About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, June 30, 2015

19. தானமும் கெட்டது, தவமும் கெட்டது

சுந்தரலிங்கம் தன் பெற்றோர்களிடம் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஒவ்வொரு வருடமும் அவர்கள் நினைவு நாளன்று ஊர் முழுவதற்கும் அன்னதானம் செய்வது என்பதைக் கடந்த பல வருடங்களாகச் செய்து வந்தார்.

அந்த ஊரில் இருந்த வசதி படைத்தவர்கள் கூட அவர் செய்யும் அன்னதானத்தில் கலந்து கொள்வார்கள். ஏனெனில், தான் அன்னதானம் செய்யும் அன்று ஊரில் யார் வீட்டிலும் சமையல் செய்யக் கூடாது என்பது அவரது அன்புக் கட்டளை.

பிறர் வீட்டில் உண்ணுவதில்லை என்ற விரதத்தைக் கடைப் பிடித்து வந்த வீரராகவன் மட்டும் அதில் கலந்து கொள்ள மாட்டார். ஆனால் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள். அதை வீரராகவன் தடுத்ததில்லை.

வீரராகவன் ஒரு தவ வாழ்க்கை வாழ்பவர். வருடத்தில் பாதி நாட்கள் ஏதோ ஒரு விரதம் என்று சொல்லிச் சாப்பிட மாட்டார். அவர் உடல் இளைத்து எலும்புகள் தெரியும். ஆனால் முகத்தில் ஒரு தெய்வீகக் களை இருக்கும். 

விரதம் இருக்கும் நாட்களில் அவர் முகத்தில் பசிக் களைப்பைப் பார்க்க முடியாது. ஒரு பரவச நிலைதான் அவர் முகத்தில் குடி கொண்டிருக்கும்.

"உங்களுக்கு விஷயம் தெரியுமா? இந்த வருஷம் சுந்தரலிங்கம் ஐயா அன்னதானம் செய்யப் போவதில்லையாம். அந்த வழக்கத்தையே நிறுத்தி விடப் போகிறாராம்" என்றாள்  வீரராகவனின் மனைவி பங்கஜம்,

"என்ன காரணம்?" என்றார் வீரராகவன்.

"இறந்து போனவர்களுக்கு இருபத்தைந்து வருடங்கள் சடங்குகள் செய்தால் போதும் என்று யாரோ சொன்னார்களாம். 'நான்தான் முப்பது வருடங்களாக அன்னதானம் செய்து வருகிறேனே! அதனால் இதோடு போதும் என்று முடிவு செய்து விட்டேன்' என்று சுந்தரலிங்கம் சொன்னாராம்!"

"அவர் அப்படிச் சொன்னதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் இது அவர் வெளியில் சொல்லிக் கொள்கிற காரணமே தவிர, உண்மையான காரணம் இல்லை."

"என்ன சொல்கிறீர்கள்?'

"நம் ஊரில் தொடர்ந்து மூன்று வருடங்களாக மழை இல்லை. விவசாயம் இல்லை. வியாபாரம் இல்லை. எல்லோரும் எப்படியோ வயிற்றையும் வாயையும் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்."

"இது போன்ற சமயங்களில்தானே அன்னதானம் அவசியம்?"

"சரிதான். ஆனால் சுந்தரலிங்கம் ஒன்றும் குபேரர் இல்லை. நம்மைப்போல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்தான். ஒரு சிறிய விவசாயி. அவருக்கும் குடும்பம் இருக்கிறது. 

"அவர் எப்போதும் செய்யும் அன்னதானமே அவர் வசதிக்கு மீறியதுதான். ஆனால் தன் பெற்றோர் மீது இருக்கும் மரியாதைக்காக அவர் இதை ஒரளவு கஷ்டப்பட்டுச் செய்து வந்திருக்கிறார். 

மமழை பொய்த்து வாழ்க்கையே சுமையாகிப் போன நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக அவர் இந்த அன்னதானத்தை நடத்தியதே பெரிய விஷயம். இந்த வருடம் நிச்சயமாக நடத்த முடியாது என்ற நிலையில்தான் ஏதோ ஒரு காரணத்தைத் தேடி இருக்கிறார்."

"அதற்கு ஏன் ஒரேயடியாக நிறுத்த வேண்டும்? இந்த வருடம் நிறுத்தி விட்டு அடுத்த வருடம் மழை பெய்ததும் மறுபடியும் தொடர்ந்திருக்கலாமே?" என்றாள் பங்கஜம்.

"இது போன்ற விஷயங்கள் ஒருமுறை தடைப்பட்டால் மீண்டும் அவற்றைத் தொடர்வது கஷ்டம். ஒருமுறை தடைப்பட்ட  உறுத்தல் ஆயுள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். அதை விட ஏதோ ஒரு காரணத்தைக் கற்பித்து ஒரேயடியாக நிறுத்தி விட்டால் நிம்மதியாக இருக்கும்" என்றார் வீரராகவன்.

"இதையெல்லாம் நீங்கள் ஒரு அனுமானத்தில்தானே சொல்கிறீர்கள்? அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"அனுமானத்தில் இல்லை பங்கஜம், அனுபவத்தில் சொல்கிறேன்" என்றார் வீரராகவன். "அவருக்காவது அன்னதானம் செய்யப் பொருள் தேவைப்பட்டது. ஒரு காசு செலவில்லாமல் நான் செய்து கொண்டு வந்த சில அனுஷ்டானங்களையே நிறுத்தி விட்டேனே நான்!"

"நிறுத்தி விட்டீர்களா? நான் கவனிக்கவே இல்லையே?" என்றாள் பங்கஜம் வியப்புடன்.

"நான் நிறுத்தியது அதிகாலையில் செய்யும் அனுஷ்டானங்களை. நான் செய்ததையும் நீ பார்த்திருக்க மாட்டாய், நிறுத்தியதையும் பார்த்திருக்க மாட்டாய்!"

"ஏன் நிறுத்தினீர்கள்?"

"முன்பெல்லாம் அதிகாலையில் எழுந்து ஆற்றுக்குப் போய்க் குளித்து விட்டு அங்கேயே என் அனுஷ்டானங்களைச் செய்து விட்டு வருவேன். மழை பெய்யாததால் ஆற்றில் நீர் இல்லாமல் போனதும், நம் வீட்டுக் கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்துக் குளித்து வீட்டு வீட்டிலேயே அனுஷ்டானங்களைச் செய்ய ஆரம்பித்தேன். பிறகு கிணற்று நீர் மிகவும் கீழே போனதும், தண்ணீர் இழுப்பதே கஷ்டமாக இருந்தது. சில சமயம் 'இன்று ஒருநாள் செய்யாவிட்டால் என்ன?' என்று தோன்றும். ஒரு நாள் ஒரு எண்ணம் தோன்றியது. 'இவ்வளவு வருடங்களாக இதையெல்லாம் தவறாமல் முறையாகச் செய்து வருகிறோமே, நமக்கும் வயதாகி விட்டது, இனிமேல் இதையெல்லாம் விட்டு விட்டால் என்ன?' என்று யோசித்தேன். இப்போது சில அனுஷ்டானங்களை விட்டு விட்டு நிம்மதியாக இருக்கிறேன். சுந்தரலிங்கமும் என் மனநிலையில்தான் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்."

"உங்களால் தண்ணீர் இழுக்க முடியவில்லை என்றால் என்னை எழுப்பி இருந்தால் நான் தண்ணீர் இழுத்துக் கொடுத்திருப்பேனே!" என்றாள் பங்கஜம் ஆதங்கத்துடன்.

"நீ ஏற்கெனவே வீட்டு உபயோகத்துக்காக நாள் முழுவதும் தண்ணீர் இழுத்தும் வெளியிலிருந்து நீர் சுமந்து வந்தும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாய். நான் வேறு உனக்குக் கஷ்டம் கொடுக்க வேண்டுமா?"

"உங்கள் அனுஷ்டானங்களுக்கு உதவி செய்வது எனக்கு ஒரு கஷ்டமா?"

"அனுஷ்டானம் என்பது தன் உடலை வருத்திக் கொண்டு ஒருவர் செய்ய வேண்டிய செயல். மற்றவர்களைக் கஷ்டப்படுத்திச் செய்வதற்குப் பெயர் அனுஷ்டானம் இல்லை, அக்கிரமம்" என்ற வீரராகவன் தொடர்ந்து, "மழை பெய்யாதது எப்படிப்பட்ட பாதிப்புகளையெல்லாம் ஏற்படுத்துகிறது பார்த்தாயா? ஒரு புறம் மற்றவர் நலனுக்காகச்  செய்யப்படும் தானங்கள் நின்று போகின்றன. மறுபுறம் ஒரு மனிதன் தன்னுடைய உயர்வுக்காகச் செய்யும் தவம் போன்ற செயல்களும் நின்று போகின்றன. மழை பொய்ப்பது என்பது பெரிய கொடுமைதான்!" என்றார்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 2
வான் சிறப்பு
குறள் 19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

பொருள்:
மழை பெய்யாவிட்டால் இந்தப் பரந்த உலகத்தில் தானம், தவம் என்ற இரண்டுமே இல்லாமல் போய் விடும்.




Monday, June 29, 2015

18. வேண்டாம் திருவிழா!

"இந்த வருஷம் நம்ம கோவில் திருவிழாவைப் போன வருஷத்தை விடச் சிறப்பாகக் கொண்டாடணும்" என்றார் தர்மகர்த்தா நாச்சிமுத்து

"அதுக்கென்ன ஜமாய்ச்சுப் புடலாம்" என்றார் அய்யாக்கண்ணு.

"ஜமாய்க்கறதாம்! இவரு ஒரு பைசா குடுக்கப் போறதில்ல"  என்று நினைத்துக் கொண்டார் மருதமுத்து.

வேறு யாரும் எதுவும் பேசாமல் மௌனமாகத் தலையாட்டினர்.

"சரி. அப்ப நானும் விழாக்குழு உறுப்பினர்களும் நாளையிலேருந்து வசூலுக்குக் கெளம்பறோம்" என்று தர்மகர்த்தா சொல்ல, கூட்டம் முடிந்தது.

ரண்டு வாரங்கள் கழித்து நாச்சிமுத்துவும் மற்றவர்களும் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு வந்தார்கள். பொன்னம்பலம் ஊரிலேயே பெரிய பணக்காரர். எந்த நல்ல காரியம் என்றாலும் தாரளமாக உதவி செய்பவர்.

வந்தவர்களை உட்கார வைத்து, காப்பி கொடுத்து உபசரித்து விட்டு, பொன்னம்பலம் கேட்டார். "ஆமாம், வசூல் எல்லாம் எந்த மட்டிலே இருக்கு?"

"என்னத்தைச் சொல்றது? போன வருஷம் வசூல் ஆனதில் கால் பங்கு கூட வசூலாகலை. எப்பவும் தாரளமாகக்  கொடுக்கறவங்க கூட இந்த வருஷம் குறைவாத்தான் குடுத்தாங்க. எல்லாத்தையும் விடக் கொடுமை என்னன்னா, சில பேரு 'இவ்வளவு பணம் செலவழிச்சுத் திருவிழா நடத்தணுமா?'ன்னு கேக்கறாங்க. சில பேரு பிடிவாதமா பத்து ரூபாய் கூடக் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. தெய்வ நம்பிக்கையே குறைஞ்சுக்கிட்டு வருது."

"வழக்கம் போல நீங்கதான்  பெரிய அளவில உதவி செஞ்சு திருவிழாவைச் சிறப்பா நடத்தி வைக்கணும்" என்றார்  நமசிவாயம் என்ற விழாக்குழு உறுப்பினர்.

பொன்னம்பலம் கொஞ்சம் யோசித்து விட்டு, "இந்த வருஷம் வசூல் ஏன் இவ்வளவு குறைவுன்னு உங்களுக்குத் தெரியாதா?" என்றார்.

"தெரியாமல் என்ன? மழை பெய்யாததால விவசாயம் நடக்கல. ஊர்ல மத்த தொழில் செய்யறவங்களுக்கும் வருமானம் குறைஞ்சு போச்சு. யார் கிட்டேயும் காசு இல்லே. காசு இருந்தாலும் நம்ம தேவைக்கே போதாதபோது கோவில் திருவிழாவுக்குக் கொடுக்கணுமான்னு யோசிக்கிறாங்க!"

"எல்லோருக்கும் அதே நிலைமைதான். உங்களையும் என்னையும் சேர்த்துத்தான் சொல்றேன். ஊர்ல மழை பெய்யாமல் விவசாயம் குன்றிப் போனா, திருவிழாக்கள் நடத்தறதில மக்களுக்கு எப்படி உற்சாகம் இருக்கும்?"

"நீங்க என்ன சொல்ல வரீங்க?"

"இந்த வருஷம் திருவிழா வேண்டாம். வசூல் பண்ணின பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க. அடுத்த வருஷம் நல்லபடியா விழாவை நடத்திடலாம்" என்றார் பொன்னம்பலம்.

"விழா நடத்தலேன்னா சாமிக்குத்தம் ஆகி விடாதா?"

"ஏங்க, மழை பெய்ய வைக்க வேண்டியது சாமிதானே? மழை பெய்யலேன்னா அது சாமியோட குத்தம் இல்லையா? நான் கடவுளுக்கு எதிராப் பேசலே. நீங்க சாமிக் குத்தம்னு சொன்னீங்களே அதுக்காகச் சொன்னேன். நாம வருஷா வருஷம் விழா நடத்திக்கிட்டுத்தானே இருக்கோம்? இந்த வருஷம் நாம விழா நடத்தலேன்னா அதுக்கு என்ன காரணம்னு சாமிக்குத் தெரியாதா? மழை பெய்து மக்கள் வளமாக இருந்தால்தானே சாமிக்கு விழா எல்லாம் எடுக்க முடியும்? குடும்பத்தை நடத்தறத்துக்கே கஷ்டப்படுகிற மனுஷன் சாமிக்கு விழா எடுக்கறதைப் பத்தி எப்படி யோசிக்க முடியும்?"

"அப்ப நாங்க வரோம்" என்று எழுந்தார் தர்மகர்த்தா.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 2
வான் சிறப்பு
குறள் 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

பொருள்:
வானிலிருந்து பெய்ய வேண்டிய மழை பெய்யாவிட்டால் வான் உலகில் வாழும் தெய்வங்களுக்கு நடக்க வேண்டிய பூசைகள் கூட நடக்காது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

Sunday, June 28, 2015

17. கடல் நீர் வற்றும்?

"அப்பா, இன்னிக்கு ஸ்கூல்ல மழை எப்படிப் பெய்யுதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க" என்றான் ரிஷப்.

"எனக்குத் தெரியுமே! 'ஜோ'ன்னுதானே பெய்யும்?" என்றான் அவன் தந்தை முருகன்.

"குழந்தை, தான் ஸ்கூல்ல கத்துக்கிட்டதைச் சொல்ல வரான். அதைக் கேக்காம ஜோக் அடிக்கறீங்க! அவனுக்கு இன்ட்ரஸ்ட் இல்லாம போயிடாதா?" என்று கணவனைக் கடிந்து கொண்ட நிர்மலா, "நீ சொல்லுடா கண்ணா?" என்றாள் மகனிடம், ஆவலை வெளிக்காட்டி.

"வெய்யில் அடிக்குது இல்ல, அந்த சூட்டுல  கடல் தண்ணி எல்லாம் ஆவியாகி மேல போயி மேகமா மாறிடும். அந்த மேகம்தான் மழையாப் பெய்யுது" என்று விளக்கினான் ரிஷப்.

"வெரி குட்" என்று மகனை வாரி அணைத்துக் கொண்ட நிர்மலா, "உங்கப்பாவுக்கு இது தெரியாது. நீ சொன்னப்பறம்தான் தெரியும்!" என்றாள்.

ரிஷப் பொங்கி வரும் சிரிப்புடன் அப்பாவைப் பார்த்தான் "உனக்கு இதையெல்லாம் ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கலியா அப்பா?"

"நான் ஸ்கூலுக்கே போகலை. டைரக்டா காலேஜுக்குப் போயிட்டேன். உங்கம்மாதான் ஒவ்வொரு கிளாசிலேயும் ரெண்டு வருஷம் இருந்துட்டு வந்தா. அதனால உங்கம்மாவுக்கு இதெல்லாம் நல்லாத் தெரியும்" என்று சொல்லி மனைவியைப் பழி தீர்த்துக் கொண்ட முருகன், மனைவி ஏதும் சொல்வதற்குள் மகனிடம் திரும்பி, "ஆமாம் நான் ஒரு கேள்வி கேக்கறேன், பதில் சொல்லுவியா?" என்றான்.

"கேளு" என்றான் ரிஷப் உற்சாகமாக.

"கடலிலே இருந்து நிறையத் தண்ணி ஆவியாப் போயிடுது இல்ல, ஆனா கடல்ல தண்ணி குறையறதே இல்லையே அது ஏன்?"

"ஏன்னா அந்தத் தண்ணி எல்லாம்தான் மழையா கடலுக்கே திரும்பி வந்துடுதே!" என்றான் ரிஷப்.

"வெரி குட்" என்றான் முருகன். நிர்மலாவின் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

"ஏம்ப்பா, எனக்கு ஒரு டவுட். ஒரு வேளை ஆவியாப் போன தண்ணியெல்லாம் மழையா மாறாம அப்படியே மேகமா ஆகாயத்துலேயே இருந்துட்டா என்ன ஆகும்?"

"புத்திசாலிடா நீ! அப்படி ஆவியாப் போன தண்ணியெல்லாம் மழையாத் திரும்பி வரலேன்னா கடல்ல தண்ணி குறைஞ்சு, கடைசில கடலே  வத்திப் போனாலும் போயிடும்" என்றான் முருகன்.

"அப்படி எல்லாம் நடக்காது இல்ல?" என்றான் ரிஷப், அப்படி நடந்தால் தங்களால் பீச்சுக்குப் போக முடியாதே என்ற கவலையுடன்!

"நடக்காது. கவலைப் படாதே. ஆனா நாம ஒண்ணு புரிஞ்சுக்கணும். நாம எவ்வளவோ பணம் செலவழிக்கறோம். மறுபடி நமக்குப் பணம் வரலேன்னா என்ன ஆகும்"

"அப்பறம் நம்மளால எதுவும் வாங்க முடியாது."

"கரெக்ட். உங்கம்மாவால ஷாப்பிங் போக முடியாது! உலகத்தில எல்லாமே  போயிட்டுப் போயிட்டுத் திரும்பி வரணும். அப்பதான் உலகம் இயங்கும். நமக்கு மத்தவங்க உதவி செஞ்சா, நாமும் மத்தவங்களுக்கு உதவி செய்யணும். மத்தவங்க செய்யற உதவியை மட்டும் நாம வாங்கி வச்சுக்கிட்டு, நாம யாருக்கும் உதவி செய்யாம இருந்தா, நமக்கு உதவி கெடைக்கறது நின்னு போயிடும்" என்றான் முருகன்.

"பெரிய தத்துவத்தைச் சொல்லிட்டீங்க போங்க!" என்றாள் நிர்மலா கேலியாக.

"கடல் வத்திப் போனாலும் போகும். ஆனா நீ மட்டும் என்னைப் பாராட்டவே மாட்டே!" என்று போலியாகச் சலித்துக் கொண்டான் முருகன்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 2
வான் சிறப்பு
குறள் 17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

பொருள்:
கடலிலிருந்து நீரை எடுத்துகொண்ட மேகம் அந்த நீரை மழையாகப் பெய்யாமல் போனால், பரந்த கடல் கூடத் தன் நீர் வளத்தை இழந்து விடும்.




Saturday, June 27, 2015

16. புல் கூட முளைக்காது!

"ஏம்ப்பா? இது மானம் பாத்த பூமி. இங்கே மழை பெய்யறதே அபூர்வம். முக்காவாசி பேரு இந்த ஊரை விட்டுப் போயிட்டாங்க. 

"ஏதோ ஊர்ல ரெண்டு மூணு பொதுக்கெணறு இருக்கு. அதுங்கள்ள எண்பது அடி ஆழத்துல தண்ணி இருக்கு. அஞ்சு மைல் தொலைவிலே கடல் இருக்கறதுனால தண்ணி ஊறிக்கிட்டு இருக்கு. அதுவும் ரொம்பக் கடுப்பாத்தான் இருக்கும். 

"இந்த ஊர்ல இருக்கறவங்க கொஞ்சம் பேரும் வேற போக்கிடம் இல்லாமதான் இங்க இருக்காங்க.  பக்கத்து டவுனுக்குப் போய் ஏதோ வேலை, வியாபாரம்னு செஞ்சுக்கிட்டு பொழைப்பை நடத்திக்கிட்டிருக்காங்க. இந்த ஊர்ல வந்து போர்வெல் போட்டுத் தண்ணி எடுத்துத் தோட்டம் போடப் போறேங்கறியே!"

ஊர்ப் பெரியவர் விலாவாரியாகப் பேசியதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டான் சாமிநாதன்.

"நீங்களே சொல்றீங்க இல்ல, எண்பது அடில தண்ணி இருக்குன்னு? அப்ப போர் போட்டா தண்ணி வராதா? பக்கத்துல கடல் இருக்கறதுனால நிலத்துல தண்ணி ஊறிக்கிட்டே இருக்கும்னும் சொல்றீங்க! அப்படின்னா ஒரு தடவை போர் போட்டா தண்ணி எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கும் இல்லே? 

"இங்கே இருக்கறவங்க யாரும் பணம் செலவழிச்சு போர் போட முயற்சி பண்ணல. தங்களோட வீட்டுல கூடக் கெணறு வெட்டாம, பொதுக் கெணத்திலேயே ராட்டினம் போட்டு, அங்கியே குளிச்சு, துணி தோச்சு, வீட்டுத் தேவைக்கு ரெண்டு மூணு கொடம் தண்ணி எடுத்துக்கிட்டுப் போறாங்க. 

"யாருக்கும் பணம் செலவழிச்சு போர் போட வசதி இல்லையோ, மனசு இல்லையோ தெரியலே! நான் இந்த ஊர்க்காரன். நான் துபாய்க்குப் போய்ச் சம்பாதிக்க ஆரம்பிச்சதும், என் குடும்பத்துல எல்லோரும் வேற ஊருக்குப் போயிட்டாங்க. இப்ப நான் துபாயிலேருந்து திரும்பி வந்திருக்கேன். 

"நானும் வேற ஊர்ல செட்டில் ஆகியிருக்கலாம். இங்க எனக்குக் கொஞ்சம் நெலம் இருக்கறதுனால அதுல தோட்டம் போட்டு ஏதாவது பயிர் செய்யலாம்னு பாக்கறேன். அப்படிச் செஞ்சா, இந்த ஊரே மாறிடும். இன்னும் ஆறு மாசம் கழிச்சுப் பாருங்க இந்த ஊரு எப்படி இருக்கப் போவுதுன்னு!" என்று சொல்லி விடை பெற்றான் சாமிநாதன்.

'ம்ம். நீ துபாயில சம்பாதிச்சதையெல்லாம் தண்ணியில விடணும்னு விதி இருந்தா அதை யார் தடுக்க முடியும்?' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார் பெரியவர்.

அடுத்த சில நாட்களில் சாமிநாதன் சுறுசுறுப்பாக வேலைகளைத் தொடங்கினான். 

முதலில் ஒரு வாட்டர் டிவைனரைத் தருவித்துத் தன் நிலத்தில் எந்த இடத்தில் போர் போட்டால் சரியாக இருக்கும் என்று தேர்வு செய்தான். 

பிறகு போர் இயந்திரம் பொருத்தப்பட்ட லாரியும், ஆட்களும் வந்து சேர்ந்தனர். அத்துடன் அவர்கள் குடிக்கப் பல மினரல் வாட்டர் குடுவைகளும் வந்து இறங்கின!

போர் இயந்திரம் ஏக இரைச்சல் போட்டுக்கொண்டு மூன்று நாட்கள் துளையிட்டபின் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் பீய்ச்சிக்கொண்டு வெளி வந்தது. சாமிநாதன் அனைவருக்கும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடினான். 

நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஊர்ப்பெரியவர் கூட 'ஏது, பய சொன்னதைச் செஞ்சுடுவான் போல இருக்கே!' என்று நினைத்தார்.

அடுத்த நாளே பம்ப்செட்டை நிறுவிக் குழாய்களை அமைத்துத் தற்காலிக மின்சார இணைப்பில் மோட்டாரை இயங்கச் செய்தான். 

குழாயிலிருந்து தண்ணீர் கொட்டியதும் எல்லோரும் கைகொட்டிக் கொண்டாடினர். தண்ணீரின் சுவை கூட அவ்வளவு மோசமாக இல்லை.

ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே தண்ணீர் நின்று விட்டது. மறுபடியும் மோட்டார் போட்டபோது தண்ணீர் வரவில்லை. 

மினரல் வாட்டர் குடுவைகளிலிருந்து தண்ணீர் ஊற்றி மறுபடி முயற்சி செய்தபோது மீண்டும் தண்ணீர் வந்தது. அடுத்த சில நிமிடங்களில் நின்று விட்டது.

சாமிநாதன் கவலையுடன் போர் போட்டவர்களைப் பார்த்தான். 

அவர்களின் தலைவன் தயக்கத்துடன், "சார். நெலத்தில தண்ணி கொஞ்சம்தான் இருக்கும் போல இருக்கு. மறுபடியும் தண்ணி ஊறினால்தான் வரும்" என்றான்.

"எப்ப ஊறும்?" என்றான் சாமிநாதன்.

"நாளைக்கு முயற்சி பண்ணிப் பாருங்க!" என்றான் போர் போட்டவன். 

"பாருங்க!" என்று அவன் சொன்னதிலிருந்து அவன் வேலை முடிந்து விட்டது என்பதும், அடுத்த நாள் அவன் வர மாட்டான் என்பதும் புரிந்தது.

சாமிநாதன் யோசனை செய்யத் துவங்கியபோது ஊர் மக்கள் சிலர் ஓட்டமாக அங்கே வந்தனர்.

 "யோவ், என்ன வேலை ஐயா பண்ணி இருக்கீங்க? எல்லாக் கெணத்திலேயும் தண்ணி கீழ எறங்கிடுச்சு. ராட்டினத்துல இழுத்தா கால் கொடம் கூட வரலே! மறுபடி தண்ணி ஊற எவ்வளவு நாள் ஆகுமோ தெரியல்லியே!" என்றனர் கோபத்துடன்.

நிலைமையைப் புரிந்து கொண்ட போர் ஆசாமி "சார், முதலாளி பாக்கி பணத்தை வாங்கிக்கிட்டு வரச் சொன்னாரு. நாங்க கெளம்பணும். செக் குடுத்தாலும் பரவாயில்லை" என்றான்.

"தம்பி, மழை பெஞ்சாத்தான் தண்ணி! மழை பெய்யாத ஊரில இது மாதிரி முயற்சி எல்லாம் வேணாம்னு நான் அப்பவே சொன்னேன். இப்ப கெணறுகள்ள இருந்த தண்ணியும் போயிடுச்சு. எங்களுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?" என்றார் ஊர்ப் பெரியவர்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 2
வான் சிறப்பு
குறள் 16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

பொருள்:
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலொழிய இந்த மண்ணில் ஒரு புல் கூட முளைக்காது.


Friday, June 26, 2015

15. ஆவதும் மழையாலே!

அந்த ஓட்டு வீட்டுக்குள் ஆங்காங்கே ஒழுகிக் கொண்டிருந்த மழை நீரைப் பாத்திரங்களை வைத்துத் தரையில் வழியாமல் தடுக்க முயன்று கொண்டிருந்தாள் பார்வதி. 

அவள் முயற்சி படுதோல்வி அடைந்து விட்டதைக் கண்டு தரையில் ஓடிக் கொண்டிருந்த நீர் எள்ளி நகையாடியது.

தன் பக்கத்தில் மழை நீர் ஓடுவதைப் பொருட்படுத்தாமல் மண்தரையில் மல்லாந்து படுத்தபடியே உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்தான் சிவக்கொழுந்து.

"ஏன்யா, நான் ஒருத்தி இங்க மழைத்தண்ணி ஒழுகுதேன்னு தவிச்சுக்கிட்டிருக்கேன். நீ பாட்டுக்கு மல்லாக்கப் படுத்துக்கிட்டு உல்லாசமாப் பாடிக்கிட்டிருக்கே?" என்றாள் பார்வதி எரிச்சலுடன்.

"ஒழுகினா ஒழுகிட்டுப் போவட்டும் புள்ள. இப்ப அதுக்கு என்ன பண்ண முடியும்? மழை நிக்கட்டும். நானே ஓடு மாத்தி ஒழுகலை நிறுத்திடறேன்" என்றான் சிவக்கொழுந்து சிறிதும் அசையாமல்.

"ரெண்டு வருசமா மழை இல்லையே, அப்ப ஓடு மாத்தி இருக்கலாம் இல்லே?"

"ரெண்டு வருஷமா ஒழுகலியே? அப்புறம் எதுக்கு ஓடு மாத்தணும்?"

பார்வதி தன்னால் வீட்டுக்குள் மழை நீர் ஒடுவதைத் தடுக்க முடியாது என்று உணர்ந்து, கணவனின் தலைமாட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு வெற்றிலைப் பையைப் பிரித்தாள்.

"சும்மா பாக்கு திங்காதே! சோகை புடிக்கும்" என்றான் சிவக்கொழுந்து.

"சோகை புடிச்சவங்களுக்குத்தான் அடிக்கடி பாக்கு போடத் தோணுமாம்."

"யார் சொன்னது உனக்கு?"

"டி.வியிலே சொன்னாங்க."

"டிவியிலே இதைத்தான் பாப்பியா?"

"வேறு எதைப் பாக்கணும்? ஒனக்கு வேணும்னா 'வயலும் வாழ்வும்' பாரு. அந்த நேரத்தில நான் டிவி பாக்காம இருக்கேன்!"

"ரெண்டு வருஷமா மழை இல்ல. ஆத்துல தண்ணி இல்ல. பம்ப் செட் போட்டுப் பயிர் செய்யறத்துக்கும் நமக்கு வசதி இல்ல. வெவசாயமே இல்லேங்கறப்ப 'வயலும் வாழ்வும்' பாத்து என்ன பிரயோசனம்?"

"அப்ப நான் மட்டும் வீட்டுல ஒக்காந்து என்ன செய்யறது? ஒடம்பைப் பத்தியும் வியாதிகளைப் பத்தியும் வர நிகழ்ச்சியைக்கூடப் பாக்கக் கூடாதா?"

"சரி சரி கோவிச்சுக்காதே. நான் மழை பெய்யுதேங்கற சந்தோஷத்தில இருக்கேன். வீடு  ஒழுகுதேன்னு இப்ப கவலைப்பட வேண்டாம். ரெண்டு நாள்ள மழை நின்னதும் அதெல்லாம் சரி பண்ணிடலாம். ரெண்டு வருஷமா மழை பெய்யாம எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு நெனச்சுப் பாரு."

"எனக்குத் தெரியாதா, மழை பெய்யாதப்ப எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு?
நம்ம நெலத்துலேயும் பயிர் பண்ண முடியல. ஊர்ல நாலஞ்சு பேருதான் பம்ப்பு செட்டை ஓட்டி வெவசாயம் பண்ணினதால, மீதி எல்லோரும் கூலி வேலைக்கு வந்துட்டதால கூலி வேலையும் சில நாள்தான் கெடைக்கும்னு ஆயிப் போச்சு. 

"எப்பவுமே வராத அளவுக்கு சாப்பாட்டுக்கே கஷ்டம் வந்து, புள்ளைங்களும் நம்மளோடு சேந்து பட்டினி கெடக்க வேண்டாமேன்னுட்டு அதுங்களை எங்க ஆத்தா வீட்டுக்கு அனுப்பி.. புள்ளைங்க மொகத்தைப் பாத்தே மாசக்கணக்குல ஆச்சு. அதுங்களும் பாவம் நம்மளைப் பாக்காம ஏங்கிக் கிட்டு இருக்குங்க."

பார்வதியின் கண்களில் தண்ணீர் வந்து விட்டது.

"அழாதே பார்வதி. நம்ம கஷ்டம் எல்லாம்தான் தீரப் போகுதே. இன்னும் ரெண்டு நாள்ள மழை நின்னுடும்னு சொல்றாங்க. உடனேயே பெருந்தனக்காரங்கள்ளாம் அவங்க நெலத்தில உழவு வேலையை ஆரம்பிச்சுடுவாங்க. ஒரு பத்து நாளைக்குக் கூலி வேல கெடச்சாப் போதும். அப்புறம் நாமளும் நம்ம நெலத்துல வேலையை ஆரம்பிச்சுடலாம்."

"அது இருக்கட்டும். மொதல்ல ஊருக்குப் போயிப் புள்ளைங்களைக் கூட்டிக்கிட்டு வந்துடு. வேலைக்குப் போவ  ஆரம்பிச்சுட்டேன்னா அப்புறம் போவ முடியாது."

"சரி. நாளைக்கே போயி அழைச்சுட்டு வந்துடறேன்."

"மழை நிக்கறத்துக்குள்ளேயா?"

"மழை நிக்காட்டி என்ன? மழை நமக்கு நல்லதுதானே பண்ணிக்கிட்டிருக்கு! மழையில நனைஞ்சா எனக்கு ஒண்ணும் ஆயிடாது. புள்ளைங்களை அழைச்சுக்கிட்டுக் கெளம்பறபோது மழை நின்னிருக்கும்."

"என்ன மழையோ! ரெண்டு வருஷமா பெய்யாம நம்மளை வாட்டி எடுத்துச்சு. இப்ப நல்லாப் பேஞ்சு நம்ம வயத்தில பாலை வாத்திருக்கு!" என்று கையெடுத்துக் கும்பிட்டு மழையை வணங்கினாள் பார்வதி.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 2
வான் சிறப்பு
குறள் 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பொருள்:
பெய்யாமல் உலக மக்களின் வாழ்க்கையைக் கெடுப்பதும் மழைதான். மழை பொய்த்ததால் வளம் குன்றித் தவிக்கும் மக்களுக்கு ஆதரவாகப் பெய்வதும் மழைதான்!

Thursday, June 25, 2015

14. கடையில் வாங்கிய அரிசி

கோவிந்தன் இப்போதெல்லாம் அதிகம் பார்ப்பது வானத்தைத்தான். 

வீட்டுக்கு வராத பிள்ளையை எதிர் நோக்கி ஒரு தாய் அடிக்கடி வாசலில் வந்து நின்று தெருக்கோடியைப் பார்ப்பது போல் அடிக்கடி வானத்தைப் பார்ப்பது கோவிந்தனுக்கு ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகி விட்டது.

"இப்படியே மானத்தைப் பாத்துக்கிட்டிருந்தீங்கன்னா தலையே மேல திரும்பிடப் போவுது!" என்று அவன் மனைவி அன்னம் சில சமயம் சொன்னாலும் அவனது கவலையில் அவளுக்கும் பங்கு உண்டு. 

மழை பெய்யாதது அவளையும்தானே பாதித்திருக்கிறது?

"டி வியில மழை வரும்னு ஏதாவது சொன்னாங்களா?" என்றான்  கோவிந்தன், என்ன பதில் வரும் என்று தெரிந்தும்.

"சொன்னாங்க. பம்பாயில கொட்டு கொட்டுன்னு கொட்டுதாம். ஆனா நம்ம ஊருக்கு வர இருந்த புயல் ஆந்திராவுக்குப் போயிடுச்சாம்!" என்றாள் அன்னம் ஆற்றாமையுடன்.

மழை பொய்ப்பது இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டு. விவசாயத்தையே நம்பி இருக்கும் அவனைப் போன்றவர்களுக்கு வானம் பொய்த்து விட்டால் வாழ்க்கையே இல்லையே!

"சாப்பிட வாங்க" என்று மனைவி அழைத்தபோது கோவிந்தனுக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. 

தன் வயலில் தானே உழுது, பயிர் செய்து, அறுவடை செய்த நெல்லில் பெரும்பகுதியை விற்று விட்டு, தனக்கென்று வைத்துக் கொண்ட நெல்லைக் குதிரில் சேமித்து அவ்வப்போது அரிசி மில்லில் அரைத்து அந்த அரிசியில் உண்ட காலம் போய், டவுனுக்குப் போய் அரிசிக்கடையில் அரிசி வாங்கி, பேருந்தில் ஊருக்குக் கொண்டு வந்து அந்த அரிசியில் உணவு சமைத்துச் சாப்பிடும் கொடுமை!

அவன் வேண்டா வெறுப்பாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அன்னம் சொன்னாள்: 

"உங்களுக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்? நெலத்தைத்தான் ரியல் எஸ்டேட்காரங்க நல்ல வெலைக்குக் கேக்கிறாங்களே? பேசாம நெலத்தை வித்துட்டுப் பணத்தை பாங்கில போட்டுட்டு வர வட்டியில நம்ம ரெண்டு பேரும் காலத்தை ஓட்ட முடியாதா? பையன் வேற கொஞ்சம் பணம் அனுப்பறான்."

"உழவன் நெலத்தை வித்துட்டு வட்டிப் பணத்துல சாப்பிடறதுன்னு ஆரம்பிச்சா உலகம் என்னத்துக்கு ஆகும்?"

"ஆமாம்! நீங்க ஒத்தர்தான் உழவரா? நம்ம ஊரிலேயே வெவசாயம் பண்ணறவங்க எவ்வளவோ பேரு நெலத்தை வித்துட்டு நிம்மதியா இருக்காங்க!"

கோவிந்தன் பேசாமல் சாப்பிட்டு முடித்தான். சாப்பாடு இறங்குவதே கஷ்டமாக இருந்தது.

சாப்பிட்டு விட்டுக் கை கழுவும்போது ஒரு எண்ணம் தோன்றியது. 

நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் இப்படிக் குற்ற உணர்ச்சியோடு அரிசி வாங்கிச் சாப்பிடுவதை விட, நிலத்தை விற்று விட்டால், அரிசி வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆகி விடுமே!

கை கழுவியபின், கோவிந்தன் அன்னத்திடம் சொன்னான். 

"மறுபடி அந்த ரியல் எஸ்டேட்காரங்க வந்தா நிலத்தை விற்க சம்மதம்னு சொல்லிடப் போறேன்."

அன்னம் நம்ப முடியாமல் தன் கணவனைப் பார்த்தாள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 2
வான் சிறப்பு
குறள் 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

பொருள்:
உழவர்கள் வருவாய் ஈட்ட உதவும்  மழை வளம் குறைந்து விட்டால், உழவர்கள் தங்கள் உழவுத் தொழிலைக் கைவிட்டு விடுவார்கள்.


Wednesday, June 24, 2015

13. அம்மாவின் மீது அக்கறை


"என்ன அரிசி விலை இவ்வளவு ஏறிடுச்சு?" என்று அதிர்ச்சியுடன் கேட்டார் செல்வராஜ்.

"என்னங்க செய்யறது? நாட்டில எங்கியுமே சரியா மழை பெய்யல. அரிசி உற்பத்தி கொறைஞ்சு போச்சு. விலை ஏறாம என்ன செய்யும்?" என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரும் பொருளாதார நிபுணர் போல் விளக்கினார் கடைக்காரர். 

செல்வராஜ் முணுமுணுத்தபடியே அரிசியை வாங்கிச் சென்றார்.

ஆனால் செல்வராஜ் போன்ற சிலர் போல் எல்லோராலும் விலை கொடுத்து அரிசி வாங்க முடியவில்லை. 

உதாரணத்துக்கு, கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்யும் சண்முகத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இப்போதெல்லாம் சண்முகம் வீட்டில் அரிசிச் சோறு என்பது மின்சாரம் போல் அவ்வப்போது வந்து போகும் சமாசாரம் ஆகி விட்டது.

அரிசி உற்பத்திக் குறைவு அரசாங்கத்தின் உணவுப் பொருள் கையிருப்பையும் பாதித்து விட்டது.

ரேஷன் கார்டுகளுக்கு வழக்கம் போல் அரிசி வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பே பிரச்னை இருப்பதைச் சுட்டிக் காட்டியது.

சில மாதங்கள் ரேஷன் அரிசி வினியோகம் தாமதமாகவும், சில மாதங்களில் அடியோடு இல்லாமலும் இருந்தது.

ரேஷன் அரிசி வழங்கப்பட்டாலும் பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு அது மாதம் முழுவதற்கும் போதாது என்பதால் மாதத்தின் கடைசி வாரத்துக்கான அரிசியை வெளிச் சந்தையில்தான் வாங்க வேண்டி இருந்தது, 

கடும் விலை உயர்வினால் வெளிச் சந்தையில் அரிசி வாங்குவது சண்முகத்துக்குப் பெரும்பாலும் இயலாத ஒன்றாக ஆகி விட்டது.

அவன் மனைவி முத்தழகுதான் பாவம் தினமும் குழந்தைகளைச் சமாளிக்க வேண்டி இருந்தது.

அன்று மாலை பள்ளியிலிருந்து வந்ததும் அவள் மகன் முருகேஷும், மகள் திவ்யாவும் கேட்ட ஒரே கேள்வி, "இன்னைக்காவது, ராத்திரி சோறு உண்டா?" என்பதுதான்.

அவர்கள் கேள்விக்கு பதில் சொல்லாமல், முத்தழகு அவர்களிடம் கேட்டாள் "இன்னிக்கு ஸ்கூல்ல முட்டை போட்டாங்களா?"

"போட்டாங்க. ஆனா முட்டை அழுகலா இருந்ததால எனக்குச் சாப்பிடப் புடிக்கலே" என்றாள் திவ்யா. "அது சரி. ராத்திரி அரிசிச் சோறு உண்டா இல்லையா?" என்றாள் விடாமல்.

"இல்லடி கண்ணு. இன்னிக்கும் அரிசி கெடைக்கல. உங்கப்பா  நாளைக்குக் காலையில கோயம்பேடுலேர்ந்து வரப்ப அரிசி வாங்கிட்டு வரேன்னு சொல்லி இருக்காரு" என்றாள் முத்தழகு.

"அப்ப ராத்திரிக்கு என்ன?" என்றான் முருகேஷ்.

"ரொட்டி வாங்கித் தரேன்" என்றாள் முத்தழகு.

"அய்ய! அந்தக் காஞ்ச ரொட்டிய யாரு திம்பாங்க? பரவாயில்ல. நாளைக்கு மதியம்தான் ஸ்கூல்ல அரிசிச் சோறு போடுவாங்களே. அதுவரை பசி தாங்கிக்கிறோம்" என்றாள் திவ்யா.

"அது சரிம்மா. அப்பா வேலை செய்யற இடத்திலியே எதாவது சாப்பிட்டுக்குவாரு. எங்களுக்கு மதிய உணவு இருக்கு. நீ என்ன பண்ணுவ?" என்று கேட்டபடி தாயின் கையைப் பாசத்துடன் பற்றினான் முருகேஷ்.

சாப்பாடு இல்லை என்பதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மகள், தன் பசியைப் பற்றிக் கவலைப் படாமல் அம்மா பட்டினி கிடக்கிறாளே என்று ஏங்கும் மகன், இவர்களை நினைத்தபோது, முத்தழகுக்கு வயிறு நிறைந்து விட்டது போல் இருந்தது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 2
வான் சிறப்பு
குறள் 13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

பொருள்:
நீர் சூழ்ந்த உலகம் இது  என்றாலும், வானம் பொய்த்து விட்டால், உலகின் உள்ளிருந்து பசிக்கொடுமை (மக்களை) வாட்டும்.

Tuesday, June 23, 2015

12. மழையே உணவு

கட்டிட வேலையை முடித்து விட்டு வேலாயி வீட்டுக்கு வரும்போது இருட்டி விட்டது. 

வீடு என்றால் வாசல், ஜன்னல், அறைகள் போன்ற அமைப்புகளைக் கொண்ட கட்டிடம் என்று நினைத்து விடாதீர்கள். 

பல வீடுகளின் கட்டிடப் பணிகளில் பணியாற்றியுள்ள வேலாயிக்கு வீடு என்பது நடைபாதையில் ஒரு சிறிய இடம்தான்.

சில சமயம், பாதி கட்டப்பட்ட வீட்டில் காவல் காக்கும் பொறுப்பு அவள் குடும்பத்துக்குக் கிடைக்கும். அப்போது மட்டும் வீட்டின்  வெளிச் சுவருக்கு அருகே ஆஸ்பெஸ்டாஸ் கூரையாலும் மரத் தடுப்புகளாலும் ஆன ஒரு வீடு அவர்களுக்குக் கிடைக்கும். அவள் குழந்தைகளுக்கும், மழையிலிருந்தும் குளிரிலிருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும். குழாய்த் தண்ணீர், கழிப்பறைகள் போன்ற 'ஆடம்பரங்களையும்' அனுபவிக்கலாம்.

அவளது தற்போதைய வீடு நடைபாதையில்தான் இருந்தது. வேறு சில கூலித் தொழிலாளர்களும் பக்கத்திலேயே குடி இருந்தனர்.

வேலாயியின் கணவன் வடிவேலுவும் கட்டிடத் தொழிலாளிதான். ஆனால் அவனுக்கு தினமும் வேலை செய்த அலுப்பு நீங்க 'சக்தி பானம்' அருந்த வேண்டும். 

'ஆண்களுக்கு மட்டும்தான் உடல் அலுப்பு வருமா?' என்று வேலாயிக்குத் தோன்றும். ஆனால் அவள் அப்படிக் கேட்டதில்லை. கேட்டு விட்டு, அடி வாங்கிக்கொண்டு உடல் அலுப்பை மேலும் அதிகமாக்கிக் கொள்ள அவள் தயாராயில்லை!

அவளைப் போன்ற பெண்கள் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து, நீர், விறகு போன்ற சாதனங்களைச் சேகரித்து, சமையல் செய்து அனைவருக்கும் பரிமாறி, மீதம் இருப்பதை உண்டு விட்டுப் பாத்திரங்களை சிறிதளவு நீரில் திறமையாகக் கழுவி வைத்து விட்டுத் தூங்க வேண்டும். 

உடல் அலுப்பு என்ற ஒன்றைப் பற்றி அவளைப் போன்ற பெண்கள் எப்படிப் பேச முடியும்?

அவள் கணவனின் தினக்கூலி அவன் உடல் அலுப்பைப் போக்கிக் கொள்ளவே சரியாகி விடும் என்பதால் அவளுடைய கூலியில்தான் குடும்பம் நடக்க வேண்டும்.

வேலாயி வீட்டுக்கு வந்தபோது அவளுடைய நான்கு குழந்தைகளில் மூன்று பேர் விளையாடிக் கொண்டிருந்தனர். கடைசிக் குழந்தை கைக்குழந்தை. எப்போதும் அவளிடம்தான் இருக்கும்.

காலையில் குடித்த கஞ்சிக்குப் பிறகு வேறு எதையும் உண்ணாத நிலையிலும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்ததும் ஒரு புறம் அவளுக்கு நிம்மதியாக இருந்தாலும், மறுபுறம் ஓவென்று அழலாம் போல் தோன்றியது.

'வீட்டில்' மளிகைச் சாமான்களின் இருப்பைப் பார்த்தபோது வேலாயிக்கு அழுகை வந்து விட்டது. '

இந்த அரிசி எல்லோருக்கும் போதாதே!' நடைபாதைவாசி என்பதால் அவர்கள் குடும்பத்துக்கு ரேஷன் கார்டு கிடையாது. ரேஷன் கடையில் திருட்டு அரிசி நாளைக்குத்தான் வாங்க முடியும்.

'என்ன செய்வது? இருப்பதை வைத்துச் சமாளிக்க வேண்டியதுதான்.'

காலையில் குழாயடியில் வரிசையில் நின்று பிடித்து வைத்திருந்த ஒரு குடம் நீரில் பசி தீர்த்துக் கொள்வதற்காக அவள் குழந்தைகள் குடித்தது போகப் பாதிக் குடத்துக்கு மேல் மீதி இருந்தது. 'நல்ல வேளை தண்ணீராவது இருக்கிறதே. தண்ணீர்தான் கடவுள்!'

சோறு வடித்துக் குழந்தைகளுக்குப் பரிமாறுமுன் சிறிது மோரையும் நிறைய நீரையும் கலந்தாள்.

குழந்தைகள் தங்கள் அலுமினியத் தட்டுகளில் பரிமாறப்பட்ட சோற்றைக் கையால் எடுத்துச் சாப்பிட முடியாமல் அப்படியே உறிஞ்சிக் குடித்தனர். சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விட்ட உற்சாகத்தில் மறுபடியும் விளையாடப் போய் விட்டனர். 

தண்ணீரின் துணையால் இப்போது வயிறு நிரம்பி விட்டது. இரவில் பசி எடுக்கும். அப்போது எழுந்து தண்ணீர் குடித்து விட்டுப் படுத்துக் கொண்டு விடுவார்கள்.

கலயத்தில் சோறு கொஞ்சம்தான் மீதி இருந்தது. குடித்து விட்டுத் தாமதமாக வரும் கணவனுக்குக் கண்டிப்பாகச் சோறு வேண்டும். எனவே இருந்த சோற்றைக் கணவனுக்கு வைத்து விட்டு வேலாயி தண்ணீரைக் குடித்துப் பசியைத் தற்காலிகமாகப் போக்கிக் கொண்டாள்.

கைக்குழந்தைக்கு மட்டும் பால் கொடுக்க வேண்டும். பால் வைத்திருந்த பாத்திரத்தைப் பார்த்தாள். பாலும் குறைவாகத்தான் இருந்தது. கொஞ்சம் நீரை ஊற்றினால்தான் ஒரு பாட்டில் வரும். 

பாலில் சிறிது. நீரை ஊற்றிச் சுட வைத்தாள். நல்லவேளை. வீட்டில் கொஞ்சம் சர்க்கரை இருந்தது. சர்க்கரையைக் கொஞ்சம் கூடுதலாகப் போட்டால் நீர்த்த பால் கூட ருசிக்கும் குழந்தைக்கு!

குழந்தையை மடியில் படுக்க வைத்து, பாட்டிலில் இருந்த பாலைக் கொடுத்தாள். மிதமான சூட்டுடனும், மிகையான நீருடனும் இருந்த பாலைக் குழந்தை ரசித்து அருந்தியது. பாட்டில் காலியானதும், குழந்தை திருப்தியாகக் கொஞ்சம் பாலை வாயிலிருந்து வழிய விட்டுத் தாயைப் பார்த்துச் சிரித்தது. 

அந்தச் சிரிப்பில் வேலாயி தன் அத்தனை வருத்தங்களையும் மறந்தாள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 2
வான் சிறப்பு
குறள் 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

பொருள்:
உண்பவர்களுக்கு உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு, அவர்களுக்குத் தானே உணவாகவும் ஆகிறது மழை.


Monday, June 22, 2015

11. மழையே அமுதம்


(மகாகவி பாரதியார் ஒரு பாத்திரமாக வரும் இந்தக் கதை ஒரு கற்பனை என்று கூறத் தேவையில்லை என்று நினைக்கிறேன்!)

மழைக்கு ஒதுங்கி சிலர் ஒரு மண்டபத்தில் நின்று கொண்டிருந்தனர். நின்று கொண்டிருந்தவர்களில் பாரதியாரும் ஒருவர்.

பாரதியார் உற்சாகமாக, உரத்த குரலில் தாம் இயற்றிய பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்.

"வீர சுதந்திரம் வேண்டி நின்றார் 
       பின்பு வேறொன்று கொள்வரோ? 
என்றும் ஆரமுதுண்ண ஆசை கொண்டார் 
        கள்ளில் அறிவைச் செலுத்துவரோ?"

அவர் அருகில் இருந்த ஒரு இளைஞன், பாரதியாரிடம் கேட்டான். "ஏன் கவிஞரே, உங்கள் பாட்டின் முதல் அடிக்கு எனக்கு அர்த்தம் புரிகிறது. இரண்டாவது அடிக்கு அர்த்தம் புரியவில்லையே!" என்றான்.

"என்ன புரியவில்லை?" என்றார் பாரதியார்.

"ஆரமுது என்று குறிப்பிடுகிறீர்களே அது என்ன?"

"அருமையான சுவையுடைய அமுது."

"ஓ! அப்படியானால் அமுது உண்ண வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் கள் குடிக்க மாட்டார்கள். அப்படித்தானே?"

"கள் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களுக்குத் தோன்றாது" என்ற பாரதியார், தன் மூக்கை ஒரு முறை சுளித்து விட்டு, "ஆமாம். உன்னிடமிருந்து ஏதோ வாடை வருகிறதே? நீ கள் குடித்திருக்கிறாயா?" என்றார்.

"ஆமாம். கவிஞரே" என்றான் இளைஞன்.

"குடிப் பழக்கத்தை விட்டு விடு தம்பி. அது உன்னையே குடித்து விடும். உன் குடியையும் கெடுத்து விடும்" என்றார் பாரதியார்.

"ஆமாம் கவிஞரே, உண்மையாகவே, அமுதம் குடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தால், கள் குடிக்கும் ஆசை போய் விடுமா?"

"அதில் என்ன சந்தேகம்?"

"அமுதம் எப்படி இருக்கும் என்றே எனக்குத் தெரியாதே? அப்புறம் எப்படி அமுதம் குடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வரும்?"

"உனக்குக் காதலி இருக்கிறாளா?"

"இருக்கிறாள்" என்றான் இளைஞன் சற்றே வெட்கத்துடன்.

"அவளை முத்தமிட வேண்டும் என்று உனக்கு ஆசை உண்டா?"

பாரதியார் உரத்த குரலில் கேட்ட இந்தக் கேள்வியால் சற்றே நெளிந்த அந்த இளைஞன், "உண்டு" என்றான்.

"இதற்கு முன்னால் வேறு எந்தப் பெண்ணையாவது முத்தமிட்டிருக்கிறாயா?" என்றார் பாரதியார்.

"அது எப்படி?" என்று ஆரம்பித்த இளைஞன் "இல்லை" என்றான்.

"முத்தமிடும் அனுபவம் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே உன் காதலியை முத்தமிட ஆசைப்படுகிறாயே, அது எப்படி?" என்று மடக்கினார் பாரதியார்.

"கவிஞரே! உங்கள் காதைக் கொடுங்கள். உங்களுக்கு மட்டும் கேட்கும்படி ரகசியமாகச் சொல்லுகிறேன்" என்ற இளைஞன் "முத்தமிடும் அனுபவம் எப்படி இருக்கும் என்று உங்கள் பாடலிலிருந்துதான் தெரிந்து கொண்டேன். அதுவும் கள் குடிப்பதுபோல்தான் இருக்கும்!" என்றான்.

"என்னது?" என்றார் பாரதியார் அதிர்ச்சியுடன்.

இப்போது இளைஞன் உரத்த குரலில், "'கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி!' என்று நீங்கள்தானே பாடியிருக்கிறீர்கள்?" என்று பாடி விட்டு, "அப்படியானால் உங்களுக்கும் கள் குடித்த அனுபவம் இருந்திருக்க வேண்டுமே!" என்றான்.

"முட்டாள்! அது குழந்தையைப் பற்றி எழுதிய பாடல். நான் ஒன்றை நினைத்து எழுதினால் நீங்கள் வேறுவிதமாகப் புரிந்து கொள்கிறீர்கள்!" என்ற பாரதியார், "உனக்கு அமுதின் சுவை எப்படி இருக்க வேண்டும் என்று தெரிய வேண்டும். அவ்வளவுதானே? இங்கே வா!" என்று அவன் கையைப் பிடித்து இழுத்தபடித் தெருவில் இறங்கினார். 

தெருவின் நடுவில் நின்று இளைஞனின் முகத்தைத் தன் கையால் உயர்த்தி வானத்தை நோக்கித் திருப்பினார். அவன் வாயை அழுத்தித் திறக்க வைத்தார்.

அவன் கொஞ்சம் மழைநீரைக் குடித்ததும் அவனை விடுவித்தார். 

"இப்போது நீ குடித்தாயே, இதுதான் அமுதம்! எப்படி என்கிறாயா? அமுதம் வானுலகத்தில்தானே இருக்கிறது? மழையும் வானிலிருந்துதானே பெய்கிறது? இந்தத் தூய நீர்தான் அமுதம். தேவர்கள் உயிர் வாழ அமுதம் தேவை. மனிதர்கள் உயிர் வாழ நீர் தேவை. இதை நான் சொல்லவில்லை. என் முப்பாட்டன் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்" என்று ஆவேசமாகக் கூவிய  பாரதியார்,

"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், 
        வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை: 
         உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை"

என்று பாடியபடியே அந்த மழையில் ஆனந்த நடனம் ஆடத் துவங்கினார்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 2
வான் சிறப்பு
குறள் 11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

பொருள்:
உலகத்தில் உள்ள உயிர்களை எல்லாம் வாழ வைப்பதால், மழையை அமிர்தம் என்றே கருத வேண்டும். 
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



















Sunday, June 21, 2015

10. வாழ்க்கைப் பயணம்

ஒரு இளைஞன் ஒரு ஞானியிடம் கேட்டான் "மனிதர்களுக்குக் கடவுளின் துணை எதற்கு? கடவுளின் துணை இல்லாமல் மனிதனால் வாழ முடியாதா?"

ஞானி கேட்டார் "மோட்டார் சைக்கிள் ஒட்டத் தெரியுமா உனக்கு?"

"ஓ! பிரமாதமாக ஓட்டுவேன்." 

"ஹெல்மெட் அணிந்து கொள்வாயா?"

"ஆமாம். அது கட்டாயமாயிற்றே?"

"கட்டாயம் இல்லாவிட்டால் அணிய மாட்டாயா?"

"இல்லை. பாதுகாப்புக்கு அது அவசியம்."

"காரில் போகும்போது ஏன் சீட் பெல்ட் அணிந்து கொள்கிறோம்?"

"அதுவும் பாதுகாப்புக்காகத்தான். விபத்து நடந்தால் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்தவர்களுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறதே!"

"மோட்டார் சைக்கிளில் போனால் ஹெல்மெட். காரில் போனால் சீட் பெல்ட். விமானத்திலும் சீட் பெல்ட், ஆக்ஸிஜன் மாஸ்க், பாரசூட் போன்ற பாதுகாப்பு சாதனங்கள், கப்பலில் போனால் லைஃப் போட், நீந்துவதானால் மிதவை, லைஃப் ஜாக்கெட் போன்ற சாதனங்கள் என்று வாழ்க்கையில் நாம் போகும் எல்லாப் பயணங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்கிறோமே, வாழ்க்கை என்ற இந்த நீண்ட பயணத்துக்கு என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்கிறோம்?"

இளைஞன் பதில் சொல்லாமல் ஞானியின் விளக்கத்துக்குக் காத்திருந்தான்.

"இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு கடலில் நீந்துவது போல். இந்தப் பிறவியை நாம் கடந்து போவது ஒரு பெருங்கடலை நீந்திக் கடப்பது போலத்தான். இந்தக் கடலை நாம் நீந்திக் கடப்பதுதான் வாழ்க்கை. இந்த நீண்ட அபாயம் நிறைந்த நீச்சல் பயணத்தில் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் நாட வேண்டியது இறைவனின் பாதுகாப்பைத்தான். இறைவனின் திருவடிகளைப் பற்றியவர்களுக்கு இந்தப் பிறவிக் கடலை நீந்திச் செல்வது எளிதாக இருக்கும். மற்றவர்களுக்கு அது கடினமாகத்தான் இருக்கும்."

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 1
கடவுள் வாழ்த்து
குறள் 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேராதார்.

பொருள்:
இறைவனின் திருவடிகளில் பக்தி செலுத்துபவர்களால் மட்டுமே பிறவி என்ற இந்தப் பெருங்கடலை நீந்த முடியும். மற்றவர்களால் நீந்த முடியாது.

இந்தக் கதையின் காணொளி வடிவத்தை இங்கே காணலாம்.

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்





























Saturday, June 20, 2015

9. வணங்காத தலை

அவர் தன் சுய முயற்சியால் முன்னுக்கு வந்தவர். அது குறித்து அவருக்குப் பெருமை உண்டு. அவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.

"கடவுள் என்ன செய்தார்? நான் படித்தேன், நான் உழைத்தேன், நான் சிந்தித்து, திட்டமிட்டுச் செயல்பட்டேன். பிரச்னைகள் வந்தபோது அமைதியாக அவற்றை எதிர் கொண்டேன். கடவுளிடம் உதவி கேட்கவில்லை. கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. அவரை வணங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்பார்.

அவருக்குத் திருமணம் ஆயிற்று. அவர் மனைவிக்குக் கடவுள் பக்தி உண்டு. அதில் அவர் குறுக்கிடவில்லை.

பல ஆண்டுகள் மண வாழ்க்கைக்குப் பிறகு ஒருமுறை அவர் மனைவி அவரிடம் சொன்னாள். "நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றனவே, அவற்றின் பயன் என்ன என்று சொல்ல முடியுமா?"

"பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறுவனைக் கேட்பதுபோல் கேட்கிறாயே! சரி. படித்தது ஞாபகம் வருகிறதா என்று பார்க்கிறேன். கண் - பார்ப்பதற்கு. காது - கேட்பதற்கு. நா - சுவையை உணர்வதற்கு. நாசி - மணத்தை நுகர்வதற்கு. உடல் - தொடு உணர்ச்சிக்கு. எண்ணிக்கை ஐந்து வந்து விட்டதல்லவா?"

"சரி. தலை எதற்கு?"

"புதிதாகக் கேட்கிறாயே! மூளையை உள்ளடக்குவதற்கு, முகத்துக்கு மேல் மூடியாக இருந்து உடலுக்குள் நீர், தூசு இதெல்லாம் மேலிருந்து விழாமல் தடுப்பதற்கு!"

"அதை விட முக்கியமான ஒரு பணி தலைக்கு உண்டு. இறைவனை வணங்குவது."

"ஓ! கோவிலுக்குப் போய் விட்டு வந்தாய் அல்லவா? அங்கே உபன்யாசத்தில் சொன்னார்களாக்கும்?"

"கோவிலில் ஒருவரைப் பார்த்தேன். அவருக்கு ஒரு பையன் இருக்கிறானாம். பிறவி முதலே ஐம்புலன்களும் செயலற்றிருக்கின்றனவாம். கண் திறந்திருக்கும் ஆனால் எதையும் பார்க்காது. நாவுக்குச் சுவை தெரியாது. எதைக் கொடுத்தாலும் மென்று விழுங்கும். மூக்குக்கு வாசனை தெரியாது. மல்லிகையின் மணமும் ஒன்றுதான், சாக்கடையின் நாற்றமும் ஒன்றுதான். காது சுத்தமாகக் கேட்காது. உடலில் உணர்ச்சி கிடையாது. கீழே விழுந்தாலும் வலி தெரியாது. நடைப்பிணம் என்று சொல்வார்களே அது மாதிரி என்று சொல்லி வருத்தப்பட்டார்."

"மிகவும் பரிதாபமானதுதான். ஐம்புலன்கள் உடலில் உறுப்புக்களாக இருந்தும் அவை பணி செய்யவில்லை என்பது மிகவும் கொடுமை. ஆனால் அதற்கும், கடவுளை வணங்குவதுதான் தலையின் தலையாய பணி என்று நீ சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?"

"ஒரு திருக்குறள் நினைவுக்கு வந்தது."

"என்ன குறள்?"

"கடவுளை வணங்காத தலை செயல்படாத புலன்களைப் போல என்று திருவள்ளுவர் சொல்கிறார்."

"திருவள்ளுவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. அவர் அப்படித்தான் சொல்லுவார்! என்றாவது எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்தால் நானும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வேன்."

"ஒருநாள் உங்களுக்குக்  கடவுள் நம்பிக்கை வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது."
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 1
கடவுள் வாழ்த்து
குறள் 9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

பொருள்:
எட்டு குணங்களை உடைய இறைவனை வணங்காத தலை செயல்படாத புலன்களைப் போல் பயனற்றது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Friday, June 19, 2015

8. ஓட்டுநர் உரிமம்

"கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த டிரைவிங் ஸ்கூலில் சேரலாம்?" என்று கேட்டான் சுனில்.

"நம் பேட்டையில் இரண்டு பள்ளிகள் இருக்கின்றன. ஒன்று 'அக்னி டிரைவிங் ஸ்கூல்.' அதில்  கட்டணம் அதிகம். பயிற்சி நேரமும் அதிகம். பெண்ட் எடுத்து விடுவார்கள். சரியாக ஓட்ட வரும் வரை டிரைவிங் டெஸ்டுக்கு அனுப்ப மாட்டார்கள்.

"இன்னொரு பள்ளியின் பெயர் 'ஃபாஸ்ட் டிராக் டிரைவிங் ஸ்கூல்.' இவர்கள் பெயருக்கு ஏற்ப அதி வேகமாகச் சொல்லிக் கொடுத்து விடுவார்கள். லைசன்ஸ் உத்தரவாதம். நன்றாக ஓட்டத் தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி, லைசன்ஸ் கிடைத்து விடும். கட்டணமும் குறைவு" என்றான் ராகவ்.

"நான் 'ஃபாஸ்ட் டிராக் டிரைவிங் ஸ்கூலி'லேயே சேர்ந்து கொள்கிறேன். லைசன்ஸ் வாங்கி விட்டால் போதும். அப்புறம் நானே ஓட்டிப் பழகிக் கொள்வேன்" என்றான் சுனில்.

"யோசனை செய்து முடிவு செய். முதலிலேயே நன்றாகக் கற்றுக் கொள்வது நல்லது அல்லவா?"

"இல்லை. எனக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை."

'ஃபாஸ்ட் டிராக்'கில் சேர்ந்து விரைவிலேயே லைசன்ஸ் வாங்கி விட்டான் சுனில்.

லைசன்ஸ் கைக்கு வந்த அடுத்த நாளே அவன் அப்பா சமீபத்தில்தான் வாங்கியிருந்த காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். வீட்டுக்கு அருகில் போக்குவரத்து அதிகம் இல்லாத சாலைகளில் ஓட்டிப் பார்த்தான். ஓரளவு சமாளித்து ஓட்ட முடிந்தது.

இரண்டாவது நாள் காரை எடுத்துக் கொண்டு போக்குவரத்து மிகுந்த சாலைகளுக்குப் போனான். அரை மணி நேர ஓட்டத்தில் தடுமாற்றம்தான் அதிகம் ஏற்பட்டது. 

வீட்டுக்குத் திரும்பி விடலாம் என்று நினைத்தபோது கார் சாலைக்கு நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. காருக்குச் சேதம். அவனுக்கும் அடி. போலிஸில் கேஸ் வேறு பதிவு செய்து விட்டார்கள்.

மருத்துவமனையில் தன்னை வந்து பார்த்த ராகவிடம் சுனில் சொன்னான். "அவசரப்பட்டு விட்டேன். கார் ரிப்பேர், மருத்துவ மனைச் செலவு, வழக்குச் செலவு என்று அப்பாவுக்கு நிறையச் செலவு வைத்து விட்டேன். பத்தாயிரம் ரூபாய் அபராதம்  கட்டினால்தான் வழக்கு முடியும் போல் இருக்கிறது."

"இப்போது வருந்தி என்ன பயன்? எந்த ஒரு பயிற்சி பெறுவதாக இருந்தாலும் திறமை, நாணயம் இரண்டும் உள்ளவர்களிடம்தான் பயிற்சி பெற வேண்டும்" என்றான் ராகவ்.

"எத்தனை மாதம் ஆனாலும் சரி, 'அக்னி டிரைவிங் ஸ்கூலில்' மறுபடியும் பயிற்சி பெற்று அவர்கள் என் கார் ஓட்டும் திறமையை அங்கீகரித்த பிறகுதான் மீண்டும் கார் ஓட்டுவேன்" என்றான் சுனில்.
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 1
கடவுள் வாழ்த்து
குறள் 8
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

பொருள்:
அறக்கடலாக விளங்கும் இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தவர்களால் மட்டுமே பிறவி என்ற இப்பெருங்கடலை நீந்த முடியும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Thursday, June 18, 2015

7. கலெக்டரிடம் ஒரு கோரிக்கை

"என்னுடைய முதியோர் ஊதிய விண்ணப்பம் கலெக்டர் ஆஃபிசில் ஒரு மாதமாகத் தூங்கிக்  கொண்டிருக்கிறது. இன்னும் அது பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை" என்றார் அந்த முதியவர்.

"கலெக்டர் அலுவலகத்துக்குப் போய் விசாரித்தீர்களா? என்ன சொல்கிறார்கள்?"

"பலமுறை போய் வந்து விட்டேன். ஒரு மாத ஊதியத்தொகை எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவு தொகை செலவழிந்து விட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைக் கை காட்டுகிறார்கள். செக்‌ஷனில் கேட்டால் தாசில்தாரைக் கேட்கச் சொல்கிறார்கள். தாசில்தாரைக் கேட்டால் ரெவின்யூ இன்ஸ்பெக்டரைக் கேட்கச் சொல்கிறார். ரெவின்யூ இன்ஸ்பெக்டர் அலுவலகத்திலேயே இருப்பதில்லை. எப்போது வருவார், எப்போது வெளியே போவார் என்று யாருக்கும் தெரியவில்லை."

"கலெக்டரைப் பார்த்தீர்களா?"

"என் போன்ற சாமானியர்கள் எல்லாம் கலெக்டரைப் பார்க்க முடியுமா?" என்றார் பெரியவர்.

"நம் போன்ற சாமானியர்களுக்கு உதவுவதற்காகத்தான் கலெக்டர் என்ற பதவியே உருவாக்கப் பட்டிருக்கிறது. நாளைக்கு நானும் உங்களுடன் வருகிறேன். கலெக்டரைப் பார்த்து விடலாம்" என்றேன்.

"அதனால் மற்ற அதிகாரிகள் கோபித்துக் கொண்டு விட மாட்டார்களே?" என்றார் பெரியவர் கவலையுடன்.

"கவலைப்படாதிர்கள். பெரிய அதிகாரியிடம் போனால் பிரச்னை நிச்சயம் தீரும்" என்று அவருக்கு உறுதி சொன்னேன்.

மறுநாள் கலெக்டர் அலுவலகத்துக்குப் போனபோது, அங்கே ஒரு பெரிய கூட்டமே கலெக்டரைப் பார்க்கக் காத்திருந்தது. பார்வையாளர் நேரம் 3 முதல் 4 மணி வரை என்று போட்டிருந்தது. ஆனால் வெளியே போயிருந்த  கலெக்டர் அலுவலகத்துக்கு வரும்போதே 4.30 மணி ஆகி விட்டது. 

'இன்று கலெக்டரைப் பார்க்க முடியாது' என்று ஊழியர்கள் கூறியதால் பெரும்பாலோர் திரும்பிப் போய் விட்டார்கள். சுமார் பத்து பேர்தான் பொறுமையாகக் காத்திருந்தோம்.

சுமார் ஐந்து மணிக்கு கலெக்டர் மணியை அடித்து பியூனை அழைத்தார். பியூனுக்குப் பின்னால் நானும் நுழைந்து விட்டேன். கலெக்டர் முகத்தில் களைப்பும் சலிப்பும் தெரிந்தது.

"என்ன?" என்றார் என்னைப் பார்த்து.

"சார்! பார்வையாளர் நேரத்தின்போது உங்களைப் பார்க்க சுமார் நூறு பேர் காத்திருந்தார்கள். பெரும்பாலோர் திரும்பிப் போய் விட்டனர். நாங்கள் பத்து பேர் இருக்கிறோம். தயை கூர்ந்து நீங்கள் எங்களைப் பார்க்க வேண்டும்" என்றேன் பணிவாக.

பியூன் என்னிடம் திரும்பி, "அதெல்லாம் பார்க்க முடியாது. யாரைக் கேட்டு உள்ளே வந்தே? வெளியே போ!" என்று விரட்டினார்.

கலெக்டர் குறுக்கிட்டு, "இரு இரு" என்று பியூனை அடக்கி விட்டு, என்னிடம் "சார். ஒரு ஐந்து நிமிடம் கழித்து நான் ஒவ்வொருவராகக் கூப்பிடுகிறேன். கொஞ்சம் காத்திருங்கள்" என்றார்.

சொன்னது போலவே, சில நிமிடங்கள் கழித்து ஒவ்வொருவராக வரச் சொல்லி அவர்கள் குறைகளைக் கேட்டார். எங்கள் முறை வந்தபோது, பெரியவரின் பிரச்னையைச் சொன்னேன்.

கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து விசாரித்தார்.

"இதை ஏன் இன்னும் நீங்கள் பரிசீலிக்கவில்லை?"என்று அதிகாரியைக் கடிந்து கொண்டார்.

"நாளைக்கு இந்த விண்ணப்பம் என் மேஜைக்கு வர வேண்டும்" என்று அதிகாரியிடம் சொல்லி விட்டு, அருகிலிருந்த உதவியாளரிடம், "இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு எனக்கு இது பற்றி நினைவூட்டுங்கள்" என்று சொன்னவர், பெரியவரைப் பார்த்து, "கவலைப் படாதீர்கள். நீங்கள் எல்லா விவரங்களும் சரியாகக் கொடுத்திருந்தால் இன்னும் ஒரு வாரத்துக்குள் உங்கள் ஓய்வூதியம் சாங்ஷன் ஆகி விடும்" என்றார். அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியே வந்தோம்.

கலெக்டர் உறுதியளித்தபடியே ஒரு வாரத்துக்குள் பெரியவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டிருப்பதாகக் கடிதம் வந்தது.

பெரியவருக்கு மிகவும் ஆச்சரியம். "எப்படி தம்பி இது?" என்றார் என்னிடம், நம்ப முடியாமல்.

"பெரியவரே! ஒரு பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடத்தை அணுகினால்தான் நடக்கும்" என்றேன்.
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 1
கடவுள் வாழ்த்து
குறள் 7
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

பொருள்:
தனக்கு நிகரில்லாத கடவுளின் திருவடிகளைப் பற்றினாலே ஒழிய, இவ்வுலகில் கவலை இல்லாமல் வாழ முடியாது. (இறைவனின் திருவடிகளைப் பற்றியவர்களுக்குக் கவலை எதுவும் இருக்காது.)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்













Wednesday, June 17, 2015

6. கடவுளின் சொத்து

"கடவுள் நமக்கு ஐந்து புலன்களைக் கொடுத்திருப்பதே அந்தப் புலன்களின் மூலம் நாம் இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தானே? பின் ஏன் புலன்களை அடக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்?"

நான் மதித்துப் போற்றும் ஆன்மீகப் பெரியவரிடம் நான் கேட்ட கேள்வி இது.

"சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, உடல் பருமன் போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் கூறும் ஆலோசனை என்ன?" என்று என்னைக் கேட்டார் அவர்.

"குறிப்பிட்ட உணவு வகைகளை உண்ணக் கூடாது என்பார்கள். பலவித உணவுக் கட்டுப்பாட்டுகளை விதிப்பார்கள்."

"நோய் வந்தால் உணவுக் கட்டுப்பாட்டுகளை ஏற்றுக் கொள்கிறோம். முதலிலேயே கட்டுப்பாட்டோடு இருந்தால் நோய் வருவதற்கான வாய்ப்பே குறைவாகத்தானே இருக்கும்? எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏன் வருகின்றன? புலன்களைக் கட்டுப்படுத்தாததால்தானே?"

"ஆனால் புலன்களைக் கட்டுப்படுத்துவது கடினமான செயலாயிற்றே?"

"அதற்குத்தான் இறைவனின் துணையை நாட வேண்டும்?"

"கடவுளால் நம் புலன்களைக் கட்டுப் படுத்த முடியுமா?"

"புலன்களைக் கொடுத்தவனால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதா? ஆனால் நாம் விரும்பினால்தான் கடவுள் நமக்கு உதவுவார்."

"கடவுள் பக்தி உள்ளவர்கள் பலபேர் சாப்பாட்டில் விருப்பம் உள்ளவர்களாகவும், கேளிக்கைகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறார்களே!"

"அவர்கள் பக்தி உண்மையான பக்தி இல்லை. பொதுவாகவே நம் மனத்தை ஒரு திசையில் செலுத்தினால், அது மற்ற திசைகளில் போகாது. 

"சைக்கிள் ஓட்டும்போது சாலையை நேராகப் பார்த்து ஓட்டினால் சைக்கிள் நேராகப் போகும். பக்கவாட்டில் பார்த்துக் கொண்டே ஓட்டினால் சாய்ந்த பாதையில்தான் போகும். ஒழுக்கம் என்றால் சாயாமல், வளையாமல், விலகாமல் நேர்ப் பாதையில் போவது என்று பொருள்.

"யாராவது ஒருவர் அவரது பொருளை நம்மிடம் கொடுத்துப் பாதுகாக்கச் சொன்னால் அதை நாம் தவறாகப் பயன்படுத்துவோமா? எச்சரிக்கையுடன் பாதுகாப்போம் அல்லவா? 

"இந்த உடல் இறைவனின் சொத்து. அதைப் பாதுகாக்கும் பொறுப்பு நம்முடையது என்று உணர்ந்தால் புலன்களைக் கட்டுப்படுத்துவது கை கூடும். இந்த உணர்வு வருவதற்கு இறைவனிடம் பக்தி வேண்டும். 

"இறைவனிடம் பக்தி செலுத்தி ஒழுக்கமாக வாழ்ந்தால் புலன்களை நாம் கட்டுப்படுத்தலாம். நோய் நொடி இல்லாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்."

அந்தப் பெரியவர் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 1
கடவுள் வாழ்த்து
குறள் 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்.

பொருள்:
ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் படைத்த இறைவனை வணங்கி, பொய் கலவாத ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் நீண்ட காலம் நலமாக வாழ்வார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ.

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்

Tuesday, June 16, 2015

5. அன்னதானம்

ஒரு கோவிலில் அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. அன்னதானம் செய்தவர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து எல்லோருக்கும் உணவை வழங்கிக் கொண்டிருந்தார்.

உணவை வாங்கிச் சென்று கொண்டிருந்த ஒருவர், "ஏதோ வேண்டுதலாம்!" என்றார். 

அன்னதானம் செய்தவரின் வேண்டுதல் பலிக்க வேண்டுமே என்று பரிதாபப்பட்டு இவர் உணவை வாங்கிக்கொண்டு போவது போன்ற தொனி அவர் குரலில் ஒலித்தது!

இன்னொரு நாள் அந்தக் கோவிலில் அதே போன்று வேறொரு அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அன்னதானம் செய்தவரை அங்கே காணோம். கோவில் அர்ச்சகரே சர்க்கரைப் பொங்கலையும், புளியோதரையையும் பிரசாதமாக வழங்கிக் கொண்டிருந்தார்.

பிரசாதத்தை வாங்கிச் சென்றவர் ஒருவர் "யாருடைய உபயம் இது?" என்று கேட்டதற்கு, அர்ச்சகர் 'யாரோ ஒரு புண்ணியவான் என்னிடம் பணம் கொடுத்து புளியோதரையும், சர்க்கரைப் பொங்கலும் செய்து ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து  விட்டு, பிரசாதத்தை எல்லோருக்கும் கொடுக்கச் சொல்லி விட்டுப் போனார். நிறையச் செய்து எல்லோருக்கும் நிறையக் கொடுங்கள் என்றும் சொன்னார். அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்பதே எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் 'பூஜைக்கு என்னை எதிர் பார்க்காதீர்கள்' என்று சொல்லி விட்டுப் போனார். அதன்படியே அவர் இன்று வரவில்லை" என்றார்.

இந்த இரு அன்னதானங்களைப் பற்றி ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னார் 

"தானே நேரில் அன்னதானம் செய்தவர் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்திருக்கிறார். நல்லது செய்தால் நல்லது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் செய்யப்பட்டது அது. இது போன்ற நல்வினைகள் நமக்குக் குறுகிய பலனையே அளிக்கும்.

"நீங்கள் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் கடனாகக் கொடுத்தால், அந்தப் பணம் உங்களுக்கு வட்டியுடன் திரும்பக் கிடைக்கலாம். ஒரு வேளை கடன் திரும்பி வராமல் போனால், 'கொடுத்த கடன் திரும்ப வரவில்லையே' என்று கவலைப் படுவீர்கள், வருந்துவீர்கள்.

"பலனை எதிர்பார்த்து நல்வினைகளைச் செய்பவர்களும் தாங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டால், 'இத்தனை நல்ல காரியங்கள் செய்தேனே! அவற்றுக்குப் பலன் இல்லையா?' என்று புலம்புவார்கள். 

"அன்னதானம் வாங்கிச் சென்றவர் கூட அன்னதானம் செய்தவரைச் சற்றே இளக்காரமாக நினைத்து 'ஏதோ வேண்டுதலாம்' என்று பரிதாபப் பட்டோ, எகத்தாளம் செய்தோ பேசினார் பாருங்கள்!

"இரண்டாவது அன்னதானம் பலனை எதிர்பாராதது. ஒரு நாள் சிலருக்காவது ஒரு வேளை உணவு வழங்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் விளைந்தது. இதற்காக அவர் பலன் எதையும் எதிர்பார்க்கவில்லை. தான் யார் என்பதையும் காட்டிக் கொள்ளவில்லை. 

"கோவில் பூஜையில் கலந்து கொண்டு புண்ணியத்தை அடைய வேண்டும் என்றோ, அன்னதானம் பெற்றுச் செல்பவர்கள் தம் முகத்தைப் பார்த்துத் தன்னை வாழ்த்த வேண்டும் என்றோ அவர் எதிர்பார்க்கவில்லை. அர்ச்சகர் அவரைப் 'புண்ணியவான்' என்கிறார்!

"புண்ணியத்தை எதிர்பார்க்காதவருக்குப் புண்ணியவான் என்ற பெயர் கிடைக்கிறது! புண்ணியத்தை எதிர்பார்த்துச் செயல்பட்டவருக்குப் பச்சாதாபம்தான் கிடைத்தது!

"ஒருவர் தீவினைகளைச் செய்தால் பதிலுக்கு அவர் தீமைகளை அனுபவிக்க வேண்டும், நரகத்துக்குப் போக வேண்டும் அல்லது மீண்டும் பிறவி எடுத்து வந்து கஷ்டப்பட வேண்டும்.

"அதுபோல் புண்ணியங்களை எதிர்பார்த்து நற்காரியங்களைச் செய்தால் அதனால் புண்ணியம் கிடைக்கும். அந்தப் புண்ணியம்  ஒரு விதத்தில் டிராவலர்ஸ் செக் போல. வேறொரு சந்தர்ப்பத்தில் அவை நமக்கு நன்மைகளாக மாறும்.  

"டிராவலர்ஸ் செக்கை மாற்றுவது போல் நம் விருப்பப்படி விருப்பமான நேரத்தில், விருப்பமான விதத்தில் மாற்றிக் கொள்ள முடியாதுதான். ஆயினும் புண்ணியங்களுக்குப் பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும்.

"அந்த நற்பலன்கள் இந்தப் பிறவியிலேயே கிடைக்கலாம், அடுத்த பிறவியில் கிடைக்கலாம். அல்லது உல்லாசப் பயணம் போல் சில காலம் சொர்க்கத்தில் இன்ப வாழ்வு வாழும் வாய்ப்புக் கிடைக்கலாம். ஆனால் அதன் பிறகு மீண்டும் பிறவி உண்டு.

"ஆனால் பலனை எதிர்பாராமல் நன்மைகளைச் செய்பவர்கள் இறைவனுக்கு நெருக்கமாக ஆகிறார்கள். 'நிஷ்காம்ய கர்மம்' என்று கீதையில் பகவான் சொல்கிறார். அதாவது 'பலனை எதிர்பாராத செயல்.'

"இத்தகைய செயல்களைச் செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையே சொர்க்கமாகும். இப்பிறவி முடிந்ததும் அவர்களுக்கு மறு பிறவி இருக்காது. இறைவன் திருவடி நிழலிலேயே நிரந்தரமாக இருக்கும் பேறு கிட்டும். 

"ஆனால் இப்பிறவியிலேயே இறைவனின் திருவடிகளைப் பற்றியவர்களால்தான் இது போன்று பற்றற்றுச் செயல்பட முடியும்."

எனக்கு ஓரளவு புரிந்தது போல் இருந்தது. உங்களுக்கு?

திருவள்ளுவர் சொல்வதும் இதைத்தானோ?
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 1
கடவுள் வாழ்த்து
குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு

பொருள்:
இறைவனின் உண்மையான புகழை உணர்ந்து அதில் ஈடுபடுபவர்களை அறியாமையால் விளையும் இரு வினைகளும் அணுகுவதில்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்

Monday, June 15, 2015

4. நீங்கள் எந்தக் கட்சி?

"நம் அலுவலகத்தில் இரு குழுக்கள் இருக்கின்றனவே, அவற்றில் நீங்கள் எந்தக் குழு?" என்றார் குருமூர்த்தி. நாங்கள் இருவரும் ஒரே அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இப்போதுதான் அவரை முதலில் சந்திக்கிறேன்.

"நான் தேவராஜ் குழுதான். அவருக்குத்தான் மேலிடத்தில் செல்வாக்கு அதிகம். வெங்கடகிருஷ்ணன் குழு அவ்வளவு வலுவாக இல்லை. நீங்களும் தேவராஜ் குழுவில் சேர்ந்து விடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது."

"அப்ளிகேஷன் ஃபாரம் ஏதாவது இருக்கிறதா?" என்றேன் அப்பாவித்தனமாக.

அவர் என்னை முறைத்து விட்டுப் போய் விட்டார்.

நான் இரண்டு குழுவிலும் இல்லை என்றாலும் மூன்றாவது குழுவில் இருக்கிறேன் - பரந்தாமன் குழுவில்.

உண்மையில் பரந்தாமன் குழு என்று எதுவும் இல்லை!

எங்கள் அலுவலகத்தில் மேல் நிலையில் இரண்டு அதிகாரிகள் இருக்கிறார்கள் - தேவராஜ், வெங்கடகிருஷ்ணன். இவர்கள் இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டி. யார் உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்வதற்காக, எப்போதுமே ஏதாவது போட்டிச் செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.

சில சமயம் தேவராஜ் கை ஓங்கி இருக்கும், வேறு சில சமயம் வெங்கடகிருஷ்ணனின் அதிகாரம் கொடி கட்டிப் பறக்கும். அநேகமாக அலுவலகம் முழுவதுமே இரண்டாகப் பிரிந்திருக்க, என் போல் ஒரு சிலர் மட்டும் இந்தக் குழு அரசியலில் பங்கேற்காமல் ஒதுங்கி இருப்போம்.

தேவராஜின் கை ஓங்கி இருந்தபோது அவர் வெங்கடகிருஷ்ணனின் குழுவைச் சேர்ந்தவர்களுக்குத் தொல்லை கொடுப்பார். தொல்லை என்பது சிறு தொந்தரவு முதல் பதவி உயர்வு வாய்ப்பு மறுக்கப்படுதல் போன்ற தீங்குகள் வரை பலவகையாக இருக்கும்.

ஒரு கட்டத்தில் தேவராஜ்தான் வெற்றி பெறுவார் என்று தோன்றியதால், வெங்கடகிருஷ்ணன் குழுவிலிருந்த சிலர் தேவராஜ் குழுவுக்கு மாறினர்.

திடீரென்று ஒருநாள் நிலைமை மாறி விட்டது. தேவராஜ் செய்த ஒரு தவறால் மேலிடத்தில் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டு, வெங்கடகிருஷ்ணன் கை ஓங்கி விட்டது. இப்போது வெ.கி. தன் பழிவாங்கலைத் தொடங்கி விட்டார்.

இந்தப் பழிவாங்கலில் பாதிக்கப்பட்டவர்களில் குருமூர்த்தியும் ஒருவர். அவருக்கு வரவிருந்த பதவி உயர்வு பறிபோனதுடன், அவர் மீது பல புகார்கள் எழுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது.

அவர் என்னிடம் புலம்பினார். "தப்புக் கணக்குப் போட்டு விட்டேன் ஐயா! இந்த தேவராஜை நம்பி மோசம் போய் விட்டேன். பேசாமல் வெங்கடகிருஷ்ணனிடம் சரணடைந்து விடலாம் என்று பார்க்கிறேன்" என்றார்.

"மறுபடியும் தேவராஜ் கை ஓங்கினால் என்ன செய்வீர்கள்?" என்றேன்.

அவரால் பதில் சொல்ல முடியவில்லை. "ஆமாம் நீங்கள் இரண்டு குழுவிலும் இல்லையே, உங்களுக்கு எதுவும் பாதிப்பு இல்லையா?" என்றார்.

"இல்லை. பதவி உயர்வுப் பட்டியலில் என் பெயரும் இருப்பதாகச் சொல்கிறார்கள்" என்றேன்.

"அது எப்படி?" என்றார் குருமூர்த்தி வியப்புடன்.

"நான்தான் பரந்தாமன் குழுவில் இருக்கிறேனே!" என்றேன்.

"பரந்தாமன் எம்.டி. ஆயிற்றே? அவருக்கு ஏது குழு? அதுவும் அவர் எங்கோ தூரத்தில் தலைமை அலுவலகத்தில் இருக்கிறார்."

"ஆனால் அவருக்கு இங்கே நடப்பதெல்லாம் தெரியும். இந்த இரு குழுக்களின் சண்டையை அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னைப்போல் எந்தக் குழுவிலும் சேராதவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அவர் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார். இதை அறிந்ததால்தான் வெங்கடகிருஷ்ணன் என் பதவி உயர்வைத் தடுக்க முயலவில்லை."

"தவறு செய்து விட்டேன். இவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் கம்பெனிக்கு விசுவாசமாக இருந்திருந்தால் விருப்பு வெறுப்பு இல்லாத எம்.டி.யின் துணை எனக்கும் கிடைத்திருக்கும்" என்றார் குருமூர்த்தி வருத்தத்துடன்.

உடனேயே சமாளித்துக்கொண்டு, "இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. இரண்டு குழுவிலிருந்தும் விலகிப் பரந்தாமன் குழுவில் சேர்ந்து விடப் போகிறேன். பரந்தாமன் குழுவில் சேர்வதற்கு அப்ளிகேஷன் ஃபாரம் இருக்கிறதா?" என்றார் சிரித்தபடி.
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 1
கடவுள் வாழ்த்து
குறள் 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

பொருள்:
விருப்பு, வெறுப்பு இல்லாத இறைவனின் அடி சேர்ந்தவர்களுக்கு எப்போதுமே துன்பம் வராது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ.


(Read 'To which faction do you belong?' the English version of this story.)
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்

Sunday, June 14, 2015

3. அர்ச்சகரின் ஆசை

அது ஒரு பழமையான கோவில். அங்கே கூட்டம் அதிகம் இருப்பதில்லை. ஒரு வயதான அர்ச்சகர் அங்கே பூஜை செய்து வந்தார்.

ஒரு நாள் நான் கோவிலுக்குப் போனபோது அர்ச்சகரைத் தவிர வேறு யாருமே இல்லை. அவரிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று தோன்றியது.

கோவிலுக்கு வருபவர்கள் கடவுளிடம் பலவிதமாக வேண்டிக் கொள்வார்கள் - பெண்ணுக்குக் கல்யாணம் ஆக வேண்டும் என்பதிலிருந்து, தொந்தரவு கொடுக்கும் தொழில் கூட்டாளி சீக்கிரமே மண்டையைப் போட வேண்டும் என்பது வரை பலவித வேண்டுதல்கள்!

இந்தக் கோவில் அர்ச்சகர் என்ன வேண்டிக் கொள்வார்? பக்கத்தில் வேறு யாரும் இல்லாததால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடமே கேட்டு விட்டேன்: "சாமி, கடவுளிடம் நீங்கள் என்ன வேண்டிக் கொள்வீர்கள்?"

அவர் என்னைக் கொஞ்சம் ஆச்சரியமாகப் பார்த்தார். பிறகு என்னிடம் சொல்லலாம் என்று தோன்றியதாலோ என்னவோ, "எனக்கு நீண்ட ஆயுளைக் கொடு என்று வேண்டிக் கொள்வேன்" என்றார்.

"நீங்கள் சொல்வது விசித்திரமாக இருக்கிறதே. உங்களைப் போன்று ஆன்மீகத்தில் ஆழ்ந்தவர்கள் இறைவன் அடி சேர வேண்டும் அதாவது சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்றுதானே வேண்டிக் கொள்வார்கள்?" என்று என் சிற்றறிவில் உதித்த புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்டேன்!

"நான்தான் இறைவன் அடி சேர்ந்து விட்டேனே!" என்றார் அர்ச்சகர்.

"என்ன சொல்கிறீர்கள்?" என்றேன் சற்றே பயத்துடன். 

'இறைவனடி சேர்ந்து விட்டேனே' என்று அவர் சொன்னது என் முன்னே நின்ற அவர் உருவத்தைப் பற்றிச் சில கற்பனைகளை உருவாக்கி, ஒரு கணம் என்னை மயக்கத்தில் ஆழ்த்தி, மனதில் மெலிதாக ஒரு அச்சத்தை எழுப்பியது.

"இறைவன் அடி சேர்வது என்றால் என்ன? இறைவனின் திருவடிகளை நம் மனத்தில் இருத்திக் கொள்வது என்று பொருள். ஐம்பது வருடங்களுக்கு மேலாக இந்தக் கோவிலில் நான் பூசை செய்து வருகிறேன்.

"தினமும் பல மணி நேரம் கடவுளின் சன்னிதியிலேயே இருந்ததில் அவரது திருவுருவம் என் மனதில் ஆழப் பதிந்து விட்டது. அவர் திருவடியில் நான் செய்த கோடிக்கும் மேற்பட்ட அர்ச்சனைகள் அவரது திருவடிகளை என் மனதில் ஆழப் பதிய வைத்து விட்டன.

"நான் கோவிலில் இல்லாத நேரங்களிலும் என் மனக்கண்ணில் இறைவனின் திருவுருவும், திருவடிகளும்தான் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. இதை விட மேலான இறை அனுபவம் வேறு என்ன வேண்டும்? இந்த அனுபவத்தை இன்னும் பல காலம் நான் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?"

என்னை அறியாமல் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினேன்.
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 1
கடவுள் வாழ்த்து
குறள் 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்.

பொருள்:
மலராகிய நம் மனதில் வந்து  அமர்ந்திருக்கும் இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தவர்கள் இவ்வுலகில் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். ('நிலமிசை நீடு வாழ்வார்' என்பதற்குப் பரிமேலழகர் 'வீடு என்கிற சொர்க்கத்தில் நிலையாக வாழ்வார்' என்று பொருள் கூறி இருக்கிறார்.)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                    காமத்துப்பால்

Saturday, June 13, 2015

2. கடவுள் என்னும் பொறியாளர்

நீண்ட நாட்களுக்குப் பிறகு என் நண்பன் இளங்கோவைச் சந்தித்ததில் மகிழ்ச்சியை விட ஆச்சரியமே அதிகம் ஏற்பட்டது எனக்கு. காரணம், இளங்கோவை நான் சந்தித்தது ஒரு கோவிலில்.

இளங்கோ என் பள்ளித் தோழன். பள்ளி நாட்களில் அவனுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. இத்தனைக்கும் அவன் பெற்றோர் இருவரும் பக்தியில் ஊறியவர்கள். அவர்களது அதீத பக்தியே இளங்கோவிடம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விட்டதோ என்னவோ!

பள்ளி நாட்களில் அவன் கோவிலுக்குப் போக மாட்டான். தன்னை ஒரு பகுத்தறிவுவாதி என்று பெருமையாகக் கூறிக்கொண்ட அவன், எங்களை எல்லாம் மூட நம்பிக்கை கொண்டவர்கள் என்று கிண்டல் செய்வான்.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் அவன் பொறியியல் படிப்பில் சேர்ந்து விட்டான். நான் பி.காம் படித்து, பிறகு சி.ஏ படித்து சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் ஆகத் தொழில் செய்து வந்தேன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாக இளங்கோவைக் கோவிலில் சந்தித்ததும் ஆச்சரியப்படாமல் எப்படி இருக்க முடியும்?

கோவிலிலேயே நாங்கள் சந்தித்துச் சுருக்கமாகப்  பேசிக் கொண்டோம். கோவிலிலிருந்து வெளியே வந்ததும் அவனிடம் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான்: "நாத்திகனாக இருந்த உனக்குக் கடவுள் நம்பிக்கை எப்படி வந்தது?"

"பொறியியல் படித்த பிறகுதான்" என்று விளக்கினான் இளங்கோ. "பொறியியல் வல்லுநர்கள் மின்சாரம் முதலிய சக்திகளைப் பயன்படுத்திப் பல அற்புதமான இயந்திரங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றைப் பற்றியெல்லாம் படித்தபோது இந்த உலகில் இயற்கையாக அமைந்திருக்கும் பல பொறியியல் அற்புதங்களைப் பற்றி நினைத்து வியந்தேன். 

"மனித உடலையே எடுத்துக் கொள்ளேன். எந்த ஒரு விசையின் உதவியும் இன்றி நம் இதயத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பம்ப், உடலின் பல நுண்ணிய உறுப்புகளை இணைக்கும் ரத்தக் குழாய்கள், நாளங்கள், கோடிக்கணக்கான நரம்புகளால் உருவாக்கப்பட்டுள்ள பிரமிக்க வைக்கும் தகவல் தொடர்பு அமைப்பு, மூளை என்னும் அற்புத ரோபோட் என்று சொல்லிக்கொண்டே போகலாம். 

"இவையெல்லாம் உருவாக்கப் பட்டதன் பின்னணியில் ஒரு மிக உயர்ந்த அறிவு இருக்க வேண்டும் அல்லவா? அந்த அறிவை இறைவன் என்று பாவித்து அதை வியந்து வணங்காவிட்டால், நான் படித்த படிப்புக்கே அர்த்தம் இல்லை என்று தோன்றியது."

தான் கற்ற கல்வி அளித்த அறிவைப் பயன்படுத்திச் சிந்தித்துக் கடவுளை உணர்ந்த இளங்கோ உண்மையிலேயே ஒரு பகுத்தறிவுவாதிதான்!
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 1
கடவுள் வாழ்த்து
குறள் 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

பொருள்:
நிறைவான, தூய அறிவு படைத்த இறைவனின் திருவடிகளை வணங்குவதே கல்வி கற்பதன் பயன் ஆகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

(Read 'An Engineer called God,' the English version of this story)
பொருட்பால்                                                                                                  காமத்துப்பால்