
"ஏம்ப்பா, கட்சியிலே புதுசா ஒரு ஆளைச் சேத்து விட்டியே சரவணன்னு?" என்றான் பகுதிச் செயலாளர் முத்து.
"ஆமாம்" என்றான் சண்முகம்.
"அவன் எங்கே?"
"நான் அவனைப் பாத்து ரெண்டு நாள் ஆச்சே, அண்ணே. ஏன் கேக்கறீங்க?"
"அவன் எப்படி, நம்பகமான ஆளுதானே?"
"ஆமாங்க. ஏன் கேக்கறீங்க?"
"இல்ல. ஒரு வேலை சொன்னேன். அதை முடிச்சானான்னு தெரியல."
"ஏங்க, அவன் புதுசு. அவனை நம்பி ஏன் கொடுத்தீங்க? எங்கிட்ட சொல்லியிருந்தா, நான் செஞ்சிருப்பேனே!" என்றான் சண்முகம்.
"ஏண்டா, அறிவு இருக்காடா உனக்கு?" என்றான் முத்து.
சண்முகம் சற்று அதிர்ச்சியுடன் பகுதிச் செயலாளர் முத்துவைப் பார்த்தான்.
தன் போன்ற சாதாரணத் தொண்டர்கள் முத்து போன்ற குட்டித் தலைவர்களிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியாது என்பது சண்முகத்துக்குத் தெரிந்ததுதான். ஆயினும், குட்டித் தலைவனின் திடீர்க் கோபம் அவனுக்கு அதிர்ச்சியளித்தது.
"என்ன ஆச்சு தலைவரே?"
"ஒரு ஆளோட கையைக் காலை உடைக்கணும், ஆனா, நம்ப கட்சிக்காரங்க செஞ்சாங்கன்னு தெரியக் கூடாதுன்னுட்டுதான் புது ஆளாச்சேன்னு அவன்கிட்ட வேலையைக் கொடுத்தேன். ஒங்கிட்ட கொடுக்கலாம்னு எனக்குத் தெரியாதா?"
"பயந்திருப்பான். நான் போய்ப் பாத்துக் கூட்டிக்கிட்டு வரேன்" என்றான் சண்முகம்.
"வேண்டாம். அவன் செய்ய மாட்டான். விடு. வேற விதமா செஞ்சுக்கலாம்"
"அடிதடியெல்லாம் செய்யணும்னு சொல்லித்தான் கட்சியில சேத்து விட்டேன், தலைவரே, முதல் தடவைங்கறதால கொஞ்சம் தயங்கியிருப்பான். பழகினா, சரியாயிடும்" என்றான் சண்முகம்.
"வேணாம். எனக்குத் தெரியும். எத்தனை பேரைப் பாத்திருக்கேன்! நிறைய பேர் ரௌடி மாதிரி பேசுவாங்க. யாராவது அடிச்சா, திருப்பி அடிப்பாங்க. ஆனா, ஒரு ஆளை அடிக்கச் சொன்னாலோ, போட்டுத் தள்ளச் சொன்னாலோ, யோசனை பண்ணுவாங்க. உன்னை மாதிரி எல்லாத்திலேயும் துணிஞ்சு இறங்கறவங்க சில பேருதான் இருப்பாங்க" என்றான் முத்து.
தலைவன் தன்னைப் பாராட்டுகிறானா, அல்லது, தான் எந்த ஒரு மோசமான செயலையும் செய்யத் தயங்காதவன் என்று சொல்கிறானா என்று சண்முகத்துக்குப் புரியவில்லை.
இல்லறவியல்
அதிகாரம் 21
தீவினையச்சம்
குறள் 201தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
பொருள்:
தீய செயல்களைச் செய்யும் இயல்பு படைத்தவர்கள் தீய செயல்களைச் செய்ய அஞ்ச மாட்டார்கள். ஆனால், நல்ல உள்ளம் படைத்தவர்கள் தீய செயல்களைச் செய்ய அஞ்சுவார்கள்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment