About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, September 28, 2018

203. லட்சுமிக்குத் தெரிந்த நியாயம்

செல்வம் இறந்ததும், அண்ணன் சொத்தையும் தான் நிர்வகிக்கலாம் என்று மூர்த்தி நினைத்தான். ஆனால் அவன் அண்ணி லட்சுமி இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 

செல்வம் இருந்தவரை வீட்டை விட்டு வெளியே வராதவள், கணவன் இறந்ததும், வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்து வெற்றிலையை மென்று கொண்டு ஆட்களை அதிகாரம் செய்து வேலை வாங்க ஆரம்பித்தாள்.

"உங்களால நிலத்தையெல்லாம் பாத்துக்க முடியாது அண்ணி. நீங்க வீட்டில இருங்க. நான் பாத்துக்கறேன்" என்றான் மூர்த்தி.

"வேணாம் தம்பி, உங்க நிலத்தை நீங்க பாத்துக்கங்க. என் நிலத்தை நான் பாத்துக்கறேன்" என்றாள் லட்சுமி சுருக்கமாக.

அதற்குப் பிறகு மூர்த்தி அவளுக்கு இடைஞ்சல்கள் செய்ய ஆரம்பித்தான். லட்சுமி, தன் வீட்டுத் திண்ணையிலிருந்து இறங்காமலேயே, தன் ஆட்கள் மூலம் எல்லாவற்றையும் சமாளித்தாள்.

ஒருமுறை, இரவு நேரத்தில், அவள் வயலிலிருந்து, தண்ணீரைத் தன் வயலுக்குத் திருப்பி விட்டான் மூர்த்தி. ஆட்கள் வந்து சொன்னதும், "தலையாரியைக் கூட்டிக்கிட்டுப் போய்க் காட்டுங்க!" என்றாள் லட்சுமி.

லட்சுமியின் ஆட்கள் தலையாரியை அழைத்துப் போய்க் காட்டியதும், தலையாரி மூர்த்திக்கு நூறு ரூபாய் அபராதம் போட்டான்.

"இதெல்லாம் பத்தாது அம்மா. ஒரு வார்த்தை சொல்லுங்க. அவரு வயலுக்குத் தண்ணியே வராம செஞ்சுடலாம், நாம செஞ்சோம்னு யாராலயும் நிரூபிக்க முடியாது" என்றான் அவளுடைய ஆள். 

"அதெல்லாம் வேணாம். அபராதம் கட்டின அவமானம் போதும். இனிமே வாலாட்ட மாட்டாரு" என்றாள் லட்சுமி.

ஆனால் மூர்த்தி அடங்கவில்லை. அபராதம் கட்டிய அவமானம் அவன் கோபத்தை இன்னும் கிளறியது. பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தான்.

நிலம் அறுவடைக்குத் தயாராயிருந்தபோது, நள்ளிரவில் லட்சுமியின் வயலில் இருந்த கதிர்களுக்கு மூர்த்தி தீ வைத்தான். யாரோ பார்த்து நெருப்பை அணைத்ததுடன், மூர்த்தியையும் கையும் களவுமாகப் பிடித்து விட்டார்கள்.   

இரவில் லட்சுமியின் வீட்டுக் கதவைத் தட்டி அவளுக்குத் தகவல் சொன்னார்கள்.

"நெருப்பை அணைச்சுட்டீங்கள்ள? அதோட விடுங்க. நெருப்பை அணைச்சவரைப் பாத்து நான் நன்றி சொல்லணும்" என்றாள் லட்சுமி.

"இத்தனை நாளா மூர்த்தி உங்களுக்கு செஞ்சதுக்கெல்லாம் இன்னிக்கு வசமா மாட்டிக்கிட்டான். போலீசுக்குத் தகவல் சொல்லப் போறோம். அவனை ஆறு மாசமாவது உள்ள தள்ளிடுவாங்க!" என்றார் ஊர்க்காரர் ஒருவர்.

"போலீஸ் எல்லாம் வேண்டாம். அதான் எதுவும் நடக்கலியே. விட்டுடுங்க" என்றாள் லட்சுமி.

"என்னம்மா, இப்படிச் சொல்றீங்க? தப்புப் பண்ணினவன் தண்டனை அனுபவிக்க வேண்டாமா?"

"அவரு மட்டுமா தண்டனை அனுபவிப்பாரு? அவரு ஜெயிலுக்குப் போனா, அவரு பொண்டாட்டி புள்ளைங்கல்லாம் கஷ்டப்பட மாட்டாங்க? புருஷன் இல்லாத குடும்பத்தோட கஷ்டம் எனக்குத் தெரியுங்க. வேண்டாம், அவரை விட்டுடுங்க!" 

"நீ பேருக்கேத்தாப்பல மகாலட்சுமி மாதிரியே இருக்கம்மா. படிக்காட்டாலும், இவ்வளவு அறிவோடு இருக்கியே!" என்றார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

"அறிவெல்லாம் ஏதுங்க எனக்கு? நம்பளால மத்தவங்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாதுன்னு நினைக்கறேன். அதைத்தவிர எனக்கு எதுவும் தெரியாதுங்க" என்றாள் லட்சுமி. 

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 21       
தீவினையச்சம் 
குறள் 203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய 
செறுவார்க்கும் செய்யா விடல்.

