ஆனந்தனுக்கு அன்று பொழுது ஆனந்தமாக விடியவில்லை. காலையில் எழுந்ததுமே அவன் மனைவி சுந்தரி, "என்னங்க, பால் திரிஞ்சு போச்சு. வேற பால் வாங்கிட்டு வரீங்களா?" என்றாள்.
பல் கூடத் துலக்காமல் பால் வாங்கக் கிளம்பினான் ஆனந்தன். அன்று பார்த்து அருகில் இருந்த கடையில் பால் கிடைக்கவில்லை. சற்று தூரம் நடந்து போய் வாங்கி வந்தான்.
வீட்டுக்கு வந்ததும் மனைவி பொறுமை இழந்தவளாக, "ஏங்க இவ்வளவு நேரம்? எனக்கு காப்பி குடிச்சாதான் வேலையே ஓடும்? நீங்க இவ்வளவு மெதுவா வரீங்க! ஹோட்டல்ல காப்பி குடிச்சுட்டு வாரீங்களா என்ன?" என்றாள்.
"அடாடா! இது எனக்குத் தோணாமல் போயிடுச்சே!" என்றான் ஆனந்தன், சிரித்தபடி.
அவன் பல் துலக்கியதும், காப்பி கொடுத்த மனைவி, "இந்த மாசம் செலவு நிறைய இருக்கு. உங்களுக்கு வேலை எதுவுமே வரலியே!" என்றாள்.
"ஒரு பெயின்டிங் காண்டிராக்ட் கிட்டத்தட்ட முடிவாயிடுச்சு. ரெண்டு மூணு நாள்ள அட்வான்ஸ் கொடுத்துடுவாங்க. கவலைப்படாதே!" என்றான் ஆனந்தன்.
அவன் செல்ஃபோன் ஒலித்தது. "அவருதான்!" என்று சொல்லி விட்டு, அறைக்குள் போய்ப் பேசி விட்டு வந்தான்.
"என்ன அட்வான்ஸ் கொடுக்கறேன்னாரா?"
"இல்லை. காண்டிராக்ட் இல்லைன்னுட்டாரு!"
"ஏன் அப்படி?"
"ஏதோ காரணம் சொல்றாரு."
"ஆர்டர் கொடுக்கறேன்னு சொல்லிட்டு ஏன் ஏமாத்தினீங்கன்னு அவர்கிட்ட சண்டை போட வேண்டியதுதானே?"
"விடு!"
"எப்படிங்க விடறது? நீங்க அவரை விடு விடுன்னு விட்டிருக்கணும்! இந்த மாசச் செலவுக்கு அந்தப் பணத்தைத்தானே நம்பி இருந்தீங்க?"
"பாக்கலாம்" என்று சிரித்தான் ஆனந்தன்.
"உங்களால எப்படித்தான் சிரிக்க முடியுதோ!" என்றாள் சுந்தரி.
வேறு சில இடங்களில் போய் முயற்சி செய்து விட்டு வருவதாகச் சொல்லி விட்டு வெளியே போய் விட்டு ஆனந்தன் வீட்டுக்கு வரும்போது மணி 3 ஆகி விட்டது.
அவன் உள்ளே நுழைந்ததுமே, "என்ன, ஏதாவது ஆர்டர் கெடச்சுதா?" என்றாள் சுந்தரி.
ஆனந்தன் மௌனமாகத் தலையைப் பக்கவாட்டில் ஆட்டினான்..
"சரி. சாப்பிட வாங்க. ரொம்ப நேரமாயிடுச்சு. நான் கூடச் சாப்பிட்டுட்டேன்"
ஆனந்தன் சாப்பிட உட்கார்ந்தான். சுந்தரி பரிமாறத் துவங்கியபோது, பள்ளியிலிருந்து வந்த அவர்கள் மகள் ஆர்த்தி "அம்மா" என்று அழைத்துக் கொண்டே ஒடி வந்து சுந்தரியைக் கட்டித் தழுவ முயன்றாள்.
ஒடி வந்தவள் சாம்பார் பாத்திரத்தைக் கையில் பிடித்தபடி வந்து கொண்டிருந்த சுந்தரியின் மீது மோதியதில் சாம்பார் மொத்தமும் கீழே கொட்டி விட்டது.
"ஏண்டி, இப்படியா கண்மண் தெரியாம ஓடி வருவே?" என்று சுந்தரி மகளைக் கடிந்து கொண்டிருந்தபோதே, ஆனந்தன் எழுந்தான்.
"ஏன் எழுந்துட்டீங்க?" என்றாள் சுந்தரி.
"கீழே கொட்டியிருக்கிற சாம்பாரைத் துடைச்சுட்டு வரேன். ஹால் முழுக்கத் தெறிச்சிருக்கு. உனக்குத் துடைக்கறதுக்குக் கஷ்டமா இருக்கும்" என்ற ஆனந்தன், "ஆர்த்தியை ஒண்ணும் சொல்லாதே! அவ உன் மேல இருக்கிற ஆசையினாலதானே அப்படி ஒடி வந்தா?" என்று சொல்லி விட்டு, மகளின் கன்னத்தைத் தட்.டி "நல்ல வேளை! ஸ்கூல் யூனிஃபார்ம்ல சாம்பார் படல. போய் டிரஸ் மாத்திக்கிட்டு வா!" என்றான்.
