பொன்னம்பலம் காலையில் வீட்டிலிருந்து கிளம்பி வயலுக்குப் போகும் முன்பு, தன் வீட்டு முற்றத்தில் கோட்டை அடுப்பு மூட்டப்பட்டிருக்கிறதா என்று பார்த்து விட்டுத்தான் போவார்.
கோட்டை அடுப்பில் தினமும் இருபது பேர் சாப்பிடும் அளவுக்குச் சோறு சமைப்பார்கள். அவர்கள் வீட்டில் இருந்தது மொத்தம் ஐந்து பேர்தான். வேலையாட்கள் மூன்று பேரைத் தவிர, சுமார் பன்னிரண்டு வெளி மனிதர்கள் சாப்பிடும் அளவுக்குச் சமைப்பது அவர் வழக்கம்.
இரண்டு கோட்டை அடுப்புகள் இருக்கும். பெரியதில் சோறு, சிறியதில் குழம்பு. குழம்பில் போடக் காய்களை நறுக்கி மேடாகக் குவித்து வைத்திருப்பார்கள்.
சரியாகப் பதினோரு மணிக்கு அவர் வீட்டு வாசல் திண்ணையில் இலை போட்டு விடுவார்கள். யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம். உள்ளூர்க்காரர்கள், வெளியூர்க்காரர்கள் என்று இரண்டு சாராருமே அங்கே சாப்பிட வருவதுண்டு.
பொன்னம்பலம் பன்னிரண்டு மணிக்கு மேல் வயற்காட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்புவார். அநேகமாக அவர் திரும்பி வரும்போது ஒரு சிலராவது அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.
பொன்னம்பலம் சாப்பிடுபவர்களைப் பார்த்துக் கைகூப்பி விட்டு உள்ளே போவார். உள்ளூர்க்காரர்கள் சிலருக்கு - அவரை விட வயதில் குறைந்தவர்கள், அல்லது சமுதாய அந்தஸ்தில் குறைந்தவர்களுக்கு- இது சங்கடமாக இருக்கும். எச்சில் கையால் அவரை பதிலுக்குக் கும்பிடவும் முடியாது!
எல்லோரும் சாப்பிட்டு முடிந்த பிறகுதான் பொன்னம்பலம் சாப்பிட உட்காருவார். சில நாட்கள் அதிகமான நபர்கள் சாப்பிட வந்து விட்டால், மீண்டும் உலை வைத்துச் சோறு வடித்துக் குழம்பும் செய்வார்கள். அந்த நாட்களில் பந்தி முடிய கிட்டத்தட்ட இரண்டு மணி கூட ஆகி விடும். ஆனால் பந்தி முடிந்ததும்தான் சாப்பிடுவது என்பதில் உறுதியாக இருப்பார் பொன்னம்பலம்.
"ஏன் இப்படிச் செய்யறீங்க?" என்று அவரிடம் நண்பர் ஒருவர் கேட்டதற்கு "ஆண்டவன் புண்ணியத்தில என்னோட வயல்ல எங்க குடும்பத்துக்குத் தேவையானதை விட அதிகமாவே அரிசி விளையுது. அதில கொஞ்சம் அரிசியை மத்தவங்களுக்கு சாப்பாடு போடறதுக்காகப் பயன்படுத்தினா என்னன்னு தோணிச்சு" என்றார் பொன்னம்பலம்.
அந்த ஆண்டு மழை பொய்த்ததால் எங்கும் வறட்சி மிகுந்திருந்தது. பல பேர் ஆழ்கிணறு (போர்வெல்) தோண்டிப் பார்த்தார்கள். ஆனால் ஆழ்கிணற்றிலும் தண்ணீர் வராததால் அந்த வருடம் பயிர் செய்வதையே நிறுத்தி விட முடிவு செய்தார்கள்.
நீண்ட யோசனைக்குப் பிறகு, பொன்னம்பலம் தன் நிலத்தில் ஆழ்கிணறு தோண்டிப் பார்க்க முடிவு செய்தார். அவருடைய நிலத்துக்குப் பக்கத்து நிலங்களில் போடப்பட்ட ஆழ்கிணறுகளில் தண்ணீர் வரவில்லை. அதனால் பொன்னம்பலம் இந்த முயற்சியில் ஈடுபடுவது வீண் செலவில்தான் முடியும் என்று பலரும் நினைத்தனர். அவரிடமே சிலர் சொல்லவும் செய்தனர்.
ஆனால் பொன்னம்பலம் தன் முயற்சியிலிருந்து பின் வாங்கவில்லை.
யாரும் எதிர்பாராத வகையில் அவர் நிலத்தில் தோண்டப்பட்ட ஆழ்கிணற்றிலிருந்து தண்ணீர் வெளி வந்தது.
பொன்னம்பலம் சாகுபடி செய்யத் தீர்மானித்தார். அவருடைய நண்பர் ஒருவர் சொன்னார் "இங்க பாரு பொன்னம்பலம். போரை நம்பி சாகுபடியில் இறங்காதே. போர்ல எப்ப வேணும்னாலும் தண்ணி வரது நின்னு போகலாம். அப்ப என்ன செய்வே?"
"போர்ல தண்ணி வராதுன்னுதான் எல்லோரும் சொன்னாங்க. எனக்கும் அந்த பயம் இருந்தது. ஆனாலும் முயற்சி பண்ணிப் பாக்கலாம்னு இறங்கினேன். கடவுள் புண்ணியத்தில தண்ணி வந்திருக்கு. நீங்க சொல்ற மாதிரி ஒருவேளை போர் வத்திப் போற நிலைமை வந்தாலும் அப்ப மழை பெஞ்சு பயிரைக் காப்பாத்தலாம் இல்ல? அதனால நான் நம்பிக்கையோட சாகுபடியைத் தொடங்கத்தான் போறேன். தினமும் பத்து பேருக்கு சாப்பாடு போட எனக்கு அரிசி வேணும் இல்ல?" என்றார் பொன்னம்பலம்.
"நீ நெனைக்கறது நடக்கும்யா! நீ போடற பயிர் தண்ணி இல்லாமையே நல்லா வளர்ந்தாலும் ஆச்சரியம் இல்ல!" என்றார் நண்பர்.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 9
விருந்தோம்பல்
குறள் 85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.
பொருள்:
விருந்தினருக்கு முதலில் உணவளித்து மீதம் இருக்கும் உணவைத் தான் உண்ணும் பழக்கம் உள்ளவன் நிலத்தில் விதை விதைக்க வேண்டுமா என்ன? (விதை விதைக்காமலே கூட அவன் நிலத்தில் பயிர் வளரும்.)
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment