About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, August 29, 2017

97. அரவிந்தனின் அனுபவம்

அரவிந்தன் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் ஒரு பியூன் அவனை நந்தி போல் இடைமறித்தான்.

"என்ன வேணும்?"

"டைரக்டரைப் பாக்கணும்."

"அதெல்லாம் பார்க்க முடியாது."

இதற்கு என்ன பதில் சொல்வதென்று அரவிந்தனுக்குத்  தெரியவில்லை. ஒரு நிமிடம் பேசாமல் நின்றான்.

"எஸ் ஓவைப் போய்ப் பாரு" என்றான் பியூன் 'போனால் போகிறது' என்பது போல்.

"தாங்க்ஸ்" என்று சொல்லி விட்டு அரவிந்தன் உள்ளே போனான்.

செக்‌ஷன் ஆஃபிஸர் என்ற செவ்வகப் பலகை வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய மேஜைக்குப் பின்னால் ஒருவர் அதிகார தோரணையுடன் அமர்ந்திருந்தார். மேஜைக்குப் பக்கத்தில் இரண்டு மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர்.

பணிவுடனும், கவலையுடனும் நின்று கொண்டிருந்தவர்கள் அந்த அலுவலகத்துக்கு ஏதோ ஒரு நோக்கத்துக்காக வந்தவர்கள் என்றும், அலட்சியமாகக் கையில் ஒரு பேப்பருடன் நின்றிருந்தவர் அலுவலக ஊழியர் என்றும் அரவிந்தன் ஊகித்தான்.

இரண்டு மூன்று நிமிடங்கள் நின்ற பிறகும் செக்‌ஷன் ஆஃபிஸர் அவனை கவனித்ததாகத் தெரியவில்லை.

அவன் "சார்" என்றதும் அவனைப் பார்க்காமலேயே 'கொஞ்சம் இரு' என்பது போல் கையால் சைகை காட்டி விட்டு, எதிரில்  இருந்தவர்களிடம் கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தார். அருகில் நின்ற ஊழியர் அதை ரசிப்பது போல் புன்னகை செய்து கொண்டிருந்தார்.

இன்னும் இரண்டு நிமிடங்கள் ஆனதும் அரவிந்தன் மீண்டும் "சார்!" என்றான்.

எஸ் ஓ இப்போது முகத்தை இன்னும் கடுமையாக்கிக் கொண்டு அவனிடம் திரும்பினார். "ஏம்ப்பா பேசிக்கிட்டிருக்கேனே தெரியல? நீயெல்லாம் படிச்சவன்தானே? அறிவு வேண்டாம்?" என்று எரிந்து விழுந்தார்.

அரவிந்தன் மௌனமாகத் தன் கையிலிருந்த கடிதத்தை அவர் முன் நீட்டினான்.

அவர் அதைப் பார்க்காமலேயே, பியூனிடம் "ஏம்ப்பா தண்டபாணி! இவரையெல்லாம் ஏன் எங்கிட்ட அனுப்பற? எனக்கு ஆயிரம் வேலை இருக்கு" என்றார்.

"இல்லை சார். டைரக்டரைப் பாக்கணும்னாரு..."

"அப்ப டைரக்டர் கிட்ட அனுப்ப வேண்டியதுதானே! அவரோட தலைவலியையும் நான்தான் அனுபவிக்கணுமா?"

பியூன் அரவிந்தனிடம் சற்று உள்ளே தள்ளியிருந்த அறையைக் காட்டி "அந்த ரூம்தான் போ!" என்றான்.

ந்து நிமிடங்கள் கழித்து அரவிந்தன் டைரக்டரின் அறையிலிருந்து வெளியே வந்தபோது அவனுடன் டைரக்டரும் வந்தார்.

ஆஃபிஸரின் அருகில் அவர்கள் வந்தபோது செக்‌ஷன் ஆஃபீஸர் எழுந்து நின்றார்.

"மிஸ்டர் சண்முகநாதன்! இவர் அரவிந்தன். நம்ப ஆபீஸ்ல அசிஸ்டண்ட் டைரக்டரா ஜாயின் பண்ணி இருக்காரு. யூ பி எஸ் சி பரீட்சை எழுதி செலக்ட் ஆயிருக்காரு" என்றார்.

"சாரி சார்! வெல்கம் சார்!" என்றார் சண்முகநாதன்.

அரவிந்தன் சிரித்துக்கொண்டே அவருடன் கை குலுக்கினான்.

"வாங்க சார். உங்க ரூமைக் காட்டறேன்" என்றார் சண்முகநாதன்.

டைரக்டர் தன் அறைக்குச் செல்ல, சண்முகநாதன் அரவிந்தனை அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.

அரவிந்தன் சீட்டில் உட்கார்ந்ததும், சண்முகநாதன் "சாரி சார். நீங்க என்னோட மேலதிகாரி. நீங்க யார்னு தெரியாம உங்ககிட்ட தப்பாப் பேசிட்டேன்" என்றார்.

"முதல்ல உக்காருங்க" என்றான் அரவிந்தன்.

அவரிடம் சற்று நேரம் அந்த அலுவலக நடைமுறைகளைப் பற்றிக் கேட்டறிந்தான்.

அவர் எழுந்து செல்லும்போது மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கேட்டார்.

"சார்! நீங்க என்னை விட வயசுல பெரியவரு. அதிக அனுபவம் உள்ளவரு. நான் யார்னு தெரியாமத்தான் பேசினீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியும். ஆனா நம்ம ஆஃபீசுக்கு வரவங்க எல்லார்கிட்டயும் நீங்க சுமுகமாப் பேசினா, இந்த மாதிரி எப்பவுமே நடக்காதே!"

சண்முகநாதன் எதுவும் சொல்லாமல் வெளியே போனார். 'இந்தச் சின்னப்பய எனக்கு புத்தி சொல்ல வந்துட்டான்' என்று நினைத்துக் கொண்டாரோ அல்லது அவன் சொன்னதைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பாரோ தெரியாது!

அவர் வெளியே சென்றதும் பியூன் தண்டபாணி உள்ளே வந்தான்.

"வாங்க தண்டபாணி!" என்றான் அரவிந்தன்.

"சார்! நீங்க யார்னு தெரியாம..." என்று ஆரம்பித்தான்.

"விட்டுத் தள்ளுங்க" என்ற அரவிந்தன் "நம்ம ஸ்டாஃப் எல்லாரையும் ஒவ்வொத்தரா வரச் சொல்லுங்க. அவங்களை நான் அறிமுகம் செஞ்சுக்கணும்" என்றான்.

"சரி சார்!" என்று சொல்லி விட்டு வெளியே போகத் திரும்பிய தண்டபாணி, திரும்பி வந்து "சார்! இந்த ஆஃபீஸ்ல என்னை வாங்க போங்கன்னு கூப்பிட்டவரு நீங்க ஒத்தர்தான்" என்றான்.

"எல்லார்கிட்டயும் - இந்த ஆஃபீஸ்ல வேலை செய்யறவங்க, இந்த ஆஃபீசுக்கு வரவங்க எல்லார்கிட்டயும் - மரியாதையா, இனிமையா, பண்பாப் பேசிப் பாருங்க. எல்லாருமே உங்களுக்கு மரியாதை கொடுப்பாங்க" என்றான் அரவிந்தன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 10             
இனியவை கூறல்   
குறள் 97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பொருள்:  
பிறருக்குப் பயன்படக் கூடிய விதத்தில் பண்போடு பேசப்படும் வார்த்தைகள் நன்மையை விளைவித்து நன்றி உணர்வை ஏற்படுத்தும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                    காமத்துப்பால்


































Saturday, August 26, 2017

96. சுப்பையா கொடுத்த புகார்

"வாங்க, என்ன விஷயம்?"

"ஒரு புகார் கொடுக்கணும்."

"யார் மேல?"

"என் தம்பி மேல!"

"என்ன பண்ணினாரு அவரு?"

"என்னைக் கொல்லப் போறேன்னு மிரட்டினான்."

"என்ன தகராறு உங்களுக்குள்ள?"

"வரப்புத் தகராறுதான். என் வயலுக்குள்ள ஒரு அடி தள்ளி அவன் வரப்பைப் போட்டிருக்கான். கேட்டதுக்கு அரிவாளை எடுத்து ஒரே சீவா சீவிடுவேன்னு மிரட்டறான்."

இன்ஸ்பெக்டர் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார். "சரி. உங்க பேரு, உங்க தம்பி பேரு, ரெண்டு பேரோட விலாசம் இதெல்லாம் ஒரு பேப்பர்ல எழுதிக் கொடுங்க. நான் விசாரிக்கிறேன்."

"சார்! நீங்க உடனே அவனைக் கைது பண்ணணும்."

"சாயந்திரம் உங்க தம்பி வீட்டில இருப்பாரா?"

"இருப்பான். சாயந்திரம் எதுக்கு? இப்பவே என்னோட வாங்க. அவன் வீட்டைக் காட்டறேன். நாங்க ரெண்டு பேரும் பக்கத்துப் பக்கத்து வீடுதான்."

"சாயந்திரம் வரேன். நீங்களும் வீட்டிலதானே இருப்பீங்க?"

வெளியில் போய் விட்டு மாலை வீட்டுக்கு வந்ததும், சுப்பையா தன் மனைவியிடம் "பக்கத்து வீட்டுக்குப் போலீஸ்காரங்க யாராவது வந்தாங்களா?" என்றார்.

"போலீஸ்காரங்க யாரும் வரலை. பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு ஒருத்தர் வந்தாரு. ரொம்ப நேரமா உங்க தம்பி வீட்டில உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்காரு."

ஒருவேளை, தான் புகார் கொடுத்திருப்பது தெரிந்து தம்பி முன்ஜாமீன் வாங்குவதற்காக வக்கீல் யாரையாவது வரவழைத்திருப்பானோ?'

சற்று நேரம் கழித்து வாசலில் ஏதோ அரவம் கேட்டது. வாசலில் யாரோ ஒருவர் நின்று கொண்டிருந்தார். 'இவர்தான் தம்பி வீட்டுக்கு வந்தவரோ? இங்கே எதற்கு வந்திருக்கிறார்?'

அருகில் போனதும்தான் அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று தெரிந்தது.

"சார், நீங்களா? காலையில உங்களை போலீஸ் டிரஸ்ல பார்த்ததால இப்ப சட்டுனு அடையாளம் புரியல."

"உள்ளே வரலாமா?"

"வாங்க சார்!"

இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து அமர்ந்ததும், "என் தம்பி வீட்டுக்குப் போயிருந்தீங்களா?" என்றார் சுப்பையா.

"அவருகிட்ட பேசிட்டுத்தான் வரேன்."

"அப்ப அவனை அரெஸ்ட் பண்ணலியா நீங்க?" என்றார் சுப்பையா சற்றுக் கோபத்துடன்.

"கொஞ்சம் பொறுமையா இருங்க. ஒத்தர் மீது யாராவது புகார் கொடுத்தா அவங்களை உடனே அரெஸ்ட் பண்ண முடியாது. இப்ப உங்க மேல  உங்க தம்பி புகார் கொடுத்தார்னா நான் உங்களைக் கைது பண்ண முடியுமா?"

"என் மேல புகார் கொடுத்தானா அவன்?" என்றார் சுப்பையா கோபத்துடன்.

"இல்லை. உங்க மேல அவரு ரொம்ப மரியாதை வச்சிருக்காரு. பேச்சுக்குப் பேச்சு எங்க அண்ணன்னுதான் சொல்றாரு."

"ஆனா என்னைக் கொலை பண்ணிடுவேன்னு சொன்னதும் அவன்தான். சாட்சி வேணுமா உங்களுக்கு?"

"சாட்சியெல்லாம் எதுக்கு? அவரே ஒத்துக்கறாரே!"

"அப்ப அவனைக் கைது பண்ணிட வேண்டியதுதானே!"

"கைது பண்ணிடலாம். அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டுச் செய்யலாம்னுதான் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். அம்மா! குடிக்கக் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?"

"பாத்தீங்களா? வீட்டுக்கு வந்தவருக்குத் தண்ணி கூடக் கொடுக்கல. காப்பி சாப்பிடுறீங்களா? இல்லை இளநீர், மோர் ஏதாவது?"

"எதுவும் வேணாம் சார். உங்க தம்பி வீட்டில ஒரு தம்ளர் தண்ணி குடிச்சேன். அதனால உங்க வீட்டிலேயும் ஒரு தம்ளர் தண்ணி குடிக்கிறதுதானே முறை?"

சுப்பையாவின் முகத்தில் முதல்முறையாக இலேசான புன்னகை அரும்பியது. "அது சரி. கைது பண்றதுக்கு முன்னால எங்கிட்ட ஏதோ கேக்கணும்னீங்களே, அது எதுக்கு? நான்தான் புகார் கொடுத்திருக்கேனே!"

"அதனாலதான் உங்ககிட்ட கேக்க வேண்டி இருக்கு! ரெண்டு விஷயம். ஒண்ணு உங்க தம்பி கோபத்தில் அப்படிப் பேசிட்டேன்னு சொல்லி அதுக்காக வருத்தப்பட்டாரு. உங்ககிட்ட மன்னிப்புக் கேக்கப்  போறதாகவும் சொன்னாரு. நீங்க அவரை மன்னிச்சுட்டீங்கன்னா உங்க புகார் மேல நான் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்காது!..."

"ரெண்டு விஷயம்னு சொன்னீங்களே! ரெண்டாவது என்ன?"

"இப்ப உங்க தம்பியை நான் கைது செய்யறேன்னு வச்சுக்கங்க. அதனால உங்க வரப்புப் பிரச்னை தீர்ந்துடுமா?"

சுப்பையா மௌனமாக இருந்தார்.

"உங்களுக்கு எது முக்கியம் - வரப்புப் பிரச்னை தீர்றதா, அல்லது உங்க தம்பியைக் கைது பண்றதாங்கிறதை நீங்கதான் தீர்மானிக்கணும்!"

சுப்பையா மீண்டும் மௌனமாக இருந்தார்.

"உங்க அப்பா ஒரு வித்தியாசமான மனுஷர்னு நினைக்கிறேன்" என்றார் இன்ஸ்பெக்டர்.

"ஏன் அப்படிச் சொல்றீங்க?" என்றார் சுப்பையா.

"இல்லை நீங்க மூத்தவர். உங்களுக்கு சுப்பையான்னு தம்பி முருகன் பேரை வச்சிருக்காரு. உங்க தம்பிக்கு கணேசன்னு அண்ணன் விநாயகர் பேரை வச்சிருக்காரே, அதுதான் கேட்டேன்."

சுப்பையா வாய் விட்டுச் சிரித்தார். "ஆமாம் இதைப் பத்தி முன்னமே சில பேரு எங்கிட்ட சொல்லி இருக்காங்க."

"உங்க அப்பா நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கணும்னுதான் எதிர்பார்த்திருப்பார்னு நினைக்கிறேன்."

"நான் மட்டும் அவன்கிட்ட சண்டை போடணும்னா திரியறேன்? ஏண்டா வரப்பைத் தள்ளிப் போட்டேன்னு கேட்டதுக்கு அவன்தான் என்னை வெட்டிடுவேன்னு சொன்னான்."

"அவருதான் அதுக்கு உங்ககிட்ட மன்னிப்புக் கேக்கறேங்கறாரே!"

"மன்னிப்புக் கேட்டா சரியாப் போச்சா? என் வயல்ல ஒரு அடி அகலத்தைப் பூரா  எடுத்துக்கிட்டானே!"

"அதையும் உங்க தம்பிகிட்ட கேட்டேன். மழையில வரப்பு கரைஞ்சு போயிட்டதனால புதுசா வரப்பு போடும்போது தப்பு நடந்திருக்கலாம்னு உங்க தம்பி சொன்னாரு. இது மாதிரி நிறைய பேருக்கு நடந்திருக்காமே! சர்வேயரை வச்சு அளந்து பாத்துக்கலாம்னு சொல்றாரு."

"அப்படிப் பண்ணினா எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை" என்றார் சுப்பையா.

"அப்ப பிரச்னையே இல்லே!  உங்க தம்பி உங்ககிட்ட மன்னிப்புக் கேக்கத் தயாரா இருக்காரு. நீங்க சரின்னு சொன்னா அவரு உங்க வீட்டுக்கு வந்து உங்ககிட்ட மன்னிப்புக்  கேட்டுக்கிட்டு, வரப்பைச் சரி பண்றதைப் பத்தியும் பேசுவாரு."

சுப்பையா மௌனமாக இருந்தார்.

"என்னய்யா யோசிக்கிறீங்க? இன்னும் ஏதாவது சந்தேகம் இருக்கா உங்களுக்கு?"

"ஒரே ஒரு சந்தேகம்தான். பொதுவா போலீஸ்காரங்கன்னா ரொம்பக் கடுமையாப் பேசுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். உங்ககிட்ட புகார் கொடுக்க வரும்போதே தயக்கத்தோடதான் வந்தேன். ஆனா நீங்க இவ்வளவு பொறுமையா, சாந்தமாப் பேசி  எங்க பிரச்னையை முடிச்சு வச்சுட்டீங்களே அது எப்படின்னுதான் யோசிச்சுக்கிட்டிருக்கேன்!"

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 10             
இனியவை கூறல்   
குறள் 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்.

பொருள்:  
நன்மை நடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இனிமையாகப் பேசப்படும் வார்த்தைகளால் விரும்பத்தகாத விளைவுகள் தவிர்க்கப்பட்டு நற்செயல்கள் பெருகும். 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                    காமத்துப்பால்
























Thursday, August 24, 2017

95. வேலையில் முதல் நாள்

புதிதாக வேலையில் சேர்ந்த வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் ஐந்து பேருக்கும் பயிற்சி முடிந்தது. பயிற்சியின் இறுதியில் அவர்களிடம் பேசிய பொது மேலாளர் கடைசியாகச் சொன்னார்.

"இந்த மூன்று நாட்களும் உங்கள் வேலையைப் பற்றி நன்கு அறிந்து கொண்டிருப்பீர்கள். நாளையிலிருந்து நீங்கள் அலுவலகத்தில் அமர்ந்து வாடிக்கையாளர்களுடன் நேரடியாகப் பேசி அவர்கள் குறைகளைக் கேட்டு, அவர்கள் தேவைகளை உணர்ந்து அவர்கள் பிரச்னைகளைத் தீர்த்து அவர்களைத் திருப்திப்படுத்தப் போகிறீர்கள். 'ஆள் பாதி, ஆடை பாதி' என்பது பழமொழி. வேலைக்கு வரும்போது நீங்கள் அனைவரும் டை கட்டிக் கொண்டு வர வேண்டும். யாருக்காவது டை கட்டிக்கொள்ளத் தெரியாவிட்டால் சொல்லுங்கள். நான் கட்டி விடுகிறேன்."

மெல்லிய சிரிப்பு எழுந்தது.

அடுத்த நாள் அலுவலகத்துக்கு வந்த ஐவரில் பரந்தாமன் ஒருவன் மட்டும் டை கட்டிக்கொண்டு வரவில்லை. அவன் உடைகளும் கசங்கியிருந்தன.

"என்னப்பா?" என்றார் கிளை மேலாளர்.

"சார்! ஸ்கூட்டரில் வந்தபோது சின்ன விபத்து. ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்துட்டேன். டை தரையில் பட்டுக் கறையாயிடுச்சு. பாண்ட் சட்டையெல்லாம் கூடக் கசங்கிடுச்சு. அழுக்குப் பட்ட இடங்கள்ள தண்ணி போட்டுத் துடைச்சுக்கிட்டு வந்திருக்கேன். என் வீடு ரொம்ப தூரம். திரும்பவும் வீட்டுக்குப் போய் வேற டிரஸ் போட்டுக்கிட்டு வரத்துக்கு ரொம்ப நேரம் ஆயிடும். இன்னிக்கு ஒரு நாளைக்கு அனுமதி கொடுத்தீங்கன்னா..."

"சரி. போய் வேலையைப் பாரு. சாயந்திரம் ஜி எம் வருவாரு. அவரு என்ன சொல்லப்போறாரோ!" என்றார் கிளை மேலாளர்.

மாலை பொது மேலாளர் வந்தபோது, ஐந்து புதிய அதிகாரிகளும் ஐந்து கவுண்ட்டர்களில் உட்கார்ந்து வாடிக்கையாளர்களின் தேவைகளை கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

"கிளை மேலாளரின் அறையில் போய் உட்கார்ந்ததும், "என்ன? எல்லாம் சரியா இருக்கா? புது ஆளுங்க எப்படி இருக்காங்க?" என்றார் பொது மேலாளர்.

"பரவாயில்லை சார்..." என்றார் கிளை மேலாளர், ஒருவர் மட்டும் டை கட்டிக் கொள்ளாமல் வந்திருப்பதை இப்போது சொல்லலாமா அப்புறம் சொல்லலாமா என்று யோசித்தபடி.

"ஏன் ஒரு கவுண்ட்டர்ல மட்டும் கியூ நீளமா இருக்கு?"

"தெரியல சார். காலையில வேலை ஆரம்பிச்சுக் கொஞ்ச நேரத்திலிருந்தே அப்படித்தான் இருக்கு. நான் அந்த க்யூவிலே இருந்தவங்க கிட்ட போயி வேற வரிசைக்குப் போங்கன்னு சொன்னேன். ஆனா அவங்க 'பரவாயில்லை'ன்னு சொல்லிட்டு அங்கேயே நிக்கறாங்க. அதோட மத்த கியூவிலிருந்தும் ஒண்ணு  ரெண்டு பேர் அந்த நீள கியூவுக்கு வராங்க."

"அந்த வரிசை இருக்கிற கவுண்ட்டர்ல இருக்கற எக்ஸிக்யூடிவ் யாரு?"

"பரந்தாமன். சார்! அவரு..." என்று ஆரம்பித்தார் கிளை மேலாளர்.

"நானே பக்கத்தில போய்ப் பார்க்கிறேன்" என்று எழுந்த பொது மேலாளர்  வெளியே போய் கவுண்ட்டர்களுக்கு அருகில்  நின்று பார்த்தார். கிளை மேலாளரும் அவர் பின்னே போய் நின்று கொண்டார். கியூவில் நின்றவர்கள் அவர்களை மறைத்ததால் கவுண்ட்டருக்குப் பின்னால் அமர்ந்திருந்த வாடிக்கை சேவையாளர் அதிகாரிகளால் அவர்களைப் பார்க்க முடியவில்லை.

இரண்டு மூன்று நிமிடம் கழித்து, பொது மேலாளர் கிளை அதிகாரி பின் தொடர அறைக்குத் திரும்பினார்.

"சம்திங் ஆட், இல்லை சம்திங் ஃபன்னி, இல்லை சம்திங் இன்ட்ரஸ்டிங்!"

"சார். அந்த கவுண்ட்டரில் உட்கார்ந்திருக்கிற பரந்தாமன் டை கட்டிக்காததைத்தானே சொல்றீங்க?"

"அவனுக்கு எதுக்கு டை?"

"என்ன சார் சொல்றீங்க?"

"அந்தப் பரந்தாமனை கவனிச்சீங்களா? சிரிச்ச முகத்தோட, பணிவா, பொறுமையா, கோபப்படாம, மத்தவங்களைப் புண்படுத்தாத விதத்தில கஸ்டமர்கள் கிட்டப் பேசிக்கிட்டிருக்கான். அதை வெளியிலிருந்து பாத்துட்டுதான் அவனோட கவுண்ட்டர்ல நிறைய பேரு நிக்கறாங்க. 'ஆள் பாதி ஆடை பாதி'ன்னு நேத்திக்கு நான்தான் டிரெயினிங்கிலே சொன்னேன். ஆனா அவனோட பணிவும், பதமான பேச்சுமே டையும் சூட்டும் கொடுக்க முடியாத ஒரு பர்சனாலிட்டியை அவனுக்குக் கொடுத்துடுச்சு" என்றார் பொது மேலாளர்.
அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 10             
இனியவை கூறல்   
குறள் 95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு 
அணியல்ல மற்றுப் பிற.

பொருள்:  
பணிவுடையவனாகவும், இனிமையாகப் பேசுபவனாகவும் இருப்பதே ஒருவருக்குச் சிறந்த அணிகலன்கள் ஆகும். மற்ற அணிகலன்கள் தேவையில்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                   காமத்துப்பால்
















Monday, August 21, 2017

94. காலை முதல் மாலை வரை

ஆனந்தனுக்கு அன்று பொழுது ஆனந்தமாக விடியவில்லை. காலையில் எழுந்ததுமே அவன் மனைவி சுந்தரி "என்னங்க, பால் திரிஞ்சு போச்சு. வேற பால் வாங்கிட்டு வரீங்களா?" என்றாள்.

பல் கூடத் துலக்காமல் பால் வாங்கக் கிளம்பினான் ஆனந்தன். அன்று பார்த்து அருகில் இருந்த கடையில் பால் கிடைக்கவில்லை. சற்று தூரம் நடந்து போய் வாங்கி வந்தான் ஆனந்தன் .

வீட்டுக்கு வந்ததும் மனைவி பொறுமை இழந்தவளாக, "ஏங்க இவ்வளவு நேரம்? எனக்கு காப்பி குடிச்சாதான் வேலையே ஓடும்? நீங்க இவ்வளவு மெதுவா வரீங்க! ஹோட்டல்ல காப்பி குடிச்சுட்டு வாரீங்களா என்ன?" என்றாள்.

"அடாடா! இது எனக்குத் தோணாமல் போயிடுச்சே!" என்றான் ஆனந்தன் சிரித்தபடி.

அவன் பல் துலக்கியதும், காப்பி கொடுத்த மனைவி, "இந்த மாசம் செலவு நிறைய இருக்கு. உங்களுக்கு வேலை எதுவுமே வரலியே!" என்றாள்.

"ஒரு பெயின்டிங் காண்டிராக்ட் கிட்டத்தட்ட முடிவாயிடுச்சு. ரெண்டு மூணு நாள்ள அட்வான்ஸ் கொடுத்துடுவாங்க. கவலைப்படாதே!" என்றான் ஆனந்தன்.

அவன் செல்ஃபோன் ஒலித்தது. "அவருதான்!" என்று சொல்லி விட்டு அறைக்குள் போய்ப் பேசி விட்டு வந்தான்.

"என்ன அட்வான்ஸ் குடுக்கறேன்னாரா?"

"இல்லை. காண்டிராக்ட் இல்லைன்னுட்டாரு!"

"ஏன் அப்படி?"

"ஏதோ காரணம் சொல்றாரு."

"ஆர்டர் கொடுக்கறேன்னு சொல்லிட்டு ஏன் ஏமாத்தினீங்கன்னு அவர்கிட்ட சண்டை போட வேண்டியதுதானே?"

"விடு!"

"எப்படிங்க விடறது? நீங்க அவரை விடு விடுன்னு விட்டிருக்கணும்! இந்த மாசச் செலவுக்கு அந்தப் பணத்தைத்தானே நம்பி இருந்தீங்க?"

"பாக்கலாம்" என்று சிரித்தான் ஆனந்தன்.

"உங்களால எப்படித்தான் சிரிக்க முடியுதோ?" என்றாள் சுந்தரி.

வேறு சில இடங்களில் போய் முயற்சி செய்து விட்டு வருவதாகச் சொல்லி விட்டு வெளியே போய் விட்டு ஆனந்தன் வீட்டுக்கு வரும்போது மணி 3 ஆகி விட்டது.

அவன் உள்ளே நுழைந்ததுமே, "என்ன, ஏதாவது ஆர்டர் கெடச்சுதா?" என்றாள் சுந்தரி.

ஆனந்தன் மௌனமாகத் தலையைப் பக்கவாட்டில் ஆட்டினான்..

"சரி. சாப்பிட வாங்க. ரொம்ப நேரமாயிடுச்சு. நான் கூடச் சாப்பிட்டுட்டேன்"

ஆனந்தன் சாப்பிட உட்கார்ந்தான். சுந்தரி பரிமாறத் துவங்கியபோது, பள்ளியிலிருந்து வந்த அவர்கள் மகள் ஆர்த்தி "அம்மா" என்று அழைத்துக்கொண்டே ஒடி வந்து சுந்தரியைக் கட்டித் தழுவ முயன்றாள்.

ஒடி வந்தவள் சாம்பார் பாத்திரத்தைக் கையில் பிடித்தபடி வந்து கொண்டிருந்த சுந்தரியின் மீது மோதியதில் சாம்பார் மொத்தமும் கீழே கொட்டி விட்டது.

"ஏண்டி, இப்படியா கண்மண் தெரியாம ஓடி வருவே?" என்று சுந்தரி மகளைக்  கடிந்துகொண்டிருந்தபோதே, ஆனந்தன் எழுந்தான்.

"ஏன் எழுந்துட்டீங்க?" என்றாள் சுந்தரி.

"கீழே கொட்டியிருக்கிற சாம்பாரைத் துடைச்சுட்டு வரேன். ஹால் முழுக்கத் தெறிச்சிருக்கு. உனக்குத் துடைக்கறதுக்குக் கஷ்டமா இருக்கும்" என்ற ஆனந்தன், "ஆர்த்தியை ஒண்ணும் சொல்லாதே! அவ உன் மேல இருக்கிற ஆசையினாலதானே அப்படி ஒடி வந்தா?" என்று சொல்லி விட்டு, மகளின்  கன்னத்தைத் தட்.டி "நல்ல வேளை! ஸ்கூல் யூனிஃபார்ம்ல சாம்பார் படல. போய் டிரஸ் மாத்திக்கிட்டு வா!" என்றான்.

"ஏங்க, சாம்பார் மொத்தமும் கொட்டிப் போச்சே! இன்னிக்குன்னு பாத்து நான் ரசம் கூட வைக்கல!"

"அதனால பரவாயில்லை. மோரும், பொரியலும், ஊறுகாயும் இருக்கே, அது போதும்" என்றான் ஆனந்தன்.

எது நடந்தாலும் கடுமையாகப் பேசாமல் பொறுமையாக இருக்கிற தன் கணவனை கடவுள் ஏன் சோதிக்கிறார் என்று நினைத்துக் கொண்டாள் சுந்தரி.

சாப்பிட்டு விட்டு ஆனந்தன் சற்று நேரம் கண்ணை மூடிப் படுத்துக் கொண்டிருந்தபோது அவன் செல்ஃபோன் அடித்தது. சற்றுத் தள்ளி நாற்காலியில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த சுந்தரி, யாராவது வாடிக்கையாளர் கூப்பிடுகிறாரோ என்ற ஆவலில் அவன் ஃபோனில் பேசுவதை கவனித்தாள்.

ஆனந்தன் எதிர்முனையில் பேசுபவர் சொன்னதைக் கேட்டு விட்டு, "அப்படியா? எனக்குப் பத்தாயிரம் ரூபாய்தான்  லோன் வேணும். கொடுப்பீங்களா?...ஓ. ..மினிமம் ஒரு லட்ச ரூபாயாய்தான் கொடுப்பீங்களா? ...பரவாயில்லை. தாங்க்ஸ்" என்று சொல்லி ஃபோனை வைத்தான்.

"ஏங்க, நானும் நிறைய தடவை கவனிச்சுருக்கேன். யாராவது ஃபோன் பண்ணி லோன் வேணுமான்னு கேட்டா வேணாம்னு சொல்லாம, ஏன் பத்தாயிரம் ரூபாய் கிடைக்குமாங்கறீங்க உங்களுக்கு உண்மையிலேயே பத்தாயிரம் ரூபாய் கடன் வேணுமா?"

"இல்லை. லோன் எதுவும் வேணாம்னு சொன்னா அவங்களுக்கு ஏமாத்தமா இருக்கும். அவங்க சின்னத் தொகையெல்லாம் கடுக்க மாட்டாங்கன்னு தெரியும். அதனால பத்தாயிரம் ரூபாய் தருவீங்களான்னு கேப்பேன். அவங்க 'சாரி. மினிமம் இவ்வளவுதான் கொடுப்போம்'னு சொல்லி வச்சிடுவாங்க. அப்ப அவங்களுக்கு அவ்வளவு ஏமாத்தமா இருக்காது."

"அவங்களுக்கு ஏமாத்தமா இருக்கும்னா அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? நமக்கு அனாவசியமான தொந்தரவுதானே இது?"

"அவங்க வேலையே இதுதானே? அவங்களுக்கு உதவ முடியாவிட்டாலும், நம்மளால முடிஞ்ச அளவுக்கு அவங்க ஏமாத்தத்தைக் குறைக்கலாமே!"

"என்னவோ போங்க! யாரோ ஃபோன் பண்ணி உங்களுக்கு வேலை கொடுக்கப் போறாங்களோன்னு  நினைச்சு நான் ஏமாந்துதான் மிச்சம்!"

"கவலைப்படாதே! நீ எதிர்பார்க்கறதும் நடக்கலாமே!"

"பாக்கலாம்!" என்றாள் சுந்தரி நம்பிக்கையில்லாமல்.

மாலையில் சுந்தரி சமையற்கட்டில் இருந்தபோது ஆனந்தனின் ஃபோன் அடித்ததையும் அவன் அதை எடுத்துப் பேசியதையும் கேட்ட சுந்தரி 'யாராவது கிரெடிட் கார்டு வேணுமான்னு கேப்பாங்க. இவரும் பொறுமையா பதில் சொல்லிக்கிட்டிருப்பாரு!' என்று அலுத்துக் கொண்டாள்.

சில நிமிடங்கள் கழித்து ஆனந்தன் உள்ளே வந்தான்."போன வாரம் ஒரு ஃபிளாட்டில பெயின்டிங் பண்ணினேனே ஞாபகம் இருக்கா, அவருதான் ஃபோன் பண்ணினாரு. அவர் வீட்டில என் பெயின்டிங் ரொம்ப நல்லா வந்திருக்காம். அதனால அவரோட ஆஃபீஸ் பெயின்டிங் வேலையையும் எனக்கே கொடுக்கிறாராம். அது பெரிய வேலை. இப்பவே அவரோட ஆஃபீசுக்கு வந்து அட்வான்ஸ் வாங்கிக்கிட்டுப் போகச் சொல்றாரு. போயிட்டு வந்துடறேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.

அறத்துப்பால்
 இல்லறவியல்
            அதிகாரம் 10             
    இனியவை கூறல்   
குறள் 94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

பொருள்:
எல்லோரிடமும் அவர்களை மகிழ்விக்கும் வகையில் இன்சொல் பேசுபவரைத் துன்பம் விளைவிக்கும் வறுமை அணுகாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                      காமத்துப்பால்














.





Sunday, August 20, 2017

93. மெல்லப் பேசுங்கள்!

மாதவனுக்கு நீண்ட நாட்களாக ஒரு குறை உண்டு. அவன் பேசினால் யாரும் கவனிப்பதில்லை என்பதுதான் அது.

அலுவலகத்தில் அவன் ஒரு குழுவை வழி நடத்துபவன். அவன் குழுவில் அவனைத் தவிர 5 பேர் இருந்தார்கள். அவ்வப்போது அவர்களிடம் தனித்தனியாகவும், அனைவரையும் கூட்டி வைத்தும் பேச வேண்டி இருந்தது.

அவன் பேசும்போது அவன் குழுவில் சிலர் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். அல்லது அவனை இடைவெட்டிப் பேசுவார்கள். அல்லது அவன் பேசும் விஷயத்துக்குச் சம்பந்தம் இல்லாத விஷயம் பற்றிக் குறுக்கே பேசுவார்கள்.

அதிகாரத்தினால் அவர்களை மிரட்ட முடியாது என்று அவனுக்குத் தெரியும்.

சில சமயம் அவன் ஒரு குறிப்பிட்ட வேலையைக் குறிப்பிட்ட விதத்தில் செய்யச் சொன்னால், அதைச் சரியாகக் கேட்டுக் கொள்ளாமல் வேறு விதமாகச் செய்வார்கள். கேட்டால் "நீங்க அப்படியா சொன்னீங்க? சாரி" என்பார்கள்.

வேறு வழியின்றி, முக்கியமான செய்திகளை மின்னஞ்சல் மூலம் அனுப்ப ஆரம்பித்தான். தான் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து பேசினாலே கேட்கக்கூடிய தூரத்தில் இருப்பவர்களுக்கு, வாயால் சொல்ல வேண்டிய செய்தியை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டியதை நினைக்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஆனால் வேறு வழி தெரியவில்லை.

அதற்குப் பிறகு அவன் ஏதாவது சொன்னால் அவர்கள் "மெயில் அனுப்பிடுங்களேன்" என்று பதில் சொல்ல ஆரம்பித்தது அவனுக்கு மேலும் எரிச்சலூட்டியது.

வன் அலுவலகத்தில் புதிதாகச் சேர்ந்திருந்த ஒரு ஆலோசகர் இது போன்ற தகவல் தொடர்புப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கொடுப்பார் என்று பெயர் பெற்றிருந்தார். அவரைத் தேடித் சென்றான்.

அவன் தன் பிரச்னையைச் சொல்ல ஆரம்பித்ததுமே அவர் குறுக்கிட்டு, "மாதவன்! உங்கள் பிரச்னை என்னன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு? ஏன் முகத்தை இப்படிக் கடுகடுன்னு வச்சுக்கிட்டிருக்கீங்க?" என்றார்.

"என் மூஞ்சி இயல்பாகவே அப்படித்தான் சார் இருக்கும்!" என்றான் மாதவன் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு.

"இப்ப சிரிச்சீங்களே, அது மாதிரி எப்பவுமே இருக்கப் பழகுங்க."

" எப்படிப் பழகறது?"

அவர் சில பயிற்சிகளைச் சொன்னார். "இது மாதிரி ஒரு மாசம் பிராக்டீஸ் பண்ணுங்க. அப்புறம் உங்க முகத்தில எப்பவுமே இயல்பா ஒரு சிரிப்பு இருக்கும். அப்புறம் உங்க டீம் மெம்பர்ஸ் உங்க பேச்சை கவனிக்க ஆரம்பிப்பாங்க"

ரண்டு மாதம் கழித்து மாதவன் மீண்டும் ஆலோசகரைச் சந்தித்தான். "இப்ப எப்படி இருக்கு?" என்றார் அவர்.

"முன்னை விடப்  பரவாயில்ல. ஆனா இப்பவும் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்  அவங்க கவனம் வேற பக்கம் போயிடுது" என்றான் மாதவன்.

"சரி பார்க்கலாம்" என்றவர், தன்னுடைய உதவியாளர்கள் 4 பேரை அழைத்தார். "இவங்கதான் உங்க டீம் மெம்பர்ஸ்ன்னு வச்சுக்கங்க. நீங்க உங்க டீம் மெம்பர்ஸுக்கு, அவங்க செய்ய வேண்டிய வேலையைச் சொல்ற மாதிரி இவங்க கிட்ட சொல்லுங்க" என்றார்.

மாதவன் அவர்களிடம் பேசினான். ஆலோசகர் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டு கவனித்தார். 15 நிமிடம் கழித்து, "போதும்"என்று சொல்லி, தன் உதவியாளர்களை அவர்கள் இருக்கைகளுக்குப் போகச் சொன்னார்..

"மாதவன்! நான் கவனிச்சதை வச்சு ஒரு விஷயத்தைச் சொல்றேன். நீங்க எதையும் சரியாகச் செய்யணும்னு நினைக்கிறவர். அதனால நீங்க சொல்றதை மத்தவங்க சரியாப் புரிஞ்சுக்கலேன்னா உங்களுக்குக்  கோபம் வருது. உங்க கோபம் உங்க வார்த்தைகள்ள வெளிப்படுது.."

"சார்! நான் இவங்ககிட்ட கோபமா எதுவும் பேசலியே?" என்றான் மாதவன்.

"நீங்க கோபமாப் பேசணும்னு நினைக்கல. ஆனா உங்க பொறுமையின்மையும் கோபமும் உங்களை அறியாம உங்க வார்த்தைகளிலும் உங்க தொனியிலும் வெளிப்படுது. கேக்கறவங்களுக்கு இது பிடிக்காது. அவங்க காயப்பட்டதா உணர்வாங்க. அதுக்கப்பறம் அவங்களை அறியாமலேயே  உங்க பேச்சை கவனிக்கறதை நிறுத்திடுவாங்க."

"நான் என்ன செய்யணும்?'

"நீங்க ரெண்டு விஷயங்கள்ள உங்களை மாத்திக்க வேண்டியிருக்கு. நீங்க முதல் தடவை வந்தபோதே நான் இந்த மாதிரி ஒரு மாக் செஷன் வச்சு உங்க பிரச்னையை முழுமையாப் புரிஞ்சுக்கிட்டிருக்கணும். அவசரப்பட்டு நீங்க மாத்திக்க வேண்டிய ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிட்டு உங்களை அனுப்பிச்சுட்டேன்."

"சார்! நீங்க ஒரு நிபுணர். என்னை விடப்  பெரிய பதவியில இருக்கீங்க. ஆனா நீங்க எங்கிட்ட உங்க தவறைப் பத்திப் பேசறீங்க! "

"இனிமையாப் பேசப் பழகிட்டா, பணிவு தானாவே  வந்துடும். அல்லது பணிவா இருக்கப் பழகிக்கிட்டா, பேச்சிலே இனிமை தானா வந்துடும்!"

"கிரேட் சார்!"

"நீங்க என்ன செய்யணும்னு உங்களுக்குத் புரிஞ்சுடுச்சா?"

"எஸ் சார். நீங்க சொன்ன ரெண்டு விஷயங்கள். முகத்தை இனிமையா வச்சுக்கணும். இதுக்கு நான் பழகிக்கிட்டேன். ரெண்டாவது இனிமையாப்  பேசணும். இதையும் பழகிக்கறேன். ரொம்ப நன்றி சார்."

"குட். ஐ திங்க் யூ வில் சக்ஸீட் திஸ் டைம். உங்க பிரச்னை தீரலைன்னா ஒரு மாசம் கழித்து மறுபடி என்னை வந்து பாருங்க."

ஒரு மாதம் கழித்து மாதவன் மீண்டும் ஆலோசகரைப் பார்க்க வந்தான். ஆனால் இந்த முறை அவன் வந்தது அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக!

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 10             
இனியவை கூறல்   
குறள் 93
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் 
இன்சொ லினதே அறம்.

பொருள்:
மலர்ந்த முகத்துடன் நோக்கி, மனதிலிருந்து வரும் இன்சொற்களைப் பேசுவதே அறம்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 94
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Saturday, August 19, 2017

92. கர்ணனும் யுதிஷ்டிரனும்

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது ஒருமுறை கர்ணன் கிருஷ்ணரைச் சந்திக்க நேர்ந்தது.

"கண்ணா! எனக்கு ஒரு சந்தேகம்." என்றான் கர்ணன்.

"கேள்!" என்றார் கிருஷ்ணர்

"நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"

"நீ ஒரு பெரிய வீரன். வில்வித்தையில் சிறந்தவன்."

"அவ்வளவுதானா?"

"வாள் வீச்சு போன்ற பிற  போர்க்கலைகளிலும் வல்லமை பெற்றவன்."

"நான் என் வீரத்தைப் பற்றிக் கேட்கவில்லை.."

"வேறு எதைப் பற்றிக் கேட்கிறாய்?"

"என்னை ஒரு கொடைவள்ளல் என்று எல்லோரும் சொல்கிறார்களே!"

ஓ! அதுவா? நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை."

"அப்படியானால் நான் ஒரு வள்ளல் என்று நீ ஒப்புக்கொள்ள மாட்டாயா?"

"நான் எங்கே அப்படிச் சொன்னேன்? நீ கேட்டவர்களுக்குக் கேட்ட பொருட்களை  வழங்குபவன் என்று எல்லோரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். யார் எது கேட்டாலும் அதைக் கொடுப்பது என்ற ஒரு விரதத்தையே நீ பின்பற்றுவது கூட எனக்குத் தெரியும்."

கர்ணன் மௌனமாக இருந்தான்.

"கர்ணா? உன் குறை என்ன? அதைச் சொல்" என்றார் கிருஷ்ணர்.

"நான் அங்க தேசத்து அரசனாக இருக்கிறேன். என்னிடம் தினம் எத்தனையோ பேர் வந்து பொருட்களைக் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள். என்னை வள்ளல் என்றும் சொல்கிறார்கள்...ஆனால்  எங்கேயோ காட்டில் இருக்கும் யுதிஷ்டிரனைத் தேடி தினமும் பலர் தொலைதூரம் நடந்து போகிறார்களே, அது ஏன்?

"எனக்குத் தெரிந்து யுதிஷ்டிரன் அதிகம் பொருட்களை வழங்கியதாகத் தெரியவில்லை. கொடுப்பதற்கு இப்போது அவனிடம் பொருள் எதுவும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவன் ஹஸ்தினாபுரத்தில் இளவரசனாக இருந்தபோதும், இந்திரப்பிரஸ்தத்தின் அரசனாக இருந்தபோதும் கூட அப்படி ஒன்றும் யாருக்கும் வாரி வழங்கியதாகத் தெரியவில்லை. பின் ஏன் அவனைத் தேடி இத்தனை பேர் போகிறார்கள்?"

"உன் கேள்விக்கு நீயே பதில் சொல்லி விட்டாயே கர்ணா!" என்றார் கிருஷ்ணர் சிரித்தபடி.

"புரியவில்லையே கிருஷ்ணா!"

"யுதிஷ்டிரனைத் தேடித் போகிறவர்கள் அவனிடம் பொருட்களை  எதிர்பார்த்துப் போகவில்லை."

"பின் எதற்குப் போகிறார்கள் என்பதுதானே என் கேள்வி?"

"அவனுடைய இனிய சொற்களைக் கேட்பதற்காகப் போகிறார்கள்!"

"என்ன சொல்கிறாய் கண்ணா?"

"கேட்டவர்களுக்கு கேட்டதைக் கொடுப்பது என்ற விரதத்தை நீ கடைப்பிடித்து வருவதுபோல், யுதிஷ்டிரனும் ஒரு தர்மத்தைக் கடைப்பிடித்து வருகிறான். யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும் என்ற தர்மம்தான் அது. அதனால் அவனிடமிருந்து இனிய சொற்கள் மட்டும்தான் வரும். அந்த இனிய சொற்களைக் கேட்பதற்காகத்தான், இங்கே நகரத்தில் வசிக்கும் மக்கள் அவனைத் தேடிப் போகிறார்கள்."

"நானும் இனிய சொற்களைத்தானே பேசுகிறேன்?"

"அப்படியா? சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்றபின், கௌரவர் சபையில், பாண்டவர்களையம், திரௌபதியையும் நீ இழிவாகப் பேசியதெல்லாம் இன்சொற்களா? மாறாக, யுதிஷ்டிரன் தனக்குக்  கொடுமைகள் செய்த துரியோதனனைப் பற்றிக் கூடக் கடிய சொற்களைப்  பயன்படுத்த மாட்டான்."

கர்ணன் மௌனமாக இருந்தான்.

"நீ கடைப்பிடிக்கும் கொடைதர்மத்தை விட, இனிய சொற்களை மட்டுமே பேசுவது என்று உறுதி பூண்டிருக்கும் யுதிஷ்டிரனின் தர்மம் உயர்ந்தது."

அறத்துப்பால்
இல்லறவியல்
           அதிகாரம் 10             
    இனியவை கூறல்   
குறள் 92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து 
இன்சொலன் ஆகப் பெறின்.

பொருள்:
மனமகிழ்ச்சியுடன் பிறருக்குப் பொருள் ஈவதைக் காட்டிலும், முகமகிழ்ச்சியுடன் இனிய சொற்களைப் பேசுவது சிறந்தது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 93
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Wednesday, August 16, 2017

91. சொல்லின் செல்வன்

அது முதியோர்களுக்கான கல்வி வகுப்பு. தமிழ்ப் பாடம் நடந்து கொண்டிருந்தது.

"ஐயா, 'சொல்லின் செல்வன்' என்பது யாரைக் குறிக்கும்?" என்று கேட்டார் ஒரு மாணவர்.

"அனுமனைக் குறிக்கும்" என்றார் தமிழ் ஆசிரியர்.

"'சொல்லின் செல்வன்' என்றால் என்ன பொருள்?"

"செல்வம் என்றால் உங்களுக்குத் தெரியும். ஒருவர் சொல்லும் சொற்கள் மதிப்புள்ளவையாக இருந்தால் அவரைச் 'சொல்வின் செல்வன்' என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்."

"அனுமனுக்குச் 'சொல்லின் செல்வன்' என்ற பட்டத்தைக் கொடுத்தவர் யார்?"

"கம்பர்தான் அனுமனைச் 'சொல்லின் செல்வன்' என்று வர்ணிக்கிறார். ஆனால் அனுமனுக்கு இந்தப் பட்டத்தை சீதாப்பிராட்டியே வழங்கியிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது."

"எப்படிச் சொல்கிறீர்கள்?"

"அசோகவனத்தில் சீதையிடம் மூன்று தரப்பினர் உரையாடுகிறார்கள். ஒருவன் ராவணன். இரண்டாவது சீதையைக் காவல் காக்கும் அரக்கிகள். மூன்றாவது அனுமன். இந்த மூவரும் அவரிடம் எப்படிப் பேசுகிறார்கள் என்று பார்ப்போம்.

"அரக்கிகள் சீதையிடம் இருவிதமாகப் பேசுகிறார்கள். ஒரு புறம், நைச்சியமாகப் பேசி அவரை ராவணனை ஏற்றுக் கொள்ளச் செய்ய முயல்கிறார்கள். இது போன்ற பேச்சில் இனிமை இருந்தாலும் உண்மை இல்லை, வஞ்சகம்தான் இருக்கிறது. இன்னொரு புறம் கடுமையான சொற்களால் அவரை பயமுறுத்துகிறார்கள். ராவணனின் இச்சைக்கு இணங்காவிட்டால் ராவணன் சீதையைக் கொன்று விடுவான் என்று மிரட்டுகிறார்கள்.

"ராவணன் சீதையுடன் பேசும்போதும் இதே அணுகுமுறையைத்தான் பயன்படுத்துகிறான். இந்த இரு தரப்பினர் பேச்சிலும் வஞ்சம் இருக்கிறது, கடுஞ்சொற்கள் இருக்கின்றன. அன்பு இல்லை, உண்மை இல்லை. இனிமையாகப் பேசுவது போல் பேசும்போதும் வஞ்சம் உள்ளிருப்பதால் அங்கே இனிமையும் இல்லை.

"மாறாக அனுமன் பேச்சில் இனிமை இருக்கிறது, உண்மை இருக்கிறது. வஞ்சம், கபடம் எதுவும் இல்லை. அனுமன் பேச்சை சீதை மிகவும் பாராட்டியதாக வால்மீகி, கம்பன் இருவருமே குறிப்பிட்டிருக்கின்றனர். எனவேதான் 'சொல்லின் செல்வன்' என்ற பட்டத்தை சீதையே அனுமனுக்கு அளித்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்."

"ஐயா! நீங்களும் 'சொல்லின் செல்வர்தா'ன்!"

"எப்படிச் சொல்கிறீர்கள்?"

"நாங்கள் பொருத்தமற்ற கேள்விகளைக் கேட்டால் கூட, எங்களைக் கடிந்து கொள்ளாமல் பொறுமையாகவும், இனிமையாகவும் பதில் சொல்கிறீர்களே, அதனால்தான் அப்படிச் சொன்னேன்."

"நன்றி. திருவள்ளுவரின் அறிவுரையைப் பின்பற்றினால், நாம் எல்லோருமே 'சொல்லின் செல்வர்'களாக ஆகலாம். உங்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் அன்பு நிறைந்தவையாகவும், வஞ்சம் இல்லாதவையாகவும், உண்மையானவையாகவும் இருக்க வேண்டும். அவ்வளவுதான்!" என்றார் தமிழாசிரியர்.

அறத்துப்பால்
  இல்லறவியல் 
              அதிகாரம் 10             
 இனியவை கூறல்   
குறள் 91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

பொருள்:
ஒருவர் தான் சொல்ல வரும் செய்தியின் உட்பொருளை உணர்ந்து அதை அன்பு கலந்தும், வஞ்சம் இன்றியும் வெளிப்படுத்தினால் அதுவே இன்சொல் ஆகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                             காமத்துப்பால்
























.

Tuesday, August 15, 2017

90. பெரியம்மா பெண்

ராஜுவுக்கு அவன் பிசினஸ் விஷயமாக பெங்களூர் போக வேண்டி இருந்தது. ஒரு வாடிக்கையாளரைப் பார்த்துப் பேச வேண்டும். வேலை சில மணி நேரங்கள்தான்.

மனைவியையும் அழைத்துப் போய் இரண்டு மூன்று நாட்கள் தங்கி, அவளுக்கு பெங்களூரைச் சுற்றிக் காட்டி விட்டு வரலாம் என்று நினைத்தான். அவன் மனைவி கிரிஜாவும் உற்சாகமாக ஒப்புக்கொண்டாள்.

பெங்களூரில் இருக்கும் அவன் நண்பன் கோபால் பெங்களூர் வந்து தன் வீட்டில் சில நாட்கள் தங்கி விட்டுப் போகும்படி அவனை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். அதனால் இருவரும் கோபால் வீட்டில் தங்கலாம் என்று ராஜு சொன்னபோது, கிரிஜா கொஞ்சம் தயங்கினாள்.

"நீங்க ரெண்டு பேரும் நண்பர்கள்தான். ஆனா நான் உங்க நண்பரோட மனைவியைப் பார்த்தது கூட இல்லியே! நான் எப்படி அங்கே வந்து தங்க முடியும்?" என்றாள் கிரிஜா.

"நான் கூட அவன் மனைவியைக் கல்யாணத்துல பார்த்ததுதான். எனக்கும் அவங்களைத் தெரியாது. இப்ப போய்ப் பார்த்துப் பழகிக்கப் போறோம்!" என்றான் ராஜு. 

"எனக்கென்னவோ தயக்கமா இருக்கு."

"இங்க பாரு. நாம அங்கே போய் இறங்கப் போறோம். அதுக்கப்புறம் ஊரைச் சுத்திப் பார்க்க வெளியில போகப் போறோம். அவங்க வீட்டில இருக்கப் போறது கொஞ்ச நேரம்தானே? நாம வேற எங்கேயாவது தங்கினா அவன் தப்பா நினைச்சுப்பான்."

கிரிஜா அரை மனதாகச் சம்மதித்தாள்.

பெங்களூரில் கோபால் வீட்டில் வந்து இறங்கிச் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு விட்டுக் குளித்து டிஃபன் சாப்பிட்டு விட்டு இருவரும் வெளியே கிளம்பத் தயாரானார்கள்.

"என்னங்க? நாம பெட்டியை எடுத்துட்டுப் போயிடலாம். பாக்க வேண்டிய இடங்களைப் பாத்துட்டு, அப்படியே என் பெரியம்மா பொண்ணு வீட்டுக்குப் போயிடலாம்" என்றாள்  கிரிஜா.

"ஏன், நீங்க இங்கியே தங்கலாமே? இங்க ரெண்டு மூணு நாள் இருக்கப் போறதாத்தானே ராஜு சொன்னான்? என்னடா?" என்றான் கோபால்.

ராஜு பதில் சொல்வதற்குள், கிரிஜா "ரெண்டு நாள் பெங்களூர்ல இருக்கறதாத்தான் பிளான். ஆனா சாயந்திரம் என் பெரியம்மா பொண்ணு வீட்டுக்கு வராதா சொல்லியிருக்கேன். அவளும் நானும் சின்ன வயசிலிருந்தே ரொம்ப க்ளோஸ்" என்றாள்.

"சரி. அதுக்கு ஏன் பெட்டியைத்  தூக்கிக்கிட்டுச் சுத்தணும்? சாயந்திரம் இங்கே வந்துட்டு, சாப்பிட்டுட்டு, அப்புறம் பெட்டியை எடுத்துக்கிட்டுப் போகலாமே?" என்றான் கோபால்.

"இல்லை. சாயந்திரம் இவ்வளவு தூரம் வரணும்..அவ வீடு லால் பாக் பக்கத்துலதான் இருக்கு. மொதல்ல அவ வீட்டுக்குப் போய்ப் பெட்டியை வச்சுட்டு, அப்புறம் லால் பாக் போயிட்டு, அப்புறம் வேற எடங்களுக்குப் போறோம்" என்றாள் கிரிஜா.

கோபால் ராஜூவைப் பார்க்க, அவன் பதில் சொல்லாமல் கிரிஜாவைப் பார்த்தான். "ஏங்க இதுதானே நம்ப பிளான்? நீங்க உங்க ஃபிரண்டுகிட்ட சரியா சொல்லலியா?" என்றாள் கிரிஜா.

விடை பெற்றுப் பெட்டியை எடுத்துக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.

வெளியே வந்ததும், "உன் பெரியம்மா பெண் நாக்பூர்ல இல்ல இருக்கறதாச் சொல்லியிருக்க? இப்ப அவ பெங்களூருக்கு வந்துட்டாளா என்ன? எங்கிட்ட இதுக்கு முன்னால சொல்லவே இல்லையே! கோபால் முன்னால கேக்க வேண்டாம்னு பேசாம இருந்துட்டேன்" என்றான் ராஜு.

"அவ நாக்பூர்லதான் இருக்கா!"

"பின்னே? இப்ப எங்கே போகப் போறோம்?"

"ஏதாவது நல்ல ஹோட்டல் இருந்தா பாருங்க. அங்கே தங்கிக்கலாம்."

"ஏன்? கோபால் வீட்டில எல்லாம் வசதியாத்தானே இருந்தது?அவங்களும் நம்மளை நல்லாத்தானே கவனிச்சுக்கிட்டாங்க?"

"நல்லாத்தான் கவனிச்சுக்கிட்டாங்க. இல்லைன்னு சொல்லலே. ஆனா நாம வீட்டுக்குள்ள நுழைஞ்சப்ப, உங்க ஃபிரண்டோட மனைவி முகத்தில சந்தோஷம் இல்ல. வாங்கன்னு கூப்பிட்டாங்களே தவிர, நாம அங்கே வந்து தங்கறதை அவங்க அசௌகரியமான நினைச்சாங்கன்னு தோணிச்சு."

"சே! சே! எவ்வளவு நல்ல பொண்ணு அவங்க! நமக்கு டிஃபன் எல்லாம் நல்லாப் பண்ணிக் குடுத்து உபசரிக்கல?"

"உபசரிச்சாங்க. அவங்க நல்லவங்கதான். அவங்களை நான் குறை சொல்லல. ஆனா நாம அவங்க வீட்டில வந்து தங்கறதில அவங்களுக்கு ஏதாவது அசௌகரியம் இருந்திருக்கலாம். அது அவங்களை அறியாம அவங்க முகத்தில வெளிப்பட்டிருக்கும்."

"நீ ஏதோ கற்பனை பண்ணிக்கறேன்னு நினைக்கிறேன்."

"கற்பனை இல்லீங்க. அவங்களோட அதிருப்தி அவங்க முகத்தில தெரிஞ்சது. நாம மூணு நாள் அங்கே தங்கினாலும் நம்மளை நல்லபடியாதான் கவனிச்சுப்பாங்க. ஆனா அவங்க முகத்தில அந்த அதிருப்தியைப் பாத்தப்பறம், எனக்கு அங்கே தங்கப் புடிக்கல. அதனாலதான் பெரியம்மா பொண்ணு வீட்டுக்குப் போறதாப் பொய் சொல்லிட்டு வந்துட்டேன்."

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து 
நோக்கக் குழையும்  விருந்து.

பொருள்:
அனிச்சம்பூவை முகர்ந்து பார்த்தாலே அது வாடி விடும். அதுபோல் விருந்தினர்களைச் சற்று முகமாற்றத்துடன் பார்த்தாலே அவர்கள் மனம் வருந்துவர். 

இந்தக் கதையின் காணொளியின் வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



















.





Monday, August 14, 2017

89. டைனிங் டேபிள்

"கடைக்குப் போய் புதுசா ஒரு டைனிங் டேபிள் வாங்கிட்டு வரலாம் வா" என்று அழைத்தான் முத்து.

"எதுக்குப் புதுசா வாங்கணும்? நம்ப டைனிங் டேபிள் நல்லாத்தானே இருக்கு?" என்றாள் அவன் மனைவி லட்சுமி.

"அதை வாங்கி அஞ்சு வருஷம் ஆச்சு இல்ல? அதைக் கொடுத்துட்டுப் புதுசா வாங்கிக்கலாம். எதுக்குப் பழசை வச்சுக்கிட்டு? நமக்கென்ன வசதியா இல்ல?"

இருவரும் நகரிலேயே மிகப் பெரிய ஃபர்னிச்சர் கடைக்குச் சென்றனர்.

கடையில் பல மாடல்களை பார்த்துப் பெரிய டைனிங் டேபிள் ஒன்றைத் தேர்வு செய்தான் முத்து. "இது நல்லா இருக்கு இல்ல?" என்றான்.

"நல்லாத்தான் இருக்கு."

"அப்ப இதையே வாங்கிடலாமா?"

"இருங்க. நான் ஒண்ணு காட்டறேன், அதையும் பாருங்க."

"இதை விட நல்லதாவா காட்டிடப் போறே? இந்தக் கடையிலேயே இதுதான் விலை அதிகம். வேற கடைக்குப் போனாலும் இதைவிட நல்லதாக் கிடைக்காது."

"நான் காட்டறதையும் பாருங்களேன்!"

லட்சுமி காட்டிய டைனிங் டேபிளைப் பார்த்த முத்து, "இதையா வாங்கணுங்கற? இது ரொம்பச் சின்னதா இருக்கே? வசதி இல்லாதவங்க எது விலை குறைவுன்னு பாத்து வாங்குவாங்களே. அது மாதிரி இருக்கு இது!" என்றான்.

"நமக்கு இது போதுமே!"

"ஏன் இப்படிச் சொல்ற?"

"நம்ப வீட்டில நாம ரெண்டு பேர்தான் இருக்கோம். நாம ரெண்டு பேருதான் உக்காந்து சாப்பிடப் போறோம். உங்க சொந்தக்காரங்களோ, என்னோட சொந்தக்காரங்களோ, உங்க நண்பர்களோ யாரும் நம்ம வீட்டுக்கு வந்து ஒரு வேளை கூடச் சாப்பிடப் போறதில்ல. யாராவது நம்ம வீட்டுக்கு வந்தா கொஞ்ச நேரம் சோஃபாவில உக்காந்துட்டுப் போயிடப் போறாங்க! நமக்கு எதுக்கு பெரிய டைனிங் டேபிள்?"

மனைவி சொன்னதன் உட்பொருளை உணர்ந்தவனாக முத்து மௌனமாக இருந்தான்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா 
மடமை மடவார்கண் உண்டு.

பொருள்:
விருந்தோம்பலில் ஈடுபடாமால் இருப்பது செல்வங்கள் இருந்தும் வறுமை என்ற நிலை. இந்த நிலை அறிவிலிகளுக்கு ஏற்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Saturday, August 12, 2017

88. இந்த நாள் அன்று போல் இல்லையே!

மணிமாறன் தன் அறுபதாவது வயது நிறைவைக் கொண்டாடியபோது அவன் உறவினர்கள் அதிகம் பேர் வரவில்லை. அவன் மனைவி வழி உறவினர்களும்தான். ஏனெனில், அவன் அழைத்ததே மிகச் சிலரைத்தான். அழைத்தவர்களிலும் பலர் வரவில்லை!

அந்த விழாவைக் கொண்டாடுவதிலேயே அவனுக்கு விருப்பம் இல்லை. அவன் மனைவி வள்ளி விருப்பப்பட்டதால்தான் அவன் இதற்கு ஒப்புக் கொண்டான்.

அவர்களுக்கு ஒரு மகள் மட்டும்தான். ஒருவேளை மகன் இருந்திருந்தால் தன் பெற்றோர்களுக்கான இந்த விழாவை அவன் விமரிசையாகக் கொண்டாடியிருப்பான். திருமணம் ஆகிவிட்ட மகள் தன் கணவனுடன் வந்து விழாவில் கலந்து கொள்ளும் ஒரு விருந்தாளியாகத்தானே இருக்க முடியும்? எனவே மணிமாறன் தானே செலவு செய்து தன் அறுபது ஆண்டு நிறைவு வைபவத்தை நடத்த வேண்டிய நிலை.

மணிமாறன் இருந்த நிலையில் அவனால் அதிகம் செலவு செய்ய முடியவில்லை.

பத்து வருடம் முன்பென்றால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். சொந்தத் தொழில் செய்து வசதியோடு வாழ்ந்த காலம் அது!

அவன் வழி உறவினர்களும் சரி, அவன் மனைவி வழி உறவினர்களும் சரி, மிகச் சாதாரணமான நிலையில்தான் இருந்தார்கள். மணிமாறனும் ஆரம்பத்தில் வசதிக் குறைவானவனாகத்தான்  இருந்தான்.

ஆனால் சொந்தத் தொழில் செய்வது என்று முடிவு செய்து அவன் இறங்கிய பிறகு அவன் பொருளாதார நிலை வேகமாக வளர்ந்து விட்டது.

ஆனால் உறவினர்கள் யாரையும் அவன் தன்னிடம் அண்ட விடவில்லை. உறவினர்கள் தன் வீட்டுக்கு அதிகம் வருவதை அவன் விரும்பவில்லை.

வள்ளி அவனிடம் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறாள். "என்னங்க, சொந்தக்காரங்களையெல்லாம் அவ்வப்போது வீட்டுக்கு வரச் சொல்லி சாப்பாடு போடணுங்க. அப்பத்தான் அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும், நமக்கும் சந்தோஷமாயிருக்கும்."

"சொந்தக்காரங்களையெல்லாம் கல்யாணம் கச்சேரிகள்ள பாக்கறோமே, அது போதாதா? அவங்களை வீட்டுக்குக் கூப்பிட்டு சாப்பிடச் சொல்றதெல்லாம் எதுக்கு?  யாராவது வீட்டுக்கு வந்தா, கொஞ்ச நேரம் பேசிட்டு, காப்பி கொடுத்து அனுப்பிடணும். அதுதான் நமக்கு நல்லது. இல்லேன்னா, நம்மகிட்டதான் வசதி இருக்கேன்னுட்டுஒத்தர் மாத்தி ஒத்தர் வந்து டேரா போட்டுக்கிட்டே இருப்பாங்க. இவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடவா நான் சம்பாதிக்கிறேன்?"

உறவினர்கள் அவன் மனநிலையைப் புரிந்து கொண்டு ஒதுங்கியே இருந்தார்கள்.

சில காரணங்களால் அவன் தொழிலில் சறுக்கல் ஏற்படத் தொடங்கியது. மிகக் குறுகிய காலத்திலேயே அவன் தொழிலில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டு, அவன் பொருளாதார நிலை சரிந்து, குடும்பம் நடத்துவதே கஷ்டம் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.

எப்படியோ காலத்தை ஒட்டி அறுபது வயது வரை கடந்து வந்து விட்டான். மனைவியின் விருப்பத்துக்கு ஏற்ப அறுபதாம் கல்யாணமும் செய்து கொண்டு விட்டான்.

எல்லோரையும் கூப்பிட்டு விமரிசையாக நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், குறைந்த பட்ஜெட்டில் நடந்த விழா என்பதால் மிக நெருங்கிய உறவினர்களையும், நண்பர்களையும் மட்டுமே அழைக்க முடிந்தது.

"கூட்டம் ரொம்பக் குறைச்சலா இருக்கே! நாம கூப்பிட்டவங்கள்ள நிறைய பேரு வரவே இல்லை. இன்னும் கொஞ்ச பேரைக் கூப்பிட்டிருக்கலாமோ?" என்றான் மணிமாறன் பக்கத்தில் இருந்த மனைவி வள்ளியிடம்.

"வசதி இருந்த காலத்தில யாரையும் கூப்பிட்டு ஒருவேளை சாப்பாடு போடறதுக்குக் கூட உங்களுக்கு மனசு இல்ல. இப்ப உங்க வருமானம் குறைஞ்சு போய் நாம ரெண்டு பேர் குடும்பம் நடத்தறதுக்கே பத்தாக்குறையா இருக்கும்போது நிறைய பேரைக் கூப்பிட்டு விருந்து கொடுக்க முடியலியேன்னு வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? நம்ப உறவுக்காரங்க உற்சாகமா வந்து விழாவிலே கலந்துப்பாங்கன்னும் எப்படி எதிர்பார்க்க முடியும்?" என்றாள் வள்ளி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி 
வேள்வி தலைப்படா தார்.

பொருள்:
விருந்தோம்பல் என்ற வேள்வியில் பொருளைச் செலவழிக்காமல் பொருளைச் சேமித்தவர்கள், அந்தப் பொருள் அழிந்தபின் பற்றுக்கோட்டை (ஆதரவை) இழந்து விட்டோமே என்று வருந்துவர். 

இந்தக் கதையின் காணொளியின் வடிவம் இதோ:

Thursday, August 10, 2017

87. அனுபவம் புதுமை

ஜகந்நாதன் எப்போதுமே தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் பழக்கம் உடையவன்.

அதனால்தான் அந்தக் கோயில் வாசலில் நின்று கொண்டிருந்த அந்த நடுத்தர வயது ஆசாமியை அவன் கவனிக்க நேர்ந்தது.

ஜகந்நாதன் கோயிலிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, அந்த ஆள் கோயில் வாசலுக்குச் சில அடிகள் தள்ளி நின்று கொண்டு கோயிலிலிருந்து வெளியில் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒருவேளை அவனுடன் வந்தவர்கள் கோயிலிலிருந்து வெளியே வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறானோ என்று ஜகந்நாதன் முதலில் நினைத்தான். ஆனால் அவன் குறிப்பாகச் சிலரை உற்றுக் கவனித்ததைப் பார்த்தபோது, ஏதோ நோட்டம் பார்க்கிறான் என்று ஜகந்நாதனுக்குத் தோன்றியது.

என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று நினைத்து ஜகந்நாதன் வேறொரு பக்கமாகப் போய் நின்று கொண்டான்.

கோயிலில் அப்படி ஒன்றும் கூட்டமில்லை. ஆயினும் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் வெளியூரிலிருந்து யாத்திரிகர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். சற்று இடைவெளி விட்டாவது சிலர் கோயிலிலிருந்து வெளியே வந்து கொண்டுதான் இருந்தார்கள்.

நாலைந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் வெளியே வந்தது. அப்போது அந்த ஆள் அவர்கள் பின்னால் போனான். ஆனால் அவர்கள் அருகில் செல்லாமல் சற்றுப் பின்னாலேயே நின்றான். சில நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்து பழைய இடத்திலேயே நின்று கொண்டான்.

இது போல் இரண்டு மூன்று முறை நடந்தது.

அதன் பிறகு ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் வெளியே வந்தது. அவன் அவர்களைப் பின்தொடர்ந்து போனான். பிறகு அவர்களுக்கு முன்னால் போய் நின்று ஏதோ சொன்னான். அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர். பிறகு அவனிடம் ஏதோ கேட்க அவனும் பதில் சொல்ல அவர்களுக்கிடையே ஒரு சுருக்கமான உரையாடல் நடந்தது.

பிறகு அவர்கள் அவன் பின்னால் சென்றனர்.

அவன்  அவர்களிடம் ஏதோ சொல்லி அவர்களை ஏமாற்றி எங்கோ அழைத்துச் செல்கிறானோ என்ற சந்தேகம் ஜகந்நாதனுக்கு ஏற்பட்டது. எங்கே அழைத்துப் போகிறான் என்று பார்க்கலாம் என்று கருதி ஜகந்நாதன் அவர்கள் பின்னால் சென்றான்.

சற்றுத் தள்ளியிருந்த ஒரு ஓட்டலுக்குள் அவர்கள் நுழைந்தனர். அவர்களைப் பார்த்ததும் கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் செலுத்தி விட்டு "வாங்க" என்றார். பிறகு அவர் உள்ளே போகும்படி கைகாட்டியதும், அவர்களை அழைத்து வந்த ஆள் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றேன்.

ஜகந்நாதன் ஓட்டலுக்குள் போனான். எங்கே உட்காரலாம் என்று பார்ப்பது போல் சுற்று முற்றும் பார்த்தான். அந்த ஐந்து பேரையும் அந்த ஆள் ஃபேமிலி ரூமுக்குள் அழைத்துச் சென்று அவர்களை அங்கே உட்கார வைப்பதைப் பார்த்தான்.

ஜகந்நாதன் அந்த அறையைப் பார்த்தபடி ஒரு மேஜையில் உட்கார்ந்தான். தன்னை விசாரித்த சர்வரிடம் காப்பி கொண்டு வரச் சொல்லி விட்டு அறையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களுக்கு இலை போடப்பட்டு உணவு பரிமாறப்பட்டது.

ஜகந்நாதன் காப்பி குடித்து விட்டு வெளியே வந்தான். கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம் பில்லுக்குப் பணம் கொடுத்து விட்டு "உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா? நீங்கதானே முதலாளி? என்றான்.

"ஆமாம். இதைத்தான் கேக்க வந்தீங்களா?" என்றார் அவர் சிரித்தபடி.

"இல்லை. உங்க கடை ஆளு ஒருத்தர் கோயிலிலிருந்து ஒரு குடும்பத்தை அழைச்சுக்கிட்டு வந்து உள்ள சாப்பிட அழைச்சுட்டுப் போறதைப் பாத்தேன்."

"ஓ! அதுவா? ஓட்டல் தொழிலை இங்கிலீஷிலே ஹாஸ்பிடாலிட்டி இண்டஸ்ட்ரின்னு சொல்லுவாங்க. தமிழ்ல விருந்தோம்பல் தொழில்னு சொல்லலாம். ஆனா விருந்தோம்பல்னா, நாம யாரையாவது கூப்பிட்டு வந்து சாப்பாடு போடணும் இல்ல? அதுதான் தினமும் கோயிலுக்கு வரவங்கள்ள ஒரு குடும்பத்தை அழைச்சுக்கிட்டு வந்து அவங்களுக்கு சாப்பாடு போடறதுன்னு ஒரு வழக்கத்தை வச்சுக்கிட்டிருக்கேன்."

"ஓ  அதுதான் உங்க ஆள் கோயிலிலிருந்து வெளியில வரவங்களைப் பாத்துக்கிட்டிருந்தாரா? ஆமாம், எப்படி நீங்க ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கிறீங்க?"

"யாரை வேணா கூப்பிட்டு வந்து சாப்பாடு போடலாம் சார். ஆனா, கோயிலுக்கு வரவங்கள்ள கொஞ்சம் வசதிக் குறைவானவங்களாப் பார்த்துத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு சாப்பாடு போட்டா நாம செய்யற காரியம் இன்னும் பயனுள்ளதா இருக்கும்னு நெனைக்கிறேன். அதனால என்னோட ஆளை கோயிலிலிருந்து வெளியே வர குடும்பங்களைக் கவனிக்கச் சொல்லுவேன்.

"சில பேரு எங்க சாப்பிடலாம்கிறதைப் பத்தித் தங்களுக்குள்ள பேசிப்பாங்க. அவங்க பேசிக்கிறதிலேருந்து அவங்க வசதியானவங்களா, வசதிக் குறைவானவங்களான்னு தெரியும். வசதிக் குறைவானங்களாத் தெரிஞ்சா, எங்க ஆளு அவங்ககிட்ட போயி, கோயிலுக்குப் போயிட்டு வரவங்கள்ள ஒரு குடும்பத்துக்கு எங்க ஓட்டல்ல சாப்பாடு போடறது வழக்கம்னு சொல்லி அவங்களைக் கூப்பிடுவார். சில பேரு ஒத்துப்பாங்க. சில பேரு தயங்குவாங்க. அவங்களுக்கு விருப்பம் இல்லேன்னா வேற ஒரு குடும்பத்தைக் கேப்பாரு."

"ரொம்ப நல்ல காரியம் செய்யறீங்க சார். பாராட்டுக்கள்!" என்று சொல்லி விடைபெற்றான் ஜகந்நாதன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 87
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் 
துணைத்துணை வேள்விப் பயன்.

பொருள்:
விருந்தோம்பல் என்ற வேள்வியின் பயன் எவ்வளவு என்று கூற முடியாது. அது விருந்தினரின் தகுதியின் அளவைப் பொறுத்தது. 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

























Tuesday, August 8, 2017

86. கேட்காத கேள்விக்கு பதில்!

"ஏம்ப்பா சென்னைக்குப் போகப் போறியா?"

"ஆமாண்ணே."

"எங்கே தங்கப் போறே? செந்தில் வீட்டிலியா?"

"இல்லை. ஒரு நண்பர் வீட்ல தங்கப் போறேன். ஆனா செந்தில் வீட்டுக்குப் போவேன். ஏதாச்சும் சொல்லணுமா?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நம்ம ஊர்லேயிருந்து யார் சென்னைக்குப் போனாலும் செந்தில் வீட்டுக்குப் போய் ஒரு காப்பியாவது குடிக்காம வர மாட்டாங்களே! அதுதான் கேட்டேன்."

"ஆமாண்ணே! அதனாலதான் நானும் வேற இடத்தில தங்கினாலும், அவன் வீட்டுக்குப் போயிட்டு வராதா இருக்கேன்."

"எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. செந்தில் நம்ம ஊர்க்காரன்தான்னாலும், நிலபுலன்களை வித்துட்டு ஒரேயடியா சென்னைக்குப் போயிட்டான். அவங்க அப்பா அம்மா எல்லாம் எப்பவோ போய்ச் சேர்ந்துட்டாங்க. அவனுக்குச் சொந்தம்னு கூட இந்த ஊர்ல யாரும் இல்லை.

"அப்படி இருக்கறச்சே நம் ஊர்லேயிருந்து யார் சென்னைக்குப் போனாலும் அவன் வீட்டுலதான் தங்கணும், அப்படி வேற இடத்தில தங்கினாலும் அவன் வீட்டுக்கு வந்து ஒருவேளையாவது சாப்பிட்டுட்டுப் போகணும்னு அவன் பிடிவாதம் பிடிக்கிறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு!"

"ஆரம்பத்தில நம்ம ஊர்லேருந்து சென்னைக்குப் போனவன் அவன் ஒருத்தன்தான். அதுக்கப்பறம் இங்கேயிருந்து சென்னைக்குப் போன நம்ம ஊர்க்காரங்க ஒண்ணு ரெண்டு பேரு அவன் வீட்டில போய் இறங்கி இருக்காங்க. அதிலிருந்து நம்ம ஊர்லேயிருந்து யாரு சென்னைக்குப் போனாலும் அவனோட வீட்டுலதான் தங்கணும்னு அவன் ஒரு சட்டமே போட்டுட்டான்!"

செந்தில் சென்னையில் போய் செட்டில் ஆகி இந்தப் பத்து வருஷத்திலே நம்ம ஊர்லேருந்து இன்னும் நாலஞ்சு பேரு சென்னைக்குப் போய் செட்டில் ஆயிட்டாங்க. ஆனா நம்ம ஊர்க்காரங்க எல்லாம் இப்பவும் செந்தில் வீட்டுக்குத்தான் போறாங்க."

"நல்ல வேளையா, நம்ம ஊர்லேருந்து மாசத்துக்கு நாலஞ்சு பேருதான் சென்னைக்குப் போறாங்க. இல்லேன்னா அவனால தாக்குப் பிடிக்க முடியுமா?"

"எத்தனை பேரு போறாங்கன்னு நீங்கதான் கணக்குப் பாக்கறீங்க. செந்தில் இதையெல்லாம் பாக்கற மாதிரி தெரியலை. நான் எப்ப போனாலும், 'மறுபடி எப்ப வருவீங்க மாமா?'ன்னுதான் கேப்பான்.

"அவன் பொண்டாட்டி அதுக்கு மேல. 'ஒவ்வொரு தடவையும் நீங்க மட்டும்தானே வரீங்க? அடுத்த தடவை வரச்சே அம்மாவையும் கூட்டிக்கிட்டு வாங்க'ன்னு சொல்றா. சும்மா வாய் வார்த்தைக்குச் சொல்றதில்ல இது, மனசார சொல்றான்னு அவ சொல்றதைக் கேக்கும்போது நமக்கே தோணும்!"

"அவனுக்கேத்த மாதிரி ஒரு பொண்டாட்டி வந்து வாச்சாளே அதைச் சொல்லுங்க. எங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தா, என் சம்சாரம் உடம்பு முடியலைன்னு படுத்துடுவா!"

செந்தில் அலுவலகத்திலிருந்து வந்ததும், "ருக்கு. இன்னிக்கு ரத்தினவேல் மாமா வரதா சொல்லியிருக்காரு. சாப்பாடு தயார் பண்ணிடு" என்றான்.

"அவரு போன தடவை வந்தபோதே அவரு சுத்த சைவம்னு சொல்லி இருக்கீங்களே. அதனால சைவச் சமையல் செய்யத்தான் தயார் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"ருக்கு, ஒண்ணு கேட்டா தப்பா நெனச்சுக்க மாட்டியே"

"நீங்க என்ன கேக்கப் போறீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் கேளுங்க" என்றாள் ருக்மிணி சிரித்துக்கொண்டே.

"உனக்குத்தான் கேள்வி என்னன்னு தெரியுமே, பதில் சொல்லிடு" என்றான் செந்தில்.

"உண்மையைச் சொல்லட்டுமா? உங்க ஊர்க்காரங்க இங்கே சாப்பிட வரும்போது எனக்கு மனசுக்கு நிறைவா இருக்கு. நான் சொன்னா நீங்க நம்புவீங்களான்னு தெரியாது. ஒவ்வொரு தடவையும் யாராவது வந்துட்டுப் போகும்போது, அடுத்தாப்பல யாரும் வர மாட்டாங்களான்னுதான் எதிர்பாத்துக்கிட்டிருப்பேன்."

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்வருந்து வானத் தவர்க்கு.

பொருள்:
வந்த விருந்தினரை நன்கு உபசரித்து அடுத்த விருந்தினருக்காகக் காத்திருப்பவனை விண்ணுலகில் உள்ள தேவர்கள் சிறப்பாக வரவேற்று உபசரிப்பார்கள்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















Monday, August 7, 2017

85. தண்ணீர்

பொன்னம்பலம் காலையில் வீட்டிலிருந்து கிளம்பி வயலுக்குப் போகும் முன்பு, தன் வீட்டு முற்றத்தில் கோட்டை அடுப்பு மூட்டப் பட்டிருக்கிறதா என்று பார்த்து விட்டுத்தான் போவார்.

கோட்டை அடுப்பில் தினமும் இருபது பேர் சாப்பிடும் அளவுக்குச் சோறு சமைப்பார்கள். அவர்கள் வீட்டில் இருந்தது மொத்தம் ஐந்து பேர்தான். வேலையாட்கள் மூன்று பேரைச் சேர்த்தாலும், சுமார் பன்னிரண்டு வெளி மனிதர்கள் சாப்பிடும் அளவுக்குச் சமைப்பது அவர் வழக்கம்.

இரண்டு கோட்டை அடுப்புகள் இருக்கும். பெரியதில் சோறு, சிறியதில் குழம்பு. குழம்பில் போடக் காய்களை நறுக்கி மேடாகக் குவித்து வைத்திருப்பார்கள்.  

சரியாகப் பதினோரு மணிக்கு அவர் வீட்டு வாசல் திண்ணையில் இலை போட்டு விடுவார்கள். யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம். உள்ளூர்க்காரர்கள், வெளியூர்க்காரர்கள் என்று இரண்டு சாராருமே அங்கே சாப்பிட வருவதுண்டு.

பொன்னம்பலம் பன்னிரண்டு மணிக்கு மேல் வயற்காட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்புவார். அநேகமாக அவர் திரும்பி வரும்போது ஒரு சிலராவது அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

பொன்னம்பலம் சாப்பிடுபவர்களைப் பார்த்துக் கைகூப்பி விட்டு உள்ளே போவார். உள்ளூர்க்காரர்கள் சிலருக்கு - அவரை விட வயதில் குறைந்தவர்கள், அல்லது சமுதாய அந்தஸ்தில் குறைந்தவர்களுக்கு-  இது சங்கடமாக இருக்கும். எச்சில் கையால் அவரை பதிலுக்குக் கும்பிடவும் முடியாது!

எல்லோரும் சாப்பிட்டு முடிந்தபின்தான் பொன்னம்பலம் சாப்பிட உட்காருவார். சில நாட்கள் அதிகமான நபர்கள் சாப்பிட வந்து விட்டால், மீண்டும் உலை வைத்துச் சோறு வடித்துக் குழம்பும் செய்வார்கள். அந்த நாட்களில் பந்தி முடிய கிட்டத்தட்ட இரண்டு மணி கூட ஆகி விடும். ஆனால் பந்தி முடிந்ததும்தான் சாப்பிடுவது என்பதில் உறுதியாக இருப்பார் பொன்னம்பலம்.

"ஏன் இப்படிச் செய்யறீங்க?" என்று அவரிடம் நண்பர் ஒருவர் கேட்டதற்கு "ஆண்டவன் புண்ணியத்தில என்னோட வயல்ல எங்க குடும்பத்துக்குத் தேவையானதை விட அதிகமாவே அரிசி விளையுது. அதில கொஞ்சம் அரிசியை மத்தவங்களுக்கு சாப்பாடு போடறதுக்காகப் பயன்படுத்தினா என்னன்னு தோணிச்சு" என்றார் பொன்னம்பலம்.

ந்த ஆண்டு மழை பொய்த்ததால் எங்கும் வறட்சி மிகுந்திருந்தது. பல பேர் ஆழ்கிணறு (போர்வெல்) தோண்டிப் பார்த்தார்கள். ஆனால் ஆழ்கிணற்றிலும்   தண்ணீர் வராததால் அந்த வருடம் பயிர் செய்வதையே நிறுத்தி விட முடிவு செய்தார்கள்.

நீண்ட யோசனைக்குப் பிறகு, பொன்னம்பலம் தன் நிலத்தில் ஆழ்கிணறு தோண்டிப் பார்க்க முடிவு செய்தார். அவருடைய நிலத்துக்குப் பக்கத்து நிலங்களில் போடப்பட்ட ஆழ்கிணறுகளில் தண்ணீர் வரவில்லை. அதனால் பொன்னம்பலம் இந்த முயற்சியில் ஈடுபடுவது வீண் செலவில்தான் முடியும் என்று பலரும் நினைத்தனர். அவரிடமே சிலர் சொல்லவும் செய்தனர்.

ஆனால் பொன்னம்பலம் தன் முயற்சியிலிருந்து பின் வாங்கவில்லை.

யாரும் எதிர்பாராத வகையில் அவர் நிலத்தில் தோண்டப்பட்ட ஆழ்கிணற்றிலிருந்து தண்ணீர் வெளி வந்தது.

பொன்னம்பலம் சாகுபடி செய்யத் தீர்மானித்தார். அவருடைய நண்பர் ஒருவர் சொன்னார் "இங்க பாரு பொன்னம்பலம். போரை நம்பி சாகுபடியில் இறங்காதே. போர்ல எப்ப வேணும்னாலும் தண்ணி வரது நின்னு போகலாம். அப்ப என்ன செய்வே?"

"போர்ல தண்ணி வராதுன்னுதான் எல்லோரும் சொன்னாங்க. எனக்கும் அந்த பயம் இருந்தது. ஆனாலும் முயற்சி பண்ணிப் பாக்கலாம்னு இறங்கினேன். கடவுள் புண்ணியத்தில தண்ணி வந்திருக்கு. நீங்க சொல்ற மாதிரி ஒருவேளை போர் வத்திப் போற நிலைமை வந்தாலும் அப்ப மழை பெஞ்சு பயிரைக் காப்பாத்தலாம் இல்ல? அதனால நான் நம்பிக்கையோட சாகுபடியைத் தொடங்கத்தான் போறேன். தினமும் பத்து பேருக்கு சாப்பாடு போட எனக்கு அரிசி வேணும் இல்ல?" என்றார் பொன்னம்பலம்.

"நீ நெனைக்கறது நடக்கும்யா! நீ போடற பயிர் தண்ணி இல்லாமையே நல்லா வளர்ந்தாலும் ஆச்சரியம் இல்ல!" என்றார் நண்பர்.  

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 
மிச்சில் மிசைவான் புலம்.

பொருள்:
விருந்தினருக்கு முதலில் உணவளித்து மீதம் இருக்கும் உணவைத் தான் உண்ணும் பழக்கம் உள்ளவன் நிலத்தில் விதை விதைக்க வேண்டுமா என்ன? (விதை விதைக்காமலே கூட அவன் நிலத்தில் பயிர் வளரும்.)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



















84. விடுமுறை அனுபவம்

கோடை விடுமுறைக்கு எங்காவது போக வேண்டும் என்று அவளுடைய மகன், மகள் இருவரும் வற்புறுத்தியதால் சென்னைக்குப் போகத் தீர்மானித்தாள் செல்வி.

அவளுடைய இரண்டு அண்ணன்களும் சென்னையில்தான் இருந்தனர். சிறு வயதிலிருந்தே இருவருக்கும் அவள் செல்லக் குழந்தை. அவர்கள் தந்தை வேறு சிறு வயதிலேயே இறந்து விட்டதால், அண்ணன்களுக்கு அவள் மீது பாசம் இன்னும் அதிகம் ஆகி விட்டது.

அண்ணன்கள் இருவரும் படித்து முடித்ததும் சென்னைக்கு வேலைக்குப் போய் விட்டனர். செல்விக்குத் திருமணம் செய்து வைத்து விட்டு அவர்களும் திருமணம் செய்து கொண்டு, ஒவ்வொருவரும் ஒரு குழந்தைக்குத் தந்தையாகவும் ஆகி விட்டனர்.

மூன்று பேருக்கும் குடும்பம் என்று ஏற்பட்டு விட்ட பிறகு, அவர்கள் தாயும் மறைந்து விட்ட பிறகு, பழைய நெருக்கம் குறைந்து விட்டதுதான். ஆயினும் அண்ணன்கள் இருவரும் அடிக்கடி அவளுடன் தொலைபேசியில் பேசி அவள் நலம் பற்றி விசாரித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

தொலைபேசியில் அண்ணன்கள் பேசும்போது, அண்ணிகளும் அவ்வப்போது அவளிடம் பேசுவார்கள். குடும்பத்தோடு தங்கள் வீட்டில் வந்து தங்கி விட்டுப் போகும்படி அவளிடம் அடிக்கடி சொல்வார்கள்.

இப்போதுதான் அதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது.

இரண்டு அண்ணன்களில் குமார் அதிக வசதி படைத்தவன். அதனால் அவன் வீட்டுக்கு முதலில் போனாள்.

அண்ணன் அண்ணி இருவருமே வேலைக்குப் போவதால் சமையலுக்கும், சிறுவன் வருணைப் பார்த்துக் கொள்வதற்கும் கோமதி என்ற பெண்ணை முழு நேரம் வீட்டில் வேலைக்கு வைத்திருந்தார்கள்.

செல்வியும், குழந்தைகளும் வந்ததும் '"எப்படி  இருக்கே?' என்று அண்ணனும் அண்ணியும் கேட்டதோடு சரி. "'உனக்கு எது வேணும்னாலும் கோமதி கிட்ட கேட்டுக்க" என்று சொல்லி விட்டு அண்ணி தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டாள்.

கோமதி அவர்களை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டாள்.

மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் அண்ணனும் அண்ணியும் தன்னிடமும் குழந்தைகளுடனும் பேசுவார்கள் என்று செல்வி நினைத்தாள்.

ஆனால் இருவருமே மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும் செல்வியைப் பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டுத் தங்கள் அறைக்குள் போய் விட்டார்கள். சாப்பிட மட்டும் வெளியே வந்தனர். அப்போதும் செல்வியையும் குழந்தைகளையும் 'சாப்பிட்டீங்களா?' என்று கேட்கவில்லை. கோமதி அவர்களுக்குச் சாப்பாடு போட்டிருப்பாள் என்ற நம்பிக்கை போலும்!

இரவில் அவர்கள் படுக்கை அறையைக் கூட கோமதிதான் காட்டினாள். கட்டில், மெத்தை ஏ சி என்று படுக்கை அறை வசதியாகவே இருந்தது. ஏ சி ரிமோட்டை எப்படி இயக்க வேண்டும் என்பதை கோமதி அவளுக்குச் செய்து காட்டினாள்.

தூங்கப் போகுமுன் அவள் குழந்தைகள் இருவரும் "அம்மா! இங்க ரொம்ப போர் அடிக்குது. வருண் கூட எப்பவும் அவன் ரூம்லயே இருக்கான். எங்களோட விளையாடறதில்ல" என்றனர்.

மறுநாள் காலையிலேயே, தான் சுரேஷ் அண்ணன் வீட்டுக்குப் போவதாக செல்வி குமாரிடம் கூறினாள்.

"ஏன் குழந்தைகளுக்கு போர் அடிக்குதாமா?" என்றான் குமார். "சுரேஷ் வீட்டிலேயும் இப்படித்தான் இருக்கும்!"

"ரெண்டு மூணு நாள் இருப்பேன்னு பார்த்தேன்" என்றாள் அண்ணி.

ஆனால் அதற்கு மேல் இருவரும் எதுவும் சொல்லவில்லை.

சுரேஷுக்கு ஃபோன் செய்ததும், அவன் மாலை அலுவலகத்திலிருந்து கொஞ்சம் சீக்கிரமே கிளம்பி வந்து அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னான்.

மாலையில் சுரேஷுடன் அவன் வீட்டுக்குச் சென்றபோது சுரேஷின் மனைவி ப்ரியாவும், குழந்தை  தீப்தியும் வீட்டில் இருந்தனர்.

"என்ன அண்ணி ஆஃபீஸ் போகலையா?" என்றாள் செல்வி.

"நீ வரப்ப வீட்ல இருக்கணும்னுதான் பர்மிஷன் போட்டுட்டு வந்துட்டேன்" என்றாள் ப்ரியா.

இரண்டு வாரங்கள் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை. எல்லா நாளும் ஒரே சிரிப்பும் கலகலப்பும்தான். இந்த இரண்டு வாரத்தில் சுரேஷ், ப்ரியா இருவருமே நாலைந்து நாட்கள் பர்மிஷன் போட்டு விட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்தனர். தினமும் அலுவலகத்திலிருந்து ஒருமுறையாவது ஃபோன் செய்து ப்ரியா செல்வியிடம் பேசுவாள்.

வழக்கமாகப் பள்ளி விட்டு வந்ததும் மாலை ப்ரியா வீட்டுக்கு வரும்வரை பக்கத்து வீட்டில் இருந்து வந்த தீப்தி, இந்த இரண்டு வாரங்களும் செல்வி இருந்ததால் தன் வீட்டிலேயே இருந்தாள். அதில் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி. "நீங்க இங்கியே இருந்துடுங்களேன் அத்தை. எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கும்" என்றாள்.

இடையில் வந்த வார இறுதி விடுமுறை நாட்களில் சுரேஷும் ப்ரியாவும் அவர்களைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள்.

செல்வி ஊர் திரும்பும் நாள் வந்தது.

"குழந்தைகளுக்குக் கோடை விடுமுறை ரெண்டு மாசம் இருக்கு, அதில ஒரு மாசமாவது இங்க தங்கும்படி நீ வந்திருக்கலாம்" என்றாள் ப்ரியா. "இனிமே எல்லா லீவுக்கும் இங்க வரணும், என்ன?" என்றாள் குழந்தைகளிடம்.

"அடுத்த லீவுக்கு நீங்கதான் எங்க ஊருக்கு வரணும்" என்றாள் செல்வி.

"கண்டிப்பா!" என்றாள்  ப்ரியா.

"ப்ரியாவோட சொந்தக்காரங்க ரெண்டு மூணு பேர் அப்பப்ப இங்க வந்துட்டுப் போவாங்க. எனக்குச் சொந்தம்னு சொல்லிக்க நீயும் குமாரும்தான். உள்ளூர்லயே இருந்தாலும் குமாரும் நானும் பாத்துக்கிட்டு மாசக்கணக்கா ஆச்சு. நம்ப சொந்தக்காரங்க யாரும் வரதில்லைன்னு ப்ரியாவுக்கு ஒரு குறை. இப்ப அந்தக் குறை தீர்ந்திருக்கும்!" என்றான் சுரேஷ் ப்ரியாவைப் பார்த்தபடி.

"அடிக்கடி வந்துட்டுப் போனாதான் குறை இல்லாம இருக்கும்!" என்றாள் ப்ரியா.

"இங்க பாரு செல்வி. குமார் மாதிரி நாங்க அவ்வளவு வசதியானவங்க இல்ல. ஆனா யாராவது வந்து போய்க்கிட்டு இருந்தாத்தான் எங்களுக்கு சந்தோஷமா இருக்கும். அதிக நாள் தங்கினா எங்களுக்குக் கஷ்டமா இருக்கும்னு நீ யோசிக்க வேணாம். உங்க அண்ணி சொன்ன மாதிரி எல்லா லீவுக்கும் நீங்க எல்லாரும் இங்க வந்து நிறைய நாள் இருந்துட்டுப் போங்க. அடுத்த தடவை வரும்போது உன் வீட்டுக்காரரையும் கூட்டிகிட்டு வரணும்."

குமார் சொன்னதை ப்ரியா சிரித்துக்கொண்டே தலையாட்டி ஆமோதித்தபோது 'மகாலக்ஷ்மி மாதிரி இந்த அண்ணி இருக்கும்போது அண்ணனுக்கு என்ன குறை இருக்க முடியும்?' என்று நினைத்தாள் செல்வி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல்.

பொருள்:
தன் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியுடன் உபசரித்து வருபவன் வீட்டில் மனமகிழ்ச்சியுடன் திருமகள் குடியிருப்பாள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

































Saturday, August 5, 2017

83. தினமும் ஒரு விருந்தினர்

நான் ஒருமுறை ஈரோட்டுக்குச் சென்றபோது, என் நண்பனின் அலுவலகத்தில்தான் முத்துசாமியைச் சந்தித்தேன்.

என் நண்பன் ஒரு வங்கியில் மேலாளராக இருந்தான். வங்கியில் அவன் அறையில் அமர்ந்து அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவனைப் பார்க்க வந்த முத்துசாமியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். அந்த வங்கியின் வாடிக்கையாளரான அவர் சிறிய அளவில் ஜவுளித் தொழில் செய்து வருவதாக அறிந்து கொண்டேன்.

நான் சென்னையில் பணி புரிவதையும், அலுவலக வேலையாக ஈரோட்டுக்கு வந்திருப்பதையும், அங்கே ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதையும் அவரிடம் சொன்னான் என் நண்பன்.

சற்று நேரம் பொதுவாகப் பேசியபின் முத்துசாமி என்னிடம் "சார், நீங்கள் இன்று மதியம் என் வீட்டுக்குச் சாப்பிட வாருங்களேன்" என்றார்.

சில நிமிடங்களுக்கு முன்பே அறிமுகமான என்னை அவர் தன் வீட்டுக்குச் சாப்பிட அழைத்தது எனக்கு வியப்பாக இருந்தது. அவர் அழைப்பை ஏற்று அவர் வீட்டுக்குச் செல்லவும் தயக்கமாக இருந்தது.

"இல்லை சார். இன்னொரு சமயம் பார்க்கலாம்" என்றேன்.

"போயிட்டு வாடா. அவரைப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும்" என்றான் நண்பன்.

"சார், உங்க மனைவிதான் ஊர்ல இல்லியே, நீங்களும் வாங்க" என்று என் நண்பனையும் அழைத்தார் முத்துசாமி.

"இல்லை சார். எனக்கு ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு. என் நண்பன் மிஸ்டர் தண்டச்சோறு வருவான்" என்று என்னை மாட்டி விட்டான் நண்பன்.

"இல்லை சார்" என்று நான் மறுக்க முயன்றேன்.

"டேய்! மிஸ்டர் முத்துசாமி பல வருஷங்களாக ஒரு பழக்கம் வச்சிருக்காரு. தினமும் யாராவது ஒத்தரை அழைத்துச் சாப்பாடு போடணும்கறதுதான் அது. என்னிக்காவது ஒருநாள் விருந்தினர் யாரும் கிடைக்காட்டா, தானும் சாப்பிடக்கூடாது என்பது அவரோட கொள்கை. ஆனா இதுவரை அப்படி நேரவில்லை. என்ன சார், சரிதானே?" என்றான் நண்பன்.

"நல்ல கொள்கைதான். எத்தனையோ ஏழைகள் இருக்காங்க. அவங்க யாருக்காவது சாப்பாடு போடலாமே! என்னை மாதிரி ஆளுங்களுக்கு எதுக்குச் சாப்பாடு போடணும்?" என்றேன் நான்.

"சார்! நான் செய்யறது அன்னதானம் இல்லை. அதுக்கு எனக்கு வசதியும் இல்லை. நான் செய்யறதெல்லாம் நான் சாப்பிடற எளிய உணவை தினமும் யாராவது ஒத்தரோட பகிர்ந்துக்கறதுதான்."

"இருக்கட்டுமே சார்! யாருக்குத் தேவையோ அவங்களுக்குச் சாப்பாடு போடலாமே? அதை விட்டுட்டு..."

"டேய் முட்டாள்! அவர் செய்யறது  அன்னதானம் இல்லை, அதிதிக்கு உணவு படைக்கிறது" என்றான் நண்பன்.

"சார்! நான் அதிகம் படிச்சவன் இல்லை. நாம சாப்பிடற சாப்பாட்டை தினமும்  யாராவது ஒத்தரோட பகிர்ந்துக்கணும்னு ஒரு வழக்கம் வச்சுக்கிட்டிருக்கேன். நீங்க சொல்ற மாதிரி ஒரு ஏழைக்குச் சாப்பாடு போடறது நல்லதுதான். ஆனா எத்தனையோ ஏழைகள்ள தினமும் ஒத்தரை நான் எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?

"ஏழைகளுக்குச் சாப்பாடு போடறதுன்னா நிறைய பேருக்குப் போடணும். ஒரு தனி மனுஷனால அதுவும் என்னை மாதிரி அதிக வசதி இல்லாதவனால இதைச் செய்ய முடியாது. ஒரு ஏழைக்கு நான் சாப்பாடு போட்டா அது நான் அவனுக்குச் செய்யற உதவி. ஆனா உங்களை மாதிரி ஒருத்தர் என் வீட்டுக்கு விருந்தாளியா வந்து சாப்பிட்டீங்கன்னா அது நீங்க எனக்குச் செய்யற உதவி" என்றார் முத்துசாமி.

"அது எப்படி?" என்றேன்.

"நீங்க ஒரு நல்ல ஓட்டல்ல போய் உங்களுக்கு விருப்பமானத்தைச் சாப்பிடலாம். ஆனா நீங்க அதை விட்டுட்டு என் வீட்டுக்கு வந்து நான் சாப்பிடற எளிய உணவைப் பகிர்ந்துக்கிட்டீங்கன்னா அது எனக்குச் செய்யற உதவிதானே!" என்றார்.

அதற்குப் பிறகு அவர் வீட்டுக்குச் சென்று உணவருந்தினேன். அவர் சொன்னபடி உணவு எளிமையாகத்தான் இருந்தது. தினமும் சாதாரணமாக அவர்கள் வீட்டுக்குச் சமைக்கும் உணவை யாராவது ஒருவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதானே அவர் கொள்கை?

"தினமும் யாராவது ஒருவரைத் தேடி அழைச்சிக்கிட்டு வரது உங்களுக்கு சிரமமாக இல்லையா?" என்றேன்.

"அது கஷ்டமான வேலைதான். ஆனால் இதுவரை தினமும் எனக்கு யாராவது கிடைச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. இன்னிக்கு பாங்க்குக்குப் போனபோது அங்கே உங்களைச் சந்திப்பேன்னு எதிர்பார்த்திருப்பேனா?" என்றார் முத்துசாமி.

"எங்களுக்கெல்லாம் எப்பவாவது விருந்தாளிகள் வந்து ரெண்டு மூணு நாள் தங்கினாலே முழி பிதுங்கி விடுகிறதே, நீங்கள் எப்படி தினமும் ஒரு விருந்தாளியைச் சமாளிக்கிறீர்கள்?" என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. ஆனால் நான் அதைக் கேட்கவில்லை!

தற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு என் நண்பனைச் சென்னையில் சந்தித்தபோது முத்துசாமியைப் பற்றி விசாரித்தேன்.

"அவர் இன்னும் தன்னோட யாகத்தைத் தொடர்ந்து பண்ணிக்கிட்டிருக்காரா?" என்றேன் பாதி விளையாட்டாகவும், பாதி சீரியஸாகவும்.

"அவர் செய்யறதை யாகம்னுதான் சொல்லணும். போன வருஷம் ஒரு பொருளாதாரப் பிரச்னையால ஜவுளித் தொழில் செய்யறவங்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுச்சு. உனக்குத் தெரிஞ்சிருக்குமே! முத்துசாமி மாதிரியான சிறிய வியாபாரிகளுக்கு பலமான அடி. நிறைய பேரு வியாபாரத்தையே நிறுத்திட்டு வேலை ஏதாவது கிடைக்குமான்னு பாக்க ஆரம்பிச்சுட்டாங்க."

"முத்துசாமி?"

"அவரு மாதிரி ஒண்ணு ரெண்டு பேருதான் இந்த அடியிலிருந்து மீண்டு எழுந்து வந்தாங்க. நடுவில சில காலம் ரொம்பக் கஷ்டப்பட்டாரு. அப்பவும் தினமும் யாருக்காவது சாப்பாடு போடணும்கிற தன்னோட கொள்கையை அவர் விடல."

"எப்படி சமாளிச்சாரு?"

"நான் கேட்டதுக்கு அவரு என்ன சொன்னாரு தெரியுமா? 'சார் எங்க வீட்டில நாலு பேரு இருக்கோம். இந்தக் கஷ்டத்திலேயும் நாங்க நாலு பேரும் ஒரு நாள் கூட சாப்பிடாம இருந்தது இல்லை. நாலு பேருக்கு பதிலா அஞ்சு பேரு இருந்தாலும் அப்படியேதானே இருந்திருப்போம்? அஞ்சாவது நபரா விருந்தாளி இருக்காரு, அவ்வளவுதானே?' அப்படின்னாரு. அதிர்ஷ்ட வசமா நிலைமை முன்னேறி இப்ப மறுபடி கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைக்கு வந்துக்கிட்டிருக்காரு."

"இன்னொருத்தருக்குச் சாப்பாடு போட்டுட்டுத்தான் தான் சாப்பிடணும்கிற உறுதி இருக்கிறவரைக்கும் எந்தப் பிரச்னையும் அவரை பாதிக்காதுன்னு நினைக்கிறேன்."

ஒரு நல்லெண்ணத்தில் நான் இப்படிச் சொன்னாலும் அப்படித்தான் நடக்கும் என்ற நம்பிக்கை என் மனதில் ஆழமாக நிலைபெற்றிருந்தது.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
பருவந்து பாழ்படுதல் இன்று.

பொருள்:
விருந்தினரை நாள்தோறும் உபசரித்து வருபவன் வாழ்க்கையில் துன்பம் வந்து அதனால் அவன் வாழ்வு சிதைந்து விடும் நிலை ஏற்படாது.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்