About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, September 3, 2018

198. கடைசி வகுப்பு

குருகுலக் கல்வி முடிந்து அன்று கடைசி வகுப்பு.

சில ஆண்டுகள் குருவின் இல்லத்தில் தங்கிப் படித்துப் பல பாடங்களைக் கற்று, குரு வைத்த சோதனையிலும் தேர்ச்சி பெற்று சீடர்கள் வீடு திரும்பத் தயாராயிருந்தனர்.

அவர்கள் கிளம்பிச் செல்லுமுன் கடைசியாக ஒரு வகுப்பு எடுக்க குரு விரும்பினார்.

கடைசி வகுப்பில் குரு சிறப்பாக ஏதோ சொல்வார் என்ற எதிர்பார்ப்புடன் சீடர்கள் காத்திருந்தனர்.

"நான் இன்று புதிதாக எதுவும் சொல்லப் போவதில்லை!" என்று துவங்கினார் குரு.

தொடர்ந்து, "நீங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் பார்த்த ஏதாவது ஒரு காட்சியை விவரியுங்கள். ஒவ்வொருவரும் ஐந்து நிமிடங்களுக்காவது பேச வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகளையும் விவரிக்கலாம்" என்றார்.

முதலில் அனைவருமே சற்றுத் தயங்கினர். பின், ஒவ்வொருவராக ஒரு காட்சியை விவரித்தனர்.

அனைவரும் சொல்லி முடித்ததும், குரு தான் பார்த்த ஒரு காட்சியை விவரித்தார்.

"ஒரு தடவை மழை பெய்து கொண்டிருந்தது. சிறிய அளவு மழைதான். நான் ஆசிரமத்தில் அமர்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு குருவி மழையில் நனைந்தபடியே ஒரு தகரக் குவளையை மழையில் வைத்து விட்டு வந்தது. சற்று நேரம் கழித்து அதுவும் இன்னொரு குருவியும் சேர்ந்து மிகவும் சிரமத்துடன் மழை நீரால் நிரம்பிய குவளையைத் தங்கள் அலகுகளால் பிடித்துத் தூக்கிச் சென்று மரத்தடியில் சற்று மறைவான ஓரிடத்தில் வைத்தன. ஒரு நாய் சாலையோரத்தில் நின்றபடி தன் கால்களால் ஒரு குறுகிய வாய்க்கால் போல் பள்ளம் தோண்டியது. அந்தப் பள்ளம் வழியே மழைத் தண்ணீர் சாலையிலிருந்து வழிந்து சற்றுத் தள்ளியிருந்த செடிகளுக்குப் பாய்ந்தது. நாய் தெரிந்து செய்ததா தெரியாமல் செய்ததா என்று எனக்குத் தெரியாது."

இது போல் இன்னும் சில சம்பவங்களை விவரித்த பின், "உங்களுக்கு ஒரு சிறிய பரிசு கொடுக்கிறேன்" என்று சொல்லி ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய பனை ஓலைக்கட்டும், ஒரு எழுத்தாணியும் கொடுத்து அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

குருகுல வாசம் முடிந்து வீட்டுக்கு வந்த சிரவணனிடம் அவன் தந்தை அவனுடைய குருகுல அனுபவம் பற்றி விசாரித்தார்.

"நிறையக் கற்றுக் கொண்டேன். ஆனால் கடைசி வகுப்பு என்று ஒரு வகுப்பு வைத்து, பயனில்லாத விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார் குரு. அது ஏனென்று எனக்குப் புரியவில்லை" என்றான் சிரவணன்.

"உன் குருவைப் போன்ற ஒரு ஞானி பயனற்ற விஷயங்களைப் பேசவும் மாட்டார், செய்யவும் மாட்டார். அவர் சொன்னவற்றுக்கு ஏதாவது ஒரு பொருள் இருக்கும். யோசித்துப் பார்த்தால் உனக்கே விளங்கும். நீங்கள் யோசிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருந்திருக்கும். நீயே யோசித்துப் பார்த்து என்னிடம் சொல்" என்றார் அவன் தந்தை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு சிரவணன் தன் தந்தையிடம் சொன்னான். "அப்பா! நீங்கள் சொன்னபடி யோசித்துப் பார்த்ததில் எனக்குச் சில விஷயங்கள் தோன்றின. அவை சரியா என்று சொல்லுங்கள்."

"சரி, சொல்லு."

"இத்தனை ஆண்டுகளாக நாங்கள் குருகுலத்தில் குரு சொல்வதைக் கேட்டுக் கொண்டு மட்டும்தான் இருந்தோம். அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னதைத் தவிர நாங்கள் எதுவும் பேசியதில்லை. பேசுவதற்கு எங்களை ஊக்குவிக்கத்தான் எங்களை ஏதாவது ஒரு காட்சியை விவரிக்கச் சொன்னார் என்று நினைக்கிறேன். ஐந்து நிமிடம் பேசுவது சவாலாக இருந்தது. பேசி முடித்தும் திருப்தியாகவும் இருந்தது."

"சரி. அப்புறம்?"

"எங்களைப் பேசச் சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல், குரு அவர் கண்ட சில காட்சிகளையும் விவரித்தார். அவை பொருள் பொதிந்தவை என்று நினைக்கிறேன். மழை பெய்யும்போது தண்ணீர் பெருகுகிறது. ஆனால் மழை நின்றதும் நீர்வரத்து நின்று விடும். மழை நீரை ஒரு குருவி கஷ்டப்பட்டு சேமித்து வைக்கிறது. அது போல் நாங்கள் கற்ற கல்வி மறக்காமல் இருக்க, நாங்கள் கற்றவற்றை மனதில் இருத்தி வைக்க வேண்டும். மறக்காமல் இருக்க, சில விஷயங்களைக் குறித்தும் வைக்க வேண்டும். அதற்காகத்தான் புதிய ஓலைச் சுவடிகளும் எழுத்தாணிகளும் கொடுத்தார் என்று நினைக்கிறேன். நாய் பள்ளம் தோண்டி மழைத் தண்ணீரைச் செடிகளுக்குப் பாயச் செய்தது போல், நாங்களும் கற்ற கல்வி பயன் தரும் வகையில் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது போல் அவர் கூறிய இன்னும் சில நிகழ்ச்சிகளுக்கும் உட்பொருள் இருக்கும். அவை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் சிரவணன்.

"நன்று. உன் குருவின் எதிர்பார்ப்புகளை நீ பெருமளவு நிறைவேற்றி விட்டாய் என்று நினைக்கிறேன். உன் குரு உங்களுக்குப் புதிய ஓலைச் சுவடிகளைக் கொடுத்ததற்கு இன்னொரு பொருள் கூட இருக்கலாம். 'கல்வி இதோடு முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள், இனியும் நீங்கள் பல விஷயங்களைக் கற்க வேண்டியிருக்கும். அவற்றைக்  குறித்துக் கொள்ளத்தான் இந்த ஓலைச்சுவடிகள் என்று கூட வைத்துக் கொள்ளலாம்" என்றார் சிரவணனின் தந்தை.

"பயனில்லாமல் பேசிக் கழித்தது என்று நான் நினைத்த வகுப்பில் எத்தனை விஷயங்களை எங்களுக்குக் கற்றுக் கொடுக்க முயன்றிருக்கிறார் எங்கள் குரு!" என்றான் சிரவணன் வியப்புடன்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 20       
பயனில சொல்லாமை

குறள் 198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 
பெரும்பயன் இல்லாத சொல்.

பொருள்:  
நற்பயன்களை ஆராயும் அறிவு படைத்தவர்கள் பெரும் பயனை விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

No comments:

Post a Comment