குமாரின் குடும்பம் அந்த அளவுக்கு இல்லை. அவன் பெற்றோருக்கு உறவினர்கள் மிகக் குறைவு. அவர்களுடன் அதிகத் தொடர்பும் இல்லை. எப்போதாவது திருமண நிகழ்ச்சிகளில் பார்த்துக் கொண்டு 'சௌக்கியமா?' என்று கேட்பதோடு, அவர்கள் உறவாடல் முடிந்து விடும்.
இதற்கு மாறாக, மாலதியின் உறவினர்களிடையே உறவாடல் மிக அதிகம். உறவினர்கள் அதிகம் இருந்ததாலேயே, அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. இது தவிர, உறவினர் வீடுகளுக்குச் செல்வது, கடிதப் போக்குவரத்து (முன்பு), தொலைபேசி உரையாடல் (இப்போது) என்று தொடர்புகள் அதிகம் உண்டு.
திருமணமான புதிதில், இத்தனை உறவினர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பது குமாருக்கு ஒரு சுவாரசியமான அனுபவமாக இருந்தது. ஆனால், சில மாதங்களிலேயே அவன் புரிந்து கொண்ட ஒரு விஷயம் அவனுக்கு வியப்பாகவும், உறுத்தலாகவும் இருந்தது.
என்னதான் நெருக்கமாகப் பழகினாலும், மாலதியின் உறவினர்களுக்கிடையே குற்றம் கண்டு பிடிக்கும் பழக்கம் அதிகம் இருந்தது. அவர்கள் பல குழுக்களாக இருந்து, ஒவ்வொரு குழுவுக்குள்ளும், தங்கள் குழுவில் இல்லாதவர்களைப் பற்றிக் குறை கூறிப் பேசிக் கொள்ளும் பழக்கம் இருந்ததை அவன் கவனித்தான். ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களில் இருக்கும் சிலர் மூலம் இந்தப் பேச்சுக்கள் வெளியே கசிந்து, மேலும் மனக்கசப்புக்கு வழி வகுத்தன.
சில சந்திப்புகளின்போது, சில உறவினர்களிடையே கடுமையான வாக்குவாதமும், வாய்ச்சண்டையும் நடப்பதை குமார் கவனித்திருக்கிறான். ஒருவர் 'நீ இப்படிச் செய்தாய்' என்பதும், மற்றவர் 'அந்த சந்தர்ப்பத்தில் நீ இப்படிச் செய்யவில்லையா?' என்று பதில் கூறுவதும், ஒரு பொதுவான வாக்குவாதமாக இருந்தது.
மாலதியே தன் சகோதரரிகளிடம் தொலைபேசியில் பேசும்போது, தன் அண்ணன், அண்ணிகளைக் குறை கூறிப் பேசுவதை குமார் கவனித்திருக்கிறான்.
"ஏன் இப்படிப் பேசற?" என்று ஒருமுறை அவன் கேட்டபோது, "எங்களுக்கு இருக்கிற குறையையும், மனவருத்தத்தையும் நாங்க இப்படித்தான் பேசிப்போம். உங்களுக்கு என்ன அதைப் பத்தி?" என்றாள் அவள்.
"அப்படீன்னா, என்னைப் பத்திக் கூட இப்படிக் குறை கூறிப் பேசுவியா?" என்றான் குமார்.
"பேசினாலும் பேசுவேன். அதை உங்ககிட்ட சொல்ல முடியுமா?" என்றாள் மாலதி.
"உங்க குடும்பத்தில இப்படி எல்லாரும் ஒத்தர் மேல ஒத்தர் குத்தம் கண்டுபிடிச்சுப் பேசிக்கிட்டே இருக்கீங்க. ஒவ்வொருத்தருக்கும் யார்கிட்டயாவது மனஸ்தாபம். இது மாதிரி மனஸ்தாபம் இல்லாதவங்க உங்க குடும்பத்தில யாராவது இருக்காங்களா?"
"இருக்காரே! கல்கத்தா சித்தப்பா" என்றாள் மாலதி.
"அவரு உங்க சொந்த சித்தப்பா இல்லையே, ஒண்ணு விட்ட சித்தப்பாதானே? ரொம்ப தூரத்தில வேற இருக்காரு. அதனால, அதிகத் தொடர்பும் இருக்காது, அதனாலதான் சண்டையும் இல்லை, அப்படித்தானே?'
"அப்படி இல்ல. அவர் எங்களுக்கு ரொம்ப நெருக்கம்தான். கல்கத்தாவில் இருந்தாலும், அடிக்கடி இந்தப் பக்கம் வருவாரே. அடுத்த மாசம் ப்ரியா கல்யாணத்துக்குக் கூட வருவாரு" என்றாள் மாலதி.
ப்ரியா எந்த உறவினரின் பெண் என்று குமார் யோசிக்க ஆரம்பித்தான்.
ப்ரியாவின் திருமணத்தின்போது, 'கல்கத்தா சித்தப்பா' நாகராஜனை சந்தித்துப் பேச, குமாருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
இருவரும் தனியாக இருந்தபோது, குமார் அவரிடம் கேட்டான். "சார்! நான் உங்க குடும்பத்தில பெண் எடுத்தவன். அதனால, உங்க குடும்ப விஷயங்களைப் பத்திப் பேச எனக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்குன்னு தெரியல. ஆனா, உங்க குடும்பத்துக்குள்ள குற்றம் கண்டுபிடிக்கிறது, அதனால ஏற்படற மனஸ்தாபம், கோபதாபம் எல்லாம் கொஞ்சம் அதிகமாவே இருக்கு. உங்களுக்கு மட்டும்தான் யாரோடயும் எந்த மனஸ்தாபமும் இல்லைன்னு மாலதி சொன்னா. உங்களை நினைச்சாப் பெருமையா இருக்கு!" என்றான்.
"ஓ! அது ஒண்ணுமில்ல. நான் ரொம்ப வருஷம் முன்னால ஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன். அது எனக்கு உதவியா இருந்திருக்கு" என்றார் நாகராஜன்.
"என்ன சார் தெரிஞ்சுக்கிட்டீங்க?"
"எங்க ஆஃபீஸ்ல ஒரு மானேஜர் இருந்தாரு. அவரு மேஜையில, 'தி பாஸ் இஸ் ஆல்வேஸ் ரைட்'னு ஒரு பலகை வச்சிருப்பாரு. அவர் சொன்னதை யாரும் மறுத்துப் பேசக் கூடாது. பேசினா, அந்தப் பலகையைக் காட்டுவாரு! ஒரு நாள், அவர் மேஜையில் அந்தப் பலகை இல்லை. 'ஏன் சார் பலகையை எடுத்துட்டீங்க?'ன்னேன். 'இன்னிக்கு ஹெட் ஆஃபீஸ்லேந்து என்னோட பாஸ் வராரு. அவர் வரும்போது இந்தப் பலகை இருந்தா. அவர் சொல்றதை நான் மறுத்துப் பேச முடியாதே! அதான் எடுத்துட்டேன்'ன்னாரு.
"அப்பதான் எனக்கு ஒண்ணு தோணிச்சு. அநேகமா, எல்லோருமே நாம நினைக்கறது, நாம செய்யறதுதான் சரின்னு நினைக்கறோம். மத்தவங்க நம்மளை மறுத்துப் பேசினா, நமக்குக் கோபம் வருது. அதோட, நமக்கு ஒரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயம்னு நடந்துக்கறோம். எங்க மானேஜருக்கு, நாங்க அவரை மறுத்துப் பேசக் கூடாதுன்னு எண்ணம். ஆனா, அவரோட பாஸ் சொல்றதையெல்லாம் அப்படியே ஏத்துக்க அவரு தயாராயில்லை!"
"இன்ட்டரஸ்டிங்" என்றான் குமார்.
"இதையே எல்லா விஷயங்களுக்கும் பொருத்திப் பாத்தேன். யாராவது தப்பு பண்ணினா, அதை சுட்டிக் காட்டறோம். ஆனா, நாமளும் அந்தத் தப்பைப் பண்ணியிருக்கமான்னு யோசிக்கிறதில்லை. குடும்பத்தில இந்த மாதிரி நிறைய சூழ்நிலைகள் வரும். ஒரு கல்யாணத்தில, என்னை அவங்க சரியா மதிக்கலன்னு தோணும். அப்ப என் குடும்பத்தில நடந்த கல்யாணத்துல, நான் எல்லாரையும் மதிச்சு நடந்திருக்கேனான்னு யோசிச்சுப் பாப்பேன். அந்தக் கல்யாணத்தைப் பத்தி நெனச்சுப் பாத்தா, நான் என்ன செஞ்சேங்கறதே எனக்கு நினைவுக்கு வராது! அந்த அளவுக்குக் கல்யாண வேலையில மூழ்கியிருந்திருந்தேன்னு புரிஞ்சுப்பேன். அந்த சூழ்நிலையில, வந்தவர்களை சரியா கவனிக்காம இருந்திருக்கலாமே! மத்தவங்களும் அப்படித்தானே இருந்திருப்பாங்க? இதை வாழ்க்கையில எல்லா விஷயங்களுக்கும் பொருத்திப் பாக்கலாம். அடுத்தவங்ககிட்ட ஒரு குறையோ, குற்றமோ நான் கண்டு பிடிக்கச்சே, முக்கால்வாசி சமயங்கள்ள என்கிட்டேயும் அந்தக்
குற்றம் இருக்குன்னு புரிஞ்சுப்பேன். இது ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அதனால, நான் யாரையுமே குறை சொல்றதையோ, குற்றம் சொல்றதையோ நிறுத்திட்டேன். அதனால யாரோடயும் எனக்கு மனஸ்தாபம் இல்லேன்னு நினைக்கிறேன்."
"இதனால, ஒரு விஷயத்தை நீங்க இழந்துட்டிங்களே சார்!" என்றான் குமார்.
"எதை இழந்துட்டேன்?" என்றார் நாகராஜன், சற்றே அதிர்ச்சியுடன்.
"குற்றம் கண்டு பிடிக்கிற திறமையே உங்களை விட்டுப் போயிருக்குமே சார்!" என்றான், குமார் சிரித்தபடி.
நாகராஜன் அவன் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்.
அறத்துப்பால்
இல்லறவியல்
இல்லறவியல்
அதிகாரம் 19
புறங்கூறாமை (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)
குறள் 190
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
பொருள்:
மற்றவர்கள் குற்றத்தைக் காண்பது போல், தங்கள் குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பவர்களால் உலகில் உள்ள உயிர்களுக்கு எந்தத் தீங்கும் வராது.
No comments:
Post a Comment