About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, August 12, 2017

88. இந்த நாள் அன்று போல் இல்லையே!

மணிமாறன் தன் அறுபதாவது வயது நிறைவைக் கொண்டாடியபோது அவன் உறவினர்கள் அதிகம் பேர் வரவில்லை. அவன் மனைவி வழி உறவினர்களும்தான். ஏனெனில், அவன் அழைத்ததே மிகச் சிலரைத்தான். அழைத்தவர்களிலும் பலர் வரவில்லை!

அந்த விழாவைக் கொண்டாடுவதிலேயே அவனுக்கு விருப்பம் இல்லை. அவன் மனைவி வள்ளி விருப்பப்பட்டதால்தான் அவன் இதற்கு ஒப்புக் கொண்டான்.

அவர்களுக்கு ஒரு மகள் மட்டும்தான். ஒருவேளை மகன் இருந்திருந்தால் தன் பெற்றோர்களுக்கான இந்த விழாவை அவன் விமரிசையாகக் கொண்டாடியிருப்பான். திருமணம் ஆகிவிட்ட மகள் தன் கணவனுடன் வந்து விழாவில் கலந்து கொள்ளும் ஒரு விருந்தாளியாகத்தானே இருக்க முடியும்? எனவே மணிமாறன் தானே செலவு செய்து தன் அறுபது ஆண்டு நிறைவு வைபவத்தை நடத்த வேண்டிய நிலை.

மணிமாறன் இருந்த நிலையில் அவனால் அதிகம் செலவு செய்ய முடியவில்லை.

பத்து வருடம் முன்பென்றால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். சொந்தத் தொழில் செய்து வசதியோடு வாழ்ந்த காலம் அது!

அவன் வழி உறவினர்களும் சரி, அவன் மனைவி வழி உறவினர்களும் சரி, மிகச் சாதாரணமான நிலையில்தான் இருந்தார்கள். மணிமாறனும் ஆரம்பத்தில் வசதிக் குறைவானவனாகத்தான்  இருந்தான்.

ஆனால் சொந்தத் தொழில் செய்வது என்று முடிவு செய்து அவன் இறங்கிய பிறகு அவன் பொருளாதார நிலை வேகமாக வளர்ந்து விட்டது.

ஆனால் உறவினர்கள் யாரையும் அவன் தன்னிடம் அண்ட விடவில்லை. உறவினர்கள் தன் வீட்டுக்கு அதிகம் வருவதை அவன் விரும்பவில்லை.

வள்ளி அவனிடம் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறாள். "என்னங்க, சொந்தக்காரங்களையெல்லாம் அவ்வப்போது வீட்டுக்கு வரச் சொல்லி சாப்பாடு போடணுங்க. அப்பத்தான் அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும், நமக்கும் சந்தோஷமாயிருக்கும்."

"சொந்தக்காரங்களையெல்லாம் கல்யாணம் கச்சேரிகள்ள பாக்கறோமே, அது போதாதா? அவங்களை வீட்டுக்குக் கூப்பிட்டு சாப்பிடச் சொல்றதெல்லாம் எதுக்கு?  யாராவது வீட்டுக்கு வந்தா, கொஞ்ச நேரம் பேசிட்டு, காப்பி கொடுத்து அனுப்பிடணும். அதுதான் நமக்கு நல்லது. இல்லேன்னா, நம்மகிட்டதான் வசதி இருக்கேன்னுட்டுஒத்தர் மாத்தி ஒத்தர் வந்து டேரா போட்டுக்கிட்டே இருப்பாங்க. இவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடவா நான் சம்பாதிக்கிறேன்?"

உறவினர்கள் அவன் மனநிலையைப் புரிந்து கொண்டு ஒதுங்கியே இருந்தார்கள்.

சில காரணங்களால் அவன் தொழிலில் சறுக்கல் ஏற்படத் தொடங்கியது. மிகக் குறுகிய காலத்திலேயே அவன் தொழிலில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டு, அவன் பொருளாதார நிலை சரிந்து, குடும்பம் நடத்துவதே கஷ்டம் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.

எப்படியோ காலத்தை ஒட்டி அறுபது வயது வரை கடந்து வந்து விட்டான். மனைவியின் விருப்பத்துக்கு ஏற்ப அறுபதாம் கல்யாணமும் செய்து கொண்டு விட்டான்.

எல்லோரையும் கூப்பிட்டு விமரிசையாக நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், குறைந்த பட்ஜெட்டில் நடந்த விழா என்பதால் மிக நெருங்கிய உறவினர்களையும், நண்பர்களையும் மட்டுமே அழைக்க முடிந்தது.

"கூட்டம் ரொம்பக் குறைச்சலா இருக்கே! நாம கூப்பிட்டவங்கள்ள நிறைய பேரு வரவே இல்லை. இன்னும் கொஞ்ச பேரைக் கூப்பிட்டிருக்கலாமோ?" என்றான் மணிமாறன் பக்கத்தில் இருந்த மனைவி வள்ளியிடம்.

"வசதி இருந்த காலத்தில யாரையும் கூப்பிட்டு ஒருவேளை சாப்பாடு போடறதுக்குக் கூட உங்களுக்கு மனசு இல்ல. இப்ப உங்க வருமானம் குறைஞ்சு போய் நாம ரெண்டு பேர் குடும்பம் நடத்தறதுக்கே பத்தாக்குறையா இருக்கும்போது நிறைய பேரைக் கூப்பிட்டு விருந்து கொடுக்க முடியலியேன்னு வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? நம்ப உறவுக்காரங்க உற்சாகமா வந்து விழாவிலே கலந்துப்பாங்கன்னும் எப்படி எதிர்பார்க்க முடியும்?" என்றாள் வள்ளி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி 
வேள்வி தலைப்படா தார்.

பொருள்:
விருந்தோம்பல் என்ற வேள்வியில் பொருளைச் செலவழிக்காமல் பொருளைச் சேமித்தவர்கள், அந்தப் பொருள் அழிந்தபின் பற்றுக்கோட்டை (ஆதரவை) இழந்து விட்டோமே என்று வருந்துவர். 

இந்தக் கதையின் காணொளியின் வடிவம் இதோ:

No comments:

Post a Comment