"ஏங்க, சாம்பார் மொத்தமும் கொட்டிப் போச்சே! இன்னிக்குன்னு பாத்து நான் ரசம் கூட வைக்கல!"
"அதனால பரவாயில்லை. மோரும், பொரியலும், ஊறுகாயும் இருக்கே, அது போதும்" என்றான் ஆனந்தன்.
எது நடந்தாலும் கடுமையாகப் பேசாமல் பொறுமையாக இருக்கிற தன் கணவனைக் கடவுள் ஏன் சோதிக்கிறார் என்று நினைத்துக் கொண்டாள் சுந்தரி.
சாப்பிட்டு விட்டு ஆனந்தன் சற்று நேரம் கண்ணை மூடிப் படுத்துக் கொண்டிருந்தபோது, அவன் செல்ஃபோன் அடித்தது. சற்றுத் தள்ளி நாற்காலியில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த சுந்தரி, யாராவது வாடிக்கையாளர் கூப்பிடுகிறாரோ என்ற ஆவலில் அவன் ஃபோனில் பேசுவதை கவனித்தாள்.
ஆனந்தன் எதிர்முனையில் பேசியவவர் சொன்னதைக் கேட்டு விட்டு, "அப்படியா? எனக்குப் பத்தாயிரம் ரூபாய்தான் லோன் வேணும். கொடுப்பீங்களா?...ஓ. ..மினிமம் ஒரு லட்ச ரூபாய்தான் கொடுப்பீங்களா? ...பரவாயில்லை. தாங்க்ஸ்" என்று சொல்லி ஃபோனை வைத்தான்.
"ஏங்க, நானும் நிறைய தடவை கவனிச்சுருக்கேன். யாராவது ஃபோன் பண்ணி லோன் வேணுமான்னு கேட்டா வேணாம்னு சொல்லாம, ஏன் பத்தாயிரம் ரூபாய் கிடைக்குமாங்கறீங்க உங்களுக்கு உண்மையிலேயே பத்தாயிரம் ரூபாய் கடன் வேணுமா?"
"இல்லை. லோன் எதுவும் வேணாம்னு சொன்னா அவங்களுக்கு ஏமாத்தமா இருக்கும். அவங்க சின்னத் தொகையெல்லாம் கொடுக்க மாட்டாங்கன்னு தெரியும். அதனால பத்தாயிரம் ரூபாய் தருவீங்களான்னு கேப்பேன். அவங்க 'சாரி. மினிமம் இவ்வளவுதான் கொடுப்போம்'னு சொல்லி வச்சிடுவாங்க. அப்ப அவங்களுக்கு அவ்வளவு ஏமாத்தமா இருக்காது."
"அவங்களுக்கு ஏமாத்தமா இருக்கும்னா, அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? நமக்கு அனாவசியமான தொந்தரவுதானே இது?"
"அவங்க வேலையே இதுதானே? அவங்களுக்கு உதவ முடியாவிட்டாலும், நம்மளால முடிஞ்ச அளவுக்கு அவங்க ஏமாத்தத்தைக் குறைக்கலாமே!"
"என்னவோ போங்க! யாரோ ஃபோன் பண்ணி உங்களுக்கு வேலை கொடுக்கப் போறாங்களோன்னு நினைச்சு நான் ஏமாந்துதான் மிச்சம்!"
"கவலைப்படாதே! நீ எதிர்பார்க்கறதும் நடக்கலாமே!"
"பாக்கலாம்!" என்றாள் சுந்தரி, நம்பிக்கை இல்லாமல்.
மாலையில் சுந்தரி சமையற்கட்டில் இருந்தபோது, ஆனந்தனின் ஃபோன் அடித்ததையும் அவன் அதை எடுத்துப் பேசியதையும் கேட்ட சுந்தரி, 'யாராவது கிரெடிட் கார்டு வேணுமான்னு கேப்பாங்க. இவரும் பொறுமையா பதில் சொல்லிக்கிட்டிருப்பாரு!' என்று தனக்குள் அலுத்துக் கொண்டாள்.
சில நிமிடங்கள் கழித்துச் சமையலறைக்கு வந்த ஆனந்தன், "போன வாரம் ஒரு ஃபிளாட்டில பெயின்டிங் பண்ணினேனே ஞாபகம் இருக்கா, அவருதான் ஃபோன் பண்ணினாரு. அவர் வீட்டில என் பெயின்டிங் ரொம்ப நல்லா வந்திருக்காம். அதனால அவரோட ஆஃபீஸ் பெயின்டிங் வேலையையும் எனக்கே கொடுக்கிறாராம். அது பெரிய வேலை. இப்பவே அவரோட ஆஃபீசுக்கு வந்து அட்வான்ஸ் வாங்கிக்கிட்டுப் போகச் சொல்றாரு. போயிட்டு வந்துடறேன்" என்று சுந்தரியிடம் சொல்லி விட்டுக் கிளம்பினான்.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 10
இனியவை கூறல்
குறள் 94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
பொருள்:
எல்லோரிடமும் அவர்களை மகிழ்விக்கும் வகையில் இன்சொல் பேசுபவரைத் துன்பம் விளைவிக்கும் வறுமை அணுகாது.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment