About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, August 19, 2017

92. கர்ணனும் யுதிஷ்டிரனும்

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது ஒருமுறை கர்ணன் கிருஷ்ணரைச் சந்திக்க நேர்ந்தது.

"கண்ணா! எனக்கு ஒரு சந்தேகம்." என்றான் கர்ணன்.

"கேள்!" என்றார் கிருஷ்ணர்

"நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"

"நீ ஒரு பெரிய வீரன். வில்வித்தையில் சிறந்தவன்."

"அவ்வளவுதானா?"

"வாள் வீச்சு போன்ற பிற  போர்க்கலைகளிலும் வல்லமை பெற்றவன்."

"நான் என் வீரத்தைப் பற்றிக் கேட்கவில்லை.."

"வேறு எதைப் பற்றிக் கேட்கிறாய்?"

"என்னை ஒரு கொடைவள்ளல் என்று எல்லோரும் சொல்கிறார்களே!"

ஓ! அதுவா? நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை."

"அப்படியானால் நான் ஒரு வள்ளல் என்று நீ ஒப்புக்கொள்ள மாட்டாயா?"

"நான் எங்கே அப்படிச் சொன்னேன்? நீ கேட்டவர்களுக்குக் கேட்ட பொருட்களை  வழங்குபவன் என்று எல்லோரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். யார் எது கேட்டாலும் அதைக் கொடுப்பது என்ற ஒரு விரதத்தையே நீ பின்பற்றுவது கூட எனக்குத் தெரியும்."

கர்ணன் மௌனமாக இருந்தான்.

"கர்ணா? உன் குறை என்ன? அதைச் சொல்" என்றார் கிருஷ்ணர்.

"நான் அங்க தேசத்து அரசனாக இருக்கிறேன். என்னிடம் தினம் எத்தனையோ பேர் வந்து பொருட்களைக் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள். என்னை வள்ளல் என்றும் சொல்கிறார்கள்...ஆனால்  எங்கேயோ காட்டில் இருக்கும் யுதிஷ்டிரனைத் தேடி தினமும் பலர் தொலைதூரம் நடந்து போகிறார்களே, அது ஏன்?

"எனக்குத் தெரிந்து யுதிஷ்டிரன் அதிகம் பொருட்களை வழங்கியதாகத் தெரியவில்லை. கொடுப்பதற்கு இப்போது அவனிடம் பொருள் எதுவும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவன் ஹஸ்தினாபுரத்தில் இளவரசனாக இருந்தபோதும், இந்திரப்பிரஸ்தத்தின் அரசனாக இருந்தபோதும் கூட அப்படி ஒன்றும் யாருக்கும் வாரி வழங்கியதாகத் தெரியவில்லை. பின் ஏன் அவனைத் தேடி இத்தனை பேர் போகிறார்கள்?"

"உன் கேள்விக்கு நீயே பதில் சொல்லி விட்டாயே கர்ணா!" என்றார் கிருஷ்ணர் சிரித்தபடி.

"புரியவில்லையே கிருஷ்ணா!"

"யுதிஷ்டிரனைத் தேடித் போகிறவர்கள் அவனிடம் பொருட்களை  எதிர்பார்த்துப் போகவில்லை."

"பின் எதற்குப் போகிறார்கள் என்பதுதானே என் கேள்வி?"

"அவனுடைய இனிய சொற்களைக் கேட்பதற்காகப் போகிறார்கள்!"

"என்ன சொல்கிறாய் கண்ணா?"

"கேட்டவர்களுக்கு கேட்டதைக் கொடுப்பது என்ற விரதத்தை நீ கடைப்பிடித்து வருவதுபோல், யுதிஷ்டிரனும் ஒரு தர்மத்தைக் கடைப்பிடித்து வருகிறான். யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும் என்ற தர்மம்தான் அது. அதனால் அவனிடமிருந்து இனிய சொற்கள் மட்டும்தான் வரும். அந்த இனிய சொற்களைக் கேட்பதற்காகத்தான், இங்கே நகரத்தில் வசிக்கும் மக்கள் அவனைத் தேடிப் போகிறார்கள்."

"நானும் இனிய சொற்களைத்தானே பேசுகிறேன்?"

"அப்படியா? சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்றபின், கௌரவர் சபையில், பாண்டவர்களையம், திரௌபதியையும் நீ இழிவாகப் பேசியதெல்லாம் இன்சொற்களா? மாறாக, யுதிஷ்டிரன் தனக்குக்  கொடுமைகள் செய்த துரியோதனனைப் பற்றிக் கூடக் கடிய சொற்களைப்  பயன்படுத்த மாட்டான்."

கர்ணன் மௌனமாக இருந்தான்.

"நீ கடைப்பிடிக்கும் கொடைதர்மத்தை விட, இனிய சொற்களை மட்டுமே பேசுவது என்று உறுதி பூண்டிருக்கும் யுதிஷ்டிரனின் தர்மம் உயர்ந்தது."

அறத்துப்பால்
இல்லறவியல்
           அதிகாரம் 10             
    இனியவை கூறல்   
குறள் 92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து 
இன்சொலன் ஆகப் பெறின்.

பொருள்:
மனமகிழ்ச்சியுடன் பிறருக்குப் பொருள் ஈவதைக் காட்டிலும், முகமகிழ்ச்சியுடன் இனிய சொற்களைப் பேசுவது சிறந்தது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 93
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















No comments:

Post a Comment