About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, April 26, 2019

253. சுப்புவின் விருப்பம்

சுப்புவுக்கு அந்த மடத்துடன் எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பது அவனுக்குத் தெரியாது. சிறு வயதில் அவனை அங்கே யாரோ சேர்த்து விட்டுச் சென்றதாகச் சென்னார்கள்.

அந்த மடத்தின் தலைவர் அவனைத் தன் மகன் போல்தான் நடத்தி வந்தார்.

சாப்பாடு, தங்க இடம், மடத்தில் இருந்தவர்களின் அன்பு இவையெல்லாம் கிடைத்ததால், சுப்பு தனக்குப் பெற்றோர் இல்லை என்ற குறையையே உணரவில்லை.

சுப்புவுக்கு ஐந்து வயதானதும் அவனை அருகில் உள்ள பள்ளியில் சேர்த்தார்கள். மடத்தலைவரும், மடத்தில் பணி புரிந்த சிலரும் அவன் படிப்பில் அக்கறை காட்டி, பாடங்களைப் புரிந்து கொள்ளவும், வீட்டுப் பாடங்கள் செய்யவும் அவனுக்கு உதவினார்கள்.

சில வருடங்கள் கழித்து மடத்தில் மாலையில் நடக்கும் ஆன்மீகம் குறித்த வகுப்புகளில் அமர்ந்து பாடம் கேட்கும்படி மடத்தலைவர் சுப்புவிடம் சொன்னார். 

அவர் சொன்னதற்காகத்தான் சுப்பு அந்த வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தான். ஆயினும், ஆன்மீகப் பாடங்களில் அவனுக்கு ஒரு ஈடுபாடு ஏற்படத் துவங்கியது. வகுப்புகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் தன் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெறும் அளவுக்கும் அவன் ஆர்வம் வளர்ந்தது.

ஆறாம் வகுப்புக்கு மேல் பள்ளிப் பாடங்கள் அதிகம் இருந்ததால் ஆன்மீக வகுப்புகளில் அவனால் தினமும் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த வகுப்புகளில் கலந்து கொண்டு தன் ஆன்மீக ஆர்வத்துக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்தான்.

"சுப்பு நம் மடத்தில் ஒரு உயர்ந்த நிலைக்கு வருவான்" என்று சிலர் மடத்தலைவரிடம் சொன்னபோது மடத்தலைவருக்குப் பெருமையாக இருந்தது.

சுப்பு பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் மடத்தலைவர் அவனைத் தனியே அழைத்தார். 

'உன் எதிர்காலத்தைப் பத்திப் பேசணும். என்ன செய்யப் போற?" என்றார் மடத்தலைவர்.

"நீங்க சொல்றபடி செய்யறேன் ஐயா!" என்றான் சுப்பு.

"நீ நல்லா படிக்கறே. பிளஸ் டூவில நிறைய மார்க் வாங்குவ. நீ விரும்பினா எஞ்சினியரிங்கோ மெடிகலோ படிக்கலாம். நம் மடத்துக்கு வர சில பெரிய மனுஷங்க உன் படிப்புச் செலவைப் பாத்துப்பாங்க. படிப்பை முடிச்சுட்டு நீ நல்ல வேலைக்குப் போய் உன் வாழ்க்கையை நல்லபடியா அமைச்சுக்கலாம்."

சுப்பு மௌனமாக இருந்தான்.

"சொல்லு."

"வேண்டாம் ஐயா. நான் இந்த மடத்திலேயே இருந்து சேவை செய்ய விரும்பறேன்" என்றான் சுப்பு.

"நீ இப்படிச் சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன். எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. ஆனா நீ படிக்கணும். பி ஏ, பி எஸ் சி, பி காம் ஏதாவது படிச்சுட்டு அப்புறம் மடத்தில் நீ வேலை செய்ய ஆரம்பிக்கலாம். நீ விரும்பினா போஸ்ட் கிராஜுவேஷனோ பி எச் டியோ கூடப் பண்ணலாம். உன் படிப்பு மடத்துக்குப் பயனுள்ளதாத்தான் இருக்கும்."

"வேணாங்க. பி ஏ மட்டும் படிக்கிறேன். அதுக்கப்புறம் மேலே படிக்கணும்னு நீங்க விருப்பப்பட்டா படிக்கிறேன். ஆன்மீக விஷயங்களைத் தெரிஞ்சுக்கறதிலதான் எனக்கு ஆர்வம் இருக்கு" என்றான் சுப்பு.

"ரொம்ப நல்லது" என்றார் மடத்தலைவர். 

ஒரு நிமிடம் மௌனமாக அவனை உற்றுப் பார்த்து விட்டு, "உன் ஆர்வத்தைப் பாராட்டறேன். ஆனா நீ இந்த மடத்தில சேவை செய்யணும்னா ஒரு விஷயத்தில உன்னை மாத்திக்கணும்" என்றார் மடத்தலைவர்.

"சொல்லுங்க ஐயா!"

"நீ அசைவம் சாப்பிடறதை நிறுத்தணும்."

"ஐயா!" என்றான் சுப்பு அதிர்ச்சியுடன்.

"எனக்குத் தெரியும் சுப்பு. மடத்தில சைவச் சாப்பாடுதான். அதுவும் உப்புச் சப்பு இல்லாமதான் இருக்கும். உன் பள்ளிக்கூட நண்பர்களோட சில சமயம் நீ ஓட்டலுக்குப் போய் அசைவம் சாப்பிடறது எனக்குத் தெரியும். உன் கைச்செலவுக்காக நான் கொடுக்கற பணத்தை இதுக்குச் செலவழிக்கறேன்னும் எனக்குத் தெரியும்."

"என்னை மன்னிச்சுடுங்க ஐயா. ஏதோ ஆசையில..."

"இதில மன்னிக்கறதுக்கு எதுவும் இல்ல. ஆன்மீகத்தில இருக்கறவங்களுக்கு அருள் ரொம்ப முக்கியம். அருள்னா கடவுளோட அருளை வேண்டறது மட்டும் இல்ல. நாம எல்லார்கிட்டயும் - மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், புழு பூச்சிகள், செடி கொடிகள் எல்லார்கிட்டயும் - கருணையோடு, அருளோடு இருக்கணும். இப்பவே  நீ அப்படித்தான் இருக்கிறதா நீ நினைக்கலாம், நான் அதை இல்லேன்னு சொல்லல. ஆனா அது முரண்பாடா இருக்கும். அஹிம்சை பேசறவன், கையில கத்தியோடு அலையக் கூடாது. அது மாதிரிதான் இதுவும். 

"பிளஸ் டூ ரிசல்ட் வர ஒரு மாசம் ஆகும். இப்ப பள்ளிக்கூடமும் கிடையாது. நீ மடத்திலதான் இருக்கப் போற. இந்த ஒரு மாசத்துல உன்னைக் கட்டுப்படுத்திக்கிட்டு அசைவம் சாப்பிடாம இருந்து பாரு. அப்படி இருக்க முடியும்னா சொல்லு. அப்புறம் நீ பட்டப்படிப்பு படிச்சுட்டு, உன் விருப்பப்படி மடத்தில் சேரலாம்" என்றார் மடத்தலைவர். 

துறவறவியல் 
     அதிகாரம் 26      
புலால் மறுத்தல்  
குறள் 253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்..

பொருள்:  
கொலைக்கருவியைக் கையில் வைத்திருப்பவர் நெஞ்சில் அருள் இல்லாதது போல் பிற உயிர்களை உண்பவரின் மனம் அருளை நோக்காது.
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்















Thursday, April 25, 2019

252. திருமண விருந்து

ஒரு ஓட்டலில் நடந்த ஒரு திருமண வரவேற்பில், சம்பந்தம் மேடைக்குச் சென்று மணமக்களை வாழ்த்தி விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவர் முகம் பரிச்சயமானது போல் இருந்தது.

இவரை எங்கே பார்த்திருக்கிறோம் என்று சம்பந்தம் யோசிப்பதற்குள் அவர் சட்டென்று எழுந்து, "சார் நீங்க சம்பந்தம்தானே?" என்றார்.

அதற்குள் சம்பந்தமும் அவரை நினைவுபடுத்திக் கொண்டு விட்டார். "சுந்தர்தானே நீங்க?" என்றார்.

இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.

சுந்தர் சம்பந்தத்தின் வீட்டில் குடி இருந்தவர்.

வீட்டுச் சொந்தக்காரருக்கும் குடியிருப்பவருக்கும் இடையே பொதுவாக இருக்கும் சந்தேகம், பயம், தற்காப்பு உணர்வு இவற்றைத் தாண்டி இருவரும் நண்பர்களாகப் பழகி வந்தார்கள்.

"இங்கே சத்தமா இருக்கும், வெளியே போய்ப் பேசலாம்" என்றார் சுந்தர்.

இருவரும் ஓட்டல் வரவேற்பறையில் சென்று அமர்ந்தனர்.

"இருபது வருஷத்துக்கு மேலே இருக்குமே? எங்கே இருக்கீங்க, எப்படி இருக்கீங்க?" என்றார் சம்பந்தம்.

"நல்லா இருக்கேன்" என்ற சுந்தர். "நீங்க எப்படி இருக்கீங்க? அதே வீட்டிலதானே இருக்கீங்க? நான் இருந்த போர்ஷன்ல யார் இருக்காங்க?" என்றார் தொடர்ந்து.

"நீங்க இருந்த போர்ஷன்லாம் இப்ப இல்ல. வீட்டை இடிச்சு ஃபிளாட் கட்டியாச்சு. எனக்கு ரெண்டு ஃபிளாட்டும், கொஞ்சம் பணமும் கொடுத்தாங்க. ஒரு ஃபிளாட்டில நான் இருந்துக்கிட்டு இன்னொரு ஃபிளாட்டை வாடகைக்கு விட்டிருக்கேன். குடியிருக்கறவரு உங்களை மாதிரி நல்ல மனுஷர்தான்!" என்றார் சம்பந்தம்.

"நீங்க தங்கமான மனுஷராச்சே! உங்களுக்கு எல்லாரும் நல்லவங்களாத்தான் தெரிவாங்க!" என்றார் சுந்தர். 

"அது சரி. நீங்க எங்க இருக்கீங்க இப்ப?"

"வேலை விஷயமா ஊர் ஊராப் போயிட்டு மறுபடி சென்னைக்கு வந்திருக்கேன். இப்ப புரசைவாக்கத்தில் இருக்கேன்."

"உங்க வேலை எப்படி இருக்கு? உங்க கம்பெனி நல்லா போய்க்கிட்டிருக்கு போலருக்கே? அதே கம்பெனியிலதானே இருக்கீங்க?"

"ஆமாம். இன்னும் ரெண்டு வருஷத்திலே ரிடையர் ஆகணும்."

"அப்படியா? எங்கே செட்டில் ஆகப் போறீங்க? சொந்த வீடு எந்த ஊர்ல இருக்கு?"

"சொந்த வீடெல்லாம் எதுவும் இல்லை. நிறைய சம்பாதிச்சேன்னுதான் பேரு. ஆனா வீடு வாங்கல. சேமிப்பும் பெரிசா இல்ல. பையனைப் படிக்க வச்சு கல்யாணம் செஞ்சு வச்சதைத் தவிர உருப்படியா எதுவும் செய்யல. சம்பாதிச்ச பணமெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியல! ரிடையர் ஆனப்புறம் என்ன செய்யப் போறேன்னு தெரியல."

"கவலைப்படாதீங்க. எல்லாம் நல்லபடி நடக்கும்" என்றார் சம்பந்தம்.

"சரி, வாங்க. சாப்பிடப் போகலாமா?" என்றார் சுந்தர். 

வரிசையில் நின்று தட்டில் உணவுகளை வாங்கிக் கொண்டு இருவரும் ஒரு மேஜையில் வந்து அமர்ந்தனர்.

"தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க நான்-வெஜ் சாப்பிடுவீங்களா என்ன?" என்றார் சுந்தர், சம்பந்தத்தின் தட்டைப் பார்த்து விட்டு.

"சாப்பிடுவேன். ஏன் கேக்கறீங்க?" என்றார் சம்பந்தம்.

"இல்லை. உங்க வீட்டில சுத்த சைவம்னு எனக்கு நினைவிருக்கு. என் மனைவி சொல்லியிருக்கா, உங்க வீட்டில முட்டை கூட சேத்துக்க மாட்டீங்கன்னு. அதான் கேட்டேன். சாரி. தப்பா நினைச்சுக்காதீங்க" என்றார் சுந்தர்.

"நீங்க கேட்டதில எதுவும் தப்பில்ல. எங்க குடும்பம் சுத்த சைவம்தான். ஆனா எனக்கு மட்டும் நண்பர்களோட சேர்ந்து இந்தப் பழக்கம் வந்துடுச்சு!" என்றார் சம்பந்தம்.

"அதனால என்ன?" என்றார் சுந்தர்.

"இல்ல, சைவக் குடும்பத்தில பிறந்திருந்தாலும், என் நாக்கு ருசிக்காக அசைவத்தைப் பழக்கிக்கிட்டு விட முடியாம இருக்கறது எனக்கு வருத்தம்தான்" என்றார் சம்பந்தம் சற்றே சங்கடத்துடன்.
 
துறவறவியல் 
     அதிகாரம் 26      
புலால் மறுத்தல்  
குறள் 252
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

பொருள்:  
பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்களுக்குப் பொருள் படைத்தவர் என்ற சிறப்பு இல்லை. புலால் உண்பவர்களுக்கு அருள் உடையவர் என்ற சிறப்பு இல்லை.
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்
















251. முத்துவின் ஆடுகள்

முத்து பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் முதலில் செய்வது தன் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளைச் சென்று பார்ப்பதுதான். 

பெரும்பாலும் அவை வீட்டின் பின்னே வெட்ட வெளியில் நின்று கொண்டிருக்கும், அல்லது அருகில் எங்காவது புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும்.

சிறு வயதிலிருந்தே முத்து ஆடுகளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறான். குட்டிகள், பெரிய ஆடுகள் என்று அவன் வீட்டில் ஐந்தாறு ஆடுகளுக்குக் குறையாமல் இருக்கும். சில சமயம் பெரிய ஆடுகளில் ஒன்று காணாமல் போகும். அவன் அம்மாவிடம் கேட்கும்போது அதை விற்று விட்டதாகச் சொல்லுவாள்.

"எதுக்கும்மா ஆட்டை விக்கணும்?" என்று முத்து ஒருமுறை கேட்டான்.

"நம்மளால அஞ்சாறு ஆட்டுக்கு மேல வச்சுப் பராமரிக்க முடியாது. ஆடு குட்டி போட்டா நமக்குத் புதுசா ஆடு கிடைக்குதுல்ல? அதனால பெரிய ஆடு எதையாவது அப்பப்ப வித்துடுவோம்" என்றாள் அவன் அம்மா.

முத்துவுக்கு இந்த விளக்கம் புரிந்தும் புரியாமலும் இருந்தது. ஆனால் அதைப் பற்றி மேலே கேட்க அவனுக்குத் தெரியவில்லை. பழகிய ஆடுகளில் ஒன்று வீட்டை விட்டுப் போவது வருத்தமாக இருந்தாலும், மற்ற ஆடுகளிடம், குறிப்பாகக் குட்டி ஆடுகளிடம் தன் அன்பைக் காட்டிக் கொண்டு இருந்தான்.

முத்து ஆட்டின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தபோது அவன் அம்மா வந்தாள்.

"ம்...இன்னும் ஒருநாள்தான் இந்த ஆடு உனக்கு!" என்றாள்.

"ஏம்மா, இதை விக்கப் போறமா?" என்றான் முத்து.

"விக்கப் போறதில்லடா. உன் அக்கா சமைஞ்சிருக்கால்ல? அவளுக்கு சடங்கு செஞ்சு விருந்து போட இந்த ஆட்டை வெட்டித்தான் கறிச்சோறு வைக்கணும்."

முத்து அதிர்ச்சியுடன், "என்னது? இதை வெட்டி, கறிச்சோறு செய்யப் போறியா? ஏன் கடையிலேந்து கறி வாங்கலாம் இல்ல?" என்றான்.

"அத்தனை பேருக்கு கறி சமைக்கக் கடையில வாங்கிக் கட்டுப்படி ஆகாது."

"இந்த ஆட்டை வித்துட்டு அந்தப் பணத்தில வாங்கலாமே?" என்றான் முத்து.

"இதை வித்தா கடையில இதை வெட்டி, கறியா விப்பாங்க. அதை நாம வாங்கறதுக்கு நாமளே வெட்டிக் கறி செஞ்சா செலவு கம்மியா இருக்கும்."

"நாம விக்கற ஆட்டையெல்லாம் வெட்டி, கறி ஆக்கிடுவாங்களா?"

"பின்ன எதுக்கு நம்மகிட்ட பணம் கொடுத்து ஆடு வாங்கிட்டுப் போறாங்க?"

"அவங்க வளக்கறதுக்குத்தான் நம்மகிட்டேந்து வாங்கிக்கிட்டுப் போறாங்கன்னில்ல நெனச்சேன்!"

"நாம விக்கறதெல்லாம் இனிமே குட்டி போட முடியாத வயசான ஆடு இல்லேன்னா கடா ஆடு. கறிக்குத்தான் அதையெல்லாம் வாங்கிட்டுப் போறாங்க."

"நாம சாப்பிடற கறியெல்லாம் இப்படித்தான் வருதா?"

"பின்ன? ஆட்டுக்கறி என்ன வெண்டைக்காயா செடியில காய்க்கறதுக்கு? நம்மள மாதிரி ஆளுங்க விக்கற ஆடுகளை வெட்டி அந்தக் கறியைத்தான் கடையில விக்கறாங்க. அதை வாங்கித்தான் எத்தனையோ நாள் நம்ம வீட்டில கறி சமைச்சிருக்கோம்!"

முத்து அதிர்ச்சியுடன் ஆடுகளைப் பார்த்தான். 'ஆட்டுக்கறி இப்படித்தான் வருகிறதா? இத்தனை நாள் இது ஏன் எனக்குப் புரியவில்லை? ஏதோ அம்மா கடையிலிருந்து வாங்கி வருகிறாள் என்று நினைத்தேனே தவிர, கடைக்கு அது எப்படி வருகிறது என்று யோசிக்கவில்லையே! அன்போடு வளர்க்கும் இந்த எல்லா ஆடுகளும் ஒரு நாள் நமக்கு உணவாகத்தானா?'

அவன் அக்காவின் சடங்கின்போது போடப்பட்ட கறிச்சோற்றை முத்து உண்ணவில்லை.
துறவறவியல் 
     அதிகாரம் 26      
புலால் மறுத்தல்  
குறள் 251
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

பொருள்:  
தன் உடலை வளர்ப்பதற்கு இன்னொரு உயிரின் உடலை உண்பவன் எப்படி அருள் உள்ளவனாக இருக்க முடியும்?
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்















Monday, April 22, 2019

250. கட்டைப் பஞ்சாயத்து!

இரண்டு பேராகத் தூக்கி வந்த மாலையை அரசமாணிக்கத்தின் கழுத்தில் போட்டு விட்டு, "வாழ்த்துக்கள் தலைவரே!" என்றான் செந்தில்.

மாலையை வாங்கிக் கொண்டு உடனேயே அதைக் கழற்றித் தன் உதவியாளன் மணியிடம் கொடுத்த அரசமாணிக்கத்தின் முகத்தில் ஒரு புன்னகை கூட இல்லை.

செந்திலும் அவனுடன் வந்த குணாவும் பேசாமல் நின்றார்கள்.

"மாலையைப் போட்டுட்டீங்க இல்ல, கிளம்புங்க!" என்றான் மணி.

செந்தில் பேசாமால் நின்றான்.

"உன் குப்பத்தில் ஒவ்வொரு ஓட்டுக்கும் கணக்குப் பண்ணிப் பணம் கொடுத்தேன் இல்ல? பணத்தை எல்லாருக்கும் கொடுத்தியா, இல்ல, நீயே அழுத்திட்டியா?" என்றான் அரசமாணிக்கம்.

"என்ன தலைவரே இப்படிச் சொல்றீங்க? வரலாறு காணாத உங்க வெற்றியில எனக்கும் ஒரு சின்ன பங்கு இருக்குன்னு நான் பெருமையா நினைச்சுக்கிட்டிருக்கேன்!" என்றான் செந்தில்.

"தலைவரு ஜெயிச்சுட்டாரு சரி. ஆனா உன் ஏரியால இருக்கற ரெண்டு பூத்தில ஒண்ணுல அவருக்கு ஓட்டு ரொம்ப கம்மியா விழுந்திருக்கே, ஏன்? பெரிய வாக்கு வித்தியாசத்தில் தலைவர் ஜெயிச்சிருந்தாலும் எங்கே ஓட்டு விழுந்திருக்கு, எங்கே விழல, யாரெல்லாம் தனக்கு வேலை செஞ்சிருக்காங்க, யாரு வேலை செய்யலேன்னு தலைவர் பாப்பாரு இல்ல? நீ எல்லாருக்கும் பணம் கொடுத்திருந்தா, அவங்க ஏன் தலைவருக்கு ஓட்டுப் போடல?" என்றான் மணி.

செந்தில் மணியை அலட்சியம் செய்து அரசமாணிக்கத்தைப் பார்த்து, "என்ன தலைவரே இது, உங்களுக்கு என்னைப் பத்தித் தெரியாதா? என் ஏரியால இருக்கிற ரெண்டு பூத்தில் ஒண்ணுல உங்களுக்குத்தான் நிறைய ஓட்டு விழுந்திருக்கு. இன்னொரு பூத்தில் கொஞ்சம் குறைஞ்சுடுச்சு. இதுக்குக் காரணம் கடைசி நிமிஷத்துல எதிர்க்கட்சிக்காரங்களும் பணம் கொடுத்துட்டாங்க. ரெண்டு பேர் கிட்டயும் பணம் வாங்கின சில பேரு ஓட்டை அந்தப் பக்கம் மாத்திப் போட்டிருக்காங்க" என்றான்.

அரசமாணிக்கம் கோபமாக செந்திலிடம் திரும்பினான். "இங்க பாரு செந்தில், இந்த சால்ஜாப்பெல்லாம் எனக்கு வேண்டாம். காசு கொடுத்தா வேலை நடக்கணும். நான் ஜெயிச்சுட்டேங்கறதால உன்னை சும்மா விடறேன். இல்லேன்னா நீ செய்யற கட்டப் பஞ்சாயத்து வேலைக்கு உன்னை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளக் கூட என்னால முடியும். ஒரு வருஷம் ஜாமீன்ல கூட வர முடியாது. வெளியில வந்தப்பறம் ஒரு தொழிலும் செய்ய முடியாது. ஜாக்கிரதை! போ" என்றான் கடுமையாக.

"தலைவரே! சத்தியமா சொல்றேன்..." என்று செந்தில் ஆரம்பித்தான்.

அரசமாணிக்கம் மணியிடம் திரும்பி, "அவனை வெளியில போகச் சொல்லு. இப்பவே போனா முழுசாப் போகலாம். இன்னும் பேசி என் கோபத்தைக் கிளப்பினா பாதி உடம்போடதான் வீட்டுக்குத் திரும்பணும்னு சொல்லிடு!" என்றான் கோபமாக.

செந்தில் மௌனமாக குணாவுடன் வெளியில் வந்தான். வெளியில் வந்ததும், குணா, "என்னண்ணே, இப்படி வியர்த்துப் போச்சு உங்களுக்கு?" என்றான்.

"ஒரு நிமிஷம் குலை நடுங்கிப் போச்சுடா! எத்தனையோ பேரைக் குத்துயிரும் குலையுயிருமா ஆக்கியிருக்காங்க இவங்க. எனக்கே இந்த நிலைமை வரும்னு நினைக்கல. நல்லவேளை, இதோட விட்டாங்களே!"

"என்னண்ணே இது? உண்மையா உழைச்ச உங்களுக்கே இந்த கதியா? நாம ரெண்டு பேரும் சேந்துதானே ரிஸ்க் எடுத்து ராத்திரி நேரத்தில திருடன் மாதிரி வீடு வீடாப் போய்ப் பணம் கொடுத்துட்டு வந்தோம்? பணம் வாங்கினவங்க ஓட்டுப் போடலேன்னா நீங்க என்னங்க செய்ய முடியும்?"

செந்தில் பதில் சொல்லவில்லை.

"ஏன்யா கணபதி, வாடகைக்குக் குடி இருக்கறவன் நீ. வீட்டுச் சொந்தக்காரன் காலி பண்ணுன்னா பண்ண மாட்டியா?" என்றான் குணா.

"காலி பண்ண மாட்டேன்னு சொல்லலைய்யா. வேற வீடு பாத்துக்கிட்டிருக்கேன். இன்னும் கிடைக்கல. வேற வீடு கிடைச்சதும் காலி பண்ணிடறேன்."

"நீ மாசக்கணக்கா வீடு பாத்துக்கிட்டிருப்ப. அதுவரையிலும் வீட்டுச் சொந்தக்காரன் காத்துக்கிட்டிருக்கணுமா? இங்க பாரு. வர ஞாயித்துக்கிழமைக்குள்ள நீ வீட்டைக் காலி பண்ற. இல்லேன்னா..."

"வேற வீடு கிடைக்காம எப்படிங்க காலி செய்ய முடியும்?"

"நான் இன்னும் சொல்லி முடிக்கலடா. கேளு. அப்படி நீ காலி பண்ணலேன்னா, திங்கக்கிழமை அன்னிக்கு உன் வீட்டில எல்லாரும் ஆஸ்பத்திரிக்குத்தான் குடி போக வேண்டி இருக்கும். அப்ப உன் வீடு தானே காலியாயிடும்!"

"எதுக்குங்க ஆஸ்பத்திரிக்குக் குடி போகணும்?" என்றான் கணபதி புரியாமல்.

"பின்ன, கைகால் உடைஞ்சா அதைச் சரி பண்ணிக்க ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டாமா?"

குணா சொன்னதன் பொருள் அப்போதுதான் புரிந்தவனாக, "வேண்டாம்யா. அப்படில்லாம் செஞ்சுடாதீங்க. இன்னும் ஒரு மாசம் டைம் குடுங்க. அதுக்குள்ள காலி பண்ணிடறேன்" என்றான் கணபதி.

"அதெல்லாம் முடியாது" என்றான் குணா.

அருகிலிருந்த செந்தில் குணாவை இடைமறித்து, கணபதியிடம், "சரி. ஒரு மாசம் இல்ல, ரெண்டு மாசம் எடுத்துக்க. ஆனா ரெண்டு மாசம் முடியறதுக்குள்ள வீட்டைக் காலி செஞ்சுடணும்" என்றான்.

"நிச்சயமா செஞ்சுடறேங்க. ரொம்ப நன்றிங்க" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் கணபதி.

"என்னண்ணே இது, இவனுக்கெல்லாம் போய் இரக்கம் காட்டிக்கிட்டு? இவன் ஆறு மாசமா வீட்டுக்காரனுக்குத் தண்ணி காட்டிக்கிட்டிருக்கான். அதனாலதானே வீட்டுக்காரன் நம்மகிட்ட உதவி கேட்டு வந்திருக்கான்?" என்றான் குணா.

"இருக்கலாம். ஆனா, காலையில அரசமாணிக்கம் என்னைக் குத்துயிரும் குலையுயிருமா ஆக்கிடுவேன்னு மிரட்டச்சே எனக்குள்ளே குப்னு ஒரு திகில் பரவிச்சு. அவரு சில பேரை அது மாதிரி ஆக்கினதை நான் பாத்திருக்கேன். நீ கணபதிகிட்ட அவன் வீட்டில எல்லாரையும் கையைக் காலை உடைச்சு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடுவேன்னு சொன்னப்ப அவன் கண்ணில ஒரு பயத்தைப் பாத்தேன். அதைப் பாத்ததும் காலையில எனக்கு ஏற்பட்ட பயம் ஞாபகம் வந்துச்சு. அதான்..." என்றான் செந்தில்.

இதைச் சொன்னபோதே செந்திலின் குரலில் பயம் வெளிப்பட்டதாக குணாவுக்குத் தோன்றியது.

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.

பொருள்:  
அருள் இல்லாதவன் தன்னை விட வலுவில் குறைந்தவரைத் துன்புறுத்த நினைக்கும்போது தன்னை விட வலியவர் முன் தான் அஞ்சி நிற்கும் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்


















Sunday, April 21, 2019

249. கோயிலில் ஒரு அனுபவம்

தண்டபாணி அந்தக் கோவிலுக்குள் நுழைந்தபோது மண்டபத்துக்கு வெளியே ஒரு இடத்தில் சற்று கூட்டமாக இருப்பதைக் கண்டு அங்கு ஏதாவது விக்கிரகம் இருக்குமோ என்று நினைத்து அருகில் சென்று பார்த்தார்.

அங்கு சாமியார் போன்று தோன்றிய ஒருவர் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றிச் சிலர் நின்று கொண்டிருக்க அவர் அருகே ஒருவர் வாயைப் பொத்தியபடி நின்று கொண்டு சாமியார் சொன்னதைப் பணிவுடன் கேட்டுக் கொண்டிருந்தார். சாமியார் அருகே ஒருவர் ஒரு ஜிப் வைத்த பையுடன் அமர்ந்திருந்தார்.  

கூட்டத்தில் இருந்த ஒருவரிடம் தண்டபாணி  என்னவென்று ஜாடையில் விசாரிக்க, அவர் தண்டபாணியின் காதுக்குள் "சாமியார் பெரிய யோகி. கடவுள்கிட்டயே பேசறவரு. எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லுவார்" என்றார்.

இதற்குள் சாமியாரிடம் ஆலோசனை கேட்டவர் அவர் உதவியாளரிடம் சில ரூபாய் நோட்டுக்களைக் கொடுக்க அவர் அதை வாங்கி ஜிப் வைத்த பையில் போட்டுக் கொண்டார்.

கோவிலுக்கு வருபவர்கள் இறைவனிடம் வேண்டாமல் கோவிலில் அமர்ந்திருக்கும் ஒரு சாமியாரிடம் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்கிறார்களே என்று நினைத்துக் கொண்டே சந்நிதியை நோக்கி நடந்தார் தண்டபாணி.

கோவிலில் போடப்பட்டிருந்த குழல் விளக்குகள் பலவற்றில் "உபயம்: அப்பு" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. குருக்களிடம் இது பற்றி தண்டபாணி கேட்டபோது, "இந்த ஊர்ல எந்த நல்ல காரியம்னாலும் அப்பு ஐயா உதவாம இருக்க மாட்டாரு" என்றார் குருக்கள்.

தண்டபாணி கோவில்களை நாடி ஊர் ஊராகச் செல்பவர். அந்தச் சிறிய ஊரிலிருந்து அவர் திரும்புவதற்கான பஸ் இரண்டு மணி நேரம் கழித்துத்தான் வரும் என்பதால் அப்புவைப் பார்த்துச் செல்லலாம் என்று அவரைப் பற்றி விசாரித்தார் தண்டபாணி.

அப்பு அந்த ஊரில் ஒரு கடை வைத்திருப்பதாகச் சொன்னார்கள். அவர் கடைக்குச் சென்ற தண்டபாணி, தான் கோவிலுக்கு வந்ததாகவும், கோவிலுக்கு அவர் நிறையச் செய்திருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்க விரும்பியதாகவும் சொன்னார். 

அப்பு அவரை ஒரு ஸ்டூலில் உட்காரச் சொல்லி விட்டு வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார். 

கடையில் நிறைய வாடிக்கையாளர்கள் நின்று கொண்டிருந்தனர். ஆனால் கடையில் இரண்டு ஊழியர்கள் மட்டுமே இருந்ததால், அவர்கள் வாடிக்கையாளர்களைச் சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டு ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தனர். 

"சீக்கிரம் சாமான்களை எடுத்துக் கொடுடா, சோம்பேறி" என்று ஒரு ஊழியரைப் பார்த்துக் கத்தினார் அப்பு. "வாங்கற சம்பளத்துக்குப் பாதி கூட வேலை செய்ய மாட்டாங்க" என்றார் தண்டபாணியிடம்.

"பொருட்கள் வாங்க வந்தவங்க நிறைய பேர் இருக்காங்க. ரெண்டு பேரால சமாளிக்க முடியல போலருக்கு" என்றார் தண்டபாணி.

"நீங்க வேற! இவங்க சோம்பேறிப் பசங்க. ஒழுங்கா வேலை செய்யறவங்களா இருந்தா, இன்னும் பத்து பேரைச் சமாளிக்க முடியும்" என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு ஆள் அப்புவிடம் வந்து தயக்கத்துடன், "ஐயா சாப்பாட்டுக்குப் போயிட்டு வந்துடட்டுமா?" என்றான்.

"ஏண்டா, கடையில இவ்வளவு பேரு சாமான் வாங்கறத்துக்காக நின்னுக்கிட்டிருக்காங்க, நீ பாட்டுக்கு எனக்கென்ன வந்ததுங்கற மாதிரி சாப்பாட்டுக்குப் போறேங்கற? கொஞ்சமாவது பொறுப்பு வேணாம்? ஜெயிலிலேயா இருக்க, மணி அடிச்சா சோறுங்கறதுக்கு? மணி ரெண்டுதானே ஆகுது? கூட்டம் கொஞ்சம் குறைஞ்சதும், ஒவ்வொத்தரா சாப்பாட்டுக்குப் போயிட்டு வாங்க" என்றார் அப்பு. 

உடனே தண்டபாணியிடம் திரும்பி, "பாத்தீங்களா, எப்படிப் பொறுப்பு இல்லாம இருக்காங்க பாருங்க! இவங்களுக்குச் சம்பளம் மட்டும் வேணும், ஆனா கடை வியாபாரத்தைப் பத்திக் கவலைப்பட மாட்டாங்க" என்று சொன்னவர், கடைப் பையனிடம் திரும்பி, "ஏண்டா நிக்கற? போயி வியாபாரத்தை கவனி. எல்லாரும் நிக்கறாங்க பாரு" என்றார்.

தண்டபாணி "வரேங்க" என்று விடைபெற்றார். அவர் கிளம்பியபோது இரண்டு பேர் நன்கொடைப் புத்தகங்களுடன் அப்புவைப் பார்க்கச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்தபோது தண்டபாணிக்கு அவரை அறியாமலேயே சிரிப்பு வந்தது.

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

பொருள்:  
அருள் இல்லாதவன்  செய்யும் அருளை ஆராய்ந்தால், அது தெளிந்த அறிவு இல்லாதவன் மெய்ப்பொருளைக் கண்டு பிடிக்க முயல்வது போல் இருக்கும்.
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்














Thursday, April 18, 2019

248. காலங்கள் மாறி வரும், காட்சிகள் மாறும்!

"எங்கப்பா சொத்தில எங்க ரெண்டு பேருக்கும் சமபங்குதான் கிடைச்சுது. இந்தப் பத்து வருஷத்திலே நான் என் சொத்தைப் பெருக்கி இருக்கேன். ஆனா என் தம்பி எல்லாத்தையும் தொலைச்சுட்டு இன்னிக்கு ஓட்டாண்டியா நிக்கறான்" என்றான் முருகன்.

"ஏம்ப்பா, உன் தம்பிதானே? அவன் கஷ்டப்படறப்ப நீ அவனுக்கு உதவலாமே!" என்றார் செல்வமுத்து.

"என்னங்க நீங்க சொல்றது? அவன் என்னைக் கேட்டுக்கிட்டா எல்லாம் செஞ்சான்? முதல்ல வியாபாரம் ஆரம்பிச்சான். உனக்கெல்லாம் வியாபாரம் ஒத்து வராதுன்னேன் கேக்கலே."

"நீ சொன்னது சரிதான். கணேசன் மாதிரி இரக்க குணம் படைச்சவங்களுக்கெல்லாம் வியாபாரம் ஒத்து வராதுதான்" என்றார் செல்வமுத்து.

"அது என்னங்க இரக்க குணம்? ஏமாளித்தனம்னு சொல்லுங்க. உங்களை மாதிரி ஆளுங்கள்ளாம் அவனுக்கு இரக்க குணம்னு சொல்லிச் சொல்லி அவனை நல்லா ஏத்தி விட்டுட்டீங்க. அவன் என்னவோ தான் பெரிய பரோபகாரின்னு நெனச்சுக்கிட்டு, இருந்த பணத்தையெல்லாம் அடுத்தவங்களுக்கு அள்ளிக் கொடுத்துக்கிட்டும், வியாபாரத்தைப் பாக்காம அடுத்தவங்களுக்கு உதவி செய்யறேன்னு நேரத்தை வீணாக்கிக்கிட்டும் வியாபாரத்தைக் கோட்டை விட்டுட்டு நடுத்தெருவில் நிக்கறான். நீங்க கொடுத்த இரக்க குணம்கற பட்டம்தான் இப்ப அவனுக்கு மிச்சம். இப்ப நான் அவனுக்கு உதவி செய்யணுங்கறீங்க! ஏன், நீங்க உதவ வேண்டியதுதானே? பட்டம் மட்டும்தான் கொடுப்பீங்களாக்கோம்?" என்று பொரிந்து தள்ளினான் முருகன்.

"நீ சொல்றது சரிதான். ஆனா, நாங்க அவன்கிட்ட உதவி வாங்கி இருக்கோமே தவிர அவனுக்கு உதவி செய்யற நிலையில இல்ல. வயசில பெரியவன்கறதால உன் தம்பிக்கு உதவச் சொல்லி உன்கிட்ட கேட்டுப் பாத்தேன். தப்பா இருந்தா மன்னிச்சுடுப்பா" என்று சொல்லி விட்டு எழுந்தார் செல்வமுத்து.

செல்வமுத்து போனபின், முருகன் தன் மனைவி தங்கத்திடம், "பிச்சைக்காரப் பசங்களையெல்லாம் ஊர்ல பெரிய மனுஷன்னு சொல்லித் தலையில வச்சு ஆடினா இப்படித்தான் பேசுவாங்க!" என்றான்.

"நீங்க உங்க தம்பிக்கு உதவி செய்யாட்டா பரவாயில்ல. எல்லாரையும் இப்படிக் கடுமையாப் பேசாதீங்க. நீங்க யாருக்கும் உதவாத மாதிரி, என்னையும் உதவக் கூடாதுன்னு சொல்றீங்க. இதனால ஊர்ல யாருக்கும் நம்ம மேல நல்ல அபிப்பிராயம் இல்ல" என்றாள் தங்கம்.

"ஊர்ல நல்ல பேரு வாங்கி என்ன பிரயோசனம்? ஊர்ல நல்ல பேரு வாங்கின என் தம்பி நடுரோட்டிலதானே நிக்கறான்? இதைப் பாத்தே நீ தெரிஞ்சுக்க வேண்டாம்?"

தங்கம் பதில் பேசவில்லை.
"எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருக்கு. இந்தப் பய கணேசன் வியாபாரத்தில எல்லாம் போய் நடுத்தெருவுக்கு வந்தான். மறுபடி புதுசா வேற வியாபாரம் ஆரம்பிச்சு அஞ்சாறு வருஷத்திலே நல்ல நிலைமைக்கு வந்துட்டான்!" என்றான் முருகன். உடனேயே, "சரி விடு. உலகத்தில நல்ல நிலைமையில இருக்கறவன் நொடிச்சுப் போறதும், நொடிச்சுப் போனவன் மறுபடி மேல வரதும் நடக்கற விஷயங்கள்தானே?" என்றான்.

'ஆனா, உங்களுக்கு அன்னிக்கு இருந்த கெட்ட பேரு அப்படியேதான் இருக்கு? நீங்க மாறப் போறதில்ல. ஊர்ல உங்களைப் பத்தின அபிப்பிராயமும் மாறப்போறதில்ல' என்று நினைத்துக் கொண்டாள் தங்கம்.

துறவறவியல் 
     அதிகாரம் 25      
அருளுடைமை   
குறள் 248
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

பொருள்:  
பொருள்  இல்லாதவர் ஒருநாள் செல்வந்தர் ஆகலாம். ஆனால் அருள் இல்லாதவர் பயனற்றவராகவே விளங்குவார். அவர் எப்போதும் சிறந்து விளங்க மாட்டார்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்