
முரசு தொலைக்காட்சியில் ஒலித்த பாடலைக் கேட்ட புவனா, "தாத்தா! திண்ணைன்னா என்ன?" என்றாள்.
"கிராமத்து வீட்டிலெல்லாம் வாசல்ல மேடை மாதிரி கட்டியிருப்பாங்க. அதுதான் திண்ணை" என்றார் வேதாசலம்.
"ஆமாம். உன் தாத்தாவுக்குத்தான் திண்ணையைப் பத்தி நல்லாத் தெரியும். அவர்தானே அந்தக் காலத்தில வீட்டுத் திண்ணையில உக்காந்துக்கிட்டு, தெருவில போறவங்களையெல்லாம் கூப்பிட்டு ஒக்கார வச்சு, வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டிருப்பாரு" என்றாள் அவர் மனைவி கௌரி.
வேதாசலம் பழைய நினைவுகளில் மூழ்கினார்.
வேதாசலத்துக்கு கிராமத்தில் நிலபுலன்கள் இருந்தன. அவற்றிலிருந்து வந்த வருமானம் போதுமானதாக இருந்ததால், அவர் வேறு வேலைக்குச் செல்லவில்லை. வீட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்திருப்பார். தெருவில் போகிறவர்களைக் கூப்பிட்டு வைத்துப் பேசுவார்.
பேச்சு பெரும்பாலும் அவருடைய பெருமைகளைப் பற்றித்தான் இருக்கும். அவர் அப்பா வாய்க்காலில் பாலம் கட்டியது, அவர் குடும்பத்தால் நடத்தப்படும் கோவில் திருவிழாக்கள், அவருடைய இளம் வயது "சாதனைகள்" என்று பேசிக் கொண்டிருப்பார்.
பல சமயம், முன்பு சொன்னவற்றையே முதல் முறையாகச் சொல்வது போல் விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருப்பார். வேதாசலத்தின் வெற்றிலைப் பெட்டியிலிருந்து வெற்றிலை, சீவல், புகையிலை எல்லாவற்றையும் எடுத்து மென்று கொண்டே, அவர் பக்கத்தில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, சிலர் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
வெற்றிலை, சீவல், புகையிலை ஏதாவது தீர்ந்து விட்டால், தெருவில் போகும் யாராவது ஒரு சிறுவனைக் கூப்பிட்டு, கடையிலிருந்து வாங்கி வரச் சொல்லுவார். சில சமயம், அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பவர்களில் ஒருவரே கூட இதைச் செய்வார்!
"டேய், ராவுத்தர் கடையிலேந்து ரெண்டு கவுளி வெத்தல, ரெண்டு பாக்கெட் கும்பகோணம் சீவல், ரெண்டு பாக்கெட் பன்னீர்ப் புகையிலை வாங்கிட்டு வா. பெரிய பாக்கெட்டா இருக்கட்டும். ஐயா கிட்ட காசு வாங்கிக்கிட்டுப் போ" என்பார் வேதாசலத்தின் பேச்சுத் துணைவர் உரிமையுடன்.
அநேகமாக, வேதாசலம் பேச்சு சுவாரஸ்யத்தில் ஒன்றும் சொல்லாமல், பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து விடுவார். சில சமயம், வாங்கி வரச் சொன்னவரை முறைப்பார். அவர் அசட்டுச் சிரிப்பு சிரித்ததும், பேசாமல் காசை எடுத்துக் கொடுத்து விடுவார்.
கௌரி எத்தனையோ முறை சொல்லிப் பார்த்திருக்கிறாள், "வேலை இல்லன்னா, வீட்டுக்குள்ள படுத்துத் தூங்குங்க. இல்ல, வயக்காட்டு, தோப்பு, துரவுன்னு எங்கியாவது போய் சுத்திட்டு வாங்க. இப்படி வெட்டியா அரட்டை அடிச்சுக்கிட்டு, வெத்தலை சீவல்னு பணத்தைச் செலவழிக்கிறீங்களே!" .
ஆனால், வேதாசலம் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
ஒருநாள், அவர்களுடைய தூரத்து உறவினன் செல்வராஜ் கௌரியிடம் சொன்னான். "அண்ணி! அண்ணன் எல்லாரும் அவர் பேச்சைக் கேட்டுக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்காங்கன்னு நெனச்சுக்கிட்டிருக்காரு. ஓசியில கிடைக்கற புகையிலை, வெத்தலைக்கு அலையறவங்கதான் அண்ணன் பேச்சைக் கேக்கற மாதிரி, திண்ணையில கொஞ்ச நேரம் வெத்தலையை மென்னுக்கிட்டு உக்காந்திருக்காங்க.
"அவங்க கூட, அண்ணன் முதுகுக்குப் பின்னால அவரை ஏளனமாத்தான் பேசறாங்க. 'நாலு வெத்தலைக்காக வெட்டிப் பேச்செல்லாம் கேக்க வேண்டியிருக்கு பாரு'ன்னு ஒத்தன் சொல்லிக்கிட்டிருந்ததை நானே கேட்டேன். மத்தவங்களும், அண்ணனை இளக்காரமாத்தான் பேசறாங்க. 'ஆளும் வெட்டி, பேச்சும் வெட்டி'ன்னு ஒரு பெரிய மனுஷன் என் காது படப் பேசினாரு. அண்ணனுக்கு ஏன் அண்ணி இந்த வேலை?"
"நான் சொல்லி அவர் கேக்கறது எங்கே? எங்கேயோ போயிருக்காரு. வந்தவுடனே, நான் மறுபடி சொல்லிப் பாக்கறேன்" என்றாள் கௌரி.
வேதாசலம் எங்கேயும் போகவில்லை. அறைக்குள் இரும்புப் பெட்டியைத் திறந்து, பழைய பத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். செல்வராஜ் சொன்னது அவர் காதில் விழுந்தது.
அடுத்த நாள், வேதாசலம் திண்ணையில் அமர்ந்தபோது, வெற்றிலைப் பெட்டியை வைத்துக் கொள்ளவில்லை. வழக்கமாக வரும் சிலர் திண்ணையில் வந்து உட்கார்ந்து, சுற்றுமுற்றும் பார்த்தார்கள்.
"என்னங்க? வெத்திலைப் பெட்டியைக் காணோம்?" என்று ஒருவர் வெளிப்படையாகவே கேட்டு விட்டார்.
"வெத்தல போடறதையே நிறுத்திடலாம்னு பாக்கறேன்ப்பா!" என்றார் வேதாசலம்.
அதற்குப் பிறகு, அவர் திண்ணை மாநாட்டுக்கு ஆட்கள் வருவது குறைந்து, பிறகு நின்றே போய் விட்டது. முன்பு அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் தெருவில் போனால், வேகமாக அவர் வீட்டைத் தாண்டிப் போனார்கள். சிலர், யாரோ கூப்பிட்டது போல "இதோ வந்துட்டேன்" என்று கூவிக் கொண்டே ஒடினார்கள். வேதாசலம் யாரையாவது அழைத்தால் கூட, "இல்லீங்க. அவசரமா ஒரு வேலை இருக்கு. போயிட்டு வந்துடறேன்" என்று நழுவினார்கள்.
கேட்க ஆள் இல்லாததால், வேதாசலத்தின் பேச்சும் குறைந்து விட்டது.
"என்ன, பழசெல்லாம் நினைச்சுப் பாக்கறீங்களா?" என்றாள் கௌரி.
"ஊர்ல அன்னிக்கு என்னை இளக்காரமாப் பேசினாங்க. நீ இத்தனை வருஷம் கழிச்சு, இப்பவும் என்னைக் குத்திக் காட்டற."
"அவங்கள்ளாம் வெத்தலை சீவலுக்காகத்தான் உங்களோட இருந்தாங்க! நான் உங்ககிட்ட எதையாவது எதிர்பாத்தா உங்களோட இத்தனை வருஷமாக் குடித்தனம் நடத்திக்கிட்டிருக்கேன்?"
தொலைக்காட்சியில் இப்போது வேறொரு பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
"......பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா!!"
"சேனலை மாத்தும்மா. பழைய பாட்டெல்லாம் கேட்டா, ஆறின புண்ணைக் கிளறி விடற மாதிரி இருக்கு" என்றார் வேதாசலம்.
.
அறத்துப்பால்
இல்லறவியல்
இல்லறவியல்
அதிகாரம் 20
பயனில சொல்லாமை
குறள் 191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
பொருள்:
கேட்பவர் வெறுக்கும்படிப் பயனற்ற சொற்களைப் பேசுபவன் எல்லோராலும் இகழப்படுவான்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment