About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, August 3, 2019

274. நல்லவன், எனக்கு நானே நல்லவன்!

சுந்தரேசனுக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். அந்த அலுவலகத்தில் அவன் ஒரு மூத்த ஊழியன். திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருந்ததால் திருமணத்தில் அவனுக்கு ஈடுபாடு இல்லை. அப்பா அம்மாவே உலகம் என்று வாழ்ந்து கொண்டிருந்தான்.

அலுவலகத்தில் நீண்ட காலமாகப் பணி புரிபவன் என்பதாலும், ஒரு முனிவரைப் போல வாழ்ந்து வருவான் என்பதாலும், அலுவலகத்தில் அவன் மீது எல்லோருக்கும் மரியாதை உண்டு. 

அவனுக்குப் பதவி உயர்வு வந்தபோது வேண்டாம் என்று சொல்லி விட்டான். அலுவலகத்தில் அதிகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் அது தன் ஆன்மீகத் தேடலுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று காரணம் சொன்னான். 

அலுவலகத்தில் அவன் ஒரு உதவியாளன்தான் என்றாலும் அவன் மேலதிகாரிகள் கூட அவனிடம் மரியாதையாக நடந்து கொண்டார்கள். அவனுக்கு நெருக்கமான சில நண்பர்கள் மட்டும் அவனை உரிமையுடன் 'டேய் சாமியார்!' என்று கூப்பிடுவார்கள். 

வார இறுதி நாட்களில் மற்ற ஊழியர்கள் சினிமா, மால், ரிஸார்ட், பிக்னிக் என்று உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கும்போது, சுந்தரேசன் பெற்றோருடனோ, தனியாகவோ கோவில், குளம் என்று போய் விடுவான். அல்லது ஏதாவது ஆசிரமத்துக்குப் போய் இரண்டு நாள் இருந்து சேவை செய்து விட்டு வருவான்.

"என்ன சாமியாரே, இந்த வீக் எண்ட்ல எங்கே போயிருந்தீங்க?" என்றான் முருகன். 

"சனிக்கிழமை என் அம்மாவுக்குப் பிறந்த நாள். அதனால வீட்டில ஒரு ஹோமம் பண்ணினோம்" என்றான் சுந்தரேசன். 

"எங்களையெல்லாம் கூப்பிடலியே!" என்றாள் சாந்தி.

"யாரையுமே கூப்பிடல! அப்பா, அம்மா, ஹோமம் செஞ்ச சாஸ்திரிகள், நான் நாலு பேர்தான். வழக்கமான எளிமையான சமையல்தான். அப்பாவுக்கு டயாபிடிஸ் இருக்கறதால பாயசம் கூடப் பண்ணல."

"எங்களைக் கூப்பிட்டிருக்கலாமே சார்! நாங்க உங்கம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருப்போமே!" என்றாள் கிருத்திகா. அவள் அந்த அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள்.

"ரெண்டு மூணு மாசத்துல என் அப்பா பிறந்த நாள் வரும். அப்ப உங்களை மட்டும் கூப்பிடறேன்!" என்றான் சுந்தரேசன் சிரித்தபடி.

மற்றவர்கள் யாரும் எதுவும் சொல்லாதபோது, தான் அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசி விட்டோமோ என்று நினைத்த கிருத்திகா, "சாரி சார்! விளையாட்டுக்குக் கேட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க!" என்றாள் கிருத்திகா.

"நான் எதையுமே தப்பா நினைக்க மாட்டேன். நீங்க சொன்னது நல்ல யோசனைதான். வீட்டில ஹோமம் பண்றப்ப ஆஃபீஸ் நண்பர்களைக் கூப்பிட்டிருக்கலாம். நீங்க சொன்னப்பறம்தான் எனக்கே தோணுது. அடுத்த தடவை எல்லாரையும் கூப்பிடறேன்" என்றான் சுந்தரேசன். 

"தாங்க்ஸ் சார்!" என்றாள் கிருத்திகா.

'எதற்கு?' என்பது போல் சுந்தரேசன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.

ன்று மதிய உணவு இடைவேளையின்போது, தனிமையில் அமர்ந்திருந்த கிருத்திகாவிடம் வந்த ரேவதி, "கிருத்திகா! உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!" என்றாள். அந்த அலுவலகத்தில் கிருத்திகா அதிகம் நெருங்கிப் பழகுவது ரேவதியிடம்தான்.

சுற்றுமுற்றும் பார்த்து யாருமில்லை என்று நிச்சயம் செய்து கொண்ட பின், "சுந்தரேசன் அவ்வளவு நல்லவன் இல்ல. அவன் இன்னிக்கு உன்னைப் பார்த்த பார்வை சரியில்ல. ஜாக்கிரதையா இருந்துக்க" என்றாள் ரேவதி.

"என்ன ரேவதி இப்படிச் சொல்றிங்க? அவரை அவன் இவன்னு வேற பேசறீங்க!" என்றாள் கிருத்திகா.

"நான் சொல்றதை நல்லா கேட்டுக்க. அவன் சாமியார் வேஷத்தை நம்பாதே. ஒரு தடவை நம்ப ஆஃபீஸ்ல வேலை செய்யற ஒரு பெண்ணை அவன் ஏதோ காரணம் சொல்லித் தன் வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கான். வீட்டில அவன் பெற்றோர் இருப்பாங்கன்னு நம்பி அவளும் போயிருக்கா. ஆனா அவன் பெற்றோர் அப்ப வீட்டில இல்ல. அந்தப் பெண்ணை அவன் பலாத்காரம் செஞ்சிருக்கான். அவளால ஒண்ணும் செய்ய முடியல. வெளியில சொல்லவும் முடியல."

"யார் அந்தப் பொண்ணு?" என்றாள் கிருத்திகா.

"அது யார்னு நான் சொல்லக் கூடாது. இந்த ஆஃபீஸ்ல வேலை செய்யற பல பெண்கள்ள ஒரு பெண். நான் உனக்கு ஃபிரண்டுங்கறதால அவங்கதான் இந்த விஷயத்தை எங்கிட்ட சொல்லி உன்னை எச்சரிக்கச் சொன்னாங்க" என்றாள் ரேவதி.

"என்னால இதை நம்ப முடியலே! அவர் அப்படிப்பட்டவரா இருக்க மாட்டாரு!" என்றாள் கிருத்திகா.

'அந்தப் பெண் நான்தாண்டி!' என்று கூவ  வேண்டும் போல் இருந்தது ரேவதிக்கு. "அவங்களுக்கு நடந்த மாதிரி இன்னும் சில பேருக்குக் கூட நடந்திருக்கறதா அவங்க சொன்னாங்க. எல்லாருமே இதை வெளியில சொல்ல முடியாம புழுங்கிக்கிட்டிருக்காங்க. ஜாக்கிரதையா இருந்துக்க. அவன் வீட்டுக்குக்  கூப்பிட்டா போயிடாதே!" என்றாள்

"சரி ரேவதி" என்றாள் கிருத்திகா. ஆனால் அவளால் ரேவதி சொன்னதை நம்ப முடியவில்லை.

வெள்ளிக்கிழமை மாலை கிருத்திகா தன் சீட்டில் தனியே இருந்தபோது அங்கே வந்த சுந்தரேசன், "கிருத்திகா, என் அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கணும்னு நீங்க சொன்னதை என் அம்மா கிட்ட சொன்னேன். இந்தக் காலத்தில இப்படி ஒரு பெண்ணான்னு என் அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. உங்களைப் பாக்கணும்னு சொன்னாங்க. நாளைக்கு லஞ்ச்சுக்கு என் வீட்டுக்கு வரீங்களா? நீங்க விரும்பினபடி என் அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கலாம். உங்க வீட்டிலேந்து கிளம்பறப்ப எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் அட்ரஸ் சொல்றேன். உங்களுக்கு மட்டும்தான் இந்த அழைப்பு. ஆஃபீஸ்ல யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். இந்தாங்க என் ஃபோன் நம்பர்" என்று அவள் கையில் ஒரு துண்டுச் சீட்டை வைத்தான் சுந்தரேசன்.

துறவறவியல்
     அதிகாரம் 28      
கூடாவொழுக்கம்   
குறள் 274
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

பொருள்:  
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவத்துக்கு மாறான செயல்களில் ஈடுபடுதல் ஒரு வேடன் புதரில் மறைந்து கொண்டு பறவைகளை வஞ்சமாகப் பிடிப்பதற்கு ஒப்பாகும்.
   பொருட்பால்                                                                                   காமத்துப்பால்



















No comments:

Post a Comment