About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, August 24, 2017

95. வேலையில் முதல் நாள்

புதிதாக வேலையில் சேர்ந்த வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளுக்கான பயிற்சி முடிந்தது. பயிற்சியின் இறுதியில் அவர்களிடம் பேசிய பொது மேலாளர் கடைசியாகச் சொன்னார்.

"இந்த மூன்று நாட்களும் உங்கள் வேலையைப் பற்றி நன்கு அறிந்து கொண்டிருப்பீர்கள். நாளையிலிருந்து நீங்கள் நம் நிறுவனத்தின் கிளை அலுவலகங்களில் அமர்ந்து வாடிக்கையாளர்களுடன் நேரடியாகப் பேசி அவர்கள் குறைகளைக் கேட்டு, அவர்கள் தேவைகளை உணர்ந்து அவர்கள் பிரச்னைகளைத் தீர்த்து அவர்களைத் திருப்திப்படுத்தப் போகிறீர்கள். 'ஆள் பாதி, ஆடை பாதி' என்பது பழமொழி. வேலைக்கு வரும்போது நீங்கள் அனைவரும் டை கட்டிக் கொண்டு வர வேண்டும். யாருக்காவது டை கட்டிக் கொள்ளத் தெரியாவிட்டால் சொல்லுங்கள். நான் கட்டி விடுகிறேன்."

மெல்லிய சிரிப்பு எழுந்தது.

டுத்த நாள் காலை, அந்தக் கிளை அலுவலகத்துக்கு நியமிக்கப்பட்ட ஐந்து வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளில், ஒருவன் மட்டும் டை கட்டிக் கொண்டு வரவில்லை. அவன் உடைகளும் கசங்கியிருந்தன.

"என்னப்பா?" என்றார் கிளை மேலாளர்.

"சார்! ஸ்கூட்டரில் வந்தபோது சின்ன விபத்து. ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்துட்டேன். டை தரையில் பட்டுக் கறையாயிடுச்சு. பாண்ட் சட்டையெல்லாம் கூடக் கசங்கிடுச்சு. அழுக்குப் பட்ட இடங்கள்ள தண்ணி போட்டுத் துடைச்சுக்கிட்டு வந்திருக்கேன். என் வீடு ரொம்ப தூரம். திரும்பவும் வீட்டுக்குப் போய் வேற டிரஸ் போட்டுக்கிட்டு வரத்துக்கு ரொம்ப நேரம் ஆயிடும். இன்னிக்கு ஒரு நாளைக்கு அனுமதி கொடுத்தீங்கன்னா..."

"சரி. போய் வேலையைப் பாரு. சாயந்திரம் ஜி.எம் வருவாரு. அவர் என்ன சொல்லப் போறாரோ!" என்றார் கிளை மேலாளர்.

மாலை பொது மேலாளர் வந்தபோது, ஐந்து புதிய அதிகாரிகளும் ஐந்து கவுன்ட்டர்களில் உட்கார்ந்து வாடிக்கையாளர்களின் தேவைகளை கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

"கிளை மேலாளரின் அறையில் போய் உட்கார்ந்ததும், "என்ன? எல்லாம் சரியா இருக்கா? புது ஆளுங்க எப்படி இருக்காங்க?" என்றார் பொது மேலாளர்.

"பரவாயில்லை சார்..." என்றார் கிளை மேலாளர், ஒருவர் மட்டும் டை கட்டிக் கொள்ளாமல் வந்திருப்பதை இப்போது சொல்லலாமா அப்புறம் சொல்லலாமா என்று யோசித்தபடி.

"ஏன் ஒரு கவுன்ட்டர்ல மட்டும் கியூ நீளமா இருக்கு?"

"தெரியல சார். காலையில வேலை ஆரம்பிச்சுக் கொஞ்ச நேரத்திலிருந்தே அப்படித்தான் இருக்கு. நான் அந்த க்யூவிலே இருந்தவங்ககிட்ட போயி வேற வரிசைக்குப் போங்கன்னு சொன்னேன். ஆனா அவங்க 'பரவாயில்லை'ன்னு சொல்லிட்டு அங்கேயே நிக்கறாங்க. அதோட மத்த கியூவிலிருந்தும் ஒண்ணு ரெண்டு பேர் அந்த நீள கியூவுக்கு வராங்க."

"அந்த வரிசை இருக்கிற கவுன்ட்டர்ல இருக்கற எக்ஸிக்யூடிவ் யாரு?"

"பரந்தாமன். சார்! அவரு..." என்று ஆரம்பித்தார் கிளை மேலாளர்.

"நானே பக்கத்தில போய்ப் பார்க்கிறேன்!" என்று எழுந்த பொது மேலாளர்  வெளியே போய் கவுன்ட்டர்களுக்கு அருகில்  நின்று பார்த்தார். கிளை மேலாளரும் அவர் பின்னே போய் நின்று கொண்டார். 

கியூவில் நின்றவர்கள் அவர்களை மறைத்ததால் கவுன்ட்டருக்குப் பின்னால் அமர்ந்திருந்த வாடிக்கை சேவையாளர் அதிகாரிகளால் அவர்களைப் பார்க்க முடியவில்லை.

சில நிமிடங்கள் கழித்து, பொது மேலாளர், கிளை அதிகாரி பின்தொடர, அறைக்குத் திரும்பினார்.

"சம்திங் ஆட், இல்லை சம்திங் ஃபன்னி, இல்லை சம்திங் இன்ட்ரஸ்டிங்!"

"சார். அந்த கவுன்ட்டரில் உட்கார்ந்திருக்கிற பரந்தாமன் டை கட்டிக்காததைத்தானே சொல்றீங்க?"

"அவனுக்கு எதுக்கு டை?"

"என்ன சார் சொல்றீங்க?"

"அந்தப் பரந்தாமனை கவனிச்சீங்களா? சிரிச்ச முகத்தோட, பணிவா, பொறுமையா, கோபப்படாம, மத்தவங்களைப் புண்படுத்தாத விதத்தில கஸ்டமர்கள்கிட்டப் பேசிக்கிட்டிருக்கான். அதை வெளியிலிருந்து பாத்துட்டுதான் அவனோட கவுன்ட்டர்ல நிறைய பேரு நிக்கறாங்க. 'ஆள் பாதி ஆடை பாதி'ன்னு நேத்திக்கு நான்தான் டிரெயினிங்கிலே சொன்னேன். ஆனா அவனோட பணிவும், பதமான பேச்சுமே டையும் சூட்டும் கொடுக்க முடியாத ஒரு பர்சனாலிட்டியை அவனுக்குக் கொடுத்துடுச்சு!" என்றார் பொது மேலாளர்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 10             
இனியவை கூறல்   
குறள் 95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு 
அணியல்ல மற்றுப் பிற.

பொருள்:  
பணிவுடையவனாகவும், இனிமையாகப் பேசுபவனாகவும் இருப்பதே ஒருவனுக்குச் சிறந்த அணிகலன்கள் ஆகும். மற்ற அணிகலன்கள் தேவையில்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'First Day at Work' the English version of this story.
பொருட்பால்                                                                                                   காமத்துப்பால்
















No comments:

Post a Comment