பொருள்:  
தனக்குத் தீமை செய்தவர்களுக்குத் தீமை செய்யாதிருத்தலே சிறந்த அறிவு என்று கருதப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













Friday, September 21, 2018

202. பாஸ் என்கிற...

விற்பனைப் பயிற்சியாளர்கள் பயிற்சி முடிந்த கடைசி தினம்.

பயிற்சியாளர் மார்க்கண்டேயன் திருப்தியுடன் பயிற்சி பெற்றவர்களைப் பார்த்தார். 

"நீங்கள் எல்லாம் நல்ல விற்பனைப் பிரதிநிதிகளாக வருவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு விஷயம்..." என்றார்.

"பயிற்சி இடைவேளையின்போது நீங்க உங்களுக்குள்ள பேசிக்கிறதை கவனிச்சேன். உங்கள்ள சில பேர் சில வசைச் சொற்களைப் பயன்படுத்தறதை கவனிச்சேன்" என்றவர் சற்று நிறுத்தி விட்டு "உதாரணமா 'பாஸ்...,' 'எஸ் ஓ பி' மாதிரி வார்த்தைகள். இது மாதிரி வார்த்தைகள் தப்பித் தவறி கூட உங்க வாயிலேந்து வராம பாத்துக்கணும்."

"ஏன் சார்?" என்றார் ஒருவர்.

மெல்லிய சிரிப்பொலி எழுந்தது.

"வசைச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாதுன்னு சொன்னா, ஏன் பயன்படுத்தக் கூடாதுன்னு கேக்கற அளவுக்கு இந்த வார்த்தைகள் உங்க வொக்காப்புலரியில இணைஞ்சிருக்கு!" என்றார் மார்க்கண்டேயன் சிரித்தபடி.

"அதில்லை சார். இந்த வார்த்தைகளை எல்லாரும் சகஜமாப் பயன்படுத்தறாங்களேன்னு சொன்னேன்" என்றார் 'ஏன் பயன்படுத்தக் கூடாது' என்று கேட்டவர், மன்னிப்புக் கேட்கும் குரலில்.

"நீங்க வெளிப்படையாக் கேட்டதைப் பாராட்டறேன். நிறைய பேர் பயன்படுத்தறாங்கங்கறதாலயே வசைச் சொற்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவைன்னு அர்த்தம் இல்ல. முதல்ல அவற்றோட அர்த்தம். ஒத்தரைப் பத்தி 'பாஸ்...,' 'எஸ் ஓ பி'ன்னு சொல்றச்சே நீங்க அவரோட அம்மாவை அவதூறு சொல்றீங்க. இது நியாயமா? இதைப் பத்தி நாம யோசிக்கறது கூட இல்ல."

"தட் இஸ் தி பாயிண்ட் சார். இது மாதிரி வாத்தையை காஷுவலா பயன்படுத்தறச்சே அதோட அர்த்தத்தை மனசில வச்சு நாம பயன்படுத்தல. அதனாலேயே இதையெல்லாம் ஹாம்லெஸ்னு நாம எடுத்துக்கலாமே!"

"ஹாம்லெஸ்ஸா சில பேரு எடுத்துக்கலாம். உங்க நண்பனைப் பாத்து முட்டாள்னு சொன்னா அவன் கோவிச்சுக்க மாட்டான். ஆனா வேற ஒத்தரைப் பாத்து அப்படிச் சொல்ல முடியுமா?"

அவர் மேலே சொல்வதைக் கேட்க அனைவரும் ஆவலாக இருந்தனர்.

"தீய சொற்கள், தீய செயல்களை விட அபாயமானவை. ஏன்னா ஒரு தீய செயலைச் செய்யறப்ப, அதோட விளைவுகளை யோசிப்போம். ஆனா தீய சொற்களை ரொம்ப காஷுவலா பயன்படுத்தறோம். பல பேருக்கு பிற மொழிகள் தெரியாட்டா கூட, அந்த மொழிகள்ள உள்ள கெட்ட வார்த்தைகள் தெரிஞ்சிருக்கும்! இந்த விஷயத்தில நமக்கு மொழி வெறுப்பெல்லாம் கிடையாது! இதில அபாயம் என்னன்னா, பலருக்கு வசவுச் சொற்களைப் பயன்படுத்தறதில ஒரு த்ரில் இருக்கு.

"படிச்சவங்க, கண்ணியமானவங்க கூட இது மாதிரி வசைச் சொல்லை பயன்படுத்தறதில ஒரு த்ரில் இருக்கறதா நினைக்கிறாங்க. நெருப்புக் குச்சியையோ, சிகரெட் துண்டையோ அணைக்காம போடக் கூடாதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா நிறைய பேரு அணைக்காமத்தான் கீழே போடுவாங்க. அதைக் கீழ போட்டுட்டு அந்த நெருப்பை ரசிச்சுப் பாக்கறவங்களை நான் பாத்திருக்கேன். ஆனா எப்பவாவது ஒரு தடவை தீப்பிடிக்கும்போதுதான் அதோட தீவிரம் தெரியும்."

"இந்த விஷயத்தைப் பத்தி ஏன் சார் நீங்க இவ்வளவு ஸ்ட்ராங்கா ஃபீல் பண்றீங்க?" என்றார் ஒருவர்.

"காரணம் இருக்கு" என்றார் மார்க்கண்டேயன். "நான் வேலைக்குச் சேந்த புதிசிலே சில வாடிக்கையாளர்கள் கிட்ட பணம் வசூலிக்க என் பாஸோட போயிருந்தேன். நான் பாஸ்னு சொல்றது என்னோட முதலாளி. அது ஒரு சின்ன கம்பெனி. ஒரு கஸ்டமர்கிட்டேந்து பல மாசமா பணம் வரல. நினச்சுப் பாருங்க. அது அவரோட பணம். அதனால அவரு ரொம்பக் கோவமா இருந்தாரு.

"நாங்க போன பல நேரங்கள்ள கஸ்டமர் இருக்கவே மாட்டாரு. அன்னிக்கு கஸ்டமரோட மனைவி இருந்தாங்க. அவங்க சரியா பதில் சொல்லாம அலட்சியமாப் பேசினாங்க. என் முதலாளிக்கு ரொம்பக் கோவம் வந்து கத்த ஆரம்பிச்சுட்டாரு. அப்ப, ஒரு வசவுச் சொல்லை அவரை அறியாம பயன்படுத்திட்டாரு. பொதுவா ஒரு பெண் முன்னால பயன்படுத்தக் கூடாத வார்த்தை அது. அது என்ன வார்த்தைன்னு கேட்டுடாதீங்க!

"உடனே, அந்தப் பொண்ணு அதைப் புடிச்சுக்கிட்டாங்க. ஒரு பெண் கிட்ட தப்பான வார்த்தை பேசினதா சொல்லி சத்தம் போட்டு பக்கத்தில இருந்தவங்களையெல்லாம் கூட்டிட்டாங்க. 

"என் முதலாளி வெலவெலத்துப் போயிட்டாரு. தான் அப்படி சொல்லவேயில்லைன்னு சாதிச்சுட்டாரு. நானும் வேற வழியில்லாம அவருக்கு ஆதரவாப் பேசினேன். 'அவரு அப்படி சொல்லல. நீங்க தப்பாக் கேட்டிருக்கீங்க'ன்னு சொன்னேன். 

"ஒரு வழியா அங்கேந்து வந்தோம். அதுக்கப்பறம் என் முதலாளி அங்கே போகவே இல்லை. என்னைத்தான் அனுப்பிச்சாரு. நான் எப்ப போனாலும், என் முதலாளி தப்பாப் பேசினதைப் பத்தியே பேசி பணம் கொடுக்காம இழுத்தடிச்சாங்க.

"அவசரப்பட்டு ஒரு வார்த்தை சொன்னதால, வசூலிக்க வேண்டிய பணத்தையே வசூலிக்க முடியலையேன்னு என் முதலாளி ரொம்ப வருத்தப்பட்டார். அதுக்கப்பறம் இது மாதிரி வசவுச் சொற்களை பயன்படுத்தறதையே அவரு நிறுத்திட்டாரு. 

"எனக்கும் இது ஒரு பாடம். எந்த சந்தர்ப்பத்திலும் தப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாதுன்னு அன்னிக்கே முடிவு செஞ்சுட்டேன். இன்னிக்கு இதைப் பத்தி இவ்வளவு தூரம் பேசறதுக்குக் காரணம் தீய சொற்கள் கூட தீய செயல்கள் போல்தான்னு உங்களுக்கு அறிவுறுத்தத்தான். நெருப்புக்கு பயப்படற மாதிரி தீய சொற்களுக்கும் நாம பயப்படணும்."

"நீங்கதான் சார் உண்மையான பாஸ்!" என்றார் ஒருவர்.

"நல்ல வேளை, 'பாஸ் என்கிற'ன்னு சொல்லாம இருந்தீங்களே!" என்றார் மார்க்கண்டேயன், சிரித்துக் கொண்டே.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 21       
தீவினையச்சம் 
குறள் 202
தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும்.

பொருள்:  
தீய செயல்கள்  தீமையை விளைவிக்கும் என்பதால், தீய செயல்களைத் தீயை விடக் கொடியதாகக் கருதி அவற்றுக்கு அஞ்ச வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                காமத்துப்பால்














Thursday, September 20, 2018

201. தலைவனின் கோபம்

"ஏம்ப்பா கட்சியிலே புதுசா ஒரு ஆளைச் சேத்து விட்டியே சரவணன்னு?" என்றான் பகுதிச் செயலாளர் முத்து. 

"ஆமாம்" என்றான் சண்முகம்.   

"அவன் எங்கே?"

"நான் அவனைப் பாத்து ரெண்டு நாள் ஆச்சே, அண்ணே. ஏன் கேக்கறீங்க?"

"அவன் எப்படி, நம்பகமான ஆளுதானே?"

"ஆமாங்க. ஏன் கேக்கறீங்க?"

"இல்ல. ஒரு வேலை சொன்னேன். அதை முடிச்சானான்னு தெரியல."

"ஏங்க, அவன் புதுசு. அவனை நம்பி ஏன் கொடுத்தீங்க? எங்கிட்ட சொல்லியிருந்தா நான் செஞ்சிருப்பேனே!" என்றான் சண்முகம்.

"ஏண்டா, அறிவு இருக்காடா உனக்கு?" என்றான் முத்து.

சண்முகம் சற்று அதிர்ச்சியுடன் பகுதிச் செயலாளர் முத்துவைப் பார்த்தான். 

தன் போன்ற சாதாரணத் தொண்டர்கள் முத்து போன்ற குட்டித் தலைவர்களிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியாது என்பது சண்முகத்துக்குத் தெரிந்ததுதான். ஆயினும் குட்டித் தலைவனின் திடீர்க் கோபம் அவனுக்கு அதிர்ச்சியளித்தது.

"என்ன ஆச்சு தலைவரே?"

"ஒரு ஆளோட கையைக் காலை உடைக்கணும், ஆனா நம்ப கட்சிக்காரங்க செஞ்சாங்கன்னு தெரியக் கூடாதுன்னுட்டுதான் புது ஆளாச்சேன்னு அவன்கிட்ட வேலையைக் கொடுத்தேன். ஒங்கிட்ட கொடுக்கலாம்னு எனக்குத் தெரியாதா?"

"பயந்திருப்பான். நான் போய்ப் பாத்துக் கூட்டிக்கிட்டு வரேன்" என்றான் சண்முகம்.

"வேண்டாம். அவன் செய்ய மாட்டான். விடு. வேற விதமா செஞ்சுக்கலாம்"

"அடிதடியெல்லாம் செய்யணும்னு சொல்லித்தான் தலைவரே கட்சியில சேத்து விட்டேன். முதல் தடவைன்னு கொஞ்சம் தயங்கியிருப்பான். பழகினா சரியாயிடும்" என்றான் சண்முகம்.

"வேணாம். எனக்குத் தெரியும். எத்தனை பேரைப் பாத்திருக்கேன்! நிறைய பேரு ரௌடி மாதிரி பேசுவாங்க. அடிச்சா திருப்பி அடிப்பாங்க. ஆனா ஒரு ஆளை அடிக்கச் சொன்னாலோ, போட்டுத் தள்ளச் சொன்னாலோ யோசனை பண்ணுவாங்க. உன்னை மாதிரி எல்லாத்திலேயும் துணிஞ்சு இறங்கறவங்க சில பேருதான் இருப்பாங்க" என்றான் முத்து.

தலைவன் தன்னைப் பாராட்டுகிறானா அல்லது தான் எந்த ஒரு மோசமான செயலையும் செய்யத் தயங்காதவன் என்று சொல்கிறானா என்று சண்முகத்துக்குப் புரியவில்லை.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 21       
தீவினையச்சம் 
குறள் 201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் 
தீவினை என்னும் செருக்கு.

பொருள்:  
தீய செயல்களைச் செய்யும் இயல்பு படைத்தவர்கள் தீய செயல்களைச் செய்ய அஞ்ச மாட்டார்கள். ஆனால் நல்ல உள்ளம் படைத்தவர்கள் தீய செயல்களைச் செய்ய அஞ்சுவார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                               காமத்துப்பால்

















Friday, September 7, 2018

200. நேரம் நல்ல நேரம்

பட்ஜெட் தயாரிப்பு அந்த நிறுவனத்தில் ஒரு வருடாந்தரச் சடங்கு. பிப்ரவரி மாத இறுதியில் டிபார்ட்மெண்ட்டல் மேனேஜர்கள் எல்லாரும் கூடிப் பேசி அடுத்த ஆண்டு இலக்குகளையும், வரவு செலவுகளையும் முடிவு செய்வார்கள்.

வரவு செலவுத் திட்டத்தை இறுதி செய்வதற்காக மூன்று நாட்கள் நேரம் ஒதுக்கப்பட்டது.

அலுவலகத்தின் மாநாட்டு அறையில் ஜெனரல் மானேஜர் தலைமையில் எல்லா மானேஜர்களும் கலந்து கொண்டனர்.

குறிப்புகள் எடுத்துக் கொள்வதற்காக, ஜெனரல் மானேஜர் பிரபாகரின் உதவியாளர் ஷாலினியம் அங்கே இருந்தாள். அவள் அந்த நிறுவனத்தில் சமீபத்தில்தான் வேலைக்குச் சேர்ந்திருந்தாள்.

"இங்கே எல்லாரும் ஆண்களாக இருக்கோம். ஒரு பெண்ணும் இருக்கறது கொஞ்சம் பாலன்ஸ்டா இருக்கு" என்றார் ஒருவர். இதை சிலர் ரசித்துச் சிரித்தனர். ஷாலினி மௌனமாக இருந்தாள்.

அதற்குப் பிறகும் சிறிது நேரம் எல்லோரும் நாட்டில் நடக்கும் போராட்டங்கள், வரவிருக்கும் பொதுத் தேர்தல், கமலின் அரசியல் பிரவேசம், ரஜினியின் அடுத்த படம் என்று பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். 

"ஜென்ட்டில்மென், நம்ம வேலையைப் பாக்கலாம்" என்று பிரபாகர் சொன்ன பிறகுதான் பட்ஜெட் பற்றி அலசத் தொடங்கினர்.

மூன்று நாள் பட்ஜெட் தயாரிப்பு முடிந்ததும், நான்காம் நாள் பட்ஜெட் விவாதங்கள் பற்றிய அறிக்கையை கம்ப்யூட்டரில் தயார் செய்து பிரபாகருக்கு அனுப்பி வைத்தாள் ஷாலினி.

சற்று நேரம் கழித்து பிரபாகர் ஷாலினியை அழைத்தான். அவள் தயாரித்திருந்த அறிக்கையில் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி, "இந்த விஷயத்தில வேற மாதிரி முடிவெடுத்தோம் போலருக்கே" என்றான்.

"இல்ல சார். நான் எல்லா டிஸ்கஷனையும் விவரமா நோட் பண்ணியிருக்கேன்" என்றாள் ஷாலினி.

"நோட்ஸைக் காட்டு, பாக்கலாம்" என்றான் பிரபாகர்.

ஷாலினி தன் குறிப்புப் புத்தகத்தை எடுத்து வந்து, குறிப்பிட்ட விஷயம் பற்றிய விவாதங்களைக் காட்டினாள்.

அதைப் படித்து விட்டு, "ஓகே. நீட் ஜாப்" என்ற பிரபாகர், "ஒரு நிமிஷம். அந்த நோட்டைக் காட்டு... ஆமாம், இதில என்னவோ டைம் எல்லாம் குறிச்சு வச்சிருக்கியே, அது என்ன?" என்றான்.

"அது ஒண்ணும் இல்ல சார். என்னோட ரெஃபரன்சுக்கு" என்றாள் ஷாலினி.

"இல்லியே. உனக்கு எதுக்கு டைம் எல்லாம்? ஐ ஆம் க்யுரியஸ். என்னன்னு சொல்லு" என்றான்.

"இல்ல சார். தப்பா நினைக்காதீங்க. நான் ஈவினிங் காலேஜில் எம் பி ஏ படிக்கறேன். அதில டைம் அண்ட் மோஷன் ஸ்டடி பத்திப் படிச்சேன். அதான் இது மாதிரி மீட்டிங்கில் எல்லாம் நேரத்தை எப்படிப் பயன்படுத்தறாங்கன்னு பாக்கலாம்னு சும்மா..."

"இன்ட்ரஸ்டிங். ஆமாம். இதில நிறைய டைம் கேப் இருக்கே. உதாரணமா, 11.20க்கப்பறம் 11.55தான் இருக்கு. ஏன் 11.20க்கும் 11.55க்கும் நடுவில நடந்த டிஸ்கஷன் உன் நோட்ஸ்ல இல்ல."

"அப்ப டிஸ்கஷன் நடக்கவே இல்ல சார்!"

"ஏன், அப்ப பிரேக் எதுவும் இல்லியே? எதுக்காகாகவாவது எழுந்து வெளியில போயிட்டாங்களா?"

"இல்ல சார். ஐ மீன், எல்லாரும் உள்ளதான்  இருந்தாங்க. சாரி சார்...அப்ப வேற எதையோ பத்திப் பேசிக்கிட்டிருந்தாங்க..."

"ஓ, ஐ கெட் இட். எப்பப்ப  பட்ஜெட் பத்தி டிஸ்கஷன் நடந்ததோ அந்த
டயத்தை நோட் பண்ணியிருக்க. பொதுவா டைம் ஸ்டடிங்கறது மானேஜர் பயன்படுத்தற டூல். நீ அதை மானேஜர்கள்கிட்டயே பயன்படுத்தி இருக்க!"

"சார்! தெரியாம...நான் எனக்காக சும்மா செஞ்சு பாத்தேன் சார்.. நீங்க நோட்புக் கேட்டதால உங்ககிட்ட காட்டினேன். தப்பா எடுத்துக்காதீங்க சார்..."

"இல்ல ஷாலினி. ஐ அப்ரிஷியேட் இட். நீ எனக்கு ஒண்ணு பண்ணணும். மொத்தமா எவ்வளவு நேரம் டிஸ்கஷன் நடந்திருக்குன்னு டோடல் பண்ணி சொல்லு."

"ஏற்கெனவே பண்ணிட்டேன் சார். மொத்தம் அஞ்சு மணி 35 நிமிஷம் வருது."

"மை குட்னெஸ்! மூணு நாள்ள மொத்தம் பதினெட்டு மணி நேரம் மீட்டிங் நடந்திருக்கு. அதுல மூணுல  ரெண்டு பங்கு வெட்டிப் பேச்சுப் பேசியே  செலவழிச்சிருக்கோம். 12 மணி நேரம் வெட்டிப் பேச்சுப் பேசிப் பொழுது போக்கியிருக்கோம். இத்தனை மானேஜர்களோட எக்சிக்யூடிவ் டயத்தை கால்குலேட் பண்ணினா, கம்பெனிக்கு ஆயிரக் கணக்கில நஷ்டம். இதை எப்படி நான் ரியலைஸ் பண்ணாம போனேன்! ஸ்மால் டாக்னாலே கம்பெனிக்கு இவ்வளவு நஷ்டம்னா, இதுவும் ஒருவிதமான ஃபிராடுதான். கம்பெனிக்கு பண்ற பெரிய அநீதி. திஸ் ஐஸ் ஆன் ஐ ஓபனர் டு  மீ. இனிமே மீட்டிங்குக்கெல்லாம் டயத்தைக் குறைச்சு ரெகுலேட் பண்றேன். தாங்க் யூ  ஷாலினி" என்றான் பிரபாகர்.
றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை
குறள் 200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
சொல்லிற் பயனிலாச் சொல்.

பொருள்:  
பேசினால் பயனுள்ள சொற்களையே பேசவும். பயனற்ற சொற்களைப் பேச வேண்டாம்.
குறள் 199
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




199. பேச்சுக் கச்சேரி

வெளியூரில் நடந்த அந்தத் திருமணத்துக்கு எங்கள் குடும்பத்திலிருந்து நான் மட்டும்தான் போயிருந்தேன். திருமண மண்டபத்தில் எங்களுக்கு அறை ஒதுக்கியிருந்தார்கள்.

எனக்கும், இன்னும் நான்கு இளைஞர்களுக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டது. நாங்கள் தனியே வந்தவர்கள் என்பதால் இந்த ஏற்பாடு.

எங்களுக்குள் இதற்கு முன் பரிச்சயம் இல்லை. பெண் வீட்டுக்காரர்கள் எனக்கு தூரத்து சொந்தம்தான். ஆயினும் எங்கள் குடும்பத்திலிருந்து ஒருவராவது திருமணத்துக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பி என்னை அனுப்பி வைத்தார் என் அப்பா.

திருமணத்துக்கு வந்திருந்தவர்களில் என் மாமா மட்டும்தான் எனக்கு நெருக்கமானவர். அவர் தன் மனைவியுடன் வேறொரு அறையில் தங்கியிருந்தார்.

ஒரே அறை ஒதுக்கப்பட்ட நாங்கள் ஐவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். சற்று நேரத்தில் நெருக்கம் ஏற்பட்டுப் பழக ஆரம்பித்தோம்.

மறுநாள் காலையில்தான் திருமணம். இரவு உணவு முடிந்து அறைக்கு வந்ததும் நாங்கள் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம். அப்போதுதான் அறிமுகம் ஆகியிருந்தாலும், சினிமா நடிகைகள் பற்றிய கிளுகிளுப்புச் செய்திகள், அரசியல் அக்கப்போர், சமூக வலைத்தளப் பரபரப்புகள் என்று பேச ஆரம்பித்ததும் நெருங்கிய நண்பர்கள் போல் பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டோம்.

எங்கள் ஐவரில், முகுந்தன் என்பவன் மட்டும் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். சில நிமிடங்கள் கழித்து, "எக்ஸ்க்யூஸ் மீ! நான் கொஞ்சம் வெளியில போய் உக்காந்துட்டு வரேன். இங்க ஒரே புழுக்கமா இருக்கு" என்று சொல்லி விட்டு எழுந்து போனான். போகும்போது கையில் செல்ஃபோனைத் தவிர, ஒரு நோட்டு போன்ற ஓரிரு பொருட்களையும் எடுத்துச் சென்றான்.

நாங்கள் சற்று நேரம் பேசி விட்டுத் தூங்கி விட்டோம். முகுந்தன் எப்போது உள்ளே வந்தான் என்று தெரியவில்லை.

மறுநாள் காலை முகூர்த்தம் முடிந்த பிறகு எங்கள் கச்சேரி மீண்டும் துவங்கியது. முகுந்தன் எங்களைப் பார்த்துச் சிரித்ததோடு சரி. பிறகு ஒரு மூலையில் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.

என்னைப் பார்க்க என் அறைக்கு என் மாமா வந்தார். என்னிடம் சற்று நேரம் பேசி விட்டு, "ஏன் அவர்  மட்டும் தனியே உட்கார்ந்திருக்காரு?" என்றார் முகுந்தனைப் பார்த்து.

"தெரியல. அவருக்கு நாங்க பேசற விஷயம் பிடிக்கல போலருக்கு" என்றேன் நான்.

மாமா எழுந்து சென்று முகுந்தன் அருகில் அமர்ந்து அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

மாலை ரிசப்ஷனுக்கு ஒரு கச்சேரி ஏற்பாடு செய்திருந்தார்கள். பாடகருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் வர முடியவில்லை என்று தகவல் வந்தது.

ரிசப்ஷன் துவங்கியதும், மாமா மேடைக்குச் சென்று, "பாட்டுக் கச்சேரி இல்லையென்பதால் பேச்சுக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இப்போது 'திருமண வாழ்க்கையின் அற்புதங்கள்' என்ற தலைப்பில் திரு முகுந்தன் பேசுவார்" என்று அறிவித்தார். சில வினாடிகள் மௌனத்துக்குப் பின் அவர் "முகுந்தன் திருமணம் ஆகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது!" என்றதும் அவையில் இலேசான சிரிப்பொலி எழுந்தது.

பேசப் போவது என் அறையில் இருக்கும் முகுந்தனா, அல்லது வேறு யாராவதா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே, என் அறையில் தங்கியிருக்கும் முகுந்தன் மேடையேறினான்.

அடுத்த ஒரு மணி நேரம் அனைவரையும் தன் பேச்சினால் கட்டிப் போட்டு விட்டான் முகுந்தன். 'திருமண வாழ்க்கை' என்ற ஒரு சாதாரண தலைப்பில் இவ்வளவு சுவாரசியமாகப் பேச முடியுமா என்று வியப்பாக இருந்தது. மனோதத்துவ உண்மைகள், உண்மைச் சம்பவங்கள், நகைச்சுவை என்று எல்லாம் கலந்து அவன் படைத்த பல்சுவை விருந்தை ரசிக்காதவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம்.

அவன் பேசி முடித்ததும் நீண்ட கரவொலி எழுந்தது. நான் மேடைக்குச் சென்று அவனைக் கைகுலுக்கிப் பாராட்டினேன்.

என் மாமா தனிமையில் இருந்தபோது அவரிடம் கேட்டேன். "எப்படி மாமா இவன்கிட்ட இப்படி ஒரு திறமை இருக்கிறதைக் கண்டு பிடிச்சீங்க?"

"அவன் தனியா உக்காந்துக்கிட்டிருக்கறப்ப அவன்கிட்ட போய்ப் பேசினேன். 'நீ ஏன் அவங்களோட உக்காந்து பேசாம தனியா உக்காந்துக்கிட்டிருக்கே'ன்னு கேட்டேன். அவன் பதில் சொல்லாம சிரிச்சான். அவன் என்ன செய்யறான்னு பாத்தேன். ஒரு நோட்டில நிறைய விஷயங்கள் குறிச்சு வச்சிருந்தான். இலக்கியம், ஆன்மிகம், சமூக விஷயங்கள்னு பல விஷயங்களைப் பத்தி. இதையெல்லாம் எங்கேந்து சேகரிச்சேன்னு கேட்டேன். அவன் சொன்னான். 'பொதுவா எனக்கு சும்மா அரட்டை அடிக்கறதெல்லாம் பிடிக்காது. நான் படிச்சதில, கேட்டதில நல்ல விஷயங்களை இந்த நோட்டில குறிச்சு வைப்பேன். எனக்குத் தோணற விஷயங்களையும் குறிச்சு வைப்பேன். வெளியில எங்கேயாவது இருக்கறப்ப எனக்கு ஏதாவது தோணினா என் மொபைல்ல ரிக்கார்டு பண்ணி, வீட்டுக்குப் போனதும் அதை நோட்டில எழுதி வைப்பேன்'னு சொன்னான்.

"பாடகர் வர மாட்டார்னு மத்தியானமே தெரிஞ்சு போச்சு. 'நீ பேசறியா?'ன்னு முகுந்தன்கிட்ட கேட்டேன். முதல்ல தயங்கினான். அப்புறம் ஒத்துக்கிட்டான். நான் நெனச்ச மாதிரியே அற்புதமாப் பேசிட்டான். நீ என்ன நெனைக்கறே?" என்றார் மாமா.

"முகுந்தனும் கிரேட், நீங்களும் கிரேட்!" என்றேன் நான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ: 

    அறத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை

குறள் 199
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் 
மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.

பொருள்:  
மயக்கம் இல்லாத மாசற்ற அறிவுடையவர்கள் பயனற்ற சொற்களைக் கூற மாட்டார்கள்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Monday, September 3, 2018

198. கடைசி வகுப்பு

குருகுலக் கல்வி முடிந்து அன்று கடைசி வகுப்பு.

சில ஆண்டுகள் குருவின் இல்லத்தில் தங்கிப் படித்துப் பல பாடங்களைக் கற்று, குரு வைத்த சோதனையிலும் தேர்ச்சி பெற்று சீடர்கள் வீடு திரும்பத் தயாராயிருந்தனர்.

அவர்கள் கிளம்பிச் செல்லுமுன் கடைசியாக ஒரு வகுப்பு எடுக்க குரு விரும்பினார்.

கடைசி வகுப்பில் குரு சிறப்பாக ஏதோ சொல்வார் என்ற எதிர்பார்ப்புடன் சீடர்கள் காத்திருந்தனர்.

"நான் இன்று புதிதாக எதுவும் சொல்லப் போவதில்லை!" என்று துவங்கினார் குரு.

தொடர்ந்து, "நீங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் பார்த்த ஏதாவது ஒரு காட்சியை விவரியுங்கள். ஒவ்வொருவரும் ஐந்து நிமிடங்களுக்காவது பேச வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகளையும் விவரிக்கலாம்" என்றார்.

முதலில் அனைவருமே சற்றுத் தயங்கினர். பின், ஒவ்வொருவராக ஒரு காட்சியை விவரித்தனர்.

அனைவரும் சொல்லி முடித்ததும், குரு தான் பார்த்த ஒரு காட்சியை விவரித்தார்.

"ஒரு தடவை மழை பெய்து கொண்டிருந்தது. சிறிய அளவு மழைதான். நான் ஆசிரமத்தில் அமர்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு குருவி மழையில் நனைந்தபடியே ஒரு தகரக் குவளையை மழையில் வைத்து விட்டு வந்தது. சற்று நேரம் கழித்து அதுவும் இன்னொரு குருவியும் சேர்ந்து மிகவும் சிரமத்துடன் மழை நீரால் நிரம்பிய குவளையைத் தங்கள் அலகுகளால் பிடித்துத் தூக்கிச் சென்று மரத்தடியில் சற்று மறைவான ஓரிடத்தில் வைத்தன. ஒரு நாய் சாலையோரத்தில் நின்றபடி தன் கால்களால் ஒரு குறுகிய வாய்க்கால் போல் பள்ளம் தோண்டியது. அந்தப் பள்ளம் வழியே மழைத் தண்ணீர் சாலையிலிருந்து வழிந்து சற்றுத் தள்ளியிருந்த செடிகளுக்குப் பாய்ந்தது. நாய் தெரிந்து செய்ததா தெரியாமல் செய்ததா என்று எனக்குத் தெரியாது."

இது போல் இன்னும் சில சம்பவங்களை விவரித்த பின், "உங்களுக்கு ஒரு சிறிய பரிசு கொடுக்கிறேன்" என்று சொல்லி ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய பனை ஓலைக்கட்டும், ஒரு எழுத்தாணியும் கொடுத்து அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

குருகுல வாசம் முடிந்து வீட்டுக்கு வந்த சிரவணனிடம் அவன் தந்தை அவனுடைய குருகுல அனுபவம் பற்றி விசாரித்தார்.

"நிறையக் கற்றுக் கொண்டேன். ஆனால் கடைசி வகுப்பு என்று ஒரு வகுப்பு வைத்து, பயனில்லாத விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார் குரு. அது ஏனென்று எனக்குப் புரியவில்லை" என்றான் சிரவணன்.

"உன் குருவைப் போன்ற ஒரு ஞானி பயனற்ற விஷயங்களைப் பேசவும் மாட்டார், செய்யவும் மாட்டார். அவர் சொன்னவற்றுக்கு ஏதாவது ஒரு பொருள் இருக்கும். யோசித்துப் பார்த்தால் உனக்கே விளங்கும். நீங்கள் யோசிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருந்திருக்கும். நீயே யோசித்துப் பார்த்து என்னிடம் சொல்" என்றார் அவன் தந்தை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு சிரவணன் தன் தந்தையிடம் சொன்னான். "அப்பா! நீங்கள் சொன்னபடி யோசித்துப் பார்த்ததில் எனக்குச் சில விஷயங்கள் தோன்றின. அவை சரியா என்று சொல்லுங்கள்."

"சரி, சொல்லு."

"இத்தனை ஆண்டுகளாக நாங்கள் குருகுலத்தில் குரு சொல்வதைக் கேட்டுக் கொண்டு மட்டும்தான் இருந்தோம். அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னதைத் தவிர நாங்கள் எதுவும் பேசியதில்லை. பேசுவதற்கு எங்களை ஊக்குவிக்கத்தான் எங்களை ஏதாவது ஒரு காட்சியை விவரிக்கச் சொன்னார் என்று நினைக்கிறேன். ஐந்து நிமிடம் பேசுவது சவாலாக இருந்தது. பேசி முடித்தும் திருப்தியாகவும் இருந்தது."

"சரி. அப்புறம்?"

"எங்களைப் பேசச் சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல், குரு அவர் கண்ட சில காட்சிகளையும் விவரித்தார். அவை பொருள் பொதிந்தவை என்று நினைக்கிறேன். மழை பெய்யும்போது தண்ணீர் பெருகுகிறது. ஆனால் மழை நின்றதும் நீர்வரத்து நின்று விடும். மழை நீரை ஒரு குருவி கஷ்டப்பட்டு சேமித்து வைக்கிறது. அது போல் நாங்கள் கற்ற கல்வி மறக்காமல் இருக்க, நாங்கள் கற்றவற்றை மனதில் இருத்தி வைக்க வேண்டும். மறக்காமல் இருக்க, சில விஷயங்களைக் குறித்தும் வைக்க வேண்டும். அதற்காகத்தான் புதிய ஓலைச் சுவடிகளும் எழுத்தாணிகளும் கொடுத்தார் என்று நினைக்கிறேன். நாய் பள்ளம் தோண்டி மழைத் தண்ணீரைச் செடிகளுக்குப் பாயச் செய்தது போல், நாங்களும் கற்ற கல்வி பயன் தரும் வகையில் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது போல் அவர் கூறிய இன்னும் சில நிகழ்ச்சிகளுக்கும் உட்பொருள் இருக்கும். அவை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் சிரவணன்.

"நன்று. உன் குருவின் எதிர்பார்ப்புகளை நீ பெருமளவு நிறைவேற்றி விட்டாய் என்று நினைக்கிறேன். உன் குரு உங்களுக்குப் புதிய ஓலைச் சுவடிகளைக் கொடுத்ததற்கு இன்னொரு பொருள் கூட இருக்கலாம். 'கல்வி இதோடு முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள், இனியும் நீங்கள் பல விஷயங்களைக் கற்க வேண்டியிருக்கும். அவற்றைக்  குறித்துக் கொள்ளத்தான் இந்த ஓலைச்சுவடிகள் என்று கூட வைத்துக் கொள்ளலாம்" என்றார் சிரவணனின் தந்தை.

"பயனில்லாமல் பேசிக் கழித்தது என்று நான் நினைத்த வகுப்பில் எத்தனை விஷயங்களை எங்களுக்குக் கற்றுக் கொடுக்க முயன்றிருக்கிறார் எங்கள் குரு!" என்றான் சிரவணன் வியப்புடன்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை

குறள் 198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 
பெரும்பயன் இல்லாத சொல்.

பொருள்:  
நற்பயன்களை ஆராயும் அறிவு படைத்தவர்கள் பெரும் பயனை விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்