About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, May 21, 2016

65. புவனா - ஒரு கேள்விக்குறி!

புவனா சமையல் செய்து கொண்டிருந்தபோது குழந்தை அழும் சத்தம் கேட்டது. அடுப்பை அணைத்து விட்டு வேகமாக ஓடினாள். குழந்தையின் சிறுநீரால் தூளி நனைந்து, கீழே நீர் சொட்டிக்கொண்டிருந்தது.

"அடாடா! டயபர் போட மறந்து விட்டேனே!" என்று சொன்னபடியே குழந்தையைத் தூக்கினாள். துண்டால் குழந்தையின் உடலைத் துடைத்து விட்டுக் கீழே கிடத்தினாள்!

குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்து விட்டுக் கையை உயர்த்தியது. புவனா தன் முகத்தைக் குழந்தைக்கு நெருக்கமாகக் கொண்டு சென்றாள்.

குழந்தையின் பிஞ்சுக் கரம் அவள் மீது பட்டதும் அவளுக்குப் புளகாங்கிதம் ஏற்பட்டது. இரண்டு மூன்று முறை அவளைத் தொட்ட பிறகு திடீரென்று பெரிதாகச் சிரித்தபடியே குழந்தை அவள் கன்னத்தில் ஓங்கி அடிக்க ஆரம்பித்தது.

கரை கடந்த மகிழ்ச்சியில் புவனா குழந்தையை வாரி அணைத்தபடி, "என் செல்லமே!" என்று முகத்தோடு முகம் வைத்து உச்சி முகர்ந்தாள்.

குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தபடியே 'பே பே பே...' என்று ஏதோ பேசியது. "என்னம்மா கண்ணு  சொல்றே? எனக்கு ஒண்ணுமே புரியல்லியே!" என்ற புவனா குழந்தையைத் தோளில் தூக்கிக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.

பெரும்பாலும் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டும், சில சமயம் கீழே விட்டு விட்டும் சமையலை முடித்தாள். குழந்தையைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே சாப்பிட்டு விட்டுப் பிற வேலைகளையும் செய்து முடித்தாள். பிறகு நீண்ட நேரம் குழந்தையுடன் பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தாள்.

குழந்தைக்குப் பால் கொடுத்து அதை மறுபடியும் தூங்க வைத்தபோது மாலை ஆறு மணி ஆகி விட்டது. ஏழு மணிக்கு அவள் கணவன்  ராமகிருஷ்ணன் அலுவலகத்திலிருந்து வந்தான்.

"குழந்தை எங்கே?" என்றான்.

"தூளியில் துங்குகிறது" என்றாள் புவனா. ராமகிருஷ்ணன், தூளிக்குள் தலையை விட்டு, அமைதியாகத் தூங்கும் அந்தப் பிஞ்சு முகத்தைப்  பார்த்து ரசித்தபின், உடை மாற்றிக் கொள்ள உள்ளே சென்றான்.

சற்று நேரத்தில் அழைப்பு மணி அடித்தது. புவனா கதவைத் திறந்தாள்.

செல்வி!

"குழந்தை என்ன செய்கிறது ஆன்ட்டி?" என்றாள் செல்வி.

"தூங்குகிறது" என்றாள் புவனா.

"நான் போய் உடை மாற்றிக்கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு ஏதாவது செய்து விட்டு, இன்னும் அரைமணியில் வந்து குழந்தையை எடுத்துப் போகிறேன். அதற்குள் அது விழித்துக்கொண்டு அழுதால் வந்து எடுத்துக்கொண்டு போகிறேன்" என்றாள் செல்வி.

"மெதுவாகவே வா! குழந்தை விழித்துக்கொள்ள இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்" என்றாள் புவனா.

"ரொம்ப தாங்க்ஸ் ஆன்ட்டி! நீங்கள் இல்லாவிட்டால் என்ன செய்திருப்போம் என்றே தெரியவில்லை!"

"நான் வீட்டில் தனியாகத்தானே இருக்கிறேன்! குழந்தையைப் பார்த்துக் கொள்வதால் எனக்கும் இனிமையாகப் பொழுது போகிறது" என்றாள் புவனா.

செல்வி பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த ராமகிருஷ்ணன் "அவள் ஏன் உன்னை ஆன்ட்டி என்று கூப்பிடுகிறாள்? அக்கா என்று கூப்பிடலாமே! உனக்கும் எனக்கும் அவ்வளவு வயது ஆகி விடவில்லையே!" என்றான்.

"இல்லை. நமக்கு இன்னும் வயதாகி விடவில்லை. நமக்கும் ஒரு குழந்தை பிறக்கும். இப்போது செல்வியின் குழந்தையைக் கொஞ்சுவதைப் போல நம் குழந்தையையும் நான் கொஞ்சுவேன்!' என்று நினைத்துக் கொண்டாள் புவனா.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் 
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

பொருள்:
தம் குழந்தைகளின் உடலைத் தீண்டுவது உடலுக்கு இன்பமளிக்கும். குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்பது காதுக்கு இன்பமளிக்கும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














Friday, May 20, 2016

64. அமுதினும் இனியது!

"நாமும் கோவில் கோவிலாப் போய்க்கிட்டிருக்கோம். கடவுள் இன்னும் நமக்குக் கருணை காட்டலியே!" என்றாள் சுகன்யா.

"கோவிலுக்குள்ள நுழையும்போதே இப்படி அலுத்துக்கிட்டா எப்படி நம்மால அமைதியாக் கடவுள்கிட்ட வேண்டிக்க முடியும்?" என்றான் அவள் கணவன் பலராமன்.

"நான் ஏன் இப்படி அலுத்துக்கறேன்னு கடவுளுக்குத் தெரியாதா? அமைதியா வேண்டிக்கறதை விட, இப்படி மனசு வருத்தப்பட்டு அங்கலாய்க்கும்போதாவது நம்ம வருத்தம் எவ்வளவு ஆழமானதுன்னு கடவுளுக்குப் புரியட்டுமே!"

"சரி வா. சன்னதி கிட்ட வந்துட்டோம். கூட்டம் அதிகமா இல்லை. உள்ள போய் சாமி தரிசனம் பண்ணிட்டு வந்துடலாம்."

கடவுளிடம் இருவருமே மனம் உருகி வேண்டிக் கொண்டார்கள்.

வெளியே வந்து பிரகாரத்தைச் சுற்றும்போது, பலராமன் பிரசாதங்கள் விற்கும் இடத்தை நோக்கிப் போனான்.

"ஒவ்வொரு கோவில்லேயும் தவறாம பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டுடறீங்க. உங்களுக்கு பலராமன் என்பதற்கு பதிலா, சாப்பாட்டு ராமன்னு பேர் வச்சிருக்கலாம்!"

"நான் மட்டுமா சாப்பிடறேன்? உனக்கும்தானே வாங்கிக் கொடுக்கறேன்? நான் தனியாக் கோவிலுக்குப் போனாக் கூட உனக்குப் பிரசாதம் வாங்கிக்கிட்டு வந்து கொடுப்பேனே! இந்தக் கோவில்ல அதிரசம் ரொம்ப நல்லா இருக்கும். அதுதான்."

"எந்தக் கோவில்ல எந்தப் பிரசாதம் விசேஷம்கறது உங்களுக்கு அத்துப்படியாச்சே! நீங்க கோவிலுக்கு வரதே பிரசாதம் வாங்கிச் சாப்பிடத்தானோன்னு தோணுது!"

அவள் பேச்சைப் பொருட்படுத்தாமல் பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்த பலராமன் கோவில் பிரகாரத்தை ஒட்டி இருந்த குளக்கரைக்கு வந்தான். மனைவிக்கு ஒரு அதிரசத்தைக் கொடுத்து விட்டு இன்னொன்றை விண்டு வாயில் போட்டுக் கொள்ளப் போனவன் அப்படியே நின்று விட்டான்.

குளக்கரையில் ஒரு இளம் தம்பதி ஒரு இட்லிப் பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பெண்ணின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை கீழே தாவி மண்ணில் கை வைத்துத் தவழ்ந்து போய், தந்தையின் கையிலிருந்த ஒரு இட்லியைத் தன் கையால் அழுத்திப் பிசைந்து, அதைக் கூழாக்கியது.

குழந்தையின் கையிலிருந்த மண் படிந்த அந்தக் கூழை, குழந்தையின் தந்தை ஆவலுடன் எடுத்து வாயில் போட்டுச் சுவைத்ததைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் பலராமன்.

'என்னங்க, உங்களுக்குப் பிடிச்ச அதிரசத்தைக் கூடச் சாப்பிடாமல் அந்தக் குழந்தையையே பாத்துக்கிட்டிருக்கீங்க?"

"அந்தக் குழந்தையோட அப்பா இடத்தில நான் இருந்தா, இந்த அதிரசத்தை விட அந்தக் குழந்தையோட அழுக்குக் கை பட்ட அந்த இட்லிக்கூழ்தான் எனக்கு அதிக ருசியா இருந்திருக்கும்!" என்றான் பலராமன் ஏக்கத்துடன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 
சிறுகை அளாவிய கூழ்.

பொருள்:
தன் குழந்தையின் சிறு கையால் அளாவப்பட்ட கூழ்தான் ஒருவருக்கு அமிர்தத்தை விட இனிப்பதாக இருக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Thursday, May 19, 2016

63. தென்னையைப் பெத்தா இளநீரு, புள்ளையைப் பெத்தா கண்ணீரு!

நல்லசிவம் தன் நண்பர் தனராஜைப் பார்க்கப் போனபோது, அவர் வெளியில் போயிருப்பதாக அவர் மனைவி சொன்னாள். சற்று நேரம் காத்திருந்தபின் தனராஜ் வந்தார். நல்லசிவத்தைப் பார்த்ததும், அவரை உள்ளே அழைத்துச் சென்றார்.

உள்ளே சென்று கதவைச் சாத்தியதும், தனராஜால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. துண்டில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மினார்.

நல்லசிவம் பதறிப்போய், "என்ன தனராஜ் இது, குழந்தை மாதிரி? என்ன ஆச்சு?"என்றார்.

"எல்லாம் இந்த செந்தில் விஷயம்தான். மொதல்ல ஏகப்பட்ட பணம் செலவழிச்சுப் படிக்க வச்சேன். அப்புறம் படிப்பு சரியா வரலைன்னு பிசினஸ் பண்ணப் போறேன்னான். அதுக்கும் முதலீடு, மாதாந்தர செலவுன்னு நெறையப் பணம் கொடுத்தேன். இப்ப தொழில் நஷ்டமாயிடுச்சு, வேற தொழில் செய்யப்போறேன்னு மறுபடி பணம் கேக்கறான்.

"வேண்டாம், நம்ம ஊருக்கு வந்துடு, கொஞ்ச நாள் நிலத்தைப் பாத்துக்கிட்டுரு, அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்னு சொன்னா கேக்க மாட்டேங்கறான். அண்ணன் துபாய்க்குப் போய் நெறையச் சம்பாதிக்கச்சே, நானும் ஏதாவது செஞ்சு பணம் சம்பாதிக்க வேண்டாமான்னு கேக்கறான்.

"ஏற்கனவே பாதி நிலத்தை வித்தாச்சு. மீதி நிலத்தையும் வித்து மொத்தப் பணத்தையும் அவனுக்குக் கொடுத்துட்டு நானும் என் சம்சாரமும் சாப்பாட்டுக்கே யார்கிட்டயாவது கையேந்தற நிலைமை வந்துடும் போலருக்கே!"

மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் தனராஜ்.

"ஏன் இப்படியெல்லாம் நெனைக்கிறீங்க? செந்திலுக்கு புது பிசினஸ் நல்லா அமையலாம் இல்லே? அதோட, மூத்தவன் பாலுதான் துபாயில வசதியா இருக்கானே, அவன் உங்களைப் பாத்துக்க மாட்டானா?" என்று சமாதானப்படுத்த முயன்றார் நல்லசிவம்.

"நீங்க வேற நல்லசிவம்! துபாயில தனியா இருந்தா சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவானேன்னு அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சேன். இப்ப அவன் குடும்பத்தோட அங்க சந்தோஷமா இருக்கான். செலவுக்குன்னு எங்களுக்கு ஒரு பைசா கூட அனுப்பறதில்ல. கேட்டா, வர வருமானம் எங்களுக்கே சரியா இருக்கு, ஒரு ரூபா கூட சேமிக்க முடியறதில்லன்னு மூக்கால அழறான். இவன் படிப்புக்கு நான் எவ்வளவு செலவழிச்சிருப்பேன்! எனக்கு வாய்ச்ச ரெண்டு புள்ளைங்களும் இப்படியா இருக்கணும்?"

"சரி. நான் கிளம்பறேன்" என்று நல்லசிவம் எழுந்தார்.

"இருங்க. எதுக்கு வந்தீங்க? உடனே கிளம்பறீங்க! என் கஷ்டத்தைச் சொல்லி அழுது, நீங்க வந்த விஷயத்தைப்பத்திக் கேக்காமயே இருந்துட்டேனே!"

"ஒண்ணும் இல்லை. ராத்திரி கிளம்பி சென்னைக்குப் போறேன். அதுதான் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்!"

"ஓ! ரகுவோட கொஞ்ச நாள் இருந்துட்டு வரப் போறீங்களா? ரெண்டு மூணு வாரத்தில வந்துடுவீங்கல்ல?"

"ம்..." என்றார் நல்லசிவம்.

சென்னையில் இருக்கும் அவர் மூத்த மகன் ரகுவும், பெங்களூருவில் இருக்கும் அவர் இளைய மகன் ரவியும், அவரையும் அவர் மனைவியையும் தங்களுடனேயே வந்து நிரந்தரமாக இருக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்ததையும், ஒவ்வொருவர் வீட்டிலும் மூன்று மாதம் இருந்து விட்டு, கிராமத்து வீட்டை நிரந்தரமாகக் காலி செய்து விட்டு மகன்களுடனேயே இருப்பது பற்றி அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்திருப்பதையும், தனராஜ் அப்போது இருந்த மனநிலையில் அவரிடம் சொல்ல விரும்பவில்லை.

சென்னைக்குப் போய் ஓரிரு தினங்கள் கழித்துத் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 
தம்தம் வினையான் வரும்.

பொருள்:
நமது பிள்ளைகளே நமது சொத்துக்கள். அவரவருக்குக் கிடைக்கும் சொத்து எத்தகையது என்பது அவரவர் வினைப்பயனை ஒட்டி அமையும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Thursday, May 12, 2016

62. பாவமூட்டையின் சுமை குறைய வழி

"போன ஜன்மத்தில என்ன பாவம் பண்ணினேனோ தெரியலே, புடிச்சு ஆட்டுது" என்று அலுத்துக்கொண்டார் புண்ணியகோடி.

"புண்ணியகோடின்னு பேரு வச்சுக்கிட்டு நீங்களே இப்படிப் பேசினா, நாங்கள்ளாம் என்ன செய்யறது?" என்றார் நண்பர்களால் செல்லமாகப் பாவி என்று அழைக்கப்பட்ட பா.விஸ்வநாதன்!

"பேரில என்ன இருக்கு? விடாத இருமலோடு ஒத்தன் ஆஸ்பத்திரிக்குப் போனான். டாக்டர் மருந்துச் சீட்டு எழுதறதுக்கு 'உன் பேரு என்ன?'ன்னு கேட்டாரு. 'ஆரோக்கியராஜ்'னு சொன்னான் அவன். ஆரோக்கியத்தில ராஜாவாம்! அது மாதிரிதான். என் பேரு வெற்றிவேல். எனக்கு எல்லாத்திலயும் வெற்றியா கெடச்சுக்கிட்டிருக்கு? இப்ப கூட மூணு சீட்டில முன்னூறு ரூபா தோத்துட்டுத்தான் வரேன்!" என்றார் வெற்றிவேல்!

"அது இருக்கட்டும். இந்தப் பூர்வ ஜன்ம பலன் என்கிறதெல்லாம் உண்மையா? போன ஜன்மத்தில பண்ணின பாவத்துக்கான பலனை இந்த ஜன்மத்தில அனுபவிக்கணுமா?" என்று கேட்டார் புண்ணியகோடி.

"இந்த ஜன்மத்தில மட்டும் இல்ல. அடுத்த பல ஜன்மங்கள்ளேயும் அனுபவிக்க வேண்டி இருக்கும்" என்றார் விஸ்வநாதன்.

"அது ஏன் அப்படி?" என்றார் வெற்றிவேல்.

"ஏன்னா நம்ம பண்ற பாவம் அவ்வளவு! அதற்கான பலன் அத்தனையையும் ஒரே ஜன்மத்தில அனுபவிக்கணும்னா நம்மால தாங்க முடியாதுன்னுதான் கடவுள் அதைப் பிரிச்சு ரெண்டு மூணு ஜன்மங்கள்ள அனுபவிக்கற மாதிரி பண்ணியிருக்காரு" என்று விளக்கினார் விஸ்வநாதன்.

"அப்ப இந்த ஜன்மத்தில பண்ற பாவமெல்லாம் என்ன ஆகும்?" என்று வினவினார் புண்ணியகோடி.

"அதான் பிரச்னையே! பழைய பாவ மூட்டை கொஞ்சம் குறையறதுக்குள்ள, நாம புதுசா பண்ற பாவங்கள்ளாம் சேர்ந்து இன்னும் மூட்டை பெரிசாகிக்கிட்டே போகும்!"

"அப்போ பாவமூட்டை குறையவே குறையாதா? மறுபடி மறுபடி ஜன்மம் எடுத்துக் கஷ்டப்பட்டுக்கிட்டேதான் இருக்கணுமா?"

"ஒரு வழி இருக்கு!" என்ற குரல் கேட்டது. மூவரும் திரும்பிப் பார்த்தனர். பக்கத்தில் இருந்த மரத்தடியில் ஒருவர் அழுக்கு வேட்டியுடன் மண் தரையில் படுத்திருந்தார்.

'யார் இவர்? சாமியாரா? யோகியா இல்லை சித்தரா?' என்று மூவரும் யோசித்துக் கொண்டிருந்தபோதே, அவர் இவர்களைத் திரும்பிப் பார்க்காமலே பேசினார்: "உங்கள் பிள்ளைகள் எந்தப் பழிக்கும் ஆளாகாமல் பண்புள்ளவர்களாக இருந்தால் ஏழு பிறவிக்கும் உங்களை எந்தத் தீமையும் அண்டாது."

"எப்படிச் சொல்றீங்க சாமி?" என்றார் வெற்றிவேல்.

"நான் சொல்லலே. திருவள்ளுவர் சொல்கிறார்" என்று சொல்லி விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் தூக்கத்தைத் தொடர்ந்தார் 'சாமியார்.'

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
பண்புடை மக்கட் பெறின்.

பொருள்: 
பழிச்சொல் எதற்கும் ஆளாகாமல் பண்புடன் வாழும் புதல்வர்களைப் பெற்றவர்களை முன்வினைப் பயனால் அவர்களுக்கு ஏற்படும் ஏழு பிறவிகளிலும் எந்தத் தீமையும் அண்டாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ"

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்