About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, August 3, 2017

81. எதிர்பாராத விருந்தாளி

காட்டில் தாங்கள் தங்கி இருந்த இடத்துக்கு வந்த முனிவர்களை உபசரித்து, உணவளித்து, அவர்கள் விடைபெற்றுச் சென்றதும், பாண்டவர்கள் உணவருந்த அமர்ந்தனர்.

"திரௌபதி! இன்று என்ன சமையல்?" என்றான் பீமன், சிரித்துக் கொண்டே.

"அட்சயபாத்திரம் நமக்கு இன்று என்ன வழங்குகிறதோ அதைத்தானே நாம் உண்ண முடியும்?" என்றான் யுதிஷ்டிரன்.

அட்சய பாத்திரத்திலிருந்து திரௌபதி அனைவருக்கும் உணவு பரிமாறினாள்.

"சூரிய பகவான் நமக்கு இந்த அட்சய பாத்திரத்தை வழங்காமல் இருந்திருந்தால் நம்மால் இந்த வனவாசத்தைச் சமாளித்திருக்க முடியுமா?" என்றான் நகுலன்.

"நாம் வனவாசத்தைச் சமாளிப்பதில் ஒரு சிரமும் இருந்திருக்காது. ஆனால் நாளும் நம்மைக் காண முனிவர்களும் மற்றவர்களும் வருகிறார்களே, அவர்களுக்கு நம்மால் விருந்தளிக்க முடியாமல் போயிருக்கும்" என்றான் அர்ஜுனன்.

"அள்ள அள்ளக் குறையாத இந்த அட்சய பாத்திரத்தை யுதிஷ்டிரரின் வேண்டுகோளை ஏற்று சூரியன் நமக்கு வழங்கியிருக்கிருக்கிறார். இதற்காக சூரியனிடம் பிரார்த்தனை செய்யும்படி நமக்கு யோசனை சொன்ன தௌம்யருக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்" என்றாள் திரௌபதி.

"ஆனால் அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்து விட்டால் அதற்குப் பிறகு அடுத்த நாள்தான் அதிலிருந்து உணவு வரும் என்பதுதான் சிக்கல். இதனால்தானே நாம் எல்லோரும் சாப்பிட்ட பிறகு திரௌபதி பாத்திரத்தைக் கழுவி வைத்த பின் தன் சீடர்களுடன் வந்த துர்வாசருக்கு உணவளிக்க முடியாமல் அவருடைய சாபத்துக்கு ஆளாக இருந்தோம்!" என்றான் பீமன்.

"கண்ணனின் கருணையினால் அன்று நாம் தப்பித்தோம்" என்றான் அர்ஜுனன்.

"சகதேவா, நீ ஏன் எதுவுமே சொல்லவில்லை?" என்றான் யுதிஷ்டிரன்.

"அண்ணா! நாம் கானகத்தில் இருந்தாலும் நாம் 'கிருஹஸ்தாஸ்ரமம்' என்று சொல்லப்படும் இல்லற தர்மத்தைத்தானே கடைப்பிடிக்கிறோம்?" என்றான் சகதேவன்.

"ஆமாம்" என்றான் யுதிஷ்டிரன்.

"இல்லறத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான கடமை என்ன?"

"விருந்தினர்களை உபசரிப்பது" என்றான் யுதிஷ்டிரன்.

"அதை நாம் செய்து கொண்டிருக்கிறோமா?"

"இதென்ன கேள்வி சகதேவா? நாள்தோறும் பல முனிவர்களும் இந்தக் காட்டில் வசிக்கும் மக்களும் நம்மைப் பார்க்க வருவதையும், நாம் அவர்களுக்கு விருந்தளிப்பதையும் நீ பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்?" என்றான் அர்ஜுனன், சற்றே கோபத்துடன்.

"பொறு அர்ஜுனா? சகதேவன் என்ன சொல்ல வருகிறான் என்பது எனக்குப் புரிகிறது. அதை அவன் வாயாலேயே சொல்லட்டும்!" என்றான் யுதிஷ்டிரன்.

"உங்கள் மனதில் இருப்பதை என் வாயிலிருந்து வரவழைக்க விரும்புகிறீர்கள்! சொல்கிறேன். நாம் விருந்தினரை உபசரிப்பது உண்மைதான். ஆனால் அட்சய பாத்திரத்தை வைத்துக் கொண்டுதான் அனைவருக்கும் உணவளிக்கிறோம்? இதில் நமது முயற்சி, நமது பங்கு என்ன இருக்கிறது?"

"அட்சய பாத்திரத்தைத் தூக்கிப் போட்டு விட வேண்டும் என்கிறாயா?" என்றான் பீமன்.

ஆனால் யுதிஷ்டிரன் தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.

"எல்லோரும் சீக்கிரம் சாப்பிட்டு முடியுங்கள். நானும் சாப்பிட்டு விட்டுப் பாத்திரத்தைக் கழுவி வைக்க வேண்டும்" என்றாள் திரௌபதி.

"பாத்திரத்தைக் கழுவி வைத்த பிறகு அன்று துர்வாசர் வந்தது போல், இன்று வேறொருவர் வந்தால் நாம் என்ன செய்யப் போகிறோம்?" என்றான் சகதேவன்.

"அப்படி ஒருவர் வந்து, அட்சய பாத்திரத்தின் உதவி இல்லாமலே நாம் அவருக்கு உணவு படைத்தால் அதுதான் உண்மையான விருந்தோம்பல் என்று தம்பி சகாதேவன் சொல்ல வருகிறான்" என்றான் யுதிஷ்டிரன், புன்னகையுடன்.

மற்ற மூன்று சகோதரர்களும் வியப்புடன் சகதேவனைப் பார்த்தனர்.

கதேவன் சுட்டிக் காட்டிய நிலை ஒருநாள் வந்தது. விருந்தினர்களுக்கு உணவளித்துப் பாண்டவர்கள் உண்ட பின் தானும் உண்டு விட்டு திரௌபதி பாத்திரத்தைக் கழுவி வைத்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்களைத் தேடி ஒரு முனிவர் வந்தார்.

"நீண்ட தொலைவிலிருந்து வருகிறேன்" என்று அவர் கூறியதிலிருந்தும்  அவருடைய வாடிய முகத்திலிருந்தும், அவருடைய உடல் சோர்விலிருந்தும் அவர் உணவருந்தி வெகு நேரம் (அல்லது பல நாட்கள் கூட) ஆகியிருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.

"இப்போது என்ன செய்யப் போகிறோம்? கிருஷ்ணன் தானே வருவானா அல்லது அர்ஜுனனோ, திரௌபதியோ அவனை தியானம் செய்து வரவழைக்கப் போகிறார்களா?" என்றான் பீமன், விளையாட்டாக.

"அன்று துர்வாசர் வந்தபோது அட்சய பாத்திரத்தின் அடியில் ஒரு கீரைத்துண்டு ஒட்டிக் கொண்டிருந்தது. கிருஷ்ணன் அதை உண்டதும் துர்வாசருக்கும் அவர் சீடர்களுக்கும் வயிறு நிரம்பி விட்டது. அதற்குப் பிறகு பாத்திரத்தை மிகவும் கவனமாகக் கழுவுகிறேன். அதனால் இப்போது கிருஷ்ணன் வந்தால் கூடப் பாத்திரத்திலிருந்து எடுத்து உண்ண ஒரு துகள் கூட இருக்காது!" என்றாள் திரௌபதி.

"ஒவ்வொரு முறையும் கிருஷ்ணன் வந்து உதவுவான் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. இந்த முறை அண்ணன் பீமனே நமக்கு உதவலாம்" என்றான் சகதேவன்.

"ஆமாம். பீமா! உன்னால்தான் விரைந்து செயல்பட முடியும். இந்தக் காட்டில் விரைந்து தேடி முனிவர் உண்ணச் சில பழங்களையும் காய்களையும் பறித்து வா. நாங்கள் முனிவரை உபசரித்து, அவரது கால்களைக் கழுவி, அவரை வணங்கி நலம் விசாரிப்பதற்குள் நீ திரும்பி வர வேண்டும்" என்றான் யுதிஷ்டிரன்.

"விருந்தினருக்குக் காய்கனிகளை மட்டும் உணவாக அளிப்பது பொருத்தமாக இருக்குமா? அவற்றை அவரே மரங்களிலிருந்து பறித்துக் கொண்டிருப்பாரே!" என்றான் அர்ஜுனன்.

"நம் வீட்டுக்கு வரும் விருந்தினர் எவரும் தன்னால் உணவைத் தேடிக் கொள்ள முடியவில்லை என்பதற்காக வரவில்லை. நம்மிடம் உள்ள அன்பு காரணமாக வருகிறார்கள். நம்மிடம் என்ன இருக்கிறதோ அதைக் கொடுத்து உபசரிப்பதுதான் விருந்தோம்பல். ஒரு ஏழையின் வீட்டுக்கு ஒரு செல்வந்தன்  வந்தால் அந்த ஏழை தன் வீட்டில் என்ன உணவு இருக்கிறதோ அதைத்தானே அந்த செல்வந்தனுக்குக் கொடுக்க முடியும்?

"ராமபிரான் சபரியின் குடிலுக்கு வந்தபோது, சபரி அவருக்குப் பழங்களையும், புலாலையும்தான் கொடுத்தாள். அதுவும் அவை நன்றாக இருக்கின்றனவா என்று சுவைத்துப் பார்த்து விட்டுக் கொடுத்தாள். அந்த எச்சில் பட்ட உணவை ராமபிரான் மனமுவந்து ஏற்கவில்லையா?" என்றான் யுதிஷ்டிரன்.

"ஆனால் முனிவர் நாம் கொடுக்கும் பழங்களினால் திருப்தி அடையாமல் நம்மைக் கோபித்துக் கொண்டால்?" என்றாள் திரௌபதி.

"நல்லவேளை இந்த முனிவர் துர்வாசர் இல்லை!" என்றான் சகதேவன் சிரித்தபடி.

பீமன் கொண்டு வந்த காய்கனிகளை நறுக்கி இலையில் வைத்து முனிவருக்குப் பரிமாறினார்கள். முனிவர் எதுவுமே சொல்லாமல் அவற்றை உண்டார்.

உண்டு முடித்ததும் அவர்களிடம் விடைபெற்றார்.

யுதிஷ்டிரன் பணிவுடன் "முனிவர்பிரானே! இந்த நேரத்தில் எங்களால் உங்களுக்குச் சமைத்த உணவை அளிக்க முடியவில்லை, அதனால்தான் காய்கனிகளைப் பரிமாறினோம்.எங்களை மன்னிக்க வேண்டும்" என்றான்.

"யுதிஷ்டிரா! நான் இப்போது சமைத்த உணவை உண்பதில்லை என்ற ஒரு விரதத்தை மேற்கொண்டிருக்கிறேன். பச்சைக் காய்களையும், பழங்களையும்தான் உண்கிறேன். எங்கே நீங்கள் சமைத்த உணவைப்  படைத்து விடுவீர்களா என்று பயந்தேன்.

"ஒரு விருந்தினர் தனக்கு இந்த உணவைத்தான் அளிக்க வேண்டும் என்று விருந்தளிப்பவரிடம் கேட்கக் கூடாது. அதனால்தான் எனக்குக் காய்கனிகளையே கொடுங்கள் என்று நான் முன்பே உங்களிடம் சொல்லவில்லை.

"ஒருவேளை நீங்கள் எனக்குச் சமைத்த உணவை அளித்திருந்தால் அதன் மீது நீர் தெளித்து ஏற்றுக் கொண்டு விட்டு அதை வெளியே உள்ள மிருகங்களுக்கோ பறவைகளுக்கோ அளித்திருப்பேன். என் பசி அடங்காவிட்டாலும் எனக்குத் திருப்தி ஏற்பட்டிருக்கும் என்றாலும் உங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டிருக்கும்.

"இறைவன் அருளால், நான் உண்ணக் கூடிய உணவையே எனக்கு அளித்து என் மனத்தையும் வயிற்றையும் ஒருங்கே நிறையச் செய்ததுடன் உங்களுக்கும் மனத்திருப்தி ஏற்படும் வகையில் செயல்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லா நலன்களும் விளையட்டும்!" என்று வாழ்த்தி விடைபெற்றார் முனிவர்.

அறத்துப்பால்
இல்லறவியல்
           அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
வேளாண்மை செய்தற் பொருட்டு.

பொருள்:
மனைவியுடன் கூடி இல்லறம்  நடத்துவதன் நோக்கம் விருந்தினர்களைப் போற்றி அவர்களுக்கு நன்மை செய்வதே ஆகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















2 comments:

  1. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

    அட்சய பாத்திரத்தின் உதவி இல்லாமலே நாம் அவருக்கு உணவு படைத்தால் அதுதான் உண்மையான விருந்தோம்பல் - சிறப்பான வரிகள்.

    ஒரு சில எழுத்துப்பிழைகள். (உணவளித்துபி, இல்லரேம்)

    ReplyDelete
  2. எழுத்துப் பிழைகளைத் திருத்தி விடுகிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

    ReplyDelete