About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, May 19, 2016

63. இரண்டு பிள்ளைகள்

நல்லசிவம் தன் நண்பர் தனராஜைப் பார்க்கப் போனபோது, அவர் வெளியில் போயிருப்பதாக அவர் மனைவி சொன்னாள். சற்று நேரம் காத்திருந்தபின் தனராஜ் வந்தார். நல்லசிவத்தைப் பார்த்ததும், அவரை உள்ளே அழைத்துச் சென்றார்.

உள்ளே சென்று கதவைச் சாத்தியதும், தனராஜால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. துண்டில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மினார்.

நல்லசிவம் பதறிப் போய், "என்ன தனராஜ் இது, குழந்தை மாதிரி? என்ன ஆச்சு?"என்றார்.

"எல்லாம் இந்த செந்தில் விஷயம்தான். மொதல்ல ஏகப்பட்ட பணம் செலவழிச்சுப் படிக்க வச்சேன். அப்புறம் படிப்பு சரியா வரலைன்னு பிசினஸ் பண்ணப் போறேன்னான். அதுக்கும் முதலீடு, மாதாந்தர செலவுன்னு நெறையப் பணம் கொடுத்தேன். இப்ப தொழில் நஷ்டமாயிடுச்சு, வேற தொழில் செய்யப் போறேன்னு மறுபடி பணம் கேக்கறான்.

"வேண்டாம், நம்ம ஊருக்கு வந்துடு, கொஞ்ச நாள் நிலத்தைப் பாத்துக்கிட்டுரு, அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்னு சொன்னா கேக்க மாட்டேங்கறான். அண்ணன் துபாய்க்குப் போய் நெறையச் சம்பாதிக்கச்சே, நானும் ஏதாவது செஞ்சு பணம் சம்பாதிக்க வேண்டாமான்னு கேக்கறான்.

"ஏற்கனவே பாதி நிலத்தை வித்தாச்சு. மீதி நிலத்தையும் வித்து மொத்தப் பணத்தையும் அவனுக்குக் கொடுத்துட்டு நானும் என் சம்சாரமும் சாப்பாட்டுக்கே யார்கிட்டயாவது கையேந்தற நிலைமை வந்துடும் போலருக்கே!"

மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் தனராஜ்.

"ஏன் இப்படியெல்லாம் நெனைக்கிறீங்க? செந்திலுக்கு புது பிசினஸ் நல்லா அமையலாம் இல்லே? அதோட, மூத்தவன் பாலுதான் துபாயில வசதியா இருக்கானே, அவன் உங்களைப் பாத்துக்க மாட்டானா?" என்று சமாதானப்படுத்த முயன்றார் நல்லசிவம்.

"நீங்க வேற நல்லசிவம்! துபாயில தனியா இருந்தா சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவானேன்னு அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சேன். இப்ப அவன் குடும்பத்தோட அங்க சந்தோஷமா இருக்கான். செலவுக்குன்னு எங்களுக்கு ஒரு பைசா கூட அனுப்பறதில்ல. கேட்டா, வர வருமானம் எங்களுக்கே சரியா இருக்கு, ஒரு ரூபா கூட சேமிக்க முடியறதில்லன்னு மூக்கால அழறான். இவன் படிப்புக்கு நான் எவ்வளவு செலவழிச்சிருப்பேன்! எனக்கு வாய்ச்ச ரெண்டு புள்ளைங்களும் இப்படியா இருக்கணும்?"

"சரி. நான் கிளம்பறேன்" என்று நல்லசிவம் எழுந்தார்.

"இருங்க. எதுக்கு வந்தீங்க? உடனே கிளம்பறீங்க! என் கஷ்டத்தைச் சொல்லி அழுது, நீங்க வந்த விஷயத்தைப் பத்திக் கேக்காமயே இருந்துட்டேனே!"

"ஒண்ணும் இல்லை. ராத்திரி கிளம்பி சென்னைக்குப் போறேன். அதுதான் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்!"

"ஓ! ரகுவோட கொஞ்ச நாள் இருந்துட்டு வரப் போறீங்களா? ரெண்டு மூணு வாரத்தில வந்துடுவீங்கல்ல?"

"ம்..." என்றார் நல்லசிவம்.

சென்னையில் இருக்கும் அவர் மூத்த மகன் ரகுவும், பெங்களூருவில் இருக்கும் அவர் இளைய மகன் ரவியும், அவரையும் அவர் மனைவியையும் தங்களுடனேயே வந்து நிரந்தரமாக இருக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்ததையும், ஒவ்வொருவர் வீட்டிலும் மூன்று மாதம் இருந்து விட்டு, கிராமத்து வீட்டை நிரந்தரமாகக் காலி செய்து விட்டு மகன்களுடனேயே இருப்பது பற்றி அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்திருப்பதையும், தனராஜ் அப்போது இருந்த மனநிலையில் அவரிடம் சொல்ல நல்லசிவம் விரும்பவில்லை.

சென்னைக்குப் போய் ஓரிரு தினங்கள் கழித்துத் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார் நல்லசிவம்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 
தம்தம் வினையான் வரும்.

பொருள்:
நமது பிள்ளைகளே நமது சொத்துக்கள். அவரவருக்குக் கிடைக்கும் சொத்து எத்தகையது என்பது அவரவர் வினைப்பயனை ஒட்டி அமையும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















No comments:

Post a Comment