஒருமுறை அவர் விமலாவின் வீட்டுக்குச் சென்றபோது, அவள் படுக்கை அறை வரை சென்று விட்டு வந்த அனுபவம், இருவரிடையே இருந்த நட்பை உறவாக மாற்றி விட்டது.
அதற்குப் பிறகு, விமலாவுடன் இருப்பதற்காகவே, ஒவ்வொரு வார இறுதியிலும் முருகானந்தம் வெளியூர் செல்லத் தொடங்கினார். விமலாவின் வீட்டுக்குச் செல்வது அல்லது அவளுடன் சேர்ந்து வேறு ஊருக்குச் செல்வது என்பது வழக்கமாயிற்று.
விமலாவுடன் இருந்தபோது, அவர் உணவுக் கட்டுப்பாடு எதையும் பின்பற்றவில்லை என்பதுடன், விமலாவிடம் இருந்த மதுப் பழக்கத்தையும் பின்பற்றத் தொடங்கினார்!
சரளாவின் கைபேசி ஒலித்தது. ஏதோ புதிய எண்! யாராக இருக்கும் என்று யோசித்தபடியே, சரளா அதை எடுத்துப் பேசினாள்.
"நீங்க முருகானந்தத்தின் மனைவியா?"
"ஆமாம், நீங்க யாரு?"
"நாங்க டிராஃபிக் போலீஸ். உங்க கணவர் முருகானந்தம் போன கார் ஒரு மரத்தில மோதி, அவர் நினைவில்லாம இருக்காரு. பதட்டப்படாதீங்க. அவருக்கு லேசான அடிதான். கார் ஓட்டின பெண்ணுக்குத்தான் கொஞ்சம் அதிகமா அடிபட்டிருக்கு. அவங்க குடிச்சுட்டு கார் ஒட்டி இருக்காங்க" என்றவர், கொஞ்சம் தயங்கி விட்டு, "உங்க வீட்டுக்காரரும் குடிச்சிருப்பார் போலருக்கு!" என்றார்.
"என்ன சொல்றீங்க? அவர் அப்படிப்பட்டவர் இல்ல!" என்றாள் சரளா, உரத்த குரலில்.
"இல்லம்மா. நான் பாத்ததைத்தான் சொல்றேன். ஆஸ்பத்திரி விலாசத்தை உங்களுக்கு மெஸேஜ் பண்றேன். சீக்கிரம் வாங்க" என்றார் போலீஸ் அதிகாரி.
"என் நம்பர் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது?" என்றாள் சரளா.
"அவர் ஃபோன்ல ஒயிஃப் என்கிற பேர்ல உங்க நம்பர் இருந்தது. அதான் கூப்பிட்டேன்" என்றவர், "ஆனா, எங்களுக்குக் கொஞ்சம் குழப்பமாத்தான் இருந்தது" என்றார்.
"என்ன குழப்பம்?"
"காரை ஓட்டிக்கிட்டு வந்த பெண்மணியோட செல்ஃபோன்ல உங்க கணவரும், அவங்களும் நெருக்கமா இருக்கற ஃபோட்டோல்லாம் இருந்தது. அதனால அவங்கதான் அவர் மனைவின்னு முதல்ல நினைச்சோம். அப்புறம் அவர் ஃபோன்ல மனைவிங்கற பேர்ல உங்க நம்பர் இருந்தது! ஆமாம், அவங்க யாரு?"
துறவறவியல்
அதிகாரம் 28
கூடாவொழுக்கம்
குறள் 275பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.
தங்களைப் பற்று இல்லாதவர்கள் என்று சொல்லிக் கொண்டு, ஒழுக்கம் தவறி வாழ்பவர்கள், ஏன் இப்படிச் செய்தோம் என்று வருந்தும் நிலை வரும்.
இந்தக் கதையின் காணுளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment