About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, July 22, 2018

192. பதவி உயர்வு!

கஜபதிக்கு அந்த அலுவலகத்தில் என்ன வேலை என்பது யாருக்கும் தெரியாது. உண்மையில் அவருக்கு வேலையே இல்லை.

அவர் அந்த நிறுவனத்தில் நீண்ட நாட்களாகப் பணியாற்றுபவர். நிறுவனத்தைத் தொடங்கிய சுந்தரமூர்த்தியின் நண்பர். நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இருப்பவர்.

சுந்தரமூர்த்தியை 'வாடா, போடா' என்று பேசும் உரிமை பெற்றவர். முதலாளி-ஊழியர் என்ற நிலையைத் தாண்டி இருவரும் நண்பர்களாகவே பழகி வந்தனர்.

அரசுக்குப் பல்வகைப் பொருட்களை விற்பனை செய்யும் ஏஜென்ஸி நிறுவனம் அது. ஆரம்பத்தில் பேப்பர், ஃபைல்கள் என்று தொடங்கி, பிறகு, ஃபர்னிச்சர், ஃபிட்டிங்ஸ் என்று பல்வேறு பொருட்களை சப்ளை செய்யும்
அளவுக்குக் குறுகிய காலத்திலேயே வளர்ந்து விட்டது அந்த நிறுவனம்.

ஆரம்ப காலத்தில் கஜபதி சுந்தரமூர்த்தியுடன் சேர்ந்து வியாபாரத்தைப் பெருக்கக் கடுமையாக உழைத்தவர்தான். ஆயினும், நிறுவனம் வளர்ந்ததும், ஒருபுறம் வியாபாரம் நிலை பெற்று விட்டதாலும், மறுபுறம் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டதாலும், கஜபதிக்கு வேலை குறைந்து விட்டது.

அந்த நிறுவனத்தில் யாருக்கும் பதவிப் பெயர்கள் இல்லை. துவக்கத்தில் ஒரு பொது மேலாளர் போல் செயல்பட்ட கஜபதி, நாளடைவில் தாமே தம் பொறுப்புகளைக் குறைத்துக் கொண்டார். 

மற்ற ஊழியர்களும் அவரை அணுகுவதைக் குறைத்துக் கொண்டு நேரே முதலாளியிடம் பேசும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டனர்.

கஜபதிக்கு இது வசதியாகவே இருந்தது. ஒய்வு பெற இன்னும் சில வருடங்களே இருக்கும் நிலையில், தம் இருக்கையில் அமர்ந்தபடி மற்ற ஊழியர்களிடம் அரட்டை அடித்து நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.

அவர்கள் அலுவலகம் கீழ்ப்பகுதியிலும், மாடியிலும் என்று இரண்டு தளங்களில் இருந்தது. சுந்தரமூர்த்தியின் அறை மாடியில் கடைசியில் இருந்தது. ஊழியர்கள் யாருக்கும் தனி அறை இல்லை - கஜபதி உட்பட. 

கஜபதியின் இருக்கை மாடிப்படியின் அருகில் இருந்தது. கீழிருந்து மேலே வருபவர்கள், மேலிருந்து கீழே வருபவர்கள் என்று எல்லோரையும் நிறுத்தி வைத்துப் பேசுவார். யாராயிருந்தாலும், சில நிமிடங்கள் அவர் இருக்கை அருகில் நின்று பேசி விட்டுத்தான் போக வேண்டி இருக்கும்.

பேச்சு அவர்கள் குடும்ப விஷயம், அவர்கள் பகுதியில் நடந்த குற்றங்கள், விபத்துகள், சினிமா, அரசியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று எது பற்றி வேண்டுமானாலும் இருக்கும். 

சில ஊழியர்கள் இதை ரசித்தாலும், சிலர் - குறிப்பாக, பெண்கள் - இதை விரும்பவில்லை. இயல்பாகவே அவருக்குச் சற்று உரத்த குரல். அதனால் அவர் பேசும்போது அவர் அருகில் உட்கார்ந்திருக்கும் சிலர் தங்கள் வேலையிலிருந்து கவனத்தைத் திருப்பி அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

கஜபதி ஒரு மூத்த ஊழியர் என்பதாலும், முதலாளியின் நண்பர் என்பதாலும், யாரும் இது பற்றிப் புகார் செய்யவில்லை. சுந்தரமூர்த்தியும் இதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

ருநாள் சுந்தரமூர்த்தி தன் அறையை மாடியிலிருந்து கீழ்ப்பகுதிக்கு மாற்றிக் கொண்டார். "ஏம்ப்பா ரூமை மாத்தற?" என்று கஜபதி கேட்டதற்கு, "சும்மா ஒரு சேஞ்சுக்குத்தான்" என்றார் சுந்தரமூர்த்தி.

புதிய அறைக்கு மாறி இரண்டு நாட்கள் கழித்து, கஜபதியைத் தன் அறைக்கு அழைத்தார் சுந்தரமூர்த்தி.

"கஜபதி! மேல என் ரூமை எதுக்குக் காலி பண்ணினேன் தெரியுமா?"

"கேட்டேன். சும்மாதான்னு சொன்னியே!" என்றார் கஜபதி.

"நீ ஆரம்பத்திலேந்து என்னோட இருக்க. உனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். நம்ம கம்பெனியில டெஸிக்னேஷன் எதுவும் கூடாதுங்கறது என் பாலிசின்னு உனக்குத் தெரியும். இல்லேன்னா உன்னை ஜெனரல் மானேஜர்னு டெஸிக்னெட் பண்ணி இருப்பேன். என்னோட அறையை உனக்காகத்தான் காலி பண்ணினேன். இதை விட அது பெரிசு. இனிமே உன் சீட் அங்கதான். சில முக்கியமான ஃபைல்களை உனக்கு அனுப்பறேன். நிதானமாப் பாரு. உனக்கு ஒர்க் பிரஷர் எதுவும் இருக்காது."

கஜபதி கொஞ்சம் மகிழ்ச்சியுடனும், கொஞ்சம் குழப்பத்துடனும் தலையாட்டினார்.

"ஆஃபீஸ்ல என் ரூமை கஜபதிக்குக் கொடுத்துட்டு நான் கீழ வந்துட்டேன்" என்றார் சுந்தரமூர்த்தி தன் மனைவியிடம்.

"ஏன் திடீர்னு?"

"அவன் கம்பெனிக்கு நிறையப் பண்ணியிருக்கான். கம்பெனி பெரிசானதும், அவனுக்கு ஏதாவது பொறுப்பு கொடுத்திருக்கணும். சரி, கொஞ்சம் ஃப்ரீயா இருக்கட்டும்னு விட்டுட்டேன். அவன் என்னடான்னா எல்லாரையும் இழுத்து வச்சுக் கதை பேசிக்கிட்டு ஆஃபீசையே கெடுத்துக்கிட்டிருந்தான். என்ன செய்யறதுன்னு தெரியல. நேரடியா சொன்னா அவன் வருத்தப்படுவான். புரிஞ்சுக்காம போனாலும் போகலாம். அதான் இப்படிப் பண்ணினேன்."

"இப்ப எப்படி இருக்காரு?"

மாடியில அவன் ரூம் கடைசியில இருக்கு. அதனால அந்தப் பக்கம் யாரும் அதிகம் போக மாட்டாங்க. அவனே வெளியில வந்துதான் யார்கிட்டயாவது பேசணும். அது மாதிரி அடிக்கடி செய்ய முடியாது. ரூம்லேந்து ஒண்ணு ரெண்டு பேரைக் கண்ணாடி வழியாப் பாத்து, கையை ஆட்டிக் கூப்பிட்டுப் பாக்கறான். ஆனா யாரும் உள்ள போறதில்ல. வேலை இருக்குன்னு சைகையாலேயே பதில் சொல்லிட்டுப் போய்க்கிட்டிருக்காங்க."

"பாவங்க அவரு!"

"இத்தனை நாளா ஆஃபீஸ் இல்ல பாவமா இருந்தது? பழகிடும். அதோட அவனுக்குக் கொஞ்சம் வேலையும் கொடுக்க ஆரம்பிச்சிருக்கேன். சொல்றதுக்கில்ல. கொஞ்ச நாள்ள, ஆரம்பத்தில இருந்த மாதிரி கடுமையா வேலை செய்ய ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவான்" என்று சிரித்தார் சுந்தரமூர்த்தி.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை

குறள் 192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில 
நட்டார்கண் செய்தலிற் றீது.

பொருள்:  
பலர் முன் பயனற்ற சொற்களைப் பேசுவது, நண்பர்களிடம் அறத்துக்கு மாறாக நடந்து கொள்வதை விடத் தீயதாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்































Monday, July 9, 2018

191. திண்ணை

"இந்தத் திண்ணைப் பேச்சு மனிதரிடம் நாம ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி..."

முரசு தொலைக்காட்சியில் ஒலித்த பாடலைக் கேட்ட புவனா, "தாத்தா! திண்ணைன்னா என்ன?" என்றாள்.

"கிராமத்து வீட்டிலெல்லாம் வாசல்ல மேடை மாதிரி கட்டியிருப்பாங்க. அதுதான்  திண்ணை" என்றார் வேதாசலம்.

"ஆமாம். உன் தாத்தாவுக்குத்தான் திண்ணையைப் பத்தி நல்லாத் தெரியும். அவர்தானே அந்தக் காலத்தில வீட்டுத் திண்ணையில உக்காந்துக்கிட்டு தெருவில போறவங்களையெல்லாம் கூப்பிட்டு ஒக்கார வச்சு வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டிருப்பாரு" என்றாள் அவர் மனைவி கௌரி.

வேதாசலம் பழைய நினைவுகளில் மூழ்கினார்.

வேதாசலத்துக்கு கிராமத்தில் நிலபுலன்கள் இருந்தன. அவற்றிலிருந்து வரும் வருமானம் போதுமானதாக இருந்ததால், அவர் வேறு வேலைக்குச் செல்லவில்லை. வீட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்திருப்பார். தெருவில் போகிறவர்களைக் கூப்பிட்டு வைத்துப் பேசுவார்.

பேச்சு பெரும்பாலும் அவருடைய பெருமைகளைப் பற்றித்தான் இருக்கும். அவர் அப்பா, வாய்க்காலில் பாலம் காட்டியது, அவர் குடும்பத்தால் நடத்தப்படும் கோவில் திருவிழாக்கள், அவருடைய இளம் வயது "சாதனைகள்" என்று பேசிக் கொண்டிருப்பார்.

பல சமயம் முன்பு சொன்னவற்றையே முதல் முறையாகச் சொல்வது போல் விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருப்பார். வேதாசலத்தின் வெற்றிலைப் பெட்டியிலிருந்து வெற்றிலை, சீவல், புகையிலை எல்லாவற்றையும் எடுத்து மென்று கொண்டே அவர் பக்கத்தில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு சிலர் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

வெற்றிலை, சீவல், புகையிலை ஏதாவது தீர்ந்து விட்டால், தெருவில் போகும் யாராவது ஒரு சிறுவனைக் கூப்பிட்டு, கடையிலிருந்து வாங்கி வரச் சொல்லுவார். சில சமயம் அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பவர்களில் ஒருவரே கூட இதைச் செய்வார்!

"டேய், ராவுத்தர் கடையிலேந்து ரெண்டு கவுளி வெத்தல, ரெண்டு பாக்கெட் கும்பகோணம் சீவல், ரெண்டு பாக்கெட் பன்னீர்ப் புகையிலை வாங்கிட்டு வா. பெரிய பாக்கெட்டா இருக்கட்டும். ஐயா கிட்ட காசு வாங்கிக்கிட்டுப் போ" என்பார் வேதாசலத்தின் பேச்சுத் துணைவர் உரிமையுடன்.

அநேகமாக வேதாசலம் பேச்சு சுவாரஸ்யத்தில் ஒன்றும் சொல்லாமல் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து விடுவார். சில சமயம் வாங்கி வரச் சொன்னவரை முறைப்பார். அவர் அசட்டுச் சிரிப்பு சிரித்ததும், பேசாமல் காசை எடுத்துக் கொடுத்து விடுவார்.

கௌரி எத்தனையோ முறை சொல்லிப் பார்த்திருக்கிறாள். "வேலை இல்லன்னா, வீட்டுக்குள்ள படுத்துத் தூங்குங்க. இல்ல வயக்காட்டு, தோப்பு, துரவுன்னு எங்கியாவது போய் சுத்திட்டு வாங்க. இப்படி வெட்டியா அரட்டை அடிச்சுக்கிட்டு வெத்தலை சீவல்னு பணத்தைச் செலவழிக்கிறீங்களே!"

ஆனால் வேதாசலம் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

ருநாள் அவர்களுடைய தூரத்து உறவினன் செல்வராஜ் கௌரியிடம் சொன்னான். "அண்ணி! அண்ணன் எல்லாரும் அவர் பேச்சைக் கேட்டுக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்காங்கன்னு நெனச்சுக்கிட்டிருக்காரு. ஓசியில கிடைக்கற புகையிலை, வெத்தலைக்கு அலையறவங்கதான் அண்ணன் பேச்சைக் கேக்கற மாதிரி திண்ணையில கொஞ்ச நேரம் வெத்தலையை மென்னுக்கிட்டு உக்காந்திருக்காங்க.

"அவங்க கூட அண்ணன் முதுகுக்குப் பின்னால அவரை ஏளனமாத்தான் பேசறாங்க. 'நாலு வெத்தலைக்காக வெட்டிப் பேச்செல்லாம் கேக்க வேண்டியிருக்கு பாரு'ன்னு ஒத்தன் சொல்லிக்கிட்டிருந்ததை நானே கேட்டேன். மத்தவங்களும் அண்ணனை இளக்காரமாத்தான் பேசறாங்க. 'ஆளும் வெட்டி, பேச்சும் வெட்டி'ன்னு ஒரு பெரிய மனுஷன் என் காது படப் பேசினாரு. அண்ணனுக்கு ஏன் அண்ணி இந்த வேலை?"

"நான் சொல்லி அவர் கேக்கறது எங்கே? எங்கேயோ போயிருக்காரு. வந்தவுடனே நான் மறுபடி சொல்லிப் பாக்கறேன்" என்றாள் கௌரி.

வேதாசலம் எங்கேயும் போகவில்லை. அறைக்குள் இரும்புப் பெட்டியைத் திறந்து பழைய பத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். செல்வராஜ் சொன்னது அவர் காதில் விழுந்தது.

அடுத்த நாள் வேதாசலம் திண்ணையில் அமர்ந்தபோது வெற்றிலைப் பெட்டியை வைத்துக் கொள்ளவில்லை. வழக்கமாக வரும் சிலர் திண்ணையில் வந்து உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்தார்கள்.

"என்னங்க? வெத்திலைப் பெட்டியைக் காணோம்?" என்று ஒருவர் வெளிப்படையாகவே கேட்டு விட்டார்.

"வெத்தல போடறதையே நிறுத்திடலாம்னு பாக்கறேன்ப்பா!" என்றார் வேதாசலம்.

அதற்குப் பிறகு அவர் திண்ணை மாநாட்டுக்கு ஆட்கள் வருவது குறைந்து, பிறகு நின்றே போய் விட்டது. முன்பு அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் தெருவில் போனால், வேகமாக அவர் வீட்டைத் தாண்டிப் போனார்கள். சிலர் யாரோ கூப்பிட்டது போல "இதோ வந்துட்டேன்" என்று கூவிக்கொண்டே ஒடினார்கள். வேதாசலம் யாரையாவது அழைத்தால் கூட, "இல்லீங்க. அவசரமா ஒரு வேலை இருக்கு. போயிட்டு வந்துடறேன்" என்று நழுவினார்கள்.

கேட்க ஆள் இல்லாததால் வேதாசலத்தின் பேச்சும் குறைந்து விட்டது.

"என்ன பழசெல்லாம் நினைச்சுப் பாக்கறீங்களா?" என்றாள் கௌரி.

"ஊர்ல அன்னிக்கு என்னை இளக்காரமாப் பேசினாங்க. நீ இத்தனை வருஷம் கழிச்சு, இப்பவும் என்னைக் குத்திக் காட்டற."

"அவங்கள்ளாம் வெத்தலை சீவலுக்காகத்தான் உங்களோட இருந்தாங்க! நான் உங்ககிட்ட எதையாவது எதிர்பாத்தா உங்களோட இத்தனை வருஷமாக் குடித்தனம் நடத்திக் கிட்டிருக்கேன்?"

தொலைக்காட்சியில் இப்போது வேறொரு பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

"......பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா!!"

"சேனலை மாத்தும்மா. பழைய பாட்டெல்லாம் கேட்டா, ஆறின புண்ணைக் கிளறி விடற மாதிரி இருக்கு" என்றார் வேதாசலம்.
.
றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை

குறள் 191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் 
எல்லாரும் எள்ளப் படும்

பொருள்:  
கேட்பவர் வெறுக்கும்படிப் பயனற்ற சொற்களைப் பேசுபவன் எல்லோராலும் இகழப்படுவான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













Friday, July 6, 2018

190. கல்கத்தா சித்தப்பா!

மாலதியைக் கல்யாணம் செய்து கொண்டபோது அவள் குடும்பம் பெரியது என்று குமாருக்குத் தெரியும். தாய் வழியிலும், தந்தை வழியிலும் பல உறவுகள். மாலதிக்கே இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா, ஒரு தங்கை உண்டு.

குமாரின் குடும்பம் அந்த அளவுக்கு இல்லை. அவன் பெற்றோருக்கு உறவினர்கள் மிகக் குறைவு. அவர்களுடன் அதிகத் தொடர்பும் இல்லை. எப்போதாவது திருமண நிகழ்ச்சிகளில் பார்த்துக்கொண்டு 'சௌக்கியமா?' என்று கேட்பதோடு அவர்கள் உறவாடல் முடிந்து விடும்.

இதற்கு மாறாக, மாலதியின் உறவினர்களிடையே உறவாடல் மிக அதிகம். உறவினர்கள் அதிகம் இருந்ததாலேயே அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. இது தவிர, உறவினர் வீடுகளுக்குச் செல்வது, கடிதப் போக்குவரத்து (முன்பு), தொலைபேசி உரையாடல் (இப்போது) என்று தொடர்புகள் அதிகம் உண்டு.

திருமணமான புதிதில், இத்தனை உறவினர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பது குமாருக்கு ஒரு சுவாரசியமான அனுபவமாக இருந்தது. ஆனால், சில மாதங்களிலேயே அவன் புரிந்து கொண்ட ஒரு விஷயம் அவனுக்கு வியப்பாகவும், உறுத்தலாகவும் இருந்தது.

என்னதான் நெருக்கமாகப் பழகினாலும், மாலதியின் உறவினர்களுக்கிடையே குற்றம் கண்டு பிடிக்கும் பழக்கம் அதிகம் இருந்தது. அவர்கள் பல குழுக்களாக இருந்து ஒவ்வொரு குழுவுக்குள்ளும், தங்கள் குழுவில் இல்லாதவர்களைப்  பற்றிக் குறை கூறிப் பேசிக் கொள்ளும் பழக்கம் இருந்ததை அவன் கவனித்தான். ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களில் இருக்கும் சிலர் மூலம் இந்தப் பேச்சுக்கள் வெளியே கசிந்து மேலும் மனக்கசப்புக்கு வழி வகுத்தன.

சில சந்திப்புகளின்போது சில உறவினர்களிடையே கடுமையான வாக்குவாதமும், வாய்ச்சண்டையும் நடப்பதை குமார் கவனித்திருக்கிறான். ஒருவர் 'நீ இப்படிச் செய்தாய்' என்பதும், மற்றவர் 'அந்த சந்தர்ப்பத்தில் நீ இப்படிச் செய்யவில்லையா?' என்று பதில் கூறுவதும் ஒரு பொதுவான வாக்குவாதமாக இருந்தது.

மாலதியே தன் சகோதரரிகளிடம் தொலைபேசியில் பேசும்போது, தன் அண்ணன், அண்ணிகளைக் குறை கூறிப் பேசுவதை குமார் கவனித்திருக்கிறான்.

"ஏன் இப்படிப் பேசற?" என்று ஒருமுறை அவன் கேட்டபோது, "எங்களுக்கு இருக்கிற குறையையும், மனவருத்தத்தையும் நாங்க இப்படித்தான் பேசிப்போம். உங்களுக்கு என்ன அதைப் பத்தி?" என்றாள் அவள்.

"அப்படீன்னா, என்னைப் பத்திக் கூட இப்படிக் குறை கூறிப் பேசுவியா?" என்றான் குமார்.

"பேசினாலும் பேசுவேன். அதை உங்ககிட்ட சொல்ல முடியுமா?" என்றாள் மாலதி.

"உங்க குடும்பத்தில இப்படி எல்லாரும் ஒத்தர் மேல ஒத்தர் குத்தம் கண்டுபிடிச்சுப் பேசிக்கிட்டே இருக்கீங்க. ஒவ்வொருத்தருக்கும் யார்கிட்டயாவது மனஸ்தாபம். இது மாதிரி மனஸ்தாபம் இல்லாதவங்க உங்க குடும்பத்தில யாராவது இருக்காங்களா?"

"இருக்காரே! கல்கத்தா சித்தப்பா" என்றாள் மாலதி.

"அவரு உங்க சொந்த சித்தப்பா இல்லையே, ஒண்ணு விட்ட சித்தப்பாதானே? ரொம்ப தூரத்தில வேற இருக்காரு. அதனால அதிக தொடர்பும் இருக்காது, அதனாலதான் சண்டையும் இல்லை, அப்படித்தானே?'

"அப்படி இல்ல. அவர் எங்களுக்கு ரொம்ப நெருக்கம்தான். கல்கத்தாவில் இருந்தாலும், அடிக்கடி இந்தப் பக்கம் வருவாரே. அடுத்த மாசம் ப்ரியா கல்யாணத்துக்குக் கூட வருவாரு" என்றாள் மாலதி.

ப்ரியா எந்த உறவினரின் பெண் என்று குமார் யோசிக்க ஆரம்பித்தான்.

ப்ரியாவின் திருமணத்தின்போது, 'கல்கத்தா சித்தப்பா' நாகராஜனை சந்தித்துப் பேச குமாருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

இருவரும் தனியாக இருந்தபோது குமார் அவரிடம் கேட்டான். "சார்! நான் உங்க குடும்பத்தில பெண் எடுத்தவன். அதனால உங்க குடும்ப விஷயங்களைப் பத்திப் பேச எனக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்குன்னு தெரியல. ஆனா உங்க குடும்பத்துக்குள்ள குற்றம் கண்டுபிடிக்கிறது, அதனால ஏற்படற மனஸ்தாபம், கோபதாபம் எல்லாம் கொஞ்சம் அதிகமாவே இருக்கு. உங்களுக்கு மட்டும்தான் யாரோடயும் எந்த மனஸ்தாபமும் இல்லைன்னு மாலதி சொன்னா. உங்களை நினைச்சாப் பெருமையா இருக்கு!" என்றான்.

"ஓ! அது ஒண்ணுமில்ல. நான் ரொம்ப வருஷம் முன்னால ஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன். அது எனக்கு உதவியா இருந்திருக்கு" என்றார் நாகராஜன்.

"என்ன சார் தெரிஞ்சுக்கிட்டீங்க?"

"எங்க ஆஃபீஸ்ல ஒரு மானேஜர் இருந்தாரு. அவரு மேஜையில 'தி பாஸ் இஸ் ஆல்வேஸ் ரைட்'னு ஒரு பலகை வச்சிருப்பாரு. அவர் சொன்னதை யாரும் மறுத்துப் பேசக் கூடாது. பேசினா, அந்தப் பலகையைக் காட்டுவாரு! ஒரு நாள் அவர் மேஜையில் அந்தப் பலகை இல்லை. 'ஏன் சார் பலகையை எடுத்துட்டீங்க?'ன்னேன். 'இன்னிக்கு ஹெட் ஆஃபீஸ்லேந்து என்னோட பாஸ் வராரு. அவர் வரும்போது இந்தப் பலகை இருந்தா அவர் சொல்றதை நான் மறுத்துப் பேச முடியாதே! அதான் எடுத்துட்டேன்'ன்னாரு.

"அப்பதான் எனக்கு ஒண்ணு தோணிச்சு. அநேகமா எல்லோருமே நாம நினைக்கறது, நாம செய்யறதுதான் சரின்னு நினைக்கறோம். மத்தவங்க நம்மளை மறுத்துப் பேசினா நமக்கு கோபம் வருது. அதோட, நமக்கு ஒரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயம்னு நடந்துக்கறோம். எங்க மானேஜருக்கு, நாங்க அவரை மறுத்துப் பேசக் கூடாதுன்னு எண்ணம். ஆனா அவரோட பாஸ் சொல்றதையெல்லாம் அப்படியே ஏத்துக்க அவரு தயாராயில்லை!"

"இன்ட்டரஸ்டிங்" என்றான் குமார்.

"இதையே எல்லா விஷயங்களுக்கும் பொருத்திப் பாத்தேன். யாராவது தப்பு பண்ணினா, அதை சுட்டிக் காட்டறோம். ஆனா நாமளும் அந்தத் தப்பைப் பண்ணியிருக்கமான்னு யோசிக்கிறதில்லை. குடும்பத்தில இந்த மாதிரி நிறைய சூழ்நிலைகள் வரும். ஒரு கல்யாணத்தில என்னை அவங்க சரியா மதிக்கலன்னு தோணும். அப்ப என் குடும்பத்தில நடந்த கல்யாணத்துல நான் எல்லாரையும் மதிச்சு நடந்திருக்கேனான்னு யோசிச்சுப் பாப்பேன். அந்தக் கல்யாணத்தைப் பத்தி நெனச்சுப் பாத்தா, நான் என்ன செஞ்சேங்கறதே எனக்கு நினைவுக்கு வராது! அந்த அளவுக்குக் கல்யாண வேலையில மூழ்கியிருந்திருந்தேன்னு புரிஞ்சுப்பேன். அந்த சூழ்நிலையில, வந்தவர்களை சரியா கவனிக்காம இருந்திருக்கலாமே! மத்தவங்களும் அப்படித்தானே இருந்திருப்பாங்க? இதை வாழ்க்கையில எல்லா விஷயங்களுக்கும் பொருத்திப் பாக்கலாம். அடுத்தவங்ககிட்ட ஒரு குறையோ, குற்றமோ நான் கண்டு பிடிக்கச்சே, முக்கால்வாசி சமயங்கள்ள என்கிட்டேயும் அந்தக்
குற்றம் இருக்குன்னு புரிஞ்சுப்பேன். இது ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அதனால நான் யாரையுமே குறை சொல்றதையோ, குற்றம் சொல்றதையோ நிறுத்திட்டேன். அதனால யாரோடயும் எனக்கு மனஸ்தாபம் இல்லேன்னு நினைக்கிறேன்."

"இதனால ஒரு விஷயத்தை நீங்க இழந்துட்டிங்களே சார்!" என்றான் குமார்.

"எதை இழந்துட்டேன்?" என்றார் நாகராஜன் சற்றே அதிர்ச்சியுடன்.

"குற்றம் கண்டு பிடிக்கிற திறமையே உங்களை விட்டுப் போயிருக்குமே சார்!" என்றான் குமார் சிரித்தபடி.

நாகராஜன் அவன் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்.

அறத்துப்பால்     
இல்லறவியல் 
          அதிகாரம் 19        
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ  மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)
குறள் 190
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் 
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பொருள்:  
மற்றவர்கள் குற்றத்தைக் காண்பது போல், தங்கள் குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பவர்களால் உலகில் உள்ள உயிர்களுக்கு எந்தத் தீங்கும் வராது.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


























































Tuesday, July 3, 2018

189. துணைத் தலைவர்

"ஐயா, இவருதான் நம்ப கட்சியோட சமூக ஊடகப்  பொறுப்பாளர்  அருண்மொழி" என்று அறிமுகம் செய்தார் முத்து. அவர் கட்சியின் ஒரு மூத்த தலைவர்.

"வணக்கம் ஐயா" என்றான் அருண். அவனுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுக்கும்போதே அருண் என்ற அவன் பெயரை அருண்மொழி என்று நீட்டி விட்டார் கட்சித் தலைவர் வெற்றிவேந்தன்.

"சமூக ஊடகப் பொறுப்பாளரா? அப்படீன்னா?" என்றார் கட்சியின் துணைத் தலைவர் வையாபுரி, அவன் வணக்கத்தைப் பொருட்படுத்தாமல்.

"அதாங்க இந்த ஃபேஸ்புக், ட்விட்டர்னு எல்லாம் சொல்றாங்களே, அது மாதிரி சமூக வலைத்தளங்கள்ள நம்ப கட்சிக் கொள்கைகளைப் பரப்புவது, மத்த கட்சிகள், ஊடகங்களோட விமரிசனங்களுக்கு பதில் சொல்றது இந்த மாதிரி வேலை. இப்பதான் தலைவர் இவரை நியமிச்சாரு. நியமிச்ச உடனேயே உங்ககிட்ட அழைச்சுக்கிட்டுப் போய் அறிமுகப்படுத்தச் சொன்னாரு" என்று விளக்கினார் முத்து.

துணைத்தலைவர் என்ற முறையில் வையாபுரியை எந்த விஷயத்திலும் கலந்தாலோசிக்காவிட்டாலும், இது போன்ற மரியாதைகளைத் தரத் தவறுவதில்லை கட்சித் தலைவர் வெற்றிவேந்தன்.

"நல்லா வேலை பாரு தம்பி!" என்று சொல்லி அருணை அனுப்பி வைத்தார் வையாபுரி.

அருண் சென்றதும், "எதுக்குய்யா இதெல்லாம்? எல்லா விமரிசனங்களுக்கும் சரியானபடி பதில் கொடுக்க அதிர்வேட்டு அய்யாக்கண்ணு மாதிரி பேச்சாளர்கள் எல்லாம் இருக்காங்களே!" என்றார் வையாபுரி.

"இப்பல்லாம் இந்த சமூக வலைத்தளங்கள் ரொம்ப முக்கியமாயிடுச்சு ஐயா. இதோட முக்கியத்துவம் தெரிஞ்சுதான் தலைவர் ஒரு பெரிய ஐடி கம்பெனியில நல்ல வேலையில் இருந்த இந்தப் பையனை  நிறைய சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுத்திருக்காரு" என்றார் முத்து. 

'தலைவர் ஏன் உங்களைக் கலந்து ஆலோசிக்கறதில்லைன்னு இப்பத்தான் தெரியுது!' என்று  மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

ருண்மொழி வேலைக்குச் சேர்ந்து சில வாரங்களில், அவனுடைய செயல்பாடுகளால் கட்சியின் சமூக வலைத்தளப் பிரசாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. 

தன் தொழில் நுட்ப அறிவையும், கட்சியில் இருந்த கற்பனை வளம் மிகுந்த சில இளைஞர்களின் படைப்பாற்றலையும் இணைத்து சிறப்பாகப் பணியாற்றி வந்தான்அருண்.

இரண்டு முறை தலைவரைச் சந்தித்தான். அவர் அவனுடைய பணியைப் பாராட்டினார். அவனுடைய சில நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியதிலிருந்து அவர் அனைத்தையும் கூர்ந்து கவனிக்கிறார் என்று புரிந்து கொண்டான் அருண்.

துணைத்தலைவர் வையாபுரியையும் இரண்டு மூன்று முறை சந்தித்தான். அவர் அவனிடம் அதிகம் பேசவில்லை. "என்ன தம்பி, நல்லா வேலை செய்யறதா சொல்றாங்க. வாழ்த்துக்கள்!" என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்.

ஆனால் சில தலைவர்களிடம் அவர் அவனைப் பற்றிக் கடுமையாக விமரிசித்து வருவது அவன் காதுக்கு எட்டியது.

"என்னய்யா செய்யறான் அவன்? தெண்டச் சம்பளம். தலைவர் எங்கிட்ட கேட்டா இந்த மாதிரி வேலையெல்லாம் கட்சிக்குத் தேவையில்லன்னு சொல்லுவேன். தொண்டர்கள் எல்லாம் எங்கிட்ட வந்து புலம்பறாங்க" என்று சொன்னாராம்.

நேரில் சந்திக்கும்போது அவர் தன்னைக் குறை கூறினால், தான் செய்வதை அவருக்கு விளக்கலாம் என்று நினைத்தான் அருண். அதற்காகவே அவரை சிலமுறை நேரில் சந்தித்தான். ஆனால் அப்போதெல்லாம் அவர் அவனிடம் எதுவும் சொல்லவில்லை. 

ஒருமுறை, "ஐயா, குறை ஏதாவது இருந்தா சொல்லுங்க" என்று கூடச் சொன்னான்.

ஆனால் அவர் "எனக்கு இது பத்தியெல்லாம் எதுவும் தெரியாதுப்பா, நான் பழைய ஆளு. கட்சிப் பத்திரிகையைப் படிச்சுட்டு அதில ஏதாவது குறை இருந்தா சொல்லுவேனே தவிர, இந்த க்விட்டர் எல்லாம் படிக்கிறதில்லை" என்று சொல்லி விட்டார்.

ஆனால் இதற்குப் பிறகும், அவனைப் பற்றி அவர் சிலரிடம் தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டிருந்தார் என்பது அவனுக்குத் தெரிந்தது.

தலைவர் தன்னைப் பாராட்டும்போது, துணைத்தலைவர் சொல்வதை, அதுவும் யாரிடமோ சொல்வதை ஏன் பொருட்படுத்த வேண்டும் என்று சில சமயம் நினைப்பான். 

ஆயினும் அவர் தன்னைக் குறை கூறி வந்தது அவனுக்கு ஒரு உறுத்தலாகவே இருந்து வந்தது.

ஒருமுறை கட்சித் தலைவரிடம் தனியாகப் பேச சந்தர்ப்பம் கிடைத்தபோது, அவரிடம், "ஐயா! தப்பா நினைச்சுக்காதீங்க. துணைத்தலைவருக்கு என் மேல ஏதோ குறை இருக்கிற மாதிரி இருக்கு. எங்கிட்ட ஒண்ணும் சொல்லல. ஆனா மத்தவங்ககிட்ட சொல்றாரு. நீங்க பாராட்டறீங்க. ஆனா அவரு இப்படிப் பேசறதைக் கேள்விப்படும்போது வருத்தமா இருக்கு. என்ன தப்பு பண்றேன்னே தெரியல" என்றான்.

தலைவர் உடனே பதில் சொல்லவில்லை. சற்று நேரம் கழித்து, "பாக்கலாம். நீ கவலைப்படாதே!" என்றார்.

ரண்டு நாட்கள் கழித்து, தலைவருக்கு நெருக்கமானவர் என்று கருதப்பட்ட செங்கை சிங்கம் என்ற மூத்த தலைவரிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

அவன் அலுவலகம் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே ஒரு தனி அறையில் இருந்த செங்கை சிங்கத்தைச் சந்தித்தான் அருண்.

"தலைவர் கிட்ட ஏதோ குறைப்பட்டுக்கிட்டீங்களாமே!" என்றார் சிங்கம்.

"தப்பா ஒண்ணும் இல்லீங்க. துணைத்தலைவர்..." என்று ஆரம்பித்தான் அருண். தான் துணைத்தலைவர் மீது குற்றம் சொன்னதாகக் கருதப்பட்டு விஷயம் பெரிதாகி விட்டதோ என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டது.

"இருங்க" என்று  குறுக்கிட்டார் சிங்கம். "உங்ககிட்ட விளக்கம் கேக்க உங்களைக் கூப்பிடல. உங்களுக்கு சில விஷயங்களைத் தெளிவுபடுத்தத்தான் கூப்பிட்டேன்" என்று ஆரம்பித்தார்.

"வையாபுரி அண்ணனைப் பத்தி நம்ப கட்சியில எல்லாருக்கும் தெரியும். நீங்க புதுசா வந்ததால உங்களுக்குத் தெரியல. அவரு எல்லாரைப் பத்தியும் குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாரு. அதுதான் அவரோட வேலை. அதுவும் நேரா சொல்ல மாட்டாரு. மத்தவங்ககிட்டதான் சொல்லுவாரு."ஏன், தலைவரைப் பத்தியே சில பேர்கிட்ட குறை சொல்லிக்கிட்டிருப்பாரு. தலைவருக்கும் இது தெரியும். 

"வையாபுரி அண்ணன் கட்சியில ஒரு மூத்த தலைவர்ங்கறதுக்காக துணைத்தலைவர்ங்கற, அதிகாரம் இல்லாத ஒரு பதவியைத் தலைவர் அவருக்குக் கொடுத்திருக்காரு! அவரால கட்சிக்கு ஒரு பயனும் கிடையாது. சொல்லப் போனா அவரு ஒரு பாரம்தான். ஒரு கடமை உணர்வோடு தலைவர் இந்த பாரத்தை சுமந்துக்கிட்டிருக்காரு. அது தலைவரோட பெருந்தன்மை!

"அதனால நீங்க வையாபுரி அண்ணன் சொல்றதைப் பத்தியெல்லாம் கவலைப்பட வேண்டாம். தலைவருக்கு உங்க செயல்பாடு ரொம்பப் பிடிச்சிருக்கு. 

"துணைத்தலைவர் பத்தின இந்த விஷயங்களையெல்லாம் தலைவரே உங்ககிட்ட சொல்ல முடியாது. அதனாலதான் எங்கிட்ட சொல்லி சொல்லச் சொன்னாரு. போய் சந்தோஷமா வேலையைப் பாருங்க!"

அறத்துப்பால்     
இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ  மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)

குறள் 189
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் 
புன்சொல் உரைப்பான் பொறை.

பொருள்:  
ஒருவன் இல்லாதபோது அவனைப் பழித்துப் பேசுபவரின் உடல் பாரத்தைச் சுமப்பதும் அறம் (கடன்) என்று கருதித்தான் பூமி சுமக்கிறதோ!

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்










Monday, July 2, 2018

188. ஊரு விட்டு ஊரு வந்து...

பக்கத்து ஃபிளாட்டில் புதிதாகக் குடி வந்திருந்தவரை ஒரு வாரம் கழித்துத்தான் சந்தித்தான் கண்ணன். அதுவரை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை. 

தன் பெயர் விஸ்வநாதன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் டெல்லியில் ஒரு நிறுவனத்திலிருந்து ஒய்வு பெற்று சென்னைக்கு வந்திருப்பதாகச் சொன்னார்.

அடுத்து நிகழ்ந்த சில சந்திப்புகளில் இருவரும் தங்களைப் பற்றி மேலும் விவரங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

விஸ்வநாதன் பணி செய்த நிறுவனத்தில் கண்ணனின் நண்பன் ஒருவனின் உறவினர் உயர் பதவியில் இருப்பது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

"உங்களுக்கு பாலகிருஷ்ணனைத் தெரியுமா?" என்றான் கண்ணன்.

"தெரியாம என்ன? அவனோட சேர்ந்துதானே இத்தனை வருஷம் குப்பை கொட்டியிருக்கேன்?" என்ற விஸ்வநாதன், "உங்களுக்கு எப்படி அவனைத் தெரியும்? சொந்தமா?" என்றார் ஜாக்கிரதை உணர்வுடன்.

"எனக்கு சொந்தம் இல்லை. என் நண்பர் ஒத்தருக்கு தூரத்து சொந்தம். ஒரு நிகழ்ச்சியில என் நண்பர் அவரை அறிமுகப்படுத்தி வச்சார். அப்ப பாத்ததுதான். உங்க கம்பெனி பேர் சொன்னதும் அவர் ஞாபகம் வந்தது. அதான் கேட்டேன்" என்றான் கண்ணன்.

"உங்களுக்கு நெருக்கமானவனா இருப்பானோன்னு நெனச்சுதான் கேட்டேன்" என்ற விஸ்வநாதன், "அவன் என்னை விட வயசிலும் அனுபவத்திலும் சின்னவன். நான் வேற ஒரு கம்பெனியிலிருந்து எங்க கம்பெனிக்கு வந்து சேர்ந்தேன். அதனால கம்பெனியில அவன் எனக்கு சீனியராயிட்டான். வேலையெல்லாம் அவ்வளவாத் தெரியாது. பல சமயம் என்கிட்டத்தான் சந்தேகம் கேட்டுப்பான். ஆனா மேல இருக்கறவங்களுக்கு நல்லா ஜால்ரா போடுவான். இந்தியில சம்சாகிரின்னு சொல்லுவாங்க. அவனுக்கே ஆஃபீஸ்ல சம்சான்னு ஒரு பேரு உண்டு. அதனால மள மளன்னு பிரமோஷன் வாங்கிக்கிட்டு மேல போயிட்டான். இப்ப ஜெனரல் மானேஜரா இருக்கான். என்னால அசிஸ்டன்ட் ஜெனரல் மானேஜருக்கு மேல உயர முடியல. படிப்பு, அறிவு, திறமை, கடின உழைப்பு இதுக்கெல்லாம் எங்க மதிப்பு இருக்கு?" என்றார்.

சில வாரங்கள் கழித்து சென்னைக்கு ஒரு வேலையாக வந்திருந்த பாலகிருஷ்ணன் விஸ்வநாதனைப் பார்க்க அவர் வீட்டுக்கு வந்தார்.

அப்போது விஸ்வநாதன் பாலகிருஷ்ணனைக் கண்ணன் வீட்டுக்கு அழைத்து வந்தார். "கண்ணன் சார்! பாலகிருஷ்ணனை உங்களுக்குத் தெரியும்னு சொன்னீங்களே, அதான் அழைச்சுக்கிட்டு வந்தேன்" என்று சொல்லி விட்டு, "நீங்க பேசிக்கிட்டிருங்க" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

"எப்பவோ ஒரு தடவை பாத்ததை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களே! விஸ்வநாதன் சொன்னதும் எனக்கு ரொம்ப ஆச்சரியம். உண்மையில உங்களை எனக்கு சட்னு ஞாபகம் வரல. அப்புறம்தான் நீங்க ரவிச்சந்திரனோட நண்பர்னு நினைவு வந்தது" என்றார் பாலகிருஷ்ணன்.

சற்று நேரம் கழித்து, பேச்சு விஸ்வநாதன் பற்றித் திரும்பியது.

"விஸ்வநாதனை உங்களுக்கு ரொம்ப நாளாத் தெரியுமா?" என்றான் கண்ணன், ஏதோ கேட்க வேண்டுமே என்பதற்காக.

"அவன் எங்க கம்பெனியில சேர்ந்ததிலிருந்தே தெரியும். விஸ்வநாதனும் நானும் கொலீக்ஸ். ரெண்டு பேரும் ஒரே லெவல்லதான் இருந்தோம். அவன் சென்னையிலிருந்து டெல்லிக்கு வந்து எங்க கம்பெனியில சேந்தப்ப, கொஞ்ச நாள் வீடு கிடைக்காம கஷ்டப்பட்டான். சென்னையில இருந்த வீட்டை வேற காலி பண்ணிட்டான். அப்ப என் வீட்ல ஒரு எக்ஸ்டரா பெட்ரூம் இருந்தது. அதனால அவனுக்கு வீடு கிடைக்கிற வரை குடும்பத்தோட என் வீட்டில இருக்கச் சொன்னேன். ரெண்டு மாசம் அவன் குடும்பம் என் வீட்டிலதான் இருந்தது. அதனால முதலிலிருந்தே எங்க ரெண்டு குடும்பத்துக்கிடையில நல்ல நட்பு ஏற்பட்டுப் போச்சு. அவனுக்கு பிரமோஷன் எல்லாம் கொஞ்சம் லேட்டாகக் கிடைச்சது. அது அவனுக்கு ஒரு குறைதான். எனக்குக் கொஞ்சம்  அதிர்ஷ்டம் இருந்தது. அதனால நான் கொஞ்சம் சீக்கிரம் மேல போயிட்டேன்!" என்றார் பாலகிருஷ்ணன் சிரித்தபடி.

பாலகிருஷ்ணன் விடைபெற்றுச் சென்றதும், கண்ணனின் மனைவி புஷ்பா கண்ணனிடம், "ஏங்க, முன்பின் தெரியாதவரைக் குடும்பத்தோட தன் வீட்டில தங்க வச்சிருக்காரு இவரு. ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில நிறைய வருஷம் வேலை செஞ்சுக்கிட்டு நண்பர்களா இருந்திருக்காங்க. இவரைப் பத்தியே உங்ககிட்ட குறை சொல்லிப் பேசி இருக்காரு விஸ்வநாதன். நாளைக்கு நம்பளைப் பத்தி யார்கிட்ட என்ன பேசுவாரா தெரியாது. அவர்கிட்ட அதிகம் பழக்கம் வச்சுக்காதீங்க!" என்றாள்.

    அறத்துப்பால்       
இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ  மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)

குறள் 188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் 
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

பொருள்:  
நெருங்கிப் பழகியவர்களின் குற்றம் குறைகளைக் கூடப் புறம் கூறித் தூற்றும் இயல்பு உடையவர்கள், மற்றவர்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்வார்களோ!

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

































Sunday, July 1, 2018

187. நண்பனிடம் ஒரு குறை!

"தீபக் எங்கடா?"

"முகேஷோடதான் சுத்திக்கிட்டிருப்பான். கழுதை கெட்டா குட்டிச்சுவரு."

"தீபக்கைக் கழுதைன்னு சொல்லு. முகேஷை ஏன் குட்டிச்சுவருன்னு சொல்ற? அவன் அரண்மனை மாதிரி வீட்டிலல்ல இருக்கான்!"

நண்பர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது, தீபக் முகேஷின் அரண்மனை போன்ற வீட்டில்தான் இருந்தான்.

"நாளைக்கு என்னடா ப்ரொக்ராம்?" என்றான் முகேஷ்.

"திங்கட்கிழமை செமினார் இருக்கே. அதுக்குத் தயார் பண்ணணும்."

"ஆமாம் சொன்னியே! மதுராந்தகம் பக்கத்தில இருக்கே அந்த காலேஜ், அங்கதானே?"

"ஆமாம்."

"நம்ப கார்லியே போயிடு. டிரைவரை அனுப்பறேன்."

"எதுக்குடா? நாங்க மூணு பேரு சேர்ந்து போறோம். பஸ்லியே போய்க்கறோம்."

"பரவாயில்ல. காரும் சும்மாதான் இருக்கப் போகுது. டிரைவரும் சும்மாதான் இருக்கப் போறாரு" என்றான் முகேஷ். "நானும் உங்களோட வரலாம், ஆனா, அன்னிக்கு ஒரு டெஸ்ட் இருக்கு."

"நீ வராதபோது எதுக்குடா காரு? நாங்க போய்க்கறோம்" என்றான் தீபக்.

"ரெண்டு பஸ் மாறிப் போகணும். நீங்க போய்ச் சேர்ரதுக்குள்ள செமினார் முடிஞ்சுடும். என் கார் உனக்குப் பயன்படக் கூடாதா என்ன?"

'இவனுக்கு என் மேல் ஏன் இத்தனை அன்பு?' என்று நினைத்துக் கொண்டான் தீபக்.

தீபக்கின் அப்பா ஒரு கட்டிட ஒப்பந்தக்காரரிடம் சூப்பர்வைசராகப் பணிபுரிபவர். அவர்கள் குடும்பம் அவ்வளவு வசதியான குடும்பம் அல்ல. கல்லூரியில் தீபக்குக்கு முகேஷின் நட்புக் கிடைத்து அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமானபோது தீபக்கின் அப்பா, "முகேஷோட அப்பா பெரிய பிசினஸ்மேன். அவன்கிட்ட ஜாக்கிரதையாப் பழகு. ரொம்ப வச்சுக்காதே. பணக்காரங்களோட சிநேகம் எப்பவுமே ஆபத்தானது" என்று எச்சரித்தார்.

ஆனால் முகேஷ் எந்த வித்தியாசமும் பாராட்டவில்லை. தீபக்கின் பெற்றோர்களிடம் மரியாதையுடனும், அக்கறையுடனும்தான் நடந்து கொண்டான். தீபக்கின் வீட்டுக்கு வரும்போது தன் வீடு போல் உரிமையுடன் நடந்து கொண்டான்.

தீபக்கின் அம்மாவிடம், "ஆன்ட்டி, அன்னிக்கு தீபக்குக்கு லஞ்சுக்கு சப்பாத்தியும் ஒரு அருமையான கூட்டும் செஞ்சு கொடுத்திருந்தீங்களே, அது மாதிரி இன்னிக்கு எனக்கு செஞ்சு கொடுங்களேன்!" என்பான்.

தீபக்கின் அப்பாவே மனம் மாறி, "இவ்வளவு நல்லவனா இருக்கானே! அவன் பணத்தை விடு. இவ்வளவு அருமையான குணமுள்ளவன் உனக்கு நண்பனாக் கிடைக்கறதுக்கு நீ ரொம்பக் கொடுத்து வச்சிருக்கணும்" என்றார்.

முகேஷின் காரில் செமினாருக்குச் சென்று விட்டு வந்த சில நாட்களுக்குப் பிறகு ராஜு என்ற நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தான் தீபக்.

"முகேஷ் ரொம்ப நல்லவன்தான். ஆனா அவன்கிட்ட பணக்காரத் திமிர் கொஞ்சம் இருக்கு" என்றான் தீபக்.

"என்னடா இப்படிச் சொல்ற? அவன் உன்னோட பெஸ்ட் ஃபிரண்ட் ஆச்சே!" என்றான் ராஜு.

"நம்மளைப் பொறுத்தவரையிலே அவன் ரொம்ப நல்லவன்தான். ஆனா அவங்க வீட்டில வேலைக்காங்க கிட்ட கொஞ்சம் கூட மனிதாபிமானம்  இல்லாம நடந்துக்கறாங்க."

"அவங்க அப்பா அம்மா அப்படி இருந்தா, அதுக்கு முகேஷ் என்ன செய்வான்? ஆமாம், இது உனக்கு எப்படித் தெரியும்?" என்றான் ராஜு.

"அன்னிக்கு மதுராந்தகத்துக்கு அவன் கார்லதானே போனோம்? அப்ப டிரைவர் எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டார். அவரையே ரொம்ப வாட்டி வதைக்கறாங்களாம். வேலை இல்லாட்டா கூட சீக்கிரம் வீட்டுக்குப் போகவோ, லீவு எடுக்கவோ அனுமதிக்க மாட்டாங்களாம். முகேஷ் கூடக்  கடுமையாத்தான் நடந்துப்பான்னு அவர் சொன்னாரே! நம்ப முகேஷ் இப்படி இருக்கறது எனக்கு வருத்தமா இருக்கு" என்றான் தீபக்.

சில நாட்களில் முகேஷிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. தீபக்கிடம் பேசுவதைத் தவிர்த்தான். மற்ற நண்பர்களிடம் அதிகம் பேசினான். தீபக் தானே சென்று பேசியபோதெல்லாம் கூட வேலை இருப்பதாகச் சொல்லி ஒதுங்கிக் கொண்டான்.

தீபக்குக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ஒருவேளை தான் ராஜுவிடம் பேசியதை, அவன் முகேஷிடம் சொல்லியிருப்பானோ?

ராஜுவிடமே கேட்டான். முதலில் மறுத்த ராஜு, தீபக் திரும்பத் திரும்பக் கேட்டதும் தான் சொன்னதாக ஒப்புக் கொண்டான்.

"ஏண்டா சொன்ன?" என்றான் தீபக், கோபத்துடன்.

"பேச்சுவாக்கில் வாய் தவறிச் சொல்லிட்டேன். முகேஷ் குடைஞ்சு கேட்டதும் எல்லாத்தையும் சொல்ல வேண்டியதாயிடுச்சு" என்றான் ராஜு.

"ஏண்டா, ஒன்னை நம்பி நான் ஒரு விஷயம் சொன்னா, அதைப் போய் முகேஷ் கிட்ட சொல்லி இருக்கியே?  இது தப்புன்னு தோணல உனக்கு?"

"நிறுத்துடா! உன்னோட பெஸ்ட் ஃபிரண்டைப் பத்தி நீ எங்கிட்ட குறை சொல்லிப் பேசியிருக்கே. அது உனக்குத் தப்பாத் தெரியல. நான் அதை அவன்கிட்ட சொன்னதுதான் தப்பாத் தெரியுதா?" என்றான் ராஜு.

தீபக் பதில் சொல்லவில்லை.

அறத்துப்பால் 
இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ  மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)

குறள் 187
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி 
நட்பாடல் தேற்றா தவர்.

பொருள்:  
இனிமையாகப் பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர்கள் நண்பர்களைப்  பற்றி மற்றவர்களிடம் தவறாகப் பேசி நண்பர்களை இழந்து விடுவார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்